Friday, July 23, 2010

திராவிட இயக்கம் தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை- -மதி.

மிகவும் ஆபத்தான சூழலுக்குள் பேசவும் எழுதவும் வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. சிகப்புத் தீவீரவாதம் என்று மக்கள் பிரச்சனைகளைப் பேசும் ஊடகவியளார்களை ஒடுக்கும் மத்திய அரசு. இப்போது நாடெங்கிலும் அறிவிக்கப்படாத மிசாவைக் கொண்டு வருகிறது. எதிர்ப்பியங்கள் கூட இந்துத்துவ சக்திகளிடம் மாட்டுப்பட்டுள்ள நிலையில் இடது சாரி அமைப்புகளின் போராட்டங்களும் தேசிய இன உணர்வு போராட்டங்களும் மிக பலவந்தமான முறையில் ஒடுக்கப்படுகின்றன. அதிகாரவர்க்கங்களின் மேல்கட்டுமானம் பெரு முதலாளிகளுக்கு ஏற்றவாரு திருத்தி அமைக்கப்பட்டு விட்டது. காஷ்மீர், தண்டகாரண்யா என விரிவு படுத்தப்பட்டும் ஆள்தூக்கிச் சட்டங்கள் இப்போது தமிழகத்திற்கும் தேவைப்படுகிறது. ஆமாம் திராவிட இயக்கத்தின் தொட்டில் என்றும் திராவிட இயக்க ஆட்சி என்றும் சொல்லப்படும் தமிழகத்தில் தமிழர்களின் உரிமைக்குக் கூட குரல் கொடுக்க முடியாத நிலை.இனி ஒரு மீனவனைத் தாக்கினால் இங்கிருக்கும் சிங்களர்களைக் கொல்வோம் என்கிற சீமானின் கூற்றின் நமக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம். ஆனால் சீமானைக் கைது செய்வதற்கு முன்னால் குறைந்த பட்சம் தமிழகத்தில் இருக்கும் துணைத் தூதருக்கு எதிராகவும், தூதரகத்தை விலக்கிக் கொள்ளும் படியும் ஒரு சட்டமன்ற தீர்மானத்தையாவது நிறைவேற்றியிருக்கலாம். ஆக எதிர்வன்முறையை மட்டும் அடக்கி விட்டு பேரினவாத வன்முறைக்கு இடம் கொடுக்கும் விதமாக இந்திய மத்திய அரசும் கருணாநிதி தலைமையிலான திராவிட அரசும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு திராவிட அரசான திமுகவிற்கும் ஆள்தூக்கி கருப்புச் சட்டங்கள் தேவைப்படுகின்றன.

மிசா, தடா, பொடா என எல்லா ஆள் தூக்கிக் கருப்புச் சட்டங்களாலும் பாதிக்கப்பட்ட ஒரு அமைப்பு திமுக. மக்கள் விரோத காங்கிரஸ் கட்சியே இச்சட்டங்களின் உதவியுடன் பல முறை திமுக தலைவர்கள் மீது வேட்டை நாயைப் போல பாய்ந்துள்ளது. அது போல தமிழகத்தில் சிறிய அளவில் ஆனால் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தும் புரட்சிகர அமைப்புகளும் இச்சட்டங்களால் பாதிக்கப்பட்டவைதான். மிக மோசமாக பாதிகப்பட்ட இன்னொருவர் வைகோ. இன்று அவர் கூட்டணி வைத்துள்ள ஜெயலிதாவே அவரை சிறையில் தள்ளினார். சீக்கியப் படுகொலைகளில் கை நனைத்த குற்றவாளியும், போபால் கொலைகாரன் வாரன் ஆண்டர்சனை தனி விமானத்தில் அனுப்பி வைத்தவரும், ஈழ மக்களை அநியாயமான முறையில் கொன்று குவித்தவருமான ராஜீவ்காந்தியின் கொலை நடந்த நாளில் இருந்து தமிழகத்தில் அறிவிக்கப்படாத மிசா தொடர்ந்து கொண்டிருக்கிறது. ராஜீவ்காந்தி இறந்து சுமார் 18 ஆண்டுகள் ஆகிவிட்ட பின்னரும் கொடூரமான முறையில் தமிழகத்தில் போராட்டங்கள் நசுக்கப்படுகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரையில் மக்கள் விரோத ஜெயலலிதாவுக்கு இம்மாதிரியான கருப்புச் சட்டங்கள் தேவைப்படலாம். ஆனால் கருணாநிதிக்கு?

இன்று கருணாநிக்கும் இப்படியான சட்டங்கள் தேவைப்படுகிறது. திராவிட எதிர்ப்பரசியலில் உருவானதாகச் சொல்லப்படும் கருணாநிதியின் இன்றைய இருத்தலைப் புரிந்து கொள்ளவும் அவரது இன்றைய தேவைகளைப் புரிந்து கொள்வதும் மிக எளிதான ஒன்று. இந்திய பெருமுதலாளிகள் செல்வாக்குச் செலுத்தும் கட்சிகளில் இன்று திமுகவும் ஒன்று. இன்னும் அழுத்தமாகச் சொல்லப் போனால் கருணாநிதியின் குடும்பமே இந்திய பெருமுதலாளித்துவக் குடும்பம்தான். கடந்த காலத்தில் பெயரளவில் பேசிய கொள்கைகளைக் கூட இன்று அது பேசத் தயாராக இல்லை. பேசுவது அவர்களின் வர்க்க நலனுக்கே ஆபத்தாகக் கூட போகலாம். இலங்கையில் ஈழ மக்கள் மீதான பேரினவாதிகளின் யுத்தம் என்பது பாதி பிராந்திய நலன் சார்ந்தது, மீது இந்திய பெருமுதலாளிகளின் வர்த்தக நலன் சார்ந்தது. முதலீட்டிற்கு உகந்த சூழல் நிலவும் இலங்கையை இந்தியா தனது சுரண்டல் நலனுக்கு பயன்படுத்தும் போது அதில் தனக்கோ தனது குடும்பத்தினருக்கோ பங்கில்லாமல் போனால் அதை கருணாநிதி எப்படி பொறுத்துக் கொள்வார்?

கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு ராயல் பர்னிச்சர் என்றொரு பெரிய நிறுவனம் உண்டு. மேலும் தமிழகம் முழுக்க விவசாய நிலங்களை வளைப்பது அப்பாவி கிராம மக்களை மிரட்டி பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தங்களுக்கும் நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்வது என்று கருணாநிதி குடும்ப வாரிசுகள் செய்யாத தொழிலே இல்லை. முன்னர் ஜெயயலிதா, சசிகலா கும்பல் ஊரில் கண்ணில் நிலங்களை எல்லாம் எப்படி வழைத்துப் போட்டு தமிழகத்தையே தனது சொத்தாக மாற்ற முனைந்ததோ அதை விட மிக மோசமான முறையில் செய்து கொண்டிருக்கிறார்கள் கருணாநிதி குடும்பத்தினர். தஞ்சையில் டி.ஆர். பாலுவில் எரிசாராய ஆலைக்கு மக்கள் எதிர்ப்பிருந்தும் போலீசின் துணையோடு அந்த ஆலையை அமைத்தே தீருவது என்று முடிவோடு இருக்கிறார் டி.ஆர். பாலு எதிர்ப்புகள் இருக்கும் உள்ளூரிலிலேயே தனது தொழிலுக்காக மக்களை வதைக்கும் திமுகவின் குறுநில மன்னர்கள் இலங்கையில் கிடைத்தால் வேண்டாம் என்றா சொல்வார்கள். கனிமொழிக்கு கொழும்பில் ஒரு நட்சத்திர விடுதியும், டி.ஆர்.பாலுவுக்கு திருகோணமலைத் துறைமுகத்தில் பிரமாண்ட காண்டிராக்டும்., பொன்முடிக்கு தனியார் மருத்துவக்கல்லூரியும் கட்டிக் கொள்ளலாம் என்று சொன்னால் இன்றைய கருணாநிதியோ அவரது குறுநில மன்னர்களான தம்பிகளோ அய்யய்யோ இலங்கை ஒரு இனவெறி நாடு நாங்கள் அங்கு முதலிட மாட்டோம் என்று ஒதுங்கிவிடுவார்களா? என்ன?

ஆக, ஈழப் படுகொலைகளின் போது மத்திய அரசுக்கு துணை போன துரோகத்தை பேசுவது மட்டுமல்ல இலங்கை அரசுக்கு எதிராகக் கூட இன்று தமிழகத்தில் பேச முடியாத நிலையை உருவாக்கியாக வேண்டிய தேவை பெருமுதலாளியக் கட்சியாக மாறிப் போன திமுகவிற்குத் தேவைப்படுகிறது. அதைத்தான் அவர் முள்ளில் விழுந்த சேலையை எடுப்பது போல இலங்கைத் தமிழர் பிரச்சனையை தீர்க்க வேண்டும். என்று வஞ்சகமாகப் பேசினார். இலங்கை அரசிடம் சுமூக உறவு நிலவினால் மட்டுமே தன் குடும்ப, கட்சி நலன்களுக்கு அது உகந்ததாக இருக்கும் என நினைக்கிறார் கருணாநிதி. இந்தியத் தேசியத்தில் ஒன்று கலந்து மையநீரோட்ட அரசியலை பிரதிபலிக்கும் தமிழக அரசின் கொள்கையும் போர் வெறி பிடித்த இந்திய அரசின் கொள்கையும் இன்று வேறு வேறல்ல, இலங்கை விவாகரத்தில் மத்திய அரசின் கொள்கையும் மாநில அரசின் கொள்கையும் ஒன்றுதான் என்று கருணாநிதியே தெளிவு படுத்தியிருக்கும் நிலையில் போருக்குப் பின்னரான மத்திய மாநில அரசுகளின் நோக்கம் என்பது முழுக்க முழுக்க முதலீடுகள் சார்ந்ததே. ஆக முதலீட்டிற்கு உகந்த சூழல் இலங்கையில் நிலவுகிறது. அங்கு நிலவும் மயான அமைதி, எதிர்ப்பற்ற நிலை, இந்தியாவின் காலடிகளின் விழுந்து கிடந்து கெஞ்சிக் கொண்டிருக்கும் தமிழ் தலைமைகள் என இந்திய பெரு முதலாளிகளின் வர்த்தக நலனுக்கு உகந்ததாய் இருக்கும் போது அந்த முதலீடுகளை இடையூறு செய்யும் ஒரு தளமாக தமிழகம் கொதிப்பதை அது விரும்புமா? இலங்கையில் நிலவும் அதே உகந்த சூழல் தமிழகத்தில் நிலவ வேண்டும். உகந்த சூழல் என்பது போருக்குத் துணை போன கருணாநிதியைப் பற்றி மட்டுமல்ல, சோனியா, மன்மோகன், சிதம்பரம், ப்ரணாப்முகர்ஜி, பற்றி மட்டுமல்ல இலங்கை அரசைப் பற்றியோ ராஜபட்சே பற்றிக் கூட பேசக் கூடாத சூழல்தான் இப்போதைய முதலீடுகளுக்கு உகந்தது.

முதலில் விளக்கமாக அறிக்கை விடுவது, நாடகமாக மாற்றுவது, அந்த நாடகங்களுக்கு மற்றவர்களை துணைக்கழைப்பது, ஆரத்தழுவி ஆதரவைப் பெறுக்குவது, எதிப்பவர்களின் கட்சிகளை உடைப்பது, அதையும் மீறி எதிர்ப்பில் உறுதியாக இருந்தால் போலீசை ஏவி மண்டையை உடைப்பது, வழக்கு மேல் வழக்குகளைப் போட்டு உள்ளே தள்ளுவது இதுதான் கருணாநிதி ஸ்டைல். கடந்த இரண்டுவருடமாக ஈழப் பிரச்சனையில் கருணாநிதியால் நினைத்த மாதிரி காய்களை நகர்த்த இயலவில்லை. பெரும்பாலானோர் சுயலாபங்களுக்காக கருணாநிதியிடம் அண்டி நடந்தாலும் ஜெயலலிதா, கருணாநிதி என்னும் இரண்டு மக்கள் விரோத சக்திகளுக்கு அப்பாற்பட்ட கருணாநிதி எதிர்ப்பு ஈழப் பிரச்சனையை மையமிட்டு உருவாவதை அவரால் தடுக்க முடியவில்லை.

செம்மொழி மாநாட்டின் மூலம் அதைச் சரி செய்யலாம் என நினைத்தார். ஆனால் நீதிமன்றத்திலேயே அதற்கு குட்டு கிடைத்தது. செம்மொழி மாநாட்டை புறக்கணித்த தமிழ் கூட்டம் ஒன்று வெளியில் ஆழமான விமர்சனங்களை முன் வைத்தது. இப்படி எவ்வளவோ சொல்லலாம். ஆக தனது ஜென்ம எதிரி ஜெயலலிதாவுக்கு அப்பாற்பட்டு தான் ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்தை இன்று வரை பூசி மொழுக முடியவில்லை. தான் விடுகிற அரதப்பழசான எதுகை மோனை அறிக்கைகளுக்கு ஜெயலலிதாவைத் தாண்டி தமிழ் மக்களிடம் அதற்கு எந்த மதிப்பும் இல்லை. தனக்கு உலகம் முழுக்க எதிர்ப்பு இருப்பது கருணாநிதிக்கும் தெரியும் அதனால்தான் மீண்டும் மீண்டும் தன்னை தமிழினத்தின் தலைவனாக காட்டிக் கொள்ள தன் அல்லக்கைகளை விட்டே பாராட்டு விழா நடத்துவது தனது கட்சி எம்,பிக்களை விட்டே மலர் மாலை போட்டுக் கொள்வது. திமுகவின் டூபாக்கூர் விருதுகளை தானே எடுத்துக் கொள்வது என்று கீழ்த்தரமான எல்லா வேலைகளையும் தொடர்ந்து செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறார். முதல்வர் பதவியில் ஒரு பொம்மையைப் போல அமர்ந்திருக்கும் இந்த கோமாளியின் நாடகங்கள் எல்லாமே மக்களிடம் அமபலப்பட மீண்டும் மீண்டும் தமிழால் ஒன்றிணைவோம். செம்மொழி மாநாடு எழுச்சியைக் கொண்டு வந்து விட்டது. என்றெல்லாம் உளறிக் கொண்டிருக்கிறார் இந்த கோமாளி. விரைவில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் இப்போதே கருணாநிதியை வீழ்த்த ஒரு பெரும் கூட்டம் விம்மலில் இருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போல இம்முறையும் மக்களிடம் ஈழப் பிரச்சனையைக் கொண்டு செல்லும் உத்வேகத்தோடு அவர்கள் இருக்க இரண்டு நோக்கங்களுக்காக இப்போது கருணாநிதிக்கு கருப்புச் சட்டம் ஒன்று தேவைப்படுகிறது. ஒன்று இலங்கையுடனான தனது வர்த்தக நலன்களைப் பேணவும், இன்னொன்று வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனக்கு எதிராக ஈழம் நிறுத்தப்படுவதை அடக்கி ஒடுக்கவும். இந்த இரண்டு நோக்கங்களுக்காகவே விரைவில் வரவிருக்கிறது அந்தச் சட்டம் வரவிருக்கும் மாதங்களை ஈழ ஆதரவாளர்கள் எதிர்கொள்ள வேண்ட்யிருக்கும்.


நன்றி இனியொரு

No comments: