Thursday, January 6, 2011

காடேறிகளின் கோரப்பிடியில் யாழ்ப்பாணம், பயமும் வேதனையும் துரத்துகிறது!!

யாழ்ப்பாணம், இந்தப்பெயரை கேட்டால் ஒருகாலத்தில் ஒழுக்கம் தமிழ்மணம், பண்பு விருந்தோம்பல் கல்வியும் உழைப்பும், நினைவுக்கு வந்தது இன்று யாழ்ப்பாணம் என்றவுடன் "கலாச்சாரசீரழிவும்" பயமும் வேதனையும் EPDP யும் இராணுவ ஆக்கிரமிப்பும்தன் ஞாபகத்துக்கு வருகிறது. நாளாந்தம் ஆள்க்கடத்தல் கப்பங்கோரல் படுகொலைகள், அத்துடன் வாழ்நாளில் காணாத கலாச்சார சீர்கேடுகளை கொண்டுவந்து குவிக்கப்படும் பிரதேசமாக யாழ்ப்பாணம் மாற்றப்பட்டிருக்கிறது. தினமும் படுகொலைகள் கற்பழிப்புக்கள் கடத்தல்கள் இவைதான் யாழ்ப்பாணத்தின் இன்றய அடையாளம்.

சமீபத்தில் யாழ்ப்பாணத்து பள்ளி மாணவி ஒருவருக்கு 76பேருடன் பாலியல்ரீதியாத தொடர்பு இருந்ததாக அவரே தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 17வயதாகும் இம் மாணவிக்கு எயிட்ஸ் நோய் இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. சமீபத்தில் கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு எயிட்ஸ் நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அச் சிப்பாய் யார் யாருடன் உடலுறவை வைத்திருந்தார் என மருத்துவர்கள் கண்டறிய முற்பட்டவேளை இச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக அறியப்படுகிறது. இச் சிப்பாய் குறித்த 17 வயது மாணவியோடு உறவுவைத்திருந்ததை ஒத்துக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து நடாத்தப்பட்ட விசாரணையின்போது, தன்னுடன் 76 ஆண்கள் தொடர்புகளை வைத்திருந்ததாக அவர் முதல் கட்டமாகத் தெரிவித்துள்ளார். 14வயதில் இருந்தே தன்னுடன் ஆண்கள் உடலுறவுரீதியான தொடர்புகளை திணித்திருந்ததாகவும் அந்த மைனர் பெண் அப்பாவித்தனமாக தெரிவித்துள்ளார். இவர்களில் கணிசமானவர்கள் படையினர் என்பதும் கவனிக்கவேண்டும். இதை ஒரு சாதாரணமான நடைமுறையாக எவராலும் எடுத்துக்கொள்ள முடியாது, இது யாழ்ப்பாண சீரழிவின் ஒரு துளி மட்டுமே.

இவற்றை தடுக்கவேண்டிய பொறுப்பும் தலையாய கடமையும் பெற்றோருக்கும் சமூகப்பெரியோருக்கும் (அரசுக்கும்) உண்டு, ஆனால் ஆதரவற்ற மக்களை அச்சுறுத்தி பீதிகலந்த பய உணர்வுக்குள் சமூகத்தை இருத்தி மக்களை அழித்து அவர்களது வாழ்வியலை திசைதிருப்ப எண்ணும் சிங்கள அரசு தனதுகபட நோக்கத்தை தமிழ்த்துரோக ஒட்டுக்குழுக்களையும் இராணுவத்தையும் பயன்படுத்தி நிறைவேற்றி வருகிறது. இந்த அச்சுறுத்தல் பொறியிலிருந்து தப்பிக்க நினைக்கும் இளைஞர்கூட்டம் தாம் தப்பிப்பதற்காக தாமாகவே இந்தப்பொறியில் விழுந்து கலந்து சமூக விரோதிகளாக மாற்றப்படுகின்றனர். இந்த இளைஞர்கள்தான் இன்று தெருத்தெருவாக குடி, கும்மாளம், என்று சென்று அடிதடியில் முடிக்கின்றனர். இன்னும் சிலர் ஒட்டுக்குழுக்கள் மற்றும் இராணுவத்துடனும் உறவுகளை வைத்து சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டுவருவதாகவும் கூறப்படுகிறது'. இது கவனிக்கப்படாவிட்டால் யாழ்ப்பாணத்தை அழிப்பதற்கு வேறு எந்தவினையும் தேவைப்படப்போவதில்லை.

பூனைக்கு மணிகட்டுவது யார் என்ற நிலையில் அக்கறையுள்ளவர்கள் நின்றுகொண்டிருக்கின்றனர். விடுதலைப்புலிகள் ஆட்சி செய்தபோது மக்கள் இதுபற்றி சிந்திக்க இடமிருக்கவில்லை. இயக்கம் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தது. இன்று ஏற்பட்டிருக்கும் இந்த வெற்றிடம் எந்தச்சக்தியாலும் ஈடுசெய்ய முடியவில்லை, என்பது ஒவ்வொருவரது அடிவயிற்றிலும் நெருப்பை கொட்டியதை விடவும் கொடூரமாக கனன்றுகொண்டிருக்கின்றது. சாதாரணமாக ஒரு நாட்டில் பொலிஸ் மற்றும் இராணுவம்தான் மக்களை பாதுகாக்கும் அரணாக இருப்பதுண்டு தமிழர்களுக்கு இது என்றைக்கும் ஒத்துவராத ஒன்று.

இந்நிலையில் மக்கள் நம்பவேண்டியுள்ள ஒரே ஆதாரம் தமிழ் அரசியல் தலைவர்கள், மற்றும் பொறுப்பான பதவிகளில் இருந்து மக்களை பாதுகாத்து சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுமிடத்தில் பதவிவகிக்கும் சிவில் நிர்வாக அதிகாரிகளையே. ஆனால் வீடு எரிக்கும் ராசாவுக்கு நெருப்பு எடுத்துக்கொடுக்கும் டக்ளஸும் கருணாவும் மந்திரியாகவும் அவற்றை நடைமுறைப்படுத்தும் பொறியாக அரச அதிபர் இமெல்டா சுகுமாரும் இன்னும் பலரும் களத்தில் நிற்கின்றனர்.

தமிழ்த்தாயின் வயிற்றில்ப்பிறந்து அரசியல்செய்யும் அரசியல்வாதிகளும், தமிழ் அரச அதிகாரிகளும் அங்கு இன்னும் வாழுவதாகவும் சேவைசெய்வதாகவும் உதிரியாக செய்திகள்மட்டும் வருகின்றன. யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக ஒரு பாதிக்கப்பட்ட பெண் (தாய்க்குலம்) திருமதி. விஜயகலா மகேஸ்வரன், மற்றும் யாழ் அரசாங்க அதிபராக ஒரு தமிழ்த்தாய் பெற்றெடுத்த பெண் இமெல்டா சுகுமார், ஆகியோர் முக்கிய இடத்தில் இருக்கின்றனர். இன்றய நிலையில் அரசாங்கத்தை தட்டிக்கேட்கக்கூடிய இடத்திலும் இவர்கள்தான் இருக்கின்றனர்.

அத்துடன் சிலகாலங்களாகக் யாழ்குடாநாட்டில் பொறுப்பான சிவில் அதிகாரங்களில் இருப்பவர்கள் அதிகமானவர்கள் பெண்களாகும், ஐந்து ஆறு மாதங்களுக்கு முன்பிருந்த பட்டியலின்படி மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபிணி வரதலிங்கம், யாழ்ப்பாண பிரதேச செயலர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரம், மாநகரமேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, உடுவில் பிரதேச செயலர் திருமதி மஞ்சுளாதேவி சதீஷன், சங்காணை பிரதேச செயலர் திருமதி தேவநந்தினி பாபு, யாழ். உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திருமதி மதுமதி வசந்தகுமார், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பசுபதிராஜா பவானி, யாழ்ப்பாண கல்விப்பணிப்பாளர் திருமதி.கே.வேதநாயகம், யாழ்.பிராந்திய மாகாண ஆணையாளர் திருமதி எஸ். சிவலிங்கம், யாழ்.பிராந்திய உதவிப் பதிவாளர் திருமதி மகாராணி இராஜரத்தினம், புவிச்சரிதவியல் சுரங்கப்பணிகள் அகழ்வு பணிப்பாளர் எந்திரி கே.யோககௌரி, வலிகாமம் தெற்கு பிரதேசசபை செயலாளர் சுலோசனா முருகேசன், யாழ்ப்பாண சித்தமருத்துவத்துறை தலைவர் திருமதி சிவஞானமணி பஞ்சராசா என பெரும்பாலான சிவில் நிர்வாகப்பொறுப்புக்களில் பெண்களே இருந்துவருகின்றனர் இவர்கள் ஒன்றுசேர்ந்து குரல் கொடுக்கத்தேவையில்லை அடிப்படை சட்டத்திற்கிசைவாக மனிதாபிமானத்துடன் நியாயமாக நடந்து கொண்டாலே அரவாசி பிரச்சினைகள் தீர்வுக்கு வந்துவிடும். கற்றறிந்த பெண்களான இவர்கள் ஒன்றுசேர்ந்து நியாயமாக நடந்துகொண்டாலே அதிகாரவர்க்கம் அடங்கிப்போவதற்கு நிறையக்காரணங்கள் இருக்கின்றன.

ஆனால் தமிழ்ச்சாதியின் பிறவிக்குணமான சுயநலமும் கால்வாரும் புத்தியும் காட்டிக்கொடுப்புக்களும் எவர் செத்தால் எனக்கென்ன எவரது குமர் எவனால் சீரழிக்கப்பட்டு தெருவில் வீசப்பட்டால் எனக்கென்ன!, என்ற கொள்கையுடன் அவரவர் காரியத்துடன் தமது உத்தியோகத்தையும் தமது குடும்ப சுற்றுவட்டத்தையும் மிகக்கவனமாக பாதுகாத்து கொள்ளுகின்றனர், அப்படி செய்துகொண்டாலும் இலங்கை அரசியல் சட்டத்திலிருக்கும் மக்களுக்கான உரிமையை மக்கள் அனுபவிக்க இடமளிக்காமல் அராஜக ஆட்சி ஏவலுக்கு அடிமைச்சேவகம் அரங்கேறுகிறது.
யாழ்ப்பாண சிவில் நிர்வாகத்தில், அரசியல்வாதிகளையும் புறந்தள்ளி முழுத்தலையீடு செய்து கட்டளையிடவேண்டிய நேரடியான இடத்தில் இருப்பவர் யாழ் அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், அவர்கள். இமெல்டா அவர்கள் முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மாற்றல் அறிவித்தல் வந்தபோதே பிரச்சினைகளும் அவர்கூடவே வந்திருந்தது. சென்ற ஆண்டு யாழ் அரசாங்க அதிபராக இருந்த கே கணேஸ், அவர்களுக்கும் இமெல்டாவுக்கும் பல இழுபறிகளின் பிற்பாடுதான் 13, 2010 ஜூலை திருமதி இமெல்டா,பதவியை ஏற்றுக்கொண்டார் அந்த முகூர்த்தமோ என்னமோ இமெல்டா அவர்களின் நிர்வாக காலத்தில் விரும்பத்தகாத செயற்பாடுகளின் இடமாக யாழ்ப்பாணம் மாறியிருக்கிறது.

வவுனியாவிலும் கொழும்பிலும் 2009க்கு முன் நிகழ்ந்த காட்டுமிராண்டித்தனம் வடக்கு கிழிக்கில் வரையறையின்றி ஈடேற்றப்படுகிறது. சிங்களவரை விட தமிழர்கள் இதற்குள் ஊடுருவியிருப்பதுடன் அரச அதிகாரிகள் துணைபோவதும்தான் பெரிய துன்பம். ஒரு பெற்றோரின் இடத்தில் ஒரு சகோதரனின் இடத்தில் ஒரு உறவினரின் இடத்தில் இருந்து நடைபெறும் சம்பவங்களை நோக்கினால் வலியின் விஸ்தீரணம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளலாம். வேதனை வலி என்பது எல்லோருக்கும் பொதுவானதே.

தமிழர்கள்மீது கட்டவிழ்த்து விடப்படும் இந்த அனீதிக்கு தீர்வு காணவேண்டிய பொறுப்பிலிருக்கும் அமைச்சர்களான டக்கிளஸ் தேவானந்தா மற்றும் கருணா பிள்ளையான் போன்றவர்களே பிரச்சினைகளின் ஊற்றுவாய் என்று பலராலும் குற்றம் சுமத்தப்படுகிறது. ஆனால் மறுப்பு தெரிவிக்கும் அவர்களின் குழுவினர்தான் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பொலிஸும் மக்களும் கூறுகின்றனர். இக்குழுக்களைச்சேர்ந்த பலர் குற்றவாளிகளாக இனங்கணப்பட்டும் நீதியின் முன் நிறுத்தப்பட்ட வரலாறுகளுமில்லை.

இப்பேர்ப்பட்ட செய்திகளை ஊடகங்கள் வெளியிடவேண்டாம் என்பதை உணர்த்தும் விதமாக EPDP யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவரகள் நேற்று ஒரு செய்தியை வெளியிட்டு மறைமுகமாக ஊடகங்களை தணிக்கை செய்திருந்தார்: யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்கள் நிதானமாக செய்தி வெளியிட வேண்டுமெனவும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விருப்பம் தெரிவித்திருந்தார்(????)

ஆதாரங்கள் காணப்படும் சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும். யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் மக்கள் அமைதியாக வாழ்வதனையே விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து தகுதி தராதரம் பாராது தண்டனை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
யாழ்ப்பாணத்தில் கொலை மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். கடத்தப்பட்டவர்கள் உயிருடன் திரும்பி வரவேண்டும். கடத்தலில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டு, தகுதி தராதரம் பாராது தண்டிக்கப்பட வேண்டும். இந்த பிரச்சினையை சமூக பிரச்சினையாக நோக்க வேண்டும். பாதுகாப்பு தரப்பினரின் அதிகாரத்தை பயன்படுத்தி, இடம்பெற்று வரும் வன்முறைகளை தடுக்க வேண்டும். எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். இதன் உள் அர்த்தம் என்னவென்பது அவரைத்தவிர வேறு யார் அறிவார்?

இந்தச்செய்திமூலம் சர்வதேசத்திற்கு தான் ஒரு புனிதன் எனக்காட்டிக்கொள்ள வேண்டுமானால் பயன்படுத்தலாம் அத்துடன் உள்ளூர் ஊடகங்களை தணிக்கைக்குட்படுத்தலாம் வேறு அபிவிருத்தி எதுவும் நடந்துவிடப்போவதில்லை.

இதேநேரம் அரசாங்கத்துடன் இணைந்து செயல்ப்படும் பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே. ஸ்ரீரங்கா யாழ். குடாவில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் சம்பவங்களின் பின்னணியில் அங்கு இயங்கும் ஆயுக் குழுக்கள் செயற்படுவதாகத் தான் கருதுவதாக தனது பங்கிற்கு தெரிவித்துள்ளார். யாழ். குடாவில் இடம் பெறும் சம்பவங்கள் தொடர்பில் தான் ஆயுதக் குழுக்களைச் சந்தேகிப்பதாக யாழ். குடாவுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
அவ்வாறெனின் இராணுவத்துக்குத் தெரியாத ஆயுதக் குழுக்கள் அங்கு உள்ளனவா அல்லது அவர்கள் மீது நடவடிக்கையெடுக்க முடியாத நிலை உள்ளதா, மேலும் சாவகச்சேரியில் மாணவன் ஒருவன் கடத்தப்பட்டுக் கப்பம் கேட்கப்பட்ட நிலையில் பின்னர் கடத்தல்காரர்களால் கொல்லப்பட்டிருந்தான். இது தொடர்பான வழக்கை நீதியான விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முயன்ற நீதிபதி உடனடியாகவே இடமாற்றம் செய்யப்பட்டார். இவ்வாறாக நீதித்துறையில் இடம்பெறும் தலையீடுகளும் இன்று யாழ். குடாவில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரிக்கக் காரணமாகின்றன.
சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட பிரதிக் கல்விப் பணிப்பாளர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள சுட்டுக் கொல்லப்பட வேண்டியவர்களா? மேலும் மன நிலை பாதிக்கப்பட்ட ஒருவரை எவ்வாறு பிரதிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்ற அனுமதிக்க முடியும்? இதேவேளை, படுகொலை செய்யப்பட்டவர்களில் இன்னொருவர் மணலுடன் தொடர்புள்ளவர். யாழ். குடாவில் மணல் வியாபாரத்தின் ராஜாக்கள் யார் என்பதனை அந்தப் பிரதேச மக்கள் நன்கு அறிவர். இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது இவ்வாறான சம்பவங்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது புலனாகும் என அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீரங்காவின் இந்தக்குற்றச்சாட்டு நேரடியாக டக்கிளஸ் தேவானந்தாவையே குறித்து நிற்கிறதென்பதும் வெளிப்படையாக தெரிகிறது.
யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற தேசிய அனர்த்த நிகழ்வில் சிங்கள மொழியில் தேசிய கீதத்தை பாடுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே தனக்கு உத்தரவிட்டதாக அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்திருந்தார். சர்ச்சைக்குரிய வகையில் தேசிய கீதம் பாடப்பட்டமை தொடர்பாக எழுப்பப்ட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே சிங்கள மொழியில் தேசிய கீதத்தை பாடுமாறு தனக்கு பணித்ததாக இமெல்டா சுகுமார் தெரிவித்தார். ஆனாலும் தான் முன்னதாக தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மாறி மாறி படிப்பதற்கு ஏற்பாடு செய்திருந்ததாகவும் ஆனால் இறுதி நேரத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேசிய கீதத்தை சிங்கள மொழியில் பாடுமாறு தனக்கு கட்டளையிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மட்டுமல்லாது தமிழர் வாழும் பிரதேசங்கள் யாவும் அடக்குமுறையும் அடாவடியும் தலைவிரித்தாடுகின்றன தமிழ் அரசியல் கூர்க்காக்கள் கொழுப்பிலும் சென்னையிலும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களிலும் தமிழர்களுக்கான (தங்களுக்கான) தீர்வை தேடி அலைகின்றனர். புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழர்களால்த்தான் ஈழத்தின் அவலத்தை கட்டுக்குள் கொண்டுவரக்கூடிய கடிவாளமான போர்க்குற்ற விசாரணை முன்னெடுப்பு சர்வதேசமட்டத்திற்கு கொண்டுசெல்லக்கூடிய தாற்பரீகம் காலத்தால் கையளிக்கப்பட்டிருந்தது. அந்த நம்பிக்கையிலும் மண் விழுந்துகொண்டிருப்பதை பிரிவினையும் பணத்தாசையும் காட்டிக்கொடுப்புக்களும் உட்புகுந்து தலைவிரித்தாடுவதை பார்க்கும்போது எந்தக்காலத்திலும் தமிழினத்திற்கு விமோசனம் கிடைப்பதற்கான சாத்தியம் தென்படவில்லை.

உலக நாடுகள் ஒன்றுசேர்ந்து ஈழத்தமிழரின் சுதந்திர விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தை அழிப்பதற்கு காட்டிய ஆர்வம் வேகம் தமிழினத்தின் போராட்டத்துக்கான அடிப்படையை அறிந்து முறையான தீர்வுகாண்பதில் உலகம் முனைப்புக்காட்டவில்லை. எலிக்கும் எறும்புக்கும் வாழ்வியல் ஆராய்ச்சிக்கட்டுரைகளும் பாதுகாப்பும் தேடும் உலகம் தமிழர்களின் அனர்த்தத்தில் மனிதத்தன்மையையாயினும் காட்ட மறந்துவிட்டது. அரசியல் மயப்படுத்தப்பட்ட நகர்வுகளாகவே எல்லாம் நோக்கப்படுகிறது வலிமையே வாழும் என்ற பொறிமுறை ஆட்சி கொண்டிருப்பதையே கண்கூடாக காணமுடிகிறது.

யூதர்கள், ரோமானியர்கள், யூகோஸ்லாவிய முஸ்லிம்கள், அல்பேனிய கொசோவோக்கள், குரோசியர்கள், ஆர்மேனியர்கள் ஆபிரிக்காவில் ருவாண்டா புறூண்டி ., கம்போடியர்கள், கிழக்கு திமோரியர்கள், பாலஸ்தினியர்கள், எல்லாமே பெரும்பான்மை ஆதிக்கத்தால் கொடுமைப்படுத்தப்பட்டிருந்தாலும் அவர்களில் ஒற்றுமை கொண்டிருந்த இனங்கள் வெற்றியை பெற்றிருக்கின்றன வீரமான தமிழினத்துக்கு ஒற்றுமைக்குலைவே மாறி மாறி வீழ்ச்சியை சந்திக்கும் துர்ப்பாக்கியம் கண்முன்னே விரிந்து வெறுப்புக்குள்ளாக்குகின்றது.

இன்று ஸ்ரீலங்கா அரசாங்கம் பயப்படும் ஒரேயொரு புள்ளி போர்க்குற்றத்துக்கான சர்வதேச அழுத்தம் ஒன்றுமட்டுமே. அந்த துருப்புச்சீட்டை தூக்கி நிறுத்தவேண்டிய பொறுப்பு புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களுக்கு உண்டு. இவர்கள் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பின் கட்டுப்பாட்டுக்குட்பட்டு நகர்வினை மேற்கொண்டாலே தவிர, இமயமலையை தூக்கி தோளில் சுமந்து வீரம் காட்டினாலும் தமிழினம் ரசித்துவிட்டு திரும்புமே தவிர எவரும் நம்பி பின் செல்லப்போவதில்லை. பிரிந்து குழுக்களாகி எதையும் சாதித்துவிடவும் முடியாது. இதை அனைவரும் நன்கு அறிந்தேயுள்ளனர். அத்துடன் விடுதலை பெறவேண்டிய இடமும் ஈழமேயன்றி புலம்பெயர் தேசமல்ல, களையெடுப்பிற்கான காரணத்திற்காக புலம்பெயர் தேசத்தில் காலத்தால் இந்தப்பிரிவினை ஏற்படுத்தப்பட்டு பொய்யர்கள் இனங்காணப்படக்கூடும்.

எந்த ஒரு சுயநல நோக்கமுமில்லாமல் தமிழும் ஈழமும் மூச்சாக தலைவரால் கட்டியெழுப்பப்பட்ட விடுதலைக்கோட்டைக்குள் எலிகளும் கோட்டான்களும் சிலசந்தற்பங்களில் வந்து போகலாமே தவிர நிரந்தரமாக தங்கவோ ஆட்சிகொள்ளவோ முடியாது, சத்தியம் நிச்சியம் வெல்லும்.


ஈழதேசம் இணையத்திற்காக ஆரணி,

No comments: