Friday, March 11, 2011

தயாளு அம்மாள், கனிமொழியிடம் சி.பி.ஐ. விசாரணை


தயாளு அம்மாள் - கனிமொழி
சென்னை, மார்ச் 11: 2-ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னையில் வெள்ளிக்கிழமை 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அவர்களது வீடுகளில் இல்லாமல், தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் இருவேறு இடங்களில் இந்த விசாரணை நடத்தப்பட்டது.

முதல்வர் கருணாநிதி தலைமையில் தி.மு.க. வேட்பாளர்களுக்கான நேர்காணலும், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் குழுவினருடன் தி.மு.க. தேர்தல் குழுவினரின் பேச்சுவார்த்தையும் அறிவாலயத்தில் தனித்தனியே நடந்தன.

கலைஞர் டி.வி.யின் பங்குகள் மொத்தம் மூன்று பேரிடம் உள்ளன. 60 சதவீத பங்குகள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடமும், 20 சதவீத பங்குகள் முதல்வரின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியிடமும், மீதமுள்ள 20 சதவீத பங்குகள் அதன் நிர்வாக இயக்குநர் சரத்குமாரிடமும் உள்ளன.

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேட்டின் மூலம் "ஸ்வான்' என்ற தொலைத்தொடர்பு நிறுவனம் பயனடைந்ததாகப் புகார் எழுந்துள்ளது. இந்த நிறுவனத்தின் மற்றோர் அங்கமான டி.பி. ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டி.வி.க்காக ரூ.214 கோடி பெறப்பட்டதாகத் தகவல் வெளியானது.

டி.பி. ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து அந்தத் தொகை கடனாகத்தான் பெறப்பட்டது என்றும், அதை கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்திவிட்டதாகவும், சட்டத்துக்கு உள்பட்டே இந்தப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகவும் கலைஞர் டி.வி. நிர்வாகம் விளக்கம் அளித்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் சோதனையிடலாம் என்றும் தெரிவித்தது.

இதையடுத்து, தில்லியில் இருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள், கலைஞர் டி.வி. அலுவலகத்தை பிப்ரவரி 18-ம் தேதி சோதனையிட்டனர். அதன் நிர்வாக இயக்குநர் சரத்குமார் உள்ளிட்டோரிடம் விசாரணையையும் மேற்கொண்டனர்.

சி.பி.ஐ. அதிகாரிகள் வருகை: கலைஞர் டி.வி.க்குப் பெறப்பட்ட தொகை தொடர்பாக விசாரணை நடத்த, தில்லியிலிருந்து ஏ.டி.எஸ்.பி. தலைமையில் ஒரு பெண் அதிகாரி உள்பட 4 பேர் வெள்ளிக்கிழமை காலை சென்னை வந்தனர்.

அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் டி.வி. அலுவலகத்துக்கு மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி காலை 10.30 மணிக்கு வந்தார். கலைஞர் டி.வி. இயக்குநர் அமிர்தம், தயாளு அம்மாள் ஆகியோர் அண்ணா அறிவாலயத்தின் பின் வாசல் வழியாக காலை 10.40 மணிக்கு உள்ளே வந்தனர்.

சி.பி.ஐ. அதிகாரிகள் சரியாக 10.45 மணிக்கு கலைஞர் டி.வி. அலுவலகம் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்துக்கு வந்தனர். அதன் பிறகு, தயாளு அம்மாள், கனிமொழி, அமிர்தம் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

கலைஞர் டி.வி.க்கோ, கருணாநிதியின் குடும்பத்துக்கோ எந்தவிதமான தொடர்போ, சம்பந்தமோ இல்லாத நிலையில், 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் பயன்பெற்ற "ஸ்வான்' நிறுவனத்தின் அங்கமான டி.பி. ரியாலிட்டிஸ் எதற்காக கலைஞர் டி.வி.க்கு பணம் தந்து உதவ வேண்டும் என்கிற கேள்வியை மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் மீண்டும் மீண்டும் கேட்பதாகத் தெரிகிறது.

கலைஞர் டி.வி.க்கு எதற்குப் பணம் பெறப்பட்டது, அந்தத் தொகை எவ்வாறு திருப்பிச் செலுத்தப்பட்டது, அதைத் திருப்பிச் செலுத்துவதற்கான வருவாய் ஆதாரம் என்ன என்பன உள்ளிட்ட கேள்விகளையும் சி.பி.ஐ. அதிகாரிகள் அவர்களிடம் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கேள்விகளுக்கு தயாளு அம்மாள், கனிமொழி, அமிர்தம் ஆகியோர் அளித்த பதில்களை சிபிஐ அதிகாரிகள் குறித்துக் கொண்டுள்ளனர்.

முதலில் தயாளு அம்மாளிடம் 40 நிமிடமும், அதன்பிறகு கனிமொழி, அமிர்தம் ஆகியோரிடம் ஒன்றரை மணி நேரமும் விசாரணை நடைபெற்றுள்ளது. பிறகு, கலைஞர் டி.வி.யின் நிர்வாகிகளிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்வி கேட்டுள்ளனர். சுமார் 3 மணி நேரம் இந்த விசாரணை நீடித்தது. பிற்பகல் 2.15 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர்.

அறிவாலயத்தில் பரபரப்பு: சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. வேட்பாளர்களைத் தேர்வு செய்ய நேர்காணல் 4-வது நாளாக வெள்ளிக்கிழமை

நடைபெற்றது. நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கான நேர்காணல் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அதேநேரத்தில், சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையும் நடைபெற்றதால், அறிவாலய வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.

வீடுகளில் நடத்தவில்லை: 2-ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக அமைச்சர் ஆ,ராசா, அவரது உறவினர்களின் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர்களது வீடுகளில் வைத்தே அவர்களிடம் விசாரணையும் நடைபெற்றது.

ஆனால், முதல்வரின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் அவர்களது வீட்டில் வைத்து எந்த விசாரணையையும் மேற்கொள்ளவில்லை. தயாளு அம்மாளிடம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள பேராசிரியர் ஆய்வு நூலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கனிமொழியிடம் கலைஞர் டி.வி. அலுவலகத்தில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர்.

அலுவலகத்திலும், ஆய்வு நூலகத்திலும் வைத்து விசாரணை நடத்தப்பட்டதன் மூலம், "முதல்வர் வீட்டுக்குள் சி.பி.ஐ. அதிகாரிகள்' என்ற செய்தி வராமல் தடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்த தடுப்பு நடவடிக்கைக்காகவே முதல்வர் கருணாநிதி காங்கிரஸ் தலைமையிடம் பலமுறை பேசியதாகவும், சட்டப் பேரவைத் தேர்தலில் 63 தொகுதிகள் வரை அந்தக் கட்சிக்கு விட்டுக் கொடுத்ததாகவும் நம்ப இடம் இருக்கிறது.

No comments: