Monday, March 21, 2011

இப்போதே பயமாக இருக்கிறது……

எதற்காக இப்போதே பயமாக இருக்கிறது… ? வேறு எதற்கு…. அதிமுக பெரும்பான்மை பெற்று, மீண்டும் ஆட்சி அமைத்து, ஜெயலலிதா முதலமைச்சர் ஆனால், எப்படி இருக்குமோ என்று இப்போதே பயமாகத்தான் இருக்கிறது.

1996ம் ஆண்டு, தமிழகம் எங்கும், ஜெயலலிதா எதிர்ப்பு அலை வீசியது. மக்களுக்கு, வளர்ப்பு மகனின் ஆடம்பரத் திருமணம், அங்கெங்கெனாதபடி, எங்கெங்கும் நிறைந்திருந்த ஊழல், அதிகாரிகளின் அட்டகாசம், எங்கெங்கும் கட்டவுட்டுகள், (அப்போது ப்ளெக்ஸ் போர்டுகள் இல்லை) என்று அந்த அராஜகத்துக்கு அளவே இல்லாமல் இருந்தது. ஒரு எதிர்க்கட்சி சேனல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சன்டிவி அன்று உதாரணமாகத் திகழ்ந்தது. இப்போது போல, அப்லிங்கிங் வசதி அப்போது இல்லாவிட்டாலும் கூட, பிலிப்பைன்ஸுக்கு கேசட்டை அனுப்பி ஒளிபரப்ப வேண்டிய நெருக்கடி இருந்தாலும் கூட, அற்புதமான எதிர்க்கட்சியின் பணியை செய்தது. அப்போது சன் டிவியில் சனிக்கிழமை தோறும் ஒளிபரப்பாகும் நேருக்கு நேர் நிகழ்ச்சி ஆட்சி மாற்றத்திற்கான ஒரு அடித்தளமாக அமைந்தது என்றால் மிகையாகாது. மக்கள் அந்த அளவுக்கு அந்த நிகழ்ச்சியை விரும்பிப் பார்த்ததன் காரணம், அன்றைய ஜெயலலிதா அரசாங்கத்தின் மீது அப்படி ஒரு வெறுப்பு. எப்போது இந்த அரசாங்கம் ஒழியும் என்று கடும் வெறுப்பில் இருந்தார்கள்.

2176838929_30c714cf74_b

கருணாநிதி அன்று இறுதியாக பேசிய தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்திய வரைபடத்தில் தமிழகம் இருந்த இடம், காலியாக இருக்கும் என்று கூறினார். ரஜினிகாந்த், ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வந்தால், தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று பேசினார். ஆட்சிக்கு வந்த திமுக, ஜெயலலிதா மீது பல்வேறு ஊழல் வழக்குகளை தொடுத்தது. ஜெயலலிதாவும், சசிகலாவும், நீதிமன்றப் படியேறி அந்த ஊழல் வழக்குகளை சந்தித்தனர். அத்தோடு அதிமுகவின் கதை முடிந்தது, ஜெயலலிதா இதோடு எழுந்திருக்க மாட்டார் என்றுதான் கருணாநிதி நினைத்தார். ஆனால், 1998 மற்றும் 1999ல் நடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் கணிசமான எம்பிக்களை பெற்று, மீண்டும் எழுந்தார்.

1996 – 2001 திமுக ஆட்சியை பொறுத்த வரை, பெரிய அளவில் ஊழல் புகார்களோ, குற்றச் சாட்டுகளோ, இல்லாமல் இருந்தது. இன்னும் சொல்லப் போனால், திமுக கட்சியினரையே கருணாநிதி சம்பாதிக்க விடவில்லை என்பதுதான் அன்றைய திமுக ஆட்சியின் மீது இருந்த அங்கலாய்ப்பு. இந்த நேரத்தில் தான் 2001 தேர்தல் நடந்தது.

2001 தேர்தல் அறிவிக்கப் பட்ட பிறகு, அப்போது விஜய் டிவியில் அரசியல் விவாதங்கள் ஒளிபரப்பப் பட்டு வரும். அந்த விவாதங்கள் எவ்வித கட்சி சார்பும் இல்லாத காரணத்தால், மிகப் பெரிய வரவற்பைப் பெற்றன. அப்போது, தேர்தல் முடிவுகளை விவாதித்துக் கொண்டிருந்த போது, ஜெயலலிதாவின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று நிகழ்ச்சி நடத்துபவர் கேட்ட கேள்விக்கு, ஒரு பத்திரிக்கையாளர், கடந்த 5 ஆண்டுகளில், ஜெயலலிதா ஆட்சியில் இல்லாவிட்டாலும், கட்சியை நடத்தும் விதத்தைப் பார்க்கும் போதும், கட்சி நிர்வாகிகளை காலையில் ஒருவர், மாலையில் ஒருவர் என்று மாற்றும் போதும், ஜெயலலிதா மாறவேயில்லை என்று தெரிவித்தார். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பத்தே நாட்களில் அந்த பத்திரிக்கையாளர், பத்திரிக்கையாளர் மீது நடந்த தாக்குதல்களை கண்டித்து, தலைமைச் செயலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அதுதான் 2001 – 2006 வரையிலான அதிமுக ஆட்சியின் ஒரு சாம்பிள். ஆட்சிக்கு வந்த உடனேயே, ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் வார்த்தை யுத்தம் தொடங்கியது. ‘கஜானா காலி’ என்றார் ஜெயலலிதா. ’கஜானா காலியில்லை, அரிசியாக வைத்திருக்கிறேன்’ என்றார் கருணாநிதி. ’அத்தனை அரிசியும், புழுத்த அரிசி’ என்றார் ஜெயலலிதா. பத்தாது என்று சட்டப்பேரவையில் வேறு அந்த அரிசியை காண்பித்தார். சட்டப் பேரவையில் ஜெயலலிதா சொன்னதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பத்திரிக்கை நிருபர்களை அழைத்துக் கொண்டு, பொன்முடி, அரசு கோடவுனில் நுழைந்து, அரிசி சாம்பிள் எடுத்து, ’எது புழுத்த அரிசி’ என்று சவால் விட்டார். அப்போது கோடவுனில் நுழைந்த சன் டிவி நிருபர் மீது அத்து மீறி அரசு அலுவலகத்தில் நுழைந்தார் என்று வழக்கு. அதற்கு எதிராகத்தான் அன்று பத்திரிக்கையாளர்கள், போராட்டம் நடத்தினார்கள்.

பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல் ஒரு தொடக்கம் மட்டுமே…. தொடர்ந்து, ஆடுமாடு கோழி வெட்டத் தடைச் சட்டம், மதமாற்றத் தடைச் சட்டம், புதிய நியமனத்திற்கு தடைச் சட்டம், அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் குறைப்பு, என்று தொடர்ந்து சாமான்ய மக்களை பாதிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மட்டுமே எடுத்தார். அரசு ஊழியர்கள் மீது, சாமான்ய பொதுமக்களுக்கு ஒரு வெறுப்பு இருந்தாலும், ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்கள் ஒரே நாளில் டிஸ்மிஸ் செய்யப் பட்டதையும், அவர்கள் குடியிருந்த அரசுக் குடியிருப்பில் புகுந்து, இரவோடு இரவாக அவர்களை காலி செய்ய்ச் சொல்லியதையும், மக்கள் ரசிக்கவில்லை.

j1

அடுத்த ஐந்தாண்டுகளில் அதிமுக ஆட்சி மீது பெரிய அளவில் ஊழல் குற்றச் சாட்டுகள் இல்லையென்றாலும், நற்பெயரும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

தற்செயல் என்று சொல்ல முடியாத வண்ணம், ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகள் அனைத்தும், நீதிமன்றங்கள் ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பளித்தன.

2006 தேர்தல், யாருக்கும் சாதகமான அலை இல்லாமல், எந்தக் கட்சிக்கும் எதிர்ப்பு அலையும் இல்லாத ஒரு சூழலில் வந்தது. அறுதிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், கஷ்டப்பட்டுக் கரையேறி, ஆட்சி அமைத்தது.

2006 திமுகவின் ஆட்சி, கருணாநிதி குடும்பத்தின் அசுர வளர்ச்சியால், திமுக ஆட்சியாக இல்லாமல், கருணாநிதியின் குடும்ப ஆட்சியாகவே விளங்கியது. திமுக ஆதரவாளர்கள் கூட, இந்த ஆட்சி போக வேண்டும் என்ற எண்ணத்திலேயே உள்ளனர். குடும்பத்தின் கடும் ஆதிக்கமும், அரசு அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும், அடித்த கொள்ளைக்கு அளவே இல்லாமல் போனது. சாமான்ய பொதுமக்கள் வாழவே முடியாது என்ற சூழல் ஏற்பட்டது. ஊழலின் ஊற்றுக் கண்ணாகவே கருணாநிதி குடும்பம் மாறியது. 1996 பொதுத் தேர்தலின் கடைசி பிரச்சாரக் கூட்டத்தில் கருணாநிதி பேசியது, இன்று கருணாநிதிக்குத் தான் பொருந்தும். கருணாநிதி குடும்பம் மீண்டும் ஒரு முறை ஆட்சிக்கு வந்தால், இந்திய வரைபடத்தில் தமிழ்நாடு இருக்கும் இடத்தில் ஒரு காலியிடம் தான் இருக்கும்.

இப்படிப் பட்ட ஒரு மோசமான சூழலில் தான் இன்று 2011 தேர்தல் வந்துள்ளது. இந்தத் தேர்தல் அறிவிக்கப் பட்ட உடனேயே, பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதிமுக அணியை பலமாக்க வேண்டும் என்று, சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் பலரும், கடுமையாக பணியாற்றினார்கள். சவுக்கக்குத் தெரிந்த பத்திரிக்கையாளர்கள் பலரும், இந்தக் கூட்டணியில் தேமுதிக வந்து சேரவும், மதிமுக வெளியேறாமல் இருக்கவும், பலரும் கடுமையாக பணியாற்றினார்கள். இவ்வாறு பணியாற்றிய அனைவருக்கும் அதிமுக ஆட்சி வந்ததும், சலுகைகளை பெற வேண்டும் என்றோ, மந்திரியாக வேண்டும் என்றோ, வீட்டு மனை ஒதுக்கீடு பெற வேண்டும் என்றோ ஆசையில்லை. தமிழகத்தின் ஒரு மிகப்பெரிய கொள்ளைக் கூட்டம் அதிகார மையத்திலிருந்து அகற்றப் பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.

2176839155_a6d9b3f088_b

ஆனால் கருணாநிதியை ஆட்சியை விட்டு அகற்றும் வல்லமை படைத்த ஜெயலலிதாவின், போக்கோ, மிகுந்த கவலையையும், அச்சத்தையும் அளிக்கிறது. இந்த தேர்தல் கூட்டணி குறித்து ஜெயலலிதா நடத்திய பேச்சுவார்த்தைகளும், அதன் முடிவில், அதிமுக வெளியிட்ட வேட்பாளர்களின் பட்டியலும், அடுத்து அதிமுக ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

கூட்டணி கட்சிகளோடு பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கையிலேயே, கூட்டணி கட்சிகள் தற்போது எம்எல்ஏக்களாக இருக்கும் பல்வேறு தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்களை அறிவித்ததைப் போன்ற, மோசமான காரியம் வேறு எதுவுமே இருக்க முடியாது. அதுவும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே இவ்வாறு அறிவித்ததென்பது, கூட்டணிக் கட்சிகளை கடும் கோபம் கொள்ளச் செய்தது. இவ்வாறு, தான்தோன்றித் தனமாக நடத்து கொள்வதற்கு, ஜெயலலிதா ஒன்றும் மிக மிக வசதியான ஒரு சூழலில் இல்லை. மீண்டும் திமுக ஆட்சிக்கு வருமானால், ஒரு காலத்தில் அதிமுக என்ற ஒரு கட்சி இருந்தது என்று வரலாற்றுப் பாடத்தில் பள்ளிப் பிள்ளைகள் படிக்கும் ஒரு நிலையை கருணாநிதி உருவாக்கி விடுவார். ஜெயலலிதாவின் இருப்பே கேள்விக்குள்ளாகும் ஒரு சூழலை எளிதாக கருணாநிதி ஏற்படுத்துவார்.

இப்படிப் பட்ட ஒரு சூழலில், மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டிய கட்டாயம், ஜெயலலிதாவுக்கு உண்டு. கூட்டணிக் கட்சிகளோடு நடத்தும் பேச்சுவார்த்தையின் விபரங்களே, பொதுமக்களுக்குத் தெரியாத வண்ணம், விரைவாகவும், ரகசியமாகவும், பேச்சுவார்த்தையை முடித்து, திமுகவுக்கு முன்னதாக, வேட்பாளர் மற்றும் தொகுதிப் பட்டியலை வெளியிட்டிருக்க வேண்டும். அதிமுக கூட்டணி சுமூகமாக தேர்தலை சந்திக்கத் தயாராகி விட்டது என்ற உணர்வு மக்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை அறிவித்ததையடுத்து, அதிமுக கூட்டணியில் பெரிய குழப்பம் என்ற எண்ணமே மக்களுக்கு ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல், ஜெயலலிதா திருந்தவே இல்லை. அவர் மாறவே மாட்டார் என்றும் பரவலாக பேசத் தொடங்கினார்கள். தெளிவாக முடிவெடுத்து, சுமூகமாக அறிவிப்பை வெளியிட்டிருந்தால், சன் டிவியும், தமிழக உளவுத்துறையும், இந்தக் குழப்பத்தை பயன்படுத்தி வெளியிட்ட செய்திகளையும், ஏற்படுத்திய பிரச்சினைகளையும் தவிர்த்திருக்க முடியுமே… !

ஒரு வேளை, ஜெயலலிதாவுக்குத் தெரியாமலேயே, சசிகலா குழுமத்தினரால், இந்தப் பட்டியல் வெளியிடப் பட்டது என்ற தகவல் உண்மையானால், அது இன்னமும் மோசம். ஒரு முக்கியமான சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தெரிவு செய்வதற்குக் கூட ஜெயலலிதாவுக்கு சுதந்திரம் இல்லாத நிலையில் அவர் ஆட்சி அமைத்தால், அது யாருடைய ஆட்சியாக இருக்கும் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

ஓ.பன்னீர்செல்வமோ, செங்கோட்டையனோ, இது போல ஒரு தவறைச் செய்திருந்தால் இன்று என்ன நடந்திருக்கும்… ? அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து அவர்கள் நீக்கப் பட்டிருக்க மாட்டார்கள் ?

கட்சியில் வேறு எந்தப் பதவியில் இருப்பவர்களும், இது போல நடவடிக்கைக்கு ஆளாகக் கூடிய சூழலில் இருக்கையில், சசிகலா குழுமத்தினர் மீது மட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், இருப்பது ஏன்…. ? அப்படி சசிகலா குழுமத்தினர் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்திருந்தால், அதற்கு ஜெயலலிதாதான் முழுப் பொறுப்பாக முடியும். அப்போதும், அவரின் அடுத்த ஆட்சியைப் பற்றிய அச்சம் இன்னும் அதிகமாகிறது.

2881301163_7ffcb0a4c7_b

தேர்தல் தேதி அறிவிக்கப் பட்ட உடனேயே, சசிகலா குழுமத்தினரைச் சேர்ந்த, என் நடராஜன், எம்.ராமச்சந்திரன், டாக்டர் வெங்கடேஷ், தினகரன், திவாகரன் ஆகியோர், ‘உங்களுக்கு அதிமுக எம்எல்ஏ சீட்டு வாங்கித் தருகிறேன் என்று 40 முதல், 50 லட்சம் வரை வசூல் செய்து குவித்தது உங்களுக்குத் தெரியுமா ?

இப்படி ஆட்சிக்கு வரும் முன்பே இவ்வாறு வசூல் செய்பவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு என்னென்ன செய்வார்கள் ? உங்கள் கட்சி வேட்பாளர்களைத் தெர்வு செய்யக் கூட முடியாத நிலையில் நீங்கள் சூழ்நிலைக் கைதியாக இருக்கிறீர்களா என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லையே ?

இன்று, அதிமுக டிக்கட் வேண்டி வருவோரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, கோடிகளை குவிப்பவர்கள், நாளை திமுக ஆட்சியில் ஊழல் மன்னன்களாகத் திகழும், ஜாபர் சேட், ராதாகிருஷ்ணன், கண்ணாயிரம் போன்ற அதிகாரிகளிடம் நாளை வசூல் செய்து விட்டு, இவர்களுக்கு நாளை நல்ல பதவிகளை வாங்கிக் கொடுத்து, இவர்கள் மீது எந்த விசாரணையும் வராமல் தடுக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம் ?

மேலும் நீங்கள் ஏற்படுத்திய இந்தக் குழப்பங்கள், உங்கள் கூட்டணிக் கட்சிகள், மத்தியில் உங்கள் மீது எந்த அளவுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது தெரியுமா ? நீங்கள் எப்போதும் மாற மாட்டீர்கள் என்று எவ்வளவு வருத்தப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியுமா ?

இந்தக் காரணங்கள் தான், உங்கள் மீதான அச்சத்தை ஏற்படுத்தி நீங்கள் ஆட்சிக்கு வந்தால், என்ன நடக்குமோ என்று இப்போதே பயமாக இருக்கிறது. இந்த பயத்தைப் போக்க வேண்டிய கடமை உங்களுக்கு உண்டு.

நன்றி சவுக்கு இணையம்.

No comments: