தமிழகத்தில் சட்டசபைக்கான தேர்தல் நடக்க இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளன. வேட்புமனுக்களின் சரிபார்த்தல் நேற்று முந்தினத்துடன் முடிவடைந்து,வேட்பாளர் பட்டியல் இறுதிசெய்யப்பட்டு , அவர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்பட்டுவிட்டதால், 234 தொகுதிகளிலும் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.



தமிழக சட்டசபை தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த 19ம் தேதி துவங்கி, 26ம் தேதி முடிந்தது. இதில், 4,280 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மனுக்கள் கடந்த திங்கள்கிழமை 28ம் தேதி பரிசீலிக்கப்பட்டன. இதில், 1,153 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.சிலர் வாபஸ் பெற்றும் இருந்தனர். மீதம் 3,082 மனுக்கள் ஏற்கப்பட்டன. ஏப்ரல் 13ம் திகதி தேர்தல் நடத்தப்பட்டு மே மாதம் 13ம் தேதி வாக்குக்கள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இந்தத் தேர்தலில் பலகட்சிகள் போட்டியிட்டாலும் முடிவாக ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, அல்லது கருணாநிதி தலைமையிலான திமுக, ஆட்சி அமைப்பதற்கான தகமையை பெற இருக்கின்றன. இந்த இரண்டு கட்சிகளில் எந்தக்கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தாலும் தமிழ்நாட்டுக்கோ தமிழினத்துக்கோ பெரியமாற்றம் எதுவும் வந்துவிடப்போவதில்லை, பழையகுருடி கதவைத்திறவடி கதைதான் தொடர்கதை.

இரண்டு கட்சிகளும் சமூக மேம்பாட்டில் தொலைநோக்கு பார்வையற்ற குறுகிய விஸ்தீரணம் கொண்ட தமிழர் விரோத சுயநலன் சார்ந்த ஊழல் கட்சிகள். என்பதுதான் இதுவரை கடந்துபோன கால வழித்தடத்தின் சாட்சி, ஆனால் கடந்த ஐந்துவருடங்களாக ஆட்சிபுரிந்த திமுக, கருணாநிதியின் மன்னர் ஆட்சிக்கொப்பான மோசமான குடும்ப ஆட்சிக்கு விடுப்பு கொடுக்கப்பட்ட ஒரு சிறு ஆறுதல் மக்களுக்கு உண்டாகும் அவ்வளவுதான்.

89 வயதான கருணாநிதி தனது 75 வது வருட அரசியல் அனுபவத்தை இந்த ஆண்டு பூர்த்தி செய்வதாக கூறியிருக்கிறார். இந்த 75 வருடகாலத்தில் கருணாநிதிக்கு சமூக, உலக அரசியல்பற்றிய ஞானம் கடுகளவுகூட இல்லாவிட்டாலும், இந்திய அரசியலில் மிகப்பெரிய பலம் எது, மிகமோசமான பலவீனம் எது, என்ற இரகசியம் எல்லாவற்றையும் நன்கறிந்து வைத்திருக்கிறார். எங்கு கைவைத்தால் எது அசையும், எது அசையாமல் நிற்கும், என்பதை எல்லாம் அக்குவேறு ஆணிவேறாக கருணாநிதி அறிந்தே வைத்திருக்கிறார்.

இயல்பாக கருணாநிதி அதி ஞாபகசக்தி நிறைந்த அபாரமான தந்திரசாலி. அத்துடன் இன்று இந்தியாவில் இருக்கும் அரசியல்வாதிகளில் மிகவும் மூத்தவர். இந்திய அரசியல் சட்டத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரையிலும் இருக்கும் நடைமுறை சட்ட நியாயங்களை, நியாயமாக அணுகுவதைவிட அதிலிருக்கும் ஓட்டைகளை தேடிப்பிடித்து எப்படி தனது ஊழல் குடும்ப சுயநலனுக்கு பாவிக்கலாம் என்பதை துல்லியமாக தெரிந்து அறிந்தளவுக்கு அவரது சிந்தனை மக்கள் வளர்ச்சிபற்றி சிந்தித்தது கிடையாது, கருணாநிதி சட்டத்தின் ஓட்டைகளை பாவித்து தான் தப்பித்து மற்றவர்களை மாட்டிவிடுவதால் அவர் ஒரு அரசியல் சாணக்கியர் என எல்லோரும் பயப்படுவதற்கு காராணமாகியிருக்கிறது.

ஜெயலலிதா முற்று முழுதாக கருணாநிதியின் இயல்புக்கு நேர்மாறானவர். ஆனால் கருணாநிதியை விடவும் ஜெயலலிதா துணிச்சலானவர் என்பது மறுக்கமுடியாது, வேகமாக உணர்ச்சிவசப்படுவதால் காரியத்தை கெடுத்துவிடுபவர் என்று கூறப்படுகிறது.ஜெயலலிதாவுக்கு பெருத்த ஞாபகசக்தியில்லையென்றாலும். தன்னை சீண்டியவர்கள் எவராக இருந்தாலும் எவ்வளவுகாலம் சென்றாலும் மறக்காமல் வெளிப்படையாக பழிவாங்கும் குணம் அரசியலரங்கில் அதிக நேரங்களில் ஜெயலலிதாவை தனிமைப்பட வைத்ததுண்டு. ஆணவமும் விட்டுக்கொடுக்காத மனப்பாங்கும் ஜெயலலிதாவின் தோல்விகளுக்கான பிரதானிகளாகும். ஆற அமர்ந்து சிந்தித்து அனுசரித்து முடிவெடுப்பதெல்லாம் ஜெயலலிதாவின் அகராதியில் இல்லாத ஒன்று.

தனது இருப்புக்காக தமிழகத்தில் உருவான பல்வேறுபட்ட அரசியல் கட்சிகளை தலையெடுக்கவிடாமல் செய்ததில் கருணாநிதியின் பங்கு அதிகம். அதனால் தமிழ்நாட்டில் இந்த இரண்டுகட்சிகளும் தலமைப்பொறுப்பை தமக்குள் வைத்துக்கொள்ள முடிகிறது. வேறு எந்த விஷேச அம்ஷங்களும் இந்த திராவிடக்கட்சிகளிடம் இல்லையென்பதே உண்மை. யதார்த்தமான ஜனநாயகத்துக்கு முரண்பட்ட வகையில் தேர்தல்காலத்தில் ஏற்படுத்தப்படும் கூட்டணி,, என்ற விசித்திரமான ஒரு முரண்பட்ட ஏமாற்றுத்திட்டத்தையும் இந்த இரண்டுகட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு ஈடேற்றுகின்றன. கொள்கைகளை குழிதோண்டி புதைத்துவிட்டு பூச்சியமாக்கப்பட ஒரு சூனியத்தில், நீதி நியாயம் யதார்த்தம் எல்லாம் அடகு வைக்கப்பட்டு, ஆட்சியை பதவியை கைப்பற்றுவதே குறியாக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் அதரப்பழசான அரசியல்ச்சட்டமும் இவையெல்லாவற்றிற்கும் இடங்கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஆரோக்கியமான ஒரு அரசியல்ச்சட்டத்தை தயாரிப்பதில் இந்தியாவில் எந்தக்கட்சிக்கும் உடன்பாடு இல்லை என்பதே உண்மையும் கூட. இந்தியாவின் தொடர் வறுமை, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு இவையே மூல காரணமாகி ஊழலில் புரையோடி நாடு திருவோடு தாங்கும் நிலையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.

கருணாநிதி விஞ்ஞானபூர்வமாக அரசியல் காய் நகர்த்தக்கூடியவர். தந்தரமாக எல்லோரையும் தனது காலடியில் வைத்திருந்து காரியம் அனைத்தையும் தன்னை நோக்கி நகரவைப்பதில் புலி. கட்சியில் உள்ளவர் எவரையும் தலையெடுத்துவிட அவர் விட்டுவைத்ததில்லை. எம்.ஜீ.ஆர், வைகோ, ஆகியோரின் வெளியேற்றம் இதற்கு நல்ல சான்றாகும். அண்ணாத்துரை புற்றுநோய் காரணmaaக பெப்ரவரி 1969 ல் இறந்தபோது அன்றைக்கே அவசர அவசரமாக அண்ணாத்துரைக்கு இரங்கல்பா எழுதி ஆனந்தமாக வெளியிட்டவர் கருணாநிதி. அதையும் அவர்தான் ஒருசமையத்தில் கூறியிருக்கிறார். பிறிதொருசமையத்தில் கருணாநிதி இப்படிக்கூறினார் அண்ணா மறைந்த நிகழ்வு என்னை அப்படியே புரட்டிப்போட்டுவிட்டது அந்தக்கவலையிலிருந்து மீழ்வதற்கு எனக்கு பலகாலம் பிடித்தது என்று கூறியிருந்தார். இயல்பாக வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்திய நெருங்கிய ஒருவர் தவறிவிட்டால் எந்தப்பெரிய புலவராக இருந்தாலும் பாட்டெழுதக்கூடிய மனநிலை இடம் தருமா?. என்பதை சிந்தித்தால் கருணாநிதி எப்படிப்பட்ட பச்சோந்தி அயோக்கியன் என்பது புரியும்.

வரப்போகும் தேர்தல் கருணாநிதிக்கும் திமுக வுக்கும் பூரண்கண்டம் என்பதுதான் அதிகமான மக்களின் 100% எதிர்பார்ப்பு, கணிப்புங்கூட. கருணாநிதியின் வீழ்ச்சிக்கு மூன்று பெரிய காரணிகள் சொல்லப்படுகிறது. 1), ஜி 2 ஸ்பெக்ரம் அலைவரிசை ஊழல் மோசடி, 2), ஈழத்தமிழர்களை பாழ்படுத்தி அழித்தொழித்த ஈழத்துரோகம். 3),தமிழர் விரோத இத்தாலி சோனியாவின் கட்சியான காங்கிரஸுடனான கூட்டு, இவைகளை காரணமாக கூறப்படுகிறது.

இவைதவிர தமிழ்நாட்டின் தொழில்த்துறையில் எவரும் நுழையமுடியாமல் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம் பல தொழிலதிபர்களையும் சினிமா திரைப்படத்துறையினரையும் மோசமாக எரிச்சலடைய வைத்திருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் உயர்கல்வி வியாபாரமாக்கப்பட்டு அவை அனைத்தும் கருணாநிதியின் குடும்பத்தினருக்கு தேவையான அரசியல் வாதிகளின் கைகளில் சிக்கியிருக்கிறது, டாஸ்மாக் எனப்படும் மதுபான விற்பனையை அரசாங்கமே தொடங்கி மதுபான உற்பத்தி அனைத்தும் கருணாநிதியின் குடும்பத்திடமும் அரசியல்வாதிகளிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றும் பல தொழில்த்துறைகளான றியல் எஸ்டேட். தனியார் போக்குவரத்துthதுறை, ஊடகங்கள் எல்லாம் ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் கைகளிலேயே கட்டுண்டுகிடக்கிறது.

தொலைக்காட்சி நிலையங்களை எடுத்துக்கொண்டால் அனைத்தும் அரசியல்வாதிகளின் முதிசமாகவே இருந்துவருகிறது, சர்வதேசம்வரை கோலோச்சும் சன் தொலைக்காட்சி கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தது . சன் ரிவி க்கு இணையான கலைஞர் ரிவி கருணாநிதி குடும்பத்துக்கு சொந்தமானது, ஜெயா ரிவி ஜெயலலிதாவின் சொத்து, மக்கள் ரிவி பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் குடும்ப சொத்து, கப்ரன் ரிவி விஜயகாந்த் அவர்களுடையது, மேஹா ரிவி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் மனைவியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்படி பணங்கொழிக்கும் துறைகள் அனைத்தும் அரசியல்வாதிகள் பங்குபோட்டுக்கொள்ளுவதால் சாதாரனமானவன் இவர்களோடு சேர்ந்தால் தவிர வாழமுடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இப்பொழுது சினிமாவும் கருணாநிதி குடும்பத்திடம் சிக்கிவிட்டதால். கருணாநிதியின் பேரன்கள் எடுக்கும் படங்கள் தவிர வேறு தயாரிப்பாளர்களின் படங்கள் போட்டிபோடமுடியாத சூழல்!. பாரம்பரிய சினிமா தயாரிப்பு கொம்பனிகளையே சின்னத்திரைக்கு தள்ளி நாடகம் தயாரிக்கவைக்குமளவுக்கு நிலமை சென்றிருக்கிறது, பலர் சினிமாவிலிருந்து வெளியேறி வேறு தொழிலுக்கு மாறிவிட்டனர். பல திரைப்படக்கொம்பனிகளின் பெயர்கள் ஞாபகத்திலிருந்து விடுபட்டுப்போய் விட்டன.கருணாநிதி குடும்பத்தின் மேகலா பிக்சர்ஸ் , துரை தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் மூவி. உதயநிதி ஸ்ராலினின் றெட் ஜெயண்ட் மூவி. கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ். கடைசியாக வம்ஷம் என்ற திரைப்படத்தின் மூலம் அருள்நிதி தமிழரசு திரைப்படத்துறைக்குள் நுழைந்திருக்கிறார். தொழில்த்துறையைத்தான் நியாயபூர்வமாக இவர்கள் நடத்தினாலும் பரவாயில்லை ஆனால் இவர்களின் கட்டப்பஞ்சாயத்துக்குட்படாமல் எந்தத்துரும்பும் அசையாது என்பதுதான் தமிழ்நாட்டில் எழுதப்படாத சட்டமாக்கப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில் 176.000.00.00.000. கோடிகளை சுவாகா செய்த ஸ்பெக்ரத்தில் கையும் களவுமாக கருணாநிதியின் மனைவி தயாளு, மற்றும் மகள் கனிமொழியும் சம்பந்தப்பட்டுள்ளது சாட்சிகள், ஆதாரங்கள் மூலமும் நிரூபணமாகியிருக்கிறது. ஸ்பெக்ரம் ஊழலை மத்திய அரசின் சிபிஐ விசாரித்துவந்தாலும் சரியான தண்டனையெல்லாம் கருணாநிதி குடும்பத்துக்கு இப்போதைக்கு கிடைக்கும் என்பதெல்லாம் சொல்லமுடியாது.

ஏனென்றால் சட்டத்திலுள்ள ஓட்டைகள் அனைத்தையும் ஆராய்ந்து பிடிகொடுக்காமல் தப்பும் வண்ணம் கருணாநிதியால் நிறுவப்பட்ட ஊழல் அது, இந்தியத் திரு நாட்டின் அரசியல்வாதிகளின் முக்கிய தொழிலே ஊழலும் சுத்துமாத்தும்தான், காலாகாலமாக தொடர் ஊழல்கள் நடந்துகொண்டிருந்தாலும் எவரும் குற்றவாளியாக தண்டிக்கப்பட்டதாக சரித்திரமில்லை, எனவே விசாரணை தண்டனை என்பதெல்லாம் அரசியல்வாதிகளால் கண்துடைப்பாகவே நீண்டகாலத்தை விசாரணை என்ற பெயரில் இழுத்தடித்து காலவிரையம் செய்வதாகவே இருக்கும்.

இன்று தமிழக மக்களின் மனதில் உண்டாகியுள்ள கருணாநிதி குடும்பத்தின் மீதான வெறுப்பு கருணாநிதியின் ஆட்சி தோற்க்கடிக்கப்படவேண்டும் என்பதாகவே காணப்படுகிறது, பல அரசியல் ஆய்வாளர்கள் "கருணாநிதியின் திமுக படுதோல்வியடையும்" என்றே கருதுகின்றனர். அரசியலில் கருணாநிதி மிகப்பெரிய தந்திரசாலி என்பதாலும் மத்திய மானில அரசுகளின் ஆட்சிப்பொறுப்பை பங்குபோட்டு கையில் வைத்திருப்பதாலும், அவற்றை பயன்படுத்தி சட்டவிரோதமான வழிமுறையில் வெற்றிக்கு முயற்சி செய்யக்கூடும், இப்போ அப்பாவித்தனமான சோகக்கதைகளையும் நாடகங்களையும்,மேடையேற்ற தொடங்கியிருக்கிறார். ஊழல் குற்றச்சாட்டுக்களை இல்லாது அழிப்பதற்கு அடுத்தமுறையும் முதலமைச்சராகவேண்டிய தேவை அவருக்கு இருக்கிறது, அந்த ஆதங்கத்தில் பொய்த்தகவல்களையும் தமிழ்நாட்டின் தகுதிக்கு மிஞ்சிய இலவசத்திட்டங்களையும் வாய் கூசாமல் அறிவித்து கருணாநிதியும் அவரது குடும்பமும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

சமீபத்தில் கருணாநிதியை தனியார் ரிவி ஒன்று பேட்டி கண்டபோது அவர் அளித்த பேட்டி :"ஸ்பெக்ட்ரம் 2 ஜி' அலைவரிசை ஒதுக்கீட்டில், சி.பி.ஐ., உங்கள் மகளையும், மனைவியையும் விசாரித்ததுடன், கலைஞர், "டிவி' நிறுவனத்தின் கணக்குகளையும் விசாரித்துள்ளது. அதனால், எதிர்க்கட்சிகள் உங்களுக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்க முடியாது என்று சொல்கின்றன. இதற்கு என்ன பதில் கூறுகிறீர்கள்? "இது ஊழலே அல்ல". இது பற்றி பகிரங்கமாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது. கலைஞர், "டிவி' என்பதில் என் பெயர் இடம் பெற்றிருக்கிறதே தவிர, எனக்கு அதில் எந்த உரிமையும் இல்லை. (என்று நாக்குகூசாமல் சொல்லியிருக்கிறார்), அதில், என் மகள் 20 சதவீதம் பங்குதாரர். என் மனைவி தயாளு 60 சதவீத பங்குதாரர். இந்த விவரத்தையே நான் அவர்களிடம் விசாரித்து கேட்டறிந்துதான் கூறுகிறேன். கலைஞர், "டிவி' கருணாநிதிக்கு சொந்தமானதல்ல. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அதில் பங்குதாரர்களாக இருக்கின்றனர். அவ்வளவுதான், பிறகு அது எப்படி ஊழலாகும் என்று எனக்குத் தெரியவில்லை என்று முழுப்பூசனிக்காயை மூக்குப்பொடி டப்பாவுக்குள் மூடிமறைத்திருக்கிறார்.

இந்த ஊழல் குற்றச்சாட்டால், தி.மு.க.,வுக்கு களங்கம் ஏற்பட்டு விட்டதா? என்ற கேள்விக்கு சைபர், சைபர், சைபர், சைபர் என்று போட்டு இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லும் போது, பல்லுக்கு பல் இரு காதம், பல்லிடுக்கு மூன்று காதம் என்று பூசாரிகள் அந்தக் காலத்தில் பம்பை அடிப்பார்கள். மக்களும் அதைக் கேட்டு தலையாட்டிக் கொண்டிருப்பார்கள்.*(மக்களை முழு மடையர்கள் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்) காதம் என்றால் தொலைவு. பல்லுக்குப் பல் இரு காதம் என்றால், இருபது மைல் தூரம். பல்லிடுக்கு மூன்று காதம் என்றால் முப்பது மைல்.அந்தளவுக்கு பல்லுக்கிடையே இடைவெளி என்றால், வாய் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை எல்லாம் நினைத்துப் பார்க்காமல், "ஆமாம், ஆமாம்' என்று ஒப்புக் கொண்டு, பூசாரி பம்பை அடிப்பதைப் போல, பாமர மக்களை ஏமாற்ற ஒரு சில அரசியல்வாதிகள் பம்பை அடிக்கின்றனர். அது தான் உண்மை என்று வேறு சிலர் பம்பை அடிக்கின்றனர். என்று நையாண்டி தனமாக பதிலளித்திருக்கிறார்.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடப்பதால் அது பற்றி நான் விரிவாக எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஊழலா இல்லையா என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டியது சுப்ரீம் கோர்ட். அதில் நான் தலையிட விரும்பவில்லை. கலைஞர் ரிவி நிறுவனத்துக்கு கடனை கொடுத்தவர்கள் மீது வழக்கு இருக்கலாம் . கடன் வாங்கிய பணம், ஊழல் பணம் என்று சொல்வது முறையல்ல. அது நீண்ட விசாரணைக்குப் பிறகு தான் தெரியும்.என்று கூறியிருக்கிறார் அதுவும் "நீண்ட விசாரணைக்குப்பிறகுதான் தெரியவரும்" என்ற இந்தியாவின் நடைமுறை உண்மையையும் புரிந்துகொண்டு கருணாநிதி கூறியிருக்கிறார். அந்த தொலைக்காட்சி பேட்டியையும் கருணாநிதியே தனது நலன்கருதி ஏற்பாடுசெய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருணாநிதி எதைக்கூறினாலும் சிபிஐ பொலீஸ் கருணாநிதியின் மனைவியையும் மகள் கனிமொழியையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்து விசாரித்திருக்கிறது. கருணாநிதியின் குடும்பத்தினரால் அம்பாகப் பயன்படுத்தப்பட்ட முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சரான திமுக வின் கொள்கைப்பரப்பு செயலாளரான ஆ.ராசா, வட இந்தியாவிலுள்ள திஹார் என்ற இடத்திலுள்ள சிறைச்சாலையில் சிறைப்படுத்தப்பட்டுள்ளார். ராசாவின் நண்பரும் பினாமியுமாகிய, கனிமொழிக்காக பலவழியிலும் உதவிய சாதிக் பாட்ஷா என்பவர் சமீபத்தில் இனந்தெரியாதவர்களின் மிரட்டளாலும் பயம் மன உழைச்சல் காரணமாகவும் தற்கொலை செய்துகொண்ட பரிதாபமும் நடந்தேறியிருக்கிறது.

இந்தநிலையில் கருணாநிதி தேர்தலை சந்திக்க மிகவும் அஞ்சிய நிலையில் எதையும் வெளிக்காட்ட முடியாமல் தனது முழுச்சக்தியையும் திரட்டி கவர்ச்சி போனஷாக சிலவருடங்கள்வரை ஜெயலலிதாவின் பக்தையாகவிருந்த நடிகை குஷ்புவையும். தொடர்ந்து அதிமுகவில் இருந்து வந்த டைரக்ரர் நடிகர் பாக்கியராஜையும், விஜயகாந்துடன் முட்டல் ஏற்பட்டு நின்ற நகைச்சுவை நடிகர் வடிவேலுவையும், தண்ணீர் தெளித்து பிரச்சாரத்தில் தள்ளிவிட்டிருக்கிறார். இந்த யுக்தி கருணாநிதிக்கு கை கொடுக்குதோ இல்லையோ குஷ்பு பாக்கியராஜ் தப்பித்தாலும் ரசிகர்கள் மத்தியிலும் சரி வேறு வடிவத்திலும் சரி வைகைப்புயல் வடிவேலுவுக்கு வில்லங்கம் என்பது மட்டும் வெள்ளிடை மலையாகத்தெரிகிறது.

2009ல் தமிழின அழிப்பை, ஈழத்துரோகத்தை, தனது குடும்ப நலனுக்காக, வாரிசுகளின் பதவிக்காக கூச்சமில்லாமல் ஈடேற்றிய கருணாநிதி. தனது அரசியல் சாணக்கியத்தாலும் தந்திரத்தாலும் அதிகாரம் கையில் இருந்த காரணத்தாலும் தற்காலிகமாக தப்பித்துக்கொண்டாலும், இன்று அவரை நான்கு பக்கமிருந்தும் பிரச்சினைகளும் குற்றச்சாட்டுக்களும் சுற்றி வளைத்து நின்று கும்மியடிக்கின்றன. அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும் என்பர் அது கருணாநிதி விடயத்தில் நூறு வீதம் நிதர்சனமாகியிருக்கிறது.

சனீஸ்வரன் ஒருவரை பீடிப்பதற்கு முன் சாட்டுக்காக தன்னிச்சையாக இயல்பாகவே ஒரு காரணம் உருவாக்கப்படுவதாக பெரியவர்கள் கூறுவதுண்டு.

கருணாநிதியை சனியன் ஏற்கெனவே பிடித்துவிட்டதாகவே தெரிகிறது. ஈழத்தமிழனின் படுகொலை அழிவின் சாபமும், ஸ்பெக்ரம் என்ற காற்றலை தொழில்நுட்பமும், சீமான் தலைமையிலான காங்கிரஸ்க்கான தமிழக இளைஞர்களின் எதிர்ப்பும், மும்முனையிலும், இன்னும் பல்வேறு காரணகர்த்தாக்கள் நான்காம் முனையிலும் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கின்றன. போதாக்குறைக்கு இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக பல திட்டங்களை அறிமுகப்படுத்தி அரசியல்வாதிகளை கதிகலங்கவைத்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை திருட்டுப்பூனையான கருணாநிதியின் கள்ளத்திட்டங்களுக்கு பெரும் தடையாக உள்ளதால். கருணாநிதியின் புலம்பல் உச்சத்தை அடைந்து தமிழ்நாட்டில் நெருக்கடி நிலை அறிமுகப்பட்டுள்ளது என்று காய்ந்திருக்கிறார்.

இனி தப்பிக்க முடியாது என்பது தெரிந்தும் கருணாநிதி புலம்புவது தெரிகிறது, முதலமைச்சராக வரமுடியாது என்பது தெரிந்த கருணாநிதி குறைந்தபட்சம் எம் எல் ஏ யாகவும் வரமுடியாமல் போய்விட்டால். ஜெயலலிதா தன்னை எவ்வளவு கேவலப்படுத்துவார் என்பது தெரிந்து. நான் முதலமைச்சராக இருப்பதிலும் பார்க்க எனது சொந்த ஊரான திருவாரூரில் எம் எல் ஏ யாக இருப்பதில்த்தான் மகிழ்ச்சியடைகிறேன், என்று தனது இயலாமையை கொட்டியிருக்கிறார், திருவாரூரில் எம் எல் ஏ யாக இருக்கவேண்டுமென்ற ஆசை 75 வருடங்களாக வராமல் இப்போ புதிதாக வந்திருக்கிறதென்றால் கருணாநிதி எவ்வளவு தந்தரசாலி என்பதை புரிந்து கொள்ளமுடியும்.

21ம் நூற்றாண்டில் மிக அவமானப்படுத்தப்பட்ட ஒரு அரசியல்வாதியும். ஒரே நேரத்தில் பல குற்றச்சாட்டுக்களுக்கு முகங்கொடுக்கும் அரசியல்வாதியும் கருணாநிதியாகத்தான் இருக்கும். 2009ம் ஆண்டு ஈழப்போர் உச்சம் பெற்ற ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஈழம் எரிந்து சுடுகாடான மே 13 காலப்பகுதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் காலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது இடைப்பட்ட ஒருமாதகாலம் இந்திய அரசியல் வரலாற்றில் தேர்தல் முடிவுக்காக காத்திருக்க வைக்கப்பட்டதான வரலாறில்லை, ஆனால் அந்த ஒருமாதகாலம் தான் ஈழத்தில் கோர யுத்தம் நடந்த காலமாகும் .அன்று அந்த முற்றுகைக்குள் அவலப்பட்டு ஆற்றாக்கொடுமையில் எனது மக்கள் போட்ட சாபமும் திட்டும் இரண்டு வருடம் பொறுத்து கருணாநிதியை பழிவாங்க புறப்பட்டிருப்பதுபோல் தெரிகிறது,,

துக்கத்துக்கு அறிகுறியான 13 எண் கொண்ட திகதி தேர்தலுக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதும், அதே துக்கதினமான 13, மே தேர்தல் முடிவு வெளிவரும் காலமாக அறிவிக்கப்பட்டிருப்பதும். காலதேவன் ஏதோ ஒன்றை யாருக்கோ மிகத்துல்லியமாக உலகத்தின் முன் பகிரங்கப் படுத்துவதற்க்காக தெரிவு செய்தநாளாக தேர்தலை காரணமாக்கி நிற்பது மட்டும் நிதர்சனமாகும்,, இப்படி குறிப்பிடுவதை சிலர் பழமைவாதமாக/ நகைச்சுவையாக எடுத்துக்கொண்டாலும்,, எல்லாவற்றையும் தாண்டி ஏதோ ஒன்று தனது வேலையை சரியாக கணக்கு முடிக்கிறதென்றே கொள்ளலாம். மே 15/18 திகதிகளில் தமிழ்நாட்டுக்கான புதிய முதலமைச்சர் பதவியேற்கும் நாளாக இருக்கும், அந்தத்தினங்கள் ஈழத்தமிழினத்தின் மறக்கமுடியாத கறுப்பு நாட்கள். ஆண்டவன் தீர்ப்பை பொறுத்திருந்து பார்ப்போம்,

ஈழதேசம் இணையத்திற்காக.
கனகதரன்,

நன்றி ஈழதேசம்,