Tuesday, July 12, 2011

போர்க்குற்றவாளி கழுவில் ஏறும்வரை தீர்வு கிடைக்கப்போவதில்லை.

"கெடுகுடி சொற் கேளாது''
ஸ்ரீலங்கா சிங்கள அரசின் செயல்ப்பாடும், வாய்ப்பாடு கணக்குகளும் எத்தகைய மாற்றமும் இல்லாமல் பழையகுருடி கதவைத்திறவடி கதையாக மாற்றமில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழர்களுடன் எந்தவித அதிகார பகிர்வும் செய்து கொள்ள முடியாது! இதுதான் ஸ்ரீலங்கா சிங்கள அரசின் இறுமாப்பான கடைசி react.

சிங்கள அரசு உலக அரசியல் மாற்றங்களை கிஞ்சித்தும் உணராமல், சர்வதேசத்தால் ஆதாரபூர்வமாக சுமத்தப்பட்ட போர்குற்றங்களை மறைப்பதற்காக, தொடர்ச்சியாக மனிதகுலம் காணாத தப்பின் மேல் தப்பாக செய்துகொண்டு போகிறது. இப்படியான செயற்பாடுதான் ஆபிரிக்காவில் தென் சூடான் பிறப்பதற்கு வழி வகுத்திருந்தது என்ற உண்மையை சிங்கள பாசிசவாதிகள் உணரவில்லை.

தற்போது சிங்கள அரசுக்கு பின்புல ஆதரவுக்கரமாக இருக்கும் சில வெளிநாடுகளின் தற்காலிக வெளியுறவு பின்னணியை மனதில்க்கொண்டு ஸ்ரீலங்கா குதர்க்கமாக இப்படி ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. பின்னணியில் சீனா, ரஷ்யா, இந்தியவும் இருக்கின்றன.

07.07.2011 அன்று ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் ராஜபக்க்ஷ அரசாங்கத்தின் தீர்மான குரலாக சிங்கள அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா மூலம் நெருக்கடி நிறைந்த இந்த காலத்தில் நஞ்சுகலந்த இனவாதம் கக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் பல ஆண்டுகளாக நிலவி வரும் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க, அரசியல் அதிகாரப் பகிர்வு செய்து கொள்ளப்படமாட்டாது. அந்த வாய்ப்பை இலங்கை அரசு என்றுமே தமிழர்களுக்கு கொடுக்கப்போவதில்லை. என்று சிங்களத்தரப்பின் சண்டித்தன, உண்மை உள நிலைப்பாட்டை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இது தமிழினத்துக்கு எரிச்சலூட்டினாலும் சர்வதேசமட்டத்தில் ஸ்ரீலங்காவின் இந்த பொறுப்பற்ற தனம் உணரவைக்கப்படவேண்டும்.

இருந்தும், இது சிங்கள இனவாதிகளின் புதிதான கருத்துமல்ல. முன்பும் பலமுறை ஹெகலிய ரம்புக்வெல போன்றோர் இப்படி வாசித்த வசனங்கள் நிறையவுண்டு.

இலங்கையில் உள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண அரசியல் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்று உலகில் பல்வேறு நாடுகளும், உயர்நிலையிலுள்ள சர்வதேச பக்கச்சார்பற்ற தொண்டு அமைப்புக்களும் மனுதர்ம நியாயரீதியாக ஸ்ரீலங்கா அரசை வலியுறுத்தி கேட்டுவருகின்றன.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இப்படிப்பட்ட துவேசம் நிறைந்த அறிவிப்பு சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடியதுமல்ல. இந்தக்கூற்றை ஐநாவும், சர்வதேசமும், மனித உரிமை அமைப்புக்களும், தமிழ்நாடும், சிங்கள அரசுடன் கைகோர்த்துக்கொண்டிருக்கும் "தமிழ்க்கட்சிகளும்" எப்படிக் கையாளப்போகிறதென்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

எனினும் தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து பல்வேறு கட்சியினருடன் பேசி அவர்களின் கருத்துகளைக் கேட்டு வருகிறோம். பிரச்சினைக்கு நல்ல தீர்வு காணப்படும். என்ற அதரப்பழசான "தொடர்கதை" சொத்தை வாதத்தையும், கருணாநிதியின் பாணியில் அமைச்சர் ஒப்புக்கு ஒப்படைத்தார்.

உலகநாடுகள் தொடர்ந்து எவ்வளவோ பண்ணாக எடுத்துக்கூறியும் தமிழர்களுக்கான தீர்வு திட்டம் ஏதாவது அரசாங்கத்தின் தயாரிப்பில் இருப்பதாக இதுவரையில் சிங்களத்தரப்பிலிருந்து எவரும் கருத்துக்கூறவில்லை.

மறுபுறம் பொறுப்பான ஐநா அமைப்பும் உலகநாடுகளும் அரை நூற்றாண்டுக்கு மேலாக ஈழத்தமிழினத்தின் அசாதாரண சித்திரவதை உயிர்ப்பலிகளை வேடிக்கை பார்த்தது, தூதுக்குழுக்களை அனுப்பி வேவு பார்த்தது தவிர, 2009 ம், அதற்குப்பின்னும் உச்சக்கட்ட கழுத்தறுப்பு படுகொலைகள் நடத்தப்பட்ட ஆதாரங்கள் கிடைத்தபோதும் ஸ்ரீலங்காவுக்கு எதிராக ஒரு துரும்பையும் தூக்கி அகற்றிவிடவில்லை.sd

இலங்கையில் தமிழர்களுக்கு உரிய அரசியல் தீர்வொன்றை வழங்க அரசாங்கம் தவறுமானால் அத்தீர்வினைப் பெற்றுக் கொள்ள போராட்டங்களை முன்னெடுக்கத் தயார் என தமிழத் தேசியக் கூட்டமைப்பும் தமது பங்குக்கு சூளுரைத்திருக்கிறது.

பாராளுமன்றில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு வழமையான அவரது பாணியில் தனது உச்சபட்ச ஜனநாயக சக்திக்குட்பட்டு ஆத்திரத்துடன் எச்சரித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்க இதுவே சிறந்த தருணம்? என்றும். அரசியல் தீர்வு திட்டமொன்றை முன்வைப்பதன் நோக்கமாக அரசாங்க தரப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தொடர்ச்சியாக எட்டு தடவைகள்(?) கூடி பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.இந்நிலையில் சமஷ்டி முறையிலான தீர்வை வழங்க அரசாங்கம் இணங்கவில்லையாயின், இறுதித் தீர்வைப் பெற தேவைப்படின் அரசியல் யாப்பில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமென இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தன் அவர்களின் வாதம் மிகச்சரியானது, இருந்தாலும். சம்பந்தன் ஐயா யாப்பை மாற்றி அமைக்கும்படி ஆலோசனை கூறுவதற்கு சகல உரிமையும் பாராளுமன்ற உறுப்பினர் என்றவகையில் அவருக்கு இருக்கிறது. ஆனால் அவரது முழக்கத்தினால் சிங்கள ஏகாதிபத்திய ஸ்ரீலங்கா அரசியலரங்கில், ஏதாவது நடக்குமா என்பது சிந்திப்பதற்கு அப்பாற்பட்ட ஒன்று என்பதுதான் இலங்கையின் பாராளுமன்றத்தின் வரலாறு.

நடப்புக்காலப்பகுதியில் சிங்கள ராஜபக்க்ஷ பரிவாரத்தின் சிந்தனை முனைப்பு எல்லாம். எழுச்சி கொண்டு முன்னணியில் நிற்கும் தமிழர்களை உள்ளடி ஒற்றர்களின் சதி மூலம் ஒடுக்கி, ஒரு மூலைக்குள் தள்ளிவிட்டு. சர்வதேசத்தின் படுகொலைக்கான குற்றச்சாட்டிலிருந்து எப்படி தப்பி வெளியேறுவது என்பதாகவே தெரிகிறது.

இந்நேரத்தில் சம்பந்தன் ஐயாவின் கோரிக்கைக்கும், உலக நெருக்குதலுக்கு உடன்பட்டு, தமிழருக்கான ஒரு அரசியல்ரீதியான சிறிய தீர்வுக்கு ஒப்புக்கொள்ள போனாலும். ஸ்ரீலங்காவில் அமூலிலிருக்கும் அடக்குமுறை சட்டங்கள்/ இராணுவத்தலையீடுகள் விலக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஸ்ரீலங்கா அரசுக்கு உண்டாகும்.

சந்தற்பம் பார்த்து காத்திருக்கும் உலகநாடுகள் களத்தில் இறங்கி ஒப்பந்தங்களில் தலையிடுவதற்கு நிச்சியம் முயற்சி செய்யும். தமிழ்த்தரப்பும் அப்படியான ஒரு சூழலைத்தான் விரும்பி வரவேற்கும்.

குறுகிய காலத்தில் உள்ளூர் மக்களின் கருத்துச்சுதந்திரம் வலுப்பெற்று பத்திரிகை ஊடகங்களை கட்டுப்படுத்த முடியாமல்ப்போய் போர்க்குற்றத்தின் மறைவுஸ்தானமெல்லாம் வெளிவரும் அபாயம் இருக்கிறது.

இந்தப்பின்னணி பொல்லுக்கொடுத்து அடிவாங்கிய நிலைக்கு ஸ்ரீலங்காவை கொண்டு சேர்க்கும் ஆபத்து உண்டு. எனவே ஸ்ரீபால டி சில்வா சொல்லுவதுதான் சிங்களத்தின் திட்டமிடப்பட்ட மனநிலை என்பதையும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

தீர்வுத்திட்டமொன்று நிறைவேற்றப்பட்டாலும், நடந்து முடிந்த போர்க்குற்றம் அஸ்த்தமித்து விடப்போவதில்லை. புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் நடத்திய ஜனநாயக எதிர்ப்பு போராட்டங்கள், உள்ளூரில் உண்டாக்குவதற்கான வழியை உருவாக்கும்நிலை அமைந்துவிடும், அதன் பின்னணி சர்வதேசத்தில் போர்க்குற்ற விசாரணையை இலகுவாக கையாளக்கூடிய சூழல் தோன்றிவிடும்.

எனவே ஏதாவது காரணத்தை நியாயப்படுத்தி புரியாத கிரந்தம் பேசி, தீர்வுக்கான கால அளவை காலவரையற்று, நீட்டிக்கொண்டு இராணுவமயத்தில் இலங்கையை வைத்திருக்கவேண்டிய தேவை மஹிந்த அரசுக்கு இருக்கிறது. அதன் முன்னோட்டம் ஸ்ரீபால சில்வாவின் தமிழனுக்கு ஒன்றும் கிடையாது என்ற நஞ்சுத்தனமான பேச்சு.

மாறி மாறி சர்வதேச அழுத்தம் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் நிலையில் தனது தரப்பில் நியாயப்படுத்துவதற்கான வலுவான ஆதாரம் எதுவும் இல்லாவிட்டாலும் ராஜபக்க்ஷ நம்பி இருப்பது சிங்களவனையோ மேற்கு உலகத்தையோ அல்ல.

அரசியல் ரீதியாக சர்வதேசத்திற்கு ஆள்க்காட்டுவதற்கு துணைபோகும் தமிழ்த்துரோகிகளான கேபி எனப்படும் செல்வராசா பத்மநாதன், டக்கிளஸ், கருணா, பொன்றோரையும் முஸ்லீம் தரப்பையும் சாக்காக வைத்துக்கொண்டு அவர்கள்தான் தமிழ்த்தரப்பு என்று உலகை ஏமாற்றவேண்டிய தொடர் தேவை ராஜபக்க்ஷ தரப்புக்குண்டு.

இருந்தும் தமிழினத்தை விட சிங்களவன் ஒற்றுமையுடன் இருக்கிறான் என்பதை எதிர்க்கட்சித்தலைவர் ரணிலின் உலக சுற்றுப்பயணங்கள் காட்டுகின்றன. மஹிந்தவுக்காக உலகம் சுற்றும் வாலிபனாக பலநாடுகளுக்கு தூது வலம்வரும் ரணில் விக்கிரமசிங்கவின் இனப்பற்றை, மஹிந்தவுக்காக ஐநாவை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த வீரவங்ஷவை, பார்த்தாவது தமிழினம் பாடமாக கற்றுக்கொள்ளவேண்டும்.

தொடர்ந்து நெருக்கடி கொடுத்துக்கொண்டிருக்கும் மேற்குலகம், மற்றும் மனித உரிமை அமைப்புக்கள், இறுதியாக நிபுணர்கள் குழு அறிக்கையின் பின் ஒப்புக்காவது தலையசைக்கும் ஐநா, போன்றவற்றை சமாளிப்பதற்கு சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளையும் ஸ்ரீலங்கா தந்திரமாக கையாளுகிறதென்பதையும் எவரும் மறுக்கமுடியாது.

சீனாவைப்பொறுத்தவரை பதற்றம் இல்லாத ஒற்றை இலங்கையை சீனா அதிகம் விரும்பக் காரணம் தடையற்ற தனது ஆளுமையை நிலைநிறுத்தும் கடல்ப்போக்குவரத்து, இந்து மாகடலில் தனது கடல்ப்படையை விஸ்தரிப்பதற்கான தந்திரம், இந்தியாவை பின்தள்ளக்கூடிய வணிகம்.

இலங்கைக்கு உதவும் நாடுகளில் சிலவருடங்களாக சீனாவே முதலிடத்தில் இருப்பதாக அமெரிக்காவின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. கடந்த ஆண்டும் இலங்கைக்கு உதவி செய்த நாடுகளில் சீனாவே முதலிடத்தில் இருந்திருக்கிறது. இலங்கைக்குக் கிடைத்த வெளிநாட்டு நிதிகளில் 55 சத வீதமான உதவி சீனாவிடமிருந்தும், அடுத்து 30 வீதமான உதவித் தொகை ஜப்பானிடமிருந்து கிடைத்துள்ளது.

அண்மையில் வெளிவிடப்பட்ட அமெரிக்க அறிக்கை ஒன்றில், சீனா இந்தியக் கடற்பரப்பில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்புகிறது என்றும், இந்தியாவின் அண்டை நாடொன்றில் குறிப்பாக இலங்கையில், சீனா தனது கடற்படைத் தளம் ஒன்றை அமைக்கவுள்ளதாகவும் தெரியவருகிறது.

சீனாவுக்கு சாதகமாக இருக்கும் இன்னுமொரு அம்சம் ஸ்ரீலங்காவுக்கும் சீனாவுக்குமிடையிலான மதரீதியான ஒற்றுமை.

ஈழத்தமிழருக்கும் சீனாவுக்கும் பெருத்த தொடர்பு எதுவும் கிடையாது. தமிழ் இனம் என்று சீனா சிந்திப்பதாக இருந்தாலும் இந்தியாவில் வாழும் தமிழர்கள்தான் சீனாவுக்கு நினைவுக்கு வரக்கூடும். இந்தியர்களை நினைத்தாலே சீனாவுக்கு ஆகாது.

சீனா இந்தியாவுடன் எப்போதும் முறுகல் நிலையில் இருந்தே வந்திருக்கிறது. அதேகண்ணோட்டத்தில்த்தான் ஈழத்தமிழனையும் சீனா நோக்க முற்படும். எனவே சீனா அதிகப்படியான முக்கியத்துவத்தை சிங்களவனுக்கு கொடுப்பது அதிசயமானதுமல்ல. கூடுதல் இலாபமாக சீனாவின் முத்துமாலை இந்து சமுத்திர கடல் வியூகத்தின் ஒரு புள்ளி முத்து, ஸ்ரீலங்கா தீவு, என்பதும் ஆய்வாளர்களின் கருத்து.

அம்பாந்தோட்ட தொடங்கி கச்சதீவுவரை உள்ள கடல்ப்பிராந்தியத்தில் சீனா தனது கையை அகல விரித்துவிட்டது. இந்த நடவடிக்கையை தடுப்பதற்கு இந்தியாவால் இதுவரை எதுவும் முடிந்திருக்கவில்லை. தமிழ்நாட்டிலிருந்து சில சக்திகள் அதுபற்றி பேசினாலும் ஊமையான இந்திய மத்திய அரசு காதில் வாங்கியதாகவும் தெரியவில்லை.

ஸ்ரீலங்காவின் அன்னியோன்யமான இராசதந்திரத் தொடர்பெல்லாம் வெளிப்படையாக சீனாவுடன் மிக ஐக்கியமாக இருக்கிறது. பணபலம் ஆயுதபலம் என்று பார்த்தாலும் சீனாவுக்கு கிட்ட இந்தியாவால் இலகுவில் நெருங்கமுடியாத சூழலும் உண்டு.

இந்தியாவை ஸ்ரீலங்காவிலிருந்து முற்றாக வெளியேற்றாமல் ராஜபக்க்ஷ விட்டு வைத்திருப்பதற்கு இருக்கும் ஒரே ஒரு பிடிமானம் ஈழ படுகொலையில் பொறுத்த நேரத்தில் இந்தியா தன்னிச்சையாக நுழைந்து கைகோர்த்துக்கொண்டு கொள்ளி சொருவிய கூடுறவு நன்றி ஒன்று மட்டுமே.

இந்தியாவை ராஜபக்க்ஷ வெளியேற்றினாலும், அல்லது இந்தியா தானாக வெளியேறினாலும் நஸ்டம் நெருக்கடி இரண்டும் இந்தியாவுக்கே. ஸ்ரீலங்காவின் உள் விவகாரத்தில் இந்தியா கடுமை காட்டுமாகவிருந்தால் ஸ்ரீலங்கா முற்றுமுழுதாக சீனச்சார்பாகிவிடும். இந்தியாதான் மறைமுகமான ஈழப்படுகொலைச்சூத்திரதாரி என்ற உண்மையை உலகத்துக்கு ஸ்ரீலங்கா போட்டுக்கொடுக்கவும் தயங்காது.

இச்சிக்கலிலிருந்து இந்தியா தப்பவேண்டுமானால் நோகாமல் காய் நகர்த்த வேண்டிய தந்திரம்தவிர வேறு வழியுமில்லை. பிள்ளையார் பிடிக்க குரங்காக மாறிய திரிசங்குநிலை இந்தியாவுக்கு. அத்துடன் இலங்கை விடயத்தில் இதயசுத்தியுடன் தமிழருக்கான நியாயமான தீர்வை இந்தியா ஒருபோதும் விரும்பியதுமில்லை.

தமிழர் தரப்புடன் இந்தியா நல்லுறவை பேணியிருந்தால் படுகொலையும் நடந்திருக்க வாய்ப்பில்லை சீன ஆக்கிரமிப்பும் தடுக்கப்பட்டிருக்கும். தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள் அதுபற்றி சிந்திக்கவில்லை. குடும்ப பதவியையும் பணத்தையும் குறியாக கொண்டிருந்தனரே தவிர பிராந்திய நலனில் முனைப்புக்காட்டவில்லை.

தமிழ்நாட்டின் துணையோடு அவசரக்குடுக்கையாக இனப்படுகொலையில் கைகோர்த்துக்கொண்டதால் ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் இந்தியா இருப்பது சீனாவுக்கு தெரியாததுமல்ல. இந்தியாவின் இரட்டை வேடமும் அரசியல் பலவீனம் அனைத்தும் அறிந்ததால்த்தான் எந்தவித அலட்டலும் இல்லாமல் தனி இராசதானியாக ஸ்ரீலங்காவுக்குள் பல பில்லியன் டொலர் முதலீட்டை நீண்டகால அடிப்படையில் சீனா செய்திருக்கிறது.

ஐநா, அமெரிக்கா, இங்கிலாந்து, போன்ற சக்திகளையே அவமதிக்குமளவுக்கு நடந்துகொள்ளும் ராஜபக்க்ஷ, இந்தியாவுக்கு பயந்து பணிந்து நடந்துகொள்ளுவார் என்பதெல்லாம் இல்லை. இன அழிப்பு யுத்தத்தின்போது இந்திய ஆட்சியாளர்கள் கூட்டுச்சேர்ந்து பாதகம் செய்தவர்கள் என்பதால் அவர்களும் குற்றவாளிகளே. இது ராஜபக்க்ஷவுக்கு நன்கு தெரியும்.

என்றைக்கு ராஜபக்க்ஷ போர்க்குற்றவாளியாக சர்வதேச நீதிக்கூண்டில் ஏறுகிறாரோ மறுநிமிடம் இந்தியாவுக்கும் அனுட்டக்குற்றம் ஆரம்பிக்கும் என்பது ஆய்வாளர்கள் தாமதமாகவேனும் புரிந்துகொள்ளுவார்கள்.

இன்று ஈழத்தின் சாபம் இந்தியாவின் ஆட்சி கலையும் அளவுக்கு காங்கிரஸை உலுக்கிக்கொண்டிருக்கிறது, ஊழல்க்குற்றச்சாட்டுக்கள் கூட்டாளிகள் மந்திரிகளை தாண்டி பிரதமர்வரை நீண்டுகொண்டு போகிறது. இந்நிலையில் இலங்கை உள்விவகாரத்தில் இந்தியாவால் எதுவுமே செய்ய முடியாது.

இப்போதைக்கு உள்நோக்கத்துடன் பம்மாத்து அரசியல் செய்து தந்தரமாக உலகத்தை ஏமாற்றிக் கொள்ளவேண்டிய தேவை மட்டுமே இந்தியாவுக்கு தவிர்க்க முடியாமல் இருக்கிறது.

கொடு வைரஸ் தாக்கத்தில் அகப்பட்ட நிலையில் ராஜபக்க்ஷ இருந்துகொண்டிருக்கிறார். அவருக்காக சீனா இந்தியா போன்ற வைத்தியர்கள் பரிந்துரைக்கும் மருந்தெல்லாம் தற்காலிகமான சிறு நிவாரணம்தான். நோயும் பக்கவிளைவுகளும் ராஜபக்க்ஷவை சூழ்ந்துவிட்டன திரும்புமிடமெல்லாம் சிக்கலும் தொந்தரவுகளும் அவரை தொடருகின்றன.

இந்த நேரத்தில் இந்தியா தனது நெருக்கடியான உள்நாட்டு அரசியல்ச்சூழ்நிலையில் தமிழ்நாட்டை திருப்திப்படுத்த முனைந்தால் ராஜபக்க்ஷ இந்தியாவை காட்டிக்கொடுத்துவிட்டு சீனாவுடன் இரண்டறக்கலந்துவிடுவார் என்பதால், சமீபத்தில் இந்திய தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்ட படுகொலைக்கள ஆவணப்படத்தைப்பற்றிய எதிர்வினை எதனையும் இந்தியா வெளிக்காட்டவில்லை.

ஈழப்படுகொலை ஆவணப்படத்தால் உலகில் தோன்றியிருக்கும் தொடர் நெருக்கடிகள் அதிர்ச்சிகள் ஸ்ரீலங்காவை மட்டுமல்ல இந்தியாவையும் செய்வதறியாது திகைக்க வைத்திருக்கிறது.

இப்படியான சூழ்நிலையில் ஸ்ரீலங்காவின் அபிவிருத்திக்கு கேட்காமல் உதவுவது, ஸ்ரீலங்காவின் சுத்துமாத்துக்களை கண்டுகொள்ளாமல் இருப்பது தவிர இந்தியாவுக்கு வேறு வழியுமில்லை.

உலக ஒப்புக்கு ஈழத்தின் இனப்பிரச்சினைக்கான தீர்வு பேச்சுவார்த்தை என்று போகாத ஊருக்கு வழி தேடி காலத்தை இழுத்தடித்து சிக்கலை தீர்க்கிறேன் பேர்வழி என்று சிக்கலை தீர்வுகண்ட்டுவிடாதபடி சிக்கலாகவே பார்த்துக்கொள்வது போன்ற இராசதந்திரத்தைத்தான் இந்தியா தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறது.

சோனியா தனிப்பட்ட ரீதியில் ஈழத்தமிழினத்துடன் பகைமை கொண்டிருந்தால், போரின்போது ஸ்ரீலங்காவுக்குள் சீனாவின் ஆக்கிரமிப்பு அடர்த்தியை குறைப்பதற்காகவும் முந்திக்கொண்டு கண்மூடித்தனமாக சர்வதேச கட்டுப்பாடுகளை புறந்தள்ளி ஸ்ரீலங்கா சிங்கள அரசுக்கு தடைசெய்யப்பட்ட ஆயுதங்களும் ஆலோசனைகளும் இராணுவ உதவியும் வழங்கி உதவியிருந்தார். அதற்கு தடையில்லாமல் வழிமொழிந்த சோனியாவின் நண்பனான தமிழ்நாட்டு மூத்த முதலை கருணாநிதியும், சிதம்பரம் போன்ற ஊழல்வாதி அமைச்சர்களும் பாதுகாப்பு ஆலோசகர்களும் ஒத்துழைப்பையும் கொடுத்திருந்தனர்.

பொய்வழி ஊர்போய் சேராது என்பர். இதை உலகம் இப்போ நன்கு புரிந்துகொண்டது. தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றமும் சர்வதேசத்தின் நிர்ப்பந்தங்களும் ஐநாவின் கட்டளைகளும் ஸ்ரீலங்காவை சற்றேனும் அச்சப்படவைத்திருக்கிறது. இருந்தும் இறந்து கிடந்த உடலை தூக்கிக்கொண்டு வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது. போலவே இந்தியாவும் ஸ்ரீலங்காவும் நடந்து கொடிருக்கின்றன.

சனல்4 தொலைக்காட்சியும், தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலையும், புலம்பெயர் தேசத்து தமிழ் மக்களின் நெருக்கடிகளும் ஐநாவையும் மேற்குலகத்தையும் ஒரு இக்கட்டுக்குள் தள்ளி விசாரணை வளையத்துள் குற்றவாளிகளை கொண்டுவரும் பொறி உருவாகியிருக்கிறது.

இந்த பொறி வேகத்தை உடைப்பதற்கான முதல் உத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு புலிகளால் ஆபத்து. என்ற விசமப்பிரச்சாரத்தை அவிழ்த்துவிட்டு ஈழத்தமிழினத்திற்கும் தமிழக முதல்வருக்கிடையில் இடைவெளி ஏற்படுத்தி திசை திருப்பும் முயற்சி நடைபெறுகிறது.

இதன் பின்னணியில் இந்திய மத்திய அரசின் சதியும், இந்திய புலனாய்வு அமைப்பான றோவும், இந்திய மத்திய அரசின் பாதுகாப்புதுறை newsஆலோசகர்கள் சிவ்சங்கர் மேனன் போன்றோரும், சில பச்சோந்தி மந்திரிகளும் இருக்கலாம் என சிந்திக்க இடமிருக்கிறது.

தமிழகத்தின் முன்னைய ஆட்சியின் ஐந்துவருட கால கருணாநிதியின் கபட ஏமாற்று திருகுதாளம், அனைத்தையும் இன்றய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நன்கு கவனித்து வந்திருக்கிறார். ஈழ குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததால் இன்று திமுக நிர்வாணமாக்கப்பட்டு தெருவில் நின்று படும் அவமானம் ஜெயலலிதா அவர்களுக்கு புரியாததுமல்ல. தமிழகமக்களின் எண்ண ஓட்டத்தையும் ஈழமக்களின் பிடிமானமற்ற அவலநிலை நியாயத்தையும் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நன்கே அறிந்தும் வைத்திருக்கிறார்.

இந்நிலையில் புலிகளின் பெயரை வைத்து புளுகி ஜெயலலிதா அவர்களை கிலி கொள்ள வைப்பதெல்லாம் சாத்தியம்தானா என்பதை தப்புமேல் தப்புச்செய்யும் சம்பந்தப்பட்டவர்கள் தாமதமாகவே புரிந்துகொள்ள நேரும்.

சிங்கள இனவாதிகளின் இன்றைய முதன்மையான விரோதிகள் சனல்4 தொலைக்காட்சியும் தமிழ்நாடும் என்பதாகவே நகர்வுகள் காட்டுகின்றன. அவைதான் ஈழத்தமிழினத்துக்கு ஆதார பலம் என்பதையும் ஈழத்தமிழர் செயற்பாட்டாளர்கள் உணர்ந்து செயற்படும் காலம் இது.

இதுவரை ஐம்பது வருட காலமாக கொடூரமான வதைக் காட்சிகளை பார்த்ததும் கருத்து சொல்லிக்கொண்டிருந்த ஐநாவுக்கும் சர்வதேசத்திற்கும் சனல்4 தொலைக்காட்சி குற்றவாளியை தண்டிப்பதற்கு ஆதார வழியை ஆவணமாக காட்டியிருக்கிறது. ஐநா நிபுணர்குழுவின் அறிக்கை சத்தியக்கடதாசியாக சாட்சி சொல்லுகிறது. மீதியை புலம்பெயர் தேசங்களில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் தமிழர்தரப்பு ஒற்றுமை குலையாமல் வீரியமான் வழியில் படுகொலைக்குற்றவாளியை கழுவில் ஏற்ற முதலாவதாக முயலவேண்டும்.

அடுத்ததாக தென்சூடான் தனி அரசு மலர்ந்ததுபோல் தமிழீழம் எவரும் தடுக்கமுடியாமல் தானாக மலரும்.


ஈழதேசம் இணையத்திற்காக.
கனகதரன்.

நன்றி ஈழதேசம்.

No comments: