Sunday, July 31, 2011

எதிர்காலம் வீர வரலாறுகளையும் மறப்பதில்லை; இனத் துரோகங்களையும் மறைப்பது இல்லை!‏

‘வீசப்படும் கணைகளைக் கேடயம்கொண்டு தடுப்பதா​லேயே… நம்மிடம் வில்லும் அம்பும் இல்லை என்று அர்த்தம் அல்ல. அவற்றைப் பயன்படுத்தாமல் இருந்துவிடப்போவதும் இல்லை.

வில்லுக்கும் அம்புக்கும் வேலை கொடுத்துத்தான் தீரவேண்டும் என்றால்… உடன்பிறப்பே! அப்போது நாம் கோழையாக இருக்கப்போவதில்லை!’ என்று ‘முரசொலி’யில் 14-1-74 அன்று கடிதம் தீட்டியவர் கலைஞர்.

‘அமைப்பு ரீதியான கழகம், ஆடை அணிந்துள்ள உடலைப்போல. அதில் ஆவி நிகர்த்தது கொள்கை. பதவி என்பது அணிகலன். அணிகலன் இன்றி வாழ முடியும். கொள்கை இல்லையேல், ஆவி இல்லை. ஆடை இல்லையேல், மானம் போகும்!’ என்று 6-1-76 முரசொலியில் பொருள் பொதிந்த விளக்கம் தந்த அரசியல் வித்தகர் கலைஞர் தமிழகத்தின் முதல்வராக இருந்தபோதுதான், ஈழத்தில் எம் தமிழர் கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டனர்; வாய் திறந்து சொல்ல​வோ, ஏடெடுத்து எழுதவோ முடியாத வன்கொடுமைகளுக்கு ஆளாகி அன்றாடம் அல்லலுற்று அலைக்கழிக்கப்பட்டனர். நம் இனத்தை ஈழத்தில் அழிக்க எல்லா வகையிலும் இலங்கை ராஜபக்ஷே சகோதரர்களுக்கு இந்திய அரசு வெளிப்படையாகத் துணை நின்றது. உலகம் முழுவதும் உருக்குலைந்து விழி நீர் வழிய நின்ற தமிழர்கள், ‘கலைஞரின் சாணக்கிய வியூகத்தால் போர் நிறுத்தம் ஏற்பட்டு, இன அழிவு தடுக்கப்பட்டுவிடும்!’ என்று நம்பிக்கையுடன் கோபாலபுரத்தின் திசை நோக்கித் தவம்கிடந்தனர். கலைஞரோ காந்தியிடம் இருந்த குரங்குச் சிலைபோல், கண் மூடி, காதடைத்து, வாய் பொத்தி, மௌனத் தவத்தில் ஆழ்ந்துவிட்டார்.

மௌனத் தவம் இருந்த கலைஞரின் மனவெளியில் 27 ஏப்ரல், 2009 அன்று புலர்காலைப் பொழுதில்,

இளஞ்சூரியன் கதிர் பரப்பும் நேரத்தில் மகாத்மா காந்தி தரிசனம் தந்தார். உண்ணாவிரத ஆயுதத்தை மத்திய அரசுக்கு எதிராக ஏந்தும்படிப் பரிந்துரைத்தார். கலைஞர் காரில் ஏறி, கடற்கரையில் கண் மூடி உறங்கும் அண்ணா சமாதிக்கு அருகில் வந்து இறங்கினார். எதிரே கடலலைகள் எழுப்பிய ஆரவாரக் குரல் காற்றின் மீது அமர்ந்து கலைஞரின் காதுகளில் நுழைந்தது. ‘ஈழத் தமிழரின் கண்ணீரில்தான் கடல் நீர் உப்பானது!’ என்று அண்ணா சொன்னதை அது கலைஞருக்கு நினைவுபடுத்தியது. மகாத்மா ஒரு பக்கம், அண்ணா மறுபக்கம் கலைஞரின் நெஞ்சில் நிழலாடினர். அவ்வளவுதான். ஈழத்தில் போர் நிற்கும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கலைஞர் அறிவித்தார். வில்லுக்கும் அம்புக்கும் முதல்வர் கலைஞர் அகிம்சை வடிவில் வேலை கொடுக்க முடிவெடுத்துவிட்டார் என்ற செய்தி ஊடகங்கள் உதவியால் உலகம் முழுவதும் சென்று சேர்ந்தது. கோட்டைக்காக அல்ல, கொள்கைக்காகப் பிறந்தவர் கலைஞர் என்று தமிழினம் தாளாத மகிழ்ச்சியில் புகழ் மாலை சூட்டி, பூரித்துப்போனது. இந்து – முஸ்லிம் ரத்தப் புனலைத் தடுத்து நிறுத்த, காந்தி தன்னுடைய 78-வது வயதில் உண்ணாவிரதம் இருந்தார். எங்கள் கலைஞரோ, ஈழத் தமிழரின் குருதி குடிக்கும் சிங்கள ராணுவப் போரை நிறுத்தத் தன் 86-வது வயதில், ‘இருப்பது ஓர் உயிர். அது போகப்போவதும் ஒரு முறைதான். அந்த உயிர் என் இனம் காக்கப் போகட்டும்!’ என்ற உறுதியுடன் உண்ணாவிரதம் மேற்கொண்டுவிட்டார் என்று மக்கள் மாய்ந்து மாய்ந்து பேசியபடி மெரினா கடற்கரைக்குப் புறப்பட்டனர்.

அண்ணா சமாதிக்கு அருகில் பந்தல் விரிந்தது. மெத்தை, தலையணை, கட்டில் வந்து சேர்ந்தது. கடற்காற்றின் வெம்மையில் வியர்வை வழியாதிருக்க ஏர் கூலர்கள் குளிரூட்டத் தொடங்கின. குடும்ப உறவுகள் சோகத்துடன் சுற்றிச் சூழ்ந்தன. முதல்வர் கலைஞர் கண்களில் படுவதற்காகப் பொய்யான சோகத்தை முகத்தில் பூசியபடி அமைச்சர் குழாமும், அதிகார வர்க்கமும், பாராட்டிப் பாடுவதற்குப் பல்லவியும் சரணமும் சிந்தையில் சேர்த்தபடி கவிஞர் கூட்டமும், பாசம் பொங்கத் திரண்டு வந்த உடன்பிறப்புகளும் அணிவகுத்தனர். கழகத்தின் மூச்சே வெற்றுப் பேச்சில்தான் என்ற கூற்றைப் பொய்யாக்காமல் ஒலி பெருக்கி ஏற்பாடு செய்யப்பட்டது. கலைஞரின் ‘தியாகம்’ குறித்துக் கட்டியங்கூறும் வாய்ப்பறைகள் வரிசையாக வாழ்த்தொலித்தன. உண்ணாவிரத முடிவு குறித்துக் கலைஞர் உணர்ச்சி நரம்புகளின் மெல்லிய முனைகளைக் கிள்ளிவிடுகிறாற்போல் தழுதழுத்த குரலில் உரையாற்றினார். தமிழ் கூறும் நல்லுலகம் அளவற்ற ஆர்வத்துடன் செவிமடல்களைத் திறந்துவைத்தது. மன்மோகன் சிங்கின் மத்திய அரசுப் புலனாய்வுத் துறை மறைந்து நின்று மௌனமாய் ஒவ்வொன்றையும் பதிவு செய்தது.

‘இலங்கையில் இருந்து நல்ல செய்தி வராவிடில், என் உயிரை இலங்கைத் தமிழருக்காக அர்ப்பணிக்க முடிவு செய்துவிட்டேன். உறக்கமற்ற பல இரவு​களைக் கழித்த நான், இன்று வைகறைப் பொழுதில் என் வாழ்வை அர்ப்பணிக்க நானாகவே சிந்தித்து இந்த முடிவுக்கு வந்துவிட்டேன். என் குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்​களுக்கும்கூடத் தெரிவிக்காமல் சாகும் வரை உண்ணாவிரதத்தில் நான் ஈடுபட்டதன் மூலம், இலங்கைத் தமிழரின் இன்னல்களுக்குத் தீர்வு காண முடிந்தால் மகிழ்வேன். என் இறுதி மூச்சு உள்ள வரை, நான் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன். ‘தமிழ் நாடு’ என்று பெயர் வைக்க உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த சங்கரலிங்கனார், தமிழீழம் காண உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்த திலீபன் கல்லறைகளுக்குப் பக்கத்தில் என் கல்லறை அமையட்டும். இந்த உறுதிமொழியை என் தமிழின் பெயராலும், என் அரசியல் ஆசான்களான அண்ணா, பெரியார் இருவரின் பெயராலும் ஆணையிட்டு அறிவிக்கிறேன்’ என்று கலைஞர் உணர்வு ததும்ப உரைத்தபோது, கூடிய கூட்டம் கலங்கித் தவித்தது.

‘இனிமேல் என் ஒவ்வோர் அடியும் என்னுடைய கல்லறையை நோக்கியே எடுத்துவைக்கப்படும். என் ஒவ்வோர் அசைவும் என் இனத்தின் முன்னேற்றத்திற்காகவே அமையும். ஒவ்வொரு துளி வியர்வையும் என் நசுக்கப்பட்ட இனத்தின் பெருமையை வளப்படுத்தும். என் கண்ணீர், ரத்தம், மூச்சுக் காற்று, எலும்பு, தசை அனைத்தும் இந்த இனத்தின் முன்னேற்றத்திற்காக மட்டுமே அர்ப்பணிக்கப்படும்’ என்று தன் ‘நெஞ்சுக்கு நீதி’ சுயசரிதையில் கலைஞர் எழுதியதையெல்லாம் தமிழினம் நினைத்து கண்ணீரில் நனைந்தது.

ஈழத் தமிழருக்கு எதிராக 1981-ல் சிங்கள ராணுவம் நடத்திய நர வேட்டையை எதிர்த்துப் போராடிச் சிறை சென்று இரு வாரங்களுக்குப் பின்பு கலைஞர் விடுதலையானதையும், இலங்கை முழுவதும் திட்டமிட்டு 1983 ஜூலையில் தமிழினம் மிக மோசமாகத் தாக்கப்பட்டதை எதிர்த்துப் பேரணி நடத்திய கலைஞர், பேராசிரியர் அன்பழகனுடன் எம்.எல்.ஏ., பதவியைத் தூக்கியெறிந்ததையும், தன்னுடைய 62-வது பிறந்த நாளில் (3-6-1986) ஈழப் போராளிகளுக்கு நிதி திரட்டியதையும் நினைவில் கொண்டுவந்த தமிழர்கள், கலைஞர் உண்ணாவிரதத்தின் மூலம் இலங்கைப் போருக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடுவார் என்று உறுதியாக நம்பினர். உண்ணாவிரதம் எத்தனை நாட்கள் நீடிக்குமோ என்று நெஞ்சு நடுங்கினர்.

பேராசிரியர் சரசுவதி தலைமையில், ஈழத்தில் போர் நிறுத்தம் வேண்டி ம.தி.மு.க. தலைமை அலுவலகம் தாயகத்தின் வாசலில் தரையில் அமர்ந்தபடி பெண்கள் 13 நாட்கள் உடல் வருந்த, உயிர் சிதைய உண்ணா விரதம் இருந்தனர். அவர்களுக்கு ஊடக வெளிச்சம் இல்லை. ஏர் கூலர் வசதி இல்லை. அலையலையாய் மக்கள் அணி திரண்டு ஆதரவு முழக்கத்தில் ஈடுபடவில்லை. ஆனால், அவர்களிடம் உண்ணாவிரதத்தின் உண்மையான உத்வேகம் இருந்தது. கலைஞர் தொடங்கிய உண்ணா விரதத்தில் உண்மையான உணர்வைத் தவிர, மற்ற எல்லா நாடக மேடை அம்சங்களும் நிறைந்திருந்தன. ஒரு நாடகம் அதிகப்பட்சம் மூன்று மணி நேரம் நடக்கும். கலைஞர் கடைப்பிடித்த உண்ணா விரதம் சரியாக மூன்று மணி நேரத்தில் முடிந்துவிட்டது.

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் இருந்து கலைஞருக்குத் தொலைபேசியில் போர் நிறுத்தச் செய்தி வந்து சேர்ந்ததாம். சோகத்தின் சுவடு அழிந்து, மகிழ்ச்சியால் முகம் மலர, எழுந்து மெத்தையில் அமர்ந்த கலைஞர் ஒலிபெருக்கியில் போர் நிறுத்தம் குறித்துப் பிரகடனம் செய்தார். கூடியிருந்த கூட்டம் கலைஞரின் அபரிமிதமான செல்வாக்கைக் கண்டு ஆர்ப்பரித்தது. தமிழருக்காகத் தண்டவாளத்தில் தலைவைத்த தீரத்துடன், பாளையங்கோட்டைச் சிறையில் தனிமைத் தவம் இருந்த தியாகத்துடன், ஈழத் தமிழருக்காக 3 மணி நேரம் உண்ணாமல் இருந்த உயரிய தியாகமும் கலைஞரின் வீர வரலாற்றில் நீங்கா இடத்தைத் தேடிக்கொண்டது.

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு​விட்டதாக அக மகிழ்வுடன் அறிவித்து​விட்டு அண்ணா சமாதியில் இருந்து கலை​ஞர் புறப்பட்டார். கல்லறைக்குள் இருந்த அண்ணாவின் இதயம் இந்த அரசியல் நாடகம் கண்டு அதிர்ந்தது. கலங்கரை விளக்கத்துக்குப் பக்கத்தில் நின்றிருக்கும் காந்தியின் சிலை கண்ணீர் வடித்தது. ஈழத்தில் போர் முன்பைவிட உக்கிரமாக முடுக்கிவிடப்பட்டது. ‘நீங்கள் அறிவித்தபடி, போர் ஈழத்தில் இன்னும் நிற்கவில்லையே?’ என்று நிருபர்கள் கேட்டபோது, ‘மழை நின்ற பின்பும் தூவானம் தொடரும்…’ என்று கவிதை நயத்துடன் கலைஞர் குறிப்பிட்டார். கலைஞர் வருணித்த ‘தூவானம்’ ஒரே நாளில் எம் குலத் தமிழரில் 40 ஆயிரம் பேரை முள்ளி வாய்க்காலில் அழித்தொழித்து ஊழிக் கூத்தாடியது. ஒரு லட்சம் உயிர்களைப் பலிவாங்கியது. மூன்று லட்சம் தமிழர்களை முள் வேலிக்குள் முடக்கியது.

கொள்கை… ஆடை; பதவி… அணிகலன் என்று எழுதியவர் இன்று இரண்டையும் இழந்து நிற்கிறார். ‘எதிர்காலம் வீர வரலாறுகளை மறப்ப​தில்லை’ என்று 1-9-74 அன்று முரசொலியில் கலைஞர் எழுதினார். உண்மைதான். எதிர்காலம் வீர வரலாறுகளையும் மறப்பதில்லை; இனத் துரோகங்களையும் மறைப்பது இல்லை!

நன்றி: ஜுனியர் விகடன்

No comments: