இன்றைய காலகட்டம் மட்டுமல்லாது, நீண்ட காலமாக இலங்கையின் தேசிய இனமான ஈழத்தமிழர்கள், சிங்கள பாசிச வாதிகளின் அடக்குமுறையில் இருந்து விடுதலை பெறுவதற்கு எடுத்துக்கொண்ட அனைத்து முயற்சிகளும் வெவ்வேறு தலையீடுகளால், இன்றய திகதிவரை தடங்கலாக வந்திருக்கின்றன.

2009ல், இனப்படுகொலையில் முடிந்த சிங்கள இனத்தின் ஆக்கிரமிப்பு, ஒற்றை தமிழனும் இலங்கையில் இல்லாத அளவுக்கு அழித்தொழிப்பதற்கான திட்டங்களுடன் நகர்வுகள் தொடருகின்றன.

தமிழினமும் தன்னால் முடிந்த அளவுக்கு மான உணர்வுடன் எதிர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் செய்து வருகிறது.

கடைசியாக இனப்படுகொலைக் குற்றவாளிகளை தண்டிப்பதற்கு தமிழினம் எடுத்துவரும் முயற்சியையும், இல்லாது அழிப்பதற்கு நரித்தனமான உள்ளடி வேலைகளும் வெளிப்படையான சதிகளும் தந்திரங்களும் பல முனைகளில், சர்வதேச மட்டத்தில் போட்டிபோட்டு நடைபெற்றுவருகின்றன.

தமிழினம் தொடர்ந்து அடிமையாக அழிந்துபோவதற்கு இலங்கைத்தீவில் பெரும்பான்மையாக பெருகிவிட்ட வந்தேறுகுடியான சிங்களவன் மட்டும் காரணமல்ல, சிங்கள இனத்தின் ஆதிக்க அராஜகத்திற்கு துணையாகி, சில அயல் நாடுகளும், ஈழத்தமிழரின் அழிவில் முக்கிய பங்கு வகித்தே வந்திருக்கின்றன.

உலக அரங்கில் தமிழனுக்கென்று ஒரு நிலப்பரப்பு இல்லாத காரணத்தால், தமிழனின் குரல் சரியான இடங்களுக்கு தடங்கலின்றி சென்று சேரவில்லை, புலம்பெயர் தேசங்களில் ஈழத்தமிழன் காலூன்றியதன் பிற்பாடே சில தகவல்கள் உலக அரங்கில் அறிமுகமாகியிருக்கின்றன.

அயலில் செல்வாக்காக இருக்கும் சில நாடுகள் திரிவுபட சொல்லுபவைகளை கேட்டு ஆடிக்கொண்டிருக்கும் உலக வல்லரசுகளும். இவையனைத்தையும் கட்டுப்படுத்தும் தகமை வாய்ந்த ஐநா மன்றமும் தர்கரீதியாக அராய்ந்து நியாயத்தை நிலைநிறுத்த தவறிவிட்டமையே ஒரு பழமையான, இன மக்கள் அழிந்து போவதற்க்கும் சிதைவுக்கும் மூல காரணமாகும்.

பல ஆண்டுகளாக கேட்பாரற்று, தினம் தினம் சித்திரவதைப்பட்டு செத்து அழிந்து கொண்டிருக்கும் சிறுமைப்பட்ட ஒரு இனமாக, செயற்கையாக வேண்டுமென்றே ஈழத்தமிழர்கள் ஆக்கப்பட்டிருக்கின்றனர்.

இது ஏன் எதற்கு! இதற்கு ஒரு முடிவுமில்லையா! என்கிற கேள்வி தமிழர்களைத்தாண்டி உலகமட்டத்திலும் இப்போ எழுந்திருக்கிறது, இருந்தும் சில சக்திகள் இவ்விடயத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் தடுத்து மூடிமறைக்க முயன்றாலும், மூடிவிடமுடியாத நிலைக்கு "இன அழிப்பு" படுகொலைகள் பற்றிய அவலங்கள் உலகத்தை அச்சுறுத்தும் வண்ணம் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

சம்பந்தப்பட்ட தமிழர்தரப்பு தொடர்ந்து முனைப்புடன் செயற்படாவிட்டால், சந்தற்பம் பார்த்து காத்திருக்கும் துரோகக்கூட்டங்களும் எதிரியும் சேர்ந்து உலகின் பார்வையை திசை திருப்பி குற்றச்சாட்டுக்கள் வீரியமற்று, விடயம் மூடி மறைக்கப்பட்டுவிடும் அபாயம் இருப்பதை உணரவேண்டும்.

வீரியமான இன மக்கள் என்று அறியப்பட்ட ஈழத்தமிழினம் காலப்போக்கில் அவுஸ்திரேலியாவின் பழங்குடிகள் போல, அருகி அழிந்து போவதற்கான அபாயத்தை சிங்களவனுடன் சேர்ந்து உலகத்திலுள்ள சில நாடுகள் செய்து முடித்துவிடும்..

ஈழ விடுதலைப்போராட்டம் தொடங்குவதற்கு முன், பல ஆண்டுகாலமாக அடக்குமுறை கொடுமையிலிருந்து மீழ்ச்சிபெற, அரசியல் ஈதியாக தமிழர்கள் எடுத்த முயற்சி எதையும் பெரும்பான்மையான சிங்கள இனம் மதித்து நடந்துகொள்ளவில்லை. நீர்மேல் எழுத்தாக அவை காணாமல்ப் போய்விட்டன.

வேறு வழியின்றி பட்டுணர்ந்த அனுபவத்தை ஞானமாக்கி மாற்றுவழியில் உயிரை பணயம் வைத்து மான உணர்வோடு தமிழினம் தொடர்ந்த ஆயுதப்போராட்டமும் வெற்றிபெறும் தறுவாயில் சில நாடுகளின் சுயநலத்தாலும் தவறான அணுகுமுறைகளாலும் பொய்ப்பிரச்சாரத்தாலும் வஞ்சகமாக தடுக்கப்பட்டுள்ளது.

போராட்டம் எந்த அடிப்படையில் எதற்காக தொடங்கப்பட்டது என்பதை தமிழினம் உலகுக்கு தெரியப்படுத்தியிருந்தும் கூட, உலக வல்லாதிக்க சூழ்ச்சிக்காரர்கள் சிலரின் கயமையினால், சிறிய இனமான தமிழினத்தின் குரல் நாகரீகமான உலக அரசியல் மட்டத்திற்கு சென்றடைய விடாமல் தடுக்கப்பட்டது.

காலம் கடந்து, இன்று பல நியாயவாத நாடுகள் போராட்டத்தின் நியாயம் அறியப்பட்டிருப்பதாக ஒப்புக்கொள்ளுகின்றன.

சனல்4 ஆவணப்படத்தை கண்ணுற்றபின் பிரித்தானிய அரசு, இலங்கை அரசாங்கத்தின் செயலை கண்டித்து போர்க்குற்றத்திற்கான விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க வெளியுறவுச்செயலர் கிளாரி கிளிண்டன், அவர்களும் தமிழர்களின் ஆயுதப்போரட்டத்தின் நியாயத்தை தாம் முன்பு தவறாக புரிந்துகொண்டதாக கவலை தெரிவித்து தமிழ்நாட்டுக்கு வருகை தந்தபோது கருத்து கூறியிருக்கிறார்.

யதார்த்தமான நியாயத்தின் பிரகாரம் ஈழத்தமிழரின் விடுதலை போராட்டத்தை பகுப்பாய்ந்து பார்த்து நியாயக்கூறுகளின் வரையறைக்குட்பட்டு போராட்டத்தின் தாற்பரீகத்தை பரிசீலிக்க உலகம் முயற்சிக்கவில்லை. செல்வாக்கும் வல்லமையும் சுயநலன் சார்ந்த குறுகிய ஆதிக்க மனப்பாண்மையும் ஒரு இனத்தின் வாழ்வுக்கான உரிமைப்போராட்டத்தை சீரழித்திருக்கிறது.

கொலனித்துவ ஆதிக்கத்திலிருந்து இலங்கைத்தீவை சிங்களவரிடம் கையளித்துவிட்டுப்போன ஐக்கிய ராய்ச்சியம், தொடங்கலாக, பான் கீ மூனை பொதுச்செயலாளராக கொண்டியங்கும், இன்றைய ஐநா, அதிகார மையம்வரை ஈழ படுகொலைக் குற்றத்திற்கு ஒத்திசைவாகிய சூத்திரதாரிகளாக நாகரீக உடைக்குள் மறைந்திருக்கின்றனர்.

அப்படியிருந்தும் நியாயம் வெளியே மிதந்துவரும் இந்தச்சமையத்தில் சில சக்திகள் தங்கள் தரப்பை நியாயப்படுத்துவதற்கு கண்களை இறுக்கமூடிக்கொண்டு தமது தவறுகளை மூடிமறைப்பதற்கு தொடற்சியாக ஆயிரம் ஆயிரம் நியாயம் தப்பாக கற்பித்து தப்பிக்கொண்டிருக்கின்றன.

தமிழர்தாயகத்தின் 70 சத வீதத்திற்கும் மேலான பகுதிகளை சிங்கள ஆதிக்கத்திடமிருந்து மீட்டெடுத்து, தமது நிர்வாகத்திற்குள் கொண்டுவந்து, உலகமே வியந்துபார்த்த சிறந்தொரு ஆட்சியை நடத்திய விடுதலைப்புலிகளை சர்வதேச நாடுகள் சிலவற்றின் துணைகொண்டு முழுமையாக அழித்து ஆக்கிரமித்து மீதமுள்ள தமிழர்களையும் இல்லாதொழிப்பதற்கு ஸ்ரீலங்கா சிங்கள அரசு தொடர்ந்து முயற்சி செய்கிறது.

போர் நிறைவுற்றதாகக் கூறப்படும் கடந்த இரண்டு வருடங்கள் தாண்டியும், தமிழ் மக்கள் தங்கள் தாயகத்தின் பகுதியில் உள்ள தமது சொந்த வீடுகளில் திரும்ப குடியமரக்கூட அனுமதிக்கப்படவில்லை. காலா காலமாக வாழ்ந்துவந்த பெரும் பகுதியை நிரந்தரமாக இராணுவ முகாம்களுக்கும் இராணுவக்குடியிருப்புக்களுக்கும் சட்டவிரோத சிங்கள குடியேற்றவாசிகளிடமும், தமிழர்கள் பறிகொடுத்துள்ளனர். மீதமுள்ளவர்கள் தற்காலிக கொட்டகைகளில் எந்தச்சுதந்திரமும் இல்லாமல் இராணுவ காவலுக்குள் அடிமைகள் ஆக்கப்பட்டிருக்கின்றனர்.

தமிழர் தாயக நிலப்பரப்பின் பெரும் பகுதியை சிங்கள அராஜகத்தின் சின்னமாக, புத்தர்சிலைகளும் அரசமரக்கன்றுகளும் ஆக்கிரமித்திருக்கின்றன. இராணுவ ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டிருக்கும் தமிழர்கள், எதிர்த்து வாய் திறக்க முடியாமல் கொலை அச்சுறுத்தல் சூழ்ந்திருக்கிறது.

ஊடக சுதந்திரத்திற்குட்பட்டு தமிழர்கள் தமது தரப்புச்செய்திகளை வெளியிட முடியாத அடக்குமுறை தொடர்கிறது. சமீபத்தில் உதயன் பத்திரிகை செய்தி ஆசியரியர் செய்தி வெளியிட்டு படுகொலை செய்யப்படுமளவுக்கு விசமத்தனமாக தாக்கப்படிருக்கிறார்.

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசியல்வாதிகள் கூட எதையும் தீர்மானிக்கமுடியாத அடக்குமுறை அராஜகம் தாண்டவம் ஆட்டுவதாகவும், தமிழினம் அடிமைகள் ஆக்கப்பட்டிருப்பதாகவும் சர்வதேசத்தின் மிகப்பிரபலமான றொய்ட்டர், செய்தி ஸ்தாபனம் தனது செய்தியில் கவலை தெரிவித்து பகிரங்கப்படுத்தியுள்ளது.

மஹிந்தசிந்தனை எனப்படும் துவேசமான கபட சிங்கள வேலைத்திட்டத்தின் கீழ், காடைச் சிங்களவர்களையும் இராணுவத்தையும் தூண்டிவிட்டு தமிழினத்தை அழிக்கும் நடவடிக்கை மும்முரப்படுத்தப்பட்டுள்ளது. மஹிந்த சிந்தனைக்கு ஆதரவாக யாழ் குடா நாட்டுக்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தி குறைக்கும் சதியும் நடைபெறுகிறது.

அரசாங்க அதிபர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் தலை கழுவப்பட்டும், மிரட்டப்பட்டும் தமிழருக்கு எதிராக அரசாங்கத்தின் ஊதுகுழலாக மாற்றம் பெற்றிருக்கின்றனர்.

மறுபுறம் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படும் வடக்கு கிழக்கைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளை, இராணுவத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பங்குகொள்ளச் செய்யும் வகையில் அவர்களை துப்பாக்கி முனையில் திறந்தவெளியில் கொத்தடிமைகளாக இராணுவம் பயன்படுத்தி வருவதாக ஸ்ரீலங்காவின் சிங்கள பத்திரிகைகளே தெரிவிக்கின்றன.

இராணுவ முகாம்களில் மேற்கொள்ளப்படும் எடுபிடி வேலைகள், கழிவறைகளை சுத்தப்படுத்தும் பணிகள் ஆகியவற்றில், இவர்கள் கட்டாய பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும். அந்த இளைஞர், யுவதிகள் தெரிவித்துள்ளனர். வடக்கு கிழக்கில் இப்பணிகளில் சுமார் 8,000 க்கு மேற்பட்ட இளம் ஆண் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார். ஆனாலும் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்றே அஞ்சத்தோன்றுகிறது.

விடுதலைப்புலிகளை அடியோடு ஒழித்துவிட்டோம் இனியும் தீர்வு, அதிகாரப் பகிர்வு அது இது என்று பேசிக் கொண்டிருக்கத் தேவையில்லை என்று சர்வாதிகார மிடுக்குடன் பாதுகாப்பு அமைச்சின் செயலரும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தம்பியுமான, கோத்தபாய ராஜபக்ஷ உத்தியோகபூர்வமான பாணியில் திடுக்கிடும் தீர்மானம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இலங்கையின் நிம்மதி இழப்புக்கும், அழிவுக்கும் காரணமாக இருந்துவந்த துவேச மனப்பாண்மையை, சிங்கள இனவாதிகள் எவ்வளவோ பாடம் கற்று கழுமரம் ஏறும் தறுவாயில்க்கூட கைவிடத்தயாராக இல்லை.

கோத்தபாய ஒன்றும் இலங்கை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு பிரதிநிதியுமல்ல, நீண்டகாலமாக இழுபறியில் இருந்துவரும் இனப்பிரச்சினையை தீர்த்து வைக்கக்கூடிய தகுதி கொண்டவருமல்ல, இராணுவச்சிப்பாயாக இருந்து, அண்ணன் மஹிந்தரினால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி உயர்வு பெற்றவர் என்ற தகுதி மட்டே உடையவர்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி, மற்றும் அமைச்சர்கள் குளறுபடியான குறைப்பிரசவமான கருத்துக்களை வெளியிட்டாலும்,பேசுவதற்கான ஒரு தகுதியாவது இலங்கை அரசு மட்டத்தில் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் சர்வாதிகாரியான மஹிந்தவின் தம்பி என்ற ஒரு தகுதியையும் பாதுகாப்பு சம்பந்தமாக சில கருத்துக்களை பத்திரிகைகளுக்கு கூறவல்லவருமான கோத்தபாய, தமிழர்களின் எதிர்காலம் பற்றிய தீர்வுத்திட்ட அதிகார அலகுகள் பற்றிய முடிவுகளை ஒரு இராணுவ ஆட்சியாளரின் தலைமைத்துவ தொனியோடு எழுந்தமானத்தில் கூறியிருக்கிறார்.

தம்மிடம் "இறைமையுடன் கூடிய அரசமைப்பு" ஒன்று இருக்கிறது என்றும். அதில் மேலும் திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தால் மட்டும் அந்த நேரத்தில் வடக்கு கிழக்கில் பிரதிநிதித்துவம் பெற்ற நாடாளுமன்ற தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச முடியும். வேறு தேவையும் தமிழருக்கு இல்லையென்றும், மேலதிகமாக தமிழர்களுக்கான திர்வுத்திட்டம் என்று எதுவும் தேவையில்லை என்றும், நாட்டின் சகல அதிகாரங்களையும் கொண்டவர்போல கோத்தபாயவின் கூற்று அமைந்திருந்தது.

இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியின்போதே கோத்தபாய தனது அடக்குமுறை கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

1948 ம் ஆண்டிலிருந்து சிங்கள அரசியல் கயமைகள் பாராளுமன்றத்தில் தமிழரை ஏமாற்றியே வந்திருக்கின்றனர். மூன்றாம் தரப்பு ஒன்று, அல்லது சர்வதேச தலையீடு இல்லாமல் சிங்களவர்களை நம்பி இலங்கையின் உள்நாட்டுப்பிரச்சினை தீர்க்கப்படமுடியாது என்பது இலங்கையில் வாழும் ஒரு தெருப்பிச்சைக்காரனும் தீர்ப்பு கூறுமளவுக்கு நிலைமை இருக்கிறது.

இறுதிப் போரின் போது நடந்தவைகள் குறித்து அனைத்துலக விசாரணை ஒன்று வேண்டும் என்று கேட்பது எமது ஆளுமையைக் குறைத்து மதிப்பிடுவதாக அமைகிறது என்றும் கோத்தபாய தனது புலமையை வெளிப்படுத்த தவறவில்லை.

ஒரு இறைமையுள்ள நாட்டுக்குள் எப்படி அனைத்துலக விசாரணை ஒன்றை முன்னெடுக்க முடியும்? அது நியாயமற்றது. அப்படி விசாரணை கோருபவர்களை சர்வதேச சமூகம் என்று குறிப்பிடுவது தவறான விபரிப்பு என்றும் கூறியிருக்கிறார்.

இலங்கை இறைமையுள்ள?? ஒரு நாடு. பிரிட்டிஷார் விட்டுச் சென்ற சிறந்த நீதித்துறை எம்மிடம் இருக்கிறது. இலங்கையின் இறைமைக்குட்பட்டு சரியான தீர்வை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் எம்மை நிச்சியமாக உலகம் நம்பவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மொத்த உலகமும் எங்களை ஆதரிக்கிறது. ரஷ்யாவில் ஆரம்பித்து சீனா, மற்றும் அதிக சனத்தொகை கொண்ட பிராந்திய வல்லரசான இந்தியாவும், நிச்சயமாக எங்களைத்தான் ஆதரிக்கிறது, பாகிஸ்தான், அரபு, ஆபிரிக்க நாடுகள் அனைத்தும் எங்களை ஆதரிக்கின்றன. அவைதான் சர்வதேச சமூகம். ஒரு சிலர் மட்டும் தங்களை சர்வதேச சமூகம் என்று கூறிக்கொள்ள முடியாது. அத்தகைய ஒரு அனைத்துலக விசாரணையை இந்தியா அனுமதிக்கும் என்று நான் நினைக்கவில்லை, என்று இந்தியாவின் நிலைப்பாட்டையும் நம்பிக்கையுடன் தெரிவித்திருந்தார்.

போரில் எந்த ஒரு பொதுமகனும் கொல்லப்படவில்லை என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் அந்த எண்ணிக்கை மிகச் சிறியது என்று என்னால் சொல்ல முடியும். பெரும் படுகொலை என்று அதனை வகைப்படுத்த முடியாது??. என்னுடைய வாதம் எல்லாம், ஏன் எந்த ஒரு அனைத்துலக நிறுவனமும் ஒரு இறைமையுள்ள அரசைச் சந்தேகிக்க வேண்டும் என்பதுதான் என்றும் கூறியிருக்கிறார்.

ஆரம்பகாலம் தொட்டு விடுதலைப்புலிகளின் மாவீரர்களின் விபரங்களின்படியும், இறுதி யுத்தத்தின்போதான மாவீரர்களின் அண்ணளவான கணக்குப்படியும், போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்து 2009 மே போராட்டம் நிறித்திவைக்கப்பட்டிருக்கும் காலம்வரை மாவீரரான போராளிகளின் எண்ணிக்கை அண்ணளவாக முப்பத்து இரண்டாயிரத்திலிருந்து, முப்பத்து ஆறாயிரம் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இதே காலங்களில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சரியான தொகை ஒருபோதும் அரசதரப்பு வெளிவிடவில்லை. ஒவ்வொரு சந்தற்பத்திலும் இருட்டடிப்பு செய்யப்பட்டு ஒவ்வொரு எண்ணிக்கை கூறப்பட்டு வந்திருக்கிறது. இருந்தும் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் எண்ணிக்கை நாற்பதினாயிரத்திற்கும், அதிகமாக இருக்கலாம். ஆயுதம் தூக்கி போராடிய இரண்டு தரப்பிலும் மரணித்தவர்களின் தொகையை கணக்கிட்டால் கிட்டத்தட்ட எண்பதுனாயிரம்பேர் மாண்டிருக்கலாம்.

முள்ளிவாய்க்கால் முற்றுகையின்போது, 2009 ஏப், கருணாநிதியின் உண்ணா மறுப்பு நாடகத்தின் பின்னரான ""ஒரு சிலநாட்களில் மட்டும் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஸ்தலத்தில் நின்றிருந்த ஐநா அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்"".

அவைபோக கிளிநொச்சியின் வீழ்ச்சியின் பின்னரான முள்ளிவாய்க்கால் முற்றுகையில் குறைந்தபட்சம், ஒரு இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர், காணாமல்ப்போனவர்களின் பெரிய பட்டியல் கணக்கற்ற பெருந்தொகையாக இருந்துகொண்டிருக்கிறது. இப்படி அதிர்ச்சியளிக்கும் தமிழர்களின் இன அழிப்பு கணக்கு இருக்கும் நிலையில், கோத்தபாய அவர்களுக்கு தமிழர்களின் பல இலட்சம் படுகொலை அழிப்பு சிறிய தொகையாக தெரிகிறது. இப்படியான வக்கிர எண்ணம் குடிகொண்டிருக்கும் சிங்கள ஆட்சியாளர்கள், இறைமை, முறைமை, என்று இலக்கணம் பேசமுடியுமே தவிர, முடிவான தீர்வுத்திட்டம் எதையும் நிறைவேற்றப்போவதில்லை.

இரு இனங்களும் இணைந்து வாழ்வதற்கு தற்போது இருக்கும் அரசமைப்பே போதுமானது. அதில் எந்தப் பிரச்சினைகளும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. என்று சாகக்கிடக்கும் இந்த சர்வாதிகார கோத்தபாய விடுத்திருக்கும் அறிக்கை பலமொழிகளிலும் மொழிபெயர்த்து உலக அரங்கில் பகிரங்கப்படுத்தவேண்டிய ஒன்றாக இருக்கிறது.

அதிகாரப் பகிர்வு என்ற ரீதியில் நாங்கள் போதியளவுக்கு ஏற்கனவே வழங்கி விட்டோம், என்றே நான் நினைக்கிறேன். அதைவிட மேலதிகமாக ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. கலந்துரையாடல்கள் மூலம் இதைத்தான் தீர்வாக மக்களிடம் கொடுக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன், என்று அப்பட்டமான அடக்குமுறையை வெளிப்படுத்தி தனது கழுத்தறுப்புத் திட்டத்தை இந்தியாவின் ஒப்புதலோடு கூறியிருக்கிறார்..

இந்தியாவுடன் இணைந்து நடத்திய படுகொலைகளை கோத்தபாய, தமிழருக்கான அதிகாரப்பகிர்வு என்று ஹெட்லைன்ஸ் ருடே, க்கு கூறியிருக்கிறார்.

வட இந்தியாவிலிருந்து ஒளிபரப்பாகும் அத் தொலைக்காட்சி செவ்வியை, ஊமை பிரதமர் பார்த்திருக்காவிட்டாலும் அந்நாட்டின் புலனாய்வுத்துறை கவனித்திருக்கக்கூடும். கோத்தபாயவின் வாக்குமூலத்தை ஒப்புக்கொள்வதுபோலவே அந்நாட்டின் வெளிவிவகாரத்துறையின் அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவின் நிலைப்பாடும் இருப்பதாகவே அவரது சமீபத்திய நாடாளுமன்ற பேச்சு அமைந்திருந்தது.

இலங்கையில் போரின் போது ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து, "சேனல் 4' ஒளிபரப்பிய காட்சிகள் குறித்து தெரியும். "அது இப்போது முக்கியமல்ல". இலங்கை பயங்கரவாதத்திற்காகப் பலியான நாடு என்றுகூட சொல்லலாம். கடந்த 30 ஆண்டுகளாக, அங்குள்ளவர்கள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயுதப் போராட்டக்காரர்களுடன் போராடியே வந்த நாடு. போரினால் வீடுழந்து தவிக்கும் தமிழர்களுக்கு, வீடு கட்டித் தருவதற்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்தது என்று கோத்தபாய கூறியதை சற்று மாற்றி எஸ் எம் கிருஸ்ணா கூறிவிட்டு தூக்கத்தை தொடர்ந்திருக்கிறார்.

கிருஷ்ணாவின் கூற்றுப்படி இனப்படுகொலை ஒன்றும் முக்கியமில்லை, செத்தவர்களின் பேரால் சில வீடுகளை கட்டித்தருவதாக சொல்லிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று மடைத்தனமான ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார்.

உதயன் செய்தி ஆசிரியர் தாக்கப்பட்டமை ஒரு சின்ன விடயம். இலங்கையில் நாளாந்தம் நடக்கும் தாக்குதல்களுடன் ஒப்பிடும்போது இது ஒன்றும் பெரிய விடயமே இல்லை. இது சாதாரணமானது. மற்றைய நாடுகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுவாக நடக்கின்றன என்று தனது நாட்டில் நடைபெறும் சாக்காட்டு செய்தியை அசாதாரணமாக அந்த தொலைக்காட்சி செவ்வியின்போது கோத்தபாய ஒப்புக்கொண்டிருக்கிறார்.

மிகப்பெரிய சர்வாதிகாரிக்கான தொனியில் அமைந்த கோத்தபாயவின் தலைக்கனமான பேச்சு அப்பட்டமாக ஸ்ரீலங்காவின் நிலைப்பாட்டை வெளிக்காட்டியிருக்கிறது.

கோத்தபாயவின் சர்வாதிகார நிலைப்பாட்டை ஆமோதிக்கும் விதத்தில் இந்திய ஊழல் நாட்டின் பொம்மை பிரதமர் மன்மோஹன் சிங் கோத்தபாயவின் நிலைப்பாட்டை நிராகரிக்க முடியாது என்றும் எதிர்க்க முற்பட்டால் இந்தியா அழிந்துபோகும் என்று தனது கவலையை வைக்கோ அவர்களுக்கு அப்பாவியாக தெரிவித்து அழுதிருக்கிறார்.

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளால் விடுக்கப்பட்டுவரும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அயல்நாடான இலங்கை மீது ஒருபோதும் பொருளாதாரத் தடையை ஏற்படுத்த முடியாது. இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அழுத்தம் கொடுப்பதற்கு இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இலங்கையின் சிங்களவருக்கான அபிவிருத்தி மற்றும் வர்த்தக தொடர்புகளில் இருந்து இந்தியா விட்டு விலகும் போது அந்த இடத்தை சீனா பிடித்துவிடும், இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்களை நடத்துவதற்காக சீனா ஏற்கனவே இலங்கைக்கு கடற்படை உதவிகளை வழங்கியுள்ளது. அவற்றைக்கூட தட்டிக்கேட்கக்கூடிய நிலையில் இந்தியா இல்லை.

அத்துடன் சீனா பாகிஸ்தானை நெருங்கிய நட்பு நாடாக வைத்திருக்கிறது, அப்படியிருக்கையில் நாம் இலங்கையுடனான பொருளாதார தொடர்புகளை முறித்துக் கொண்டால் அது இந்தியாவிற்கு பாதகமாகவும், அச்சுறுத்தலாகவும் அமையும் என்பதை, தலைப்பா கட்டிய ஊமை, பொம்மை பிரதமர் வெட்கமில்லாமல் வைகோ அவர்களுக்கு சொல்லிவிட்டு சப்பாத்தி சாப்பிட சென்றுவிட்டது எனத்தெரியவருகிறது.

சீனா அதி நவீன படகுகளை கொடுத்து ஸ்ரீலங்காவின் இராணுவத்தின் மூலம் தமிழக மீனவர்களை அழிப்பது தெரிந்திருந்தும். இந்திய மத்திய அரசு ஸ்ரீலங்காமீது, ஆக்கபூர்வமாக இதுவரை எந்த நடவடிக்கைகளையும் எடுத்ததில்லை. வைகோ அவர்களின் சந்திப்பின்போது பொம்மை பிரதமர் அதை அப்பட்டமாக ஒத்துக்கொண்டிருக்கிறார்.

தனது நாட்டிலுள்ள தமிழ் மக்களை அழிக்கும், ஒரு சிறிய அயல்நாடான இலங்கையை கண்டிக்காமல் தண்டிக்காமல் சர்வதேச போர்க்குற்றச்சாட்டிலிருந்து ஸ்ரீலங்காவை பாதுகாக்க இந்திய ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனரே தவிர, தனது நாட்டின் மக்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்று கொள்கையளவில்க்கூட அக்கறைப்படாமலிருப்பது இலங்கை தமிழ் இன அழிப்பில் இந்தியாவின் பங்கு எவ்வளவு என்பது புரிகிறது.

மன்மோஹன் சிங்கின், இந்தக் கருத்தின்படி,, சீனாவுடனும், ஸ்ரீலங்காவுடனும், எந்தவிதத்திலும் இந்தியாவால் மோதமுடியாது என்பது தெரிகிறது. இவ்வளவு மோசமான பலயீனம் இந்திய மத்திய அரசிடம் இருப்பதால் ஈழத்தமிழர்களை ஈழத்திலும், தமிழகத் தமிழர்களை இந்திய கடற்பரப்பிலும் தொடர்ந்து பலிகொடுத்துக்கொண்டிருப்பதை தவிர வேறு வழி இந்தியாவுக்கு இல்லை என்றும், இது ஒன்றும் தப்பில்லை. என்றும், மன்மோஹன் சிங், ஏதோ ஒன்றிற்காக, சம்பந்தப்படாத ஏதோ ஒன்றை இரையாக்குவது சரியே என்று நியாயப்படுத்துவது புரிகிறது.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்றைக்கும் தமிழினத்திற்கு எதிராக இருப்பதால், இலகுவாக ஈழப்போராட்டத்தில் இந்தியா ஊடுருவி அப்பட்டமாக ஸ்ரீலங்காவிற்கு உதவி செயற்பட முடிந்திருக்கிறது. அதற்கு பக்க பலமாக கூட்டாளிக் கட்சியான திமுக எந்தவிதத்திலும் குறைவில்லாமல் ஒத்துழைத்து வருகிறது.

படுதோல்வியடைந்து தமிழ்நாட்டிலிருந்து ஆட்சி அதிகாரத்திலிருந்து விரட்டப்பட்டு, எதிர்க்கட்சி என்ற நிலைக்கும் இல்லாமல் ஓலம்பாடி ஒப்பாரி அரசியல் செய்துகொண்டிருக்கும், திமுக, 2008, 2009, ல் குடும்ப பதவிக்காக தமிழின அழிப்பில் மத்திய காங்கிரஸுடன் கைகோர்த்து செயற்பட்டது. இன்று தமிழ் நாட்டிலிருந்து விரட்டப்பட்டாலும் ஸ்பெக்ரத்தில் குற்றவாளிகளான குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காகவும், நில மோசடி, கட்டப்பஞ்சாயத்து, கொலைகுற்றம், போன்றவற்றிலிருந்து தப்பிப்பதற்காகவும், காங்கிரசை விட்டு விலக முடியாத வில்லங்கத்தில் மாட்டியிருக்கிறது. இதை திமுகவின் கூட்டாளியான தோல் திருமா, திமுக இன்று சூழ்நிலைக்கைதியாக இருக்கிறது என்று நக்கலடித்து குத்திக்காட்டினார்.

சமீபத்தில் இலங்கை போர் நடைபெற்ற போது, அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டிருக்கும் அறிக்கை தொடர்பாக பார்லிமென்டில் விவாதம் நடத்த, தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. - கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் விதி எண் 193 ன் கீழ் விவாதிக்கப்படவேண்டுமென நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

தி.மு.க.வும் தனது பங்கிற்கு நோட்டீஸ் ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அப்போ திமுக திருந்தி தமிழ் இன உணர்வுடன் நோட்டீஸ் தாக்கல் செய்திருப்பதாக அப்பாவிகள் சிலரால் நம்பப்பட்டது.

ஆனால் நேற்றைய தினம் திமுக நோட்டீஸ் தாக்கல் செய்ததன் தந்திரம் விதி எண் 193ன் கீழ் நடைபெற இருக்கும் விவாதத்தின் கருப்பொருளே மாற்றியமைக்கத்தான் என்ற உண்மை வெளிவந்திருக்கிறது.

லோக்சபாவில், விதிஎண் 193ன் கீழ், பொது விவாதமாக நடைபெறவுள்ள இலங்கை தமிழர் பிரச்னை, கடந்த வாரமே நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், நடக்கவில்லை. இந்நிலையில், லோக்சபா அலுவல்கள் குறித்த கையேடு நேற்று காலை வழக்கம் போல அனைவருக்கும் வினியோகிக்கப்பட்டது. அதில், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து ஐ.நா., சபை வெளியிட்டுள்ள அறிக்கையை மையமாக வைத்து பொது விவாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க., சார்பில் தம்பித்துரை மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் சிலர் இதுகுறித்த நோட்டீஸ் அளித்திருந்தாலும், தி.மு.க.,வின் பார்லிமென்டரி கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு அளித்த நோட்டீஸ் மட்டுமே பட்டியலாகியிருந்தது.

Discussion under rule 193 shri T.R.BAALU, shri SHAILENDRA KUMAR to raise a discussion on alleged killing of Sri Lankan Tamils by Sri Lankan army in the year 2009 as recently revealed in a United Nations Report என்ற வாசகங்கள் இடம்பெற்று இருந்தன. இந்த லோக்சபா குறிப்பேடு, பத்திரிகையாளர்கள் மற்றும் எம்.பி.,க்கள் என, அனைவருக்குமே காலையிலேயே வினியோகிக்கப்பட்டது. ஆனால், பா.ஜ.க வினர் அமளி காரணமாக சபை ஒத்திவைக்கப்பட்ட நேரத்தில், எம்.பி.,க்கள் மத்தியில், திருத்தப்பட்ட ஒரு குறிப்பேடு வினியோகிக்கப்பட்டது.

அதில், இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தின் விவாதம் குறித்து, காலையில் அளிக்கப்பட்டிருந்த குறிப்பேடு வாசகங்கள் அப்படியே மாற்றியமைக்கப்பட்டிருந்தன. ஒரு சில எம்.பி.,க்கள் இதை கண்டு ஆச்சரியமும், குழப்பமும் அடைந்தனர். அதாவது, ரிவைஸ்டு லிஸ்ட் ஆப் பிசினெஸ் என, தலைப்பிட்டு அதில், இலங்கையில் வாழும் தமிழர்களின் புனர்வாழ்வுக்கு இந்தியா செய்து வரும் உதவிகள் மற்றும் நடவடிக்கைகள் மீதான விவாதம் நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதாவது, shri.T.R.BAALU, shri SHAILENDRA KUMAR to raise a discussion on the steps taken by Government of India for relief and resettlement of Tamils in SriLanka and other measures to promote their welfare என்று வாசகங்கள் மாற்றம் செய்யப்பட்டிருந்தன. போரின்போது அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்பது பார்லிமென்டில் விவாதமாக வரக்கூடாது என இந்திய அரசு கவனமாக இருப்பது தெரிகிறது. இந்த வரிகள் மாற்றியமைக்கப்படுவதற்கு திமுக எம்பி, ரி ஆர் பாலு சமர்ப்பித்த நோட்டீஸ் பயன்படுத்தப்பட்டிருப்பதால் காங்கிரஸ் திமுக கூட்டுச்சதியின் பின்னணியிலேயே நிச்சியம் இந்த மாற்றம் நடத்தப்பட்டிருக்கிறது.

வாதத்திற்கு எடுத்துக்கொண்டாலும் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் கொண்ட எம்பிக்களின் எண்ணிக்கையில் திமுக அதிகமாக இருப்பதால் திமுக வின் நோட்டீஸ் முன்னிலைப்படுத்தப்பட்டதாக நியாயப்படுத்தவும் தகுதி இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி திருமா, திமுக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக தெரிவித்திருந்தாலும். இச்சந்தற்பத்தில் தந்திரவாதியான, திருவாளர் திருமா பாராளுமன்றத்தில் சமூகமளிக்கவில்லை.

இறுதியாக: ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்தியா தீர்வு பெற்றுத்தரும் என்று யாராவது நம்பினால் அதைவிட பெரிய கற்பனைக்கோட்டை வேறு எதுவுமாக இருக்கமுடியாது. அரசியலோ ஆயுதப்போராட்டமோ ஈழத்தமிழர்கள் சரியாகத்தான் செய்துகொண்டு வந்திருக்கின்றனர், வருகின்றனர். குறுக்கே புகுந்து நாசகார வேலைகளில் இந்தியா எப்போதும் மூக்கு நுழைத்து சேறடித்தே வருகிறது.

சம்பிரதாயத்திற்கு வேண்டுமென்றால் சிலர் சொல்லுவதுபோல் இந்தியாவை இணைத்து பயணிப்போம் என்பது சரியாகவும் இருக்கக்கூடும்.ஆனால் காரியம் தடங்கலும் கழுத்தறுப்பும் மிஞ்சுமே தவிர கால் காசுக்கு பலன் கிடைக்கப்போவதில்லை.

இன்று தமிழினத்தினதும், தமிழினத்தினது நட்புச்சக்திகளினதும் குறியாக, போர்க்குற்றத்தில் எவர் ஈடுபட்டிருந்தாலும் அவர்களை தண்டிப்பதற்காக உலக அரங்கில் திரண்டுவரும் அனைத்து ஆதரவையும் திரட்டி,, குற்றவாளிகளை கூண்டிலேற்றி, கழுமரத்தில் ஏற்றி, தலை முழுக முனைப்பாக முயற்சிக்க வேண்டும். மற்றவை அனைத்தும் சரியாக நடைபெறும்.

போர்க்குற்றம் என்கிற ஒரேயொரு அஸ்திரம்தான் இன்று பலரை திகைப்பூண்டில் மிதித்த வழிப்போக்கனைப்போல திகைக்கவைத்து. அதிகாரப்பகிர்வு, அபிவிருத்தி, தீர்வுத்திட்டம், என்று ஏதேதோ பேசவைத்து, போர்க்குற்ற விசாரணையை திசை திருப்பி இழுத்தடிக்க அல்லது இல்லாமல்ச்செய்ய புலம்ப வைக்கிறது.

கூட்டத்தோடு கூட்டமாக போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் பலர் போர்க்குற்றம் விசாரிக்கப்படவேண்டும் என்று குரல் கொடுப்பதை தமிழர்கள் பலர் இன்னும் இனங்காணவில்லை. குற்றவாளி ராஜபக்க்ஷவை குற்றவாளிக்கூண்டில் ஏற்றினால் மற்றக்குற்றவாளிகளை ராஜபக்க்ஷ இனங்காட்டி உதவுவார். எல்லாமே சுபமாக முடிவுக்கு வரும்.

மீண்டுமொருமுறை தமிழினம் நன்கு சிந்தித்து இன்றைய எமது முக்கிய பணி போர்க்குற்றவாளிகளை தூக்கில் ஏற்ற என்ன செய்யவேண்டுமோ அந்தப்பணியே முதன்மையானது என்று உறுதியெடுத்துக்கொள்ள வேண்டும்.மற்றவை எல்லாம் சரியாக நடப்பதாகவே படுகிறது.

ஈழதேசம் இணையத்திற்காக
கனகதரன்,

நன்றி ஈழதேசம் இணையம்.