யுத்தம் முடிந்து இரண்டு வருடத்திற்கு மேல் ஆகியும் இலங்கை பொறுப்புக்கூறும் கடப்பாட்டிலிருந்து விலகியிருப்பது குறித்து உடனடியாக தலையிடுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் மனித உரிமைகளை இழந்துள்ள மக்களுக்கு நீதியை நிலைநாட்ட தற்போதைய இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாகவும்,மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய்வதற்கு இலங்கை அரசாங்கம் நியமித்த குழுக்களின் சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியிருப்பதாகவும், மன்னிப்புச் சபை கண்டிப்புடன் கூறியுள்ளது.

யுத்தம் நடைபெற்ற காலம் தொடர்பாக, உரிய விசாரணைகள் நடத்தப்பட்டால் மாத்திரமே உண்மையான நிலையை அறிந்துகொள்ள முடியும் எனவும், அதன்மூலம் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டு நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச மன்னிப்புச்சபை ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை ஆணைக்குழுவிடம், ஐநா மனிதஉரிமை ஆணைக்குழு, ஐநா சபை பிரதானிகளிடமும், ஐநாசபைபிரதானிகள், சம்பந்தப்பட்டவர்களிடமும், விளக்கம் கேட்டு ஒரு பொறிமுறையை உருவாக்க முற்படும் இந்தவேளையில் பக்கபலமாக பிரித்தானியா, அமெரிக்கா, போன்ற நாடுகள் தமது வல்லமையின் அடிப்படையில் சில அறிவுறுத்தல்களையும் ஸ்ரீலங்கா அரசுக்கு விடுத்திருக்கின்றன.

இச்சந்தற்பம் போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க சிறந்த சந்தற்பமாகவே மனிதாபிமானத்தை வேண்டி நிற்கும் அகில உலகம் பார்க்கிறது.

அவற்றில் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரொபேட் பிளேக் தெரிவித்த கருத்து தமிழினத்துக்கு நியாயம் கிடைக்க வழி வகுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக எடுத்துக்கொள்ள முடியும்.

மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய இலங்கை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் துணை ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்படுவதுடன் கிறீஸ் பூதம் போன்ற மர்ம மனிதர்கள் தொடர்பான சம்பவங்களுக்கு முடிவு காணப்பட வேண்டும். வடக்கில் தமிழ் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டும். எனவும் பிளேக் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள பிளேக், தனது பயணம் குறித்து கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கில் தமிழ் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்படுவதால் சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தைப் பயன்படுத்தும் தேவை இருக்காது. என்ற யதார்த்தத்தையும் தெரிவித்துள்ள பிளேக், ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது கவனம் செலுத்தும் என தாம் நம்புவதாகவும்,சமாதானம், ஜனநாயகம் மற்றும் சுபீட்சத்துடன் கூடிய நாட்டை உறுதி செய்து கொள்வதற்கும் யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை (இழப்பு மற்றும் வேதனை) குணப்படுத்துவதற்கும் இன்னும் பெருமளவு பணிகள் மேற்கொள்ளபட்ட வேண்டியுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை பயணத்தின் பின்னர் அமெரிக்கா திரும்பும் போது, இந்தியா சென்றுள்ள பிளேக் அவர்கள். புதுடில்லியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போது சில முக்கியமான விடயங்களை உடகவியலாளர்கள் முன் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை துரிதப்படுத்த இந்திய மத்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும்.

இலங்கையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் "யாராக இருப்பினும்" அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும என்றும். தழிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வரவேண்டும் எனவும், அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இது "அமெரிக்காவின் கருத்தெனவும்" அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரப் பகிர்வு வழங்கினால் மட்டுமே தமிழ் மக்கள் இலங்கை அரசாங்கத்தை நம்புவார்கள. தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நிவாரண பணிகளை உடனடியாக தொடருமாறு இலங்கை அரசுக்கும் இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும். தொடர்ந்தும் ரொபேட் பிளேக் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக்கருத்தை பிளேக் அவர்கள் இந்திய தலைநகர் புதுடில்லியில் வைத்து ஊடகங்கள் முன் தெரிவித்திருப்பது. நேரடியாக இந்தியாவிற்கு அமெரிக்கா கொடுக்கும் நாகரீகமான அழுத்தத்திற்கான அறிவுறுத்தலாகவே இருக்கும் என்று நம்பலாம்.

அமெரிக்காவின் இவ் அறிவுறுத்தல் அழுத்தமாக மாறுவதற்கு முன், இந்தியா தமிழர் நலன்சார்ந்து ஏதாவது செய்யாவிட்டாலும் ஏதாவது இழுத்தடிப்பு ஒன்றிற்கு காய் நகர்த்தக்கூடும் என்று எதிர்பார்த்த நேரத்தில் தமிழர் தேசியக்கூட்டமைப்பு ராஜபக்க்ஷ தரப்புடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகிவிட்டதாக செய்திகள் வந்தன.

பொறுத்த நெருக்கடியில் இருந்து இலங்கையை தப்பிக்க வைப்பதற்கான தந்திர நகர்வாக இந்தியாவின் கால்களை சுற்றிவரும் தேசியக் கூட்டமைப்பினரை இந்தியா ஏவிவிட்டிருக்கலாம்.

இருந்தும் கூட்டமைப்பினரின் சொந்தப்புத்தி எங்கு போய்விட்டது என்கிற அதிர்ச்சியில் தமிழர்கள் இருக்கின்றனர்.

சிங்கள அரசுடன் பத்து சுற்று பேச்சுவார்த்தை நடத்தி எந்த ஒரு சமரசத்திற்கும் வரமுடியவில்லை எனவே அரசாங்கம் தமது தரப்பின் நிலைப்பாட்டை எழுத்துமூலம் முன்வைத்தால் அடுத்து பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள முடியும் என்று கோரிக்கை வத்து வெளியேறிய கூட்டமைப்பு,ஜெனீவாவில் மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் நடைபெறும் இந்த முக்கிய தருணத்தில். திடீரென பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்திருப்பது தமிழர்கள் மத்தியில் மிகுந்த சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.

ஒன்று, இந்தியா இரகசியமாக கூட்டமைப்பினருக்கு கட்டளை பிறப்பித்திருக்கக்கூடும். அதை சிரம்தாழ்த்தி ஏற்று கூட்டமைப்பு காய் நகர்த்தி தமிழினத்தை ஏமாற்ற துணை நிற்கிறது. அல்லது சிலதினங்களுக்கு முன் ராஜபக்க்ஷவின் அழைப்பில் அலரி மாளிகை சென்ற சம்பந்தன் ஐயா அவர்களிடம் அமெரிக்காவின் அழுத்தத்தை எடுத்துக்கூறி தலைசுற்றப்பட்டிருக்கலாம்.

எது எப்பட்டியிருப்பினும் இது ஒரு பேச்சுவார்த்தைக்கான காலமல்ல!

அத்துடன். ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் நடைபெறும் இந்த நெருக்கடியான காலகட்டத்தை சிங்கள அரசு கடந்து தப்பிப்பதற்கு, தமிழர் தேசியக்கூட்டமைப்பு சோரம்போய்விட்டது என்றே எடுத்துக்கொள்ள இருக்கிறது.

தமிழினம் பட்ட பரிதவிப்பு, துயரம், இழப்பு,போராடம், வீரம், அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு. சிங்கள அரசுக்கு கைத்தடியாகி தமிழர் தேசியக்கூட்டமைப்பு உதவியிருக்கலாம் என்பதே, பலரின் பரவலான கருத்தாக இருக்கிறது.

இராசதந்திர தந்திரோபாயமாக, சில நகர்வின் அடிப்படையில் பேச்சுவார்த்தையில் பங்குபற்றவேண்டிய தேவை அரசியல் சாணக்கியர்கள் என்ற ரீதியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு இருக்கிறது. அந்த அடிப்படையில் இந்த நேரத்தை பயன்படுத்தி நகர்வுகளை மேற்கொள்ளுகின்றோம். என்று அவர்கள் சொத்திக் காரணம் சொல்லவும் வழிவகைகள் இருக்கின்றன.

ஆனாலும் இந்த நேரம் காலகட்டம் சிங்கள இனப்படுகொலையாளிகளுடன் எப்பேர்ப்பட்ட பேச்சுவார்த்தைக்கும் உகந்த நேரம் அல்ல என்பதே தமிழர்தம் சிறு குழந்தைகளின் எண்ணமும் கூட.

எதிர்த்தரப்புக்கு இப்படி நெருக்கடியான காலகட்டங்கள் உருவாகும்போது மதிநுட்பத்தை சாதகமாகப்பயன்படுத்தி எதிரியை சிக்கவைப்பதே அரசியல் சாணக்கிய தந்திரத்தின் அடிப்படை உபாயம்.

சமீபத்தில் பிரித்தானியாவுக்கு வருகைதந்திருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன். எழுந்தமானமாக தெரிவித்த கருத்துக்கள் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் மிகுந்த வேதனையை உண்டுபண்ணியிருந்தது. தமிழர்கள் மறந்திருக்க முடியாது. அவரது கருத்தின் அடிப்படையில்

1) புலம்பெயர் தமிழர்களது தமிழீழம் நோக்கிய செயற்பாடுகள் மேற்குலகின் ஆதரவைப் பெறவில்லை எனவும், அதில் மாற்றங்கள் தேவை.

2) இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் போது, அது பெரும்பான்மை சிங்கள, சிங்கள மக்களால் ஏற்கக் கூடிய தீர்வாக அமைய வேண்டும்.

3) சிறிலங்கா அரசு மீதான போர்க் குற்ற விசாரணைக்கான கோரிக்கையைக் கைவிடவேண்டும் என்பது அவரது முழுமூச்சான கருத்தாக அமைந்திருந்தது.

அந்த அடிப்படையில் சிங்கள அரசுடன் இணைந்து தொடர்ச்சியாக ஏதாவது நகர்வுகளை தமிழர் தேசியக்கூட்டமைப்பு மேற்கொள்ளுகிறதோ, என்ற மோசமான ஐயமும் பலரிடம் எழுந்திருக்கிறது.

ஏன் இப்படிச்சிந்திக்க வேண்டியுள்ளது என்றால் அமெரிக்க நாட்டின் இராசதந்திரியான ரொபர்ட் ஓ பிளேக் அவர்கள் துணை ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் மர்ம மனிதர்கள் தொடர்பான சம்பவங்களுக்கு முடிவு காணப்பட வேண்டும். வடக்கில் தமிழ் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்படவேண்டும். அவ்வாறு ஈடுபடுத்தப்படுவதால் சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தைப் பயன்படுத்தும் தேவை இருக்காது. என ஆணித்தரமாக கூறியிருந்தார்.

ரொபேர்ட் பிளேக் அவர்களின் அக்கருத்துக்கு கோத்தபாயவின் திமிரான பதில், யதார்த்த சூழலை தூக்கியெறிந்த துவேஷ மனவெளிப்பாடாக இருந்தது.

தமிழர்களை பொலிஸில் இணைத்துக்கொள்ள அமெரிக்கா தயாரா இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடமையிலீடுபடுத்த தமிழ்ப் பொலிஸாரை இணைத்துக் கொள்ளும் தேவை அரசாங்கத்துக்கு இல்லை. அவ்வாறு வலியுறுத்தும் அமெரிக்கா முதலில் அவ்வாறு செய்து காட்டட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

(தமிழ்ப்பொலிசாரையே தமிழ்ப்பகுதிகளில் பணிக்கமர்த்த விரும்பாத சிங்கள அரசு, ஒரு இரவில் தீர்வுக்கு ஒப்புக்கொண்டுவிட்டதென்று கூட்டமைப்பினர் மூலம் கூறினால் எந்தப்பயித்தியக்காரன் ஒத்துக்கொள்ளுவான்)

அமெரிக்காவில் தேசிய இனங்களாக பெரும்பான்மையாக வாழ்பவர்கள் வெள்ளை இனத்தவரும் கறுப்பர்களுமாகும். அமெரிக்க பொலிஸில் பெரும்பதவி வகிப்பவர்கள் கறுப்பு இனத்தவர்கள்.

இன்றைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா, அவர்களே கென்ய வழித்தோன்றலான ஒரு கறுப்பு இன தந்தைக்கு பிறந்தவர். முன்னைய ஜோர்ஜ் புஷ் அவர்களின் ஆட்சியின்போது அவரது உலக அரசியல் ஆலோசகராக இருந்தவர் 'ஆப்ரிக்க வழித்தோன்றலான' பெண்மணி கொண்டலிசா றைஸ், அமெரிக்க வெளியுறவுத்துறையில் மிகப்பெரிய பதவியை வகித்தார். ஈராக் யுத்தத்தில் அமெரிக்கபடைத்துறைப் பொறுப்பாளராக இருந்த கொலின் பவல் 'அரை ஆப்ரிக்க வழித்தோன்றல். நிலவரம் இப்படியிருக்கும்போது,வரலாறு எதுவுமே தெரியாமல், வாய் திறந்தாலே வன்மமும் கயமையும் துவேஷமும் கொட்டிக்கொண்டிருக்கும் சிங்கள இனத்துடன். கூட்டுச்சேர்ந்து பேச்சுவார்த்தைக்கு வா என்றவுடன் அழைப்பை ஏற்று தேசியக்கூட்டமைப்பு சென்றிருந்தது.

இது இருபக்கமும் திட்டமிடப்பட்ட ஒரு சதியாகவே வரலாற்றில் பதிவாகும் என்பது நாளை தெரியவரும்.

வருடக்கணக்காக பல நாடுகள் முகம்கொடுத்தும் முடிவுறாத இனப்பிரச்சினை, போர் முடிவுற்றதாக கூறப்பட்டபின் கூட்டமைப்பினர் தொடர்ந்த பேச்சுவார்த்தை. பத்து சுற்றுகளில் எட்டிப்பிடிக்காத விடையம், ஒரு இரவில் முடிவுக்கு வந்துவிட்டதாகவும். பேசித்தீர்க்கலாம் என்பதை எந்தவகையில் இவர்கள் நம்பி, இருதரப்பும் கைச்சாத்திட்டு கூட்டறிக்கை வெளியிட்டிருக்கின்றனர் என்பதும், யார் இவ்விடயத்துள் ஒளிந்திருக்கின்றனர் என்பதும் பெருத்த மாயையாக தெரிகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏற்கனவே கையளித்திருந்த தீர்வு யோசனையில் தெரிவிக்கப்பட்டிருந்த 18 அதிகாரங்கள் 13ஆவது திருத்துக்கு அப்பாலானவை, இருந்த போதும் அவை தொடர்பில் பேசித் தீர்த்துக்கொள்ளலாம், என்று அரசு தெரிவித்திருப்பதாகவும். நேற்றுப் பிற்பகல் இரு தரப்பினருக்கும் இடையில் அலரி மாளிகையில் நடைபெற்ற பேச்சில் இந்த இணக்கம் எட்டப்பட்டிருப்பதாகவும். தெரிவிக்கப்படுகிறது.

இத்தனை வருடங்கள் இழுபறியில் இருந்த ஒருவிடையம் முடிவுக்கு வருவது அனைவரும் வரவேற்கும் நற்செய்தியாக இருந்தாலும். "வரும் ஆனால் வராது" என்ற கதையில் முடியுமா என்ற அவநம்பிக்கையே ஒவ்வொரு தமிழனிடமும் இருக்கிறது. அறுபது வருட அனுபவமும் அதைத்தான் விட்டுச்சென்றிருக்கிறது.

வரலாற்றில் இதுவரை சிங்கள ஆட்சியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பட்டுணர்ந்த பாடங்களின் அடிப்படையில். ஒரு முடிவுக்கு வராமல் பேசித்தீர்த்துக்கொள்ளலாம். என்பதை திருப்திகரமான ஒரு முடிவாக ஊடகங்களுக்கு செய்தி கொடுத்ததே தமிழ் தேசியக்கூட்டமைப்பினர்மீது சந்தேகத்தை உண்டுபண்ணுவதாகவே இருக்கிறது. அவை மிக மோசமான ஏமாற்றாகவே முடியும் என்பதில் ஐயமில்லை.

ஜெனீவாவில் இடம்பெறும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மனித உரிமை மாநாடு. தமிழனுடன் எந்தச்சம்பந்தமும் இல்லாத வெள்ளை இனத்தவர்கள் மற்றும் பல்லின நாட்டு தலைமைகள் தொடர்ச்சியாக கூடி, பாதிக்கப்பட்ட தமிழினத்திற்கு நீதி கிடைக்கவேண்டும் என்ற நோக்கோடு போராடி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க கை கோர்த்திருக்கும் இத்தருணத்தில்.

விடயத்தை நீர்த்துப்போகச்செய்யும் தந்தரமும். காலவிரையத்தை ஏற்படுத்தி மனித உரிமையை காலில் போட்டு மிதித்து, இனப்படுகொலை செய்த துரோக கூட்டம் தப்பிக்க, துணை போவது போன்ற நச்சுத்தனமான செயற்பாடுகள், மன்னிக்க முடியாத இனத்துரோகம் என்பதை மட்டும் வரலாறு தேசியக் கூட்டமைப்பினர்மேல் பதிவு செய்யும் என்பது திண்ணம்.

ஈழதேசம் இணையத்திற்காக.
கனகதரன்,

நன்றி ஈழதேசம் இணையம்.