Friday, September 23, 2011

தமிழகத்தை இழந்து வருகின்றதா இந்தியா?

இந்திய நடுவண் அரசு மீதான அதிருப்தியும், நம்பிக்கையீனமும் தமிழக மக்களிடம் அதிகரித்து வருகின்றது. இந்த நிலை தொடரும் பட்சத்தில், தமிழக மக்கள் பிரிவினை கோரும் அளவிற்குத் தள்ளப்படுவார்கள் என சமூக ஆய்வாளர்கள் பலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

1965 ஆம் வருட காலத்து இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகம் உட்பட்ட திராவிட மக்களைத் தனி நாடு கோரும் அளவிற்குக் கொண்டு சென்றது. அதுவரை சென்னை மாநிலமாக காங்கிரஸ் கட்சியினால் ஆட்சி செய்யப்பட்டு வந்த தமிழகத்தில் பொங்கிப் பிரவாகம் ஆகிய தமிழின உணர்வு எழுச்சி, 1967 இல் அதிசயிக்கத்தக்க ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்நின்று நடாத்திய அறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க. தமிழகத்தின் ஆட்சியைக் கைப்பற்றியதுடன், காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்தையும் தமிழகத்திலிருந்து அகற்றியது.

பேரறிஞர் அண்ணா அவர்களது ‘அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு’ என்ற பிரிவினைக் கோரிக்கை காரணமாக திராவிட முன்னேற்றக் கழகம் இந்திய நடுவன் ஆட்சியாளர்களால் தடை செய்யப்படும் நிலை உருவான காரணத்தாலும், அன்றைய காலப் பகுதியில் நடைபெற்ற இந்திய – சீன எல்லைப் போர் இந்திய மக்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய அவசியத்தை உருவாக்கியதன் காரணத்தாலும் கைவிடப்பட்டது. இந்திய நடுவண் அரசின் கொள்கைத் தளர்வாலும், தொடர்ந்து இடம்பெற்ற அயல் நாடுகளுடனான யுத்தங்கள் காரணமாகவும் தமிழகத்தில் உருவான பிரிவினைவாத நெருப்பு உறக்க நிலைக்குச் சென்றது.

அண்ணாவின் மறைவினை அடுத்து, தி.மு.க.வின் தலைமையைத் தனதாக்கிக்கொண்ட கலைஞர் கருணாநிதி, அவர்களது சுயநலமும், பண ஆசையும் தி.மு.க. பிளவு படுவதற்குக் காரணமாக அமைந்தது. தி.மு.க. விலிருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர். அவர்கள் 1972 இல் அ.தி.மு.க. வினை உருவாக்கியதைத் தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் துளிர்க்க ஆரம்பித்தது.

பிளவுபட்ட திராவிட இயக்கங்கள் ஒன்றை ஒன்று தோற்கடிப்பதற்கான ஆதரவு சக்தியாக காங்கிரஸ் கட்சி மாற்றம் பெற்றது. சிறிய வாக்கு வங்கி கொண்ட காங்கிரஸ் கட்சியுடன் யார் கூட்டுச் சேர்கிறார்களோ, அவர்களே வெற்றிபெறுவார்கள் என்ற நிலை தமிழகத்தில் உருவானது.

தமிழீழ மக்கள் மீதான சிங்கள அரசின் இன அழிப்பு நடவடிக்கைக்குத் துணைபோன காங்கிரஸ் ஆட்சியாளர்கள், சிங்கள அரசினால் வேட்டையாடப்பட்ட தமிழக மீனவர்களையும் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது.

32 கடல் மைல் தூரத்தில் வாழும் தங்கள் உடன்பிறப்புக்களான ஈழத் தமிழர்கள் இலட்சக் கணக்கில் சிங்கள அரசால் வேட்டையாடப்பட்ட போது, தம்மால் எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையைத் தமிழக மக்கள் வேதனையுடனும் வெட்கத்துடனும் நினைவு கூருகிறார்கள்.

தமிழக மக்களது மௌன அலறலைத் தகர்த்து, அவர்களைப் போராட்டக் களத்துக்கு நகர்த்துவதற்காக ஈகைப் பேரொளி முத்துக்குமாரன் தன்னையே எரித்துக்கொண்டார்.

இறுதிப் போர்க் காலத்தில் எழுந்த தமிழக மக்களது எழுச்சி, அன்றைய தமிழக முதல்வரால் சகுனித்தனமாக முடக்கப்பட்டது.

எரியும் நெருப்பாகக் கனன்றுகொண்டிருந்த தமிழக மக்கள், தங்களது கோபத்தை அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் காண்பித்தார்கள். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழகத்திலிருந்து துடைத்தெறியப்பட்டது. காங்கிரஸ் நடாத்திய தமிழின அழிப்பு வேள்விக்குத் துணை நின்ற கருணாநிதி தலைமையிலான தி.மு.க. எதிர்க் கட்சியாகக் கூட வர முடியாமல் தடுக்கப்பட்டது.

மீண்டும் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தமிழகத்தில் மேற்கொள்ள முயன்ற இன்னொரு தமிழின அழிப்பு முயற்சி தமிழகத்தில் பூகம்பத்தை உருவாக்கியுள்ளது. ராஜீவ் கொலைக் குற்றச்சாட்டில் 20 வருடங்களாக நீதியை எதிர்பார்த்துக் காத்திருந்த சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியினால் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டு, இந்திய ஜனாதிபதி பிரதிபா பட்டேலினால் அங்கீகரிக்கப்பட்ட கொடூரம் தமிழக மக்களை மீண்டும் ஒரு போராட்டத்தினுள் தள்ளியுள்ளது.

இந்தப் போர்க் களத்தின் உச்ச ஈகமாக, செங்கொடி என்ற ஒரு பெண் தமிழுணர்வாளர் தன்னை எரிதழலாக்கித் தமிழக மக்கள் மனங்களில் புயலைக் கிழப்பியுள்ளார்.

தமிழகம் எங்கும் மூவரது தூக்குத் தண்டனைக்கும் எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன. தமிழக சட்ட மன்றத்தில் மூவரது தூக்குத் தண்டனையையும் ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனாலும், இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் மனதில் எந்த மாற்றமும் உருவானதாகத் தெரியவில்லை.

இதை விடவும் கொடூரமாக இந்த மூவரது தூக்குத் தண்டனையையும் உடனடியாக நிறைவேற்றும்படி தமிழக காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தது தமிழக மக்கள் மனதில் ஆத்திரத்தை அதிகரிக்க வைத்துள்ளது.

தங்களது மன உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்காத காங்கிரஸ் கட்சியினை தமிழகத்திலிருந்து முற்றாகத் துடைத்தெறிய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளதாகவே தமிழக மக்கள் உணர்கின்றார்கள்.

இனி வரும் காலங்களில் தமிழக மக்களின் தீண்டத் தகாத கட்சியாக காங்கிரஸ் ஒதுக்கப்படும் நிலை உருவாகிவருகின்றது. அத்துடன், எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டுச் சேரும் எந்தக் கட்சியும் தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாது என்ற செய்தியையும் தமிழக மக்கள் கடந்த தேர்தலின் மூலம் உணர்த்தியுள்ளதால், எதிர் காலத்தில் திராவிடக் கட்சிகள் ஒன்றில் சவாரி செய்யும் வாய்ப்பையும் காங்கிரஸ் கட்சி தவறவிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தமிழின விரோதச் செயற்பாடுகள் இவ்வாறே தொடரும் பட்சத்தில், இந்தியா தமிழகத்தை இழக்கும் ஆபத்து உருவாகும் என்பதில் சந்தேகமே இல்லை.

- அகத்தியன்

நன்றி,eu tamil.

1 comment:

OBC RESERVATION said...

மிகவும் நிதர்சனமான உண்மை.தமிழ்நாடு இந்தியவுடன் சேர்ந்து இருப்பதால் என்ன நன்மை ? தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவதை விட !

தமிழன்