Tuesday, September 18, 2012

மிருக விதி..

3-1
எலிக்கு, எறும்புக்கு,,
பாம்பு, தேரைக்கு,
காட்டு மரத்துக்கு,
தேள், பூரானுக்கும்.
வாழ்வியல் தத்துவம் பற்றி
வாதாடுவதற்கு
சட்டப்படி அமைப்புக்கள் உண்டு.

எலி வளைக்குள் நீர் புகுந்துவிட்டால்,
பெருச்சாளி புகை இடுக்கில் சிக்கிக்கொண்டால்,
தவளை பாம்பை கௌவிக்கொண்டால்,
அவைகளை காப்பாற்ற
போர்க்கால அடிப்படையில்
தெருவில் இறங்கி போராட்டம் நடத்த
அரச அனுசரணையுடன்
அமைப்பு ரீதியாக
மனிதனுக்கு உரிமையுண்டு!

ஆனால்
பாவப்பட்ட மனித குலத்துக்கு மட்டும்
எதிர்மறையான புளக்கமே
வாழ்வியலில் சாத்தியம்
என்கிறது ஆளும் வர்க்கம்.

மானுடம் தவிர்த்தவற்றின்
வாழ்வின் சூட்சுமத்தை
அறிந்து கொள்ள மட்டும்.
ஐநா வும் அதிகார வர்க்கங்களும்
அனுதினமும்
பலகோடி பணம் செலவு செய்கிறது!

அவைகளுக்காக
மனிதாபிமானத்துடன்
பெருத்த வரையறை
விஞ்ஞான, அறிவியல் மேதாவிகளால்
உலக அரங்கத்தில் வகுக்கப்பட்டிருக்கிறது.

அடப்பாவி ஏழை மனிதா!
அவை
உனக்கு சற்றும் பொருந்தாது,
உணர்ந்துகொள் என்று
கூடங்குளம் படுகொலை சொல்லுகிறது.

தெரியாவிட்டால்,
காவல்த்துறையை,
கட்சி மேலாளர்களை
கேட்டு தெரிந்துகொள் என்று
புரிய வைக்கின்றனர்
ஆட்சியாளர்கள், கட்சி முதலாளிகள்.

நீ தேசியத்தை சொந்தமாக எண்ணும்வரை,
நீ ஏழை மனிதனாக இருக்கும்வரை,
உரிமையுள்ள
சுதந்திரவானாக சிந்திப்பது,
தண்டனைக்குரிய குற்றம்
என்பது பல இடங்களில்
மெத்த சரியாக உணர்த்தப்பட்டிருக்கிறது!

இருந்தும் நீ போராடுகிறாய்!!.

உரிமை எதுவும் உனக்கு சாத்தியமில்லை!
கனவில் வேண்டுமானால்
சுதந்திர மனிதனாக
ஆனந்தமாக வாழ்ந்து களித்துக்கொள்!
இப்படி
காவல்த்துறை இடித்துரைக்கிறது!

உனது மனைவி குழந்தைகளுக்கு
அணுவால் ஆபத்து என்றறிந்தால்
ஊரை விட்டோடிவிடு,
அல்லது
நகரத்து அரசியல் கட்சி ஒன்றில்
ஐக்கியமாகி தொண்டனாக கலந்துவிடு.
இல்லையென்றால்
பட்டணத்தில்
ரசிகர் மன்றம் ஒன்றை துறந்துகொள்.
இதுதான் மூத்த அரசியல்வாதிகளின்
முதலீடு என்கிறது தமிழகத்து
திராவிட அரசியல் வரலாறு.

சட்டத்தின் தாற்பரீகம் அறியாமல்,
உரிமை உள்ளதென்று நினைத்து
தெரியாத்தனமாக
தெருவுக்கு வந்தால்
பெருங்குற்றமாகிவிடும்
ஏமாந்து போகாதே!
என்பதை
பரமக்குடி போதித்து போனது.

மிருகவதை கொலைக்குற்றம்!
பிராணியை துன்புறுத்தினால்
சிறைத்தண்டனை!
மரம் வெட்டினால் தண்டனை!
உரிமைக்கு நீ போராடினால்
உயிருக்கு உத்தரவாதம் இல்லை
இதைத்தான்
முள்ளிவாய்க்கால் மெய்ப்படுத்தியது.

மிருகங்களுக்கான விதி உனக்கு பொருந்தாது!
நீ பொருமினால் அழிக்கப்படுவாய்
இதுதான்
சனநாயக சட்டமாக பகிரப்பட்டிருக்கிறது.

அதைத்தானே
இலங்கை, இந்திய சனநாயகமும்
மத்தியும், மானிலமும் எப்போதும்
மெத்த தெளிவாக சொல்லி வருகின்றன,
சாக்காட்டு சட்டங்களும் அதைத்தானே
வரையுறுத்தி நிற்கிறது.
அவற்றை பின்பற்றி வழிமொழிய
தேசத்திலும் ஆயிரம் அமைப்புக்கள்
போட்டி போட்டு நிற்கின்றன.

மானுடத்துக்கு
அது ஒரு காலமும் பொருந்தாது!
இருந்தும்
நீ போராடுகிறாய்!

அணு உலை வெடித்து ஆறாக ஓடினாலும்,
ஆற்றுநீர் கடலில் பாய்ந்து வீணாகி போனாலும்,
அப்பன், அண்ணன் கடலில் செத்தொழிந்தாலும்.
ஆற்றாமையில்
பிறப்பு உரிமையின் பேரால்
ஆர்பாட்டம் செய்யாதே!
உருக்குலைந்து போவாய்
என்றே வரையப்பட்டிருக்கிறது.

அடிப்படை உரிமை உனக்கு
கிடைக்கவில்லை என்றாலும்,
விலையேற்றத்தின் பளு
உன் கழுத்தை நெரித்தாலும்,
குழந்தைகள் பட்டினியால் செத்தாலும்,
வினைப்பயன் என்று எடுத்துக்கொள்.

ஆட்சியாளர்களின்
முறைகேடுகள் பற்றி
நீ ஆள் சேர்த்து பேசக்கூடாது.

ஊழல் முறைகேட்டை தட்டிக்கேட்டால்
உனக்குத்தான் வாழ்வு பழுதாகிவிடும்.
நாட்டு நலனென்று
நீ குரல் கொடுத்தால்
தனிமைப்படுத்தப்பட்டு
சோற்றுக்கு வழியில்லாமல்
செத்து போய்விடுவாய்.
காவல்த்துறையிடம் அகப்பட்டால்
கதை கந்தலாகிவிடும்.

உன் சமூகத்தை வழிநடத்தவும்
சீர்திருத்தம் பற்றி பேசவும்
யார் உனக்கு அனுமதி தந்தது?
என்ன  நடந்தாலும்
கேள்வி கேட்க
உனக்கு எந்த உரிமையுமில்லை!
ஏனென்றால்
நீ ஆட்சியாளர்களின் விருப்பத்திற்குரிய
விளையாட்டு பொருள்.
அத்துடன், நீ ஆறறிவு
மனிதன் என்பதை மறந்துவிடாதே!

உன்னை சுட்டு தள்ளினாலும்,
தூக்கில் மாட்டினாலும்,
கட்டிப்போட்டு அடித்தாலும்,
ஏன் என்று எவரும் கேட்கமாட்டார்கள்.
கேட்க சனநாயக சக்கரமும்
சட்டத்தின்  ஓட்டமும் ஒத்துவராது!
தட்டி கேட்டாலும்
தரித்திரமும்
தண்டனையும்  உன்னைத்தான் துரத்தும்!.

போபாலை திரும்பி பார்!
கும்பகோணத்தை சிந்தித்து பார்!
பரமக்குடியை கிரகித்து பார்!
சிவகாசியை அசைபோட்டு பார்!
முள்ளிவாய்க்காலை தள்ளி நின்று பார்!
மீனவர்களின் வாழ்க்கையை முழுதாக பார்!
பார்த்துக்கொண்டேயிரு!

மாற்றி
எங்காவது ஏழைக்கு நியாயம் கிடைத்ததாக,
அடக்குமுறைக்கு எதிராக,
அதிகார வர்க்கம் தண்டிக்கப்பட்டதாக,
ஊழல்வாதிகள் கழுவில் ஏற்றப்பட்டதாக
தகவலுண்டா தேடிப்பார்.

ஆனால்
"கொல்லப்பட்டபோதும்
நீ போராடிக்கொண்டிருக்கிறாய்.
அது ஒன்றுதான் உறுத்துகிறது",

மீறி
ஒருவேளை!
ஒரு நபர் விசாரணை கமிஷன் வந்தாலும்,
நவீன  சனநாயகத்தை புறந்தள்ளி
புதிதாக ஒன்றையும்
அனுமானித்து விடப்போவதில்லை.
சர்வ வல்லமையும்+ சனநாயகமும்
இதைத்தான் விதந்துரைக்கிறது!

போபர்ஸ் பீரங்கி ஊழல்
அதர்ஷ குடியிருப்பு ஊழல்
கொமன் வெல்த் விளையாட்டு ஊழல்
முத்திரை தாள் மெத்தப்பெரிய ஊழல்
ஸ்பெக்ரம் விண்வெளி ஊழல்
நிலக்கரியின் மிகப்பெரிய ஊழல்
கிலிசகேடான கழிப்பறை ஊழல்
இவைகள் நடந்ததால்
அரசாங்கம் இல்லையென்று போய்விடுமா?

உனக்காக என்றும் இலவசங்கள்
தோன்றிக்கொண்டேயிருக்கின்றன,
அதை ஊழல் அரித்து தின்றாலும்,
கிடைப்பதை
இருகரம் கூப்பி வாங்கி,
புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துவிட்டு
சிவனே என்று
அமைதியாக கிடப்பதே உன் பணி!

அதிக பட்சமாக,
அறிவிக்கப்பட்ட தேர்தல் காலத்தில்
ஆட்சியை தெரிவுசெய்ய,
உனக்கு உரிமையுண்டு!
அமைச்சரை வரவேற்க,
மேயரை துதிபாட,
பஞ்சாயத்து தலைவருக்கு
பாதுகை கட்ட,
இன்னும் உன்னை நம்பி
பொறுப்புக்கள்
நிறைய இருக்கின்றன.

அதிகாரம் செலுத்தவேண்டுமென்றால்
கட்சியின் இளைஞர் அணியில் சேர்ந்துவிடு
கட்ட பஞ்சாயத்து தேடி வரும்
உரிய காலத்தில் சொத்து சேரும்.

எதுவும் சாத்தியப்படவில்லையா
பல்லு தெரிய சிரித்துக்கொண்டே
படுத்து தூங்கு.
பேசும் உரிமையெல்லாம் உனக்கில்லை
அதுபற்றி
உனக்கு தெரியவும் வேண்டாம்!

அதையும் மீறி
உரிமையை அடைய நீ முற்பட்டால்
நீ துரோகிதானே!
தெருவுக்கு வந்து நீ போராடினால்
நீ தீவிரவாதிதானே!

இதுதான் இந்தியாவின்
நவீன சனநாயக சட்டம்!
இதைத்தான்
அறுபது ஆண்டுகளுக்கு மேலாக
கட்டி காப்பாற்ற
வயோதிப கட்சிகள் பாடுபடுகின்றன.

கூடங்குளம் பிரதேசத்தை
வேடந்தாங்கலாக
மாற்ற முயற்சிக்காதே!
விளைவு விபரீதமாகிப்போகும்.

இத்தனை ஊழல்களை கட்டிக்காத்த
ஆட்சியாளர்களுக்கு
மண்ணும் மரங்களும்
நீயும் உன் சந்ததியும்
எப்படி வாழவேண்டும் என்பது
மெத்த சரியாகவே தெரியும்.

அணுவை விதைப்பது ஏன்,
ஆட்சி நடத்துவது எப்படி
என்பதை அறிந்து நீ
என்ன செய்துவிடப்போகிறாய்.

அது
ஆட்சியாளர்களின் கவலை!
அதற்குத்தானே அவர்களை
ஐந்து, ஐந்து வருடங்களுக்கு
நீயாக
விரும்பி தெரிவு செய்திருக்கிறாய்.
அதுதானே  மக்களாட்சி!
அதுதானே சனநாயகம்!
அதுதானே அரசியல் சாசனம்!

உனது தொடர் போராட்டங்கள்
எங்களை எரிச்சலடைய வைக்கிறது.
ஏதாவது திரும்பி விடுமோ
என்ற பயம் இருந்தாலும்,
அது அவ்வளவு இலகுவானதல்ல
என்ற நம்பிக்கையை காவல்த்துறையும்,
உள்த்துறையும் தந்துகொண்டுதான் இருக்கின்றன.

சனாதிபதிக்கும்,
பிரதமருக்கும்,
வெளியுறவு மந்திரிக்கும்,
கொள்கை வகுப்பாளர்களுக்கும்,
கட்சி தலைவர்களுக்கும்,
விஞ்ஞானம் படித்தவர்களுக்கும்
தெரியாத அற்புதம்,
சாதாரணாமாக தேர்தலில் வாக்களிக்கும்
பாவப்பட்ட உனக்கு என்ன தெரிந்துவிட்டது?

ஆனாலும் மனிதா!
ஆட்சியாளர்களை  தெரிவு செய்யும் அதிகாரம்
என்றைக்கும்
உனது கைகளில்த்தான் இருக்கிறது
அடுத்த தேர்தலில் கண்களை திற,
பள பளக்கும் அட்டை கத்திகளை தூர வீசிவிட்டு
மெத்த சரியான கத்தியை தெரிவு செய்
அத்தனையும் சாத்தியமாகும்.

ஊர்க்குருவி.
நன்றி சவுக்கு இணையம்.

No comments: