Tuesday, March 12, 2013

அமெரிக்க தீர்மானம் ஈழத்தில் ஒன்றையும் மாற்றிவிடப்போவதில்லை.‏


ஐ.நா மனித உரிமைச் சபையில்  ஶ்ரீலங்கா தொடர்பில் அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள இரண்டாவது தீர்மானப் பிரேரணனையின்  நகல் வரைவை, உறுப்பு நாடுகளுக்கு அமெரிக்காவினால் 08 .03. 2013 அன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருந்தது.  இது தொடர்பிலான கருத்தறியும் உப மாநாடொன்றும் இடம்பெற்றுள்ளது.

எதிர்வரும் 2013 மார்ச் 13-14,ம் திகதிகளில் இந்த பிரேரணையின் இறுதி வரைவினை சபையின் அமர்வின்போது அமெரிக்கா உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கும் என எதிர்பார்கப்படுகின்றது.

இந்நிலையில் பிரேரணை இறுதி வரைவினை உறுதி செய்வதற்காக, உறுப்பு நாடுகளது கருத்துக்களை உள்வாங்கும் பொருட்டு ஒரு உபமாநாட்டினை அமெரிக்கா ஏற்பாடு செய்து கருத்துக்கள் பகிரப்பட்டுமிருந்தன.

இந்த உபமாநாட்டில் பிரேரணை தொடர்பில் மேற்குலக நாடுகள் அமெரிக்காவின்  நிலைப்பாட்டினை ஏற்றுக்கொண்டிருந்தன.    இலங்கையின் நேச நாடுகள் சில எதிர்ப்பினைத் வெளிக்காட்டியிருந்ததாகவும், குறிப்பாக இந்தியா இறுதிவரை எந்தக்கருத்தும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த உபமாநாட்டில் இலங்கை தரப்பும் தன்னுடைய கருத்துக்களை வழங்குவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.

கடந்தாண்டு அமெரிக்காவினால் ஐநா மன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானத்திற்கு பின்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு கூட்டாக தொழில்படுவதற்கு  இலங்கை ஒத்துழைக்கவில்லை என்றும்,  கூட்டுப்பிரேரணை ஒன்றை கொண்டு வருவதற்கும் இலங்கை ஒத்துழைக்கவில்லை எனவும்,   அமெரிக்காவுக்கான ஐ.நா மனித உரிமைச் சபைப்பிரதிநிதி Eileen C. Donahoe அவர்கள் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

இலங்கையின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிசினைக் அமெரிக்காவுக்கு அழைத்துப் பேசியும் பயன் ஏதும் எட்டவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த ஶ்ரீலங்காவுக்கான ஐ.நா மனித உரிமைச் சபைக்கான வதிவிடப்பிரதிநிதி ரவீநாத் ஆரியசிங்க,  நல்லிணக்க ஆணைக்குழுவின்

பரிந்துரைகளில்,  பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு விட்டது!! ?.

இராணுவமயமாக்கல் இல்லை!!.

உயர்பாதுகாப்பு வலயங்கள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது!?.

தமிழர்கள் அனைவரும் அவர்களது சொந்த இடங்களுக்கு திரும்பிவிட்டனர்??.

கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டன.

அதனால் அமெரிக்காவின் பிரேரணை தேவையற்றது என முழுப்பூசனிக்காயை பிடி சோற்றுள் மறைத்து ராஜபக்‌ஷ கட்டளையை நிறைவுசெய்து அமர்ந்தார். 

தீர்மானத்தில் குறிப்பிட்ட காரியங்கள் நிறைவேற்றப்படவில்லை என்கிறது அமெரிக்கா ,  ஶ்ரீலங்காவோ அனைத்தும் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக சொல்லுகிறது.  இதில் எது சரி எது பிழை என்பதுகூடத் தெரியாமல் இந்தியா கல்லுளிமங்கனாக மௌனமாக உட்கார்ந்திருக்கிறது,  தமிழர் தரப்பில் யாராவது தகுதிவாய்ந்தவர்கள் 2009 க்கு முன் இருந்ததுபோல்  வெளிப்படையாக இன்றைக்கும் இருந்திருந்தால் இதற்கான எதிர்வுகூறல் நிகழ்ந்திருக்கும் அதுவும் நிகழவில்லை.

எதிர்வரும் 2013 மார்ச் 13-14ல் திகதிகளில் பிரேரணையின் இறுதி வரைவினை அமெரிக்கா ஐநா மனித உரிமைச் சபையில் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு 21-22, ம் திகதிகளில் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

கிட்டத்தட்ட மேலே குறித்த விடயங்கள்தான் சென்ற ஆண்டும் ஐநா மன்றத்தில் நிகழ்ந்து முடிந்துமிருந்தது.

ஒருவருட காலத்தை ஓட்டியது தவிர உலக மகா வல்லரசு அமெரிக்கா ஐநா மன்றத்தில் கொண்டுவந்த தீர்மானத்தினால் எந்த முன்னேற்றத்தையும் இலங்கைக்குள் நிகழ்த்திவிட முடியவில்லை.

சிறீலங்கா ஆட்சியாளர்களைப்பொறுத்தவரையில் ஒப்பந்தங்கள்,   தீர்மானங்கள் என்பது எல்லாம் முற்று முழுதாக அரசியலாக்கப்பட்டு காலத்தை விரையமாக்கும் செயற்பாடாகவே இருந்துவருகிறது.  1950 களில் தொடங்கிய  பண்டா-செல்வா உள்நாட்டு ஒப்பந்தங்கள், அடுத்து பெருத்த எதிர்பார்ப்புடன் 1987ல் வெளிவந்த இந்திய இலங்கை ராஜீவ்-ஜெயவர்த்தன  ஒப்பந்தம் அனைத்தும் அந்தந்த காலங்களில் உண்டாகும் அரசியல் சிக்கலிலிருந்து வெளியேறும் ஒரு பொறிமுறையாகவே சிங்கள ஆட்சியாளர்களால் கையாளப்பட்டு வந்திருக்கிறது.

சண்டை,  தீவிரவாதம், பயங்கரவாதம், விடுதலைப்போர் என்பதை தவிர்த்து,  "இலங்கையில் வாழும் தமிழர்களின் எதிர்காலம் என்ன"  என்ற கேள்வி சர்வதேச அரங்குக்கு இன்று தன்னாரவாரமாக வந்து சேர்ந்திருகிறது.

இனமுரண்பாடு முற்றி சண்டை மூண்டபோது சமரசம் பேச்சுவார்த்தை  என்ற நிலைக்கு செல்லவேண்டும் என்று கூட்டாக குரல் கொடுத்துவந்த சர்வதேச அரங்கு,   சண்டை முடிந்தபோது சண்டை ஏன் தொடங்கியது,  எதற்காக சண்டையிட்டனர் தொடர்ந்து மீதமுள்ள அந்த மக்களின் வாழ்வு எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்படவேண்டும் என்பதை கொஞ்சமும் சிந்தித்ததாக தெரியவில்லை,. இல்லாத மனித உரிமைபற்றி மட்டும் பேசுகின்றனர்.

60 வருட சிங்களவனின் இனப்பகை அடக்குமுறையாக மாறி வரலாறுகாணாத "இனப்படுகொலையில்"  முடிந்திருக்கிறது.   அதுபற்றி எவரும் பேச தயாராக இல்லை.

தாய்க்கு முன்னே மகளும்,  அண்ணனுக்கு முன்னே தங்கையும், மகனுக்கு முன்னே தாயும் கதறக்கதற கற்பழிக்கப்பட்டிருக்கின்றனர். மனைவிக்கு முன்னே கணவன் வெட்டிக்கொல்லப்பட்டிருக்கிறான்.  கணவனை கைகளை கட்டி இருத்திவிட்டு மனைவியை மிருகத்தனமாக் கற்பழித்திருக்கிறது ராஜபக்‌ஷவின் இராணுவம்,  கூட்டங்கூட்டமாக குழந்தைகள் எரித்தும் குண்டடித்தும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.  குழந்தையை - கணவனை,  தாயை  -தந்தையை, கணவனை -மனைவியை  பறிகொடுத்த அனாதிகள் சித்த சுவாதீனம் பிசகி நடைப்பிணமாக திரிகின்றனர்.  இருப்பிடம் பறிக்கப்பட்டிருக்கிறது.  வயிற்றுக்கு வழியில்லை.  வாய் திறந்து பேசுவதற்கு எவருக்கும் அனுமதியில்லை,  இது மிகைப்படுத்தப்பட்ட ஒரு சொல்லாடல் அல்ல என்பது ஈழத்தில் வாழும் தமிழர்களை தவிர வேறு எவரும் புரிந்துகொண்டதாகவும் தெரியவில்லை.

உயிருடன் எஞ்சி இருப்பவர்கள் மூன்றுபேருக்கு ஒரு இராணுவம் என்ற வீதத்தில் கனரக ஆயுதங்களுடன் மனித நடமாட்டத்தை கவனித்து மர மறைவில் மலங்கழிக்க போவதையும் பின்தொடர்ந்து சிங்கள் இராணுவத்தினர் காவலுக்கு நிற்கின்றனர்.

இவற்றில் எதையாவது அமெரிக்க பிரேரணை தொட்டுக்காட்டியிருக்கிறதா என்றால்.   அதுபற்றி எந்தக்கேள்வியும் முன்வைக்கப்படவில்லை.

தமிழர் தரப்பில் ஏதாவது கேள்வி எழுப்பப்படுகிறதா என்றால்,  கிணற்றில் போட்ட கல்லாக தமிழர் அரசியல் ஏதோ ஒன்றிற்குள் மூழ்கிக்கிடக்கிறது. புலம்பெயர் அமைப்புக்கள் மாவீரர் நாள் கொண்டாட்டத்திற்கு முறுகி நின்ற நிலையுடன் காணாமல் போய்விட்டன,  சில அமைப்புக்கள் சோரம்போய்க்கொண்டிருப்பதாக செய்திகள் காற்றுவாக்கில் வருகின்றன.  தமிழ் தேசியக்கூட்டமைப்பு மலைபோல நம்பிக்கொண்டிருக்கும் இந்தியா ஐநா அரங்கில் மவுனம் சாதிப்பதுபோல பாசாங்கு காட்டி ஶ்ரீலங்காவுடன் சேர்ந்து உள்ளடி வேலையில் முனைப்பு காட்டுகிறது.

இப்படியே நிகழ்வுகள் தொடருமானால் இன்னுமொரு பத்துவருடங்களில் அந்த மண்ணில் தமிழன் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இல்லாமல் போவதுடன் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த அனைத்தும் இட்டுக்கட்டப்பட்ட ஒரு கதை என்று சொன்னாலும் மறுத்துப்பேசமுடியாமல் வாயடைக்கப்படலாம்.

இந்தியா 1987, ல் ஒப்பந்தம் கைச்சாத்திட்டிருக்கலாம்,  2002, ல் தொடங்கி நோர்வே பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகித்திருக்கலாம். 2012-2013, ல் இருந்து

ஒவ்வொரு வருடமும்  அமெரிக்கா ஐநா சபையில் தீர்மானம் கொண்டுவரலாம்.  எதிர் தீர்மானத்தை பாக்கிஸ்தான்,  மற்றும் இந்தியாவும் கொண்டுவரலாம்,

ஆனால்  சாவதும் அனுபவிப்பதும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களல்ல அத்தனைபேரும் ஈழத்தில் பிறந்த ஈழத்தமிழர்கள்.

இனப்படுகொலை நடத்தப்பட்டது,  போர்க்குற்றம் என்றனர்.   சித்திரவதை,  வன்புணர்வு கற்பழிப்புக்கள் நிகழ்த்தப்பட்டது, நாகரீகமாக மனித உரிமை மீறல் என்றனர். இருப்பிடங்களை விட்டு மக்களை விரட்ட போர்விமானங்கள் ராங்கிகளை பாவித்து விரட்டப்பட்டனர்,  அதை இடம்பெயர்வு என்றனர். பிளாஸ்திரி கூடாரங்களுக்குள் அடைத்து சுற்றிவர இராணுவ காவல் போட்டு கண்காணித்துக்கொண்டு  பாதுகாப்பான மீள்குடியேற்றம் என்றனர்.

அவை எல்லாவற்றிற்கும் பெயர்சூடியவர்கள் ஈழத்தமிழர்களல்ல இந்தியாவும் சர்வதேசமும்தான்.

இன்று தமிழகத்தின் பதின்ம வயது கல்லூரி மாணவர்களுக்கு ஈழமக்களின் உள்ளுடன் புரிந்திருக்கிறது. உள்ளக வாக்கெடுப்பு வைக்கவேண்டும் என்று அவர்கள் கேட்கின்றனர்,  நடந்தது இனப்படுகொலை அதற்கு நியாயம் கூறுங்கள் என்று கேட்கின்றனர் அதுதானே நியாயம். அவர்களை பொலீஸ் கைது செய்கிறது,   போராட்டத்தை திசை திருப்ப அரசியல் வியாதிகள் கண்கொத்திப்பாம்பாக நடமாடுகின்றனர்.

2009,ல் ஜெயலலிதா ஈழத்தமிழர்களுக்காகவென்று சொல்லி உண்ணாவிரதம் இருந்தார், பொலிஸ் தடுக்கவில்லை,  அடுத்து தெருமாவளவன் உண்ணா நோன்பு என்று படுத்திருந்தார்,  பொலீஸ் எதுவும் செய்யவில்லை,  அடுத்து கபோதி கருணாநிதி,  காற்றாட கடற்கரையில் உண்ணாவிரதம் என்று படுத்து கிடந்தார்,  மீடியாக்கள் சூழ்ந்து பொலீஸ் பாதுகாப்பு கொடுத்தது.  மாணவர்கள் போராடும்போது சட்டம் ஒழுங்கு கெட்டுவிடுகிறதென்கின்றனர்.

சர்வதேச மத்தியஸ்தர்களும்,   ஶ்ரீலங்கா  குற்றவாளியும்    இணைந்து   வழக்கு நடத்தி    எதை    தீர்மானித்து  விடப்போகின்றனர் என்பது அந்த மாணவர்களின் ஆதங்கம்,    அந்த     மாணவர்களுக்கு      இருக்கும்            நியாயமான     உணர்வு அந்தநாட்டின்        அரசியல்வாதிகளுக்கும்,                   அந்நாட்டு             அரசுக்கும் இருக்கவேண்டும்              என                  நினைப்பதும்                        நியாயமில்லை.

ஓடாத மானும் போராடாத   இனமும்       தப்பிக்கமுடியாது என்பது யதார்த்தம்.  அமெரிக்காவை,        ஐரோப்பாவை, ஐநாவை உதவிக்கு வைத்துக்கொள்ளலாம் அவர்கள்              பெற்றுத்தருவார்கள்               என்பது                 மடமை.

அமெரிக்க                 தீர்மானம்      நடைமுறைக்கு      வந்தாலும் மாற்றம் எதுவும் ஈழத்தமிழர்களுக்கு             நிகழ்ந்துவிடப்போவதில்லை.   ஏனெனில் அமெரிக்க தீர்மானத்தின்         உள்ளக கிடக்கை அனைத்தும் ஶ்ரீலங்கா தனது நலன்சார்ந்து விரித்து வைத்திருக்கும் வலை.   அந்த   வலையின்   உற்பத்தியாளன் இந்தியா.

தீர்மானிக்க வேண்டியவர்களாக என்றைக்கும் ஈழத்தமிழர்களே இருக்கின்றனர்.

ஈழதேசம் செய்திகளுக்காக.

கனகதரன்.

No comments: