Friday, May 17, 2013

மே 17,

Picture_058
இயலாமையும் வஞ்சகமும்
சூல் கொண்டு
மானுடம் தெரு மேய்ந்போது
கொடிய நாசகார பாஷாணங்களை
முள்ளிவாய்க்கால் முட்டுக்குள்
மிக மலினமாக ஒத்திகை பார்த்து,
நவீன நரபலி நடத்தப்பட்ட
அரக்கத்தனத்தின்
நான்காம் ஆண்டு.

ஒருசில
கருங்காலிகளின் வரலாற்று துரோகத்தால்,
இருபத்து ஓராம் நூற்றாண்டில்
உலகம் வியப்புடன் திரும்பிப்பார்த்த
தமிழினத்தின் ஒப்பற்ற எழுச்சி
காட்டிக்கொடுக்கப்பட்ட
கரிநாள்.

தந்தரமும் நயவஞ்சகமும் ஒன்றுசேர்ந்து
ஒரு இனத்தின்
நாற்பது ஆண்டு முதலீட்டை
காவு கொடுத்து,
மண்ணோடு மண்ணாக்கிய
வரலாற்றின் வக்கிரமான
நினைவு நாள்.

மானசீகமாக இந்த நினைவு
எனது மண்ணில்
வெப்பத்துடன் நினைவு கூரவேண்டும்.
சுற்றி நின்று வஞ்சகர்கள் விபச்சாரம் செய்வதால்
விண் நோக்கி கூவிக் குரல் எழுப்பி
இறந்துபோன உறவுகளை உச்சாடனம் செய்து
அன்னை தமிழின் பெயரால்
அந்தியட்டி செய்கிறேன்.

எனது
இறந்தகால நினைவுகள் நீண்டு விரிகின்றன.
வீரம் ஒருபுறம்,
வஞ்சகம் மறுபுறம்.
உன்னோடு உன்னோடு என்று அறம் பாடியவர்கள்
தருணம் பார்த்து கருவறுத்த
நினைவுகள் மட்டும்,
நெஞ்சுக் கூட்டுக்குள் அடைந்து கிடக்க முடியாமல்
விழுப்புண்ணின் சீழாக வெளி வருகிறது.

எனது தாய் நாடு
ஒரு சிறிய நாடுதான்.
இருந்தாலும்
தமிழ் இனம் உலகில் இருப்பதை
வரை படங்களுடன் எட்டு திக்கிலும் முரசறைந்தது.
உரிமைப் புரட்சியின் வெப்பத்தால்
ஒரு கட்டத்தில்
எனது மண் உலைக்களமானது உண்மை.

உலைக்களம் கக்கிய கனலுக்குள்
குளித்து வெளிவந்த போதுதான்
மனித மரபணுக்களின் உள்ளிருந்த
அருவருப்பான சூத்திரம் அறிய முடிந்தது.
என் தாய் மண் என்பதால்
எதையும் இட்டுக்கட்டி சொல்லவில்லை.

வாழ்ந்து பார்த்த வரையில்
ரஷ்யாவை விட,  ஐரோப்பாவை விட
ஈழநாடு
என்றென்றும் எனக்கு இனிப்பாக இருந்தது.

அன்றொருநாள்
காகம் ஒன்று எனது குழந்தையின் தலையில்
எச்சமிட்டதற்க்குக்கூட  காவலுக்கு கட்டளையிட்ட
என் தலைவன் வாழ்ந்த மண்ணில்
நரிகளும் பன்றிகளும்
தமது மேய்ச்சல் காடாக்கி இனப்பெருக்கம் செய்ய
படையெடுக்கின்றன.

முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்
அப்புவும்,  ஆச்சியும்,  அடுத்தவீட்டு பாட்டியும்
சொல்லக் கேள்விப்பட்டிருந்தேன்.
அது மிகையல்ல என்பதை
எனக்கு ஞானம் போதித்த பேரககராதி மூலம்
நிதர்சனமாகவும் உணர்ந்தது கொண்டேன்.

எனக்கு விபரம் தெரிந்த காலத்திலிருந்து,
எனது மண்ணில்
தினமும் வெடிச்சத்தம் காதை பிளக்கும்.
அதற்காக
எவரும் வீட்டுக்குள் அடைந்து கிடக்கவுமில்லை.
விபரம் புரியாமலுமில்லை.

அரசியல் செத்துப்போய்
அரை நூற்றாண்டு ஆகிவிட்டபோதும்,
மனுவியல்
உயிர்ப்புடன் எனது மண்ணில்
நிமிர்ந்து நிற்கக் கண்டேன்.
தலைமையின் பண்பு அதுவென்று
நான் மட்டும் சொல்லவில்லை.
அதற்காக
நாங்கள் பாராட்டு விழா நடத்தவுமில்லை.

குழந்தைகள் கூட வெடிச்சத்தத்திற்கு
விளக்கவுரை கூறுமளவுக்கு
விற்பன்னராக இருந்தது
மற்றவர்களுக்கு வியப்பாக இருக்கலாம்,
ஆனால்,
இப்போ மட்டும்
அது
எனக்கும் வியப்பாகத்தான் இருக்கிறது.

அப்போதெல்லாம்
துணிச்சல் கூட
எங்களிடம்,  கைமாற்று கேட்குமளவுக்கு
துணிவு
பார்க்குமிடமெல்லாம்
கும்பி கும்பியாக கிடந்தது.

நான்கு வருடங்களுக்கு முன்புவரை
எல்லோரைப் போலவும் எங்களுக்கும்
ஆயிரம் பிரச்சினைகள்.
ஆனாலும்
எங்களை அடிமைகள் என்று
எவரும் சொல்லவில்லை.

தினமும் எங்கள் மண்ணில்
மண்ணுக்காக
மரணம் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.
அதற்காக எவரும் பயப்படவும் இல்லை,
பக்கத்து வீட்டில்ப்போய்
பதுங்கிக்கொள்ளவும் இல்லை.
தூக்கத்துக்கென்று
நாங்கள் இரவை தெரிவு செய்ததுமில்லை.

இன்று நான்
வேறொரு நாட்டில் உண்டு உறங்கி
பாதுகாப்பாக இருந்தாலும்,
தனிமையாக உணருகின்றேன்.
காவற்காரரை காணவில்லை
எனது கவச குண்டலத்தின்
சத்தமும் கேட்கவில்லை.
அடிக்கடி திடுக்கிடுகிறேன்.

இரண்டாயிரத்து ஒன்பதுக்கு முன்
என்னிடம்
அசாத்திய துணிச்சல் நிறையவே இருந்தது.
அது
தலைக்கனமாக கூட இருக்கலாம்.
இன்றைக்கு துணிச்சல் இருந்தாலும்
அசாத்தியம் இருந்த இடம்
வெறிச்சோடி வெற்றிடமாக கிடக்கிறது.
அதற்கான காரணங்கள் நிறையவே இருக்கின்றன.

ஈழநாட்டை தாயகமாக கொண்டு
அங்கு பிறந்த பூர்வீக தமிழனான எனக்கு,
அங்கு
எனது மண்ணில் வாழ இடமில்லை.
என் உரிமை வஞ்சகர்களின் வாய்ப்பாடுகளால்
முற்றாக தடை செய்யப்பட்டுவிட்டது.
இப்போதெல்லாம்
வேடனும்
வெட்டரிவாள்களும் குடிகொண்டுவிட்டன.

எனக்கான வழக்குகள் நானில்லாமல்
வெவ்வேறு மன்றங்களில்
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
என் மூலம் தெரியாத பலர்
வேற்று மொழியில் எனது சுதந்திரம் பற்றி
மூச்சு விடமல் காரசாரமாக விவாதிக்கின்றனர்.
எந்த முடிவையும் எட்டிவிட மாட்டார்கள்
என்பது மட்டும்
என்னால் சொல்ல முடியும்.

அதுபற்றி பலருக்கும் உள்ளூர மகிழ்ச்சிதான்.
சிலர் கவலைப்படுவதுபோல் காட்டுகின்றனர்
உலகத்திலுள்ள அனைத்து பேரரசுகளும்,
ஆட்சியாளர்களும் உள சுத்தியோடு
எமது கையறு நிலையை,
வன் குடியகல்வை
மானசீகமாக பேச மறுக்கின்றனர்.

எங்களை
சிங்களவனிடம் தாரைவார்த்துக்கொடுத்த
பிரித்தானிய
எலிஸபெத் மகாராணியார் உட்பட.

அது ஏன் என்பது எனக்கும்
எங்களுக்கும் இதுவரை புரியவில்லை.

இரண்டு காரணங்கள் இருக்கலாம்,
வரலாற்றின்
படிப்பினையை மூலதனமாகக் கொண்டு
எனது உள் மனது
அடித்து சொல்லிக் கொண்டிருக்கிறது.
நான்
அதை மானசீகமாக ஏற்றுக்கொண்டாலும்,
வெளியில் சொல்ல முடியவில்லை,
ஏனென்றால்
கருங்காலிகளுடன்,   கிரந்தம் பேசும்
பெரியவரும் கோபித்துக் கொள்ளுவார்.

அவரது ஈகோ'வும் வித்தக காய்ச்சலும்,
என்னையும் எனது சந்ததியையும்
உலுக்கிய உலுக்கும் படுத்திய பாடும்
எங்களைத்தவிர வேறு எவரும்
அனுபவித்து புரிந்திருக்க முடியாது.
ஆனாலும் அவர் இன்றைக்கு
மோசமாக அடிபட்டு குப்புற விழுந்து போனார்
இருந்தும் புரியாத கிரந்தத்தை
இன்னும் அவர் நிறுத்திக்கொள்ளவில்லை.

அது சர்வதேச மட்டத்தில்
பலருக்கும் புரிந்த விடயங்கள்தான்.
இன்னுமொரு மூன்று வருடத்திற்கு
பொறுத்துத்தான் ஆகவேண்டும்.
அட்டம சாமத்தில்
பட்சி ஒன்று சொல்லிவிட்டு பறந்துவிட்டது.

உலகத்தில்
தாழ்வு மனப்பாண்மையை
பகிரங்கமாக சொன்னால்
பெரியவருக்கு மட்டுமல்ல
எவருக்கும் ஏற்றுக்கொள்ள முடியாமலிருக்கலாம்.
அதனால்
அதை நான் வெளிப்படையாக
சொல்ல விரும்பவில்லை.

எனது இனம்
அகதியாக புலம்பெயர்ந்திருந்தாலும,
அமெரிக்காவில்,
ஐரோப்பாவில்,
அவுஸ்திரேலியாவில்,
கனடாவில்
இன்னபிற இருபது நாடுகளில்
அமைதியாக நிம்மதியாக வாழ முடிகிறது.

ஆனால்
நிராயுதபாணியான போதும்
எனது சொந்த நாடான ஈழத்தில்
ஒரு மணி நேரம்
சுதந்திரமாக உயிர் வாழ இடமில்லை.

நம்பிக்கையுடன்
நான் அகதி என்று தமிழ்நாடு வந்தாலும்,
அதிகம் சிறையிலும்,
சிறைச்சாலை போன்ற கட்டமைப்புக்குள்ளும்
மட்டுமே வாழ முடிகிறது.
ஏனென்று புரியவில்லை.
அதுபற்றி
வெளியில் சொல்லவும் முடியவில்லை.

எனது தாய் நாட்டு மண்ணில்
நான் ஏன் வாழமுடியாது?,

எனது உறவுகள் நிறைய செத்துப்போய் விட்டன,
மீதமாக இருப்பவர்கள்
ஒன்றாக ஒரு நாட்டில் இல்லை.
கணவன் ஒரு நாட்டில்
மனைவி மற்றொரு நாட்டில்
குழந்தைகள் வேறு கண்டத்தில்.

இதை பெரியவருக்கும் சிலர் தெரியப்படுத்தினர்
அவர்
தனது குடும்பமும் பல துருவங்களாகி
தீர்க்க முடியாத சிக்கல் இருப்பதாக
கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.

பஞ்சாயத்து காரர்களை நம்பி ஏமாந்து போனோம்.
நான் எனது மண்ணில் வாழவேண்டும்.
ஏன் வாழ முடியாது?

அந்த உண்மை தெரிந்தாகும் வரை..
அறிந்தாகும் வரை..
அங்கு அமைதி நிலை
தோன்றும் என்று
அகதியாக
நாட்டுக்கு வெளியில் வசிக்கும் நான்
ஒருபோதும் நம்பவில்லை.

ஏனென்றால்
நான் ஒரு பொழுது
மவுனமாக இருந்துவிட்டாலே
அங்கு
அமைதி என்று கதை கட்டிவிடுவர்.
நான் சுதந்திரவாதியாக உணரும்வரை
நான் அமைதியாக இருக்க முடியாது.

என் தாய் மண் சுடுகாடாகி கிடக்கிறது.
எஞ்சிய உறவுகள் கழுகுகளின் கட்டுப்பாட்டில்
ஊசலாடுவதை ஊடகங்கள் சொல்லுகின்றன.
உள்ளம் எரிதனலாகி புழுக்கம் மிஞ்சிவிட்டது.
எமிஞ்சிய உறவினர்கள்
தினமும் மரணவதை படுவதை
எப்படி என்னால் பொறுத்துக்கொள்ள முடியும்?

நான் சந்திப்பவர்களும்
எனது கருத்தை ஒத்தவர்களாகவே
இருக்கின்றனர்.

எங்களுக்கு
இது ஒரு மிகப் பெரிய பின்னடைவு,
இருந்தும் காலப்போக்கில்
கட்டாயம் நிமிர்த்தப்படும்
என்றுதான் உறுதியாக நினைக்கிறேன்.

எங்கள் சுதந்திரத்திற்கான அத்திவாரமும்
திட்டங்களும்
மிக உறுதியாகவே போடப்பட்டிருந்தன.
அது எனக்கு நன்கு தெரியும்.
அந்த அனுமானங்கள் மட்டும்தான்
என்றைக்கும்
இலகுவானதாக எனக்குப் படுகிறது.
அதுபற்றி வேறு பலரும் அறிந்திருக்கக்கூடும்.

மற்றவர் வெளியில் சொல்லாவிட்டாலும்
எல்லோரும்
உள்ளூர நன்றாகவே அறிவர்.

என் தாய் மண்ணில்
நான் ஏன் வசிக்க முடியாது என்பதற்கான
மூல முகாந்திரம்
எனக்கு தெரிந்தாகவேண்டும்.
அதுவரை
நான் எதையும் எதற்காகவும்
சாதாரணமாக விட்டுவிட முடியாது.

எனது
தாய் மண்ணில் அமைதி பிறக்கும்வரை,
நான் மட்டுமல்ல
எனது சந்ததி
தூங்கிக்கிடக்குமென்று நான் நினைக்கவில்லை.

2009ல் பெருத்த இனப் படுகொலையுடன்
அனைத்தும் நிறைவுக்கு வந்தது என்றனர்.
இந்தியா
ஒரு இலட்சம் வீடு கட்டி கொடுக்க இருப்பதாக
செய்தி வந்தது
செய்தியை படித்த வழிப்போக்கன்
அடக்க முடியாமல் சிரித்தான்,
எனக்கு ஒன்றும் புரியவில்லை
ஏனென்று கேட்டேன்
இந்தியாவில் 40 கோடி மக்களுக்கு
வீடு இல்லை என்ற உண்மையை சொன்னான்.

இந்திய அரசியல் என்னை புல்லரிக்க வைத்தது.

நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டது.
அயலவர்கள்,  அடுத்த வீட்டுக்காரர்
பஞ்சாயத்து செய்து தீர்வு சொல்லுவார்கள்
என நம்பினேன்,
ஆனால் அவர்கள்
ஆயிரம் மேடை அமைத்து விசாரித்தபோதும்
எங்களில்
செத்துப்போனது எத்தனைபேர் என்பதுகூட
அவர்களால் அறிய முடியவில்லை.

எதையெல்லாமோ புலனாய்வு செய்து
தேடுவதாக சொன்னர்கள்,
ஒன்றையும் புடுங்கிவிடவில்லை.
அவர்கள்
எனது எரிந்த வீட்டினுள் கிடந்த
பூனையின்
மயிரை மட்டும் புடுங்கிக்கொண்டிருக்கின்றனர்
என்பதை அறிந்து வெறுத்துப்போனேன்.

கயிறு இறுகிக்கொண்டிருப்பதாகவே
நான் உணருகிறேன்.
காப்பாற்றும் நோக்கோடு எவரும் இல்லை.
எங்களுக்கான நேரமும் ஒன்று உண்டு.
அதனால்
அந்த மண்ணில் மீண்டும் அமைதியின்மை
ஏற்படலாம்.
அந்த அமைதியின்மை
கருக்கட்டாமல் செய்யவேண்டிய பொறுப்பு
என்னுடையதல்ல என்பதில்
என்றைக்கும் நான் உறுதியாகவே உள்ளேன்.

அமெரிக்க பூர்வீக குடிகள்போல,
அவுஸ்திரேலிய பழங்குடிகள்போல,
"பூமராங்" குடன் நான் விட்டேந்தியாக
இருந்திருந்தால்.
நாற்பது ஆண்டுகள்
என்னைப்பற்றி
எனது இனத்தின் அசைவுகள் பற்றி
எதுவும் வெளியில் தெரிந்திருக்காது.

அமெரிக்கா,
அவுஸ்திரேலியா
எப்படி வெள்ளையர்களின் சொந்த நாடு என
வரலாறு தெரியாதவர்களால்
நம்பப்படுவதுபோல,
இலங்கையும் சிங்களவனின் நாடு என்று
நம்பப்பட்டிருக்கும்.
பாரதியார்மீதும் எனக்கு வருத்தம் உண்டு.

சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்,
என்று எதுகை மோனையுடன்
சிலாகித்துவிட்டு போய்விட்டார்.
சிங்களவன் நாளை
வரலாற்று சான்றாக அதை தூக்கிப்பிடிக்க கூடும்.

1948 களில் பிரித்தானியா செய்த தவறு
அது எனக்கும் தெரியும்.
பிரித்தானியாவுக்கும் தெரியும்.
ஏன்
இந்தியாவுக்கும் தெரியும்.
முழு உலகத்துக்கும் இப்போ தெரிகிறது.

நியாயம் என்பக்கம் இருக்கும்வரை
நான் எனது இருப்பிடத்திற்காக
மண்ணுக்காக போராடிக்கொண்டே இருப்பேன்.
அது எனது அடிப்படை உரிமை.
மறுப்பவர்கள்
எனக்கும் மனிதாபிமானத்துக்கும்
எதிரியாகிக்கொண்டே இருப்பர்.

நான் மவுனமாக கிடப்பதென்றால்
மரம் தடியாக பிறந்திருக்கவேண்டும்.
அடி வாங்கிக்கொண்டு வாழுவதாக இருந்தால்
நாயாக பிறந்திருக்கவேண்டும்.
நான் அரசியல்வாதியாக இருக்கவேண்டும் என்றால்
இந்தியாவில் பிறந்திருக்கவேண்டும்.

நான் மூடத்தனமாக மண்புழுவாக
இருந்தால்
சிங்களவனுக்கு நல்லது,
ஆனால்
எனக்கு அது நல்லதல்ல.

எங்கள் உரிமையை 1950 களில்
நாங்கள் அரசியல் ரீதியாக தேடியபோது
எதையும் தரமுடியாது என்றார்கள்.
வந்தேறியான சிங்களவர்கள்.

அவன் ஏன் இப்படி பேசுகிறான்
பின்னணி எதுவாக இருக்கும் என்று
பிரமித்துப்போனேன்.
அன்றைக்கும் இந்தியாதான்
பின்னுக்கு நின்றதோ என்று சந்தேகிக்கிறேன்.

ஜனநாயக வழியில் திரண்டபோது
பின்னால் அடித்தார்கள்.
யார் தடி எடுத்து கொடுத்தது என்பதை
நான் அப்போ கவனிக்கவில்லை.

காந்திய வழியில் போராடியபோது
வெட்டினார்கள்.
வீட்டை எரித்தார்கள்.
இனக்கலவரம் என்று பெயர் சூட்டி
அரசியல் செய்தனர்.
அப்போதான் எனக்குள் ரசாயினம் சுரந்தது.

ஆத்திரப்பட்போது
கொதிக்கும் தார் பீப்பாவுக்குள்
தூக்கி போட்டார்கள்.
அம்மாவுக்கும் அக்காவுக்கும்
சூட்டுக்கோல் காய்ச்சி
நெற்றியிலும் மார்பிலும் சிங்கள ஶ்ரீ சுட்டார்கள்.
பிறப்புறுப்பில் சிங்க கொடியை நாட்டினார்கள்.

அப்பாவும் மாமாவும் திமிறியபோது
அவர்களை
துப்பாக்கியால் சுட்டு கொன்று
தெருவில் ரயர் போட்டு கொளுத்தினார்கள்.

எங்களுக்கும் கோபம் வந்தது.

சிங்களவர்கள்
இந்தியா கலிங்கத்திலிருந்து
வந்திறங்கியதாக படித்திருக்கிறேன்.
இந்தியாவுக்கான இலங்கை தூதுவர்
காரியவாசாம்,
அந்த உண்மையை ஆதாரபூர்வமாக
இந்தியாவுக்கு
உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

வந்தேறியான சிங்களவன்
முதலாளி மூர்க்கத்துடன் அடாவடி செய்கிறான்.
அப்படியானால்
நாங்கள் ஏன் எங்கள் பூர்வீக மண்ணுக்காக
துப்பாக்கி தூக்கக்கூடாது?
ஏன் சுதந்திரமாக வாழமுடியாது?

சேர்ந்து வாழும்படி
வம்படியாக வழக்குரைக்கின்றனர்.

அம்மாவின் மார்பில் குறி சுட்டான்.
அக்காவின் பிறப்புறுப்பில் கொடியேற்றினான்.
அப்பாவையும் மாமாவையும்
கொதிக்கும் தார் பீப்பாவுக்குள் தூக்கி போட்டான்.
தங்கையை கற்பழித்தான்.
அவனுடன் சேர்ந்து வாழுவது என்றால்
நான் எதுவாக கருதப்படுவேன்?

உரிமை இருக்கிறது என்பதால்
துப்பாக்கி தூக்கினோம்.
தற்காப்புக்காக
என்று சொல்ல வரவில்லை
எதிர்த்து போராடுவதற்காக
என்பது உண்மையே.

"மணலாறு"  "வெலி ஓயா" ஆக்கப்பட்டபோது
எனது கழுத்து அறுக்கப்பட்டதாக உணர்ந்தேன்.
எனது கல்வி தரப்படுத்தப்பட்டபோது
நான் முட்டளாக்கப்படுவதை உணர்ந்தேன்.
புத்தர் சிலைகளை
எனது முற்றத்தில் நாட்டியபோது
எனது கடவுளை கடலில் தேடினேன்.
வீடு பறிக்கப்பட்டபோது
அகதி ஆக்கப்பட்டதாக மனமார உணர்ந்தேன்.

மீண்டும் 2009ல் அம்மா,  அக்கா,  தங்கை
கற்பழிக்கப்பட்டபோதும்
எனது குழந்தைகளை கழுத்தறுத்து வீசிய பின்னும்,
சிங்களவனுடன் சேர்ந்து வாழும்படி
இந்தியா சொல்லுகிறது.
எனது வாழ்க்கையை தீர்மானிக்க
எனக்கு ஏன் உரிமையில்லை.

சிங்களவனைவிட
சிங்களவனுடன் சேர்ந்து வாழச்சொல்பவன்
எந்தளவுக்கு கொடியவன்.

நாங்கள் சிகிரியாவில்,
அனுரதபுரத்தில்,
மாத்தறை,  ஹம்பாந்தோட்டையில்
இடம் பிடிக்க அடாவடித்தனத்துடன்
நிலம் ஆக்கிரமிக்கவில்லை.
நாங்கள் வாழ்ந்த
வடக்கு கிழக்கு மண்ணில்
நிம்மதியாக வாழ விடுங்கள்
என்றுதான் கேட்டோம்.
இது எங்கள் மண்
இன்னும் கேட்போம்.
இனியும் கேட்போம்.

நாங்கள் தோற்றுப்போனதாகவே
காட்டப்படுகிறது.
நாங்கள் தோற்றுப்போனதாகவே
இப்போதைக்கு இருக்கட்டும்.
நாங்கள் வெல்லும்வரை
தோற்றுப்போனதாக நினைக்கப்போவதில்லை.

-ஊர்க்குருவி-

நன்றி,  சவுக்கு.

No comments: