தமிழ் தேசியக் கூட்டமைப்புடன்,  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தலமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் இணைத்துக்கொள்ள வேண்டுமெனச் சமீபகாலமாக தமிழர் தரப்பிலிருந்து பலதரப்பட்ட 
வேண்டுகோள்கள் வந்துகொண்டிருக்கின்றன.
தமிழர் தேசியம் பற்றிய தேசியத்தலைவரின் கொள்கையில் சறுக்கல் இல்லாமல் இணக்கம் ஏற்படும் பட்சத்தில் தமிழர் தேசியக்கூட்டமைப்புடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி,  இணைந்து செயலாற்றுவதில் கருத்துவேறுபாடு இருக்காது என்றும்,   தேசியத்தலைவரின் கொள்கைக்கு வேட்டு வைக்காத தமிழர் நலன் சார்ந்த எந்த வேலைத்திட்டத்திலும் உளப்பூர்வமாக பணியாற்ற முடியும் என்றும் தேசிய மக்கள் முன்னணி கருதுவதாகவும் உறுதிப்படுத்தாத செய்திகள் வெளிவந்திருந்தன.

தமிழர் விடுதலை கூட்டணி.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்.  (கஜேந்திரகுமார் பொன்னம்பலம்).

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி. (ஈபிஆர்எல்எஃப் - சுரேஷ் அணி)

தமிழீழ விடுதலை இயக்கம். (ரெலோ)

ஆகிய கட்சிகள் இணைந்து தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் தொலைநோக்கு சிந்தனையின் பேரில் 20, 2001, அக்டோபர் திங்களில், தமிழ் தேசிய கூட்டமைப்பு, என்ற கட்சி தமிழ் தேசியத்தின் மேன்மையான நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது. " அதை தமிழுலகம் நன்கறியும்"

பிற்பாடு தமிழர் விடுதலை கூட்டணி. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்,   ஆகிய இரண்டு கட்சிகளும் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்,  அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி வெளியேறிவிட்டன.  பிற்பாடு தமிழர் விடுதலை கூட்டணியின் உறுப்பினர்களான இரா சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோர் தமிழரசு கட்சி என்ற பெயரிலும், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஈபிஆர்எல்எஃப் சார்பாகவும், செல்வம் அடைக்கலநாதன் ரெலோ சார்பாகவும், இன்னும்பல உறுப்பினர்களுடன் தமிழர் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டு வந்தது.

அதேவேளை தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஆளுமையுள்ள பொதுவான தமிழர் அரசியற் கட்சியாக பதிவு செய்யவேண்டும் என்று பலர் முனைப்புடன் முயற்சித்து செயற்பட்டும் வந்திருந்தனர். அந்த முயற்சியின் பலனாக பன்னிரண்டு வருடம் கழிந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய கொள்கையளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக ரெலோ அமைப்பைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். கே சிவாஜிலிங்கம் அவர்கள் கூறியதாக செய்தியொன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவுசெய்வது தொடர்பில் ஏற்கனவே தமிழரசுக் கட்சியை சேர்ந்த இரா சம்பந்தன், மாவை சேனாதிராசா தவிர்ந்த ஏனைய கட்சிகள் உறுப்பினர் மத்தியில் இணக்கம் ஏற்பட்டிருந்தது. எனினும், தமிழரசுக்கட்சி மாத்திரம் அதில் பின்னடிப்பை தொடர்ந்து காட்டிவந்தது. இந்தநிலையில் மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப்பின் முயற்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் அடிப்படையில் நேற்று ரெலோவுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது உடன்படிக்கை ஒன்றின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவுசெய்ய கொள்கையளவில் இணக்கம் ஏற்பட்டதாக சிவாஜிலிங்கம் 10 , 05, 3013 நேற்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு,  அரசியற் கட்சியாக பதிவு செய்யப்படும் பட்சத்தில் ஏற்கெனவே கட்சியிலிருந்து விலகிச்சென்ற பல கட்சிகள் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன. இது தமிழர்களிடத்து மிக நல்ல ஆரோக்கியமான அரசியலை வென்றெடுக்க உதவும்.

இதனையடுத்து, இன்று மன்னார் ஆயருடன் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகள் நடத்தும் சந்திப்பின்போது கூட்டமைப்பின் பதிவு என்ற விடயம் பெரும்பாலும் உறுதி செய்யப்படலாம் என்றும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் சம்பந்தன் தரப்பிலிருந்து கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

வரவிருக்கும் வடக்கு மாகாணசபை தேர்தலில் உறுதியான வெற்றியை தமிழர் தரப்பு பெற்றுக்கொள்வதற்கு பிரிந்துபோன கட்சிகளின் இணைவு, ஒரு குடையின்கீழ் கருத்து வேறுபாடின்றி ஶ்ரீலங்கா ஆட்சியாளர்களிடத்து பேரம்பேசி ஒரு கருத்துக்கூடலுக்கு வருவதற்கு உறுதியான களத்தை உருவாக்க இந்த இணைவுப்புள்ளி மிகப்பெரிய பாலமாக அமையும்.இணைந்த கட்சிகளின் கூட்டமைப்பை அரசியற் கட்சியாக பதிவு செய்வது ஈழத்தமிழினத்திற்கு என்றைக்கும் ஆரோக்கியமான விடயமே.

வடக்கு மாகாணசபை தேர்தல் இந்தவருடம் 2013ம் ஆண்டு நடத்தப்படலாம் என்று ஶ்ரீலங்கா அரசாங்க மட்டத்தில் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. ஜெனீவா தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு அந்த வேலைத்திட்டத்தில் ஶ்ரீலங்கா அரசு முனைப்பு காட்டுவதாக சர்வதேசத்தின்முன் நன்மதிப்பை பெறுவதற்கு வடக்கு மாகாணத்தில் தேர்தல் ஒன்றை உடனடியாக நடத்தவேண்டிய தேவை ராஜபக்‌ஷ அரசாங்கத்துக்கு இருக்கிறது.

வடக்கு மாகாணத்தில் மாகாணசபை தேர்தல் ஒன்றை நடத்துவதால் யாருக்கு என்ன இலாபம். தேர்தலின் பின் வடக்கு மாகாண மக்கள் மத்தியில் என்னென்ன முன்னேற்றங்கள் நிகழும். மாகாணசபை தேர்தலில் வெற்றிபெற்று அதிகாரத்தை கைப்பற்றி அதிகாரசபையை அமைக்கும் தரப்புக்கு வடக்கு மாகாணத்தை நிர்வகிக்கும் பொறுப்புக்கள் கொஞ்சமேனும் வழங்கப்படுமா?  அல்லது வழமைபோல போக்குக்காக வடக்கு மாகாணசபையை நிறுவியாகிவிட்டது என்று பெயரளவில் விளம்பரப்படுத்திவிட்டு ஜனாதிபதியின் கட்டுப்பாட்டிலுள்ள இராணுவ ஆட்சி தொடருமா என்ற கேள்வி உள்ளூர் மக்களிடம் மட்டுமல்லாது சர்வதேச மட்டத்திலும் எழுந்திருக்கும் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

ஆனால் தேர்தலில் போட்டியிடும் தரப்பின் மதிநுட்பம், வல்லமை பொறுத்து வடக்கு மாகாணசபை அதிகாரத்தை நிர்வகிக்கும் பொறுப்பு தீர்மானிக்கப்படும் என்பதை வருங்காலங்களில் காணமுடியும். தடைக்கல்லையும் படிக்கல்லாக மாற்றும் வல்லமை கொண்ட தலைமையிடமிருந்து வந்தவர்கள் நாங்கள் என்பதை நிரூபிக்கவேண்டிய பொறுப்பும் நமக்கு இருக்கிறது.

வஞ்சக இந்தியாவின்,   திருப்திக்காக அமெரிக்கா ஜெனீவாவில் கொண்டுவந்த தீர்மானத்தின் நிமித்தம் வடக்கு மாகாணத்தில் தேர்தல் ஒன்று நடத்தப்படவில்லையென்றால் அடுத்துவரும் ஜெனீவா அமர்பில் ஶ்ரீலங்கா ஜனாதிபதி ராஜபக்‌ஷ,  மீது பரவலாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் பற்றி இந்தியா எந்தச் சமாதானத்தையும் சர்வதேச அரங்கில் முன் வைக்கமுடியாது.

அடுத்து தமிழக அரசியற் கட்சிகளின் நெருக்குவாரம், மற்றும் பொது / மாணவ அமைப்புக்களின் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு கிளர்ச்சி, இவைகளிலிருந்து தப்பிக்க முடியாத நிலை பலவீனப்பட்டுப்போய் கிடக்கும் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு பெருத்த இடர்பாடாக அமைந்துவிடும் அபாயம் இருக்கிறது.   இந்த நிலை தோன்றும் பட்ஷத்தில் அது சர்வதேச மன்றம்வரை விவாதத்துக்குள்ளாகும் சந்தற்பங்கள் உண்டு.

தமிழ்நாட்டில் தோன்றியிருக்கும் மாணவர்களின் போராட்டச்சூழல் மீண்டும் பற்றிப்படருமானால் ஒரு கட்டத்தில் ராஜபக்‌ஷவின் அதிகாரத்தை அடியோடு வீழ்த்தக்கூடிய பொறிநிலை சர்வதேச அரங்கிலிருந்து உருவாக்கலாம். ராஜபக்‌ஷ வீழ்த்தப்பட்டால் அடுத்து ராஜபக்‌ஷவால் காட்டிக்கொடுக்கப்படுவது இந்தியாவாகத்தான் இருக்கமுடியும்.

அப்படி ஒரு நிலை தோன்ற ராஜபக்‌ஷவோ, இந்தியாவோ ஒருபோதும் விருப்ப மாடார்கள். எனவே வடக்கில் ஒரு மாற்றம் நிகழ்த்திவிட்டதாக சகல தரப்புக்கும் காட்டிக்கொள்ளுவதற்கு விரைவில் தேர்தல் ஒன்று வரும் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.  எல்லோரும் சேர்ந்து இழுத்த தேரை கரை சேர்க்கவேண்டிய பொறுப்பு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கைகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் தேர்தல் நடைபெறுவதற்கு முன்,   தேர்தலின்பின் நிகழவிருப்பது என்ன என்பதை ஈழ தமிழர்களின் மேய்ப்பர்களான அரசியற்கட்சிகள் நன்கு வரையறுத்துக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றனர்.

1987 ல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர்,   வடக்கு கிழக்கு மாகாணசபை ஒன்று உருவாக்கப்பட்டு வரதராஜப்பெருமாள் முதலமைச்சராக அன்றைய யூஎன்பி,  அரசால் நியமிக்கப்பட்டிருந்தார், ஆனால் வரதராஜப்பெருமாள் பதவியை விட்டு விலகி இந்தியா செல்லும்வரை எந்த ஒரு அதிகாரங்களையும் ஶ்ரீலங்காவின் மத்திய அரசாங்கம் வடக்கு கிழக்கு மாகாணசபைக்கு வழங்கியிருக்கவில்லை.

2009, க்குப்பின் கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக இருந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன். அங்கு வாழும் மக்களுக்கான சமூக மேம்பாட்டுக்கு குறிப்பிடும்படியான அதிகாரம் எதையும் ஶ்ரீலங்கா அரசாங்கத்திடமிருந்து பெற்றிருக்கவில்லை. எனவே வரவிருக்கும் வடக்கு மாகாணசபைக்கான அதிகார அலகு என்ன என்பதை சர்வதேச உதவியுடன் தேர்தலில் போட்டியிடுபவர்கள் ராஜபக்‌ஷ அரசிடம் கேட்டறிந்து மக்களுக்கு தெரிவிக்கவேண்டிய தலையாய கடமை இருக்கிறது.

அதற்கான மிடுக்கு, தகுதி தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் சம்பந்தன் ஐயாவிடம் இருப்பதற்கான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை. வடக்கு கிழக்கு பிரதேசங்கள் தமிழர்களுக்கான பிறப்புரிமை கொண்ட சொந்த நிலம் என்று சொல்லமுடியாதவராகவே சம்பந்தன் இருந்து வருகிறார். அப்பேற்பட்ட தலைமையை வைத்துக்கொண்டு கிடைக்கும் ஒரு சந்தற்பத்தை கோட்டைவிடலாகாது.

2009 க்குபின்னர் வந்த நான்கு ஆண்டுகளாக இன்றுவரை தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் அவர்கள் இந்தியாவின் சோனியா அரசவையின் ஒரு எம்பியாகவும், ராஜபக்‌ஷவின் நட்பு நிறைந்த இந்திய தூதுவராகவும் செயற்பட்டு வருகிறார்.   ஈழ மக்கள் வாழ்வு சம்பந்தமாக தமிழர்தரப்பிலிருந்து யார் எவராவது அவரிடம் கேள்வி எதுவும் கேட்க முடியவில்லை. அப்படி கேட்டாலும் அவர்கள்மீது எரிந்து விழுவதும் குதற்கமான பதிலளிப்பதுமே அவரது செயற்பாடாக இருந்து வருகிறது இதை தேசிய கூட்டமைப்பின் பல எம்பீக்கள் கசப்புடன் புலம்பி தீர்த்த சம்பவங்களும் உண்டு.

இருந்தும் தமிழர் தேசியக்கூட்டமைப்பின் சுமந்திரன்,   தவிர மற்றய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சம்பந்தர் அவர்களின் வழி நடத்தலை பின்பற்றி செயற்படுபவர்களாக இருக்கவில்லை. ஶ்ரீதரன் எம்பி, சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்பி, செல்வம் அடைக்கலநாதன் எம்பி, சிவசக்தி ஆனந்தன் எம்பி ஆகியோர் சம்பந்தரின் ஆணைக்கு பொறுத்திருக்காமல் தன்னிச்சையாக மக்கள் மன்றத்தில் கலந்து, மக்களுக்கு எதிரான அரச செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்தும் போராட்டங்கள் நடத்தியும் மக்கள் சேவையாற்றி வந்திருக்கின்றனர். குறிப்பாக கிளிநொச்சியில் ஶ்ரீதரனும் வன்னிப்பகுதியில் சிவசக்தி ஆனந்தனும் அவ்வப்போது சுரேஷ் பிரேமச்சந்திரனும் செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் ஆக்கபூர்வமாக குரல் கொடுத்தே வந்திருக்கின்றனர்.  இதன் காரணமாக அவர்கள் அரசாங்கத்தின் அச்சுறுத்தலையும் நெருக்கடிகளையும் சந்தித்தும் வருகின்றனர்.

ஆனால் பாராளுமன்ற அங்கத்துவம் இல்லாவிட்டாலும் யாழ்ப்பாணத்திலும் சரி கிளிநொச்சி, வன்னி போன்ற இடங்களில் நடைபெறும் அரச அத்துமீறல்கள் மற்றும் புலம்பெயர் நாடுகளின் கருத்தரங்குகள், ஜெனீவாவின் வெளிக்கள அமர்வுகள் அனைத்திலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது தேசியத்துக்கான பங்களிப்பை முடிந்தளவு செய்வதுடன் தேசியத்தலைவர் வகுத்த பாதையிலிருந்து வழுவாமல் தேசியம், சுயநிர்ணயம், தன்னாட்சி போன்ற கோட்பாடுகளுடன் அரச அத்துமீறல்களை முழு மூச்சுடன் எதிர்த்து வந்திருக்கிறது.   இதனால் பல இடர்பாடுகளையும் அக் கட்சியும் கட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சந்தித்தும் வருகின்றனர். அதன் எதிர்வினைதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரை சம்பந்தனின் கருத்தை புறந்தள்ளிவிட்டு மக்களுக்காக துணிவுடன் செயலாற்ற வழி கோலியிருக்கிறது என்றே எண்ணத்தொன்றுகிறது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசியத்தலைமை மீதுகொண்ட பற்று,  தமிழ் தேசியத்தின் மீதானபக்தி,  வெளிக்கள அரசியல் வேலைத்திட்டங்களில் பல இடங்களில் வெளிப்படுவதை காணமுடிகிறது. அந்த உந்துதலின் எதிர்வினை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்களை தட்டி உற்சாகப்படுத்தி உந்திவிட்டிருக்கிறது என்றால் அது மிகைப்படுத்திய சொல்லாடலாக இருக்க முடியாது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஆகிய இரண்டு கட்சிகளும்  தமிழர்களுக்கான நம்பகத்தன்மை வாய்ந்த உளப்பூர்வமான அரசியற் கட்சி என்றே ஈழ தமிழினம் மான்சீகமாக நம்புகிறது . இருந்தும் தேசியக்கூட்மைப்பிலிருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வெளியேற்றத்தின்பின் தமிழர்களுக்கான அரசியற்பலம் கூடியிருக்கிறதேயன்றி குறைந்து போயிருப்பதாக கருத முடியாது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் விட்டுக்கொடுக்காத ஒளிவு மறைவு இல்லாத அணுகுமுறை மக்களை கவர்ந்திருப்பதில் ஐயமில்லை.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி,   கட்சியின் பிறப்பு ஈழத்தமிழர்களுக்கு ஓரளவு அரசியல் பொருளாதார ரீதியாக ஆரோக்கியமான அரசியலுக்கு வழி தேடியிருக்கிறதென்றே கொள்ள முடியும்.  இந்த நிலையில் மீண்டும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, சம்பந்தன் ஐயாவின் மந்தகதி ஆளுமைக்குள் மூழ்கடிக்கப்படுமானால் ஒன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தமிழ் தேசியத்துக்கான செயல்த்திறன் மழுங்கடிக்கப்படலாம்,    அல்லது மீண்டும் பிளவுபட்டு வெளியேற்றவேண்டிய நிர்ப்பந்தத்தை தோற்றுவிக்கலாம், எனவே தேர்தல்கால உடன்படிக்கையொன்றுடன்  உளப்பூர்வமாக கலந்துரையாடி தொகுதி பங்கீட்டு அடிப்படையில் இணைந்து செயலாற்றினால் எதிராளிகளை வென்று ஆரோக்கியமான அரசியல் தமிழர்களுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி இல்லாத பட்ஷத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையின் சிந்தனையில் தொலை நோக்குடன் கூடிய அடிப்படை மாற்றம் நிகழ்ந்தாக வேண்டும். மாற்றம் ஒன்று புதிய சிந்தனைக்கும் வேலைத்திட்டத்துக்கும் வழிவகுக்கும்.

தேசிய கூட்டமைப்பின் தலைமையின் சிந்தனையில்  மாற்றம் ஏற்ப்படவேண்டும் என்பதற்கு சான்றாக மூன்று நான்கு வருடங்களாக சம்பந்தன் ஐயா மீது சுமத்தப்படும் கட்டுக்கடங்காத விமர்சனங்களை ஊடகங்கள், பேச்சாளர்கள்,  தமிழ் அமைப்புக்கள், புத்திஜீவிகள், தனிமனிதர்கள் என்று சகட்டுமேனிக்கு வெறுப்புடன் வெளியிட்டு வருகின்றன. சம்பந்தன் ஐயா பல சந்தற்பங்களில் வெளியிட்டுவரும்  தேசியத்துக்கு விரோதமான கருத்துக்களே அவர்மீது மக்களுக்கு நம்பிக்கையீனத்தை தொடற்சியாக தோற்றுவித்து வருகிறது. பல ஊடகங்கள் சம்பந்தன் ஐயா அவர்களை விமர்சித்து  தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டிருப்பதை இங்கு ஞாபகப்படுத்திக்கொள்ள முடியும்.

"எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்" சம்பந்தன் ஐயா தலைமை பொறுப்பை ஆரோக்கியமான சிந்தனையுடைய அடுத்த கட்ட உறுப்பினரிடம் கொடுத்து வழிவிடுவாராக இருந்தால்  இன்னும் ஆரோக்கியமான அரசியல்  ஈழ மக்களுக்கு கிடைக்கும். அத்துடன்  தமிழினத்துக்கும்,   தமிழர் தேசிய கூட்டமைப்புக்கும் புத்துணர்வு ஏற்படும். சமயோசிதமான புதிய சிந்தனை பிறந்து தமிழர்களுக்கான அரசியலில் பிரகாசமான அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்வு நம்பிக்கயளிப்பதாக இருக்கும்.

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி

இல்லார்கண் இல்லது அரண்.

குறள்: பொருட்பால்

கோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூட உள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது.

ஈழதேசம் செய்திகளுக்காக,

கனகதரன்.