Monday, October 7, 2013

விக்கினேஸ்வரன் வடக்கு மாகாணசபை உறுப்பினருக்கான பதவிக்கு சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். (இரண்டாவது கோணல்)‏



இன்று,  07/10/2013 திங்கள் காலை 09 மணிக்கு ஶ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ முன்னிலையில் ஒரு வளர்ப்பு பிராணியின் பௌவியத்துடன் வடக்கு மாகாண (முதலமைச்சராக)  உறுப்பினராக  திரு விக்னேஸ்வரன் வாக்கிய பஞ்சாங்கப்படி காலை 08 மணியிலிருந்து 09 1/2 வரையிலான எமகண்டத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.  பதவி ஏற்பின்போது தமிழ் தரப்பாக ஒட்டுக்குழு தளபதிகள் டக்ளஸ் தேவானந்தா, புளொட் சித்தார்த்தன், முன்னிலை வகித்தனர்.  பின் வரிசையில் சிங்கக்கொடி சம்பந்தன், தமிழ் காங்கிரஸுலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட அப்பாத்துரை வினாயகமூர்த்தி ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.
 
விக்கினேஸ்வரனின்  குடும்ப உறவினர்களான வாசுதேவ நாணயக்கார மைத்திரிபால சிறிசேன,   ஆகியோர் கைலாகு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்

 சத்தியப்பிரமாணத்தின்போது வடக்கு மாகாணத்து முதலமைச்சருக்கான சத்தியப்பிரமாணமாக விக்னேஸ்வரன் எந்த இடத்திலும் கடுகளவும் காட்டிக்கொள்ளவில்லை.

மாறாக ஶ்ரீலங்கா ஜனாதிபதியை திருப்திப்படுத்தும் வகையில்  ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் அமைப்புக்கும் சட்டத்துக்கும் இணங்க இலங்கை குடியரசுக்கு விசுவாசமுள்ளவனாக இருப்பேன் என்றும்,  எனது திறமைக்கு இயன்றவரை இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பை உறுதியாக போற்றி காப்பேன் என்றும்,  பயபக்தியுடன் வெளிப்படுத்தி உறுதி செய்கிறேன் என்று தனதும்,  தனது தலைவர் சம்பந்தனாரின்  உள்ளுணர்வின் உண்மையை வெளிப்படுத்தி  ராஜபக்‌ஷவுக்கு உண்மையாக இருப்பேன் என்பதை மட்டும் முன்னிறுத்தி சத்தியப்பிரமாணம் செய்திருந்தார்.

வடக்கு மாகாண சபைக்கு விசுவாசமுள்ளவனாக இருப்பேன் என்றோ,  தமிழ் மக்களின் வாழ்வை வளம்படுத்த பாடுபடுவேன் என்றோ, குறைந்த பட்ஷம்  தமிழ் மக்களுக்கான சேவையை  வடக்கு மாகாண சபை மூலம் முதலமைச்சராக இருந்து இயன்றவரை பணியாற்றுவேன் என்றோ வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக பொறுப்பேற்கின்றேன் என்றோ விக்னேஸ்வரன் உச்சரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

வடக்கு மாகாண சபைக்கான உறுப்பினருக்கான பதவிக்கான கடமைகளையும் வழிகளையும் ஶ்ரீலங்கா ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் அமைப்புக்கும் சட்டத்துக்கும் இணங்க இலங்கை குடியரசுக்கு விசுவாசமுள்ளவனாக இருப்பேன் என்றும்,  எனது திறமைக்கு இயன்றவரை இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பை உறுதியாக போற்றி காப்பேன் என்றும் பயபக்தியுடன் வெளிப்படுத்தி உறுதி செய்கிறேன் என்று சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டிருந்தது.

வடக்கு மாகாணத்துக்கான தேர்தலில் வாக்கு கேட்டபோது மாவிரர்களையும்,  போராட்டத்தையும் சுய நிர்ணய உரிமை பற்றி பேசிய விக்னேஸ்வரன்.  இன்று துரோக கூட்டங்களான டக்ளஸ், சித்தாத்தன் ஆகியோர் முன்னிலையில் வடக்கு மாகாண உறுப்பினருக்கான பதவிக்காக என்று பம்மியது இரண்டாவது கோணலாக வரலாற்றில் பதிவு செய்யப்படுகிறது.

ராஜபக்‌ஷவுக்கு தமது எதிர்வினையை துணிவுடன் தேர்தலில் காட்டிய மக்கள் விக்கி சம்பந்தனாரின் திருகுதாளங்களுக்கு அடுத்து வரும்காலங்களில் சரியான பதிலடியை கொடுப்பார்கள் என்பதில் எவரும் ஐயப்படத்தேவையில்லை.


ஊர்க்குருவி.

No comments: