Friday, March 7, 2014

ஜெனீவாவில் இனப்படுகொலையாளி ராஜபக்‌ஷவுக்கு வழங்கப்படும் தொடர் வாய்தாவுக்கு எதிராக ஏன் அதிகார மையங்களின் முன் போராட்டம் நடத்தக்கூடாது?‏

dcp5258
கூடக்குறைய 1980, களிலிருந்து 2009,  மே மாதம் வரை ஈழத்தமிழினத்தின் வாழ்வியல்,   மற்றும் கலாச்சாரம் மொழி, பாதுகாப்பு அரசியல்,   உள்ளிட்ட  எல்லாமாக “தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”  என்ற கோட்பாட்டுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மக்களோடு மக்களாக தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் தலைமையில் முப்பது வருடங்களுக்கு மேலாக அனைத்து வகையிலும் போராடி வந்தது.
ஐநா,  முதற்கொண்டு (சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்), மற்றும் சர்வதேச நாடுகள்,  பல்வேறு நாடுகளின் தூதுவர்கள் அனைவரும் இன்றுபோலவே அன்றைக்கும் ஈழதேச அரசியல், மற்றும் பாதுகாப்பு,   பொருளாதாரம் இன்னபிற அனைத்தையும் உறுதிப்படுத்துவதற்கான  வாக்குறுதிகளையும் வரைவுகளையும் ஆலோசனைகளையும் தொடர்ந்து வழங்கி வந்தனர்.
(நேரடி குளப்பவாதிகளாக அள்ளி வைப்பவர்களாக இந்தியாவும்,  இந்திய தமிழகத்து அரசியல்வாதிகளும் தொடர்ந்து இருந்து வந்தனர், இருந்தும் வருகின்றனர்.)
ஆலோசனைகள் திட்டங்கள் அனைத்தும் அன்றைக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும்,  ஏற்றுக்கொள்ளப்படாததும் எவ்வகையில் உணரப்பட்டதோ அதே மனநிலையில்த்தான்  ஈழதாயகம்,   மற்றும் புலம்பெயர் மக்கள்,  மற்றும் தமிழகத்து தமிழ் மக்கள் ஆகியோரின் மனநிலை இன்றைக்கும் இருந்து வருகிறது,
வித்தியாசம் என்னவென்றால் அன்றைக்கு உறுதியுடன் பேச்சுவார்த்தகளில் பங்குபற்றியவர்கள் என்று பார்த்தால்,  நோக்கத்துடன் இன விடுதலைக்காக திடமாக செயற்பட்ட  விடுதலைப்புலிகள் நம்பிக்கையுடன் இருந்து வந்தனர்,  இன்றைக்கு பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றுபவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழ் சந்தற்பவாத  அரசியல் செய்யும் சம்பந்தர்,  சம்பந்தரின் வாரிசுகளாக களம் இறக்கப்பட்டவர்களான நியமன எம்பி சுமந்திரன், வடக்கு மாகண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஆகியோர் இருந்து வருகின்றனர்,
குறிப்பிட்ட இந்த மூவரும் விடுதலைப்புலிகள் இயக்கத்தால் அங்குரார்ப்பணம் செய்து உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்ற போர்வைக்குள் இருந்துகொண்டு விரும்பத்தகாத செயலாக்கத்தை செயற்படுத்தி வருவதாக மக்கள் வருத்தத்துடன் வெறுப்பை தெரிவித்து வருகின்றனர்.
மக்களின் மனநிலை எப்படியோ,   அப்படியே அமைப்பு ரீதியாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தலைமையிலான தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி,  தமிழ் தேசியக்கூடமைப்பின்  (ரெலோ)  அங்கத்தவரான சிவாஜிலிங்கம். வடக்கு மாகாணசபையில் விருப்பு வாக்குக்களை அதிகம் பெற்ற உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் சம்பந்தர், சுமந்திரன், விக்கினேஸ்வரன் ஆகியோரின் நடவடிக்கைகளை மிக வன்மையாக கண்டித்து நேரடியாக எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்தும் வருகின்றனர்.
இருந்தும் சம்பந்தன் இந்தியாவின் கைப்பொம்மையாக இருந்து வருவதால் அவரே ஈழத்தின் அரசியலில் முன்னிலைப்படுத்தப்பட்டவராக இந்தியாவால் உருவகப்படுத்தப்பட்டிருக்கிறார், ஒருவகையில் ஶ்ரீலங்கா ஜனாதிபதியும் ஶ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவும் தமிழர் தரப்பு அரசியற் தலைமைத்துவம் சம்பந்தராகவே இருக்க அனைத்து நகர்வுகளையும் செயற்படுத்தி வருகின்றனர்.
வழமைபோல வருடா வருடம் வருடாந்த திருவிழாபோல் நடைபெற்று வரும் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 25 வது கூட்டத்தொடர் தொடங்கிவிட்டது.
அரசியல் காரணங்களுக்காக பிரித்தானியப்பிரதமர் உணர்ச்சி வசப்பட்டு  பாராளுமன்றத்தில் கூறியவை அனைத்தும் அடிபட்டுப்போய்,  எதிர்பார்த்தபடியே ஈழப்பிரச்சினை  தொடர்ச்சியான அடுத்த வாய்தாவுக்கான அனைத்து ஆரம்பவேலைகளும் ஜெனீவா அரங்கத்தில் கிறிஸ் தடவி பூட்டுவதற்கு தயார்ப்படுத்தப்பட்டுவிட்டன.dcp8858
பயந்தவர்போல (செயற்கையாக) பதுங்குவதுபோல ராஜபக்‌ஷ தரப்பும்,  நரித்தனமான நாடகங்களுடன் இந்தியத் தரப்பும். கடுமையான நடவடிக்கைக்கு தயாரனவர்கள்போல அமெரிக்க இங்கிலாந்து தரப்பும் அதன் பின்னால் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவும்  ராஜபக்‌ஷவுக்கான அடுத்த வாய்தாவுக்கான அனைத்து திட்டமிடல்களையும் முடித்த நிலையில் வாய்தாவுக்கான கட்டளையை பிறப்பிக்க  காத்துக்கொண்டிருக்கின்றனர்.
சம்பந்தர் அனுப்பி வைத்த சுமந்திரன் கோட் சூட் அணிந்து அனைத்து காட்சிகளையும் அங்கீகரித்த நிலையில் தனது கபடத் திட்டத்தை நிறைவு செய்திருக்கிறார்.
மக்கள் எழுச்சி ஒன்று மட்டுமே எதையும் மாற்றி எழுதும் வல்லமை கொண்டது.
2009 ல் போரை நிறுத்தும்படியும்,  உரிமைக்கான  நீதி கேட்டும் சர்வதேச அனைத்து நகரங்களிலும் மக்கள் போராட்டங்கள் கடலலையென திரண்டது.  உறை பனிக் குளிரையும் பொருட்படுத்தாது உண்ணாவிரதங்கள் சர்வதேசத்தை திரும்பிப்பார்க்க வைத்தது, தமிழ்நாடு குமுறி கொந்தளித்து போராடியது,  ஈற்றில் பல உயிர்கள் தீக்குளித்து தமது ஆற்றாமையை வெளிப்படுத்தியது.dcp253
சென்ற ஆண்டுகூட  இந்திய அராஜக ஆட்சியாளர்களையும் கூட்டாளிகளையும்  தமிழகத்து மாணவர்களின் உறுதியான போராட்டங்கள்  அடிபணிய வைத்து ஆட்டங்காணச் செய்தன.
ஜெனீவாவில் எதிர்பார்த்திருந்த தமிழர்களுக்கான நீதி படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக போராடுவதற்கான அடிப்படை அனுகூல உரிமைகள் தமிழர்களான எமக்கு நிறையவே இருக்கின்றன,
இரண்டு விடயங்களை மட்டும் எடுத்துக்கொண்டாலே அனைத்து அதிகார மையங்களையும் அசைக்கக்கூடிய வகையில் வீதியில் இறங்கி போராடுவதற்கான அனைத்து உரிமைகளும் இருக்கின்றன.
சென்ற ஆண்டு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பொதுநலவாய அமைப்புக்களின் கூட்டத்தில் பங்குபற்றவேண்டாம் என கோரிக்கை வைத்து பிரித்தானிய தமிழ் அமைப்புக்கள் போராட்டம் நடத்தின,  அந்த போராட்டத்தை மதித்து டேவிட் கமரூன் சில வாக்குறுதிகளை தமிழ் அமைப்புக்களுக்கு வழங்கியிருந்தார்.
தான் மாநாட்டுக்கு சென்று ஈழ தமிழர்களின் வேதனை செறிந்த கோரிக்கைகளை ராஜபக்‌ஷ்விடம் கேள்வியாக எழுப்புவேன் என்றும் நடந்து முடிந்த மனித படுகொலைகளுக்கான நியாயத்தை உறுதி செய்வேன் என்றும் வாக்குறுதி அளித்து இலங்கைக்கு பயணம் செய்தார்,
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் அவர்களின் இலங்கை பயணத்தின் பலன் ஈழமக்களுக்கு இனிப்பான செய்தியாக  மூன்று மாத கெடு என்ற வாக்கியம்  ஒன்று மட்டும் இன்றைக்கும் பசுமையாக இருக்கிறது.
அனால் டேவிட் கமரூம் விதித்த கெடு எதுவும் ஐநா அரங்கத்தில் செயற்படுத்தப்படவில்லை,  மாறாக ஶ்ரீலங்காவின் அதே பழைய பல்லவியை டேவிட் கமரூன் வழிமொழிந்திருப்பது போலவே நடவடிக்கைகள் திசை மாற்றப்பட்டிருக்கின்றன.
dcp24165மனித உரிமை ஆணையாளர் நவிப்பிள்ளை அம்மையார் பெருத்த எதிர்பார்ப்பை நிறைவு செய்வதுபோன்ற பிரசங்கங்களுடன் இலங்கை பயணம் எதிர்பார்க்கப்பட்டது,  இன்றைக்கு இலங்கை /இந்தியா நினைத்தவாறே அனைத்தும் திசைமாற்றப்பட்டிருப்பதாக அஞ்சுமளவுக்கு ஐநா கூட்டத்தொடர் திருப்பப்பட்டிருக்கிறது.
ஏன் வருடா வருடம் தீர்மானம் என்ற பெயரில் பெருத்த இனப்படுகொலையாளிக்கு  வாய்தா வழங்கப்படுகிறது?
நிறைவேற்ற முடியாவிட்டால் ஏன் தீர்மானத்தை இந்தப்பெரிய வல்லரசுகள் வரைவாக வெளிவிடுகின்றன?
அபிவிருத்தி என்ற பெயரில் இன்னும் ஒன்றை மறைத்து ஏன் முட்டாக்கு போடவேண்டும்?
அபிவிருத்திக்காக கற்பழிப்புக்களையும் படுகொலைகளையும் சமன்செய்து கழித்துவிட முடியுமா,?
அபிவிருத்தியை அபிவிருத்தியாகவும் படுகொலைகளை படுகொலைகளாகவும் பிரித்துப்பார்க்க ஏன் முடியவில்லை?
கண்முன்னே நடைபெற்ற முற்று முழுதான மனித உரிமை மீறல்,  நெறிமுறை மீறிய விஷ ஆயுதப்பாவனை,  போர்க்குற்றம்,  சரணடைந்த பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் பலாத்காரம் வல்லுறவு அதன்பின்னரான படுகொலைகள்,  சரணடைந்த போராளிகள் மீது நடத்தப்பட்ட மனித நேயமற்ற படுகொலைகள்,  இவை அனைத்தும் சாட்சி ஆவணங்களாக குவிக்கப்பட்டிருக்கிறது.  “காணாமல்ப் போனவர்கள் போக”,  கொல்லப்பட்டவர்களின் உறவினர்களின் முறைப்பாடுகள் உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது,
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனும், மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் அவர்களும் சென்ற வருடம் இலங்கைக்கு நேரிடையாக சென்று பார்வையிட்டு ஈழ மக்களுக்கு நீதி வேண்டும் என்ற கருத்துப்பட தத்தமது எதிர்ப்புக்களை அறிக்கைகளாகவும் கண்டனங்களாகவும் பதிவு செய்திருக்கின்றனர்.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில் ஜெனீவா மன்றத்தில் திட்டமிட்டு ஒரு கொடுங்கோலனுக்கு அனுசரணை அளித்து வாய்தா வழங்குவதற்கு எதிராக நாம் போராட தள்ளப்பட்டிருக்கிறோம்.
புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்கள் காலதாமதமின்றி இந்த போராட்டத்தை தொடக்கி வைப்பார்களாயின் 2009 ம் ஆண்டு நிலையை சர்வதேசத்து அனைத்து நகரங்களில் இருக்கும் தூதரகங்களுக்கு முன் கொண்டுவர முடியும்.dcp28585
வாய்தாவுக்கு வழி விடாதே என்று அமெரிக்காவிடமும், வாக்குறுதி என்னவாச்சு என்று இங்கிலாந்திடமும்,  மனித உரிமை என்னாச்சு என்று ஐநா மனித உரிமை ஆணையாளரிடமும்  கேள்வி கேட்க அனைத்து தகுதியும் நமக்குண்டு
தமிழகத்து மாணவர்களும் போராட்டத்திற்கான ஆயுத்தங்களில் இருப்பதாக மகிழ்ச்சியான தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன அனைத்தும் ஒன்று திரளும் பட்சத்தில் இனப்படுகொலையாளி ராஜபக்‌ஷவுக்கான வாய்தா மறு பரிசீலனை செய்யப்படலாம்.
நாங்கள் போராடாமல் நல்லவர்களானாலும் வேறு நாடுகள் எமக்காக போராடா,
ஈழதேசம் செய்திகளுக்காக
கனகதரன்.

No comments: