Thursday, December 25, 2014

சனாதிபதி தேர்தலை புறக்கணிக்கவேண்டாம் என்று கூறும் உ.த.பே தலைவர் இமானுவல் அடிகளார் அதற்கான விளக்கத்தை தெளிவுபடுத்தவேண்டும்.

எதிர்வரும் 2015 ஜனவரி மாதம் 08 நாள் இலங்கையின் 07 வது சனாதிபதி தெரிவுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் பல வேட்பாளர்கள் போட்டி என்று அறிவித்தாலும் சிங்களவர்கள் இரண்டுபேருக்கான நேரடி போட்டியே முன்னிலையில் நிற்கிறது. இந்த இருவரில் ஒருவர்தான் ஜனாதிபதியாக வருவார் என்பதும் அனைத்து வேட்பாளர்களும் மக்களும் நாடும் உலகமும் அறியும்..
ஒருவர் நடப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, அடுத்தவர் அடிப்படையில் அதே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராக பணியாற்றி, 2014 நவம்பர் 21 வரை மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்து மைத்திரிபால சிறிசேன.
இலங்கையைப் பொறுத்தவரை இரண்டு பெரிய கட்சிகள், ஒன்று ஐக்கிய தேசிய கட்சி, மற்றொன்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி. இந்த இரண்டுகட்சிகளும்தான் மாறி மாறி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தமிழர்களை வதம் செய்து அழித்து வருகின்றன, 1977ல் இருந்து 17 வருடங்கள் 1994வரை ஐக்கிய தேசிய கட்சியும்.(ஜேஆர் ஜெயவர்த்தன/ பிரேமதாச) அதன்பின் நவம்பர் 12,1994 ல் இருந்து நவம்பர் 19, 2005 வரை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த சந்திரிகா குமாரதுங்கவும்,(சமாதானத்துக்கான போர் என்று படுகொலைகளை திறந்துவிட்டவர்) நவம்பர் 19, 2005 ல் இருந்து இன்றுவரை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த மஹிந்த ராஜபக்‌ஷவும் (இனப்படுகொலை 2009) ஆட்சிசெய்து வருகின்றனர். ஆட்சி அதிகாரம் மாறினாலும் தமிழர்களின் படுகொலை, இனப்படுகொலை என்று வடிவம் மாறுபட்டுக்கொண்டிருக்கிறதே தவிர இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற புள்ளியை நோக்கி எந்த ஆட்சியாளர்களும் இதுவரை நகர முற்படவில்லை.
இன்றைக்கு எவர் எந்த கட்சியை சார்ந்து போட்டியிடுகிறார் என்று சாதாரண சிங்கள மக்களால்க்கூட விளங்கிக்கொள்ள முடியாதவாறு அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக அடிப்படையில் ஒரே கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த கடும்போக்கு பெளத்த சிங்கள அரசியல்வாதிகளான சந்திரிகா குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன, ஆகியோர் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் ஆதரவையும் உள்வாங்கி, அதே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நடப்பு ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்‌ஷவை பதவியிலிருந்து இறக்கவேண்டும் என்பதற்காக நேரடி எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து, “எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர்” என்று ஒரு புதிய சிந்தாந்தத்தை அறிமுகப்படுத்தி ஒரே தரப்பு தேர்தலில் இரு கூறாக நிற்கின்றனர்.
இவர்களின் தெரிவுக்கான போட்டியாளர் ராஜபக்‌ஷவின் அதே கொள்கை கோட்பாடுகளை கொண்டு 2009ல் முள்ளிவாய்க்கால் இனப்படுகிலையில் பங்கு பற்றிய மைத்திரிபால சிறிசேன.
நிலவரம் தொடர்ந்து இப்படி இருந்து எவ்வளவுதான் அடிவாங்கினாலும் தோல் மரத்துப்போன தமிழர் தலைமைகளுக்கு இன்னும் உறைப்பதாக தெரியவில்லை.
நடைபெறவிருக்கும் தேர்தலில் ராஜபக்‌ஷவின் கூட்டணியில் நேரடி கடும்போக்கு சிங்கள கட்சிகள் தவிர, நேரடி தமிழ் கட்சிகளாக டக்கிளஸ் தேவானந்தா, வினாயகமூர்த்தி முரளிதரன் என்னும் கருணா, கேபி என்ற கே பத்மநாதன், போன்ற ஆதரவாளர்களும்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் என்ற வேஷத்துடன் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆழமான மறைமுக நிழல் ஆதரவாளர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பை சார்ந்து தமிழரசுக் கட்சி சம்பந்தன், மாவை, சுமந்திரன், வடக்கு மாகாண மு அ, விக்கி, ஈபிஆர்எல்எஃப் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்று கூடாளிகள் வெளிப்படையாக அல்லாமல் நிழல் ஆதரவு வழங்கி வருகின்றனர்,
இங்கு தமிழ் கட்சிகளான டக்கிளஸுன் ஈபிடிபி தொடர்ந்து ராஜபக்‌ஷவின் நட்பு கட்சியாகவே இருந்து வருகிறது அடுத்து கருணா, பிள்ளையான், கேபி ஆகியோர் சிறைக் காவலில் இருப்பவர்கள்போல ராஜபக்‌ஷ சொல்லுவதை கேட்கும் இடத்தில் இருப்பவர்கள். எனவே அவர்களை ஐநா உட்பட சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு கணக்கு காட்டுவதற்காக ராஜபக்‌ஷ பாவிக்கலாமே தவிர மக்களின் வாக்குவங்கிக்கு பயன்படுத்த முடியாது என்பது யாவரும் நன்கு அறிவர்.
அடுத்து டக்கிளஸின் கட்சியை எடுத்துக்கொண்டாலும் டக்கிளஸுன் ஆயுத அச்சுறுத்தல் வளையத்தில் இருக்கும் சொற்ப மக்களின் வாக்குகளை எதிர் பார்க்கலாமே தவிர அதிகமாக அங்கு பெரிய விளைச்சல் கிடையாது. உளப்பூர்வமாக என்றைக்கும்போல ஈபிடிபி க்கு தமிழ் மக்கள் எவரும் ஆதரவு வழங்கப்போவதில்லை.
2009 க்கு பின்னான நெருக்கடியான அரசியற் சூழ்நிலையில், தொலைநோக்கு பார்வையுடன் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட தமிழர்களுக்கான அரசியற் கட்சியான தழிழ் தேசியக்கூட்டமைப்பு என்ற கட்சியின் மூலமே தமிழர்களுக்கான அரசியலை வென்றெடுக்க முடியும் என்று அனைத்து தமிழர்களும் உரிமையுடன் நம்புகின்றனர். அதனால்த்தான் சம்பந்தன் செய்யும் ஒவ்வொரு சிதம்பல் அரசியல் நகர்வுகளின்போதும் சம்பந்தனை விளக்குமாறால் அடிக்காத குறையாக சரமாரியாக விமர்சித்து திட்டி தீர்க்கின்றனரே தவிர எவரும் கட்சியை விட்டு விலகிப்போக விரும்பவில்லை. ஏனென்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றால் அது சம்பந்தனின் சொத்தல்ல அது நமக்கான அரசியலை வென்றெடுக்க தேசியத் தலைவரால் திட்டமிட்டு வகுக்கப்பட்ட பெரும் களம் அதை நாம் சரியாக சரியான தலைமையை உள்வாங்கி இலட்சியத்தை வெல்ல பாவிக்க வேண்டுமே தவிர புறக்கணிக்க முடியாது என்பது அனைவரினதும் இரத்தத்துடன் கலந்துவிட்ட உணர்வாகவே இருந்து வருகிறது.
தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்துவரும் சம்பந்தன் சகிக்க முடியாத துரோக அரசியலை செய்தாலும் கட்சியிலிருந்து சம்பந்தனை வெளியேற்ற வேண்டுமென்ற எண்ணம் மக்களுக்கு மேலோங்கி நிற்கின்றதே தவிர இன்றைய நிலையில் கட்சியை விட்டு விலகி கட்சியை பலமில்லாத அமைப்பாக வெளி உலகுக்கு அறியத்தரக்கூடாது என்பதே கட்சியிலுள்ள பல உறுப்பினர்களதும் மக்களினதும் அவாவாக இருந்து வருகிறது.
அந்த பலத்தை ஆத்மார்த்தமாக அறியாமல் குறுகலான எண்ணத்துடன் சம்பந்தன் / விக்கி மற்றும் கூட்டாளிகள் செய்துவரும் வரலாற்றுப்பிழைகளுக்கு ஒருநாள் பதில் கூறவேண்டிய நிலை நிச்சியம் வரும்.
இனப்படுகொலையாளி, ராஜபக்‌ஷவுடன் 2014 வரை பயணித்து அனைத்து குற்றங்களின்போதும் ஒன்றாயிருந்து பதவியை கைப்பற்றும் நோக்கத்தோடு போட்டி மனப்பாண்மையில் சென்ற மாதம் பிரிந்து நிற்பவரை (மைத்திரி) தமிழன் எவனாவது வாக்களித்து ஜனாதிபதியாக ஆக்க விரும்புவானா?
இப்படி பல வாத பிரதிவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் ஒரு உணர்வுமயமான நேரத்தில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளார் அவர்கள் ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்கக்கூடாது என்று ஒரு அறிக்கையை விடுத்து அதிர்ச்சியை கொடுத்து தனது தரத்தையும் தாழ்த்திக்கொண்டிருக்கிறார்.
சரி, வயதில் மூத்தவர் நல்ல அனுபவசாலி தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் கொள்கைகளை கோட்பாடுகளை அறிந்தவர் நன்கு கற்றுணர்ந்தவர் மக்கள் நம்பிக்கைக்குரியவர், நன்மை தீமைகளை பகுத்துணரக்கூடியவர், வணக்கத்துக்குரியவர், அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
எனவே நாம் அவர் கூறுவதுபோல வாக்களிக்க சித்தமாக இருக்கிறோம் என்று வைத்துக்கொண்டாலும், யாருக்கு வாக்களிக்க வேண்டும், குறிப்பிட்ட அந்த வேட்பாளருக்கு வாக்களிப்பதால் தமிழர்களுக்கு ஆகக்குறைந்தது என்ன நன்மை நிகழும், அல்லது குறைந்தபட்ஷம் என்ன மாற்றத்தை கொண்டுவர முடியும் என்பதை ஆண்டகை வணக்கத்துக்குரிய இமானுவல் அடிகளார் காலதாமதமின்றி உடனடியாக ஒரு வெளிப்படையான அறிக்கை மூலம் தெரியப்படுத்தவேண்டும்.
இனப்படுகொலையை மனதில்க்கொண்டு தேர்தலை மக்கள் புறக்கணிக்கக்கூடாது என்று இமானுவல் அடிகளார் சொன்னால்,
கண்ணுக்கு முன்னே எனது அம்மா, அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, பச்சிளம் குழந்தைகளை, இனப்படுகொலையில் தாரைவார்த்து விட்டு புலம்பிக்கொண்டிருக்கும் நான் நாசகாரம் செய்த சிங்கள தலைவர் ஒருவர் இலங்கை ஜனாதிபதியாக வருவதை தடுக்க முடியாவிட்டாலும் எனது கோபத்தின் நிமித்தம் ஜனநாயக முறைப்படி நான் தேர்தலை புறக்கணிக்கப்போகிறேன் என்பது எனது உணர்வுமயமான உரிமை.
அப்படியிருக்கும்போது என்னை வழிநடத்துகின்றேன் என்று தன்னிச்சையாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஒருவர் (உலகதமிழர் பேரவை) எனது இனத்தை இனப்படுகொலைசெய்த சிங்களவன் ஒருவன் ஜனாதிபதியாக வருவதற்கு எனது வாக்கை பயன்படுத்து என்று பகிரங்கமாக அறிக்கை விடுகின்றார் என்றால் அதற்கான காரணத்தை தெளிவுபடுத்தி பகிரங்கமாக விளக்கம் தந்து ஆகவேண்டும்.
எனவே வணக்கத்துக்குரிய இமானுவல் அடிகள் அவர்கள் காலதாமதம் செய்யாமல் தேர்தலை புறக்கணிக்கவேண்டாம் என்பதற்கு சரியான விளக்கம் அளிக்கும்படி தேர்தலை புறக்கணிக்க இருக்கும் மக்கள் சார்பாக இந்த பதிவு கேட்டுக்கொள்ளுகிறது.
மஹிந்தவை தோற்கடிக்கவேண்டும் என்பது மக்களின் உணர்வுசார்ந்த அரசியல், ஒரு இனப்படுகொலையாளியை பழிவாங்கவேண்டும் என்ற கோபம் அது இயல்பானது, இனப்படுகொலையில் அங்கம் வகித்த மைத்திரி ஜனாதிபதியாகக்கூடாது என்பது மக்களின் அறிவுசார்ந்த அரசியல், அறிவுசார்ந்த விடயங்களை மக்களுக்கு பக்குவமாக எடுத்துரைக்கவேண்டிய பொறுப்பு இமானுவல் போன்ற தலைவர்களுக்கு உண்டு, இதை இராஜதந்திரம் என்றும் சமயோஜிதம் என்றும் சொல்லலாம். சிந்திக்காமல் செயற்பட்டால் உணர்வுதான் முன்னணிவகுக்கும் என்பதுதான் யதார்த்தம், மக்கள் கூட்டங்களை ஒருங்கிணைத்து வழிநடத்துபவர்கள் உணர்வுமயமாக செயற்பட முடியாது தொலைநோக்குடன் வருங்கால நலன் கருதி ஒரு நல்ல முடிவுக்கு வரவேண்டும்.
ஆனால் அறிவுசார்ந்து ஜனாதிபதி தேர்தலில் எவரையும் ஆதரிக்கவேண்டாம் என்று தமிழர்தரப்பில் கஜேந்திர குமார் பொன்னம்பலம், சிவாஜிலிங்கம், ஆகியோர் தொலைநோக்கோடு குரல் கொடுத்து தேர்தலை புறக்கணிக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர் அவர்களின் கை ஓங்கிவிடுமோ என்ற பயம் சம்பந்தன் தரப்பை அச்சுறுத்துவதுபோல ஆண்டகை இமானுவல் ஐயா அவர்களையும் பயமுறுத்தியிருப்பதுபோல உணர முடிகிறது.
சிங்களவனுக்கு வாக்களித்து அடிமையாக வாழ்வதாக இருந்தால் டக்கிளஸ் தேவானந்தாவை சமரசம் செய்து தமிழ் தேசியக்கூட்டமைப்பையும் கலைத்துவிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி சிவாஜிலிங்கம் போன்றவர்களையும் இணைத்து எல்லோரும் ஒன்றாக ஈபிடிபி கட்சியில் இணைந்துகொண்டால் டக்கிளஸ்தேவானந்தா சொல்லுவதுபோல மத்தியில் ஒற்றை ஆட்சி மானிலத்தில் சுய ஆட்சி அதிகாரத்தை இலகுவில் பெற்றுவிடலாமே தேவானந்தாவை வில்லனாக பார்க்கவேண்டிய தேவையும் இருக்காது.
மஹிந்த அல்லது மைத்திரி ஜனாதிபதியாக வரட்டும், அவர்கள் ஜனாதிபதியாக வந்ததும் வாக்களித்திருந்தாலும் சரி வாக்களிக்காவிட்டாலும் சரி எங்களை அடிக்கத்தான் போகிறார்கள் அப்போ நீங்களோ சம்பந்தன் ஐயாவோ எங்கள் அருகில் இருக்கப்போவதில்லை எனவே தயவுசெய்து எங்களை நினைவில்க்கொண்டு நீங்கள் விடும் அறிக்கைகளை எழுதுங்கள்.
“ஈழதேசம் இணையத்திற்காக கனகதரன்.”

No comments: