Tuesday, March 31, 2015

சம்பந்தர், மாவை தரப்பின் மாகாணசபை மீதான முரண்பாடு வித்தியாசமான வேறு ஒரு தலைமையை உருவாக்கக்கூடும்..

இத்தால் சகல ஈழ தமிழர்களுக்கும், ஈழத்தின் அடிமை தழையை உடைத்தெறிந்து விடுதலையை நோக்கிய சிந்தனையுடன் பயணம்செய்யும் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் சொல்லிக் கொள்ளுவது என்னவென்றால்.
இலங்கை சுதந்திரத்தின் பின் தந்தை செல்வநாயகம் அவர்களால் உருவாக்கப்பட்டு அர்ப்பணிப்புடன் தமிழினத்துக்காக பிறந்து வளர்ந்து போராடிய கட்சி “இலங்கை தமிழரசு கட்சி”
தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் ஒரு இக்கட்டான தருணத்தில் மிகுந்த மென் இழை ராஜதந்திர நோக்கோடு தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கம் பெற்று சர்வதேச அங்கீகாரத்தை தன்னகத்தே கொண்ட தமிழர்களின் தேசிய கட்சி “தமிழ் தேசியக்கூட்டமைப்பு”, இந்த இரண்டு கட்சிகளையும் உருவாக்கியதில் அல்லது வளர்த்ததில் சம்பந்தனுக்கு மாவை சேனாதிராசாவுக்கு துளியளவு பங்கும் இல்லை. என்னைப்போல உங்களைப்போல சம்பந்தனும் மாவையும் தமிழ் உணர்வுடன் இருந்து இருந்தாலும் கூடுதலாக இந்த இருவரும் குறிப்பிட்ட அமைப்புக்களின் உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்ற ஒன்று மட்டுமே கூடுதல் தகுதியாக கொள்ள முடியும்.
விரால் மீன் இல்லாத குளத்தில் குறவை மீன் துள்ளி விளையாடுவதுபோல தமிழரசு கட்சியையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியையும் தந்தரமாக சுவீகாரம் செய்து அக் கட்சிகளின் நிழலில் இன்று இன்புற்று வாழ்பவர்களாக இரா சம்பந்தன், மற்றும் சுமந்திரன், மாவை சேனாதிராசா மற்றும் சிலர். எந்த ஒரு குறிக்கோளும் இல்லாமல் சுயநலனே குறியாக துரோக அரசியல் செய்து பொழுது போக்கிக்கொண்டு இருக்கின்றனர்.
இரா சம்பந்தன் அவர்கள் தான் இன்றைக்கு என்ன செய்கிறேன் என்பதே தெரியாமல் ஒரு கோமா நோயாளிபோல சுமந்திரனின் வாய்ப்பாட்டை மட்டுமே தினமும் கேட்டு, வரத்து தண்ணீருடன் அடிபட்டு செல்லும் கிணற்று நீர்போல் சகதி, சாக்கடை, கழிப்பிடங்களை நோக்கி தாந்தோன்றித்தனமாக பாய்ந்து ஓடிக்கொண்டிருக்கிறார். பின்னால் சுமந்திரன் மாவை ஆகியோர் சன்பந்தன் கை பிடித்து திக்கு தெரியாத ஒரு திசை நோக்கி செல்லுகின்றனர். இவர்களுடன் ஒன்றி கலந்து பயணப்பட்ட வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மாறிவரும் மக்களின் மனவோட்டத்தை உணர்ந்து சம்பந்தன் தரப்பினரிடம் இருந்து சற்றே விலகி யதார்த்தத்தை புரிந்து கொண்டு தனது பார்வையையும் பாதையையும் மாற்றி அமைக்க முற்பட்டிருக்கிறார்.
பாராளுமன்ற பிரதிநிதுத்துவம் என்ற செல்வாக்கை வைத்துக்கொண்டு தமிழர்களின் அரசியல் பொருளாதார வாழ்வியலை தமது சுயநல கைப்பிடிக்குள் வைத்து எதுவும் செய்துவிடலாம் என்பது சம்பந்தன் குழுவினரின் கொள்கையாக இருந்து வருகிறது. சம்பந்தன் குழுவினரின் குடிமியை பிடித்து தொங்குவதால் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களின் பொல்லாப்புக்குள்ளாகி மக்களின் வெறுப்பை சம்பாதித்து முகவரி இல்லாமல் போய்விடுவோமோ என்ற யதார்த்தம் அறிந்து சூழல் அசைவாக்கத்தை பின்பற்றவேண்டிய நிலையை உணர்ந்தவராக முதலமைச்சர் விக்னேஸ்வரன் மாற்றம் பெற்றிருக்கிறார்.
சென்ற ஆண்டு எந்த கூச்ச உணர்வுமில்லாமல் ரணில் விக்கிரமசிங்கவை ஒரு கையிலும் சிங்க கொடியை இன்னொரு கையிலும் புளகாங்கிதத்துடன் தலைக்குமேல் தூக்கி இனத் துரோகியாக மாறிப்போய்விட்டவர் சம்பந்தன், இதன் பின்னணியில் கொழும்பு பிறப்பினரான சுமந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் இருந்ததாக உலகதமிழர்கள் மத்தியில் மோசமாக விமர்சனம் எழுந்தது.
இன்றைக்கு மகிந்த ராஜபக்‌ஷவின் ஒரு பிரிவினர் ராஜபக்‌ஷவை ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டு மைத்திரிபால ஶ்ரீசேன தலைமையில் புதிய மொந்தையில் அதே பழைய கள்ளை வைத்து புதிய அரசாங்கம் என்று விடுப்புக்காட்டி ஒரு ஆட்சியும் நடந்து வருகிறது அந்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வழிமொழிந்து பின்பற்றுவதன் மூலம் மாகாணசபையின் அசைவாக்கத்தை தமது பிடிக்குள் வைத்திருக்கவேண்டும் என்பதே சம்பந்தர் மாவை ஆகியோரின் குறியாக இருந்து வருகிறது.
போராட்டம் நிறுத்தப்பட்ட இன்றைய காலகட்டத்தில் பாராளுமன்ற அரசியற் கட்சிகள் என்னதான் ஆட்டம் ஓட்டம் போட்டாலும் இறுதியில் அதிகாரம் சங்கமமாகும் புள்ளியாக மாகாண சபை நிர்வாகமே மேலோங்கி நிற்கிறது, மாகாணசபையின் அசைவு ஒன்றுதான் தமிழர்களின் அடிப்படை இருப்பை தீர்மானிக்கும் இடமாக இருப்பதால் பாராளுமன்ற பிரதிநிதுத்துவத்தை விடவும் முன்னிலை வகிப்பது மாகாண சபையின் தீர்மானங்களும் வேலைத்திட்டங்களும் என்பதாகவே மக்களின் பார்வை மாற்றம் பெறத்தொடங்கிவிட்டது.. இந்த இடத்தில்த்தான் பாராளுமன்ற பிரதிநிதுத்துவமா மாகாணசபையின் ஆளுமையா என்ற கேள்வி அரசியல்வாதிகளிடம் போட்டியாக பூதாகரமாக எழும்பி நிற்கிறது.
அந்த ஈகோவின் வெளிப்பாடுதான் மாவை சேனாதிராசா விக்கினேஸ்வரன் மீது தொடுத்து நிற்கும் பகமை என்பதை புரிந்து கொள்ளலாம்.
வடக்கு மாகாண முதலமைச்சராகிவிட வேண்டுமென்ற பெரும் கனவிலிருத்த மாவை, கொழும்பிலுள்ள இந்திய தூதர் கொடுத்த அழுத்தத்தால் அந்த கனவு பதவியை துறக்கவேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருந்தது,
இருந்தும் மாகாண சபையை தமது கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு தன்னிச்சையாக செயற்படுவது என்பது சம்பந்தன் மாவை சுமந்திரன் என்ற மூவர் குழுவினரால் மனதளவில்க்கூட அனுமதிக்க முடியவில்லை. மாகாணசபையின் பெரும்பாலான உறுப்பினர்களின் நோக்கம், உலக தமிழர்களின் எதிர்பார்ப்பு இவைகளுக்கு உட்பட்டு இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் மாகாணசபையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களால் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானம் சர்வதேச அரங்கில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியதோ இல்லையோ சம்பந்தன் தரப்புக்கு நெருப்பு சுட்ட வேதனையை தோற்றுவித்துவிட்டதை கண்கூடாக காணுகின்றோம்.
விக்னேஸ்வரன் தலைமையிலான மாகாணசபை தன்னிச்சயாக செயற்படுவது புதிய ரணில், மைத்திரி அரசுக்கு எவ்வளவு நெருக்கடியோ அவ்வளவு வெறுப்ப்பு மூவர் குழுவுக்கும் இருந்து கொண்டே இருக்கிறது.
சமீபத்தில் வடபகுதிக்கு விஜயம் செய்த ஶ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஒன்று கூடலில் முக்கியமாக கவுரவப்படுத்த வேண்டிய வடக்கு மாகாண சபைக்கும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களுக்கும் சம்பிரதாயத்துக்குகூட அழைப்பு அனுப்பப்படவில்லை. மாகாணசபை உறுப்பினர்கள் எவரும் ரணிலின் வரவேர்பில் சங்கமமாகவும் இல்லை. மாவை சேனாதிராசா சுரேஷ் பிரேமச்சந்திரன், சரவணபவன் போன்றோர் கலந்து கொண்டு எதுபற்றி பேசினர் என்பது புரியாத புதிராக இருந்தாலும் இந்த ஒன்று கூடலின் மூலம் மாகாணசபையை மட்டம் தட்டிவிட்ட பெருமை தற்காலகமாக திருப்தியளித்தாலும் சம்பந்தன் ரணில் குழுவினருக்கும் மக்களாகிய தமக்கும் இடையே ஒரு கறுப்பு திரை விழுந்துவிட்டதாகவே விமர்சனங்கள் பெருகி வருகின்றன. .
இப்போ சம்பந்தன் தரப்பு மூன்று நான்கு அமைச்சர் பதவிகளை ரணில் அரசிடம் கேட்டு கையேந்தி நிற்கின்றனர் என்று தெரிய வருகிறது. மத்தியில் உள்ள அமைச்சர்கள் மூலம் மாகாணசபைக்கு கொடுக்கும் அதிகாரங்களை மட்டுப்படுத்தி மத்திய அரசாங்கத்திடம் தமிழர்களுக்கான அதிகாரங்களை பெறும் இடமாக பாராளுமன்ற பிரதிநிதுத்துவம் இருக்கவேண்டும் என்றும் அதன்மூலம் மாகாணசபையை தமது விருப்பத்துக்கு ஆட்டி வைக்கலாம் என்பதே மிகப்பெரிய இராஜ தந்திரமாக சம்பந்தன் மாவை தரப்பால் வலை பின்னப்படுகிறது.
சட்டம் படித்த முன்னாள் நீதியரசரான முதலமைச்சர் விக்னேஸ்வரன் மக்கள் பலத்துடன் இருப்பதால் சம்பந்தன் தரப்பினரின் சில்லறை தனமான இந்திய தரத்திலாலான அரசியல் நரி இராஜதந்திரம் அடிபட்டுப்போகும் என்றே உணரக்கிடைக்கிறது. இவர்களது ஈகோ தொடரும் பட்ஷத்தில் வடக்கே மக்கள் நலனுக்காக தொடர்ந்து போராடி வரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் தலைமையிலான “தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி” சிவாஜிலிங்கம் சார்ந்த கட்சிகள் இணைந்து விக்னேஸ்வரன் தலைமையில் ஒரு புதிய அமைப்பு உருவாக்கி மக்கள் செல்வாக்குடன் பாராளுமன்ற பிரதிநிதுத்துவத்தையும் கைப்பற்ற முயற்சியும் செய்யலாம். வெற்றியும் பெறலாம் என்பதே நிதர்சனமாகும். சமீபத்தில் ஒரு நேர்காணலின்போது வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் கூறும்போது நான் தமிழரசுக்கட்சி உறுப்பினனல்ல. அதனால் மாவையோ எவருமோ அக்கட்சியிலிருந்து என்னை நீக்கமுடியாதென தெரிவித்துள்ளார் என்பதும் இங்கு நினைவு கூறத்தக்கது.
ஈழதேசம் செய்திகளுக்காக.
கனகதரன்.