Tuesday, December 21, 2010

இந்த ஒற்றை மனிதனே.... - ச.ச.முத்து.

இப்போதும் எல்லோரும் ஏதோ ஒரு தத்துவவரிகளுக்குள்ளாகவே அவரது வரலாற்றையும் அவரத பயணத்தையும் நோக்கி, அநுணுகப்பார்த்து தங்களது தராசுகளில் நிறுத்து முடிவுகளை எடுத்து ஏமாறுகிறார்கள்.

ஆனாலும் கோடிக்கணக்கான மனிதர்களால் மிகவும் ஆழமான உணர்வுகளால் எந்தவொரு பிரதியுபகாரமும் நினைக்கப்படாமல் நேசிக்கப்படும் ஒரு அதிமானுடனாக அவர் இன்னும் கருதப்படுவதற்கு பின்னால் அவரின் ஒப்பற்ற ஆளுமையும், தான் நேசித்த எத்தகைய இடர்கள் வரினும் தொடரும் ஓர்மமும் நிறைந்தே காணப்படுகின்றது.

இதோ, அவருடைய ஐம்பத்தி ஆறாவது பிறந்ததினமும் வந்துபோய்விட்டது. மிகவும் இருள் சூழ்ந்த ஒரு குழப்பம் நிறைந்த பொழுதில் அந்த மனிதனின் பிறந்தநாள் வந்து போயுள்ளது. வேறு எப்போதையும்விட இப்போதுதான் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற அந்த மனிதனின் தேவையும், அவரின் வரலாற்று மீளுகையும் முழு தமிழர்களாலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

எல்லாப்பலங்களையும் இழந்து நாம் நின்றிருக்கும் இந்த பொழுதிலும் அந்த ஒற்றை மனிதன் வந்துவிட்டால் அனைத்தையும் மீளக்கட்டி அமைத்து எம்மை நிமிரச்செய்துவிடுவான் என்ற முழு மக்களின் நம்பிக்கைதான் அந்த மனிதனின் நாற்பது ஆண்டுகால போராட்ட வரலாறு.

ஆறுகோடி தமிழர்கள் இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனம் முழுவதற்குமான ஒரே முகவரியாகவும், எல்லாத்தளைகளையும் அறுத்தெறிந்து நாம் எழுவதற்கான ஒரே பிடிமானமாகவும் எந்தவொரு பாசாங்கும் இன்றி மிகஇயல்பாகவே எல்லோராலும் நம்பப்படுகின்றான்.

இன்றும் அந்த ஒற்றை மனிதனின் ஒரு சிறு குரல் வந்தாலே போதும் இந்த இனத்துக்கு. இப்போது நடந்துகொண்டிருக்கின்ற அனைத்து அநீதிகளும், அவமானப்படுத்தல்களும் ஒரு கணத்தில் மறைந்துவிடும் என்ற நம்பிக்கையே எமது மக்கள் அனைவரதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இப்படி நினைப்பது சரியா, பிழையா என்பதற்கு அப்பால் இப்படியான நம்பிக்கையை ஒரு முழுமக்கள் கூட்டமும் ஒருமித்து நினைக்கிறார்கள். அதுவே மிக உண்மை.

ஒரு தேசியஇனம் முழுமையினதும் எதிர்பார்ப்பும் அதுதான். இந்த எதிர்பார்ப்பு என்பது நேர்மையாகவும், முழுத்தூய்மையாகவும் தான் நேசித்த மக்களுக்காகவும், இலட்சியத்துக்காகவும் போராடிய அந்த மனிதனின் வரலாற்றிலிருந்தே பிறப்பிக்கப்படுகின்றது.

ஏறத்தாழ நாற்பது வருடங்களாகிறது தேசியதலைவர் விடுதலைப் போராட்டத்துக்காக புறப்பட்டு. இந்த நாற்பது வருடங்களாக அவரை தொட்டும், உரசியும், சுற்றிவளைத்தும் மரணம் பின்தொடர்ந்தபடியே இருக்க அவர் போராட்டத்தை முன்னகர்த்தியபடியே இருந்தார். மரணத்தை அவர் ஒரு பொருட்டாக நினைத்ததும் இல்லை.

போராட்ட வாழ்வுக்கும் மரணத்துக்குமான இடைவெளி மிகமிக மெல்லிய நூலிழை போன்றது என்பதை அவர் மிகத்துல்லியமாய புரிந்திருந்தார். ஒரு போராளிக்கு ஆக்கிரமிப்பாளனிடம் இருந்து ஒரு துப்பாக்கிச்சன்னமோ, ஒரு குண்டின் வெடித்த சிதறலோ எப்போதும் உயிர்குடிக்க காத்திருக்கும் என்பதும் அவருக்கு தெரியும்.

78ம் ஆண்டின் பெப்ரவரிமாதம் 5ம் திகதி திருநெல்வேலியில் இருந்த சிறீலங்காவின் மக்கள் வங்கிக்குள் பகலில் உள்நுழைந்து போராட்டத் தேவைக்கான பணத்தை பறித்தெடுக்கும் முயற்சிக்கு செல்வதற்கு முன்னர் தனது தோழனும் தன்னுடன் முதலில் இணைந்தவருமான கலாபதியிடம் ‘இந்த தாக்குதலில் தனக்கு ஏதும் நடந்தால்க்கூட, சோர்வின்றி போராட்டத்தை தொடரவேண்டும்’ என்று நிதானமாக கூறிச்செல்லக் கூடியஅளவுக்கு அவருக்கு போராட்ட வாழ்வின் நிலையாமை தெளிவாகப் புரிந்திருந்தது. இதையே அவர் தினமும் தன்னோடு இருப்பவர்களுக்கு சொல்லியும் புரியவைத்தும் இருந்தார்.

1983 யூலை 23ம் திகதி திருநெல்வேலி தபால்பெட்டிச் சந்திக்கு அருகில் ராணுவ தொடர் அணிமீதான் தாக்குதலின்போதுகூட அவர் தன் தோழர்களுக்கு ‘தான்’ மரணித்தாலும் தொடரவேண்டிய பணிகள்பற்றி மிகத்ததெளிவாக கூறியபின்னரே தானும் அந்த தாக்குதலின் மிகமுக்கிய இடத்தில் நிலைகொண்டு எதிரியை எதிர்பார்த்திருந்தார்.

இரண்டாவதாக அவர் போராட்டத்தின் இயல்பு விதியை எந்தவொரு கடினமான சொற்களுக்குள்ளாகவோ, அந்நிய மேற்கோள்களுக்குள்ளாகவோ எடுத்துக் கொள்ளாமல் மிகவும் இயல்பான புரிதலுக்குள்ளாகவே விளங்கிக்கொண்டிருந்தார். தனி ஒருவனாக அவர் போராட புறப்பட்டபோது அவருக்கு முன்பாக பெரும் பாதை ஒன்று நீண்டு நின்றது. எந்தவொரு திசைகாட்டலும் இல்லாத அந்த பாதையில் தனியனாக அவர் இறங்கினார். சிறுகச்சிறுக கூட்டினார். பெருமக்கள் எழவேண்டுமானால் முதலில் அவர்களுக்கு விடுதலையின் போரிலும், போராட்டத்தின் மீதும் நம்பிக்கை வரவேண்டும் என்பதை தெரிந்துகொண்டார்.

அடக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை கொண்டு எழுவதும், ஆளும் ஆக்கிமிப்பாளர்கள் அந்த மக்களின் நம்பிக்கையை நசுக்குவதுமான இரண்டு எதிர் எதிர் வினைகள்தான் விடுதலைப் போராட்டம் என்பது. தேசியத்தலைவர் இந்த கோட்பாட்டை ஆழமாகப்புரிந்து கொண்டார். அதிலும் தனக்குள் மிக ஆழமான நம்பிக்கையை அவர் வளர்த்திருந்தார். இந்த நம்பிக்கையானது விடுதலைப்புலிகளின் முதலாவது தாக்குதலான துரையப்பா அழிப்பின்போதே அவரில் தொடங்கிவிட்டிருந்தது.

1975ல் அந்த தாக்குதலுக்காக அவர் ஒரு வெள்ளை வேட்டியுடனும், வெள்ளை சேர்ட்டுடனும் வல்வெட்டித்துறையிலிருந்து தனது நண்பனையும் அழைத்துக்கொண்டு சென்றபோது அவருக்கு பொன்னாலை வரதராஜப்பெருமாள்கோவில் அதற்கு முன்னர் ஒருபோதும் தெரிந்திராத இடமாகவே இருந்தது. அதற்கு முன்னரே அந்த இடத்தை தெரிந்துகொண்ட வேறு இரு நண்பர்களின் தகவலினதும், குறிப்புகளினதும் அடிப்படையிலேயே அந்த இடத்துக்கு ஏதோ ஒரு நம்பிக்கையுடன் சென்றார்

அந்த நம்பிக்கைதான் அவரது ஆன்மம்.தனக்குள் வளர்த்துக்கொண்ட உறுதியான நம்பிக்கையை தனது தோழர்களிடமும், அவர்களில் இருந்து திரளான மக்களிடமும் பெரும் தீயாக எழுப்பலாம் என உண்மையாக நம்பினார். விளைவுகளை ஏற்படுத்துவதும்,விளைவுகளில் இருந்து எழுச்சியையும்,எதிரிக்கு வீழ்ச்சியை ஏற்படுத்துவதுமே அவரின் போரியல்.75ம்ஆண்டு பொன்னாலையில் துரையப்பாவை வீழ்த்தியதிலிருந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் விமானப் படைவரை எல்லாமே எமது மக்களின் விடுதலையின் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான பொறிமுறைகளாகவே அவரால் நகர்த்தப்பட்டது.

இந்த நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காகவே ஒவ்வொரு தாக்குதல்களும் நிகழ்த்தப்பட்டன. அதற்காகவே போரியல்கட்டுமானங்கள் எழுப்பப்பட்டன. அரசியல்பிரிவுகள் அமைக்கப்பட்டன. தமிழீழம் என்ற கருத்தை எமது மக்களுள் பற்ற வைத்து அதனை ஒரு சக்தியாக எழுப்புவதில் அவர் ஓயாது செயற்பட்டார். ஒரு இனம் பலநூற்றாண்டு பரிணாமத்தில் அடையும் விழிப்புணர்வையும் விடுதலையின் மீதான நம்பிக்கையையும் அவர் வெறும் நாற்பது ஆண்டுகால போராட்;டத்தில் தனது ஓய்வற்ற போராட்டத்தினூடாக ஏற்படுத்திவிட்டார்.

இனி,முழுவிடுதலையை தமிழினம் அடையும்வரைக்கும் அவரின் பயணம் என்றும் தொடரும்.இந்தப் பயணத்தின் முன்னால் செல்லும் பாதை காட்டியாகவே அவர்
இன்னும் தொடர்ந்துகொண்டு இருக்கிறார்.அவர் சோர்வும்,விரக்தியும் அடைந்து
ஓய்ந்திருந்தபொழுதுகள் அவரின் போராட்ட வரலாற்றில் இருந்ததில்லை.
அவருக்குள் இருக்கும் ஆன்மஉறுதியும்,மாவீரர்களின் இலட்சியநெருப்பும் அவரை
முன் நடத்தியபடியே இருக்கும்.அவரின் வழிகாட்டலில் எழுவது மட்டுமே அந்த
ஓய்வற்ற தலைவனுக்கு எங்களின் பிறந்ததின செய்தியாக இருக்கும்.

நன்றி தமிழ்க்கதிர்,

No comments: