இனப்படுகொலை ஸ்ரீலங்காவின் நவீன சர்வாதிகாரி ராஜபக்க்ஷ 2,12,2010 வியாழன் புகழ்பெற்ற இலண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அரங்கை தனது அரசியல் மேடையாக்கி சர்வதேசத்தை ஏமாற்ற இருந்த நிகழ்வு புலம்பெயர் தமிழர்களால் தடைசெய்யப்பட்டது.

ஸ்ரீலங்காவின் சிங்கள அரசு தமிழர்களை தொடர்ந்து அடிமைப்படுத்தி கொன்றொழித்து வருவதை மூடி மறைப்பதற்கான திருகுதாள வஞ்சக திட்டத்தை ஒக்ஸ்போர்ட் மேடைஉரை மூலம் தந்திரமாக சர்வதேசத்தின் முன் கற்பித்து, பயங்கரவாதம் என்ற பூச்சாண்டியை முன்னிலைப்படுத்தி படுகொலைகளை மறைத்து ஏமாற்ற முயற்சித்த நாடகமேடை பிரித்தானிய "தமிழர் பேரவையுடன்" உணர்வுள்ள புலம்பெயர் தமிழர்களால் அதிரடியாக பறிக்கப்பட்டது.

அத்துடனல்லாமல் இன அழிப்பு சர்வாதிகாரி ராஜபக்க்ஷ ஒளிந்து ஓடித்தப்பிக்கவேண்டிய பரிதாபகரமான நிலையும் ஏற்பட்டு, சர்வதேசமட்டத்தில் சிரிப்புக்கும் சிந்தனைக்கும் ராஜபக்க்ஷவின் அரசும் அரசியலும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

தமிழரின் அபசகுனிக்கு இலண்டனில் ஏற்படுத்தப்பட்டிருந்த இராசதந்திர வீழ்ச்சி , தமிழினத்தின் நீண்ட போராட்ட வரலாற்றில் ஒரு குறுகிய ஆயத்தமாக இருந்தாலும் தமிழர்களின் பற்றுறுதியான உணர்வின் காரணமாக போராட்டம் நம்பிக்கையுடன் அரங்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வின் மூலம் சர்வதேச அரங்கில் ஸ்ரீலங்கா ஆட்சியாளரின் முகத்திரை கிழிக்கப்பட்டு தமிழர்களின் போராட்டத்தில் ஏராளமான நியாயம் இருப்பதை உலகம் ஏற்றுக்கொள்ள இணங்கியிருப்பது பின்வந்த நாட்களில் உலகநாடுகளின் நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.

சனல் 4 தொலைக்காட்சி ஈழத்தின் பல படுகொலைக்காட்சிகளை பன்முகப்படுத்தப்பட்ட பகுப்பாய்வுகள் மூலம் தமிழர் தரப்பு சாட்சிகளுடன் பகிரங்கமாக ஆய்வுக்குட்படுத்தியுள்ளது.இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் தாம் அனுப்பியுள்ள ஆதாரங்கள் குறித்து பரிசீலித்து, சர்வதேச விசாரணயை மேற்கொள்வது குறித்து ஆலோசிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தம்மிடம் தெரிவித்துள்ளதாக, சனல் 4 சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தர்மம் செத்துப்போய்விடுவதில்லை என்பதை கடைசித்தமிழனுக்கும் நம்பிக்கையை ஊட்டும்வகையில் இலண்டன் போராட்டம் உறுதியை மேலும் பெருக்கி ஆறுதல் தரும் ஒரு ஆதாரமாக தமிழினத்திற்கு உலகம் முழுவதும் ஒரு உத்வேகம் பிறந்திருக்கிறது.news

ஆனாலும் லண்டனிலிருந்து அவமானத்துடன் தப்பியோடி ஸ்ரீலங்காவை சென்றடைந்த சிங்கள ராஜபக்க்ஷ, வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக தனது இனத்திற்குண்டான அரக்கக்குணத்தை மாற்றிக்கொண்டதாகத்தெரியவில்லை.பல துறை சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட அரசியல் ஆலோசகர்களை ஜனாதிபதி ராஜபக்க்ஷ வைத்திருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகின்றது, ஆனால் ஆலோசனைகளை உரிய நேரத்தில் சமயோசிதமாக வழங்கிட, ஆலோசகர்கள் எவருமே யதார்த்தமான ஆலோசனைகளை வழங்குபவர்களாக இல்லை.எல்லோருமே ராஜபக்க்ஷவின் பிறவிக்குணத்தை சார்ந்து கூர் தீட்டி அவரை திருப்திப்படுத்தி சந்தோசப்படுத்துவதிலும் துவேச மூர்க்கத்தை வழிமொழிந்து உக்குவிப்பவர்களாகவும் இருக்கின்றனரே தவிர மனிதாபிமான யதார்த்தத்தை புரியவைத்து நாட்டில் அமைதியை தோற்றுவிப்பவர்களாக இருக்கவில்லை.

ராஜபக்க்ஷ தூளி என்று கூறினால், மேர்வின் டி சில்வா, விமல் வீரவங்ச போன்ற துவேச சுயநல பச்சோந்திகள் நிறைதூளி என்று எடுத்துக்கொடுத்து கெடுதிக்கு வழிவகுத்து கெடுப்பவர்களாகவே இருந்து வருகின்றனர்.ஜனாதிபதியுடன் கூட்டுச்சேர்ந்த தமிழ் அரசியல் கட்சி வியாபாரிகளான டக்ளஸ், கருணா, பிள்ளையான், கடைசியாகச் சேர்ந்த தென்பகுதி கட்சியினரான பிரபா கணேசன், திகாம்பரம், ஆறுமுகன் தொண்டைமான், ஆகியோரும் அதைத்தான் செய்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கின்றனர்.அதைத்தான் ராஜபக்க்ஷவும் சரி அவரது சகோதரர்களான கோத்தபாய, பசில், சமல் போன்றவர்கள் விரும்பி வரவேற்கின்றனர்.

சமீபத்தில் பாராளுமன்ற கூட்டமொன்றில் மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் டி சில்வா பேசும்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது கடந்த யுத்த காலத்தில் பல தமிழ்ப்பெண்களின் கணவன்மாரும் அவர்களின் குழந்தைகளும் கொல்லப்பட்டும் காணாமல் போயுள்ளதாகவும், அப்படியானால் அந்த பெண்களுக்கு கணவன்மாரையும் குழந்தைகளையும் கொடுப்பதற்காக நாங்கள் தயாராக இருக்கிறோம். என்று நையாண்டி செய்திருந்தார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் இன்னும் 25 வருடங்கள் ஜனாதிபதியாக இருப்பார் மேலும் அவரைத் தொடர்ந்து அவரின் சகோதரர்களான கோத்தபாய ராஜபக்க்ஷ, பசில் ராஜபக்க்ஷ, மற்றும் மகனான நாமல் ராஜபக்க்ஷ, அவர்கள் நாட்டை ஆள்வார்கள். எனவே தொடர்ந்து ராஜபக்ச குடும்பம் சிறப்பான முறையில் மக்களை வழிநடத்தும் என்று தெரிவித்தார். இவர் இவ்வாறு தமிழ் மக்களை இழிவுபடுத்தி உரையாற்றும்போது பிரதி அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும், வினாயகமூர்த்தி முரளிதரன், ஆகியோர் அருகில் இருந்தார்கள் என்பது வெட்கப்படவேண்டியதாகும் .

இருந்தாலும் பாராளுமன்ற அங்கத்துவமில்லாவிட்டாலும் துணிச்சலுடன் குரல்கொடுக்கவல்ல உறுதியான தமிழ் அரசியல்வாதிகளான சிவாஜிலிங்கம் மனோ கணேசன் போன்றோர் இருப்பதால்த் தான் ராஜபக்க்ஷவின் பொய்ப்பித்தலாட்டம் சிறிதளவேனும் பத்திரிகைகளில் வெளிச்சமாகிக்கொண்டிருக்கிறது

ராஜபக்க்ஷவுக்கு இங்கிலாந்தில் ஏற்பட்ட பின்னடைவு பற்றி ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் திரு மனோ கணேசன் அவர்கள் கூறும்போது, இலண்டனில் நடைபெற்றுள்ள ஆர்ப்பாட்டங்களின் பின்னணியை ஆராயாமல், அவற்றை தாறுமாறாக விமர்சனம் செய்வதன் மூலம் ஜனாதிபதியை சந்தோஷப்படுத்துவதற்கு புதிதாக அரச தரப்பிற்கு சென்றுள்ள சில தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றார்கள், என்று அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் தனது தம்பியாரான பிரபா கணேசனை மறைமுகமாக தாக்கிய மனோ கணேசன் புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆர்ப்பாட்டங்கள் இங்கு வாழும் தமிழர்களுக்கு எதிராக சிங்கள மக்களை திருப்பிவிடும் என்று எச்சரிக்கும் இவர்களது கருத்துக்கள் சிங்கள ஊடகங்களில் பெரிதுபடுத்தப்பட்டுள்ளன. உண்மையில் தமிழ் அரசியல்வாதிகளின் வாய்மூலமாக இத்தகைய கருத்துக்கள் வெளியாவதுதான் சிங்கள மக்கள் மத்தியில் பாரதூரமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.

இலண்டனில் நடைபெற்றுள்ள சம்பவங்கள் தொடர்பில் எந்தவிதமான அடிப்படை தெளிவும் இல்லாமல், தங்களது அரசியல் தேவைகளுக்காக இத்தகைய பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவிப்பதை இந்நபர்கள் உடனடியாக நிறுத்தவேண்டும் புலம் பெயர்ந்த மக்களை முட்டாள்கள் என்று சொல்வதற்கு முன்னர் இந்த அரசியல்வாதிகள் இவற்றைப்பற்றிய அடிப்படையை புரிந்துகொள்ள வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலண்டனில் வாழும் இலங்கையர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்களாகும். இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பிலே அக்கறை காட்டுவதற்கும், ஆர்ப்பாட்டங்கள் செய்வதற்கும் புலம்பெயர்ந்துவாழும் இலங்கை மக்களுக்கு முழுமையான உரிமைகள் இருக்கின்றன. இலண்டன் ஆர்ப்பாட்டத்தில் ஒரு பிரிவு சிங்களவர்களும் கலந்துகொண்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார் என்றும் மனோ கணேசன் கூறினார்

அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும் என்பர். ஆனால் கலியுகமான இந்தக்காலத்தில் சற்று வேகமாக அவை நடைபெறுவதை காணுகின்றோம். அவலத்துக்குள்ளான இனம் என்பதாலும், துன்பமே வாழ்க்கையாகிப்போனதாலும், கடவுளின் கண் திறக்கப்பட்டு கருணை கிடைக்கப்பெற்றதன் காரணமாக, கண்முன்னே சில சம்பவங்களை கண்ணுற்றுக்கொண்டிருக்கிறோம்.

இவற்றில் ஒன்று இன அழிப்பை முன்நின்று நடத்தியவரும் தமிழின அழிப்பிற்கு உபாயங்களை வகுத்தவரும் படுகொளைகளுக்கு முழுமுதற் காரணமாகவிருந்தவர் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவாகும்.அடுத்து குரூரமாக மிருகத்தனமாக கை கோர்த்துச் செயற்பட்டவர்கள் ஜனாதிபதி ராஜபக்க்ஷ மற்றும் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ஆகியோராகும். முள்ளிவாய்க்கால் சங்காரம் முடிந்து ஒரு மாதங்கள் கூட இராணுவத்தளபதியான சரத்பொன்சேகாவால் படுகொலை வெற்றியை கொண்டாடி நிம்மதியாக குடும்பத்துடன் இருக்க விதி விட்டுவைக்கவில்லை.

தமிழினத்தை கொன்றுகுவித்த வீரன் தான் என்ற மமதை பொன்சேகாவின் புத்தியில் புகுந்து, ஹிட்லரின் தலையில் இரண்டாம் உலக யுத்தத்தை தோற்றுவிக்க உற்பத்தியான சர்வாதிகார ரசாயனம் பொன்சேகாவின் மண்டையில் சுரந்து ராஜபக்க்ஷ குடும்பத்துடன் முரண்படுத்தி படுகுழியில் வீழ்த்தியிருக்கிறது. தமிழருக்கு ஈர்த்த அநீதியின் பரிசு பொன்சேகாவை வேறு ஒரு வடிவத்தில் தண்டனைக்குட்படுத்தி நரபலி நாயகன் சரத் பொன்சேகாவை கடூழியச்சிறையில் வாட வைத்திறுக்கிறது ,பொன்சேகாவின் சொத்துக்கள் பறிக்கப்பட்டு மனைவி பிள்ளைகள் பிரிக்கப்பட்டு நிம்மதியிழந்து தெருநீளம் திரிகின்றனர்.(பொன்சேகாவின் மனைவி கரு
நிறப்புடவையுடன் தமிழ்க்கோவில்களில் மண்டியிட்டு கதறி அழும் காட்சிகள் தமிழர்களையே மனம் கனக்க வைக்கிறது)

சோதிட சாஸ்திரங்களில் 100% சதவீத நம்பிக்கையுடைய ராஜபக்க்ஷ ஒரு சமூகத்தை கொப்பு குலையாக வெட்டிச்சரித்த பழி தன்னை அழித்துவிடுமென்ற பயம் உள்ளூர ஆட்டிப்படைத்தாலும் மந்திர தந்திரங்களாலும் சாந்தி பரிகாரங்களாலும் நிவர்த்தி செய்துவிடலாம் என்ற குருட்டு நாம்பிக்கையில் தங்கத்தினாலான தனது உயரத்தில் ஆளுருவச்சிலை,,, இந்தியாவில் பரிகார நிவர்த்தி போன்றவற்றை உறவினர்கள் மூலம் நடத்திக்கொண்டு பயத்தை மூடி மறைத்து தப்பிப்பதற்கு சட்டத்தையும் உலகத்தையும் ஏமாற்றுவதற்கான தந்திரோபாயங்களை உறங்காமல் செய்துகொண்டிருக்கிறார். இருந்தும் கொலைப்பழி விதிமூலம் அவரைத்துரத்திக்கொண்டிருப்பதை அவரும் அவரைச்சுற்றியிருப்பவர்களும் நன்குணர்ந்து விட்டனர்.

தான் இலண்டனில் கைது செய்யப்பட்டுவிடுவோமோ என்ற பயம், இலண்டன் பயணத்தை ஆரம்பத்தில் தள்ளி வைக்க அவரை தூண்டியது, ஆனால் விதி விட்டு வைக்கவில்லை யாரோ ஒரு மூன்றாமவரின்(சோதிடர்) ஆலோசனைக்கு அடிபணிந்து வெளிப்பகட்டுக்கு தான் ஒரு துட்டகாமினியி வாரிசான துணிச்சலானவன் எனக்காட்டுவதற்காக புறப்பட்ட இலண்டன் பயணம்,, அம்போவாகி,, இப்போ ஈழத்தமிழர்கள் வாழும் இன்னும் பல வெளிநாடுகளுக்குள் அவர் நுழைய முடியாத எழுவாயை தோற்றுவித்துள்ளது.

இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் ஜெர்மனிய படைகள் பிரான்ஸை கைப்பற்றியபின் இங்கிலாந்துக்குள் நீர்மூழ்கிக்கப்பல் மூலமும் ஆகாயவிமானங்கள் மூலமும் தமது முளு ஆளுமையை காட்டி கிட்டத்தட்ட இங்கிலாந்து அடிபணியும் நிலைக்கு கொண்டு வந்திருந்தன. ஆனால் விதிவசமாக ஹிட்லரின் மூளையில் பேராசையின் மூலம் சுரந்த இரசாயனம் ஜெர்மன் படைகளை ரஷ்யாவின் பக்கம் திருப்பியது 1941ம் ஆண்டு ரஷ்யாவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போர் 1943 ம் ஆண்டுவரை நீண்டு ஹிட்லரின் அராஜகத்துக்கு
ரஷ்யாவில் முடிவுகட்டப்பட்டது,ஆனால் ஹிட்லரின் படைகள் ரஷ்யாமீது படையெடுக்காமல் லண்டனில் குறியாக இருந்திருந்தால் இன்று சர்வதேச மொழியாக டொச், மொழி இருந்திருக்கும் அதேபோல ராஜபக்க்ஷவும் இலண்டன் பயணத்தை சிலகாலம் தவிர்த்திருந்தால் பல ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு ஒருவேளை சிரமமின்றி பயணப்பட்டிருக்க முடியும்.ஆனாலும் விதியது வலியது பொன்சேகாவை தன்வசப்படுதிய பின் ராஜபக்க்ஷவை நோக்கி தனது கரங்களை நீட்டத்தொடங்கியிருக்கிறது.

இன்று மனிததர்மத்தை மதிக்கும் மேற்கு நாடுகளுக்குள் ராஜபக்க்ஷ எளிதில் கால் வைக்கமுடியாத நிலையை இசைப்பிரியாவின் மரணசாசனம் தொடங்கி கணக்கற்ற மாவீரர்களினதும் பொதுமக்களினதும் படுகொலை குற்றச்சாட்டுக்கள் தடையினை ஏற்படுத்தி முட்டுக்கட்டையாகியிருக்கின்றன.இவற்றை பிரித்தானியாவின் செனல்4 தொலைக்காட்சி தொடங்கி உலகப்பிரசித்தி பெற்ற இணையத்தளமான விக்கிலீக்ஸ் மற்றும் தமிழ் இணையங்கள்வரை படுகொலை தடையங்களை தினம் தினம் வெளியிட்டு மிரட்டிக்கொண்டிருக்கின்றன.

ராஜபக்க்ஷவின் அடுத்த தலையிடியாக உருவெடுக்கப்போகும் பிரச்சினை முக்கியமான உலகநாடுகளின் தூதரகங்களுக்கு அவர் ஆணவத்துடன் தெரிவுசெய்த தூதுவர்கள் அனைவரும் படுகொலைகளில் நேரடியாக ஈடுபட்டிருந்த இராணுவ யுத்த போர்க்குற்றவாளிகளே.

இறுதியாக கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொடவை அரசாங்கத்தின் உயர் மட்ட விருப்பின் பேரில் இங்கிலாந்துக்கான இலங்கைத் தூதராக ராஜபக்க்ஷ தரப்பு நியமித்த போதும், அதனை பிரிட்டன் ஏற்க மறுத்துள்ளதது. இலங்கையில் புலிகளுடனான அரசாங்கத்தின் இறுதிக்கட்டப் போரில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக பரவலாக ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் இந்த விடயம் இலங்கை அரசாங்கத்துக்கு இன்னுமோர் பாரிய அடியாக விழுந்துள்ளது.பிரிட்டனிலுள்ள இலங்கைத் தமிழர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இராணுவத்தின் முக்கிய அதிகாரிகளின் போர்க்குற்ற விடயம் தொடர்பாக கிளர்ந்து எழுந்துள்ள நிலையில் அவற்றுடன் சம்பந்தப்பட்ட ஒருவரை தூதுவராக ஏற்றுக் கொள்வது வேண்டாத தலைவலியை உருவாக்கி விடும் என்று பிரித்தானிய அரசாங்கம் கருதுவதாக தெரிகின்றது. வசந்த கரன்னாகொடவின் நியமனத்தை பிரிட்டன் நிராகரித்துள்ள செயலால் இலங்கை அரசாங்கம் பிரிட்டன் மீது கடும் ஆத்திரத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

மற்றும் ஒரு யுத்தக் குற்றவாளிகளில் ஒருவரென சந்தேகிக்கப்படும் இராணுவ உயர் அதிகாரி ஒருவர் ஐ.நாவுக்கான இலங்கைப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்கிற தலைப்பில் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வொசிங்ரன் ரைம்ஸ் பத்திரிகை கட்டுரை ஒன்றை பிரசுரித்து உள்ளது

ஸ்ரீலங்கா இராணுவத்தின் 58 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர டீ சில்வா, வன்னிப் ina alipuபிராந்திய தளபதியாக இருந்தபோது இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வன்னியில் பாரிய யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றன என்று கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை கூறவென நிபுணர் குழு ஒன்று செயற்பட்டு வரும் நிலையில் சவேந்திர டீ சில்வா ஐ.நாவுக்கான இலங்கைப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவரது பொறுப்பில் இருந்த படையினர் சரண் அடைய வந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகளையும், பொதுமக்களையும் படுகொலை செய்து விட்டனர் என்று சந்தேகிக்கப்படுகின்றது என்றும் இலங்கையின் சண்டே லீடர் பத்திரிகைக்கு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா வழங்கி இருந்த பேட்டி ஒன்றில் பாதுகாப்பமைச்சுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்க்ஷவின் உத்தரவுக்கு அமைய சவேந்திர டீ சிலவா தலைமையிலான படைப் பிரிவினரால் சரணடைந்த போராளிகளும் பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டனர் என்று கோடிகாட்டி இருந்தார் என்றும் வொசிங்ரன் ரைம்ஸில் கூறப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகள் உட்பட பொது இடங்கள் மீது இவர்கள் எறிகணை வீச்சுக்களை நடத்தினர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச நெருக்கடிகள் குழு என்கிற அரச சார்பற்ற சர்வதேச அமைப்பின் இலங்கை விவகாரங்களுக்கான பணிப்பாளர் Alan Keenan ஐ.நாவுக்கான பிரதிநிதியாக சில்வா நியமிக்கப்பட்டிருக்கின்றமை இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்ற விசாரணைகளுக்கு ஒரு இடையூறாகவே இருக்கும் என்று கூறி உள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவும், அவரது அரசாங்கமும் பாரிய யுத்தக் குற்றங்களை மேற்கொண்டமை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகம் நன்கு அறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் இரகசிய தகவல் பரிமாற்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக விக்கிலீக்ஸை மேற்கோள் காட்டி, அந்த சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவினால் கடந்த 2006ம் ஆண்டு ஜுலை மாதம் மீளவும் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம், 2009ம் ஆண்டு மே மாதம் நிறைவடைந்தது. இந்த காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் மகிந்தவின் அரசாங்கத்தினால் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்த அமெரிக்கா பலமுறை வலியுறுத்திய போதும், இலங்கை அவற்றை முழுமையாக நிராகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட சிறீலங்கா அதிகாரிகள் மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளமுடியும் என அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரி லுயிஸ் மொறினோ ஒகம்போ அவர்களும் தமிழர்களுக்கான சில சட்ட வழிமுறைகளை தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் மற்றும் போர்க்குற்றங்களில் தொடர்புள்ள பலர் இரட்டைக் குடியுரிமையை கொண்டவர்கள் எனவே அவர்கள் மீது நடவடிக்கையை மேற்கொள்ளமுடியும். சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்களில் அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவும், முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் பொன்சேகாவும் பிரதம குற்றவாளிகள் என அமெரிக்க தூதுவர் பற்றீசியா தெரிவித்துள்ளார். இதனிடையே, சிறீலங்காவில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்கமுடியுமா என, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் கூட்டத்தொடரில் பங்குபற்றிய வொசிங்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதிநதி றிச்சாட் டிக்கரிடம் இன்னர்சிற்றி கேள்வி எழுப்பியிருந்தது. சீனாவில் இருந்து அவுஸ்திரேலியா வரையிலுமான விவகாரங்களை தான் கையாள்வதாகவும், ஆனால் சிறீலங்காவில் போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்கள் அமெரிக்காவில் இருக்குமிடத்தில் அவர்களை கைதுசெய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்றங்களில் இராணுவத்தால் கொல்லப்பட்டதாக ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டு காண்பிக்கப்படும் காணொளிகள் அதிகமானவை சரணடைந்த போராளிகளினுடையவைகளே இருந்தாலும் அதிகமான பொதுமக்களும் கொல்லப்பட்டிருப்பதாகவும் ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் கற்பழித்து பின்னர் கொல்லப்பட்டதாகவும் சிலர் உயிர்தப்பி இருப்பதாகவும் அவர்களில் சிலர் அச்சுறுத்தல் காரணமாகவும் இன்னும் பலர் அவமானம் காரணமாகவும் மௌனம் சாதிப்பதாகவும் நம்பப்படுகிறது.பல மனித உரிமை மீறல் சித்திரவதைக்குட்பட்டு உயிருடனிருப்பவர்களை தவிர்த்தாலும் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் ஆதாரங்களையும் ஊடகங்கள் பொதுப்படையாக படுகொலை என்ற அளவிலிருந்து சற்று வெளியேறி அடையாளப்படுத்தி வெளியிடவேண்டுமென பொதுமக்கள் பலர் விரும்புகின்றனர்.

பொது மக்களின் படுகொலை மற்றும் பாலியல் வன்புணர்ச்சிக்கான ஆதாரங்களை இன்று சர்வதேச கவனத்தை பெற்றிருக்கும் செனல் 4 தொலைக்காட்சி மூலம் ஒருமுறையேனும் பகிரங்கப்படுத்திவிட்டால் இலகுவாக யுத்த குற்ற ஆவணங்களுடன் அவை இலகுவாக இணைந்துவிடும் என்பதே பல கடைசி மட்ட தமிழர்களின் ஆதங்கமாக இருக்கிறது.

லண்டனில் மிகவும் சமயோசிதமாக பிரித்தானிய அரசை நெருக்கடிக்குள் தள்ளிவிடாமல் ராஜபக்க்ஷவின் வருகைக்கு எதிர்த்து போராட்டத்தை முன்னின்று நடத்தி வெற்றிகண்ட பிரித்தானிய தமிழர் பேரவை பல ஆயிரம் பொதுமக்களின் படுகொலை ஆதாரங்களையும் பாலியல் வன்கொடுமைக்குள்ளான தாய் சகோதரிகளின் கொடூரங்களையும் யுத்தக்குற்றத்துடன் இணைத்து நியாயம் கிடைக்க வழிதேடுவார்கள் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழரின் போராட்ட வரலாற்றில் ஒரு கதவு மூடப்பட்டுவிட்டாலும் ஒரு கதவு இன்று எம்மை நோக்கி தானாக திறக்கப்பட்டுள்ளது. அதை சமயோசிதமாக கொண்டு சேர்க்கவேண்டியது எங்கள் எல்லோரது பாரிய பொறுப்பாகும்,

ஈழதேசம் இணையத்திற்காக,
கனகதரன்,

நன்றி ஈழதேசம்,