தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2011 க்கான சட்டசபைத்தேர்தல் தமிழகத்து நவீன எட்டப்பர் கருணாநிதிக்கும், துரோகி திருமாவளவனுக்கும், கொள்கையற்ற ராமதாஸ் அவர்களுக்கும், கூட்டாளிகாங்கிரஸ்க்கும் காலத்திற்கும் மறக்க முடியாத மரண அடியுடன்,, ஒரு நல்ல படிப்பினையையும் கொடுத்திருக்கிறது. ஒட்டுமொத்த தமிழினம் எதிர்பார்த்தபடி தமிழகமண் ஒரு ஆட்சி மாற்றத்தையும் கண்டிருக்கிறது. அராஜகத்துக்கும் மக்கள் விரோதப்போக்கிற்கும் கிடைத்த தண்டனையாகவும் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம்.

கருணாநிதியின் தலைமையில் உருவான இந்தக்கூட்டணியின் தோல்விக்கான காரணம் என்ன??. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை தத்தம் வசதிக்கு எடுத்து வைத்தாலும் வரலாறு காணாத இந்தப்படுதோல்வி கருணாநிதியின் அரசியல் வாழ்வின் முடிந்த முடிவாக காலத்தால் அடையாளப்படுத்தப்பட்டிருப்பது, மற்றவர்களை விடவும் கருணாநிதியை மிகவும் சிந்திக்க வைத்திருக்கும்.

கருணாநிதியின் குடும்ப ஆதிக்கமும் ஊழலும் நிர்வாக சீர்கேடுகளும் மக்களை வெறுப்பிற்கு கொண்டு சென்றிருந்தாலும், ஈழத்தமிழினத்தின் அழிவுக்கு கருணாநிதி துணைபோனதும் ஆடிய நாடகங்களும் கருணாநிதியை மக்கள் வெறுத்ததற்கு மிக முக்கியமான ஒரு காரணியாக கொள்ளலாம்.

எது எப்படியிருப்பினும் மிகமோசமான சர்வாதிகார "சுயநல குடும்ப" ஆக்கிரமிப்பிலிருந்து தமிழக மக்களுக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. தொடர்ந்து பதவி ஏற்று ஆட்சி செய்ய இருக்கும் அ இ அ தி மு க, ஜெயலலிதா தலைமையிலான அரசு, தமிழக மக்களின் ஈழ ஆதரவை, இதுவரை அவர்கள் வெளிப்படுத்திய எண்ண ஓட்டத்தை எப்படி கையாளப்போகிறது எப்பேற்ப்பட்ட மாறுதலை உண்டுபண்ணப்போகிறதென்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

60 வருட தமிழக அரசியல் வரலாற்றில் திராவிடக்கட்சிகள் "ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்" என்று ஒரு பழைய பழங்கதையும் உண்டு. இருந்தாலும் உலக மாறுதலும், மக்களின் கல்வியறிவு, அரசியலறிவு வளர்ச்சியும், பட்டுணர்ந்த பாடங்களும் பெருத்த அனுபவசாலியான அரசியல் சாணக்கியர் கருணாநிதி தனது எதேச்சதிகாரப்போக்கால் ஏற்படுத்திக்கொண்ட பெருவீழ்ச்சியும், புதிதாக அரசமைக்க இருக்கும் ஜெயலலிதாவுக்கு ஒரு நல்ல அனுபவ பாடத்தையும் எச்சரிக்கையையும் விட்டுச்சென்றிருக்கிறது.

மக்கள் விரும்பிய ஜனநாயகத்துக்கு கிடைத்த ஒரு வெற்றியாக இதை எடுத்துக்கொண்டாலும், புதிதாக அமையவிருக்கும் அரசு, அடிப்படையில் மாற்றத்தை உண்டுபண்ணி புதிய சிந்தனைகளை உட்புகுத்தி பழய தமிழ்நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை தவிர்த்து வித்தியாசப்பட்டு ஏதாவது செய்ய முணையாவிட்டால் மீண்டும் ஐந்துவருடங்களில் (ஐயா இறந்துபோனாலும்?), அவரது வாய்ப்பாட்டை பாடமாக்கி அதே வாய்ப்பாட்டை வேதவாக்காக நினைத்துக்கொண்டிருக்கும் அவரது வாரிசுகள் திரும்பவும் தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் புதிய கணக்குப்போட வருவது தவிர்க்கமுடியாமல்ப்போகலாம்.

இன்று ஜெயலலிதா அம்மையாரை தமிழகமக்கள் வேண்டி வரவேற்று வெற்றிபெற வைத்திருக்கிறார்கள் என்று 100% சொல்லமுடியாது. தீயசக்தியான கருணாநிதியை அப்புறப்படுத்தவேண்டிய காலத்தின் கட்டாயம்.. மக்களை மாற்றி வாக்களிக்க வைத்து அம்மையாரை பெருவெற்றி கொள்ள வைத்திருக்கிறது. இந்த யதார்த்தம் சாதாரண பாமரனுக்கும் புரியும். ஜெயலலிதா அவர்களின் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தாலும் பதவி ஏற்பதற்கு முன்பே ஜெயலலிதா இந்த யதார்த்தத்தை உணராமலோ அல்லது வேண்டுமென்றோ மறுத்திருக்கிறார்.

ஜெயலலிதா அவர்கள் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தபோது இன்று அதிமுக பெற்றிருக்கும் இந்த வெற்றி கருணாநிதிக்கு எதிராக எழுந்த அலையால் கிடைத்த வெற்றியல்ல ஏற்கெனவே 2006 க்கு முன்பும் அதற்கு முன்னய ஆட்சியிலும் அதிமுக செய்த சேவைகளை மனதில்க்கொண்டு மக்கள் வாக்களித்திருக்கின்றனர். என்று தனது வெற்றி பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அம்மாவின் அன்றய ஆட்சி அருமையானதாக இருந்திருந்தால் 2006 ஏன் ஆட்சியை இழக்கவேண்டி வந்தது என்பதை அவர் உணரவில்லை. அதுபற்றி அவர் எதுவும் கூறவுமில்லை. (தமிழ்நாட்டில் இரண்டு ஐந்தாண்டுகள் எம்ஜீஆர் தவிர எவரும் முதலமைச்சராக பதவி வகித்ததில்லை.) ஜெயலலிதா அவர்களின் இந்தப்போக்கு நிச்சயம் மாறவேண்டும். நிதானமாக மக்களின் மனநிலையை அவர் புரிந்து கொண்டு பொதுநலனுடன் நல்லது செய்வார்கள் என்பதே கருணாநிதியின் கயமை ஆட்சியிலிருந்து தப்பித்து அம்மாவை ஆதரித்த மக்களின் பேரவாவாக இருக்கும்.

ஜெயலலிதா அடிப்படையில் ஆணவப்போக்குடையவர் என்றும் அனுசரித்து போகத்தெரியாதவர் என்றும் ஏற்கெனவே அறியப்பட்டவர். ஆனால் தமிழ்நாட்டின் அதிகார வர்க்கமான (எம் எல் ஏ. மந்திரிகள் அதிகாரிகள்) ஆகியோர்களை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு ஜெயலலிதா அவர்களின் கடும்போக்கு சரியானது என்று எடுத்துக்கொண்டாலும், நாட்டு நலனை முன்னிலைப்படுத்தி சரி பிழைகளை பகுத்துணர்ந்து வகுத்துக்கொள்ளாமல் தாந்தோன்றித்தனமாக ஜெயலலிதா அவர்கள் எடுத்த முடிவுகள் முன்னைய ஆட்சிக்காலத்தில் பல இடங்களில் அவருக்கும் அவர்சார்ந்த அரசுக்கும் அவப்பெயரும் அதனால் நிர்வாகத்தில் பெருத்த சீர்கேடுகளும் உண்டாகி சிக்கல்களை பல தருணங்களில் உருவாகி மக்கள் பெரு அவஸ்த்தைக்குள்ளானதுண்டு.

சான்றாக அதிகாரிகள் அரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கால் கும்பகோணம் மஹாமகத்தின்போது நீரில் மாண்ட உயிர்ப்பலிகள், தன்னிச்சையாக முளைத்து பணமே குறியாக இயங்கிய பாதுகாப்பற்ற உள ஊனமுற்றோர் காப்பக விடுதியில் தீவிபத்து ஏற்பட்டு பலர் எரிந்த சம்பவங்கள், 2004 கும்பகோணத்தில் சீர்கேடான தனியார் பெண்குழந்தைகள் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டு குழந்தைகள் கருகி மாண்ட நிகழ்வுகள் மறந்துபோக முடியாது.

பொது வாழ்வுக்கு தம்மை அற்பணிப்பவர்கள் மக்களை அவதிக்குள்ளாகாத வகையில் எளிமையாக நடந்து கொள்ள வேண்டிய கடப்பாடும் உண்டு. தாம் எடுக்கும் தப்பான முடிவுகளால் உருவாகி வரும் இடர்கள் அனைத்தையும் தாமே பொறுப்பெடுத்து சீர்செய்யவேண்டிய கட்டாயமும் உண்டு. நடைமுறையில் கண்ட நன்மை தீமைகளை சீர்தூக்கிப்பார்த்து திட்டங்களை வகுக்கவேண்டிய தார்மீகப்பொறுப்பும் பொதுவாழ்வில் கால் எடுத்துவைக்கும் அரசியல்வாதிகளுக்குண்டு. தவறுகள் அனைத்தையும் மறுத்து அல்லது மூடி மறைத்து சிறு குழந்தைகள் போல் நியாயப்படுத்தும் மனநிலையை இவர்கள் நிறுத்தவேண்டும், தவறை தவறாகவும் சரியானதை சரியானதாகவும் ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்ளவேண்டும்.

ஜெயலலிதா அவர்களையும் கருணாநிதியையும் எடுத்துக்கொண்டால். இருவரும் பிடிவாதத்திலும்சரி மற்றய விடயங்களிலும் சரி கொஞ்சமும் கூடிக்குறைந்தவர்கள் அல்ல. ஜெயலலிதா தனக்கு சாதகமாக பட்டதை எவரையும் கலந்து ஆலோசிக்காமல் எந்தக்குற்ற உணர்வுமில்லாமல் அப்படியே சட்டமூலம்போல் "உள்நோக்கமில்லாமல்" நிறைவேற்ற முனைப்புக்காட்டுபவர். ஆனால் கருணாநிதி அப்படிப்பட்டவரல்ல. கருணாநிதியின் திட்டத்தில் நிச்சியம் உள்நோக்கமும் சுயநலமும் நிறைந்திருக்கும். போடப்போகும் திட்டத்தால் ஏற்படப்போகும் எதிர்விளைவு எப்படியிருக்கும் என்பதை நன்கு புரிந்துகொண்டு சமயோசிதமாக தப்பிப்பதற்கான முன்னேற்பாடுகளுடன். மிக அமைதியாக காய் நகர்த்துவதில் வல்லவர். தனக்கு சாதகமானவர்களையும் தன் கருத்தில் முரண்பட்டவர்களையும் தந்திரமாக தன்முன் இருத்தி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்று
எதிரணியையும் வீழ்த்தி ஒப்புதல் பெறுவதுபோன்ற தோற்றத்தை மிக தந்தரமாக அப்பாவித்தனமாக செய்து காரியத்தை நிறைவேற்றி சாதித்து முடிப்பார். ஆராய்ந்து பார்த்தால் ஜெயலலிதாவிடம் நான் என்ற ஆணவமும் கருணாநிதியிடம் நரியைவிட மோசமான தந்திரமும் இருப்பதைக்காணலாம்.

இருவரும் தம்மை முன்னிலைப்படுத்துவதையே குறியாக கொண்டிருக்கின்றனர். இவை மனித இயல்பானதாக இருந்தாலும். ஜெயலலிதா படாடோபமாக வாழ்க்கை நடத்துவதாக மக்கள் உணரவேண்டும் என்பதில் கருணாநிதி மிகுந்த கவனம் செலுத்தி தன்னை சாமானியனாக காட்டுவதற்கு முயலுவதை காணலாம். ஆனால் ஜெயலலிதாவையும் விட தன்னை முன்னிலைப்படுத்துவதில் காலத்தையும் பொதுப்பொருளையும் செலவளிப்பவர் கருணாநிதிதான் என்ற உண்மையை பாமரன் அறிந்திருக்கவில்லை. ஒரு கோடு போட்டுவிட்டு பக்கத்தில் இன்னும் ஒரு சிறிய ஒரு கோடு போட்டுவிட்டால் ஏற்கெனவே இருந்த சாதாரண கோடு பெரிய கோடுபோல் காட்டி உணர்த்துவதுபோல் ஜெயலலிதாவை சிறுமைப்படுத்தும் விடயத்தில் கருணாநிதியின் செயற்பாடு மிகவும் நுணுக்கமாகவிருக்கும். ஊடுருவி நுண்ணறிவு கொண்டு பார்த்தாலன்றி கருணாநிதியின் தந்திரம் எவராலும் இலகுவில் அறிந்துகொள்ள முடியாதது .

பாராட்டு விழாக்களையும் சினிமா விழா அரங்குகளையும் கருணாநிதி சரியாக விரும்பி பயன்படுத்துவதுபோல் இந்திய அரசியல்வாதிகள் எவரும் பயன்படுத்துவதில்லை. ஜெயலலிதா அப்படியான நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் தனது முக்கியத்துவம் குறைந்து போகும் என்ற அச்ச எண்ணம் அவரிடம் முன் நிற்பதே காரணமாகவும் இருக்கக்கூடும்.

தமிழ்நாட்டு பாமரன் அடிப்படையில் உணர்வுள்ளவன், உணர்ச்சி வசப்படக்கூடியவனும் கூட, இந்த பலவீனத்தை சரியாகப்பயன்படுத்தும் தமிழகத்து சினிமா கூத்தாடிகள் தம்மை வானத்து மனிதர்கள்போல் பாவனைகாட்டி பாமரனை ஏமாற்றி பிழைப்பதுண்டு. இப்படி மக்கள் ஏமாறிப்போவதற்கு ஒரு காரணமும் உண்டு. மறைந்த முதலமைச்சர் எம் ஜீ ஆர் அவர்கள் ஒரு மனிதாபிமானியாகவும் சினிமா நடிகராகவும் அரசியல்வாதியாகவும் சமூக நலன்விரும்பியாகவும் பிறந்து வாழ்ந்ததுண்டு. எம்ஜீஆர் அவர்கள் தனக்கென்று வாழாமல் மக்களுக்காக வாழ்ந்து தன்னை அர்ப்பணித்ததால் நடிகரான எம்ஜீஆர் அவர்களால் ஈர்க்கப்பட்ட பாமர மக்கள், சினிமாவில் வீரனாகவும் மக்கள் தொண்டனாகவும் கொடைவள்ளலாகவும் நடிக்கும் அத்தனை நடிகர்களும் எம்ஜீஆர் போல் இருப்பார்கள் என்று ஏமாந்து போவதை காணலாம்.

ஆனால் சுயநலமான இன்றய சினிமா கூத்தாடிகள் மக்களை ஏய்த்து ஏமாற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதே நிதர்சனமாகும். மக்களின் இந்தப்பலவீனத்தை கருணாநிதி நன்கு அறிவார் ஆரம்பகாலத்தில் எம்ஜீஆர் அவர்களை வைத்து காரியம் சாதித்து பின் எம்ஜீஆர் அவர்களுக்கே கடுக்காய் கொடுத்தவர் கருணாநிதி.
தமிழ்நாட்டு பாமரன் தான் விரும்பும் சினிமா ஹீரோ ஹீரோயினுக்காக உயிரையும் அர்ப்பணிக்கத்துணிந்தவன் என்பதும். அடுத்து தனது அரசியல் தலைவனை கடவுளாக மதிப்பவன் என்பதும். ஒன்றுமில்லாத இந்த மாயைகளுக்காக என்னவும் செய்யக்கூடிய ஏமாளி என்பதும். தனது தாய் தந்தை குடும்பம் என்பதெல்லாம் அவன் பொருட்படுத்தமாட்டான் என்பது இந்த சினிமா கூத்தாடிகள். அரசியல் அரக்கர்கள் தவிர உலகம் அறிந்த பிரசித்திபெற்ற உண்மையாகவும் காணப்படுகிறது.

இந்நிலையை நீறூற்றி வளர்த்த பெருமை திராவிடக்கட்சிகளையும் கருணாநிதியை சாரும். கருணாநிதி தனது இருப்பை சினிமா சார்ந்தே நகர்த்திவருவதையும் காணலாம். 87 வயதில் எழுந்து நிற்க முடியாத நிலையிலும் பெண்சிங்கம், இளைஞன், பொன்னார் சங்கர், என சினிமாவை விட்டுவிலகாமல் கருணாநிதி தனது வாழ்க்கையை தொடருவதை காணலாம்.

தேர்தலுக்கு சிலகாலங்களுக்கு முன்புவரை கருணாநிதி பாராட்டு விழாக்களிலும் சினிமா நிகழ்ச்சிகளிலும் இடைவிடாது இரண்டறக்கலந்திருந்தார். இந்த நிகழ்வுகள் அனைத்திலும் இன்று தமிழகமக்கள் மனங்களில் முன்னணியில் நிற்கும் ரஜினிகாந்த், கமலஹாசன். வைரமுத்து, வாலி, தொடங்கி விஜய் விவேக் வடிவேலுவரை,,. (சமீபத்தில் கருணாநிதி குடும்பத்துடன் ஏற்பட்ட சினிமா வியாபார பிணக்கால் இப்போ எதிரணியில் நிற்கும் விஜய் சென்ற ஆண்டுவரை கருணாநிதியின் கண்ணசைவில் நின்றவர்தான்), விக்ரம் பாரதிராஜா இசைப்புயல் ரஹ்மான், நடிகைகள் குஷ்பு அசின் தம்மன்னா நயந்தாரா த்ரிஷா ஸ்ரேயா பிரியாமணி நமீதா என்று எவரையும் அவர் புறந்தள்ளாமல் அருகில் இருத்தி கருணாநிதி அழகு பார்த்ததுண்டு. உள்நோக்கமில்லாமல் இலாபமில்லாமல் எவரையும் கருணாநிதி கட்டியணைத்தது கிடையாது.

எந்த நடிகர் அதிக மக்களை தம்வசம் ஈர்த்து வைத்திருக்கின்றனரோ அந்த நடிகர் சிறப்பாக நடித்தாரோ நடிக்கவில்லையோ...கவலைப்படாமல் தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகர், நடிகைகளுக்கான விருதுகளை அள்ளிக் கொடுத்தார் கருணாநிதி .. டாடி மம்மி வீட்டிலில்லை தடைபோட யாருமில்லை விளையாடுவோமா தில்லனா போன்ற பாடல்களுக்கு இலக்கிய விருது கொடுத்த பெருமையும் ஐயா கலைஞர் அவர்களையே சாரும். நடிகைகள் அசினுக்கும், தமன்னாவுக்கும், அனுஸ்காவுக்கும், கலைமாமணி விருது வழங்கினார். இவைகளை ஏன் செய்தார் என்றால், காரணமில்லாமல் கண்ணாயிரம் ஆற்றைக்கட்டி இறைப்பாரா,?

தமிழ்நாட்டின் சினிமா பைத்தியமான பாமரன் தனது அபிமான நடிகைக்கு விருது வழங்கிய ஐயாவை மறப்பானா? அவன் ஐயாவின் அன்பில் பனியாக உருகிப்போகவேண்டும் கூட்டிக்கழித்து கணக்குப் போட்டுப்பார்த்தால் தனது வாக்கு வங்கிக்கு அச்சாரமாக அவர் போட்ட அத்திவாரம்தான் அனைத்து விருதுகளும் என்பது விஞ்ஞானரீதியாக சிந்தித்தால் பதில் சிலருக்கு மட்டும் சிக்கக்கூடும்.

சினிமா தவிர்த்து நேரடி அரசியல் தவிர்த்தும் கருணாநிதியின் ஜால்ராக்கள் என்று சொல்லப்படுவோர் இருவர் 1, குஞ்சாமணி என்று தமிழ்நாட்டில் செல்லமாக அழைக்கப்படும் ஆளில்லா திராவிடர் கழக தலைவர் வீரமணி. 2, வெற்று சாக்குப்பை என்று சொல்லப்படும் சுப வீர பாண்டியன் ஆகிய இருவரும் இருக்கின்றனர். கருணாநிதி தனது இக்கட்டான நேரங்களில் தன்னை நியாயப்படுத்தி தப்பித்துக்கொள்ளுவதற்காக இந்த இருவரையும் இலகுவாக பாவித்து அறிக்கை விட்டு தான் தப்பித்து விட்டதுபோல் சமூகத்தில் காட்டிக்கொள்ள வேண்டிய தேவைகள் உண்டு. தேர்தல் காலங்களிலும் ஈழப்பிரச்சினை விகாரமாக கருணாநிதியை மோதியபோதும் இந்த இரண்டு கூலிக்காரர்களும் கருணாநிதி எழுதிக்கொடுப்பதை தமது பதிவாக அறிக்கையிட்டு கூலி வாங்கிக்கொள்வதும் உண்டு.

இதில் நெஞ்சில் குத்திய வஞ்சக நஞ்சாக இருக்கும் சுப வீரபாண்டியன் என்பவரை ஈழத்தமிழர்களால் என்றும் மறக்கமுடியாதவர். என் தேசத்தின் தாய், அன்னை பார்வதி அம்மா அவர்கள் சென்ற ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ உதவிக்கு தமிழ்நாட்டுக்கு செல்ல முயன்றபோது குறுக்கே நின்று குளப்பி கலகம் விளைவித்த கருணாநிதிக்கு பல்லவிபாடி கருணாநிதியின் கயமையை நியாயப்படுத்திய வஞ்சகன். இந்த சுப வீர பாண்டியன் என்பவர். சிலவிடயங்கள் இன்று சிலரால் மறைக்கப்பட்டாலும் தமிழ்நாட்டின் மானமுள்ள தமிழர்களாலும் ஈழத்து மொத்த தமிழினமும் காலாதி காலமும் வரலாற்று பதிவுகளில் இந்த கயவர்களின் கபடம் பதிவாகத்தொடரும், நான் உயிருடன் இருக்கும்வரை தினமும் சரி சிலநாட்களுக்கு ஒருமுறையேனும் சரி இந்த நாசகாரர்களை ஞாபகப்படுத்திக்கொண்டேயிருப்பேன்.

கயவன் கருணாநிதி தேர்தலுக்கு சிலதினங்களுக்கு முன்புகூட திருவாரூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது ஒரு பத்திரிகையாளர்,, ஈழத்தமிழர் பிரச்சினை தேர்தல் வெற்றியை பாதிக்குமா என்று கேள்வி கேட்டபோது. கருணாநிதி மிகவும் கோபமாக "தேர்தலை பாதிக்காது" என்று ஒற்றை வரியில் பதிலளித்து, பின் ஒரு கேள்விக்கு அங்கு ஒரு பிரச்சினையுமில்லை இப்போ அவர்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்களெல்லாம் மத்திய அரசு செய்துகொண்டிருக்கிறது. என்று பதிலளித்தார், (அங்கு நிலமை சீராக இருந்தால் ஏன் ஐயா இங்கு நீங்கள் படு தோல்வி கண்டிருக்கிறீர்கள்)

நடந்து முடிந்த இத்தேர்தலின்போது செந்தமிழன் சீமான் தவிர வேறு எவராலும் ஈழப்பிரச்சினை தமிழ்நாட்டில் பெரிதாகப்பேசப்படவில்லை. ஆனாலும் சீமான் அவர்களின் எழுச்சி முழக்கங்களும் தமிழகத்து மக்களின் மனதில் படிந்து கிடந்த ஈழத்து படுகொலைக்காட்சிகளும். இன்னும் சொல்லில் வடிக்கமுடியாத பிறகாரணிகளும் தேர்தலில் கருணாநிதியை குடும்பத்துடன் பழிதீர்த்திருக்கிறது என்ற மகிழ்ச்சியை மட்டும் சொல்லிக்காட்ட முடியும். இந்த செயற்கரிய செயலுக்கு ஈழத்தமிழினம் செந்தமிழன் சீமான் அவர்களுக்கும் தமிழகத்தமிழர்களுக்கு என்றும் நன்றி கொண்ட உறவாக இருக்கும்.

தேர்தலில் தோல்வியுற்று முடங்கிப்போயிருக்கும் கருணாநிதியை பற்றிய பதிவு இன்று தேவைதானா என்றும் சிலர் நினைக்கலாம். ஆனால் தேர்தலில் தோல்வியுற்றது மட்டுமல்ல "கருணாநிதி இத்துடன் தமிழ்நாட்டிலும் தமிழர் மனங்களிலும் காலாவதியாகிப்போனார்" என்பதை தெரியப்படுத்துவதே இந்தப்பதிவின் நோக்கம்.

2011ல் அம்மாவின் ஆட்சி தொடங்குகிறது 2016 மே வரை அம்மாவின் ஆட்சி தொடரும் 87 வயது முடிந்து 88 வது வயதில் கருணாநிதி ஓய்வெடுக்கிறார். தனக்கு மக்கள் ஓய்வு தந்திருக்கின்றனர் என நேற்றைய முந்தினம் இயலாமையின் வெளிப்பாடாக தனது வெப்பத்தை கக்கி பத்திரிகை ஒன்றிற்கு அனுப்பியிருந்தார், 2016 வரும்பொளுது தாத்தாவுக்கு வயது 93 அந்த வயதிலும் அவர் ஆரோக்கியமாக இருந்தாலும் வாரிசுகள் அவரை முக்கிய இடத்தில் இருக்க இனி விடப்போவதுமில்லை. கால மாற்றம் அவருக்கு கடைசி நேரத்தில் நிறைய பாடங்களை புரிய வைத்திருக்கும். ஆனால் கருணாநிதி திருந்துவார் என்று எவரும் எதிர்பார்க்கவும் மாட்டார்கள். கருணாநிதி திருந்தப்போவதுமில்லை. ஆனால் நிறைய விடயங்களை உள்ளூர அவர் உணர்ந்து புரிந்து கொண்டிருப்பார் என்பது திண்ணம்.

போன புத்தியை யானையால் கட்டி இழுத்து எந்தப்பயனுமில்லை. நடக்கப்போவது நன்றே நடக்கவேண்டும். நாம் எமக்கான முயற்சியை முழு மூச்சாக செய்ய வேண்டியதே எங்கள் கடமையாகும். இந்தத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று கருணாநிதி கூட்டம் படு தோல்வியடைந்தது தமிழக மக்களைவிடவும் ஈழத்தமிழினத்திற்கே அதிக மனமகிழ்ச்சி என்பதையும் அம்மையார் அவர்களுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றோம்!. கருணாநிதியின் தோல்வியை விட வேறு மகிழ்ச்சி எங்களுக்கு இந்த நூற்றாண்டில் இல்லை! இல்லை!,

அந்த வகையில் புதிதாக 16, 05, 2011, திங்கள் நண்பகல் 12.15க்கு பதவி ஏற்க இருக்கும் செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்கள் ஈழ போர்க்குற்றவாளியான ராஜபக்க்ஷவை போர்க்குற்றவாளியாக பிரகடனப்படுத்தி விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்று கடைசியாக முழங்கியிருக்கிறார்.. 2009 யுத்தம் முடிந்தபின்பும் இந்திய இராணுவத்தை அனுப்பி தமிழீழம் பெற்று தருவேன் என்றும் கூறியிருக்கிறார். இவையெல்லாவற்றையும் ஒரு இரவில் நிறைவேற்ற முடியாது என்பதும் யாவரும் அறிந்ததே.. மனமிருந்தால் மட்டுமே சிலவிடயங்களில் வெற்றி கொள்ள முடியும் என்பதும் உண்மை.கருணாநிதி கடைசி ஈழத்தமிழன் அழிந்தாலும் தனது நாடகத்தை நிறுத்தமாட்டார் என்பது கருணாநிதிக்கும் தெரியும் தமிழினத்துக்கும் தெரியும்.. அம்மா அப்படி நாடகம் ஆடமாட்டார் என்று ஈழமக்கள் நம்புகின்றனர்.. ஜெயலலிதா அம்மையார் அவர்கள் தான் கூறிய வாக்குறுதிகளை ஒன்றரை வருடங்களில் செய்து முடிப்பதாக கூறியிருக்கிறார். ஈழ விடுதலையும் இதற்குள் அடங்கியிருக்கிறதா என்பதே அம்மையாரின் முன் வைக்கப்படும் கேள்வி. அமையப்போகும் புதிய தமிழக அரசுக்கு ஈழத்தமிழர்களான எமது இதயபூர்வமான வாழ்த்துக்கள்...

ஈழதேசம் இணையத்திற்காக
கனகதரன்,