சர்வதேச விதிமுறைகளை மீறி பாரிய இனப்படுகொலை புரிந்த ஒரு இராணுவம், இந்திய-தமிழக மீனவர்களை அன்றாடம் கடலில் கொன்றொழித்து தொடர்ச்சியாக அத்துமீறி அடாவடி புரிந்து வருகின்ற இராணுவம்,

அப்பேற்பட்ட ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு எக்காரணம் கொண்டும் இந்தியாவில் பயிற்சி அளிக்கக்கூடாது, என தமிழ்நாடு அரசு தனது தார்மீகமான எதிர்ப்பை மிகத்தெளிவாக பலதடவை உத்தியோக பூர்வமாக இந்தியமத்திய அரசுக்கு தெரிவித்தபோதும், தமிழக அரசிற்கோ தமிழக அரசியற் கட்சிகளுக்கோ, எள் முனையளவும் மதிப்பளிக்காமல்  இலங்கை இராணுவத்துக்கு பயிற்சிகளை இந்தியா தொடர்ந்து வழங்கும் என இந்திய காங்கிரஸ் (மத்திய) அரசின் பாதுகாப்பு இணை அமைச்சகம் அதிகாரபூர்வமாக ஆணவமாக தெரிவித்திருக்கிறது.

இந்தியாவை ஆட்சி செய்யும் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் - கொள்கை வகுப்பாளர்களின் தொடர்ச்சியான தமிழர் விரோதப்போக்கின் பிரதிபலிப்பே தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கை உதாசினப்படுத்தப்பட்டு, தமிழகத்தை மதிக்காத மத்திய அரசின் எதேச்சதிகார முடிவாக பாதுகாப்பு அமைச்சின் அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு மட்டுமன்றி, இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மானிலங்கள், மற்றும் காங்கிரஸுக்கு ஒத்தாசையாக இருக்கும் மானில ஆட்சிகள் தவிர எதிர்நிலை கட்சிகள் ஆட்சிசெய்யும்  மானிலங்களின் மனநிலையை,  தார்மீக உரிமையை காங்கிரஸ் அரசு கவனத்தில் கொள்ளாது என்ற எதேச்சதிகார செய்தியும் இந்த இடத்தில் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது.

இலங்கை இராணுவம் ஒழுக்கமற்றது, கட்டுப்பாடற்று தன்னிச்சையாக அராஜக போக்காக நடக்கவல்லது என்ற குற்றச்சாட்டுக்கள் ஐநா மன்ற பேச்சாளர்களின் செய்திகளில் இருந்தும், இலங்கை உள் நாட்டு இராணுவ நடத்தைகள் மூலமும், கணக்கற்ற ஈழ தமிழர்களின் படுகொலை வீடியோ காட்சிகள் மூலமும் சர்வதேசத்தால் அறியப்பட்டு ஆய்வுக்குள்ளாகியிருக்கிறது.


2007ஆம் ஆண்டு நவம்பரில் ஹெய்டியில் அமைதிகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவத்தினரில், 111 படையினரும், 3 இராணுவ அதிகாரிகளும் அந்த நாட்டு சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி மிருகத்தனமாக இச்சையை தீர்த்துக்கொண்டது, மற்றும் சுரண்டலுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை இராணுவத்தினர் அனைவரும்  ஐநா அதிகாரிகளின் மிகுந்த கண்டனத்துடன் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.  இது ஒரு சர்வதேச செய்தி, இந்த வெட்கக்கேடான விடயம் இந்திய அரசாங்கத்தின் காதுகளுக்கு எட்டியதா இல்லையா என்பது தெரியவில்லை.

அதுதொடர்பாக நியுயோர்க்கில் உள்ள ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கி, கருத்து தெரிவிக்கையில், ஹெய்டியில் அமைதிகாப்புப் படையில் பணியாற்றிய இலங்கை இராணுவத்தினர் அங்குள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும். அந்த பொறுப்பும் கடமையும் இலங்கை அரசாங்கத்திற்கே உண்டு. இக்குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்ட இலங்கை இராணுவத்தினர் கட்டாயம் அதற்காகத் தண்டிக்கப்பட வேண்டும். இதனை இலங்கை அரசாங்கமே செயற்படுத்த வேண்டும் என்றும் கண்டிப்பாக கூறியிருந்தார்.

ஸ்ரீலங்கா இராணுவத்தினர் ஹெய்டியில் முறைகேடாக நடந்ததாக கூறப்படும்  ஐநாவின் குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்க,  இலங்கை போரின்போது இலங்கை இராணுவம் அந்நாட்டின் இன வெறி ஆட்சியாளர்களின் கட்டளைக்கொப்ப நடந்துகொண்ட அராஜக முறைமை, சர்வதேச கண்டனத்தை பெற்று, நடந்த  சம்பவங்கள் அனைத்தும் பாகுபாடற்ற பகிரங்கமான  நீதி விசாணக்குட்பத்தப்பட்டு தண்டனை வழங்கவேண்டுமென்று சர்வதேசம் கண்காணித்துகொண்டிருக்கும் சமயத்தில் எந்த ஒரு வாத பிரதிவாத நீதி நியாயங்களையும் இந்திய மத்திய சோனியா, மன்மோகன் அரசு, கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. ஏழுகோடி தமிழர்களை உள்ளடக்கிய ஒரு மானிலத்து மக்களின் பெரும்பான்மை அரசின் உரிமை கோரிக்கை உதாசீனப்படுத்தப்பட்டிருக்கிறது, ஒரு மானில அரசின் முதலமைச்சரின் தார்மீக கோரிக்கை சற்றும் மதிப்பளிக்கவில்லை.

ஊடுருவி பார்க்குமத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும், அந்நாட்டின் இராணுவத்திற்கும், இந்திய அரசாங்கம் ஏதோ காரணங்களுக்காக மிகவும் அச்சப்பட்டு ஸ்ரீலங்காவின் எண்ணங்களை நிறைவேற்ற கைகட்டி பணிந்து நிற்பதாகவே உணர முடிகிறது.

1. சீனாவின் சக்திமிக்க ஆதிக்கம் ஸ்ரீலங்காவில் குவிந்திருப்பமை,....  ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் திடமான வெளியுறவு கொள்கை,.... அதனால் ஸ்ரீலங்காவை எதிர்க்க முடியாத இந்தியாவின் உறுதியற்ற அச்ச நிலை,....

2, திட்டமிடல் இல்லாமல் 2009 ல் ஈழ போர்க்களத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்துடன் இணைந்து இந்தியாவும் குற்றம் புரிந்தமை,.... அதனால் ஸ்ரீரீலங்காவின் அசைவுக்கு ஒத்துக்கொண்டு ஆடவேண்டிய கையறு சூழ்நிலை.....

3, மத்தியில் ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களால் உறுதியான முடிவெடுத்து அரசாங்கதை நகர்த்தி கொண்டு செல்ல முடியாத ஆளுமையின்மை. இவைகளையே காரணமாக கொள்ள முடியும்.

சீனா இலங்கையில் காலூன்றிவிடும் அதற்கான இராசதந்திரமாக இலங்கை அரசாங்கத்தின் நட்புறவை தக்க வைத்துக்கொள்ள இலங்கை அரசாங்கத்தை பகைக்காமல் அனுசரித்துப்போகவேண்டிய தேவை இருப்பதாக முதுகெலும்பில்லாத பிரதமர் மன்மோஹன் சிங் தொடர்ச்சியாக சொல்லி வருகிறார். எவரையும் பாதிக்காமல் இருக்கும்வரையில் அந்த கூற்றை ஏற்றுக்கொள்ள முடியும்,. ஈழத்தமிழர்களுக்கு கொள்ளிவைத்துத்தான் சீனாவை கட்டுப்படுத்த ஸ்ரீலங்காவின் நட்புறவை கட்டிக்காக்கவேண்டுமென்றால் அதில் என்ன நியாயமிருக்கிறது, அதன் விளைவு மூன்று இலட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர் ஈழத்தமிழர்களை கொன்று குவிக்க காரணமான மன்மோஹன் சிங்கால் இந்திய கடற்பரப்பில் தொழில் புரியும் தனது நாட்டு மக்களை இலங்கை இராணுவத்திடமிருந்து காப்பாற்ற வழியில்லை, அதுபற்றி பேசக்கூட திராணியற்று சர்வதேச கண்டனத்துக்குரிய இராணுவத்திற்கு பயிற்சியளிக்க இடம் கொடுக்கிறார் என்றால் அந்த ராஜதந்திரத்தை என்னவென்று சொல்ல?

உதாரணத்துக்கு ஒரு சிறிய தகவல் கொழும்பு நகரில் காலி வீதியில் மிகப்பெரிய காணி ஒன்று  கலாசார மையம் கட்ட, இந்தியாவிடம் ஒப்படைப்பதாக, இலங்கை அரசு பேச்சுவார்த்தை முடிந்து வாக்குறுதி அளித்து ஒப்புக்கொண்டிருந்தது.  இந்த நிலத்தை  கையகப்படுத்தும் நடவடிக்கையில் இந்திய தூதரகம் ஈடுபட்டது. ஆனால்  100 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலத்தை இந்தியாவுக்கு கொடுக்காமல் போக்கு காட்டி ஏமாற்றிவிட்டு சீனாவின் விமான தொழில் நுட்ப நிறுவனத்துக்கு, இலங்கை அரசு கொடுத்துள்ளது. இந்த இடத்தில் ஐந்து நட்சத்திர ஓட்டலை கட்ட, சீன விமான நிறுவனமான, "கேடிக்' முடிவு செய்துள்ளது.  இலங்கை அரசு இந்தியாவுக்கு மதிப்பளிக்காமல் சீன நிறுவனத்துக்கு காணியை கொடுத்திருந்தது. அதுமட்டுமல்லாமல் இலங்கையின் பல பகுதிகளிலும்  ஹம்பாந்தோட்ட, கொழும்பு, நீர்கொழும்பு, திருகோணமலை, மட்டக்களப்பு ,முல்லைத்தீவு, என்று அனைத்து இடங்களிலும் சீனாவின் பெருத்த முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன,

சீனாவின் ஆதிக்கத்தை இந்திய ராசதந்திரத்தால் கட்டுப்படுத்த முடியும் என்று நம்பினால் அது 21ம் நூற்றாண்டின் அதிசயம் என்றுதான் சொல்ல முடியும். சீனா இலங்கையில் காலூன்றுவதற்கு எடுகோலாக இருந்ததே இந்தியாவின் திட்டமில்லாத உறுதியற்ற வெளியுறவுக்கொள்கை வகுப்பாளர்கள் என்பதே பல ஆய்வாளர்களின் முடிவு.

சமீப காலங்களாக இந்திய அரசு தனது உள்நாட்டின் வளர்ச்சித்திட்டங்களை கவனத்தில் கொள்ளாமல் ஏனோ தானோ என்ற போக்குடன் மக்களை ஏமாற்றும் விதமாக போலியான ஒரு தோற்றப்பாட்டை பூதாகரப்படுத்துவதுபோல்  செயற்படுத்திவரும் சில காரியங்கள் அரசியல் ஆய்வாளர்களிடத்தே பெருத்த கேள்வியை தோற்றுவித்திருக்கிறது. எந்த ஒரு அடித்தளத்தையும் திடப்படுத்தி கட்டமைக்காமல், மக்கள் ஆதரவையும் தன்னகத்தே உள்வாங்கிக்கொள்ளாமல் தெற்காசிய பிராந்தியத்தில் ஒரு போலியான பிம்பத்தை உருவாக்கி இந்தியாவை ஒரு வலிமை மிக்க நாடாக இருப்பதாக போலியாக காட்டிக்கொள்வதிலேயே இந்திய அரசு காலம் கடத்துவது தெரிகிறது. எந்த நோக்கமும் இல்லாமல் அடுத்தடுத்து பல கோடி ரூபாய்களை செலவழித்து ஏவுகணை பரிசோதனைகளை நடத்தி தான் ஒரு வல்லமை மிக்க நாடென உலகுக்கு காட்டி காலத்தை ஓட்டிவிடலாம் என்பதிலேயே இந்தியா நம்பிக்கை கொண்டிருப்பது மட்டும் தெரிகிறது.

இது எந்தளவுக்கு அந்த நாட்டின் வல்லமையை கட்டிக்காக்கும் என்பது விஞ்ஞான இராணுவ ஆய்வாளர்களின் ஆய்வுக்குட்பட்ட விடயம். இருந்தும், வளர்ச்சி கண்ட உலக நாடுகளின் அடிச்சுவட்டையும், யதார்த்த நிலையில் கடந்தகால உலக வரலாற்றையும் நோக்கும்பொழுது இந்தியாவின் இந்த மாயைப்போக்கு வீழ்ச்சியை நோக்கியே இட்டுச் செல்லும் என்பது நாளடைவில் புரியப்படலாம், இதனால் ஒரு கட்டத்தில் மக்கள் கிளர்ச்சியையும், பொருளாதார நலிவையும், எதிர் நோக்குவதோடு அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லாமல்ப்போய் தெளிவற்ற சீரழிவான பாதையை திறந்துவிடும்,  நாடு மக்களின் நம்பிக்கையின்மையை பெற்று வேறுவிதமான அரசியல் உத்திக்கு தள்ளப்படலாம்? உதாரணத்திற்கு சோவியத் யூனியனின் ஆட்சியாளர்கள் மக்களின் மனநிலையை மறந்து அணுவல்லமையை பறைசாற்றப்போய் நாட்டை உடைத்த கதை என்பது போலவே இந்திய வழித்தட வரலாற்று பாதையின் மூலம் விரும்பத்தகாத தரவுகள் உணரக்கிடைக்கிறது.


அடிப்படையில் இந்தியா , கல்வி, அரசியல் பொருளாதாரம்,  இராஜதந்திர சணக்கியம், திட்டமிடுதல் ஆகியவற்றில் மிகவும் பின்தங்கியே இருந்து வருகிறது.  நாட்டில் ஆண்டான் அடிமை என்ற உறவுமுறை தொடர்ந்து பேணப்படுகிறது. இது ஒரு ஆரோக்கியமான அரசியல் பாதையல்ல என்பதே ஆய்வாளர்களின் கணிப்பு. இந்தியா தாராள பொருளாதார கொள்கைக்குள் இறங்கிய சில பத்துவருடங்களின் பின் வெளிப்பகட்டுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய, சீனா நாடுகளுடன் பொருளாதார மற்றும் வல்லமையில் சமநிலையில் இருப்பதாக ஒரு மாயையை தோற்றுவித்து  அணு ஆயுத அரசியலை முன்னிலைப்படுத்தவே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதையும் காணலாம்  மன்மோஹன் சிங் அரசும், கொள்கை வகுப்பாளர்களும் அவற்றையே தொடற்சியாக விரும்பி வரவேற்று ஆர்வம் காட்டி வருவதையும் காணலாம்.
உள் நாட்டில் பெருவாரியான மக்களின் சீரழிவான வாழ்க்கைத்தரம், கல்வியின்மை, வறுமை, உள்ளூர் கிளர்ச்சிகள், அரசியல் நெருக்கடிகள், தெளிவற்ற வெளியுறவுக்கொள்கை, ஊழல் முறைகேடு,  நிர்வாகச்சீர்கேடுகள் இலஞ்சம், எவரையும் தண்டிக்க முடியாத இத்துப்போன சட்ட நிர்வாகம். இப்படி பல ஆயிரம் பிரச்சினைகளின் உருவம்தான்  இந்தியாவாக உருவெடுத்து நிற்கிறது, இவைகளில் வளர்ச்சிப்பணி மற்றும் புதிய பொருளாதார திட்டமிடல்களுக்குள் செல்ல முடியாமல் இடைமறிக்கும் பெருத்த ஊழல் முறைகேடுகள், எவரையும் தண்டிக்க முடியாத அரசியல் தலையீடுகள், உறுதியில்லாத ஓட்டை நிறைந்த இத்துப்போன சட்டங்கள், இவைகளைப்பற்றித்தான் இன்றைய இந்திய பாராளுமன்றம். அன்றாட விவாதமாக்கி முடிவுக்கு வரமுடியாமல் பேசு பொருளாக விவாதித்துக்கொண்டிருக்கிறது..  இங்கு வேறு விடயங்களை பேசுவதற்கு நேரமும் இல்லை சூழலும் இல்லை, ஊழல் விவாதங்களை முடிப்பதற்கே முப்பது, நாற்பது வருட விவாதம் தேவைப்படும் நிலையில் இருப்பதால் எந்த வளர்ச்சி பணிகளுக்கும் அங்கு இடமில்லை.  "பார் ஆளும் மன்றம்"  முடிவில்லாத ஊழல் விவாத மன்றமாகியிருக்கிறது.

புதிய வளர்ச்சிப்பணி உருவாகாவிட்டாலும் எதிர்பாராமல் உண்டாகும் இயற்கை சீற்றங்களால் (வெள்ளம் புயல், சுனாமி, நில நடுக்கம்) ஏற்பட்ட பாதிப்புக்கள் வந்தாலும் அரசியல்வாதிகளுக்கு கொண்டாட்டமாகவே இருந்து வருகிறது. அனர்த்த பணிகளை சீர்செய்வதிலும் 100 % முறைகேடுகள் ஊழல்களே தலைவிரித்தாடுகின்றன. ஜனாதிபதி, பிரதமர், மந்திரிகள், எம்பி க்கள் கட்சி தலைமை அதிகாரிகள் எவரும் விதிவிலக்கல்ல,

இதுதான் இந்தியாவின் யதார்த்தமான நிலைப்பாடு. இவைகளை மூடி மறைக்கும் முகமாக மக்களை திசைதிருப்ப அவ்வப்போது சில செய்திகளை அரசாங்கம் திரைமறைவில் இருந்து வெளியிடுவதுமுண்டு. அப்படியொரு துணுக்குத்தான் இந்தியா செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்ய இருப்பதாக சமீபத்தில் இந்திய பிரதமர் திரு மான் மோஹன் சிங் அறிவித்திருந்தார். அதை அவர் நகைச்சுவையாக கூறினாரோ புரியாமல் கூறினாரோ என்பது வேறு விடயம். ஆனால் மக்களின் வயிற்றுப்பாட்டு வாழ்க்கையை ஆராயாமல் செவாய்க்கிரகத்தை ஆராய முயற்சித்திருப்பது அவரது தகுதிக்கும் வயசுக்கும் அழகானதல்ல, இச்செய்தியை மிக்க மூடத்தனமான நகைச்சுவையாகவே உலக நாடுகள் எடுத்துக்கொண்டன.  உள்ளூரில் உள்ள அடிப்படை தேவைகளை சீர்ப்படுத்த முயற்சிக்காமல் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்ய   இந்தியா முயற்சிப்பது தேவையற்றது என்று அந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆலோசனையும் வழங்கி மீறி இப்படியான செயல்களில் இந்தியா ஈடுபடுமானால் தம்மால் வழங்கப்படும் உதவி நிதி நிறுத்தப்படும் என பிரித்தானிய அரசு எச்சரித்திருந்தது.

112 கோடி மக்கள் தொகையை மிஞ்சி நிற்கும் இந்தியா 5.8 கோடி மக்கள் தொகை கொண்ட இங்கிலாந்து போன்ற நாடுகளிடம் கையேந்தி உதவிபெற்றே வாழ்க்கை நடத்தும் கட்டத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிரகத்தில் விஞ்ஞான ஆராய்ச்சி புரட்சி,. தனது சொந்த நாட்டு மக்களை அன்றாடம் கடலில் கொண்றொழித்து வரும் ஸ்ரீலங்கா இராணுவத்தை கண்டித்து கட்டுப்படுத்தாமல் அந்த இராணுவத்திற்கு ஏதோ காரணங்களினால் பணிந்து பயிற்சியும் கோடிக்கணக்கான பண உதவி செய்வது, இப்படியான மட்டரகமான செயல்களை இந்தியாவின் பாமரன் இன்னும் சரியாக அறிந்து கொள்ளவில்லை அவனும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில்த்தான் இந்த விடயங்கள் இங்கு உள்ளடக்கப்படுகின்றன,.

2009 ம் ஆண்டுக்கு முன்பும் பின்பும் பலமுறை இலங்கை இராணுவம் பயிற்சிக்காக இந்தியாவுக்கு வந்து பயிற்சி பெற்று வருகிறது. 2009 க்கு முன் இந்தியாவில் ஸ்ரீலங்கா இராணுவம் பயிற்சி பெற்றதை எவரும் எதிர்த்திருக்கவில்லை. 2009 இலங்கையில் எண்ணிலடங்கா மனித படுகொலையை நிறுவி முடித்து சர்வ தேச குற்றவாளிக்கூண்டில் நின்றுகொண்டிருக்கும் ஒரு இராணுவத்திற்கு தமிழர்கள் சார்பில் தமிழகத்தின் எதிற்புக்கு மத்தியிலும்  பயிற்சியளிக்க நடுவண் அரசுக்கு என்ன தேவையிருக்கிறது. இந்தியாவிலிருந்து தமிழ் நாடு தள்ளி வைக்கப்பட்டுருக்கிறதா என்ற கேள்வி தமிழனுக்கு எழவேண்டுமென்று நடுவண் அரசு விரும்புகிறதா?

இப்படியே இந்திய மத்திய அரசு தொடர்ச்சியாக நடந்துகொள்ளுமானால் ஒரு காலகட்டத்தில் இந்தியா என்ற ஒரு பெரிய துணைக்கண்டம்  ஸ்ரீலங்காவின் ஒரு துணைக்கண்ட மானிலமாக அல்லது சீனாவின் அதிகாரத்தின்கீழ் ஒரு சிற்றரசாக சுருங்கி கடமை செய்யும் நிலைக்கு வருவது தவிர்க்க முடியாமல் போகலாம். அல்லது வேறுவிதமான அரசியல் இந்தியத்துணைக்கண்டத்தில் தோற்றுவிக்கப்படலாம், இன்றைய ஆட்சியாளர்கள் இவற்றை புரிந்துகொண்டு  அரசியற் கொள்கை மற்றும் வெளியுறவு கொள்கைகளில் மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது அதுதான் இந்திய அரசியலுக்கும் நல்லது மக்களுக்கும் நல்லது.

"கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தன் கொல்லாச்சிறகை விரித்தாடினாற் போலவே கல்லாதான் கற்ற கவி",

ஈழதேசம் இணயத்திற்காக. 
கனகதரன்.