Tuesday, December 23, 2014

சிம்மக் குரலோன் பாரதிராஜா சிலோனுக்கு போனதன் மர்மம் என்ன?….‏

“விரால் இல்லாக் குளத்தில் குறவை மீன் துள்ளி விளையாடியது” இப்படி ஒரு கருத்து செறிவான பழமொழி ஈழத்தில் உண்டு.அதே நிலைதான் இன்று ஈழத்தின் நிலை,. ஈழம் என்ற குளத்திலுள்ள விரால்மீன்கள் ஏதோ காரணத்தால் வெளியேறிவிட்டதால் அங்கு வாழும் பல இன மீன்களுடன் வரத்து நீரில் அடிபட்டு வந்து சேரும் குறவைகள் வெள்ளோட்டம் செய்து மானாவாரியாக சதிராட்டம் போடுகின்றன.

சுடுபவர்களுக்கு சுடட்டும் என்பதற்காக இந்த பழமொழியும் அதன் உட் பொருளும் இங்கு தரப்பட்டுள்ளது..
இனி விடயத்துக்கு வருவோம்.
இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்தபோதும், போர் முடிவுக்கு வந்த பின்னும் தமது ஆட்சி அதிகாரத்துக்கு குந்தகம் வருமென நினைக்கும் ஒவ்வொரு அரசியல் நெருக்கடி காலங்களின் போதும் ஶ்ரீலங்காவின் சிங்கள ஆட்சியாளர்கள் தமது தப்பித்தலுக்காக சோரம்போகக்கூடிய தமிழர்களை பயன்படுத்துவதை ராஜதந்திர உபாயமாக கடைப்பிடித்து வருகின்றனர்.
சிங்கள ஆட்சியாளர்கள் தமது தரப்பை நியாயப்படுத்தவும் உலகநாடுகளை ஏமாற்றவும் இலங்கையில் உள்ள பச்சோந்தி தமிழர் அமைப்புக்களையும், ( ஒட்டுக்குழுக்கள் அரசியற் கட்சி தலைமைகள்) இன்னும் சற்று உறுதியாக வெளிநாடுகளையும் உள்ளூர் மக்களையும் ஏமாற்ற, இந்திய அரசியல்வாதிகளையும் உறுதியற்ற திசை திருப்ப வல்ல நன்கு அறிமுகமாக உள்ள சினிமா பிரபலங்களையும் பயன்படுத்தி அரசியல் காய் நகர்த்தி தப்பித்து வருவது காலாகாலமாக நடந்து வருகிறது. ஈழ தேசத்தின் உறுதிமிக்க விடுதலை போரின் வீழ்ச்சியின் அடிநாதமும் வரலாறுகாணாத படுகொலைகளின் ஆரம்பமும் அங்குதான் தொடங்கியிருந்தது,
இருந்தும் மென் உணர்வுடன் கூடிய பலகாரணங்களினால் தேசியத் தலைவர் வே பிரபாகரன் உட்பட பொறுப்புணர்வு உள்ள எவரும் அதை வெளியில் சொல்லிக்கொள்ள விரும்பவில்லை. முடியவுமில்லை அவ்வளவு சிக்கல் நிறைந்த அரசியல் அருவருப்பும் வெளியில் சொல்ல முடியாத வெட்கக்கேடும் ஈழ / தமிழக உறவுகளின் பிணைப்பில் நிறைந்திருந்தது.
ஊன்றிக் கவனிக்கவல்ல தமிழகத்தின் நல் உள்ளங்கள் அவற்றை புரிந்து கொள்ளுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதால் விமர்சனங்களும் கோபங்களும் அங்கும் இங்கும் சரிக்கு சரியாக வெளிப்பட்டு பல மட்டத்தில் விவாதிக்கப்பட்டு வந்தாலும் ஒருசில மோசமான துரோகிகள் தவிர மற்றவர்கள் இன்றையவரைக்கும் காட்டிக்கொடுக்கப்படாமல் விட்டுக்கொடுத்து உள்ளுக்குள்ளேயே விட்டுவைக்கப்பட்டும் இருக்கின்றனர். இதை அவர்களும் உணர்ந்திருப்பார்கள் என்று நம்பலாம்.
இலங்கையில் உள்ள பச்சோந்திகள் தேர்தல் வாக்குகளை மனதில்க்கொண்டு ஏமாற்று வித்தைகளை சற்று அடக்கி வாசித்தாலும் இந்தியாவில் உள்ள மூர்க்கமான அரசியல்வாதிகளும் தமிழகத்திலுள்ள சில சினிமா பிரபலங்களும் பின் விளைவுகளையும் பாவ புண்ணியத்தையும் வீரியத்தை கவனத்தில் கொள்ளாமலும் சுயநல சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்கள் விளையாட்டை எந்தவிதமான கூச்சமும் குற்ற உணர்வுமில்லாமல் பணம் பகட்டு விளம்பரத்துக்காக தொடர்ச்சியாக கீழ்த்தரமாக நடந்து வருவது மிகவும் வேதனை அளித்தாலும் அந்த அநீதி தொடர்ந்து இடம்பெற்றே வருகிறது.
இவர்களின் பொறுப்பற்ற பச்சோந்தித்தனத்தால் பல்லாயிரம் குழந்தைகள் தாய்மார்கள் உட்பட பல மனித உயிர்கள் ஶ்ரீலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டபோதும் சுயநலம் மிக்க குறிப்பிட்ட சில சினிமா காரர்கள் மனிதர்களாக நடந்துகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஈழத்தமிழனின் மனதிலும் வடுவாக பதியப்பட்டு இருக்கிறது.
ஹிந்தி நடிகர் விஜய் ஒபரோய், அசின், இளையராஜா, சல்மான்கான், கருணாஸ், ராதிகா, என்று வெளிப்படையாகவும் இன்னும் பலர் மறைமுகமாகவும் இதில் கறுப்பு பங்கு வகித்துவிட்டனர்.
முள்ளிவாய்க்காலில் விலங்குகள்போல கொல்லப்பட்ட மனித உயிர்கள் போக, கால், கை, கண், காது இழந்து இராணுவத்திடம் சரணடைந்து ஆடு மாடுகள்போல முள்வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்த தமிழினத்தை சுகபோகிகளாக வாழுகின்றார்கள் என்று காட்டுவதற்காக,
கருணாநிதியின் கபட திட்டத்துக்கமைய திருமாவளவன், கனிமொழி, ரிஆர் பாலு, மற்றும் காங்கிரஸ் அரசியல்வாதிகளும், ஒட்டுமொத்த தமிழினமும் நிராகரித்த பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நியாயப்படுத்த அப்துல் கலாம் என்ற அரசியற் தூதரும், யாழ்ப்பாணம் தன்னிறைவடைந்து மகிழ்ச்சியில் திளைக்கிறது என்று காட்ட பட்டிமன்றம் லியோனியும், லைகா ராஜபக்‌ஷ குடும்ப உறவை மறைக்க சீமானும், புலிப்பாய்ச்சல் படத்தை நியாயப்படுத்த அரசியல்வாதி வேல்முருகனும், பாலச்சந்திரனை பயங்கரவாதியாக சித்தரிக்க வேந்தர் மூவீஸ் பச்சமுத்துவும், அந்த வரிசையில் இப்போது கடைசியாக கோத்தபாயவின் வேண்டுகோளுக்கு இணங்கி செவ்வேள் என்ற கைக்கூலியின் குடைக்குள் மறைந்து வந்து இணைந்திருப்பவர், தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனர் பாரதிராஜா,
பாரதிராஜா இப்போது இலங்கைக்கு போவதற்கு என்ன முக்கிய தேவை என்பது யாருக்கும் இன்னும் சரியாக தெரியவில்லை, பாரதிராஜா சினிமா படமெடுக்க போயிருந்தால் பரவாயில்லை அது தொழில் நிமித்தம், ஆனால் அவருக்கு இப்போது சினிமாவில் வேலையில்லை என்பதும், அவர் ஒரு அரசியல்வியாதியாக இருந்திருந்தால் வேறு பரிமாணத்தில் பார்க்கலாம் என்றால் அவர் அரசியல்வியாதியாக காணப்படவில்லை என்பதால் ராஜபக்‌ஷவின் வாழ்க்கையை நிர்ணயிக்கப்போகும் ஜனாதிபதி தேர்தல் நடப்பதற்கு இன்னும் பதினைந்து நாட்கள் இருப்பதும் முன்னாள் தமிழர்களின் மனம் கவர்ந்த சினிமா இயக்குனர் என்பதனால் அவர் ஏதோ உள்நோக்கமில்லாமல் இந்த காலத்தை தெரிவுசெய்திருக்க முடியாது, தொழில் இல்லாததால் வருமானத்துக்காக பணம் வாங்கிக்கொண்டு கோத்தபாயவின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாணம் போனாரா என்பது சில நாட்களில் நிச்சியம் வெளிவரும்.
அவர் தமிழர்களின் கடந்தகால அனர்த்தங்களை மனதில் கொண்டிருந்தால் நிச்சியம் இந்த காலகட்டத்தில் கோத்தபாயவின் நட்புவட்டாரத்தின் அழைப்புக்கிணங்க இலங்கைக்கு சென்றிருக்கமாட்டார்.
ஈழத்தமிழினத்தின் உறுதியை உலகுக்கு காட்டி தமிழன் என்று ஒரு இனம் பூமியில் வாழ்கின்றது என்பதை பறைசாற்றிய மாவீரர்நாள் நினைவு நிகழ்வுகள், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நிகழ்வுகள் அல்லது தமிழர் வாழ்வு சம்பந்தமான முக்கிய கருத்தரங்கம் ஏதாவது ஒன்றை குறிவைத்து அவர் இலங்கைக்கு போயிருந்தால் அவரது உணர்வை விமர்சிக்கவேண்டிய தேவை எவருக்குமில்லை. அல்லது 2009 ல் கருணாநிதி அனுப்பிய அரசியல் தூதுக்குழு போன்ற அடிப்படையில் அவர் சென்றிருந்தாலும் வேதனையும் விமர்சனமும் வேறுவிதமாக இருக்கும். ஆனால் உன்னோடு உன்னோடு என்று மேடைகளில் கரகரத்த குரலில் மூச்சுவிடாமல் சிலாகித்து முழங்கிவிட்டு கோத்தபாய ராஜபக்‌ஷவின் பின்னணியிலுள்ள ஒருவரின் வேண்டுகோளுக்கு அமைய யாழ்ப்பாணம் சென்று டக்ளஸ் தேவானந்தாவுடன் அளவளாவி பாரதிராஜா திரும்பியிருக்கின்றார் என்றால் ஹிந்தி நடிகை அசின் ஶ்ரீலங்காவுக்கு போனபோது நாம் அனைவரும் நடத்திய போராட்டமும், இளையராஜா கனடாவுக்கு சென்று மாவீரர் நாள் நிகழ்வுகளை இழிவுபடுத்த புறப்பட்டபோது காட்டிய எதிர்ப்பும், சிரிப்பு நடிகர் கருணாஸ் கொழும்புக்கு புறப்பட்டபோது எழுந்த எதிர்ப்பும் இன்று சிரிப்புக்குள்ளாகி இருக்கின்றது.
பாரதிராஜாவை வரவேற்று சந்தன மாலை அணிவித்து இலங்கை மண்ணில் கால் பதிக்க வைத்தவர்கள் கோத்தபாயவின் ஆட்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அடுத்து பாரதிராஜா டக்கிளஸுடன் வட்டமேசை மாநாடும் நடாத்தியிருக்கிறார் அவைகள் புகைப்படங்களாக அனைத்து ஊடகங்களிலும் ஏற்கெனவே நிறைந்திருக்கின்றன. அதுபற்றி பாரதிராஜா திரித்து ஒன்றும் கூறமுடியாத நிலையில் அவரது கைத்தடியாக இயக்குனர் கௌதமன் கண்ணீர்விட்டு சில நியாயப்படுத்தலை கூறி சாந்தப்பட்டிருக்கிறார்.
தாமரை இலையின் தண்ணீர்போல அரசியலில் அதிசயம் நிகழ்த்தும் தமிழர் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்தவர்கள் சிலரையும் பாரதிராஜா சந்தித்து தனது பயணத்தை நியாயப்படுத்துகிறார், அவரது நியாயப்படுத்தலை ஏற்றுக்கொள்ளுவதற்கு முன் அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற ஒரு பேரணியில் முழங்கிய ஒளிப்பதிவை யூரியூப்பில் பார்க்கும்போது அவரது நடிப்பின் அபாரம் நன்றாக புரிகிறது, அவர் ஒரு இயக்குனர் மட்டுமல்ல நல்ல நடிகனும்கூட என்பதை தமிழ் கூறும் நல்லுலகம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
தமிழினத்துக்கு பாரதிராஜா செய்த இந்த செயலுக்கு தமிழர் தேசியக்கூட்டமைப்பும் வடக்கு மாகாண முதலமைச்சரின் நிர்வாகமும் அனுசரணை வழங்கி நிறைவை கொடுத்திருக்கிறது. சாதாரணமாக தமிழர் தரப்பிலிருந்து இலகுவில் சந்திக்க முடியாத முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் அரசியலில் எந்த அசைவாக்கத்தையும் உண்டுபண்ண முடியாத, சினிமா படம் எடுப்பதற்கு சீண்டுவார் அற்று வீட்டில் இருக்கும் பாரதிராஜாவை காலதாமதம் கொடுக்காமல் முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரன் சந்தித்து உதவியிருக்கிறார்.
தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளுக்காக தொடர்ந்து உணர்வுடன் போராடிவரும் அரசியல் போராளி சிவாஜிலிங்கம் போன்றவர்கள் மிக மிக முக்கிய சந்தற்பங்களில் தொலைபேசியிலேயே தொடர்புகொள்ள முடியாத விக்கினேஸ்வரன் கோத்தபாயவின் வேண்டுகோளுக்கிணங்கி யாழ்ப்பாணம் வந்த அரசியலில் எந்த முக்கியத்துவமும் இல்லாத சாதாரண சினிமா இயக்குனரான பாரதிராஜாவை காலதாமதம் செய்யாமல் வரவேற்று மதிப்பளித்திருப்பது பாரதிராஜாவின் பயணத்தின் வீரியம் சாதாரணமானதல்ல என்பதை உணர்த்துகிறது.
குளத்தில் விரால்கள் இல்லை என்றவுடன் எவ்வளவு குறவை மீன்கள் கும்மாளம் அடிக்கின்றன, இன்னுமொரு மழைக்காலத்தில் நாலாபுறமிருந்தும் தண்ணீர் உள்வாங்கும்போது விரால்களின் வரத்து தவிர்க்கமுடியாது, அப்போ மீண்டும் குறவைகள் சேற்றுக்குள்ளும் வேர் இடுக்குகளிலும் பொந்துகளிலும் பதுங்கிக்கொள்ளும்,
ஏனென்றால் குறவைகளின் இயல்பே அதுதானே.
ஈழதேசம் இணையத்திற்காக ஊர்க்குருவி.

No comments: