Tuesday, April 26, 2011

:"அப்பா சொன்னாரென...'பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2011,23:29

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், துணைக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது சிபிஐ. அதில் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்ட ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றச்சாட்டில் அடுக்கப்படும் இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகளை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால்- கனிமொழியின் மீதான குற்றச்சாட்டு அரசுப் பதவியைப் பயன்படுத்தி ஆதாயம் பெற்றது என்பதுதான்.

இதனை அவர் எவ்வாறு செய்தார் என்பதை சிபிஐ தனக்கே உரித்தான வகையில் விவரிக்கிறது. இந்த வழக்கில், தனக்கான ஆதாயத்தொகை ரூ.214 கோடியை ஸ்வான் டெலிகாம் நிறுவனம் எவ்வாறு வேறு துணை நிறுவனங்கள் மூலம் வழிமாற்றி, கலைஞர் டிவிக்கு வழங்கியது என்பதுதான் வழக்கு. இந்த வழக்கில் தலா 20 விழுக்காடு பங்கு வைத்துள்ள கனிமொழியையும் கலைஞர் டிவியின் மேலாண் இயக்குநர் சரத்குமாரையும் எதிரிகளாக வழக்கில் சேர்த்துள்ள சிபிஐ, 60 விழுக்காடு பங்கு வைத்துள்ள கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளை ஏன் சேர்க்கவில்லை என்பதை ஒரு குறையாகக் காணவும் முடியாது. ஏனென்றால், அந்த அம்மையார் பெயரை வைத்து, அவருடன் இருந்தவர்கள் ஊழல் செய்தார்களே தவிர, அந்த அம்மையார் ராடியாவிடம் பேசவில்லை. ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துடன் பேசவில்லை. அவர் எந்த அரசுப் பதவியையும் வகிக்கவும் இல்லை. ஆகவே, அவரைப் பங்குதாரராகச் சேர்த்துப் பணத்தை அவர் பெயரில் கொட்டினார்கள் என்பதைத் தவிர, அவர் செய்த குற்றம் ஏதுமில்லை என்று சி.பி.ஐ. முடிவு செய்திருக்கலாம்.

குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டிருப்பதைப்போல, தனக்கு ஆங்கில அறிவோ, சட்ட நுணுக்கங்கள் பற்றிய தெளிவோ, நிர்வாக அனுபவமோ இல்லாததால், விவரஸ்தரான மேலாண் இயக்குநர் சரத்குமாருக்கு தயாளு அம்மாள் ஏற்கெனவே பிரதிநிதித்துவ அதிகாரம் (பவர் ஆஃப் அட்டார்னி) வழங்கி இருப்பதால், அவரது பெயரைக் குற்றப்பத்திரிகையில் மத்தியப் புலனாய்வுத் துறை சேர்க்கவில்லை என்று தெரிகிறது.

சிபிஐயின் இந்த முடிவில் தவறு காண முடியாது என்பதுதான் நமது கருத்து. தயாளு அம்மாள் எதிரியாகச் சேர்க்கப்படாவிட்டாலும், அவர் முதல்வரின் மனைவி என்கிற உரிமை, அந்தஸ்து காரணமாகத்தான் அவர் பெயருக்கு 60 விழுக்காடு முதலீடு சேர்ந்துள்ளது என்பதால், இந்த வழக்கில் நியாயமாகக் குற்றவாளிப் பட்டியலில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி சேர்க்கப்பட்டிருக்க வேண்டாமா? கருணாநிதி முதல்வராக இல்லாமல் இருந்திருந்தால் தயாளு அம்மாளுக்குக் கலைஞர் டிவியில் 60 விழுக்காடு பங்குக்கான நிதியை அளித்திருப்பார்களா?

தொகுதி உடன்பாடுப் பிரச்னையில், திமுகவின் பதவி விலகல் அச்சுறுத்தலே கூட சிபிஐ அதிகாரிகள் முதல்வரின் வீட்டுக்குள் நுழையக்கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட நாடகம்தான் என்று அப்போது பேசப்பட்டது. அதைப்போலத்தான் சம்பவங்களும் நடந்தன. பதவி விலகல் கடிதத்தை இங்கிருந்தே ஒளிநகலில் அனுப்பி வைக்காமல் அனைவரும் தில்லி சென்று பிரதமரை நேரில் சந்திக்கக் காத்திருந்தனர். அந்த இடைவெளியில் சமரசங்கள் எட்டப்பட்டன. சமரசம் ஏற்பட்டதும், பதவி விலகல் கடிதங்கள் கிழித்தெறியப்பட்டன. தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியடைந்தால், கருணாநிதி குடும்பத்தார் மீது வழக்குப் பதிவு செய்வது உறுதி என்ற பேச்சு திமுக தரப்பிலேயே பேசப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாகவே இந்த வழக்குப் பதிவு நடைபெற்றுவிட்டது.

இது மத்திய அரசுக்குக் கிடைத்திருக்கும் தேர்தல் முடிவுகள் பற்றிய உளவுத்துறை அறிக்கையால் ஏற்பட்ட தைரியமோ என்னவோ தெரியவில்லை. தேர்தல் முடிவுகள் வெளிவராத இன்றைய சூழலில் மீண்டும் அடுத்த பதவி விலகல் கடிதம் எழுதும் நாடகத்தைத் திமுக தொடங்குமா என்பது சந்தேகமே. திமுக தனது ஆதரவை விலக்கிக் கொண்டால், உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் ஆதரவு அளிக்கத் தயாராக இருக்கிறார். தமிழ்நாட்டில் ஜெயலலிதா தயாராக இருக்கிறார். வெறும் 119 இடங்களில் மட்டுமே போட்டியிடும் திமுக, கூட்டணி வெற்றி பெற்றாலும்கூட தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாது என்பதால் தர்ம சங்கடத்தில் சிக்கி இருக்கிறது என்பது யாருக்குத் தெரியுமோ இல்லையோ காங்கிரஸ் தலைமைக்குத் தெரியும்.

திமுக தலைவரின் குடும்பத்திலும் சரி, கட்சியிலும் சரி ஆ. ராசாவை பலிகடா ஆக்கியதைப்போல, கனிமொழியையும் பலிகடா ஆக்க முதல்வர் கருணாநிதிக்கு நெருக்குதல்கள் கொடுக்கப்படலாம் என்றும் நம்ப இடமிருக்கிறது. கூட்டணியிலிருந்து திமுக விலகுவதைக் காட்டிலும் இந்த வழக்கில் எதிரியாகச் சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி தார்மிகப் பொறுப்பேற்று தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக்கொள்வதுதான் நடைபெறக்கூடும்.

கனிமொழியை எதிரியாகச் சேர்த்ததால் கூட்டணியிலிருந்து விலகுவீர்களா என்ற கேள்வியை தமிழக முதல்வர் கருணாநிதியிடம் ஒரு பெண் நிருபர் கேட்டதற்கு, "பெண்ணாக இருந்துகொண்டு இப்படி இதயத்தைத் தூக்கியெறிந்துவிட்டுப் பேசக்கூடாது' என்று கூறி இருக்கிறார் முதல்வர்.

ஆனால், தனது குடும்பப் பெண்களை முன்னிறுத்தித் தவறான செயல்பாடுகளுக்கு அவர்களை உடந்தையாக்கிய முதல்வரிடம் கேட்க வேண்டிய கேள்வி அல்லவா இது? தனது அரசியல் சூதாட்டத்துக்காகத் தனது குடும்பப் பெண்களைப் பகடைக் காய்களாக உருட்டிய குற்றத்துக்கு, முதல்வருக்கு அளிக்கப்பட்டிருக்கும் தண்டனைதான் இந்தத் துணைக் குற்றப்பத்திரிகை. ""நிலைமை எங்கள் கையைவிட்டுப் போய்விட்டது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் மத்தியப் புலனாய்வுத் துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தலையிட முடியாது. அதனால், எங்களைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை'' என்கிற காங்கிரஸின் வாதம், எந்த நேரத்திலும் திமுகவைத் கைகழுவக் காங்கிரஸ் காரணம் கண்டுபிடித்துவிட்டது என்கிற தோற்றத்தையல்லவா ஏற்படுத்துகிறது?

இதைக்கூட அனுபவசாலியான முதல்வர் கருணாநிதி புரிந்துகொள்ள முடியாதவரா என்ன? உண்மையிலேயே பரிதாபத்துக்குரியவர்கள் கனிமொழியும், தயாளு அம்மாளும்! இந்த முறைகேடுகளுக்கு அவர்கள் விரும்பி ஆட்பட்டவர்கள் அல்லர்! முதல்வரின் மகளாக அல்லாமல், கவிஞராக கனிமொழி எழுதிய ஒரு கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

"அப்பா சொன்னாரென...'

Sunday, April 17, 2011

நிபுணர்கள் குழுவின் பரிந்துரை ஈழத்தமிழர்களுக்கு நீதியை பெற்றுத்தருமா?

நிபுணர்கள் குழுவின் பரிந்துரை ஈழத்தமிழர்களுக்கு நீதியை பெற்றுத்தருமா?

ஈழப்போரின் இறுதி நாட்களில் நிகழ்ந்த போர்க்குற்றம், மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை தாங்கி தாமதமாகவேனும் ஆராயப்பட்டு உத்தியோகபூர்வமாக சர்வதேச அரங்கில் நியாயம் கற்பிக்கக்கூடிய வகையில் வெளிவந்திருக்கும் நிபுணர்களின் போர்க்குற்ற ஆய்வு அறிக்கை,,

ஏப் 12ம் நாள் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களிடம் கையளிக்கப்பட்டிருப்பதாக உத்தியோகபூர்வமான செய்திகள் தெரிவிக்கின்றன. அறிக்கையின் நகல் ஸ்ரீலங்கா அரசுக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

ஆனால் அந்த அறிக்கையின் அறிவுறுத்தல்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென்றும் மாற்றாக அரச சார்பற்றவகையில் பதில் அளிப்பதற்கான குழுவொன்று அமைக்கப்பட்டு கருத்து தெரிவிக்கப்படும் என்றும், தவிர ஐ.நாவை முறியடிப்பதற்கு உயர்மட்டத்திலுள்ள புத்த பிக்குகளையும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் இணைத்து ஒரு முக்கூட்டு அறிக்கை வெளியிடுவதென்றும் ஸ்ரீலங்கா அரசுதரப்பில் செய்திகள் தெரிவிக்கின்றன.

அவை ஒருபுறமிருக்க, நாட்டிற்காக நான் தூக்குமேடைக்கும் செல்லத் தயார் என்று மகிந்தர் தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டம் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு விரக்தியில் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையாளரை நேரில் சந்தித்த மகிந்தர் சமீபத்தில் ஐ.நா நிபுணர்கள் குழு வெளியிட்ட அறிக்கையைப் பற்றி விவாதித்துள்ளார். இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே தான் தாய் நாட்டைக் காப்பாற்ற தூக்குமேடைக்கும் செல்லத் தயார் என்று நாட்டுமக்களின் அனுதாபத்தை கவரும் நோக்கத்தோடு வீர வசனங்களை பேசியுள்ளார் என்றும் தெரிகிறது.

புலிகளுக்கு சார்பான சில குழுக்களின் தொடர் அழுத்தங்களால், ஐ.நா இப்படியான முடிவுகளை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான போர்குற்றங்கள் நிரூபணமாகியுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளபோதும் அவை அனைத்தும் போலியானவை அவற்றை தான் சட்டை செய்யப்போவதில்லை என்றும் மகிந்தர் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பல்வேறு சர்வதேச நியாயவாத அமைப்புக்களின் விடாப்பிடியான அழுத்தம் காரணமாக நிபுணர்கள் குழு ஐ.நா செயலர் அவர்களால் அமைக்கப்பட்டிருந்தது நிபுணர்கள் குழு ஆய்வுசெய்வதற்காக, நிச்சியம் போர் நடந்த இடத்திற்கு சென்று தகவல்களை திரட்டியிருக்கவேண்டும். அப்படி தகவல்களை திரட்டியிருப்பின் கூடுதல் ஆதாரங்கள் பதிவுசெய்யப்பட்டிருக்க வாய்ப்புக்கள் நிறையவுண்டு, ஆனால் ஸ்ரீலங்கா அரசுக்கு ஆதரவு நிலைகொண்ட நாடுகளின் செல்வாக்கு காரணமாக ஸ்ரீலங்கா அரசு நிபுணர்கள் குழுவை நாட்டுக்குள் நுழைவதை தடுத்து நிறுத்தியது. ஸ்ரீலங்காவின் இந்தப்போக்கு ஐ.நா செயலருக்கும் நிபுணர் குழுவினருக்கும் கசப்பை உண்டுபண்ணியிருக்கலாம். இருந்தும் பல்வேறுபட்ட புகைப்பட, ஒளிப்பதிவு, தரவுகள்.. வேறு தொண்டரமைப்புக்களின் அறிக்கைகள் சாட்சியங்கள் மூலம் நிபுணர்கள் குழு மிகுதியான பொருட்செலவு செய்து ஓர் நிறைவான அறிக்கையை தயாரித்து ஐ.நா சபைக்கு வழங்கியிருக்கிறது.sd

இந்த அறிக்கை இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களையும் ஈழப்போரில் ஐ.நா நடந்துகொண்ட விதம் பற்றியும் விமர்சித்திருக்கிறது. வருங்காலங்களில் ஸ்ரீலங்கா அரசின் போர்க்குற்றம் சம்பந்தமாக நிபுணர்களின் இந்த அறிக்கை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதுதான் மனித உரிமை அமைப்புக்களினதும் ஈழத்தமிழர்களினதும் பெருத்த எதிர்பார்ப்பாகும். இவ்வறிக்கை நடைமுறைக்கு வருவதற்கு இலங்கை அரசை விடவும் இந்திய அரசும் ஏதாவது தில்லுமுல்லு செய்வதற்கு முயலக்கூடும்.

சிறீலங்காவில் அந்நாட்டு அரசாங்கம் அங்கு வாழும் தமிழ்மக்களின் அடிப்படை உரிமைகளில் தீர்க்கப்படாத ஏனைய பிரச்சனைகள் என்று நிபுணர்கள் குழுவால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மிகப்பிரதான சாராம்ஷமாக கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் காரணிகளை காணலாம்.

> :"விடுதலைப் புலிகளை முறியடித்துள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துவரும்போதும், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகள் அங்கு தீர்க்கப்படவில்லை".

> "அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதார ரீதியாக தமிழ் மக்கள் புறக்கணிப்புக்கு உள்ளானதே இனப்பிரச்சனைக்கான முக்கிய காரணம்".

> "போர்க்கால நடவடிக்கைகள் அங்கு தொடர்கின்றன. அவசரகாலச்சட்டம், பயங்கரவாதத்தடுப்புச்சட்டம் என்பன தொடர்கின்றன. இராணுவமயப்படுத்தல்களும், துணைஇராணுவக்குழுக்களின் நடவடிக்கைகளும் நிறுத்தப்படவில்லை".

> "ஊடகங்கள் மீதான வன்முறைகளும் தொடர்கின்றது".

இந்தநிலை தொடர்வதற்கான காரணங்கள் இரண்டு கூறப்படுகின்றன, ஒன்று, நாடு பதட்ட நிலையில் பயங்கரவாத அச்சுறுத்தலில் தொடர்ந்து இருப்பதாகக் காட்டி இராணுவ மயத்தை திரும்பப்பெறாமல் போர்க்காலத்தில் ஸ்ரீலங்கா அரசு மரபுமீறி நடந்துகொண்ட எதேச்சதிகார யுத்த மீறல்கொடுமைகளை நியாயஸ்தலங்களுக்கு சென்று விசாரணை வளையத்துள் சிக்கிவிடாமல் தப்பிவிடவேண்டுமென்கிற தந்திரமாகவும், இரண்டாவது, தமிழர் சமுதாயத்திற்கு எந்தக்காலத்திலும் சமமான உரிமையும் கொடுத்துவிடக்கூடாது என்ற நீண்டகால வக்கிரத்தின் வெளிப்பாடாகவும் காணலாம்.

இந்நிலை தொடருமாகவிருந்தால் எந்த நிபுணர்களின் அறிக்கையும் இலங்கையில் ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி அந்தமக்களுக்கு அமைதியான ஒரு வாழ்வை வழங்கப்போவதில்லை. மாறாக அரசியல் கிளர்ச்சிகளும், அரசாங்கத்துடன் மக்களின் ஒத்துப்போகாத தன்மையும் இலங்கையில் தொடர்ந்து இருந்துகொண்டேயிருக்கும். அது மீண்டும் ஒரு ஆயுத கிளர்ச்சியை உண்டுபண்ணுகிறதோ இல்லையோ அமைதியான ஒரு நாடாக இலங்கை ஒருபோதும் இருக்கப்போவதில்லை. இந்நிலை தொடரும் பட்சத்தில் இன்றய நிலையைவிட பன்மடங்கு கலாச்சார சீரழிவும், பொருளாதார முடக்கமும் ஏற்படும் சட்டம் ஒழுங்கு கைமீறிப்போய் சோமாலியா போன்ற நிலை இலங்கையை பற்றிக்கொள்ள நீண்டகாலம் தேவைப்படப்போவதில்லை.

newsஇன்று புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழினத்தின் விடுதலையை முன்னிறுத்தி பல்வேறுபட்ட தமிழர் அமைப்புக்கள் ஜனநாயகரீதியில் போராடி வருகின்றன. இலங்கையிலுள்ள தமிழினத்தின் விடுதலை சர்வதேசத்தால் உறுதிப்படுத்தாதவரை புலம்பெயர் தேசங்களில் உருவாகும் அசாதாரண நிலையை தடுக்க அந்த அரசுகள் அழுத்தம் கொடுக்கவும் முடியாது.

புலம்பெயர் தேசங்களின் மக்கள் எழுச்சியின் தாக்கமும் மற்றும் அமைப்புக்களின் விசனமும், பான் கீ மூன், அவர்களால் நிபுணர்கள் குழுவை அமைக்க நிர்ப்பந்தித்தது. ஆனால் கடந்தகால பட்டறிவின் பிரகாரம் நிபுணர்கள் குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த ஐ.நா செயலாளர் அவர்களால் முடியுமா என்கிற கேள்வியும் சாதாரண ஒருவனின் மனதில் தேங்கிக்கிடப்பதைக் காணலாம். இந்தியா, சீனா, போன்ற நாடுகளின் அழுத்தங்கள் ஒருபக்கமும் ஐநாசபைக்குள்ளேயே இந்திய ஸ்ரீலங்கா சார்பான அதிகாரிகளின் சதிகளும் புரையோடிக்கிடப்பதால், அவர்களின் தவறான வழிகாட்டலின் காரணமாக பான் கீ மூன், அவர்கள் திடமாக முடிவெடுக்க முடியாமல்த்தான்.. நிபுணர்கள் குழுவை அமைக்கவேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டிருந்தது. நிபுணர்கள் குழுவின் அறிக்கையும் ஸ்ரீலங்கா அரசை பாதிக்கும் வகையில் அமைந்திருப்பதால் அடுத்த நடவடிக்கை பல சிக்கல்களை உண்டுபண்ணும் என்பது திண்ணம்.

இறுதிக்கால போரில் ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது அனைத்துலக சமூகமோ பொதுமக்களை பாதுகாப்பதில் இருந்து தவறியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு கொண்டுவந்த தீர்மானம் கூட 2009 ஆம் ஆண்டு தவறான தகவல்களால் ஒருதலைப்பட்சமாக தோற்கடிக்கப்பட்டுள்ளது என நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்களை பாதுகாப்பதில் அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பு சில சக்திகளின் குறுகிய தலையீட்டால் தவறாக வழிநடத்தப்பட்டிருப்பதாகவே நிபுணர்கள் குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டுவதை காணலாம். இவற்றை ஆராய்ந்து தீர்க்கவேண்டிய பொறுப்பும் இப்போ ஐ.நா சபைக்கு இருப்பதாக அறிக்கை விதந்துரைத்திருப்பதையும் காணலாம். ஆனால் அதற்கும் குறிப்பிட்ட அந்த நாடுகள் எதிர்ப்புத்தெரிவிக்கவும் கூடும்.

இதனை கருதில்க்கொண்டு ஐ.நா அமைப்பை சங்கடத்தில் மாட்டிவிடாமல் நிபுணர்கள் குழு தமது பரிந்துரையில், நாம் முன்வைத்துள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு உள் நாட்டிலேயே நீதியான விசாரணையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்றும், சிறீலங்கா அரசின் விசாரணைகளை அவதானிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் உடனடியாக சுயாதீன அனைத்துலக கண்காணிப்பு குழு ஒன்றை அமைக்கவேண்டும் என்றும் பரிந்துரை செய்திருக்கிறது. இவற்றை கருத்தில்க்கொண்டு அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பின் மூத்த ஆய்வாளர் அலன் கீனன் அவர்கள் தனது கருத்தில் சிறீலங்காவுக்கு ஆதரவுகளை வழங்கிவரும் சீனா மற்றும் ரஸ்யா போன்றவை வீட்டோ அதிகாரம் கொண்டவை. எனவே ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் தனது அதிகாரத்திற்கு உட்பட்டதாக ஒரு விசாரணைக்குழுவை அமைக்கவேண்டும்,அந்த குழுவானது மேலதிக விசாரணைகளை நடத்தும் அதிகாரம் கொண்டதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்

வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிக்கையில் சிபார்சு செய்யப்பட்டிருக்கும் விடயங்களானவை

1. சிறீலங்கா அரசினாலும், அதனுடன் இணைந்து இயங்கும் துணைஇராணுவக்குழுக்களினாலும் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

2. போரில் கொல்லப்பட்டவர்களின் இறுதி சடங்குகளை மேற்கொள்ளும் முகமாக அவர்களின் எச்சங்கள் கையளிக்கப்படுவதுடன், அதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

3. காணாமல்போனவர்கள் மற்றும் இறந்தவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கப்படவேண்டும். அதற்கான கட்டணங்கள் அறவிடப்படக்கூடாது.

4. போரில் தப்பியவர்களுக்கு சமூக மற்றும் உளவியல் உதவிகளை வழங்கவேண்டும்.

5. தடுப்புக்காவலில் உள்ளவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு அவர்கள் விரும்பிய இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும்.

6. விடுதலைசெய்யப்பட்டவர்கள் தமது இயல்பு வாழ்வுக்கு திரும்பும்வரை தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

7. காணாமல்போனவர்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதுடன், காணாமல்போனவர்கள் தொடர்பான ஐ.நாவின் அமைப்புக்கும் அது அனுமதி வழங்கவேண்டும்.

8. அவசரகாலச்சட்டம், பயங்கரவாதத்தடுப்புச்சட்டம் என்பன நீக்கப்பட வேண்டும். அல்லது அதனை அனைத்துலக தராதரத்திற்கு மாற்றவேண்டும்.


தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் தொடர்பில் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது. தடுப்புக்காவலில் உள்ளவர்களின் பெயர் விபரங்களும், அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடமும் வெளியிடப்பட வேண்டும் அவர்களை பார்வையிடுவதற்கு உறவினர்களும், சட்டவாளர்களும் அனுமதிக்கப்பட வேண்டும்.நீதிமன்றத்தின் மூலம் அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படுவதுடன், ஏனையவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். சுதந்திரமான நடமாட்டங்களை தடைசெய்யும் சிறிலங்கா அரசின் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கை தனது பரிந்துரையில் குறிப்பிட்டிருக்கிறது இவைகளில் முக்கியமானவைகளை நிறைவேற்றினாலே தமிழர்களின் அதிகபட்ச பிரச்சினைகள் தீர்வுக்கு வந்துவிடும்.

ஆனால் அறிக்கைபற்றி எதையும் ஆராய்ந்து பார்க்கும் முன்பே ஸ்ரீலங்கா அரசு தனது வழமையான பாணியில் எதிர்ப்பை மட்டும் வெளியிட்டு தான் எந்தச்சட்டத்துக்கும் அடங்காத கட்டாக்காலி என்பதை நிரூபிப்பதற்கு முயல்வது தெரிகிறது. ஆனால் அமெரிக்காவும் இந்தவிடயத்தில் நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு சார்பாக தனது கருத்தை கடுமையாக தெரிவித்திருப்பதையும் சர்வதேச மன்னிப்புச்சபை தனது அறிக்கையில் போரின் போது சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களையும், போர்க்குற்றங்களையும் தடுப்பதில் ஐக்கிய நாடுகள் சபை 2009 ம் ஆண்டு தவறிழைத்திருந்தது. ஆனால் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்குழுவின் பரிந்துரைகளின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கும் சந்தர்ப்பம் ஐ.நாவுக்கு கிடைத்துள்ளது. எனவே இந்த சந்தர்ப்பத்தை ஐக்கிய நாடுகள் சபை தவறவிடக்கூடாது என்பதை வலியுறுத்தி, ஆலோசனைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையை பொதுமக்களின் பார்வைக்கு சமர்ப்பிக்குமாறு கோரி ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு பொதுமக்கள் மனுக்களை அனுப்பும்படி அனைத்துலக மன்னிப்புச்சபை வேண்டுகொள் விடுத்துள்ளது.

இதனிடையே இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பேச வல்லவரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண குறிப்பிடுகையில் இது மிக நீண்டகாலமாக தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் பரப்பி வரும் வதந்திகளை ஆதாரமாகக் கொண்டு குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதென குதர்க்கமாக குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றம் புரிந்ததாகக் கூறி சர்வதேச நீதிமன்றிற்கு இலங்கையை அழைத்துச் செல்வதே ஐ.நா நிபுணர் குழு அறிக்கையின் ஒரு நோக்கமென அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார். இதனால் குறித்த அறிக்கையை தாம் முற்றாக புறக்கணிப்பதாக அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டார்.

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட அரசாங்கம் முயற்சிப்பதாகவும். இலங்கையில் இராணுவத்தரப்பினரால் இழைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள விடயங்கள் நாட்டின் கௌரவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் முக்கியத்துவமிக்கது என்பதன் காரணமாகவே அவ்வாறு கூட்டறிக்கை வெளியிட முயற்சி செய்யப்படுகின்றது என்றும், அதன் மூலம் பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்த பாதுகாப்புப் படையினர் தொடர்பில் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி என்பவற்றுக்கிடையில் கருத்தொருமைப்பாடு நிலவுவதாக வெளியுலகுக்கு உணர்த்த முடியும் என்று விளம்பரப்படுத்தலாமென ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மந்திராலோசனையில் எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறான கூட்டறிக்கையின் அவசியம் குறித்து கங்காராம விகாரையின் பிரதம தேரர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளதுடன், எதிர்க்கட்சித் தலைவரையும் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகத்தெரிகிறது. அதன் காரணமாக ஜனாதிபதி அது தொடர்பில் கவனம் செலுத்தியிருப்பதுடன், ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் நாடு திரும்பியதும் பிரஸ்தாப கூட்டறிக்கையை வெளியிடுவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும் அறியக் கிடைத்துள்ளது.

சர்வதேச ஐ.நா நிபுணர்கள் குழு எடுத்திருக்கும் நிலைப்பாட்டுக்கும் இலங்கை அரசு நிற்கும் இடத்திற்கும் நீண்ட இடைவெளி காணப்படுகின்றது. நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளாக போர் உருவாகியதற்கான காரணங்கள், அரசியல் நடவடிக்கைகள்,மற்றும் குற்றங்கள் தொடர்பில் பின்வரும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பொது அமைப்புக்களுடன் இணைந்து சமூகப்பிரச்சனைகளை சிறீலங்கா அரசு ஆராயவேண்டும். அதற்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் தகவல்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற பொதுமக்களின் இழப்புக்களுக்கு சிறீலங்கா அரசு பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும். இறுதிக்கட்ட போரின் போது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறீலங்கா அரசு அனைத்துலக தராதரத்திற்கு அமைவாக சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். என்று தனது தீர்ப்பில் குழு பரிந்துரைத்திருக்கிறது

இறுதிக்கட்டத்தில் வன்னியில் இடம்பெற்ற போரின்போதும், அதன் பின்னரும் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள் குறித்து பின்வரும் பரிந்துரைகள் முன்வைக்கப்படுகின்றன. 2009 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்த தீர்மானத்தை அது மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும். அதற்கான கோரிக்கையை மனித உரிமை ஆணைக்குழு மேற்கொள்ளவேண்டும். மனித உரிமைகளை மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் போரின்போதும், போரின் பின்னரும் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் ஐநாவின் நிபுணர்கள் குழுவின் பரிந்துரையில் அழுத்திக்கூறப்பட்டிருக்கிறது.

அனேகமாக இவற்றை நடைமுறைக்குட்படுத்தவேண்டிய அழுத்தம் பலதரப்பிலிருந்தும் ஐ.நா மன்றத்துக்கு கொடுக்கப்படும் சாத்தியங்கள் இருக்கின்றன. இவை ஒரு குறுகிய காலத்தில் நடத்தி முடிக்க இலங்கை அரசு ஒத்துழைக்குமென நம்பமுடியாது, ஆனால் சிலவிடயங்களை ஒத்துக்கொண்டு காலத்தை இழுத்தடிக்கும் வழமையான தந்திரத்தை ஸ்ரீலங்கா அரசு தனது ஆட்சிக்காலத்தில் இழுத்தடிக்க முயற்சிக்கலாம். இந்த தந்திரங்களை முறியடிக்கும் விதமாக புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் வேகமாகவும் அதே நேரம் விவேகமாகவும் போட்டியில்லாமல் காய் நகர்த்தவேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இலங்கை அரசாங்கம் இவற்றிற்கு கட்டுப்பட்டு நீதி விசாரணைகளை ஐநா சபையின் நேரடிக்கண்காணிப்பில் நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும். அதே நேரம் நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ள தமிழர்களுக்கான உரிமைகளையும் அரசியல் ரீதியாக வழங்கவேண்டிய கட்டாயம் உருவாகி வருவதற்கான சூழலும் தோன்றக்கூடும். இலங்கை அரசாங்கம் இதற்கு வழமைபோல எதிர்ப்புத்தெரிவித்து முரண்டுபிடிக்குமானால் ஐ.நா சபையின் சிபார்சின் பேரில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றவாளியாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ கூண்டிலேறவேண்டிய அதிர்ஸ்டமும் உண்டாகலாம்.

ஈழதேசம் இணையத்திற்காக.
கனகதரன்.

Saturday, April 16, 2011

ஐ.நாவின் 196 பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டவை என்ன?

ஐ.நாவின் 196 பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை என்ன? – முழுமையான அறிக்கை

ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள போர்க்குற்ற ஆலோசனைக்குழு தனது அறிக்கையை கடந்த 12 ஆம் நாள் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கையளித்துள்ள நிலையில் அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை ஈழம் ஈ நியூஸ் சுருக்கமாக இங்கு தருகின்றது.

ஈழம் ஈ நியூஸ் இன் அரசியல் பிரிவு ஊடகவியலாளர்களினால் சுருக்கமான தமிழாக்கம் செய்யப்பட்;டுள்ள 196 பக்கங்கள் கொண்ட அறிக்கையின் மொழிபெயர்ப்புக்கு உதவிய ஊடகவியலார்களளுக்கு நாம் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஐ.நாவின் போர்க்குற்ற ஆலோசனைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை:

சிறீலங்காவில் இடம்பெற்றபோரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நாவின் குழு மேற்கொண்ட ஆய்வுகளை தொடர்ந்து சிறீலங்காவில் பெருமளவான போர்க்குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

எனினும் 2008 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையிலும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை நாம் அதிகமாக ஆராய்ந்துள்ளோம்.

வன்னியில் 330,000 மக்கள் போரில் சிக்கியிருந்தனர். அவர்களில் பலர் சிறீலங்கா படையினரின் எறிகணை தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். விடுதலைப்புலிகளும் மக்களை கேடையமாக பயன்படுத்தினர். போரில் நடைபெறும் சம்பவங்கள் வெளியில் தெரியவருவதை தவிர்ப்பதற்காக சிறீலங்கா அரசு ஊடகவியலாளர்களையும், ஏனைய பணியாளர்களையும் மிரட்டிவந்துள்ளது. வெள்ளைவான் கடத்தல் மூலமும் மக்கள் காணாமல்போகச் செய்யப்பட்டனர்.

மூன்று பாதுகாப்பு வலையங்களை அறிவித்த சிறீலங்கா அரசு அதன் மீது செறிவான எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டு மக்களை படுகொலை செய்துள்ளது. கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என சிறீலங்கா அரசு தெரிவித்தபோதும், அவர்கள் அதனை மீறியுள்ளனர்.

ஐ.நா அலுவலகம் மீதும், வைத்தியசாலைகள் மீதும், அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கத்தின் உணவு விநியோக நிலையம் மீதும் சிறீலங்கா அரசு எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. சிறீலங்கா அரசின் எறிகணைத்தாக்குதல்களினாலேயே பெருமளவான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலைகள் என தெரிந்திருந்தும் சிறீலங்கா படையினர் அதன் மீது மோட்டார் மற்றும் பீரங்கி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். மக்களுக்கான உணவு மற்றும் மருந்து விநியோகங்களையும் சிறீலங்கா அரசு திட்டமிட்டு தடுத்துள்ளது.

வன்னியில் இருந்த மக்கள் தொகையையும் அது குறைத்து கூறியிருந்தது. போரின் பின்னரும் மக்களை தடுப்புக்காவலில் வைத்திருந்த சிறீலங்கா அரசு திட்டமிட்ட ரீதியில் அவர்களை பிரித்து பலரை படுகொலை செய்ததுடன், பெண்களை பாலியல் வல்லுறவுக்கும் உட்படுத்தியுள்ளது. பெருமளவானோர் காணாமல்போயுள்ளனர். பொதுமக்கள் மூடிய முகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர்.

சிறிய பகுதிக்குள் பெருமளவான மக்களை அடைத்து அனைத்துலகத்தின் விதிகளை அரசு மீறியுள்ளது. முகாம்களில் அடைக்கப்பட்ட பலர் துன்புறுத்தப்பட்டுள்ளனர். அங்கிருந்து பிரிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்படுபவர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

போரின் போது மேற்கொள்ளப்பட்ட முக்கியமான வன்முறைகள்:

சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டவை

• எறிகணைத் தாக்குதல்கள் மூலம் பெருமளவான பொதுமக்களை படுகொலை செய்தது.

• வைத்தியசாலைகள் மற்றும் மனிதாபிமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியமை.

• மனிதாபிமான உதவிகளை தடுத்தமை.

• போரில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதும், விடுதலைப்புலிகள் மீதும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டமை.

• போர் நடைபெற்ற பகுதிக்கு வெளியில் மேற்கொள்ளப்பட்ட பெருமளவான வன்முறைகள், ஊடகத்துறை மீதான வன்முறைகள்.

விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டவை:

• மக்களை கேடையமாக பயன்படுத்தியமை.

• வெளியேற முனைந்த மக்களை படுகொலை செய்தமை.

• பொதுமக்களின் பிரதேசத்தில் படை உபகரணங்களை வைத்திருந்தமை.

• பலவந்தமாக சிறுவர்களை படையில் சேர்த்தது.

• பலவந்தமாக மக்களை பணியில் அமர்த்தியது.

• தற்கொலை தாக்குதல்களில் பொதுமக்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தியது.

எனவே இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் மற்றும் அனைத்துலக விதிகளின் மீறல்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த குற்றங்களில் ஈடுபட்ட சிறீலங்கா படை அதிகாரிகள், படை சிப்பாய்கள், சிறீலங்கா அரச அதிகாரிகள், விடுதலைப்புலிகள் மற்றும் ஏனையவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

சிறீலங்கா அரசு நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை அமைத்துள்ளது. அதன் முன் பெருமவளாக மக்கள் சாட்சியமளித்துள்ளனர். ஆனால் இந்த குழு அனைத்துலகத்தின் தராதரத்தை கொண்டிருக்கவில்லை. அவர்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்தவில்லை.

சிறீலங்காவில் தீர்க்கப்படாத ஏனைய பிரச்சனைகள்:

• விடுதலைப்புலிகளை முறியடித்துள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துவரும்போதும், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகள் அங்கு தீர்க்கப்படவில்லை.

• அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதார ரீதியாக தமிழ் மக்கள் புறக்கணிப்புக்கு உள்ளானதே இனப்பிரச்சனைக்கான முக்கிய காரணம்.

• போர்க்கால நடவடிக்கைகள் அங்கு தொடர்கின்றன. அவசரகாலச்சட்டம், பயங்கரவாதத்தடுப்புச்சட்டம் என்பன தொடர்கின்றன. இராணுவமயப்படுத்தல்களும், துணைஇராணுவக்குழுக்களின் நடவடிக்கைகளும் நிறுத்தப்படவில்லை.

• ஊடகங்கள் மீதான வன்முறைகளும் தொடர்கின்றது.

பொதுமக்களை பாதுகாப்பதில் அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பு

இறுதிக்கால போரில் ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது அனைத்துலக சமூகமோ பொதுமக்களை பாதுகாப்பதில் இருந்து தவறியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு கொண்டுவந்த தீர்மானம் கூட 2009 ஆம் ஆண்டு தவறான தகவல்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

பரிந்துரைகள்:

சிறீலங்கா அரசும், ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என நாம் பரிந்துரை செய்கிறோம்.

பரிந்துரை -1: விசாரணைகள்

நாம் முன்வைத்துள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு நீதியான விசாரணையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.

சிறீலங்கா அரசின் விசாரணைகளை அவதானிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் உடனடியாக சுயாதீன அனைத்துலக கண்காணிப்பு குழு ஒன்றை அமைக்கவேண்டும்.

இந்த குழு பின்வரும் செயற்பாடுகளை கொண்டிருத்தல் வேண்டும்:

• சிறீலங்கா அரசின் விசாரணைகளை உன்னிப்பாக அவதானித்து, செயலாளர் நாயகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.

• நீதியான சுயாதீன விசாரணைகளையும் அது மேற்கொள்ள வேண்டும்.

• ஆதாரங்களை சேகரித்து, அதனை பாதுகாத்து வழங்கவேண்டும்.

பரிந்துரை -2: உடனடியான சிறப்பு நடவடிக்கைகள்

வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

1. சிறீலங்கா அரசினாலும், அதனுடன் இணைந்து இயங்கும் துணைஇராணுவக்குழுக்களினாலும் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

2. போரில் கொல்லப்பட்டவர்களின் இறுதி சடங்குகளை மேற்கொள்ளும் முகமாக அவர்களின் எச்சங்கள் கையளிக்கப்படுவதுடன், அதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

3. காணாமல்போனவர்கள் மற்றும் இறந்தவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கப்படவேண்டும். அதற்கான கட்டணங்கள் அறவிடப்படக்கூடாது.

4. போரில் தப்பியவர்களுக்கு சமூக மற்றும் உளவியல் உதவிகளை வழங்கவேண்டும்.

5. தடுப்புக்காவலில் உள்ளவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலைசெய்யப்பட்டு அவர்கள் விரும்பிய இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும்.

6. விடுதலைசெய்யப்பட்டவர்கள் தமது இயல்பு வாழ்வுக்கு திரும்பும்வரை தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

7. காணாமல்போனவர்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதுடன், காணாமல்போனவர்கள் தொடர்பான ஐ.நாவின் அமைப்புக்கும் அது அனுமதி வழங்கவேண்டும்.

8. அவசரகாலச்சட்டம், பயங்கரவாதத்தடுப்புச்சட்டம் என்பன நீக்கப்பட வேண்டும். அல்லது அதனை அனைத்துலக தராதரத்திற்கு மாற்றவேண்டும்.

தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் தொடர்பில் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

• தடுப்புக்காவலில் உள்ளவர்களின் பெயர் விபரங்களும், அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடமும் வெளியிடப்பட வேண்டும்;.

• அவர்களை பார்வையிடுவதற்கு உறவினர்களும், சட்டவாளர்களும் அனுமதிக்கப்பட வேண்டும்.

• நீதிமன்றத்தின் மூலம் அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

• குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படுவதுடன், ஏனையவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

• சுதந்திரமான நடமாட்டங்களை தடைசெய்யும் சிறிலங்கா அரசின் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்.

பரிந்துரை -3: நீண்டகால சிறப்பு விசாரணை நடவடிக்கைகள்

போர் உருவாகியதற்கான காரணங்கள், அரசியல் நடவடிக்கைகள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் பின்வரும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

1. பொது அமைப்புக்களுடன் இணைந்து சமூகப்பிரச்சனைகளை சிறீலங்கா அரசு ஆராயவேண்டும். அதற்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் தகவல்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

2. போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற பொதுமக்களின் இழப்புக்களுக்கு சிறீலங்கா அரசு பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும்.

3. இறுதிக்கட்ட போரின் போது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறீலங்கா அரசு அனைத்துலக தராதரத்திற்கு அமைவாக சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பரிந்துரை -4: ஐக்கிய நாடுகள் சபை

வன்னியில் இடம்பெற்றபோரின்போதும், அதன் பின்னரும் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள் குறித்து பின்வரும் பரிந்துரைகள் முன்வைக்கப்படுகின்றன.

1. 2009 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்த தீர்மானத்தை அது மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும். அதற்கான கோரிக்கையை மனித உரிமை ஆணைக்குழு மேற்கொள்ளவேண்டும்.

2. மனித உரிமைகளை மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் போரின்போதும், போரின் பின்னரும் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும்.

தமிழில் ஈழம் ஈ நியூஸ்.


Friday, April 1, 2011

சனீஸ்வரனின் பிடியில் சிக்கித்தவிக்கும் சண்டாளி கருணாநிதி

தமிழகத்தில் சட்டசபைக்கான தேர்தல் நடக்க இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளன. வேட்புமனுக்களின் சரிபார்த்தல் நேற்று முந்தினத்துடன் முடிவடைந்து,வேட்பாளர் பட்டியல் இறுதிசெய்யப்பட்டு , அவர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்பட்டுவிட்டதால், 234 தொகுதிகளிலும் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.தமிழக சட்டசபை தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த 19ம் தேதி துவங்கி, 26ம் தேதி முடிந்தது. இதில், 4,280 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மனுக்கள் கடந்த திங்கள்கிழமை 28ம் தேதி பரிசீலிக்கப்பட்டன. இதில், 1,153 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.சிலர் வாபஸ் பெற்றும் இருந்தனர். மீதம் 3,082 மனுக்கள் ஏற்கப்பட்டன. ஏப்ரல் 13ம் திகதி தேர்தல் நடத்தப்பட்டு மே மாதம் 13ம் தேதி வாக்குக்கள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இந்தத் தேர்தலில் பலகட்சிகள் போட்டியிட்டாலும் முடிவாக ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, அல்லது கருணாநிதி தலைமையிலான திமுக, ஆட்சி அமைப்பதற்கான தகமையை பெற இருக்கின்றன. இந்த இரண்டு கட்சிகளில் எந்தக்கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தாலும் தமிழ்நாட்டுக்கோ தமிழினத்துக்கோ பெரியமாற்றம் எதுவும் வந்துவிடப்போவதில்லை, பழையகுருடி கதவைத்திறவடி கதைதான் தொடர்கதை.

இரண்டு கட்சிகளும் சமூக மேம்பாட்டில் தொலைநோக்கு பார்வையற்ற குறுகிய விஸ்தீரணம் கொண்ட தமிழர் விரோத சுயநலன் சார்ந்த ஊழல் கட்சிகள். என்பதுதான் இதுவரை கடந்துபோன கால வழித்தடத்தின் சாட்சி, ஆனால் கடந்த ஐந்துவருடங்களாக ஆட்சிபுரிந்த திமுக, கருணாநிதியின் மன்னர் ஆட்சிக்கொப்பான மோசமான குடும்ப ஆட்சிக்கு விடுப்பு கொடுக்கப்பட்ட ஒரு சிறு ஆறுதல் மக்களுக்கு உண்டாகும் அவ்வளவுதான்.

89 வயதான கருணாநிதி தனது 75 வது வருட அரசியல் அனுபவத்தை இந்த ஆண்டு பூர்த்தி செய்வதாக கூறியிருக்கிறார். இந்த 75 வருடகாலத்தில் கருணாநிதிக்கு சமூக, உலக அரசியல்பற்றிய ஞானம் கடுகளவுகூட இல்லாவிட்டாலும், இந்திய அரசியலில் மிகப்பெரிய பலம் எது, மிகமோசமான பலவீனம் எது, என்ற இரகசியம் எல்லாவற்றையும் நன்கறிந்து வைத்திருக்கிறார். எங்கு கைவைத்தால் எது அசையும், எது அசையாமல் நிற்கும், என்பதை எல்லாம் அக்குவேறு ஆணிவேறாக கருணாநிதி அறிந்தே வைத்திருக்கிறார்.

இயல்பாக கருணாநிதி அதி ஞாபகசக்தி நிறைந்த அபாரமான தந்திரசாலி. அத்துடன் இன்று இந்தியாவில் இருக்கும் அரசியல்வாதிகளில் மிகவும் மூத்தவர். இந்திய அரசியல் சட்டத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரையிலும் இருக்கும் நடைமுறை சட்ட நியாயங்களை, நியாயமாக அணுகுவதைவிட அதிலிருக்கும் ஓட்டைகளை தேடிப்பிடித்து எப்படி தனது ஊழல் குடும்ப சுயநலனுக்கு பாவிக்கலாம் என்பதை துல்லியமாக தெரிந்து அறிந்தளவுக்கு அவரது சிந்தனை மக்கள் வளர்ச்சிபற்றி சிந்தித்தது கிடையாது, கருணாநிதி சட்டத்தின் ஓட்டைகளை பாவித்து தான் தப்பித்து மற்றவர்களை மாட்டிவிடுவதால் அவர் ஒரு அரசியல் சாணக்கியர் என எல்லோரும் பயப்படுவதற்கு காராணமாகியிருக்கிறது.

ஜெயலலிதா முற்று முழுதாக கருணாநிதியின் இயல்புக்கு நேர்மாறானவர். ஆனால் கருணாநிதியை விடவும் ஜெயலலிதா துணிச்சலானவர் என்பது மறுக்கமுடியாது, வேகமாக உணர்ச்சிவசப்படுவதால் காரியத்தை கெடுத்துவிடுபவர் என்று கூறப்படுகிறது.ஜெயலலிதாவுக்கு பெருத்த ஞாபகசக்தியில்லையென்றாலும். தன்னை சீண்டியவர்கள் எவராக இருந்தாலும் எவ்வளவுகாலம் சென்றாலும் மறக்காமல் வெளிப்படையாக பழிவாங்கும் குணம் அரசியலரங்கில் அதிக நேரங்களில் ஜெயலலிதாவை தனிமைப்பட வைத்ததுண்டு. ஆணவமும் விட்டுக்கொடுக்காத மனப்பாங்கும் ஜெயலலிதாவின் தோல்விகளுக்கான பிரதானிகளாகும். ஆற அமர்ந்து சிந்தித்து அனுசரித்து முடிவெடுப்பதெல்லாம் ஜெயலலிதாவின் அகராதியில் இல்லாத ஒன்று.

தனது இருப்புக்காக தமிழகத்தில் உருவான பல்வேறுபட்ட அரசியல் கட்சிகளை தலையெடுக்கவிடாமல் செய்ததில் கருணாநிதியின் பங்கு அதிகம். அதனால் தமிழ்நாட்டில் இந்த இரண்டுகட்சிகளும் தலமைப்பொறுப்பை தமக்குள் வைத்துக்கொள்ள முடிகிறது. வேறு எந்த விஷேச அம்ஷங்களும் இந்த திராவிடக்கட்சிகளிடம் இல்லையென்பதே உண்மை. யதார்த்தமான ஜனநாயகத்துக்கு முரண்பட்ட வகையில் தேர்தல்காலத்தில் ஏற்படுத்தப்படும் கூட்டணி,, என்ற விசித்திரமான ஒரு முரண்பட்ட ஏமாற்றுத்திட்டத்தையும் இந்த இரண்டுகட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு ஈடேற்றுகின்றன. கொள்கைகளை குழிதோண்டி புதைத்துவிட்டு பூச்சியமாக்கப்பட ஒரு சூனியத்தில், நீதி நியாயம் யதார்த்தம் எல்லாம் அடகு வைக்கப்பட்டு, ஆட்சியை பதவியை கைப்பற்றுவதே குறியாக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் அதரப்பழசான அரசியல்ச்சட்டமும் இவையெல்லாவற்றிற்கும் இடங்கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஆரோக்கியமான ஒரு அரசியல்ச்சட்டத்தை தயாரிப்பதில் இந்தியாவில் எந்தக்கட்சிக்கும் உடன்பாடு இல்லை என்பதே உண்மையும் கூட. இந்தியாவின் தொடர் வறுமை, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு இவையே மூல காரணமாகி ஊழலில் புரையோடி நாடு திருவோடு தாங்கும் நிலையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.

கருணாநிதி விஞ்ஞானபூர்வமாக அரசியல் காய் நகர்த்தக்கூடியவர். தந்தரமாக எல்லோரையும் தனது காலடியில் வைத்திருந்து காரியம் அனைத்தையும் தன்னை நோக்கி நகரவைப்பதில் புலி. கட்சியில் உள்ளவர் எவரையும் தலையெடுத்துவிட அவர் விட்டுவைத்ததில்லை. எம்.ஜீ.ஆர், வைகோ, ஆகியோரின் வெளியேற்றம் இதற்கு நல்ல சான்றாகும். அண்ணாத்துரை புற்றுநோய் காரணmaaக பெப்ரவரி 1969 ல் இறந்தபோது அன்றைக்கே அவசர அவசரமாக அண்ணாத்துரைக்கு இரங்கல்பா எழுதி ஆனந்தமாக வெளியிட்டவர் கருணாநிதி. அதையும் அவர்தான் ஒருசமையத்தில் கூறியிருக்கிறார். பிறிதொருசமையத்தில் கருணாநிதி இப்படிக்கூறினார் அண்ணா மறைந்த நிகழ்வு என்னை அப்படியே புரட்டிப்போட்டுவிட்டது அந்தக்கவலையிலிருந்து மீழ்வதற்கு எனக்கு பலகாலம் பிடித்தது என்று கூறியிருந்தார். இயல்பாக வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்திய நெருங்கிய ஒருவர் தவறிவிட்டால் எந்தப்பெரிய புலவராக இருந்தாலும் பாட்டெழுதக்கூடிய மனநிலை இடம் தருமா?. என்பதை சிந்தித்தால் கருணாநிதி எப்படிப்பட்ட பச்சோந்தி அயோக்கியன் என்பது புரியும்.

வரப்போகும் தேர்தல் கருணாநிதிக்கும் திமுக வுக்கும் பூரண்கண்டம் என்பதுதான் அதிகமான மக்களின் 100% எதிர்பார்ப்பு, கணிப்புங்கூட. கருணாநிதியின் வீழ்ச்சிக்கு மூன்று பெரிய காரணிகள் சொல்லப்படுகிறது. 1), ஜி 2 ஸ்பெக்ரம் அலைவரிசை ஊழல் மோசடி, 2), ஈழத்தமிழர்களை பாழ்படுத்தி அழித்தொழித்த ஈழத்துரோகம். 3),தமிழர் விரோத இத்தாலி சோனியாவின் கட்சியான காங்கிரஸுடனான கூட்டு, இவைகளை காரணமாக கூறப்படுகிறது.

இவைதவிர தமிழ்நாட்டின் தொழில்த்துறையில் எவரும் நுழையமுடியாமல் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம் பல தொழிலதிபர்களையும் சினிமா திரைப்படத்துறையினரையும் மோசமாக எரிச்சலடைய வைத்திருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் உயர்கல்வி வியாபாரமாக்கப்பட்டு அவை அனைத்தும் கருணாநிதியின் குடும்பத்தினருக்கு தேவையான அரசியல் வாதிகளின் கைகளில் சிக்கியிருக்கிறது, டாஸ்மாக் எனப்படும் மதுபான விற்பனையை அரசாங்கமே தொடங்கி மதுபான உற்பத்தி அனைத்தும் கருணாநிதியின் குடும்பத்திடமும் அரசியல்வாதிகளிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றும் பல தொழில்த்துறைகளான றியல் எஸ்டேட். தனியார் போக்குவரத்துthதுறை, ஊடகங்கள் எல்லாம் ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் கைகளிலேயே கட்டுண்டுகிடக்கிறது.

தொலைக்காட்சி நிலையங்களை எடுத்துக்கொண்டால் அனைத்தும் அரசியல்வாதிகளின் முதிசமாகவே இருந்துவருகிறது, சர்வதேசம்வரை கோலோச்சும் சன் தொலைக்காட்சி கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தது . சன் ரிவி க்கு இணையான கலைஞர் ரிவி கருணாநிதி குடும்பத்துக்கு சொந்தமானது, ஜெயா ரிவி ஜெயலலிதாவின் சொத்து, மக்கள் ரிவி பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் குடும்ப சொத்து, கப்ரன் ரிவி விஜயகாந்த் அவர்களுடையது, மேஹா ரிவி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் மனைவியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்படி பணங்கொழிக்கும் துறைகள் அனைத்தும் அரசியல்வாதிகள் பங்குபோட்டுக்கொள்ளுவதால் சாதாரனமானவன் இவர்களோடு சேர்ந்தால் தவிர வாழமுடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இப்பொழுது சினிமாவும் கருணாநிதி குடும்பத்திடம் சிக்கிவிட்டதால். கருணாநிதியின் பேரன்கள் எடுக்கும் படங்கள் தவிர வேறு தயாரிப்பாளர்களின் படங்கள் போட்டிபோடமுடியாத சூழல்!. பாரம்பரிய சினிமா தயாரிப்பு கொம்பனிகளையே சின்னத்திரைக்கு தள்ளி நாடகம் தயாரிக்கவைக்குமளவுக்கு நிலமை சென்றிருக்கிறது, பலர் சினிமாவிலிருந்து வெளியேறி வேறு தொழிலுக்கு மாறிவிட்டனர். பல திரைப்படக்கொம்பனிகளின் பெயர்கள் ஞாபகத்திலிருந்து விடுபட்டுப்போய் விட்டன.கருணாநிதி குடும்பத்தின் மேகலா பிக்சர்ஸ் , துரை தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் மூவி. உதயநிதி ஸ்ராலினின் றெட் ஜெயண்ட் மூவி. கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ். கடைசியாக வம்ஷம் என்ற திரைப்படத்தின் மூலம் அருள்நிதி தமிழரசு திரைப்படத்துறைக்குள் நுழைந்திருக்கிறார். தொழில்த்துறையைத்தான் நியாயபூர்வமாக இவர்கள் நடத்தினாலும் பரவாயில்லை ஆனால் இவர்களின் கட்டப்பஞ்சாயத்துக்குட்படாமல் எந்தத்துரும்பும் அசையாது என்பதுதான் தமிழ்நாட்டில் எழுதப்படாத சட்டமாக்கப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில் 176.000.00.00.000. கோடிகளை சுவாகா செய்த ஸ்பெக்ரத்தில் கையும் களவுமாக கருணாநிதியின் மனைவி தயாளு, மற்றும் மகள் கனிமொழியும் சம்பந்தப்பட்டுள்ளது சாட்சிகள், ஆதாரங்கள் மூலமும் நிரூபணமாகியிருக்கிறது. ஸ்பெக்ரம் ஊழலை மத்திய அரசின் சிபிஐ விசாரித்துவந்தாலும் சரியான தண்டனையெல்லாம் கருணாநிதி குடும்பத்துக்கு இப்போதைக்கு கிடைக்கும் என்பதெல்லாம் சொல்லமுடியாது.

ஏனென்றால் சட்டத்திலுள்ள ஓட்டைகள் அனைத்தையும் ஆராய்ந்து பிடிகொடுக்காமல் தப்பும் வண்ணம் கருணாநிதியால் நிறுவப்பட்ட ஊழல் அது, இந்தியத் திரு நாட்டின் அரசியல்வாதிகளின் முக்கிய தொழிலே ஊழலும் சுத்துமாத்தும்தான், காலாகாலமாக தொடர் ஊழல்கள் நடந்துகொண்டிருந்தாலும் எவரும் குற்றவாளியாக தண்டிக்கப்பட்டதாக சரித்திரமில்லை, எனவே விசாரணை தண்டனை என்பதெல்லாம் அரசியல்வாதிகளால் கண்துடைப்பாகவே நீண்டகாலத்தை விசாரணை என்ற பெயரில் இழுத்தடித்து காலவிரையம் செய்வதாகவே இருக்கும்.

இன்று தமிழக மக்களின் மனதில் உண்டாகியுள்ள கருணாநிதி குடும்பத்தின் மீதான வெறுப்பு கருணாநிதியின் ஆட்சி தோற்க்கடிக்கப்படவேண்டும் என்பதாகவே காணப்படுகிறது, பல அரசியல் ஆய்வாளர்கள் "கருணாநிதியின் திமுக படுதோல்வியடையும்" என்றே கருதுகின்றனர். அரசியலில் கருணாநிதி மிகப்பெரிய தந்திரசாலி என்பதாலும் மத்திய மானில அரசுகளின் ஆட்சிப்பொறுப்பை பங்குபோட்டு கையில் வைத்திருப்பதாலும், அவற்றை பயன்படுத்தி சட்டவிரோதமான வழிமுறையில் வெற்றிக்கு முயற்சி செய்யக்கூடும், இப்போ அப்பாவித்தனமான சோகக்கதைகளையும் நாடகங்களையும்,மேடையேற்ற தொடங்கியிருக்கிறார். ஊழல் குற்றச்சாட்டுக்களை இல்லாது அழிப்பதற்கு அடுத்தமுறையும் முதலமைச்சராகவேண்டிய தேவை அவருக்கு இருக்கிறது, அந்த ஆதங்கத்தில் பொய்த்தகவல்களையும் தமிழ்நாட்டின் தகுதிக்கு மிஞ்சிய இலவசத்திட்டங்களையும் வாய் கூசாமல் அறிவித்து கருணாநிதியும் அவரது குடும்பமும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

சமீபத்தில் கருணாநிதியை தனியார் ரிவி ஒன்று பேட்டி கண்டபோது அவர் அளித்த பேட்டி :"ஸ்பெக்ட்ரம் 2 ஜி' அலைவரிசை ஒதுக்கீட்டில், சி.பி.ஐ., உங்கள் மகளையும், மனைவியையும் விசாரித்ததுடன், கலைஞர், "டிவி' நிறுவனத்தின் கணக்குகளையும் விசாரித்துள்ளது. அதனால், எதிர்க்கட்சிகள் உங்களுக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்க முடியாது என்று சொல்கின்றன. இதற்கு என்ன பதில் கூறுகிறீர்கள்? "இது ஊழலே அல்ல". இது பற்றி பகிரங்கமாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது. கலைஞர், "டிவி' என்பதில் என் பெயர் இடம் பெற்றிருக்கிறதே தவிர, எனக்கு அதில் எந்த உரிமையும் இல்லை. (என்று நாக்குகூசாமல் சொல்லியிருக்கிறார்), அதில், என் மகள் 20 சதவீதம் பங்குதாரர். என் மனைவி தயாளு 60 சதவீத பங்குதாரர். இந்த விவரத்தையே நான் அவர்களிடம் விசாரித்து கேட்டறிந்துதான் கூறுகிறேன். கலைஞர், "டிவி' கருணாநிதிக்கு சொந்தமானதல்ல. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அதில் பங்குதாரர்களாக இருக்கின்றனர். அவ்வளவுதான், பிறகு அது எப்படி ஊழலாகும் என்று எனக்குத் தெரியவில்லை என்று முழுப்பூசனிக்காயை மூக்குப்பொடி டப்பாவுக்குள் மூடிமறைத்திருக்கிறார்.

இந்த ஊழல் குற்றச்சாட்டால், தி.மு.க.,வுக்கு களங்கம் ஏற்பட்டு விட்டதா? என்ற கேள்விக்கு சைபர், சைபர், சைபர், சைபர் என்று போட்டு இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லும் போது, பல்லுக்கு பல் இரு காதம், பல்லிடுக்கு மூன்று காதம் என்று பூசாரிகள் அந்தக் காலத்தில் பம்பை அடிப்பார்கள். மக்களும் அதைக் கேட்டு தலையாட்டிக் கொண்டிருப்பார்கள்.*(மக்களை முழு மடையர்கள் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்) காதம் என்றால் தொலைவு. பல்லுக்குப் பல் இரு காதம் என்றால், இருபது மைல் தூரம். பல்லிடுக்கு மூன்று காதம் என்றால் முப்பது மைல்.அந்தளவுக்கு பல்லுக்கிடையே இடைவெளி என்றால், வாய் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை எல்லாம் நினைத்துப் பார்க்காமல், "ஆமாம், ஆமாம்' என்று ஒப்புக் கொண்டு, பூசாரி பம்பை அடிப்பதைப் போல, பாமர மக்களை ஏமாற்ற ஒரு சில அரசியல்வாதிகள் பம்பை அடிக்கின்றனர். அது தான் உண்மை என்று வேறு சிலர் பம்பை அடிக்கின்றனர். என்று நையாண்டி தனமாக பதிலளித்திருக்கிறார்.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடப்பதால் அது பற்றி நான் விரிவாக எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஊழலா இல்லையா என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டியது சுப்ரீம் கோர்ட். அதில் நான் தலையிட விரும்பவில்லை. கலைஞர் ரிவி நிறுவனத்துக்கு கடனை கொடுத்தவர்கள் மீது வழக்கு இருக்கலாம் . கடன் வாங்கிய பணம், ஊழல் பணம் என்று சொல்வது முறையல்ல. அது நீண்ட விசாரணைக்குப் பிறகு தான் தெரியும்.என்று கூறியிருக்கிறார் அதுவும் "நீண்ட விசாரணைக்குப்பிறகுதான் தெரியவரும்" என்ற இந்தியாவின் நடைமுறை உண்மையையும் புரிந்துகொண்டு கருணாநிதி கூறியிருக்கிறார். அந்த தொலைக்காட்சி பேட்டியையும் கருணாநிதியே தனது நலன்கருதி ஏற்பாடுசெய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருணாநிதி எதைக்கூறினாலும் சிபிஐ பொலீஸ் கருணாநிதியின் மனைவியையும் மகள் கனிமொழியையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்து விசாரித்திருக்கிறது. கருணாநிதியின் குடும்பத்தினரால் அம்பாகப் பயன்படுத்தப்பட்ட முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சரான திமுக வின் கொள்கைப்பரப்பு செயலாளரான ஆ.ராசா, வட இந்தியாவிலுள்ள திஹார் என்ற இடத்திலுள்ள சிறைச்சாலையில் சிறைப்படுத்தப்பட்டுள்ளார். ராசாவின் நண்பரும் பினாமியுமாகிய, கனிமொழிக்காக பலவழியிலும் உதவிய சாதிக் பாட்ஷா என்பவர் சமீபத்தில் இனந்தெரியாதவர்களின் மிரட்டளாலும் பயம் மன உழைச்சல் காரணமாகவும் தற்கொலை செய்துகொண்ட பரிதாபமும் நடந்தேறியிருக்கிறது.

இந்தநிலையில் கருணாநிதி தேர்தலை சந்திக்க மிகவும் அஞ்சிய நிலையில் எதையும் வெளிக்காட்ட முடியாமல் தனது முழுச்சக்தியையும் திரட்டி கவர்ச்சி போனஷாக சிலவருடங்கள்வரை ஜெயலலிதாவின் பக்தையாகவிருந்த நடிகை குஷ்புவையும். தொடர்ந்து அதிமுகவில் இருந்து வந்த டைரக்ரர் நடிகர் பாக்கியராஜையும், விஜயகாந்துடன் முட்டல் ஏற்பட்டு நின்ற நகைச்சுவை நடிகர் வடிவேலுவையும், தண்ணீர் தெளித்து பிரச்சாரத்தில் தள்ளிவிட்டிருக்கிறார். இந்த யுக்தி கருணாநிதிக்கு கை கொடுக்குதோ இல்லையோ குஷ்பு பாக்கியராஜ் தப்பித்தாலும் ரசிகர்கள் மத்தியிலும் சரி வேறு வடிவத்திலும் சரி வைகைப்புயல் வடிவேலுவுக்கு வில்லங்கம் என்பது மட்டும் வெள்ளிடை மலையாகத்தெரிகிறது.

2009ல் தமிழின அழிப்பை, ஈழத்துரோகத்தை, தனது குடும்ப நலனுக்காக, வாரிசுகளின் பதவிக்காக கூச்சமில்லாமல் ஈடேற்றிய கருணாநிதி. தனது அரசியல் சாணக்கியத்தாலும் தந்திரத்தாலும் அதிகாரம் கையில் இருந்த காரணத்தாலும் தற்காலிகமாக தப்பித்துக்கொண்டாலும், இன்று அவரை நான்கு பக்கமிருந்தும் பிரச்சினைகளும் குற்றச்சாட்டுக்களும் சுற்றி வளைத்து நின்று கும்மியடிக்கின்றன. அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும் என்பர் அது கருணாநிதி விடயத்தில் நூறு வீதம் நிதர்சனமாகியிருக்கிறது.

சனீஸ்வரன் ஒருவரை பீடிப்பதற்கு முன் சாட்டுக்காக தன்னிச்சையாக இயல்பாகவே ஒரு காரணம் உருவாக்கப்படுவதாக பெரியவர்கள் கூறுவதுண்டு.

கருணாநிதியை சனியன் ஏற்கெனவே பிடித்துவிட்டதாகவே தெரிகிறது. ஈழத்தமிழனின் படுகொலை அழிவின் சாபமும், ஸ்பெக்ரம் என்ற காற்றலை தொழில்நுட்பமும், சீமான் தலைமையிலான காங்கிரஸ்க்கான தமிழக இளைஞர்களின் எதிர்ப்பும், மும்முனையிலும், இன்னும் பல்வேறு காரணகர்த்தாக்கள் நான்காம் முனையிலும் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கின்றன. போதாக்குறைக்கு இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக பல திட்டங்களை அறிமுகப்படுத்தி அரசியல்வாதிகளை கதிகலங்கவைத்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை திருட்டுப்பூனையான கருணாநிதியின் கள்ளத்திட்டங்களுக்கு பெரும் தடையாக உள்ளதால். கருணாநிதியின் புலம்பல் உச்சத்தை அடைந்து தமிழ்நாட்டில் நெருக்கடி நிலை அறிமுகப்பட்டுள்ளது என்று காய்ந்திருக்கிறார்.

இனி தப்பிக்க முடியாது என்பது தெரிந்தும் கருணாநிதி புலம்புவது தெரிகிறது, முதலமைச்சராக வரமுடியாது என்பது தெரிந்த கருணாநிதி குறைந்தபட்சம் எம் எல் ஏ யாகவும் வரமுடியாமல் போய்விட்டால். ஜெயலலிதா தன்னை எவ்வளவு கேவலப்படுத்துவார் என்பது தெரிந்து. நான் முதலமைச்சராக இருப்பதிலும் பார்க்க எனது சொந்த ஊரான திருவாரூரில் எம் எல் ஏ யாக இருப்பதில்த்தான் மகிழ்ச்சியடைகிறேன், என்று தனது இயலாமையை கொட்டியிருக்கிறார், திருவாரூரில் எம் எல் ஏ யாக இருக்கவேண்டுமென்ற ஆசை 75 வருடங்களாக வராமல் இப்போ புதிதாக வந்திருக்கிறதென்றால் கருணாநிதி எவ்வளவு தந்தரசாலி என்பதை புரிந்து கொள்ளமுடியும்.

21ம் நூற்றாண்டில் மிக அவமானப்படுத்தப்பட்ட ஒரு அரசியல்வாதியும். ஒரே நேரத்தில் பல குற்றச்சாட்டுக்களுக்கு முகங்கொடுக்கும் அரசியல்வாதியும் கருணாநிதியாகத்தான் இருக்கும். 2009ம் ஆண்டு ஈழப்போர் உச்சம் பெற்ற ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஈழம் எரிந்து சுடுகாடான மே 13 காலப்பகுதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் காலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது இடைப்பட்ட ஒருமாதகாலம் இந்திய அரசியல் வரலாற்றில் தேர்தல் முடிவுக்காக காத்திருக்க வைக்கப்பட்டதான வரலாறில்லை, ஆனால் அந்த ஒருமாதகாலம் தான் ஈழத்தில் கோர யுத்தம் நடந்த காலமாகும் .அன்று அந்த முற்றுகைக்குள் அவலப்பட்டு ஆற்றாக்கொடுமையில் எனது மக்கள் போட்ட சாபமும் திட்டும் இரண்டு வருடம் பொறுத்து கருணாநிதியை பழிவாங்க புறப்பட்டிருப்பதுபோல் தெரிகிறது,,

துக்கத்துக்கு அறிகுறியான 13 எண் கொண்ட திகதி தேர்தலுக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதும், அதே துக்கதினமான 13, மே தேர்தல் முடிவு வெளிவரும் காலமாக அறிவிக்கப்பட்டிருப்பதும். காலதேவன் ஏதோ ஒன்றை யாருக்கோ மிகத்துல்லியமாக உலகத்தின் முன் பகிரங்கப் படுத்துவதற்க்காக தெரிவு செய்தநாளாக தேர்தலை காரணமாக்கி நிற்பது மட்டும் நிதர்சனமாகும்,, இப்படி குறிப்பிடுவதை சிலர் பழமைவாதமாக/ நகைச்சுவையாக எடுத்துக்கொண்டாலும்,, எல்லாவற்றையும் தாண்டி ஏதோ ஒன்று தனது வேலையை சரியாக கணக்கு முடிக்கிறதென்றே கொள்ளலாம். மே 15/18 திகதிகளில் தமிழ்நாட்டுக்கான புதிய முதலமைச்சர் பதவியேற்கும் நாளாக இருக்கும், அந்தத்தினங்கள் ஈழத்தமிழினத்தின் மறக்கமுடியாத கறுப்பு நாட்கள். ஆண்டவன் தீர்ப்பை பொறுத்திருந்து பார்ப்போம்,

ஈழதேசம் இணையத்திற்காக.
கனகதரன்,

நன்றி ஈழதேசம்,