Friday, June 20, 2014

வட இந்திய சன்னியாசிகளின் தீவிர இந்து சமைய அமைப்பான ஆர் எஸ் எஸ், “வேதாந்த மன்றம்” என்ற பெயரில் முல்லைத்தீவிலிருந்து தமிழர்களுக்கான நிவாரண வேலை தொடங்குகிறதாம்?.‏



சிங்கள ஏகாதிபத்திய அடக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதற்காக ஈழத் தமிழர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
அப்போதிருந்தே இந்தியாவின் அதிகாரத் தலையீடு மற்றும் இந்திய உளவு அமைப்பான  றோ’வின் ஊடுருவலும் தொடர்ந்தே வந்திருக்கிறது.
கடந்த 2009 ம் ஆண்டு இந்தியாவின் தலையீடு காரணமாக ஒன்றரை இலட்சம் தமிழ் மக்கள் இலப்படுகொலை செய்யப்பட்டு,  மே 18,ம் திகதி தமிழர் போராட்டம் மண்டியிடாத பின்னடைவுடன் நிறுத்தி வைக்கப்பட்டது.
ஈழத் தமிழர்களின் போராட்டத்துக்கான  நியாயமான அடிப்படை காரணங்கள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் இந்தியாவின் வல்லமை பொருந்திய வஞ்சகம் நிறைந்த உளவுச் சதி தமிழர்களின் விடுதலைக்கு தடையாகவே தொடர்ந்து வழிப்பட்டு வந்தது.
தமிழர் தலைமையினாலான சுய நிர்ணயமான தன்னாட்சி ஒன்று அந்த மண்ணில் உருவாகாதவரை அங்கு கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்கள் அழிக்கப்பட்டு தமிழினம் இல்லாமல்போகும் அபாயம் இருப்பதை சர்வதேசமும் உணர்ந்திருக்கிறது.
ஈழத்தமிழர்களுக்கான சுயமான ஆட்சி அரசியல் தேவை என்பதை இந்தியா தவிர்ந்த சர்வதேசம் ஒத்துக்கொண்டிருக்கிறது.
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சர்வதேசப் பார்வையுடன் இந்தியாவின் பின்னணியில் உருவாக்கப்பட்ட முன்னாள் நீதியரசரான சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாணசபை தன்முனைப்புடன் எத்தகைய வேலைத்திட்டத்தையும் இதுவரை செய்திருக்கவில்லை. இடையூறாக இந்தியா இருந்துவருவதாகவே குற்றச்சாட்டுக்கள் முன்மொழிப்படுகின்றன.
வடக்கு மாகாணசபைக்கான நிறைவேற்று அதிகாரங்கள் என்று இலங்கையின் மத்திய அரசும் இதுவரை எதையும் வழங்கிவிடவுமில்லை.  மூத்தண்ணனாக மூக்கை நுழைத்திருக்கும் இந்தியாவும் அதுபற்றி கேட்காமல் காலம் கடத்தும் உத்தியே கையாளப்பட்டு வருகிறது.
அதிகாரங்களைப் பெற்றெடுப்பதற்கான உத்தி பற்றிய வியாக்கிஞானங்கள் மட்டும் ஆட்சி எசமானர்களின் சிந்தனையை ஒத்து முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் கூட்டாக ஒருதரப்பாரும் ஈழத்து தேசிய அடிப்படை சிந்தனையை ஒத்து இன்னொரு தரப்பாருமாக ஒரே கட்சிக்குள் இரு வேறுபட்ட சிந்தனையில் விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு கலவரங்களாக சபை கலைக்கப்பட்டு வருகிறது.
பின்னணி என்னவென்று நோக்கினால் இந்தியா மற்றும் இலங்கை ஆட்சியாளர்கள் திரைமறைவில் திட்டமிட்டு நடைமுறைப்படுத்த முயலும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கே முதலமைச்சர் விருப்பங்கொண்டவராக காணப்படுகிறார்.
மாகாணசபையில் அங்கத்துவம் வகிக்கும் தமிழ் தேசியவாத உறுப்பினர்கள் முதலமைச்சரின் நோக்கத்தை முற்று முழுதாக எதிர்த்து வருகின்றனர். தமிழ் தேசியவாதிகளின் திட்டங்களை எதிர்த்து முதலமைச்சர் தரப்பு மல்லுக்கட்டும் விவாதங்கள் மட்டுமே வடக்கு மாகாணசபை கூட்டத்தின் முடிவுகளாக பத்திரிகைகள் செய்திகளை வெளியிடுகின்றன.
சென்ற மாதம்வரை பத்தாண்டுகாலம் இந்தியாவை சோனியா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி செய்து வந்தது. 2014- மே-26ம் திகதி பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை கைப்பற்றி நரேந்திரமோடி பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.
நரேந்திரமோடி பதவியேற்கும் விழாவுக்கு இனப்படுகொலையளி இராஜபக்‌ஷவை  பிரதம விருந்தினராக இந்தியா வரவேற்று கௌரவப்படுத்தியது. தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் உலகதமிழர்கள் உட்பட பத்துக்கோடி தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும் ராஜபக்‌ஷவை புறந்தள்ள இந்திய வெளிவிவகார கொள்கை இடங்கொடுக்கவில்லை.
மன்மோகன் சிங்கின் ஆட்சிக்காலத்தில் பல இலடசம் கோடி நலத்திட்டங்கள் ஈழத் தமிழர்களுக்காக ஒதுக்கீடு செய்ததாக பலகோடி ரூபா செலவில் விளம்பரங்கள் செய்யப்பட்டன, விளம்பர தூதராக துறவி அப்துல் கலாம் யாழ்ப்பாணம் சென்று பிரச்சாரம் செய்தார்,
இறுதியாக மிக மலிவான தரத்தில் கட்டப்பட்ட பொதுக்கழிப்பறையை ஒத்த ஐம்பது வீடுகளும்,  சில மிதிவண்டிகளும் தமிழர்களுக்கு கையளிக்கப்பட்டதாக மட்டும் பதிவுகள் உறுதி செய்கின்றன.  சுவாரஷ்யமான அதிர்ச்சி என்னவென்றால் ஐம்பது கழிப்பறை வீடுகளையும் சில துவிச்சக்கர வண்டிகளையும் கையளிப்பதற்கு முன்னாள் உள்த்துறை மந்திரி கிருஷ்ணா, சிவ்சங்கர் மேனன் மற்றும் பிரச்சார உத்தியோகத்தராக பணியாற்றிய அப்துல் கலாம் ஆகிய உயர்மட்ட அதிகாரிகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சென்று ஐந்து நட்சத்திர சொகுசு விடுதிகளில் உண்டு உறங்கி செய்த செலவுக்காக மட்டும் பல ஆயிரம் கோடிகள் செலவு செய்யப்பட்டிருக்கின்றன.
மெற்குறித்த அனைத்தும் இறந்தகால நிகழ்வுகள் என்றாலும்.
1987,ல் இந்தியாவை ஆட்சி செய்த ராஜீவ் அரசு வடமராட்சி பிரதேசத்தில் விமானமூலம் உணவுப்பொதிகளை வீசி தமிழர்களின் அவலத்தை அரசியலாக்கி இரட்சிப்பாளனாக முகமூடியிட்டு ஈழத் தமிழர்களின்மேல் கரிசினை கொண்டதுபோல காட்டிக்கொண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தை செய்து இராணுவத்தை ஈழத்துக்கு அனுப்பி தமிழர் பிரதேசங்களை சுடுகாடாக மாற்றியது.
அதன்பின் ஐம்பதாயிரம் கோடி அபிவிருத்திக்கு வழங்குவதாக கூறிக்கொண்ட சோனியா-மன்மோகன் அரசு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு வேண்டிய திட்டமிடல்களையும் தொழில்நுட்ப வசதிகளையும் இராணுவ உதவியையும் ஶ்ரீலங்காவுக்கு வழங்கி இனப்படுகொலையில் முடித்தது.
அதே கொள்கையுடன் கூடிய அரசியல் உத்தியை இன்றைய மோடி அரசும் பின்பற்றி வருகிறதா என்ற ஐயம் தமிழர்களை கிலி கொள்ள வைத்திருக்கிறது. .
இலங்கையில், போரால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு,  உதவுவது என்ற பெயரில் பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். என்ற சங் பரிவாரம் என்ற அமைப்பு, (‘வேதாந்த மன்றம்”)  வேதாந்தா இந்து சமய கலாசார மன்றம் என்ற நாமகரத்துடன் பல்வேறு உதவிகளை செய்வதற்கு முல்லைத்தீவில் மையம் கொண்டு செயற்பட தொடங்கியிருப்பதாக தெரிகிறது.
மோடி பிரதமராகி ஆட்சியை கைப்பற்றி ஒரு மாதமாவதற்குள் வேதாந்த சமய கலாச்சார மன்றம் முல்லைத்தீவில் தனது வேலையை தொடக்கி பல தரவுகளை திரட்டி வெளியிட்டிருக்கிறது.
இப்படியொரு மன்றம் தொடங்கப்பட்டதன் பின்னணி என்ன. உள்ளே ஒளிந்திருக்கும் அரசியல் – புலனாய்வு என்ன, 2009ல் போர் உச்சக்கட்டமாக நடைபெறும்போது திருகோனமலை மாவட்டம் புல்மோட்டை என்ற இடத்தில் மருத்துவக்குழு என்ற போர்வையில் இந்திய உளவு அமைப்பான “றோ” பதுங்கியிருந்து போராளிகள் மற்றும் மக்களின் நடமாட்டத்தை கவனித்து தகவல் திரட்டி தமிழர்களை கொன்று குவிப்பதற்கான சதியிலீடுபட்ட செய்தி அம்பலமானது,
அதே தந்தரத்தை வேதாந்த மன்றம் என்ற பெயரில் தொண்டர் அமைப்பாக வேடங்கட்டப்பட்டு “றோ” முல்லத்தீவுக்குள் வாழும் மக்களிடம் ஊடுருவியிருக்கிறது என்று மக்கள் அஞ்சுகின்றனர்.
அவலப்பட்டு விளிம்பு நிலையில் பரிதவிக்கும் மக்களுக்கு தொண்டு செய்வதுபோன்று தனது வேலையை இலகுவாக்குவதற்கு வேதாந்த மன்றம் என்ற பெயரில் றோ ஊடுரிவியிருப்பதாகவே தமிழர் மத்தியில் அச்சம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
1987,ல் முன்னாள் இந்திய மத்திய அரசின் முதல் மந்திரி ராஜீவ், வடமராட்சியில் விமானமூலம் பாணை விட்டெறிந்து ஜெயவர்த்தன அரசுடன் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எழுதி 13 வது திருத்தச்சட்டமூலம் என்ற வினோதமான சிக்கெடுக்க முடியாத இடியப்பச்சிக்கலை ஈழத்தமிழர்களின் அரசியலுக்குள் நுழைத்து வெளியேறமுடியாத வில்லங்கம் தோற்றுவித்திருப்பதுபோல, வேதாந்த மன்றத்தின் மூலம் உதவிக்கரம் நீட்டுவதாக இந்தியாவின் புலனாய்வு (றோ) அமைப்பு மீண்டும் இலகுவாக தமிழர் பிரதேசங்களுக்குள் தொண்டர் அமைப்பு என்ற பெயரில் நுழக்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் மோடி அரசு என்ன சிக்கலை தோற்றுவிக்கப்போகிறது என்பது பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
சமீபத்தில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு சிகிச்சைக்காக சென்னை வந்துள்ள, வேதாந்த மன்ற அமைப்பின் தலைவர் மங்களம்மாள், இலங்கை தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து,   கரிசினையுடன் ஒரு பிரபலமான பத்திரிகைக்கு பேட்டியளித்திருந்தார்.
அவர் பேட்டியளித்ததன் நோக்கம் உலகத்தமிழர் மத்தியில் வேதாந்த மன்றத்தை விளம்பரம் செய்ய முயல்கிறார் என்றே தெரிகிறது.  இலங்கையில் உள்ள ஊடகங்கள் பத்திரிகைகள் மூலம் குறிப்பிட்ட சங்கத்தை பிரபலப்படுத்திவிட முடியாது என்பதை அறிந்து தமிழகத்திலுள்ள பிரபல பத்திரிகை ஒன்றின் மூலம் மங்களம்மாள் தனது பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார்.
போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக, இந்தியா மூலமும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமும் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு, மின்சாரம், சாலை, போக்குவரத்து வசதி செய்யப்படவில்லை. வருமானத்திற்கு வழியின்றி, தமிழர்கள் தவிக்கின்றனர். போருக்கு பிறகு, ஒவ்வொரு வீட்டிலும், இரண்டு, மூன்று பேர் வரை காணாமல் போய் உள்ளனர். இருப்பவர்களும், கை, கால்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகளை இழந்து, நடை பிணமாக உள்ளனர்.இவ்வாறு, இலங்கை முழுவதும், ஒவ்வொரு கிராமத்திலும், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உள்ளனர். உடலில், துப்பாக்கி தோட்டாக்களுடன், பலர் வாழ்கின்றனர். தோட்டாவை உடலிலிருந்து அகற்றினால், உயிர்போய் விடும். சிகிச்சை மேற்கொள்வதற்கும் போதுமான வசதி இல்லை.
தமிழர்கள் வருமானத்திற்கும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தேவையானநடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இதற்கு, இந்திய அரசு உதவி செய்ய வேண்டும். மற்றவர்களிடம் கையேந்தாமல், விவசாயம் செய்வதற்கு, தமிழர்கள் தயாராக உள்ளனர். ஆனால், பாசனத்திற்கும், குடிக்கவும் தண்ணீர் வசதி இல்லை.பொது கிணறுகளை அதிகளவில் அமைத்து, விவசாயத்திற்கு தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும். ஊனமுற்றவர்களுக்கு சக்கர நாற்காலி, செயற்கை உடல் உறுப்புகள், தையல் இயந்திரங்கள், பாய்கள், உடைகள் வழங்க வேண்டும்.தமிழக அரசும், தமிழக மக்களும், இயன்ற உதவிகளை இலங்கை தமிழர்களுக்கு வழங்கவேண்டும். இதுதொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா, நடிகர் ரஜினி உள்ளிட்டோரை சந்தித்து, உதவிகள் பெற முயற்சித்து வருகிறோம். இருவரையும் சந்திக்க, இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதாவை சந்தித்து உதவி கோரவேண்டும் என்று கூறும் மங்களம்மாளின் வேதாந்த அமைப்பு அதே பொருட்களை இந்தியாவிலிருந்து சேமித்து தமிழ்நாடு அரசிடம் கையளித்தாலே அந்தப்பொருட்கள் வடக்கு மாகாண சபையிடம் கையளிக்கப்பட்டு தமிழ் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் மூலம் உரியவர்களுக்கு அழகாக போய் சென்று சேரும் என்பதில் எவருக்கும் ஐயமில்லை.
நடிகர் ரஜனிகாந்த் மட்டுமல்ல பல தமிழ் சினிமா நடிகர்கள் 2009 ம் ஆண்டு ஈழத்து தமிழ் மக்கள் இரத்தமும் சதையுமாக தொங்கிக்கொண்டிருந்தபோது படுகொலை சூத்திரதாரி கருணாநிதியை அமரவைத்து வாழ்த்துப்பாடி மாதம் ஒரு பாராட்டு விழாக்களை நடத்தி பொழுது போக்கிக்கொண்டிருந்தவர்கள்.
எனவே ஊடுருவலுக்கான நியாயப்படுத்தலுக்காக மங்களம்மாளின் வியாக்கியானங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏன் அப்படியொரு சந்தேகம் வலுக்கிறது என்றால் பாஜகவின்  கடும்போக்கு கொண்ட தாய் அமைப்பு ஆர் எஸ் எஸ் என்பதை எவரும் மறந்துவிட முடியாது வட இந்திய சன்னியாசிகளின் தீவிர சமைய அமைப்பான ஆர் எஸ் எஸுக்கு ஏன் தமிழர்கள்மீது இவ்வளவு கரிசினம்.
முல்லைத்தீவில் “வேதாந்த மன்றம்” அனாதரவாக தத்தளிக்கும் மக்களிடையே தீவிரமான மூளைச்சலவையை செய்துவருவதாக அங்குள்ள மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் தேசிய நலன்சார்ந்து வேலைசெய்யும் அரசியற் தலைமைகளும் மாகாணசபை உறுப்பினர்களும் உடனடியாக களத்திலிறங்கி உண்மைநிலையை உறுதிப்படுத்தவேண்டும்.
ஈழதேசம் செய்திகளுக்காக, 
 
கனகதரன்.