இன்று தமிழர்களின் தேசியத்துக்கான ஆயுதப்போராட்டம் ஏதோஒரு உறங்கு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காகவும் சுய தனிமனித பாதுகாப்புக்காகவும் போராடிக்கொண்டுதானிருக்கின்றனர். அந்த நிலையை எவரும் எதற்காகவும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை. அதற்கு எவரும் தயாராகவுமில்லை,



இதுகூட போராட்டவடிவங்களில் ஒன்றுதான். இந்தநிலை சிறுகச்சிறுக பெரிதாகி மீண்டும் பழைய நிலைக்கு மாறி, ஆயுதப்போராட்டமாகி முடிவுபெறும் என்பதே நியதியாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது, இதை எவராலும் தடுக்கமுடியாமல் போகும் காலம் வெகு தூரத்திலில்லை.

ஏனெனில் தமிழினத்தை அடிமைத்தனத்துள் திணிக்கும் சிங்களவனின் ஒடுக்குமுறை வழிகாட்டலும் சமூக விரோதிகளின் செயற்பாடும் அப்படித்தான் சென்றுகொண்டிருக்கிறது, இதை இன்றய இளையதலைமுறையினர் உணர்ந்துகொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றனர்.

''ஓடாத மானும் போராடாத இனமும் வாழ்ந்ததாக சரித்திரமில்லை'' என்பது தாயகக்கவிஞர் ''புதுவை அண்ணன்'' அவர்களின் இரும்பு வரிகள். அவை இன்றுவரை சாத்தியப்பட்டதோ இல்லையோ. நிச்சியமான உண்மை அதுதான் என்பது ஒவ்வொருநாள் வாழ்க்கையிலும் உலக தமிழ்ச்சமூகம் நன்கு உணர்ந்தே வருகின்றது.

இன்று நடப்பதுதான் நாளைய நடைமுறையென்றோ நேற்று நடந்ததுதான் முடிவான முடிவென்றோ எதுவும் உலகத்தில் நிர்ணயிக்கப்பட்டதல்ல. ஒருபயிரை நாட்டி நீர் வார்த்து நன்கு பராமரித்தால் நற்பலன் கிடைக்குமென்பது இயற்கையான எதிர்பார்ப்பு. யதார்த்தமும் அதுதான்.

இலங்கைத்தீவில் காலாகாலமாக வாழும் தமிழ்த்தேசிய இனமும் சுதந்திரப்பயிரின் விளைச்சலுக்காக ''தன்மானத்துடன்'' அளவுக்கதிகமான சக்தியை செலவிட்டு அந்த எதிர்பார்ப்போடுதான் நீண்டகாலமாக சுதந்திர வாழ்க்கைக்காக போராடிக்கொண்டிருக்கிறது. சுதந்திரம் என்பது சமுதாயத்தை இருளில் இட்டுச்செல்லும் கலாச்சார பண்பாட்டு அழிவிலிருந்து மீழுவதையும் முக்கியமாக குறிப்பிடும்.

சமீப காலமாக யாழ் சமூக இளைஞர்களின் மத்தியில் மிகமோசமான கலாசார சீர்கேட்டை ஸ்ரீலங்கா இராணுவத்தினர் jaffnaதோற்றுவிப்பதாகவும் பல இளைஞர்கள் இதற்கு பலியகியிருப்பதாகவும் உலகம் முழுவதுமுள்ள தமிழ்ச்சமூகம் அதிர்ச்சியையும் கவலையையும் தெரிவிக்கின்றனர். இந்தச்சீர்கேடு இளைஞர்களைக்கடந்து பல முதியவர்களையும் உள்வாங்கி. இளம்பெண்களையும் தாய்மார்களையும் பாதிப்பதுதான் மிகக்கேவலமானதும் கவலைக்குரியதுமாகும்.

இப்போது யாழ்குடாநாட்டிற்கு வெளிமாவட்டங்களிலிருந்து நிறைய மக்கள் இடம்பெயர்ந்து கல்விகற்பதற்காகவும் வேறுபல காரணங்களிற்காகவும் இடம்பெயர்ந்தும் வாழ்ந்துவருகின்றனர். இவர்களில் இளம் பெண்கள் சந்திக்கும் இடைஞ்சல்கள் நெருக்கடிகள் அவர்களை மிகுந்த மன உழைச்சலில் தள்ளியிருக்கிறது.

அவர்களது தனிமனித சுதந்திரம் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அதுபற்றி நம்பிக்கையுடன் முறையிடுவதற்கோ குற்றவாளியை தண்டனைக்குட்படுத்துவதற்கோ எந்த நம்பகமான அமைப்பும்தமிழர் மத்தியில் இன்று வெளிப்படையாக இல்லை.

இந்தப்பலவீனத்தை பயன்படுத்தும் சமூகவிரோதக்கும்பல்கள். மட்டமான பலகாரியங்களில் ஈடுபடுவதாக யாழ்ப்பாணத்திலிருந்து ஆதாரபூர்வமான தகவல்கள் தினமும் வெளியாகிக்கொண்டிருகின்றன.பாதுகாப்பு வழங்கவேண்டிய இடத்திலிருக்கும் எமது இளைஞர்களும் பெற்ற தகப்பனுக்கு நிகரான பெரியவர்களும் சிங்களவனின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நடந்துகொள்ளும் வெட்கக்கேடான நடவடிக்கைகளும் வக்கிரங்களும் சம்பந்தப்பட்டவர்களுக்கு பலபக்கவிளைவுகளை காலத்தின் கட்டாயமாக நிச்சியம் தோற்றுவிக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது,

jaffnaவன்jaffnaனிப்பகுதியிலும், திருகோணமலை மட்டக்களப்பு பிரதேசங்களிலும் பாதிக்கப்பட்ட பல விதவைத்தாய்மாரும் உடல் ஊனமாக்கப்பட்டோரும் படும் அவஸ்தையும், அவர்களது பாதுகாப்பும் கேள்விக்குறியாகியிருக்குமிந்த நேரத்தில். ஓரளவு வாழக்கூடிய இடமாக இனங்காணப்பட்டிருக்கும்
பாரம்பரியம் மிக்க, யாழ்குடாவின் கலாச்சாரச்சீரழிவு. ஒட்டுமொத்த தமிழினத்தின் தலைகுனிவையும் முத்திரைகுத்தி உலக அரங்கின் ஊடகங்களில் சிரிக்கின்றன. இந்தச்சீரழிப்பின் பின்னணியிலுள்ளவர்கள் நிச்சியம் தமிழ்ச்சமூகத்தால் இனங்காணப்படும்போது மன்னிக்கப்படமாட்டார்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மனதில்க்கொள்ளவேண்டும்.

சமீபத்தில் யாழ்குடாநாட்டில் பல இடங்களில் பிரசிவிக்கப்பட்ட சிசுக்கள் (குழந்தைகள்) தெருவோரங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. யாரால் இக்குழந்தைகள் பெற்று வீசப்பட்டன என்று தெரியவில்லை எனக்கூறப்பட்டாலும் சீரழிக்கப்பட்டவர்கள் ஏதோ ஒருவழியில் ஆதரவற்ற இளம்பெண்கள். இவர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள், அல்லது தவறாக நடத்தப்பட்டிருக்கிறார்கள், அல்லது பலாத்காரப்பட்த்தப்பட்டிருக்கிறார்கள்.

குடும்ப மானப்பிரச்சினை காரணமாக சில சம்பவங்களை வெளியே அடையாளம் காட்டமுடியாமல் உறவினர்களே சிலவற்றை மறைப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவையெல்லாம் தமிழினத்தின் மீது தொடுக்கப்பட்டும் ஒருவித வக்கிர அத்துமீறல் யுத்தமென்றே கொள்ளப்படவேண்டும்.

இதன் எழுவாய் இராணுவத்தினரின் தொடர்பிலிருக்கும் பலரும். மற்றும் ஒட்டுக்குழுக்களின் பின்னலில் தொங்கிக்கொண்டிருக்கும் கூட்டத்தினரும் தமது சமூகவிரோத இராணுவ செல்வாக்கைப்பயன்படுத்தி. மக்கள் மத்தியில் மிகமோசமான இடைவெளியையும், தோல்வி மனப்பாண்மையையும் தோற்றுவிக்கின்றனர், தென்னிலங்கை வியாபாரிகளின் கூட்டும் இராணுவத்தினரின் சகவாசமும் இதற்கு பக்கபலமாக இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

நேற்றைய தினம் கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் சேவீஸ்வீதி, 10 வீட்டுத்திட்டம் குடியிருப்பில் இரவு துணிகரமாக வீடு பூர்ந்த இராணுவச்சிப்பாயை துணிச்சலுடன் தன்னந்தனியாக அந்த வீட்டு உரிமையாளர் துரத்தி கத்தியால் வெட்டி துரத்திய சம்பவத்தை தமிழ் சமூகம் மறக்கமுடியாது.
இந்தப்பின்னணியில்த்தான் சில காலமாக தமிழனின் வாழ்வு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையிலுள்ள தமிழ்த்தேசியஇனம் போராட்டத்தின் மூலம் தனது சுதந்திரத்தை பெற்றுக்கொண்டாலேயொழிய எந்தக்காலத்திலும் சுதந்திரமாக வாழ தமிழினத்தை சிங்களவன் அனுமதிக்கப்படப்போவதில்லை. இந்த யதார்த்த உண்மையை தேசியத்தமிழினம் தொடர்ந்து ஆழமாக நம்பினாலும் சிலர் சுயலாப நோக்கத்திற்காக மானங்கெட்ட இனத்துரோக மோசடிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருவது ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தை வெட்கப்பட வைக்கிறது.

கலாசாரசீர்கேடுகளும் அன்றாடவாழ்வியல் நெருக்கடிகளும் ஒரு சமூகத்தை தொடர்ந்து பாதிக்குமாக இருந்தால் அந்த இனம் jaffnaஅழிகிறதென்று தெரிந்துகொள்ளலாம். அங்கு சுதந்திரம் உறுதிப்படுத்தப்படவில்லை .இந்நிலை தொடருமானால் ஒருசமூகம் அழிவின்பால் வேகமாக
செல்லுகின்றதென்பதுதான் அர்த்தமாகும். அதற்கு தமிழ்த்தாயின் வயிற்றில் பிறந்த ஒருவன் துணையாக சோரம்போனால் அந்தத்துரோகியை சமூகத்தின் முன் இனங்காட்டவேண்டியது சரியான தமிழ் இளைஞனின் கடமையாகும்.

தமிழ்ச்சமூகம் இப்படியே அழிந்து போய்விடுமென்று எவரும் கற்பனையில் மூழ்கி மலங்கழித்துக்கொண்டிருக்க அனுமதிக்கமுடியாது. எல்லாவற்றிற்கும் எதிர் விளைவு இருந்துகொண்டேயிருக்கும் உறங்குநிலையில் இருப்பவை எந்தநாளும் உறக்கத்திலேயே இருந்துவிடுமென்று எண்ணி மேற்கொள்ளப்படும் சமூகவிரோதம் நிச்சியம் அழிக்கப்படும். அதற்கு மக்களின் ஒத்துழைப்பும் பரசுபர ஒற்றுமையுமே வழி வகுக்கும்.

சிங்களவனும் உலகவல்லாதிக்கங்களும் சொல்லுவதுபோல போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தால் தமிழனின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கவேண்டும். நான் சுதந்திரமாக உலாவுவதை உளப்பூர்வமாக நான் உணரவேண்டும். அப்படியல்லாமல் எனது சுதந்திரம்
எங்காவது பறிக்கப்பட்டிருந்தால் சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்தால் என்னை வழிநடத்தமுயலுபவன் என்னை அடிமையாக வைத்திருக்கின்றான் என்பதுதானே உண்மை. அதை உடைத்தெறிய நான் நிர்ப்பந்திக்கப்பட்டால் அது எனது தவறல்லவே,

ஈழதேசம் இணையத்திற்காக.
கனகதரன்,

http://www.eeladhesam.com/