மீண்டும் எழுந்து போராட வேண்டிய கடமை தமிழினத்திற்கு உண்டு - திருச்சியில் ஆரம்பித்துள்ள போர்முகங்கள் ஓவியக்காட்சியில் ஓவியர் புகழேந்தி.(படங்கள் இணைப்பு)
புரட்சி ஓவியர் புகழேந்தியின் ஓவியங்கள் போர்முகங்கள் என்ற தலைப்பில் திருச்சியில் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது. தனது உள்ளக்குமுறல்களை ஓவியத்தின் மூலம் வெளிப்படுத்தி வரும் ஓவியர் புகழேந்தி அவர்கள் 27ஆண்டுகளாக சமூகப்பார்வையோடு ஓவியப்பணி ஆற்றி வருகின்றார்.
1983ம் ஆண்டு தமிழர்கள் சிங்கள காடையர்களால் இனப்படுகொலை செய்யப்பட்டது முதல்கடந்த ஆண்டு முள்ளிவாய்காலில் அனைத்துலக நாடுகள் சிங்களத்துடன் சேர்ந்து எமது விடுதலைப் போராட்டத்தை அழித்தொழித்ததுடன் அதன் கட்டமைப்புகளையும் எமது மக்களையும் ஒருசேர கொன்று குவித்து நரவேட்டையாடியது வரை ஈழப்போராட்டத்துடன் தன்னை இணைத்து கொண்டு போராடிவரும் புரட்சி ஓவியர் புகழேந்தி அவர்கள் தனது தூரிகை மூலம் உலக மக்களது ஆண்மாவை தட்டிஎழுப்பும் உண்ணத பணியை ஆற்றிவருகின்றார்.
குறிப்பாக கடந்த ஆண்டு முள்ளிவாய்காலில் வைத்து தேசியத் தலைமை ஆயுதங்களை மௌனிக்க செய்த பின்னரான இன்றுவரையான காலப்பகுதியில் உலகத்தமிழர்கள் அரசியல் வெற்றிடத்தில் துயருற்று இருக்கும் வேளை தனது தூரிகையினை ஆயுதமாக ஏந்தி களமாடிவருகின்றார் புரட்சி ஓவியர் புகழேந்தி அவர்கள்.
இன்று ஆரம்பித்து 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை காட்சிப்படுத்தப்பட இருக்கின்றது. முன்னதாக அன்று காலை 10மணிக்கு ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனேசமூர்த்தி அவர்கள் திறந்துவைக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. தொடர்ந்து ஓவியர் புகழேந்தி உரையாற்றுகையில்...
உலக வரலாற்றில் மனித இன விடுதலைக்கான போராட்டங்கள் பல நடைபெற்றிருக்கின்றன. இனத்தின் பேராலும், நிறத்தின் பேராலும் நடைபெற்ற ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடிய பல்வேறு இன்னல்களையும் துயரங்களையும் அடக்குமுறைகளையும் சந்தித்து அப்போராட்டங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன.
அதேபோல் இரத்தம் தோய்ந்த தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் சந்தித்த ஆபார்களும் இழப்புகளும் கொஞ்சமல்ல. பிறந்த மண்னைத் துறந்து சொந்த மக்களை இழந்து உலகின் பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து ஏதிலிகளாக வாழும் நிலை.
எல்லாவற்றையும்விட இந்த நூற்றான்டின் மனிதப்பேரவலம் தமிழீழத்தில் நடந்து இருக்கின்றது. ஈழத்தமிழினத்தைப்போல் பாவப்பட்ட வேறொரு இனம் தற்போது இருக்க முடியாது. அந்த அளவிற்கு பலவந்தமாக அவலப்படுத்தப்பட்ட இனமாகவும் சர்வதேசத்தினால் முற்று முழுதாகக் கைவிடப்பெற்ற ஓர் இனமாகவும் ஈழத்தமிழினம் போய்விட்டது. என்பது சோகத்திலும் சோகம். வல்லரசு வல்லூறுகளின் பிராந்திய வல்லாதிக்கப் போட்டிகளின் நடுவே சிக்குண்டு சின்னாபின்னமாகிப்போனது ஈழத்தமிழரின் வாழ்வு. வளமாய் வாழ்ந்த இனம் இன்று தன் வாழ்வைத் தொலைத்து நிற்கின்றது.
ஆனால் மீண்டும் எழுந்து போராட வேண்டிய கடமை தமிழினத்திற்கு உள்ளது. எந்தப் போராட்டங்களிலிருந்தும் என்னால் விலகி நிற்கமுடியவில்லை. அது என்னால் இயலாது. அவ்வாறு ஒரு மனிதனாக ஈழப்போராட்டத்தை கடந்த 27 ஆண்டுகளாக உள்வாங்கியவைகளை ஒரு கலைஞனாக புயலின் நிறங்கள் உயிர் உறைந்த நிறங்கள் போன்ற தலைப்புகளில் ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கின்றேன்.
தற்போதைய போர்முகங்கள் ஓவியங்களும் ஒரு வரலாற்றுச் சான்று. இவ்வாறு ஓவியர் புகழேந்தி தெரிவித்தார்.
ஈழதேசம் செய்தியாளர் மு.காங்கேயன்
நன்றி ஈழதேசம் இணையம்,
No comments:
Post a Comment