உயிர்ப்பாகி, உலகை மண்டியிடவைத்த மாவீரர்களின் மரணசாசனங்கள், ஆப்பிழுத்த குரங்கான ராஜபக்க்ஷ
சிங்கள அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்க்ஷவின் இரண்டாவது பதவிக்கால ஆரம்பம் அவருக்கு உள்நாட்டிலும் இந்திய, சீன, மட்டத்திலும் அளவுக்குமீறிய அதிகாரங்களையும் அகங்காரத்தையும் தோற்றுவித்திருக்கிறது, அவற்றை உலகுக்கும் காட்டிக்கொள்ளும் விதமாக அசாத்திய துணிச்சலுடனும் அகங்காரத்துடன் மகிந்தவின் இலண்டன் பயணம் சென்றமாதம் திட்டமிடப்பட்டிருந்தது,
கொலைக்குற்றவாளியாக உலகத்தால் குற்றஞ்சாட்டப்பட்ட பின்பு இடம்பெற்ற அமெரிக்கப்பயணம், ஐநா மன்றத்தில் உரைநிகழ்த்திய துணிச்சல், போர்குற்றவாளிகளை விசாரணைக்குட்படுத்தி விசாரிக்க வேண்டுமென்ற ஆர்வமில்லாத சர்வதேசநாடுகளின் அரசியல் கலந்த சுயநலக் காய்நகர்த்தல் போன்ற உதாசீனப்போக்கு, கொலைக்குற்றவாளியான ராஜபக்க்ஷவிற்கு கடந்தகால உலக சரித்திரத்தை, விடுதலை போரில் வித்தான தியாகங்களின் பின்விளைவுகளின் யதார்த்தத்தை சிந்திப்பதற்கு இடங்கொடுத்திருக்கவில்லை.
இலண்டன் பயணத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடலாம் என்கிற பயம் உள்ளூர ராஜபக்க்ஷவிற்கு ஏற்கெனவே உண்டு. அவற்றை வெளிக்காட்டிக்கொள்ளாவிட்டாலும் பயம் காரணமக சென்றவாரம் திட்டமிடப்பட்டிருந்த பயணத்தை ஏதேதோ காரணங்கள் காட்டி அப்போ இலண்டன் பயணம் தள்ளிப்போடப்பட்டது.
ஆனாலும் பத்திரிகை ஊடகங்கள் கொலைக்குற்றவாளியான மகிந்த இலண்டனுக்குள் கால்வைத்தால்
கைதுசெய்யப்படலாம் என செய்திகள் வெளியிட்டு பயமுறுத்தின, இதன் பின்னணியில் தமிழர் அமைப்புக்கள் திரண்டு ராஜபக்க்ஷ படுகொலைச்சூத்திரதாரி என்பதற்கான ஆதாரங்களை பிரித்தானிய அரசிற்கும் ஐநா அமைப்பிற்கும் தெரியப்படுத்திக்கொண்டு களத்திலிருந்தன.
ஆனால் ராஜபக்க்ஷவும் பிரித்தானியாவுக்கான ஸ்ரீலங்கா தூதரகமும், இன்னும் பல வெளிநாடுகளுக்கான ஸ்ரீலங்கா தூதரகங்கள் விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் வேரறுக்கப்பட்டுவிட்டது, ஆனால் புலம் பெயர்தேசங்களில் அவர்கள் மிக வலுவாக இருந்து அங்குள்ள மக்களை தூண்டிவிடுகின்றனர் என்ற குற்றச்சாட்டை இடைவெளியில்லாமல் பிரச்சாரம் செய்தவண்ணம் சர்வதேசத்தை ஏமாற்றிக்கொண்டிருந்தன.
இப்பேர்ப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தனக்கும் இறைமையுள்ள ஸ்ரீலங்கா அரசுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் என்றும் பொய்க்குற்றச்சாட்டுக்களை தமிழர் தரப்பு ஆதாரப்படுத்துவதாகவும் திட்டமிட்டபடி லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உறையாற்றாமல்ப்போனால் உள்நாட்டில் சிங்கள மக்களை அமைதிப்படுத்த முடியாது என பிரித்தானியாவின் உயர்மட்டத்திடம் சத்தியக்கடதாசி பெற்று இலண்டன் வந்திருந்தார்.
ஆனால் பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாகி, ராஜபக்க்ஷ வரலாறு காணாத அவதிக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார், தமிழ் மக்களின் முற்றுகை ஒருபுறம் ராஜபக்க்ஷவை விடாமல் பின்தொடர, போதாக்குறைக்கு சனல்-4 அப்பட்டமாக புதிது புதிதாக விடுதலைப் போராளிகளின் படுகொலைக்காட்சிகளை அம்பலப்படுத்தி ராஜபக்க்ஷவையும் பிரித்தானிய அரசையும் உலகையும் ஆட்டங்காண வைத்துவிட்டது.(4 சனெல் தொலைக்காட்சி வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் காணொளியை பார்ப்பதற்கு இங்கு சொடுக்கவும்)
அத்துடன் நின்றுவிடாமல் அடி மேல் அடி வாங்கிக் கொண்டு அழுத்தங்களை எதிர்கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐ.நா.வின் விசேட பிரதிநிதியொருவரும் தன் பங்குக்கு அதிர்ச்சி வைத்தியம்
கொடுத்துள்ளார். இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் உட்பட ஏனைய யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பாக பிரிட்டனின் சனல் - 4 தொலைக்காட்சி புதிதாக வெளியிட்டுள்ள ஆதாரங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என
சட்டவிரோத கொலைகள் தொடர்பாக விசாரணை நடத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி பேராசிரியர் கிறிஸ்டொப் ஹேன்ஸ் கேட்டுள்ளார்.
இதனிடையே சர்வதேச மன்னிப்புச் சபையும் தன் பங்குக்கு பிரிட்டனின் சர்வதேச சட்டங்களின் கீழ் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் இலங்கை அதிகாரிகள் மீதும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழர்களின் ஒற்றுமையே மகிந்தவின் முதல் தோல்வி. போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என பிரித்தானியத் தமிழர் பேரவை அறிவித்துள்ளது. இது தொடர்பில் பிரித்தானியத் தமிழர் பேரவையால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச, ஒக்ஸ்போட் சங்கத்தில் நாளை வியாழன் ஆற்ற இருந்த உரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக, ஒக்ஸ்போட் சங்கமும், மகிந்த ராஜபக்சவின் செயலரும் அறிவித்துள்ளனர். அத்துடன், குறிக்கப்பட்ட நாளுக்கு முன்னரே பிரித்தானியாவைவிட்டு மகிந்த வெளியேற இருப்பதாகவும் அறிகின்றோம் என்று தெரிவித்துள்ளது.
தமிழ் மக்களை இனப்படுகொலை புரிந்த, போர்க் குற்ற நபரான சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள முதல் தோல்வியானது, திட்டமிட்ட ஒருங்கிணைப்பாலும், தமிழ் மக்களின் ஒற்றுமையாலும், விரைந்த முயற்சியாலும் ஏற்பட்ட வெற்றியின் முதற்படி என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்திருக்கிறது.
மகிந்த ஒக்ஸ்போட் சங்கத்தில் உரையாற்ற பிரித்தானியாவிற்கு வருகின்றார் என்று தெரிந்தவுடனேயே, பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்த அழைப்பிற்கு இணங்க, மக்கள் தன்னெழுச்சியாகவும் இணைந்ததன் மூலம் இது சாத்தியமாகியது. தமிழ் மக்களின் இணைந்த முயற்சிக்கு அப்பால் சில சிங்கள தோழர்கள் உரிய நேரத்தில் முக்கிய போர்க்குற்ற சாட்சியங்களை எமக்கு தந்து உதவியதற்கும், அவற்றை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பவும், பத்திரிகைகளில் வெளியிடவும் குறுகிய காலத்தில் மேற்குலக ஊடகங்கள் இணங்கியதற்கும் நன்றி தெரிவித்திருக்கின்றனர்.
தமிழ் மக்களின் ஒற்றுமையால் ஏற்பட்ட இந்த முடிவை, எமது வெற்றிக்கான முதற்படியாகக் கொண்டு, தமிழ் மக்கள் மேலும் உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும், ஒற்றுமையுடனும் எமது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை உரிமையுடன் கேட்டிருக்கிறது.
இவை எல்லாவற்றிற்கும் ஆதார சுருதியாக தலைவரின் ஒப்பற்ற ஆளுமையின் ஒளிவட்டத்தால் கவரப்பட்ட மக்கள் சக்தியும். வித்தாகிப்போன மாவீரர்களின் தியாகமும் மறைந்திருந்து இந்த மாபெரும் எழுச்சியை உலக அரங்கத்தில் உருவாக்கியிருக்கிறது,
மறைந்துபோன மாவீரர்களின் படுகொலை சாட்சியங்கள்தான் ஒளிப்படங்கள் மூலம் உலகத்தை மௌனமாக நியாயத்தின் முன் மண்டியிட வைத்து கொலைகாரனை உலகுக்கு இனங்காட்டி தமிழனை தலைநிமிர வைத்திருக்கிறது.
மாவீரர்களின் மறக்கமுடியாத தியாகமரணங்கள் தமது வீரியத்தை தமது மரண சாசனங்கள் மூலம் சிங்கள ஏகாதிபத்துயத்தின் ஐந்தாவது சூத்திரதாரி ராஜபக்க்ஷவை இக்கட்டில் மாட்டிவிட்டிருப்பதை கண்கூடாக கண்டிருக்கிறோம் மாவீரர்கள் மறைந்துபோகவில்லை விதைக்கப்படுகின்றனர் என்பது தலைவரின் அசையாத நம்பிக்கை அந்த நம்பிக்கை 2010 மாவீரர் காலத்தில் நிதர்சனமாக நிகழ்ந்திருக்கிறது,
வித்தாகி உயிர்ப்புடன் துயில்கொள்ளும் மீதி மாவீரர்களின் தியாகங்களும் படிப்படியாக திரண்டு தலைவரின் மீழ்வருகையுடன் ஈழவிடியலுக்கான பிரகாசமான ஒளியுடன் எதிரியை எரிக்கும் என்பது இலண்டனில் இன்று மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது,
ஈழதேசத்திற்காக ,கனகதரன்
நன்றி ஈழதேசம் இணையம்,
No comments:
Post a Comment