Thursday, December 25, 2014

சனாதிபதி தேர்தலை புறக்கணிக்கவேண்டாம் என்று கூறும் உ.த.பே தலைவர் இமானுவல் அடிகளார் அதற்கான விளக்கத்தை தெளிவுபடுத்தவேண்டும்.

எதிர்வரும் 2015 ஜனவரி மாதம் 08 நாள் இலங்கையின் 07 வது சனாதிபதி தெரிவுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் பல வேட்பாளர்கள் போட்டி என்று அறிவித்தாலும் சிங்களவர்கள் இரண்டுபேருக்கான நேரடி போட்டியே முன்னிலையில் நிற்கிறது. இந்த இருவரில் ஒருவர்தான் ஜனாதிபதியாக வருவார் என்பதும் அனைத்து வேட்பாளர்களும் மக்களும் நாடும் உலகமும் அறியும்..
ஒருவர் நடப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, அடுத்தவர் அடிப்படையில் அதே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராக பணியாற்றி, 2014 நவம்பர் 21 வரை மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்து மைத்திரிபால சிறிசேன.
இலங்கையைப் பொறுத்தவரை இரண்டு பெரிய கட்சிகள், ஒன்று ஐக்கிய தேசிய கட்சி, மற்றொன்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி. இந்த இரண்டுகட்சிகளும்தான் மாறி மாறி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தமிழர்களை வதம் செய்து அழித்து வருகின்றன, 1977ல் இருந்து 17 வருடங்கள் 1994வரை ஐக்கிய தேசிய கட்சியும்.(ஜேஆர் ஜெயவர்த்தன/ பிரேமதாச) அதன்பின் நவம்பர் 12,1994 ல் இருந்து நவம்பர் 19, 2005 வரை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த சந்திரிகா குமாரதுங்கவும்,(சமாதானத்துக்கான போர் என்று படுகொலைகளை திறந்துவிட்டவர்) நவம்பர் 19, 2005 ல் இருந்து இன்றுவரை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த மஹிந்த ராஜபக்‌ஷவும் (இனப்படுகொலை 2009) ஆட்சிசெய்து வருகின்றனர். ஆட்சி அதிகாரம் மாறினாலும் தமிழர்களின் படுகொலை, இனப்படுகொலை என்று வடிவம் மாறுபட்டுக்கொண்டிருக்கிறதே தவிர இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற புள்ளியை நோக்கி எந்த ஆட்சியாளர்களும் இதுவரை நகர முற்படவில்லை.
இன்றைக்கு எவர் எந்த கட்சியை சார்ந்து போட்டியிடுகிறார் என்று சாதாரண சிங்கள மக்களால்க்கூட விளங்கிக்கொள்ள முடியாதவாறு அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக அடிப்படையில் ஒரே கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த கடும்போக்கு பெளத்த சிங்கள அரசியல்வாதிகளான சந்திரிகா குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன, ஆகியோர் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் ஆதரவையும் உள்வாங்கி, அதே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நடப்பு ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்‌ஷவை பதவியிலிருந்து இறக்கவேண்டும் என்பதற்காக நேரடி எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து, “எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர்” என்று ஒரு புதிய சிந்தாந்தத்தை அறிமுகப்படுத்தி ஒரே தரப்பு தேர்தலில் இரு கூறாக நிற்கின்றனர்.
இவர்களின் தெரிவுக்கான போட்டியாளர் ராஜபக்‌ஷவின் அதே கொள்கை கோட்பாடுகளை கொண்டு 2009ல் முள்ளிவாய்க்கால் இனப்படுகிலையில் பங்கு பற்றிய மைத்திரிபால சிறிசேன.
நிலவரம் தொடர்ந்து இப்படி இருந்து எவ்வளவுதான் அடிவாங்கினாலும் தோல் மரத்துப்போன தமிழர் தலைமைகளுக்கு இன்னும் உறைப்பதாக தெரியவில்லை.
நடைபெறவிருக்கும் தேர்தலில் ராஜபக்‌ஷவின் கூட்டணியில் நேரடி கடும்போக்கு சிங்கள கட்சிகள் தவிர, நேரடி தமிழ் கட்சிகளாக டக்கிளஸ் தேவானந்தா, வினாயகமூர்த்தி முரளிதரன் என்னும் கருணா, கேபி என்ற கே பத்மநாதன், போன்ற ஆதரவாளர்களும்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் என்ற வேஷத்துடன் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆழமான மறைமுக நிழல் ஆதரவாளர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பை சார்ந்து தமிழரசுக் கட்சி சம்பந்தன், மாவை, சுமந்திரன், வடக்கு மாகாண மு அ, விக்கி, ஈபிஆர்எல்எஃப் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்று கூடாளிகள் வெளிப்படையாக அல்லாமல் நிழல் ஆதரவு வழங்கி வருகின்றனர்,
இங்கு தமிழ் கட்சிகளான டக்கிளஸுன் ஈபிடிபி தொடர்ந்து ராஜபக்‌ஷவின் நட்பு கட்சியாகவே இருந்து வருகிறது அடுத்து கருணா, பிள்ளையான், கேபி ஆகியோர் சிறைக் காவலில் இருப்பவர்கள்போல ராஜபக்‌ஷ சொல்லுவதை கேட்கும் இடத்தில் இருப்பவர்கள். எனவே அவர்களை ஐநா உட்பட சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு கணக்கு காட்டுவதற்காக ராஜபக்‌ஷ பாவிக்கலாமே தவிர மக்களின் வாக்குவங்கிக்கு பயன்படுத்த முடியாது என்பது யாவரும் நன்கு அறிவர்.
அடுத்து டக்கிளஸின் கட்சியை எடுத்துக்கொண்டாலும் டக்கிளஸுன் ஆயுத அச்சுறுத்தல் வளையத்தில் இருக்கும் சொற்ப மக்களின் வாக்குகளை எதிர் பார்க்கலாமே தவிர அதிகமாக அங்கு பெரிய விளைச்சல் கிடையாது. உளப்பூர்வமாக என்றைக்கும்போல ஈபிடிபி க்கு தமிழ் மக்கள் எவரும் ஆதரவு வழங்கப்போவதில்லை.
2009 க்கு பின்னான நெருக்கடியான அரசியற் சூழ்நிலையில், தொலைநோக்கு பார்வையுடன் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட தமிழர்களுக்கான அரசியற் கட்சியான தழிழ் தேசியக்கூட்டமைப்பு என்ற கட்சியின் மூலமே தமிழர்களுக்கான அரசியலை வென்றெடுக்க முடியும் என்று அனைத்து தமிழர்களும் உரிமையுடன் நம்புகின்றனர். அதனால்த்தான் சம்பந்தன் செய்யும் ஒவ்வொரு சிதம்பல் அரசியல் நகர்வுகளின்போதும் சம்பந்தனை விளக்குமாறால் அடிக்காத குறையாக சரமாரியாக விமர்சித்து திட்டி தீர்க்கின்றனரே தவிர எவரும் கட்சியை விட்டு விலகிப்போக விரும்பவில்லை. ஏனென்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றால் அது சம்பந்தனின் சொத்தல்ல அது நமக்கான அரசியலை வென்றெடுக்க தேசியத் தலைவரால் திட்டமிட்டு வகுக்கப்பட்ட பெரும் களம் அதை நாம் சரியாக சரியான தலைமையை உள்வாங்கி இலட்சியத்தை வெல்ல பாவிக்க வேண்டுமே தவிர புறக்கணிக்க முடியாது என்பது அனைவரினதும் இரத்தத்துடன் கலந்துவிட்ட உணர்வாகவே இருந்து வருகிறது.
தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்துவரும் சம்பந்தன் சகிக்க முடியாத துரோக அரசியலை செய்தாலும் கட்சியிலிருந்து சம்பந்தனை வெளியேற்ற வேண்டுமென்ற எண்ணம் மக்களுக்கு மேலோங்கி நிற்கின்றதே தவிர இன்றைய நிலையில் கட்சியை விட்டு விலகி கட்சியை பலமில்லாத அமைப்பாக வெளி உலகுக்கு அறியத்தரக்கூடாது என்பதே கட்சியிலுள்ள பல உறுப்பினர்களதும் மக்களினதும் அவாவாக இருந்து வருகிறது.
அந்த பலத்தை ஆத்மார்த்தமாக அறியாமல் குறுகலான எண்ணத்துடன் சம்பந்தன் / விக்கி மற்றும் கூட்டாளிகள் செய்துவரும் வரலாற்றுப்பிழைகளுக்கு ஒருநாள் பதில் கூறவேண்டிய நிலை நிச்சியம் வரும்.
இனப்படுகொலையாளி, ராஜபக்‌ஷவுடன் 2014 வரை பயணித்து அனைத்து குற்றங்களின்போதும் ஒன்றாயிருந்து பதவியை கைப்பற்றும் நோக்கத்தோடு போட்டி மனப்பாண்மையில் சென்ற மாதம் பிரிந்து நிற்பவரை (மைத்திரி) தமிழன் எவனாவது வாக்களித்து ஜனாதிபதியாக ஆக்க விரும்புவானா?
இப்படி பல வாத பிரதிவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் ஒரு உணர்வுமயமான நேரத்தில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளார் அவர்கள் ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்கக்கூடாது என்று ஒரு அறிக்கையை விடுத்து அதிர்ச்சியை கொடுத்து தனது தரத்தையும் தாழ்த்திக்கொண்டிருக்கிறார்.
சரி, வயதில் மூத்தவர் நல்ல அனுபவசாலி தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் கொள்கைகளை கோட்பாடுகளை அறிந்தவர் நன்கு கற்றுணர்ந்தவர் மக்கள் நம்பிக்கைக்குரியவர், நன்மை தீமைகளை பகுத்துணரக்கூடியவர், வணக்கத்துக்குரியவர், அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
எனவே நாம் அவர் கூறுவதுபோல வாக்களிக்க சித்தமாக இருக்கிறோம் என்று வைத்துக்கொண்டாலும், யாருக்கு வாக்களிக்க வேண்டும், குறிப்பிட்ட அந்த வேட்பாளருக்கு வாக்களிப்பதால் தமிழர்களுக்கு ஆகக்குறைந்தது என்ன நன்மை நிகழும், அல்லது குறைந்தபட்ஷம் என்ன மாற்றத்தை கொண்டுவர முடியும் என்பதை ஆண்டகை வணக்கத்துக்குரிய இமானுவல் அடிகளார் காலதாமதமின்றி உடனடியாக ஒரு வெளிப்படையான அறிக்கை மூலம் தெரியப்படுத்தவேண்டும்.
இனப்படுகொலையை மனதில்க்கொண்டு தேர்தலை மக்கள் புறக்கணிக்கக்கூடாது என்று இமானுவல் அடிகளார் சொன்னால்,
கண்ணுக்கு முன்னே எனது அம்மா, அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, பச்சிளம் குழந்தைகளை, இனப்படுகொலையில் தாரைவார்த்து விட்டு புலம்பிக்கொண்டிருக்கும் நான் நாசகாரம் செய்த சிங்கள தலைவர் ஒருவர் இலங்கை ஜனாதிபதியாக வருவதை தடுக்க முடியாவிட்டாலும் எனது கோபத்தின் நிமித்தம் ஜனநாயக முறைப்படி நான் தேர்தலை புறக்கணிக்கப்போகிறேன் என்பது எனது உணர்வுமயமான உரிமை.
அப்படியிருக்கும்போது என்னை வழிநடத்துகின்றேன் என்று தன்னிச்சையாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஒருவர் (உலகதமிழர் பேரவை) எனது இனத்தை இனப்படுகொலைசெய்த சிங்களவன் ஒருவன் ஜனாதிபதியாக வருவதற்கு எனது வாக்கை பயன்படுத்து என்று பகிரங்கமாக அறிக்கை விடுகின்றார் என்றால் அதற்கான காரணத்தை தெளிவுபடுத்தி பகிரங்கமாக விளக்கம் தந்து ஆகவேண்டும்.
எனவே வணக்கத்துக்குரிய இமானுவல் அடிகள் அவர்கள் காலதாமதம் செய்யாமல் தேர்தலை புறக்கணிக்கவேண்டாம் என்பதற்கு சரியான விளக்கம் அளிக்கும்படி தேர்தலை புறக்கணிக்க இருக்கும் மக்கள் சார்பாக இந்த பதிவு கேட்டுக்கொள்ளுகிறது.
மஹிந்தவை தோற்கடிக்கவேண்டும் என்பது மக்களின் உணர்வுசார்ந்த அரசியல், ஒரு இனப்படுகொலையாளியை பழிவாங்கவேண்டும் என்ற கோபம் அது இயல்பானது, இனப்படுகொலையில் அங்கம் வகித்த மைத்திரி ஜனாதிபதியாகக்கூடாது என்பது மக்களின் அறிவுசார்ந்த அரசியல், அறிவுசார்ந்த விடயங்களை மக்களுக்கு பக்குவமாக எடுத்துரைக்கவேண்டிய பொறுப்பு இமானுவல் போன்ற தலைவர்களுக்கு உண்டு, இதை இராஜதந்திரம் என்றும் சமயோஜிதம் என்றும் சொல்லலாம். சிந்திக்காமல் செயற்பட்டால் உணர்வுதான் முன்னணிவகுக்கும் என்பதுதான் யதார்த்தம், மக்கள் கூட்டங்களை ஒருங்கிணைத்து வழிநடத்துபவர்கள் உணர்வுமயமாக செயற்பட முடியாது தொலைநோக்குடன் வருங்கால நலன் கருதி ஒரு நல்ல முடிவுக்கு வரவேண்டும்.
ஆனால் அறிவுசார்ந்து ஜனாதிபதி தேர்தலில் எவரையும் ஆதரிக்கவேண்டாம் என்று தமிழர்தரப்பில் கஜேந்திர குமார் பொன்னம்பலம், சிவாஜிலிங்கம், ஆகியோர் தொலைநோக்கோடு குரல் கொடுத்து தேர்தலை புறக்கணிக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர் அவர்களின் கை ஓங்கிவிடுமோ என்ற பயம் சம்பந்தன் தரப்பை அச்சுறுத்துவதுபோல ஆண்டகை இமானுவல் ஐயா அவர்களையும் பயமுறுத்தியிருப்பதுபோல உணர முடிகிறது.
சிங்களவனுக்கு வாக்களித்து அடிமையாக வாழ்வதாக இருந்தால் டக்கிளஸ் தேவானந்தாவை சமரசம் செய்து தமிழ் தேசியக்கூட்டமைப்பையும் கலைத்துவிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி சிவாஜிலிங்கம் போன்றவர்களையும் இணைத்து எல்லோரும் ஒன்றாக ஈபிடிபி கட்சியில் இணைந்துகொண்டால் டக்கிளஸ்தேவானந்தா சொல்லுவதுபோல மத்தியில் ஒற்றை ஆட்சி மானிலத்தில் சுய ஆட்சி அதிகாரத்தை இலகுவில் பெற்றுவிடலாமே தேவானந்தாவை வில்லனாக பார்க்கவேண்டிய தேவையும் இருக்காது.
மஹிந்த அல்லது மைத்திரி ஜனாதிபதியாக வரட்டும், அவர்கள் ஜனாதிபதியாக வந்ததும் வாக்களித்திருந்தாலும் சரி வாக்களிக்காவிட்டாலும் சரி எங்களை அடிக்கத்தான் போகிறார்கள் அப்போ நீங்களோ சம்பந்தன் ஐயாவோ எங்கள் அருகில் இருக்கப்போவதில்லை எனவே தயவுசெய்து எங்களை நினைவில்க்கொண்டு நீங்கள் விடும் அறிக்கைகளை எழுதுங்கள்.
“ஈழதேசம் இணையத்திற்காக கனகதரன்.”

Tuesday, December 23, 2014

சிம்மக் குரலோன் பாரதிராஜா சிலோனுக்கு போனதன் மர்மம் என்ன?….‏

“விரால் இல்லாக் குளத்தில் குறவை மீன் துள்ளி விளையாடியது” இப்படி ஒரு கருத்து செறிவான பழமொழி ஈழத்தில் உண்டு.அதே நிலைதான் இன்று ஈழத்தின் நிலை,. ஈழம் என்ற குளத்திலுள்ள விரால்மீன்கள் ஏதோ காரணத்தால் வெளியேறிவிட்டதால் அங்கு வாழும் பல இன மீன்களுடன் வரத்து நீரில் அடிபட்டு வந்து சேரும் குறவைகள் வெள்ளோட்டம் செய்து மானாவாரியாக சதிராட்டம் போடுகின்றன.

சுடுபவர்களுக்கு சுடட்டும் என்பதற்காக இந்த பழமொழியும் அதன் உட் பொருளும் இங்கு தரப்பட்டுள்ளது..
இனி விடயத்துக்கு வருவோம்.
இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்தபோதும், போர் முடிவுக்கு வந்த பின்னும் தமது ஆட்சி அதிகாரத்துக்கு குந்தகம் வருமென நினைக்கும் ஒவ்வொரு அரசியல் நெருக்கடி காலங்களின் போதும் ஶ்ரீலங்காவின் சிங்கள ஆட்சியாளர்கள் தமது தப்பித்தலுக்காக சோரம்போகக்கூடிய தமிழர்களை பயன்படுத்துவதை ராஜதந்திர உபாயமாக கடைப்பிடித்து வருகின்றனர்.
சிங்கள ஆட்சியாளர்கள் தமது தரப்பை நியாயப்படுத்தவும் உலகநாடுகளை ஏமாற்றவும் இலங்கையில் உள்ள பச்சோந்தி தமிழர் அமைப்புக்களையும், ( ஒட்டுக்குழுக்கள் அரசியற் கட்சி தலைமைகள்) இன்னும் சற்று உறுதியாக வெளிநாடுகளையும் உள்ளூர் மக்களையும் ஏமாற்ற, இந்திய அரசியல்வாதிகளையும் உறுதியற்ற திசை திருப்ப வல்ல நன்கு அறிமுகமாக உள்ள சினிமா பிரபலங்களையும் பயன்படுத்தி அரசியல் காய் நகர்த்தி தப்பித்து வருவது காலாகாலமாக நடந்து வருகிறது. ஈழ தேசத்தின் உறுதிமிக்க விடுதலை போரின் வீழ்ச்சியின் அடிநாதமும் வரலாறுகாணாத படுகொலைகளின் ஆரம்பமும் அங்குதான் தொடங்கியிருந்தது,
இருந்தும் மென் உணர்வுடன் கூடிய பலகாரணங்களினால் தேசியத் தலைவர் வே பிரபாகரன் உட்பட பொறுப்புணர்வு உள்ள எவரும் அதை வெளியில் சொல்லிக்கொள்ள விரும்பவில்லை. முடியவுமில்லை அவ்வளவு சிக்கல் நிறைந்த அரசியல் அருவருப்பும் வெளியில் சொல்ல முடியாத வெட்கக்கேடும் ஈழ / தமிழக உறவுகளின் பிணைப்பில் நிறைந்திருந்தது.
ஊன்றிக் கவனிக்கவல்ல தமிழகத்தின் நல் உள்ளங்கள் அவற்றை புரிந்து கொள்ளுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதால் விமர்சனங்களும் கோபங்களும் அங்கும் இங்கும் சரிக்கு சரியாக வெளிப்பட்டு பல மட்டத்தில் விவாதிக்கப்பட்டு வந்தாலும் ஒருசில மோசமான துரோகிகள் தவிர மற்றவர்கள் இன்றையவரைக்கும் காட்டிக்கொடுக்கப்படாமல் விட்டுக்கொடுத்து உள்ளுக்குள்ளேயே விட்டுவைக்கப்பட்டும் இருக்கின்றனர். இதை அவர்களும் உணர்ந்திருப்பார்கள் என்று நம்பலாம்.
இலங்கையில் உள்ள பச்சோந்திகள் தேர்தல் வாக்குகளை மனதில்க்கொண்டு ஏமாற்று வித்தைகளை சற்று அடக்கி வாசித்தாலும் இந்தியாவில் உள்ள மூர்க்கமான அரசியல்வாதிகளும் தமிழகத்திலுள்ள சில சினிமா பிரபலங்களும் பின் விளைவுகளையும் பாவ புண்ணியத்தையும் வீரியத்தை கவனத்தில் கொள்ளாமலும் சுயநல சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்கள் விளையாட்டை எந்தவிதமான கூச்சமும் குற்ற உணர்வுமில்லாமல் பணம் பகட்டு விளம்பரத்துக்காக தொடர்ச்சியாக கீழ்த்தரமாக நடந்து வருவது மிகவும் வேதனை அளித்தாலும் அந்த அநீதி தொடர்ந்து இடம்பெற்றே வருகிறது.
இவர்களின் பொறுப்பற்ற பச்சோந்தித்தனத்தால் பல்லாயிரம் குழந்தைகள் தாய்மார்கள் உட்பட பல மனித உயிர்கள் ஶ்ரீலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டபோதும் சுயநலம் மிக்க குறிப்பிட்ட சில சினிமா காரர்கள் மனிதர்களாக நடந்துகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஈழத்தமிழனின் மனதிலும் வடுவாக பதியப்பட்டு இருக்கிறது.
ஹிந்தி நடிகர் விஜய் ஒபரோய், அசின், இளையராஜா, சல்மான்கான், கருணாஸ், ராதிகா, என்று வெளிப்படையாகவும் இன்னும் பலர் மறைமுகமாகவும் இதில் கறுப்பு பங்கு வகித்துவிட்டனர்.
முள்ளிவாய்க்காலில் விலங்குகள்போல கொல்லப்பட்ட மனித உயிர்கள் போக, கால், கை, கண், காது இழந்து இராணுவத்திடம் சரணடைந்து ஆடு மாடுகள்போல முள்வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்த தமிழினத்தை சுகபோகிகளாக வாழுகின்றார்கள் என்று காட்டுவதற்காக,
கருணாநிதியின் கபட திட்டத்துக்கமைய திருமாவளவன், கனிமொழி, ரிஆர் பாலு, மற்றும் காங்கிரஸ் அரசியல்வாதிகளும், ஒட்டுமொத்த தமிழினமும் நிராகரித்த பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நியாயப்படுத்த அப்துல் கலாம் என்ற அரசியற் தூதரும், யாழ்ப்பாணம் தன்னிறைவடைந்து மகிழ்ச்சியில் திளைக்கிறது என்று காட்ட பட்டிமன்றம் லியோனியும், லைகா ராஜபக்‌ஷ குடும்ப உறவை மறைக்க சீமானும், புலிப்பாய்ச்சல் படத்தை நியாயப்படுத்த அரசியல்வாதி வேல்முருகனும், பாலச்சந்திரனை பயங்கரவாதியாக சித்தரிக்க வேந்தர் மூவீஸ் பச்சமுத்துவும், அந்த வரிசையில் இப்போது கடைசியாக கோத்தபாயவின் வேண்டுகோளுக்கு இணங்கி செவ்வேள் என்ற கைக்கூலியின் குடைக்குள் மறைந்து வந்து இணைந்திருப்பவர், தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனர் பாரதிராஜா,
பாரதிராஜா இப்போது இலங்கைக்கு போவதற்கு என்ன முக்கிய தேவை என்பது யாருக்கும் இன்னும் சரியாக தெரியவில்லை, பாரதிராஜா சினிமா படமெடுக்க போயிருந்தால் பரவாயில்லை அது தொழில் நிமித்தம், ஆனால் அவருக்கு இப்போது சினிமாவில் வேலையில்லை என்பதும், அவர் ஒரு அரசியல்வியாதியாக இருந்திருந்தால் வேறு பரிமாணத்தில் பார்க்கலாம் என்றால் அவர் அரசியல்வியாதியாக காணப்படவில்லை என்பதால் ராஜபக்‌ஷவின் வாழ்க்கையை நிர்ணயிக்கப்போகும் ஜனாதிபதி தேர்தல் நடப்பதற்கு இன்னும் பதினைந்து நாட்கள் இருப்பதும் முன்னாள் தமிழர்களின் மனம் கவர்ந்த சினிமா இயக்குனர் என்பதனால் அவர் ஏதோ உள்நோக்கமில்லாமல் இந்த காலத்தை தெரிவுசெய்திருக்க முடியாது, தொழில் இல்லாததால் வருமானத்துக்காக பணம் வாங்கிக்கொண்டு கோத்தபாயவின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாணம் போனாரா என்பது சில நாட்களில் நிச்சியம் வெளிவரும்.
அவர் தமிழர்களின் கடந்தகால அனர்த்தங்களை மனதில் கொண்டிருந்தால் நிச்சியம் இந்த காலகட்டத்தில் கோத்தபாயவின் நட்புவட்டாரத்தின் அழைப்புக்கிணங்க இலங்கைக்கு சென்றிருக்கமாட்டார்.
ஈழத்தமிழினத்தின் உறுதியை உலகுக்கு காட்டி தமிழன் என்று ஒரு இனம் பூமியில் வாழ்கின்றது என்பதை பறைசாற்றிய மாவீரர்நாள் நினைவு நிகழ்வுகள், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நிகழ்வுகள் அல்லது தமிழர் வாழ்வு சம்பந்தமான முக்கிய கருத்தரங்கம் ஏதாவது ஒன்றை குறிவைத்து அவர் இலங்கைக்கு போயிருந்தால் அவரது உணர்வை விமர்சிக்கவேண்டிய தேவை எவருக்குமில்லை. அல்லது 2009 ல் கருணாநிதி அனுப்பிய அரசியல் தூதுக்குழு போன்ற அடிப்படையில் அவர் சென்றிருந்தாலும் வேதனையும் விமர்சனமும் வேறுவிதமாக இருக்கும். ஆனால் உன்னோடு உன்னோடு என்று மேடைகளில் கரகரத்த குரலில் மூச்சுவிடாமல் சிலாகித்து முழங்கிவிட்டு கோத்தபாய ராஜபக்‌ஷவின் பின்னணியிலுள்ள ஒருவரின் வேண்டுகோளுக்கு அமைய யாழ்ப்பாணம் சென்று டக்ளஸ் தேவானந்தாவுடன் அளவளாவி பாரதிராஜா திரும்பியிருக்கின்றார் என்றால் ஹிந்தி நடிகை அசின் ஶ்ரீலங்காவுக்கு போனபோது நாம் அனைவரும் நடத்திய போராட்டமும், இளையராஜா கனடாவுக்கு சென்று மாவீரர் நாள் நிகழ்வுகளை இழிவுபடுத்த புறப்பட்டபோது காட்டிய எதிர்ப்பும், சிரிப்பு நடிகர் கருணாஸ் கொழும்புக்கு புறப்பட்டபோது எழுந்த எதிர்ப்பும் இன்று சிரிப்புக்குள்ளாகி இருக்கின்றது.
பாரதிராஜாவை வரவேற்று சந்தன மாலை அணிவித்து இலங்கை மண்ணில் கால் பதிக்க வைத்தவர்கள் கோத்தபாயவின் ஆட்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அடுத்து பாரதிராஜா டக்கிளஸுடன் வட்டமேசை மாநாடும் நடாத்தியிருக்கிறார் அவைகள் புகைப்படங்களாக அனைத்து ஊடகங்களிலும் ஏற்கெனவே நிறைந்திருக்கின்றன. அதுபற்றி பாரதிராஜா திரித்து ஒன்றும் கூறமுடியாத நிலையில் அவரது கைத்தடியாக இயக்குனர் கௌதமன் கண்ணீர்விட்டு சில நியாயப்படுத்தலை கூறி சாந்தப்பட்டிருக்கிறார்.
தாமரை இலையின் தண்ணீர்போல அரசியலில் அதிசயம் நிகழ்த்தும் தமிழர் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்தவர்கள் சிலரையும் பாரதிராஜா சந்தித்து தனது பயணத்தை நியாயப்படுத்துகிறார், அவரது நியாயப்படுத்தலை ஏற்றுக்கொள்ளுவதற்கு முன் அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற ஒரு பேரணியில் முழங்கிய ஒளிப்பதிவை யூரியூப்பில் பார்க்கும்போது அவரது நடிப்பின் அபாரம் நன்றாக புரிகிறது, அவர் ஒரு இயக்குனர் மட்டுமல்ல நல்ல நடிகனும்கூட என்பதை தமிழ் கூறும் நல்லுலகம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
தமிழினத்துக்கு பாரதிராஜா செய்த இந்த செயலுக்கு தமிழர் தேசியக்கூட்டமைப்பும் வடக்கு மாகாண முதலமைச்சரின் நிர்வாகமும் அனுசரணை வழங்கி நிறைவை கொடுத்திருக்கிறது. சாதாரணமாக தமிழர் தரப்பிலிருந்து இலகுவில் சந்திக்க முடியாத முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் அரசியலில் எந்த அசைவாக்கத்தையும் உண்டுபண்ண முடியாத, சினிமா படம் எடுப்பதற்கு சீண்டுவார் அற்று வீட்டில் இருக்கும் பாரதிராஜாவை காலதாமதம் கொடுக்காமல் முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரன் சந்தித்து உதவியிருக்கிறார்.
தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளுக்காக தொடர்ந்து உணர்வுடன் போராடிவரும் அரசியல் போராளி சிவாஜிலிங்கம் போன்றவர்கள் மிக மிக முக்கிய சந்தற்பங்களில் தொலைபேசியிலேயே தொடர்புகொள்ள முடியாத விக்கினேஸ்வரன் கோத்தபாயவின் வேண்டுகோளுக்கிணங்கி யாழ்ப்பாணம் வந்த அரசியலில் எந்த முக்கியத்துவமும் இல்லாத சாதாரண சினிமா இயக்குனரான பாரதிராஜாவை காலதாமதம் செய்யாமல் வரவேற்று மதிப்பளித்திருப்பது பாரதிராஜாவின் பயணத்தின் வீரியம் சாதாரணமானதல்ல என்பதை உணர்த்துகிறது.
குளத்தில் விரால்கள் இல்லை என்றவுடன் எவ்வளவு குறவை மீன்கள் கும்மாளம் அடிக்கின்றன, இன்னுமொரு மழைக்காலத்தில் நாலாபுறமிருந்தும் தண்ணீர் உள்வாங்கும்போது விரால்களின் வரத்து தவிர்க்கமுடியாது, அப்போ மீண்டும் குறவைகள் சேற்றுக்குள்ளும் வேர் இடுக்குகளிலும் பொந்துகளிலும் பதுங்கிக்கொள்ளும்,
ஏனென்றால் குறவைகளின் இயல்பே அதுதானே.
ஈழதேசம் இணையத்திற்காக ஊர்க்குருவி.

Friday, December 19, 2014

ஈழம் நோக்கிய போராட்டத்தை அடுத்த படிக்கு கொண்டுசெல்ல தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிப்பதே சிறந்தது!!


ஜன 08 2015, வரவிருக்கும் ஶ்ரீலங்காவுக்கான ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ வெற்றிபெறுவார் என்றும், இல்லை மாறாகராஜபக்‌ஷவின் அதே கருத்தை கொள்கையாக கொண்ட அதி தீவிரவாத சிங்கள தரப்பான சந்திரிகா, ரணில் கூட்டு குழுவினரால் திட்டமிட்டு களமிறக்கப்பட்டிருக்கும் மைத்திரிபால ஶ்ரீசேனதான் வெற்றி பெறுவார் என்றும் பல்வேறுபட்ட கருத்துக்கள் உள் வெளி மட்டங்களிலிருந்து வெளிவருகின்றன,
இன்னும் பலர் ஜனாதிபதிக்கான போட்டியல் நின்றாலும் மஹிந்த, மைத்திரி, இருவரில் ஒருவர்தான் வெற்றி பெறுவார் என்பதும் இந்த வெற்றி தோல்வியால் தமிழர்களின் வாழ்வில் பெரிய திருப்பம் எதுவும் நடந்துவிடப்போவதில்லை என்பதும் தேர்தலுக்கு முன்னும், தேர்தல் முடிந்தபின்னும் புரிந்ததும் புரியக்கூடியதுமான ஒன்றுதான்.
இந்த மைத்திரிபால சிறிசேன 2015 ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தங்கள் செய்யும்வரை மஹிந்த ராஜபக்‌ஷவின் அரச சபையில் ஆஸ்தான ஆலோசகராக, மந்திரியாக பத்து வருடங்கள் பணியாற்றியவர் என்பது இங்கு சிலரது ஞாபகத்துக்காக சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. அவை போக மைத்திரி குழுமத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையில் ஒற்றை ஆட்சியின்கீழ் அதிகார பரவலாக்கம் செய்யப்படும் என்றும். எக்காரணம் கொண்டும் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும், தமிழர்களுக்கான அரசியல் பொறுப்புக் கூறலுக்கு பொறுப்பேற்கபோவதில்லை என்றும் மஹிந்தவின் அதே கொள்கை முழக்கத்துடன் மைத்திரிபால சிறிசேன களம் இறக்கப்படிருக்கிறார்.
ஆக ஆள் மாற்றம் ஒன்றுக்கான தேர்தல் ஒன்றுக்கு இலங்கை தயாராக இருக்கிறது என்பது தவிர வேறு எதுவும் இல்லை என்பதே நிதர்சனமான நிலவரம்.
குறிப்பிட்ட இருவரில் எவர் வெற்றி பெற்றாலும் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல்/ மற்றும் அன்றாட வாழ்வியலில் ஏதாவது மாற்றம் நிகழுமா என்றால் இல்லை என்பதுதான் யதார்த்தமாக இருந்தாலும், தமிழர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக அரசியல் களத்தில் இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் அந்த யதார்த்த உண்மையை இதுவரை துணிச்சலாக வெளிப்படையாக மக்கள் மன்றத்தில் சொல்லமுடியவில்லை.
கடந்த 2010,ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின்போதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது அரசியலை மிக நேர்த்தியாக நகர்த்தி ராஜபக்‌ஷவின் ஆட்சியில் நடைபெற்ற ஈழ இனப்படுகொலையின் செயற்பாட்டாளரான ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு எந்தவித குற்ற உணர்வுமில்லாமல் தங்கள் ஆதரவை மனமுவந்து நல்லாசியுடன் நல்கியிருந்தனர். ஏன் அப்படி ஒரு நிலையை கூட்டமைப்பினர் எடுத்தனர் என்பது தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தவிர மற்ற எவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை.
ரணிலால் சுட்டிக்காட்டப்பட்ட மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதுதான் தமிழர்களின் நலனில் ஆரம்ப காலந்தொட்டு அக்கறை கொண்டுள்ள மேற்குலக நாடுகளின் இன்றைய விருப்பமாக இருந்துவருகிறது, மேற்குலக நாடுகளின் அக்கறை ஒருபக்கம் இருந்தாலும் அவர்களின் வெளியுறவு கொள்கை கோட்பாடுகளுக்கு இலங்கையில் தாம் விரும்பியவாறு ஆட்சி மாற்றம் ஒன்று நடந்தாகவேண்டிய கட்டாயமும் இருக்கிறது.
அயல்நாடான இந்தியாவும் இலங்கையில் ஒரு அரசியல் மாற்றம் நிகழவேண்டும் என்று விரும்புவதாகவே சில நடவடிக்கைகள் வெளிப்பட்டாலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ராஜபக்‌ஷவே வெற்றிபெற்று ஜனாதிபதியாக வரவேண்டும் என்று வெளிப்படையாக கூறி தனது ஆதரவை முன்கூட்டியே தெரிவித்திருக்கிறார்.. அவரது கருத்தில்க்கூட தமிழர் நலன் ஒரு புள்ளியளவுகூட முன்னிறுத்தப்படாமல் பூகோள அரசியல் மற்றும் பாதுகாப்பு மற்றும் அவர்களது பொருளாதாரம் சந்தை வர்த்தகம் ஆகிய நலன்களின் அடிப்படையிலேயே இந்தியா காய் நகர்த்துவதாக புரியக்கூடியதாக உள்ளது.
சீனா பாகிஸ்தான், ரஷ்யா, போன்ற நாடுகள் மஹிந்த ராஜபக்‌ஷ் ஜனாதிபதியாக தொடரவேண்டும் என்று நேரடியாக விரும்புகின்றன. சர்வதேச பூகோள ஆதிக்க அரசியல் சார்ந்து அவர்கள் கவலைதவிர வேறெதுவும் இருக்க முடியாது.
இலங்கயில் வாழும் தமிழர்கள், குறிப்பாக ஈழத்தமிழர்கள் நடந்து முடிந்த யுத்தத்தில் இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி ஆகியவற்றை நேரடியாக அனுபவித்ததன் காரணமாக, ராஜபக்‌ஷவை ஜனாதிபதியாக வரவேண்டாம் என்று வெறுக்கக்கூடும், யதார்த்தமும் அதைத்தான் முன்னெடுக்கும் என்பதும் மறுப்பதற்கில்லை. ஆனால் இலங்கை தமிழர்களின் அரசியல் முன்னணியாக செயற்படும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு எந்த வாத பிரதிவாதங்களையும் வெளிப்படுத்தி நிலைப்பாட்டை தெரியப்படுத்தாமல் மறைமுகமாக மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதுபோலவே சில அசைவுகள் வெளிவருகின்றன.
சான்றாக சமீபத்தில் வடக்கு மாகாணசபை சபை அமர்வின்போது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் காலம் தாழ்த்தியாவது அடித்த குத்துக்கரணத்தை சான்றாக இதற்கு பொருத்திப்பார்க்கக்கூடியதாக உள்ளது.
வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விசேட விவாதம் கைதடியிலுள்ள வடமாகாண சபையில் நேற்றைய முந்தினம் காலை 9 மணிக்கு ஆரம்பமானது. முதலமைச்சர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு விவாதங்கள் இடம்பெற்றிருந்தது
அங்கு உரையாற்றிய முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் கூறும்போது கையறு நிலையில் தாங்களும் மாகாணசபையும் இருப்பதாகவும் ஒன்றுமேயற்ற மாகாணசபை இது என இப்போது புரிந்து கொண்டிருப்பதாகவும் முதல்முறையாக மாகாணசபை அமர்வில் தனது கவலையை தெரிவித்திருந்தார். அவரது உரையிலிருந்து மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியை விமர்சித்து ரணில் சந்திரிகாவின் தெரிவான மைத்திரியை ஆதரிப்பதன் தொடராக அவரது கருத்தை எடுத்துக்கொள்ள முடிகின்றது.
அவரை தொடர்ந்து உரையாற்றிய கூட்டமைப்பு உறுப்பினர்களான சுகிர்தன், சிராய்வா, கஜதீபன் ,ஜெகநாதன் என பலரும் நடைமுறையின் உண்மையினை முதலமைச்சர் உணர்ந்து கொண்டதற்காக நன்றியை முதலமைச்சரிற்கு தெரிவித்துக்கொண்டனர். அந்த நன்றியிலிருந்து குறிப்பிட்ட உறுப்பினர்களும் நாட்டில் ஒரு சர்வாதிகார ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது எனவே ஆட்சி மாற்றம் நிகழவேண்டும் என்றும் அதற்கு வழிதேட அவர்கள் தயாராகி இருப்பது வெள்ளிடை மலையாக கருத்தியல்கள் மூலம் சபையில் முன் வைக்கப்பட்டிருக்கிறது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களிற்கு வெறும் 6 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கி விட்டு எந்தவொரு மாகாணத்திலும் இல்லாதவாறு வடக்கில் ஆளுநருக்கு 130,மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதை கண்டித்து அதனை தான் ஆட்சேபிப்பதாகவும் முதலமைச்சர் திரு விக்கி அவர்கள் கருத்து தெரிவித்தார்.
மாகாணசபை அமர்வுகளின்போது முதலமைச்சர் மூலம் வெளிப்படும் மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி கொள்கை ரீதியான தீர்மான கருத்துக்கள் பத்திரிகை செய்தியாக அன்றாடம் வெளிவருவதால் அச் செய்தி மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி தமிழ் மக்களை ஜனாதிபதி தேர்தலில் ஒரு நிலையெடுத்து திருப்பத்தை கொண்டுவரும் என்பதை உணர்ந்து சம்பந்தன் தரப்பு விக்கிமூலம் தமது விருப்ப தெரிவான மைத்திரியின் சார்பாக பழைய அரசாங்கத்தை விமர்சனம் செய்யப்பட்டிருக்கிறது
இதனிடையே இன்னொரு கருத்தை இங்கு சுட்டிக்காட்டவேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஈழ தமிழர்களின் செல்வாக்குள்ள மற்றொரு அரசியற் கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தமது நிலைப்பாட்டை எந்தவித தயக்கமும் இல்லாமல் நேற்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமது  நியாயப்பாடுகளையும் தமது கருத்தையும் மிக தெளிவாக முன் வைத்திருந்தார்.
த தே ம முன்னணி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னணி வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்‌ஷவையோ, மாறாக நேற்றுவரை ராஜபக்‌ஷவுடன் கூட்டாட்சியில் இருந்து சந்தற்பவாதமாக தமிழர்களை ஏமாற்றுவதற்காக அல்லது சிங்கள ஏகாதிபத்யத்தை தொடர்ந்து கட்டி காப்பதற்காக எதிரணியாக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன வையோ ஆதரிக்கப்போவதில்லை என்றும் அதற்கான மூலகாரணங்களை ஈழத்தமிழர்கள் புரிந்துகொண்டு செயற்படவேண்டும் என்று வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்திருக்கிறார்.
அதேபோல வடக்கு மாகாணசபை உறுப்பினரான சிவாஜிலிங்கம் அவர்களும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களின் நிலைப்பாடு எதுவாக இருக்க வேண்டும் என்பதை செவ்வியாக வழங்கி தனது நிலைப்பாட்டை மிக தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார்.
எனவே இனி ஜனாதிபதி தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்ற சிக்கல் பெரிதாக இல்லாவிட்டாலும் இனப்படுகொலையாளியான ராஜபக்‌ஷவை தோற்கடிக்கவேண்டும் என்று எவரும் மூர்க்கமாக நம்பி தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாசுக்கான நகர்வையும் கருத்தில்க்கொண்டு மைத்திரிக்கு வாக்களிக்கவே யதார்த்தமாக மனது அலைபாயும் என்பதில் யாரும் ஐயப்படமுடியாது.
ராஜபக்‌ஷவை தோற்கடிப்பது என்பது ஆத்ம திருப்தியாக இருக்கும் என்பதும், பழிவாங்கும் உணர்வாகக்கூட ஒவ்வொருவரினது ஆழ்மனதும் உற்சாகம் அடையும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
ஆனால் இங்கு குறிப்பிடும் விடயம் பலருக்கு அதிர்ச்சியாகவும் கோபமூட்டுவதாகவும் கூட இருக்கலாம்.
ஒட்டுமொத்தமாக தமிழர்களும் இனப்படுகொலையாளி ராஜபக்‌ஷவுக்கு வாக்களிக்காமல் விடுவது, அதேபோல ராஜபக்‌ஷவின் அரச சபையில் ஒன்றாக இருந்து இனப்படுகொலையை ஆதரித்து மந்திரிப்பதவி வகித்த மைத்திரிக்கும் வாக்களிக்காமல் விடுவது ஒருவகை புத்திசாலித்தனமானதாக கணிக்கப்படுவதுபோல மைத்திரியை வெற்றிபெற வைத்து ஜனாதிபதியாக்கிவிட்டு “ராஜபக்‌ஷவை தோற்கடிப்பது என்பது மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும்”.
மீண்டும் ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக வருவதுதான் தமிழினத்தின் அரசியல் தீர்வுக்கு சொற்பமேனும் உதவும், ராஜபக்‌ஷவை தண்டிப்பதற்கும் ராஜபக்‌ஷ மீண்டும் ஜனாதிபதியாக வருவதுதான் உவப்பான ஒன்று.
அல்லாமல் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானால், சர்வதேச சலசலப்புக்கு அஞ்சி உடனடி நிவாரணங்கள் சில கிடைக்கப்பெறலாம், புற்றுநோயை அறவே அகற்றும் மருந்து கிடைக்காமல் நோயின் மூர்க்கத்தை குறைத்து பக்க விளைவை உண்டுபண்ணி உயிருக்கு ஆபத்தான நிலையை புதிய தெரிவு நிச்சியம் கொண்டு வரும்.
நூறு மைல் பயணம் போகவேண்டிய தமிழினம் மிகப்பெரிய போராட்டத்தை சந்தித்து இனப்படுகொலையை பரிசாக பெற்றிருந்தாலும் கிட்டத்தட்ட 50,60 மைல் தூரத்தை இன்று தமிழினம் கடந்துவிட்டது, புதிய அரசாங்கம் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால வரும் பட்ஷத்தில் தமிழருக்கான அரசியல் தீர்வு முதலாவது மைல் கல்லிலிருந்து தொடங்கப்பட்டு காலதாமதம் செய்து ஏமாற்றப்படும் அபாயம் எவராலும் தடுக்க முடியாது.
அதுதான் நாம் இதுவரை கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்து கிடைத்திருக்கும் அனுபவம் என்பதை எவரும் மறந்துவிட முடியாது.
இன்றைக்கு ராஜபக்‌ஷ என்ற கொடுங்கோலன் சர்வதேசத்துக்கு பதில் சொல்லவேண்டிய பொறியில் நின்றுகொண்டிருக்கின்றான், பக்கத்து நாடான இந்தியா என்னதான் நட்புநாடு என்று பாராட்டினாலும் உள்ளூர பகைமை உணர்வுடனேயே ராஜதந்திர செயற்பாட்டு பரிவர்த்தனைகள் ஓடும் புளியம்பழமும்போல நடைபெற்றுக்கொண்டிருக்கிறது, அங்கு விரிசலுக்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றனவே தவிர ஒட்டியுறவாடும் கட்டங்கள் பெருகப்போவதில்லை.
சர்வதேசநாடுகள் மற்றும் ஐநா அவை ஆகியன ராஜபக்‌ஷவை பொறிக்குள் கொண்டுவருவதற்கு ராஜபக்‌ஷ ஆட்சியாளனாக இருக்கவேண்டிய கட்டாயம் தேவைப்படுகிறது ராஜபக்‌ஷவால் தூக்கிய காவடி ராஜபக்‌ஷவால் இறக்கி வைக்கப்படவேண்டும்.
ஒருவேளை ஆட்சி மாற்றத்தின் பின் இனப்படுகொலை குற்றத்துக்காக ராஜபக்‌ஷ என்ற தனிமனிதனை சர்வதேச நீதிமன்றம் தூக்கில் போட்டாலும் அரசியற் தீர்வை பதவி இல்லாத ராஜபக்‌ஷவை வைத்து சர்வதேசம் தீர்மானிக்க முடியாது.
புதிய ஆட்சியாளர்கள், புதிய கொள்கை, புதிய பேச்சுவார்த்தை, புதிய களம், புதிய தலைமை, என்று எல்லாம் புதிதாக மாறி இலக்கம் ஒன்றிலிருந்து எண்ணப்பட்டு மீண்டும் அரசியற் பேச்சுவார்த்தை தொடங்கப்படும்.
விடுதலைப்புலிகள் என்ற மாபெரும் அமைப்பும் மிகப்பெரிய ஆயுத பலமும் ஆயுட்காலத்தில் காணமுடியாத தலைவனின் வழிநடத்தலும் இருந்தே ஒரு 50,60 மைல் தூரத்தைதான் நம்மால் கடக்க முடிந்திருக்கிறது.
புதிய ஆட்சி, சமாதானத்துக்கான போர் நடத்திய சந்திரிகா, சதி செய்து காட்டிக்கொடுத்த ரணில், ஒன்றும் தெரியாத சம்பந்தன், வாசுதேவ நாணயக்காரவின் சம்பந்தி விக்கி, மக்களால் தெரிவு செய்யப்படாத சுமந்திரன் இவர்கள் தலைமையில் சந்திரீகா ரணிலுடன் பேச்சுவார்த்தை, அதற்கான இடம் பொருள் ஏவல் இவை எதை நிறுவும் என்பதை இழப்புக்களை கண்ட பொதுசனங்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.
தேர்தல் முடிந்ததும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை, சம்பந்தனும் ரணிலும் இணைந்தால் என்ன நடக்கும் என்பதை நான் இங்கு சொல்லித்தான் தெரியவேண்டும் என்று கட்டாயமும் இல்லை.
எனவே மைத்திரிக்கோ மகிந்தவிற்கோ வாக்களிக்காமல் அன்று தலைவர் எடுத்த தீர்க்கதரிசனமான அதே முடிவை தமிழ் மக்கள் எடுக்கவேண்டும் அது எமக்கு சாதகமாக மாற்றப்பட்டு  தொடர்ந்த போராட்டங்கள் அப்படியே தொடரப்படவேண்டும் அரசியற் தீர்வு சர்வதேச விசாரணை என்பதை இன்னும் இறுக்கி தீர்வை நோக்கி பயணப்படுவதே சர்வதேசத்துக்கும் தமிழினத்துக்கும் இலகுவாக இருக்கும். புதியவர் வந்தால் ஆள் மாற்றம் ஒன்றைத் தவிர வேறு எதுவும் சாத்தியமில்லை.
கனகதரன்
ஈழதேசம்

Wednesday, December 3, 2014

குஷ்புவை வைத்து சேறடிக்கும் காங்கிரஸ்.ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில் சம்பந்தமேயில்லாமல் தமிழர்களின் ஆன்மாவை கடித்துக்குதறி விடுதலைப் புலிகள் பொதுமக்களின் உயிரை எடுக்கும் பயங்கரவாதிகள் என்றும் தீவிரவாதத்தை கடைசி மூச்சு உள்ளவரை எதிர்ப்போம் என்றும் தனது அரசியல் புலமையை வெளியிட்டிடுக்கிறார் கட்சிவிட்டு கட்சிதாவிய “நக்கர்த் கான்”, என்ற இயற் பெயரை கொண்ட சினிமா நடிகை குஷ்பு .
முன்னைய காலங்களின் எழுச்சியை விடவும் இந்த வருடம் தேசிய தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் நாடுகள் எல்லாவற்றிலும் மிகவும் உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டு தலைவர் பிரபாகரன் அவர்கள் கொண்ட கொள்கைவழி நாங்கள் அனைவரும் பின் நிற்கின்றோம் என்ற செய்தியை தமிழகத்து தமிழர்களும், உலகத்தமிழர்கள் வெளிக்காட்டும் போது காழ்ப்புணர்ச்சி மற்றும் பொறுக்க முடியாமை காரணமாக இந்திய காங்கிரஸும் விடுதலை புலிகள்மீது போட்டி மனப்பாண்மைகொண்ட தமிழகத்து தீய சக்திகளும் திட்டமிட்டு குஷ்புவை வைத்து சேறடித்திருக்கின்றன.
நடிகை குஷ்பு தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத ஒருவராக நீண்டகாலம் நின்று பிடித்தவர், தமிழக சினிமா ரசிகர்கள் மனங்களில் நின்று நிலைத்த ஒரு நடிககை என்றால் குஷ்பு என்பது மிகையானது அல்ல.
சினிமாவில் சான்ஸ் குறைந்தபின் நடிகை குஷ்பு சேராத கட்சியுமில்லை, அவர் கட்டி சுமந்திழுக்காத சர்ச்சையுமில்லை,
பெண்கள் சம்பந்தமாகவும் தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் உயிரோட்டமான தமிழர்களின் திருமண பந்தம் பற்றிய குஷ்புவின் இழிதனமான முரண்பாடான கருத்து தமிழ்நாட்டை மிகவும் கொதிநிலைக்கு அப்போ இட்டுச்சென்றிருந்தது. பெண்கள் திருமணம் செய்யாமல் விருப்பப்பட்டபடி வேவ்வேறு ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்ளுவது தப்பேயில்லை என்று பகிரங்கமாக குஷ்பு கூறியிருந்தார்,
தமிழ்நாட்டிலுள்ள பெண்கள் அமைப்புக்கள், அரசியற் கட்சிகள், பொது அமைப்புக்கள், குஷ்புவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கொடும்பாவி கட்டி இழுத்து பெரும் போராட்டம் நடத்தின கிட்டத்தட்ட தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் குஷ்புமீது பல வழக்குகள் தொடரப்பட்டன,
இந்தியாவில் சினிமா நடிகர்களும் அரசியல்வாதிகளும் எதை முன்வைக்கின்றனரோ அதையே முன்மொழிந்து பழக்கப்பட்ட நீதிமன்றங்கள் குஷ்பு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு மயில் இறகால் அடிப்பதுபோன்ற தண்டனையை தீர்ப்பாக கூறி குஷ்பு ஒரு முக்கியமான பிரமுகர் என்பதை பயபக்தியுடன் சொல்லாமல் சொல்லி அந்த விடயத்திலிருந்து வேறு விடயங்களுக்கு தாவிவிட்டன,
அவ்வப்போது சமூகம் சார்ந்து குஷ்பு வெளியிட்ட கருத்துக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் எரிச்சலையும் கோபத்தையும் முரண்பாட்டையும் ஊட்டியிருக்கிறதே தவிர கவர்ச்சி நடிகையாக சினிமாவில் குஷ்புவை ஏற்றுக்கொண்டளவுக்கு குஷ்புவின் கருத்தை எவராலும் யதார்த்தமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
அரசியல் என்று ஜெயலலிதாவின் தலைமையிலான அஇ அதிமுகவில் இணைந்திருந்து அக்கட்சியின் தொலைக்காட்சியான ஜெயா ரிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் ஜெயலலிதாவின் அடிமைகளில் ஒருவராகவும் பணியாற்றினார், அடுத்து கருணாநிதியின் திமுக கட்சியில் இணைந்து முன்னிலை பேச்சாளராகவும் கட்சியின் உயர்மட்ட உறுப்பினராகவும் கருணாநிதியின் மனங்கவர்ந்த மந்திரமாகவும் அக் கட்சியில் அறியப்பட்டார்,
அதன்பின் திமுகவிலிருந்து தன்னிச்சையாக வெளியேறி சிலமாதங்கள் மவுனமாக இருந்தார்.
படுகுழியில் விழுந்து கிடந்த கருணாநிதி குஷ்புவை தனது கட்சியில் மிக உச்சத்தில் வைத்து பார்க்கவேண்டும் என்று விரும்பினார். அதன் பின்னணியில் உள் திட்டம் ஏதோ இருந்ததாக ஸ்ராலின் சந்தேகித்ததாக தெரிகிறது, அனைத்தையும் வெல்லும் வண்ணம் கருணாநிதி காய்நகர்தல்களையும் செய்தார், ஆனால் கருணாநிதி குஷ்புவுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுப்பதை கருணாநிதியின் மகன் ஸ்ராலின் மற்றும் கனிமொழி ராசாத்தி ஆகியோர் துண்டற விரும்பவில்லை.
கருணாநிதி குஷ்புமீது வேறுவிதமான அபரிமிதமான ஆசையை வைத்திருந்தார் என்றும் அதனால்தான் கட்சியில் குஷ்புவுக்கு முக்கியஸ்துவம் கொடுக்கிறார் என்று கருணாநிதி குடும்பத்தில் புகைச்சல் கிளம்பியிருந்தது. இந்தச் செய்தியை பல ஊடகங்கள் புலனாய்வு செய்தியாக வெளியிட்டன.
ஒரு கட்டத்தில் குஷ்பு கருணாநிதியிடமிருந்து கவலையுடன் வெளியேறினார்
சில தினங்களுக்குமுன் டில்லி சென்ற குஷ்பு சோனியா ராகுல் ஆகியோரை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொண்டார். திரும்பி சென்ன வந்த குஷ்பு ஒரேநாளில் பண்பட்ட காங்கிரஸ் தலைவர்போல பேசி விடுதலை புலிகள் பயங்கரவாதிகள் எனவும் அதை தான் அனுமதிக்க போவதில்லை என்றும் முழக்கமிட்டு சென்றிருந்தார் இந்த செய்தி தமிழகத்திலும் உலக தமிழர்களிடத்திலும் பெரும் கொந்தளிப்பையும் கொதிநிலையையும் ஏற்படுத்தியிருந்தது, அதுபற்றி ஊடகங்கள் கண்டன செய்திகளையும் சமூக வலைத்தளங்களில் காட்டமான உரையாடல்களையும் விவாதங்களையும் தோற்றுவித்திருந்தது,
மாவீரர் நாள் நிகழ்வுகளும் விடுதலைப்புலிகளின் தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் மிகவும் உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டு தலைவர் பிரபாகரன் அவர்களின் கொள்கைவழி நாங்கள் அனைவரும் பின் நிற்கின்றோம் என்ற செய்தியை தமிழகத்து தமிழர்களும், உலகத்தமிழர்கள் வெளிக்காட்டும் போது காழ்ப்புணர்ச்சி மற்றும் திசைதிருப்பும் ஒரு வேலைத்திட்டமாகவே குஷ்புவை வைத்து காங்கிரஸும் விடுதலை புலிகள்மீது போட்டி மனப்பாண்மைகொண்ட மற்றும் தீய சக்திகளும் திட்டமிட்டு குஷ்புவை வைத்து சேறடித்திருப்பதாகவே பலரும் நம்புகின்றனர்.
ஊர்க்குருவி.
ஈழதேசம்.

Wednesday, November 26, 2014

தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் அகவை நாள் வாழ்த்து.


 


நீண்ட நெடு வரலாறு
நிலம் முழுதும் குருதி மழை
ஆற்பரிக்கும் கடலன்னை
அடுக்கடுக்காய் பனை வடலி
நிறைகுடமாய் பெருங்காடு
நினைவது உன் வரவுக்காய்
வழி திறந்து விழி தேட – நீ
பிறப்பெடுத்த பெருநாளை
போற்றுகின்றோம் வணங்குகின்றோம்.
காற்றடித்தால் உன் மூச்சு
கடல் அசைந்தால் உன் வரவு
காடு இரைந்தால் நீ உறக்கம்
கன மழையில் நீ பயணம்
பூடகமாய் எடுத்துரைத்தால்
பூ மரமாய் நீ சிரிப்பாய்
பொன் மகனே பெரும் பொருளே
புகழ் உனக்கு இன்று பிறந்த தினம்.
நான் என்று வாழவில்லை
நாடென்று வாழ்ந்தவனே
வீடென்று உறங்கவில்லை
வீடெங்கும் விளைந்தவனே
சோலைக் காடுகளில்- சிம்ம
சொப்பனமாய் திகழ்ந்தவனே- உலக
நாடெங்கும் உன் பெயரை
இன்று ஓங்காரம் செய்கிறது.
ஆண்டு அறுபது
அகவை நிறை நாளின்று
தோன்றிய எண்ணமெல்லாம்
சொல்ல முடியவில்லை
மீண்டும் உன் புகழை
விருத்தமிட தேவையில்லை
வீரன் என்றால் ஒருவன் நீ
விடுதலைக்கு தலைவன் நீ
தமிழுக்கு முகவரியை
தரணியிலே தந்தவன் நீ.
பாவியர்க்கு பிரளயமாய்
பண்புக்கோர் குளிர் நிலவாய்
வஞ்சகர்க்கு பேரிடியாய்
வானுயர்ந்த பெரு மலையாய்
காவியத்தில் கல் எழுத்தாய்
கண் முன்னே நின்றவனே
வாழிய நீ பல்லாண்டு
வானுள்ள வரை வாழி..
சோலையில் பூவாய் நின்றாய்
செருக்களத்தில் புலியாய் ஆனாய்
உறுதியில் உருக்கு என்றார்
உள்ளத்தில் தென்றல் போலாய்
சீருடைக்கு அளவு நீயே
திக்கெட்டும் வீரன் நீயே
ஆற்றலின் ஊற்று நீயே
ஆண்மையின் உண்மை நீயே.
வாழிய ஆண்டு நூறு
வழிபடும் உலகமெல்லாம்
காற்றது நிற்கும்போதும் -உன்
கனவுகள் தொடரும் என்பேன்
மேற்கது கிழக்காய் ஆனால்
மிகையில்லை அதுவும் என்பேன்- உன்
கூற்றது ஈழம் வெல்லும் -புலிக்
கொடி அது பரணி பாடும்
மூட்டிய போரின் கங்கில்
முடிவது ஈழம் வெல்லும்.
ஈழதேசம்- ஊர்க்குருவி.

Tuesday, September 2, 2014

புலிப்பார்வை திரைப்படம் தவறான தகவல்களுடன் வெளிவரமாட்டாது – சீமான் ஈழதேசம் இணையத்திற்கு உறுதி.

ஈழப்போராட்டத்தை மோசமாக சித்தரிக்கவல்ல உத்தியுடன் பதின்ம வயது பாலியச் சிறுவர்களை விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் யுத்தத்திற்கு பயன்படுத்தினர் என்று சர்வதேச மட்டத்தில் ஆவணப்படுத்த முயலும் கருவை மையமாகக்கொண்டு “புலிப்பார்வை” என்ற திரைப்படத்தை எம் ஆர் எம் கல்விக்குழுமத்தின் உரிமையாளர் பச்சமுத்து அவர்கள் . வேந்தர் மூவீஸ் என்ற முத்திரையின் கீழ் தயாரித்திருந்தார்.
அதே நேரத்தில் லைக்கா மொபைல் நிறுவனம் பலகோடி ரூபாசெலவில் நடிகர் விஜையை வைத்து கத்தி என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறது. கத்தி திரைப்படத்தில் கருக்களம்பற்றி எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் லைக்கா மொபைல் என்ற நிறுவனம் ஈழத்தமிழர்களுக்கு எதிரான வேலைத்திட்டங்களை செய்து வருவதுடன், ராஜபக்‌ஷவின் பங்கு நிறுவனம் என்பதும் தெரிந்துகொண்டும் லைக்கா வின் முதலீட்டில் தமிழ்நாட்டில் படம் தயாரிப்பதை அங்குள்ள ஈழ ஆதரவு அமைப்புக்கள் அரசியற் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இந்த இரண்டு திரைப்படங்களையும் தாம் எதிர்க்கப்போவதில்லை என்றும் அந்த திரைப்படங்கள் தேவையான ஒன்று என்றும் நாம்தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்முனைப்பாக ஊடகங்களுக்கு செவ்வி வழங்கினார். அதன்பிற்பாடு புலிப்பார்வை திரைப்படத்தின் ஒலி ஓடியோ வெளியீட்டின்போதும் அந்நிகழ்வில் சமூகமளித்து அந்தப்படம் தேவையான ஒன்றுதான் என்று சான்று வழங்கி நியாயப்படுத்தினார்.
அப்போது புலிப்பார்வை திரைப்படத்தை வெளியிடுவதற்கு ஆட்சேபணை தெரிவித்த மாணவர்கள் பலர் நாம் தமிழர் இயக்க உறுப்பினர்களாலும் பச்சமுத்துவின் அடியாட்களாலும் மிக மோசமாக தாக்கப்பட்டு மண்டை உடைக்கப்பட்டனர் என்று செய்திகள் வெளிவந்தன.
அது சம்பந்தமாக ஈழதேசம் இணையத்தளம் சார்பாக நேற்று சீமானிடம் நேரில் சென்று விபரம் கேட்டபோது புலிப்பார்வை திரைப்படத்தில் இடம்பெறும் விரும்பத்தகாத காட்சிகள் அனைத்தும் திரும்ப பெறப்படும் என்றும், பல காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டு எதிர்ப்பாளர்களுக்கு போட்டு காண்பிக்கப்படும் என்றும் அதன்பின் படத்தை எவரும் எதிக்கமுடியாத அளவுக்கு செப்பனிட்டு வெளியிட இருப்பதாகவும் கூறினார். ஒருவேளை படத்தில் இடம்பெற்ற திருத்தங்கள் தனக்கு திருப்தியளிக்காவிட்டால் படம் திரையிடப்படாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அடுத்து நடிகர் விஜய் நடிக்கும் கத்தி படத்திற்கும் தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருவதால் லைக்கா மொபைல் உரிமையாளர்களில் ஒருவரான சுபாஸ்க்கரன் என்பவரை வரவளைத்து தனது முன்னிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்த இருப்பதாகவும் அப்போது லைக்கா நிறுவனம் தமது தரப்பு நியாயங்களை பகிரங்கப்படுத்தும் என்றும் சந்தேகங்கள் தீர்க்கப்பட்டு கத்தி திரைப்படம் திரையிடப்படும் என்றும் சீமான் கூறியிருக்கிறார். 
ஈழதேசம் செய்திகளுக்காக தமிழ்நாட்டிலிருந்து
தில்லையம்பலம்.

Friday, August 22, 2014

சீமானின் நியாயப்படுத்தல்கள் எதை நிறுவுகின்றன?‏


பாலச்சந்திரனை பயங்கரவாதியாக சித்தரிக்கும் புலிப்பார்வை, மற்றும் கத்தி திரைப்படங்கள், சர்ச்சைக்குரிய லைக்கா மொபைல் நிறுவனம், ஈழவிடுதலைப்போராட்டம், தமிழகத்து நவீன அரசியல் பிரம்மாக்கள் , இப்படி ஒரு சுற்றுவட்டத்தில் தமிழக அரசியல் அரங்கு இப்போதைக்கு சிக்கியிருக்கிறது. அதையொட்டிய வாதப்பிரதிவாதங்களும் நியாயப்படுத்தல்களும் மேடையேற்றப்பட்டு சிலநாட்களாக சூடுபிடித்த சொற்பொழிவுகளாக அனல்பறக்க விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இங்கு சிக்கலில் மாட்டியிருப்பது ஈழதமிழர்களின் துரோகிகளான திமுக தலைவர் கருணாநிதியோ, காங்கிரஸ் தலைவி சோனியாவோ அல்ல. மாறாக ஈழ விடுதலைக்காக உயிரையும் கொடுப்பேன் என்று தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் நிழலில் நின்று கழுத்து நரம்பு வெடிக்குமளவுக்கு முழங்கித்தள்ளிய சீமானும், அவருடைய நாம்தமிழர் கட்சியும் என்பதே மிக மிக வருத்தத்திற்குரியதாக பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து தமிழகத்து அரசியல்வாதிகளால் நிர்வாணமாக்கப்பட்ட ஈழ தேசிய அரசியல், நம்பிக்கைக்குரியவராக பார்க்கப்பட்ட சீமானால் மீண்டும் ஒரு தாக்குதலை சந்தித்திருக்கிறது. சீமான் தெரிந்து இந்த குளப்பத்துக்குள் கலந்துவிட்டாரா அல்லது அவசரமான முடிவெடுப்பினால் சிக்கலில் சிக்கிவிட்டாரா, அல்லது அதையும் தாண்டி முகத்துக்கு அஞ்சி சில விடயங்களை நியாயப்படுத்தவேண்டிய இக்கட்டில் சிக்கியிருக்கிறாரா என்பது நிச்சியம் காலப்போக்கில் புரியப்படும் என்பது வரலாற்றில் நாம் கண்கூடாக கண்ட உண்மை.
உலகத்தமிழர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்ற ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து களம் இறங்கிய சீமான் 2009,ல் இருந்து 2011,வரை தனது அரசியல் அந்தஸ்த்துக்காக அதிகம் சிரமப்படாத காலமாக இருந்தது.
ஐந்து சிறைவாசம், அறுநூறுக்கு மேற்பட்ட மக்களை கூட்டாமல் மக்கள் இணைந்துகொண்ட மேடைகள், சலிப்படையவைக்கக்கூடிய காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சிகளின் வஞ்சகத்தனமான அரசியலால் வெறுப்படைந்த மாற்றுக்கருத்துக்கொண்ட பொதுமக்களின் இணைவு ஆகியவற்றுடன் ஈழத்தின் இனப்படுகொலை அனுதாபமும் சீமானுக்கு சாதகமாகி மிக குறுகிய காலத்தில் அவரை ஒரு தனித்தன்மை கொண்ட உறுதிமிக்க அரசியல்வாதியாக உலக தமிழினத்தின் முன் வளர்த்துவிட்டிருந்தது.
1940 களில் தினத்தந்தி பத்திரிகை ஸ்தாபகரான சி பா ஆதித்தனாரால் தொடங்கப்பட்டு முடங்கிக்கிடந்த “நாம்தமிழர்” என்ற இயக்கத்தை சரியான சந்தர்ப்பத்தில் சீமான் கையிலெடுத்து அதில் புலித்தோல் ஒன்றையும் விரித்து சம்மணமிட்டு இதமாக உட்கார்ந்துகொண்டார். உட்கார்ந்தது மட்டுமல்லாமல் புரட்சிகரமான சில வேலைத்திட்டங்களையும் பரப்புரைகளையும் அவர் மேற்கொண்டார்.
2009,ல் முள்ளிவாய்க்கால் உச்ச இன அழிப்பின்போது சோனியாவின் இந்திய தேசிய காங்கிரஸுடன் இணைந்து அன்றைய தமிழக முதலமைச்சர் மு கருணாநிதி ஆடிய சதிராட்டம் மக்களை வெறுப்பின் உச்சத்துக்கு கோண்டுசென்று உணர்வாளர்கள் தெருத்தெருவாக தீக்குளித்து உயிரை மாய்த்து தமது எதிர்ப்பை பதிவுசெய்யுமளவுக்கு கீழ்த்தரமாக மாற்றம்பெற்றிருந்தது.அப்போது பற்றிப்பிடிக்க அலைபாய்ந்த ஈழ ஆதரவுக் கைகளுக்கு படர் கொம்பாக சீமானின் அரசியற் பிரவேசம் வரப்பிரசாதமாக அமையப்பெற்றிருந்தது.
35/40 வருட ஈழப்போராட்டம் 2009,ல் முள்ளிவாய்க்காலில் பின்னடைவை சந்தித்து போராட்டம் நிறுத்தப்பட்டபோது. தமிழகத்திலிருந்து பல்வேறு அமைப்புக்களுடன் சீமானும் ஈழ ஆதரவுக்காக குரல் கொடுக்கத்தொடங்கியிருந்தார். ஈழத்தில் போராட்டத்தலைமையின் வெற்றிடம் உணர்வுமயமாக பேசத்தெரிந்த சீமானுக்கு சாதகமாக அமைந்தது.
இனப்படுகொலையின்போது சர்வதேசத்தை தலையிடாமல் தந்திரமாக சதிசெய்து தடுத்த இந்தியாவின் சதி, ராஜபக்‌ஷவுக்கு முண்டு கொடுத்து அரசியல் செய்த இந்திய தமிழக அரசியற் கட்சிகள் மீதிருந்த வெறுப்பு, கொள்கையில் விடுதலைப்புலிகள் தலைவரின் சார்புத்தன்மை புலிக்கொடியின் கவர்ச்சி சீமானின் உணர்வுமயமான பேச்சு இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து விடுதலைப்புலிகளின் மாற்றாக தமிழகத்து கிராமிய இளைஞர்கள் மத்தியில் நாம்தமிழர் இயக்கம் ஒரு பலமான சக்தியாக தலையெடுத்தது.
விடுதலைப்புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் நடத்தை, மற்றும் தேசியத்தலைவரின் உறுதியான கொள்கையை பின்பற்றுவதாக சீமான் முழங்கிய வீச்சு தேசியத்தலைவரின் உருவப்பதாதைகளை பொலீசாருக்கும் பயப்படாமல் நாம்தமிழர்கட்சியின் மேடைகளில் அலங்கரித்தபோது தமிழகம் எங்கும் சீமானுக்கு மிகப்பெரிய வரவேற்பும் ஒரு ஈழவிடுதலை போராளிக்கான அங்கீகாரமும் கிடைத்து. மிகப்பெரிய மரியாதையையும் நாம்தமிழர் கட்சி பெற்றுக்கொண்டது.

நாளடைவில் நாம்தமிழர் இயக்கம் அரசியற்கட்சியாக மாற்றப்பட்டு வாக்கு அரசியல், முதலமைச்சர் நாற்காலி என்ற எதிர்பார்ப்புக்கள் என்று எப்போ பேசத் தொடங்கியதோ அன்றே தமிழ்நாட்டின் பாரம்பரிய அரசியற் கட்சிகளின் கொள்கையை சீமானும் நாம்தமிழர் இயக்கமும் பின்பற்றத்தொடங்கிவிட்டனர் என்ற ஐயம் கலந்த சோர்வுடன் ஒரு தொய்வும் பின்தொடர்ந்து வந்தது.
கட்சிக்குள் இடம்பெற்ற பதவியை பிடிப்பதற்கான கொள்கை மாற்றத்தால் சிலவிடயங்களில் சமரசம் செய்யவேண்டிய கட்டாயங்களும் விட்டுக்கொடுப்புக்களும் வெளியில் இருப்பவர்கள் அவதானிக்கமாட்டார்கள் என்று சீமான் நினைத்தாலும் பார்வையாளர்கள் மத்தியில் நாம்தமிழர் கட்சியின் நடவடிக்கைகள் சமிபகாலமாக தொடர்ந்து உணரப்பட்டே வந்தன.
தமிழக அரசியலில் ஒரு வித்தியாசமான போக்கை பின்பற்றிவந்த சீமான் தேசியத்தலைவரின் உறுதியான கொள்கையை விட்டு நழுவி மெல்ல மெல்ல திராவிடகட்சிகளின் கொள்கையை பின்பற்றத்தொடங்கினார். அப்போகூட சீமானை ஒரு சராசரி அரசியல்வாதியாக உருவகப்படுத்த அதிகமான ஊடகங்கள் விரும்பவில்லை.
2010, ம் ஆண்டு ஈழ ஆதரவு இயக்கமாக தொடங்கப்பட்ட நாம்தமிழர் இயக்கம் 2014 ஒகஸ்டில் நான்கு ஆண்டுகளை பூர்த்திசெய்து ஈழத்தமிழர்கள் மத்தியில் மிகப்பெரிய சந்தேகத்துக்குரிய கட்சியாக கேள்விக்குறிக்குள்ளாகியிருக்கிறது.
ஆனாலும் தமிழ்நாட்டில் அக்கட்சி உடனடியாக காணாமல்போய்விடும் என்று எவரும் சொல்லிவிட முடியாது ஏனெனில் ஈழ ஆதரவுப்போக்கை ஆரம்பத்தில் கடைப்பிடித்து அரசியல் செய்துவந்த கருணாநிதியின் திமுக, ராமதாஸின் பாமக, திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் இன்று சீமான் நியாயப்படுத்தும் அதேபோன்ற நியாயப்படுத்தல்களையே கொள்கையாக்கி அரசியல் செய்து வருகின்றன எனவே சீமானின் நாம்தமிழர் கட்சியும் இவர்களுடன் கூட்டுச்சேர்ந்து சராசரி அரசியலில் ஈடுபட்டு கரையேறக்கூடும். ஆனால் முன்னர் உள்ளதுபோன்று மக்களின் உணர்வுமயமான ஆதரவும் மதிப்பு மரியாதையும் தொடர்ந்து சீமானுக்கு இருக்கும் என்பது சந்தேகமே.
இப்போ நாம்தமிழர் கட்சி தொன்மையான திராவிடக் கட்சிகள்போன்று தமிழ்நாட்டுக்கான அரசியற் கட்சிகளின் பண்பாட்டு குணாம்ஷங்களை பகிரங்கமாக வெளிப்படுத்தி அரசியல் செய்யத்தொடங்கியிருக்கிறது. காலப்போக்கில் கருணாநிதி ஜெயலலிதா திருமா ராமதாஸ் ஆகியோரது வரிசையில் சீமானும் இணைந்து கொள்ளுவார் என்பதில் எவரும் ஐயப்படத்தேவையில்லை.
ஆனாலும் சீமான் தான் கொண்ட ஆரம்ப கொள்கையில் இருந்து மாறிவிடவில்லை என்று காட்டிக்கொள்ளுவதற்காக மிகப்பிரயத்தனப்படுவதாகவே தெரிகிறது, இருந்தும் சீமானின் நியாயப்படுத்தல்களில் ஒன்றிரண்டு ஏற்றுக்கொள்ளக்கூடியவையே. அந்த ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயங்களை வைத்து அனைத்து தவறுகளையும் நியாயப்படுத்த முனைவது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
நேற்று மாலை RED PIX தமிழ் நியூஸ் ஊடகத்தின்மூலம் தன்னிலை விளக்கம் ஒன்றை நேர்காணல்போல தயாரித்து சீமான் வெளியிட்டுள்ளார். அந்த நேர்காணலில் சீமான் தன்னை நியாயப்படுத்துவதை விடவும் பாரிவேந்தர் என்கிற பச்சைமுத்துவையும், லைக்காவின் உரிமையாளர்களில் ஒருவரான சுபாஸ்கரனையும், ராஜபக்‌ஷவையும் நியாயப்படுத்துவதிலேயே அதிக அக்கறை செலுத்தினார்.
லைக்கா மொபைல் சுபாஸ்கரனுக்கு சினிமா எடுத்துத்தான் வாழவேண்டுமென்ற அளவுக்கு அவர் இல்லை என்று மிகப்பெரிய நற்சன்றையும் நேர்காணலின்போது சுபாஸ்கரனுக்கு சீமான் வழங்கியிருந்தார்.
பாரிவேந்தர் பச்சைமுத்து ஒன்றிரண்டு வறிய மாணவர்களுக்கு இலவசகல்வி அளிப்பது உண்மைதான், மறுப்பதற்கில்லை அதற்காக நாற்பதுவருடகால போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தும் விதமாக வரலாற்றை திரித்து ஆவணப்படுத்தி விடுதலைப்போராட்டத்தையும் தேசியத்தலைவரின் கொள்கையையும் எழுந்தமானத்தில் சித்தரித்து சேறடிக்கும் “புலிப்பார்வை” என்ற திரைப்படத்தை எவராலும் அனுமதிக்க முடியாது. அப்படித்தான் இல்லாமல் அந்த திரைப்படம் தடுக்க முடியாமல் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஆட்சியாளர்களின் உதவியுடன் வெளியிடப்பட்டாலும் அந்த திரைப்படத்துக்கான முழு எதிப்பை / புறக்கணிப்பை பதிவுசெய்யவேண்டிய வரலாற்று கடமை அனைவருக்கும் உண்டு.
அந்த யதார்த்தத்தை உணர்ந்துகொண்டதால்த்தான் இன்றைக்கு ஐம்பதுக்கு மேற்ப்பட்ட தமிழக பொது அமைப்புக்கள் புலிப்பாரவைக்கு எதிராக போராட களத்தில் இறங்கியிருக்கின்றன.
ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து விடுதலையையை எதிர்நோக்கி போராடும் அனுபவம் வாய்ந்த ஒரு தலைவன் எதிரே காணப்படும் தடையை அல்லது துரோக செயற்பாட்டை நேரடியாக (இப்படியான ஒரு) களத்தில் சந்திக்கும்போது கொள்கையை விட்டு விலகாமல் முகங்கொடுத்து எதிர்த்து நிற்பதுதான் உலகத்தில் தோன்றிய விடுதலை போராட்ட மரபாளிகளின் அடிப்படை தத்துவமாக இருந்து வருகிறது. இங்கு மக்கள் உணர்வுகளை புறந்தள்ளி தலைவனும் துரோகிகளும் குளிர்சாதன அறைகளில் ஒன்றுகூடி முகத்துக்கஞ்சி திருத்தங்கள் சமரசம் விட்டுக்கொடுப்பு போன்ற பொறிகளில் சிக்கிவிட்டால் போராட்டமே அழிந்துபோகும் சூழல் உருவாகிவிடும்,
தலைவனின் உறுதியும் நேர்மையும் மட்டுமே இப்படிப்பட்ட போராடங்களில் தொண்டர்களினதும் மக்களினதும் மூலதனமாக கணிக்கப்படுவதுண்டு. தலைவனின் உறுதியற்ற தன்மை தொண்டர்களையும் வெகுஜனத்தையும் இழக்கவேண்டிய மிகப்பெரிய இக்கட்டில் கொண்டுசென்று சேர்க்கும் என்பதை அனுபவசாலிகள் தவிர சீமான் போன்ற சாதாரனமானவர்களால் உணரமுடியாது.
தலைவர் பிரபாகரன் அவர்கள் சீமானிடம் போராட்டம் பற்றிய திரைப்படங்களை எடுத்து விடுதலையை வென்றுதரும்படி கேட்டதாக சீமான் ஒரு நியாயப்படுத்தல் மேடையில் பேசியிருந்தார், அதற்கு சரியான படங்களை பச்சமுத்துவை வைத்து புலிப்பார்வையும், லைக்காவின் முதலீட்டில் விஜயை வைத்து கத்தியும் எடுக்கப்பட்டிருக்கிறது.
தலைவர் பிரபாகரன் சினிமாமூலம் விடுதலையை வென்றுவிடலாம் என்று நம்பியிருந்தால் துப்பாக்கி தூக்கி போராடிய நாற்பது வருடங்களில் துப்பாக்கிகளை தூக்கி வீசிவிட்டு ஒரு 400 சினிமாப்படங்களை எடுத்து விடுதலையை வென்றிருக்கலாம் துரதிர்ஷ்டமாக அது அடக்காமல் போய்விட்டது.
லைக்கா பற்றிய பின்னணி பற்றி எவரும் முன்கூட்டி தெரிவிக்காததால் 80 சதவீதம் எடுக்கப்பட்ட கத்தி திரைப்படம் தம்பி விஜய்க்காகவும் தம்பி முருகதாஸுக்காகவும் லைக்காவின் சொத்தான கத்தி திரைப்படத்தை தடைசெய்ய முடியாது என்றும் , எந்த கலந்துரையாடல் மற்றும் சம்பந்தப்பட்ட சமூகத்தின் விருப்பு வெறுப்பு அவர்களது பண்பாடு கலாச்சாரம் போன்றவற்றை அறியாமல் பணமும் அடியாட்களும் அரசியல்ச்செல்வாக்கும் இருக்கின்றதென்ற மமதையில் பாலச்சந்திரனை பயங்கரவாதியாக சித்தரித்து எடுக்கப்பட்ட புலிப்பார்வை திரைப்படம் பச்சைமுத்து என்ற ஒரு தனிமனிதருக்காக திருத்தம் செய்து வெளியிடப்படும் என்று சீமான் தனது நேர்காணலில் சர்வ சாதாரணமாக சொல்லி முடித்துவிட்டார்.
ஒருநாள் தமிழீழப்பயணத்தை பாதுகாப்புடன் மேற்கொண்டு தேசியத்தலைவருடன் ஒரு படம் எடுத்து விடுதலைப்புலிகளின் ஒருசில பாசறைகளை பார்த்து திரும்பிய சீமான் விடுதலைப்போராட்டத்தைப்பற்றி தம்பி பாலச்சந்திரன் பற்றி இவ்வளவு சூழுரைக்கிறார் என்றால் அந்த மண்ணில் பிறந்து ஒவ்வொரு அடி மண்ணையும் காலால் அளந்து நடந்து, ஒவ்வொரு போராளியுடனும் ஒவ்வொரு பொழுதை கழித்து, பல இலட்சம் குண்டுகளை எதிர்கொண்டு, குடிநீரின்றி உணவின்றி ஆயிரம் இடப்பெயர்வுகளை சந்தித்து, பதுங்கு குழியில் பகலிரவாய் கிடந்து, இராணுவ சிறையில் சித்திரவதைப் பட்டு கை கால் இழந்து முள்ளிவாய்க்காலை முற்றாக தரிசித்து, தாய் தந்தை உடன்பிறப்புக்கள் மனைவி கணவன் பிள்ளைகள் என்று எல்லாவற்றையும் இழந்து உயிர் ஒன்றுதான் மிச்சம் என்று நிர்க்கதியாக நிற்கும் ஒருவரின் குமுறல் எப்படியிருக்கும் என்பதை சீமான் மானசீகமாக புரிந்துகொள்ளவேண்டும் என்றே இந்தப் பதிவு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றது,
இன்னுமொரு விடயத்தை இங்கு வெளிப்படுத்தவேண்டிய சமூகப்பொறுப்பு இருப்பதால் அவைகளும் இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.
கேபி எனப்படும் பத்மநாதன் என்பவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த ஒருவர் என்பது அனைவரும் அறிவர் அவர் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் மிக நெருக்கமான நண்பராகவும் இருந்தவர். இன்று ஶ்ரீலங்கா அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு ராஜபக்‌ஷவின் சகோதரர் கோத்தபாயவின் ஒற்றராக செயற்பட்டு வருகிறார்.
பத்மநாதன் தலைவர் பிரபாகரனின் நண்பராக இருந்தவர் என்பதால் அவரது இன்றைய செயற்பாடுகளை மக்கள் வரவேற்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை , லைக்காவுக்கும் பத்மநாதனுக்கும் தொடர்பு உண்டு. அதேபோல எவராக இருந்தாலும் அது சீமானாக இருந்தாலும் கொள்கைரீதியாக அவர்கள் புறக்கணிக்கப்படுவர் என்பதே யதார்த்தம்.
சர்வதேச அரசியல் இலாபத்திற்காக இன்று கேபி கிளிநொச்சியில் அரசாங்க கட்டுப்பாட்டிலுள்ள ஒரு அறக்கட்டளையின் தலைவராக சிறீலங்கா ஜனாதிபதி ராஜபக்‌ஷ்வினால் நியமிக்கப்பட்டு செயற்பட்டு வருகிறார்.
கேபியை எந்த பத்திரிகையோ ஊடகமோ நேரடியாக அணுகி பேட்டி எடுத்துவிட முடியாது. ராஜபக்‌ஷவின் அரசாங்கத்தில் மத்திய அமைச்சராக பதவி வகிக்கும் டக்ளஸ் தேவானந்தா இலங்கையில் “தினமுரசு” என்கின்ற பத்திரிகையை நடத்திவருகிறார் அப்பத்திரிகை அமெரிக்கா கனடா, ஐரோப்பிய நாடுகள் அனைத்துக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது, அப்பேற்பட்ட அமைச்சரின் பத்திரிகை கேபியை நேர்காணல் ஒன்று நடத்த விரும்பியபோது கோத்தபாயவிடம் அனுமதி பெற்று அவர் தொலைபேசிமூலம் அனுமதி அளித்ததன் பின்னரே நேர்காணலுக்கு சமூகமளிக்கமுடியும் என்று கேபி தரப்பால் சொல்லப்பட்டிருக்கிறது’
அதே கேபியை தமிழகத்திலுள்ள பாரிவேந்தர் பச்சைமுத்துவின் “புதியதலைமுறை” தொலைக்காட்சி சென்ற ஆண்டு நேரில்ச்சென்று சர்வ சாதாரணமாக நேர்காணல் ஒன்றை நடத்தி ஒளிபரப்பியது.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு பாலச்சந்திரனுக்கு இரங்கல் கவிதை எழுதி சினிமாபடம் எடுக்கும் கொள்கை கொண்ட பச்சைமுத்துவின் தொலைக்காட்சி கிளிநொச்சிக்கு சென்று நேர்காணல் நடத்த ஶ்ரீலங்கா இராணுவப்புலனாய்வாளர்கள் சாதாரணமாக விட்டு விடுவார்களா? என்பதையும் சீமான் விளங்கப்படுத்தவேண்டும்.
அதுமட்டுமன்றி பச்சமுத்துவின் எம் ஆர் எம் பல்கலைக்கழகம் ஶ்ரீலங்கா அரசாங்கத்தின் அனுமதியுடன் இலங்கையில் மிகப்பெரிய கலைக்கல்லூரியை நடத்தி வருகிறது. இறுதியாக கிடைத்த செய்திகளின்படி டக்ளஸ்தேவானந்தாவின் ஆதரவுடன் எம் ஆர் எம் கல்விக்குழுமம் யாழ்ப்பாணத்தில் ஒரு கல்லூரியையும் கேபி எனப்படும் பத்மநாதனின் ஆதரவுடன் கிளிநொச்சியில் ஒரு கல்லூரியையும் விரைவில் நிறுவ இருப்பதாக நம்பகமான செய்திலள் தெரிவிக்கின்றன.
பாரிவேந்தர் எனப்படும் பச்சைமுத்து விடுதலைபோராட்டத்துக்கு ஆதரவு தரவேண்டாம். அவர் தமிழர்களின் ஆதரவாளரா அல்லது ராஜபக்‌ஷ்வின் நண்பரா என்பதையும் சீமான் அறிந்துகொண்டால் அடுத்த மேடையில் பேசுவதற்கு கருப்பொருளாக இருக்கும்.

ஈழதேசம் செய்திகளுக்காக.
கனகதரன்.

Friday, July 18, 2014

மலேசியாவில் ஈழத்து அகதிகள் வாழமுடியாத நெருக்கடி. ஐநா அகதிகளுக்கான ஆணையத்தின் பொறுப்பற்ற செயலால் திண்டாடும் ஈழத் தமிழர்கள்.

ஈழத்தமிழ் அகதிகள் பாதுகாப்பாக வாழமுடியாத முதற்தரமான நாடாக இந்தியா இருந்து வந்தது.தற்போது அகதிகளுக்கு மிகுந்த அச்சுறுத்தல் கொடுத்து  அகதிகளின் உயிரோடும் வாழ்க்கையோடும் விளையாடும் நாடுகளாக அவுஸ்திரேலியா மற்றும் மலேசியா மாற்றம் பெற்றிருக்கிறது.
மலேசியா மற்றும் அவுஸ்திரேலியா அரசுகள் மனிதாபிமானம் மற்றும் மனித உரிமை,  சர்வதேச அகதிகளுக்கான சட்டம் எதையும் பொருட்படுதாமல் ஈழத்தமிழ் அகதிகளை கைது செய்து முறைப்படுத்ப்பட்ட நீதி விசாரணை எதையும் நெறிப்படுத்தாமல் நேரடியாக விமானமூலம் நாடுகடத்தி ஶ்ரீலங்கா இராணுவப் புலனாய்வு துறையினரிடம் கையளித்து வருகின்றன.
தவிர்க்க முடியாத பல்வேறு காரணங்களினால் பெரும்பான்மையான ஈழத்தமிழ் அகதிகளுக்கு ஶ்ரீலங்காவில் உயிர்வாழுவதற்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உலகம் அறிந்த விடயம் என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றோம். எவராவது குற்றவாளியாக இருப்பின் அவர் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவேண்டியவர் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.
பெரும்பான்மையான ஈழத் தமிழர்கள் தொடர்ச்சியாக நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறி பல்வேறு நாடுகளில் அடைக்கலம் கோரி வருகின்றனர்.  இது நீண்டகாலமாக இருந்து வந்தாலும் விடுதலைபுலிகளின் தோல்விக்குப்பின் அகதிகளின் விகிதாசாரம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. போர் முடிவுக்கு வந்தபின்னர் தமிழர்களுக்கான பாதுகாப்பு ஶ்ரீலங்காவில் உறுதிப்படுத்தப்படவில்லை.  ஶ்ரீலங்கா அரசாங்கம் ஒருதலைப்பட்ஷமாக ஆயிரம் காரணங்களை காட்டினாலும் பாதுகாப்பு நிலையில் யதார்த்தம் எதிர் மாறாகவே இருந்து வருகிறது.
போரின் கொடூரத்தில் சிக்கி சின்னாபின்னம் அடைந்தபோதும் கடவுளின் பெயரால் உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள், ஓரளவு பொருளாதார வசதி படைத்தவர்கள், மற்றும் உறவினர்களின் உதவி கிடைக்கக்கூடியவர்கள்  ஐரோப்பிய மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு சென்று தஞ்சம்கோரி வாழ்ந்து வருகின்றனர். குறிப்பிட்ட  அந்த நாடுகள் மனித உரிமையை மதித்து தஞ்சம்கோரி வருபவர்களை உள்வாங்கி வாழ்வாதாரமும் உயிருக்கான பாதுகாப்பும் வழங்கி வருகிறது.
சூழ்நிலை காரணமாக ஏதோ ஒரு வகையில் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகிக்கப்படுபவர்கள் மாற்றுக்கருத்தை கொண்ட புத்திஜீவிகள்,  நியாயஸ்தர்கள் என்று பலர் 2009 ன் பின் ஶ்ரீலங்காவில் வாழ முடியாத துர்ப்பாக்கியநிலை தோற்றுவிக்கப்பட்டது.
யுத்தம் நடந்த இறுதி நாட்களில் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் என்ற சந்தேகிக்கப்படுபவர்கள், மற்றும் போராட்டத்துடன் சம்பந்தப்படாத இளம் வயது ஆண் பெண்கள் பலர் வெள்ளைக்கொடி தாங்கி ஶ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்திருந்தபோதும் அவர்களை சர்வதேச சட்ட திட்டத்துக்கமைய ஶ்ரீலங்கா அரசு சட்ட விசாரணைக்குட்படுத்தாமல் கண்ட கண்ட இடங்களில் வெட்டியும் சுட்டுக் கொன்றும் உயிருடன் தீயில் இட்டு கொழுத்தியும் தெருவில் வீசியது,  இளம் பெண்களை கண்மூன்னே கற்பழித்து சித்திரவதை செய்து கொன்று புதைக்கப்பட்ட  ஒளிப்பதிவுகளிம் புகைப்படங்களும் வெளிவந்து பயங்கரமான அச்சத்தை ஈழத்தமிழர்களுக்கு உண்டுபண்ணியிருந்தது.
அவ்வளவு நெருக்கடியான பயங்கரங்களை கண்ணெதிரில் கண்ட ஈழத்தமிழர்கள் எந்த ஒரு நம்பிக்கையின் அடிப்படையிலும் நாட்டில் தங்கி இருந்து சிந்திப்பதற்கான அவகாசத்தை சூழ்நிலை உண்டுபண்ணியிருக்கவில்லை. உயிர் தப்பினால் போதும் என்ற ஒரே குறி தவிர வேறு எதையும் நியாயப்படுத்தமுடியாத கையறு நிலமையே ஈழத்தமிழர்கள் முன் இன்றைக்கும் மலைபோல் குவிந்திருக்கிறது.
சிந்திப்பதற்கு அவகாசம் இல்லாத அவர்கள் கடல் மார்க்கமாக இந்தியாவுக்கும்,  கனடா,  அவுஸ்திரேலியாவுக்கும்,  தாய்லாந்து இந்தோனேசியா, மலேசியாவுக்கும் இடம்பெயர்ந்தனர். கடற் பயணங்களின்போது  ஆழிக்கடல் நீரில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை பல நூறை தாண்டியதாக செய்திகளும் புள்ளிவிபரங்களும் பதிவாகி இருக்கின்றன.
இந்தநிலையில் அவர்கள் உயிரை பாதுகாக்க ஶ்ரீலங்காவிலிருந்து வெளியேறி இடம்பெயர்வது தவிர வேறு எந்தவிதமான மாற்றுத் தெரிவும் காணப்படவில்லை.  மலேசியாவை ஈழத்தமிழர்கள் தெரிவு செய்ததற்கு ஐநா சபையின்  “அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின்”  செயற்பாடே United Nations High Commissioner for Refugees,  முக்கியமான காரணியாக சொல்லப்படுகிறது.
ஐநாவின் அகதிகளுக்கான பிரிவு சில வருடங்களாக மலேசியாவுக்குள் வரும் அகதிகளை உள்வாங்கி பதிவுசெய்து அடையாள அட்டைகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் பல்வேறு நாடுகளைச்சேர்ந்த அகதிகள் மலேசியா கோலாலம்பூரில் அமைந்திருக்கும்  United Nations High Commissioner for Refugees  அலுவலகத்தில் நம்பிக்கையுடன் தம்மை பதிவு செய்துகொள்ளுகின்றனர்.
பல வெளிநாட்டவர்கள் மற்றும் உள்நாட்டவர்கள் மற்றும் பலநாடுகளின் மொழிபெயர்ப்பாளர்கள் என்று பல நூற்றுக்கணக்கான பணியாளர்கள் வேலைசெய்யும் மிகப்பிருமாண்டமான குளிரூட்டப்பட்ட அலுவலக வளாகமும் வாகனங்களும் ஐநாவின் அங்கீகாரத்துடன் தலைநகர் கோலாலம்பூர் என்ற இடத்தில் பகிரங்கமாக செயற்பட்டு வருகிறது.  தினமும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள் தம்மை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கத்துடன்  குறிப்பிட்ட அலுவலகத்துக்கு வந்து போய்க்கொண்டிருக்கின்றனர். அதிகாலை ஐந்து மணியிலிருந்து இரவு ஏழு மணிவரை ஈழத் தமிழ் அகதிகள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளின் அகதிகளின் நடமாட்டம் அங்கு நிரம்பி வழிகிறது.
UNHCR, அலுவலகத்தில் அகதியாக  பதிவுசெய்யப்பட்ட எதிலிகளுக்கு அடையாள அட்டை வழங்கியிருந்தாலும் ஆரம்ப பதிவுக்கான திகதி குறிக்கப்பட்ட உள் நுழைவு கையேடு வழங்கப்பட்டிருந்தாலும் எதையும் மலேசியப் பொலீசார் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. தெருவில் அடையாள அட்டையுள்ள அகதி ஒருவர் பொலிசாரை சந்திக்க நேர்ந்தால் அவர் உடனடியாக கைது செய்யப்படுகிறார்.  கைது செய்யப்பட்டவரின் கையில் பணமிருந்தால் பணத்தை வாங்கிக்கொண்டு பொலீசார் குறிப்பிட்ட நபரை விட்டுவிடுகின்றனர்.
உடை,  இருப்பிடம் வேலை செய்வதற்கான அனுமதி,  வயிற்றுப்பாட்டுக்கான உதவி, சட்ட உதவி எதுவும் மலேசியாவிலுள்ள UNHCR, அமைப்பினால்  தமிழ் அகதிகளுக்கு வழங்கப்படவில்லை.  விசாரணை முடிந்து அகதியாக அங்கீகரிக்கப்பட்டு அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் காய்ச்சல் தலைவலி போன்ற சிறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் அரச மருத்துவ மனை வெளி நோயாளர் பிரிவில் மருந்து எடுப்பதற்கு வெளிநாட்டு உல்லாசப்பயணிகளுக்கு அறவிடும் தொகையிலிருந்து அரைவாசி பணம் கட்டணமாக குறைக்கப்பட்டிருக்கிறது. பெருத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடவுளின் குழந்தைகளக கைவிடப்பட்டவர்களாக கணிக்கப்படுகிறது. உள்ளூர் நோயளர்களின் கட்டணத்திலிருந்து வெளிநாட்டவர்களுக்கு பதினைந்து மடங்கு அதிக கட்டணம் மலேசியா மருத்துவமனைகளில் வசூலிக்கப்படுகிறது.
ஐநா அலுவலக பணியாளர்கள் மற்றும் மக்கள் தொடர்பாளர்கள் வானத்திலிருந்து வந்திறங்கிய தேவர்கள்போல குளிர்சாதன அறைகளில் பட்டுக்குஞ்சங்களாக பவனிவருகின்றனர்.
அகதி ஒருவர் பணமில்லாமல் வெறுங் கையுடன் மலேசியப் பொலீசாரால் பிடிபட்டால் ஐநா அகதிகளுக்கான ஆணையம் வழங்கியிருக்கும் அடையாள அட்டை நாக்கு வழிக்க மட்டுமே பயன்படுத்தும் அளவுக்கு அந்த அட்டை மலேசியப் பொலீசாரால் மதிக்கப்படுகிறது.
அடையாள அட்டையில் ஐநாவின் அலுவலர்களை தொடர்பு கொள்ளும் தொலைபேசி இலக்கம் இருந்து ஐநா அலுவலர்களுடன்  சம்பிரதாயத்துக்கு தொடர்பு கொண்டாலும் ஐநா அதிகாரிகளை தொடர்பு கொள்ளுவது இலகுவானதாக இல்லை.  காலம்தான் அகதி ஒருவரின் வாழ்வை தீர்மானிக்கிறது,  கைது செய்யப்பட்டவர் வெளியே வரமுடியாத சிக்கல் மலேசிய சட்டத்தில் இருப்பதாக  மலேசிய பொலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.  மலேசிய இமிக்கிரேஷன் பொலிசாரிடம் ஒரு அகதி சிக்குவாராக இருந்தால் ஐநாவினால் வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் வாக்குமூலம் எதுவும் செல்லாக்காசுக்கு சமமாக கணிக்கப்பட்டு தடுப்புக்காவலுக்கு கொண்டு செல்லப்பட்டு வருடக்கணக்கில் தண்டனை வழங்கப்படுகிறது.   ஐநாவின் செல்வாக்கு அங்கு பல்லிளிப்பதாகவே உணர முடிகிறது கைது செய்யப்பட்ட பலர் பல மாதங்கள் சிறைத்தண்டனைக்குப்பிறகு வெளியே வந்திருக்கின்றனர். தற்போது அந்த நிலையும் தகற்க்கப்பட்டு  கைது செய்யப்பட்டவர் தாமதமின்றி நாடு கடத்தப்படும் அபாயமே மலேசியாவில் மேலோங்கி நிற்கிறது.
சமீபத்தில் வெளிவரும் செய்திகளின்படி மலேசியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் “அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்” “UNHCR” செயலகத்தில் பதிவு செய்து கொண்டவர்களும், ஐநா அலுவலகத்தால் விசாரிக்கப்பட்டு ஐநா அடையாள அட்டை கிடைக்கப்பட்டவர்களும் என பலர் மலேசிய பொலீசாரின் சுற்றுவளைப்பால் கைது செய்யப்பட்டு ஶ்ரீலங்காவுக்கு நாடுகடத்தப்பட்டு வருகின்றனர், பலர் பொலீசாரின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. அதுபற்றி ஐநா அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் கரிசனை கொண்டதாக தெரியவில்லை.
மலேசியாவில்  ஈழத் தமிழர்கள் அகதிகளாக சுமார் ஏழாயிரத்திலிருந்து எண்ணாயிரம் பேர்வரை வசித்துவருவதாக கணக்கிடப்படுகிறது, சுமார் ஆயிரத்து ஐந்நூறிலிருந்து இரண்டாயிரம் வரையிலான ஈழத்தமிழ் அகதிகள் ஐநா அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டையை கொண்டுள்ளனர், இரண்டாயிரத்து ஐந்நூறிலிருந்து மூவாயிரம் வரையிலான அகதிகள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு முற்றுப்பெறாத தொடர் விசாரணை நிலையில் இருந்துவருகின்றனர். அவர்களுக்கு படத்துடன் கூடிய ஒரு தற்காலிக பத்திரம் வழங்கப்படுகிறது. இன்னுமொரு மூவாயிரத்திலிருந்து நான்காயிரம் வரையிலானவர்கள் ஆரம்ப பதிவை செய்துவிட்டு உள்நுழைவதற்கான காலம் பதிவு செய்யப்பட்ட துண்டுச்சீட்டுடன் விசாரணைக்காக காத்திருக்கின்றனர்.
கடைசிவரியில் குறிப்பிடப்பட்டிருக்கும் பதிவு செய்துவிட்டு விசாரணைக்காக காத்திருக்கும் மூவாயிரத்திலிருந்து நான்காயிரம் வரையிலானவர்கள் தினமும் மிகவும் ஆபத்தான நிலையினை சந்திப்பவர்கள் எனக்கொள்ளமுடியும். ஏனென்றால் அவர்கள் அனைவருக்கும் இரண்டு வருடகாலம் தள்ளிப்போடப்பட்ட விசாரணைக்கான திகதி இடப்பட்ட வெள்ளை நிற துண்டுச் சீட்டு ஒன்று மட்டும் வழங்கப்படுகிறது. பெயர் இரண்டு வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட விசாரணைக்கான திகதி மட்டும் அவ்வட்டையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஏன் இப்படி ஒரு சின்னத்தனமான காரியத்தை ஐநா அகதிகளுக்கான முகவர் பிரிவு செய்து அகதிகளை மிகவும் மலிவாக எடை போடுகிறது என்ற ஆதங்க இருந்தாலும் தட்டிக்கேட்பதற்கு எவரும் இல்லை. ஐரோப்பிய நாடுகளில் உள்ளதுபோன்ற சட்ட வெளியும் அகதிகளுக்கான மனித உரிமையும்  மலேசியாவில் காணப்படவில்லை அதை நோக்கி செல்வதற்கான பொருளாதாரமும் அகதிகளிடமில்லை. பலமான தொண்டரமைப்புக்களின் பின்னணியும் இல்லை.
மனிதன் என்ற அந்தஸ்து முற்றாக நிராகரிக்கப்பட்டு மனித உரிமை அனைத்தும் மீறப்பட்டு நிற்கதியாக நடைப்பிணமாக ஈழத்து தமிழ் அகதிகள் மலேசியாவில் வாழ்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் விடுதலைப்புலிகள் என்று சந்தேகிக்கப்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டு எந்த ஒரு நீதி விசாரணைக்கும் உட்படுத்தாமல் இரவோடு இரவாக அந்த நால்வரும் ஶ்ரீலங்காவுக்கு நாடு கடத்தப்பட்டனர். அதன்பிற்பாடு அறுபதுக்கு மேற்பட்ட அகதிகள் மலேசியப்போலீசாரால் கைது செய்யப்பட்டு இரகசியமாக நடுகடத்தி ஶ்ரீலங்கா அரசிடம் அகதிகளை கையளித்ததாக செய்திகள் வெளிவந்தன. அதுபற்றி ஐநா அகதிகள் ஆணையத்துக்கு தெரிவிக்கக்கூட கைது செய்யப்பட்ட அகதிகளுக்கு உறவினர்கள் இருக்கவில்லை ஒருசிலரது நண்பர்கள் ஐநா அகதிகள் ஆணையத்துக்கு அறிவித்தபோதும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவில்லை, நாடு கடத்தப்பட்ட அறுபது பேரின் நிலை என்ன என்பதும் யாருக்கும் தெரியாமல் மறக்கப்பட்டுவிட்டது.  அடுத்து  சில வாரங்களின் முன் மூன்றுபேர் சுற்றிவளைப்பு என்ற பேரில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவதற்கு தாயார் நிலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தையும் இங்கு சுட்டிக்காட்டவேண்டிய தேவை இருக்கிறது. சுமார் இரண்டு முன்று வருடங்களுக்கு முன் ஒருவர் அகதியாக ஐநா அகதிகளுக்கான ஆணையத்தில் பதிவு செய்து அகதிக்கான அங்கீகாரம் பெற்ற ஐநா அடையாள அட்டையையும் பெற்றிருந்தார்,  அதன்பின்னர் குறிப்பிட்ட நபரின் மனைவி ஶ்ரீலங்காவிலிருந்து வந்து கணவருடன் இணைந்து கொண்டார்,  புதிதாக வந்து சேர்ந்த மனைவியை கணவர் அழைத்துக்கொண்டு ஐநா அகதிகளுக்கான ஆனையத்துக்கு பதிவு செய்ய சென்றபோது அவருக்கு எந்தப் பதிவும் செய்ய அனுமதிக்கப்படவில்லை,  கணவரின் அடையாள அட்டை குறிப்பிட்ட  காலத்தின் பின் காலாவதியான பின்னர் புதுப்பிக்க வரும்போது மனைவியையும் அழைத்துவந்து பதிவு செய்யும்படி கூறி ஐநா அலுவலக பணியாளர்கள் அந்த தம்பதியரை விரட்டிவிட்டனர்,  கணவருக்கான அடையாள அட்டை காலாவதியாக ஒரு வருடங்கள் இருந்தன வேறு வழியின்றி எந்தப் பதிவும் இல்லாமல் கணவர் மனைவியை தலைமறைவாக வைத்திருக்கவேண்டியதாயிற்று, அந்த காலகட்டத்தில் மனைவி கருவுற்று குழந்தை பேறுக்காக கோலாலம்பூர் மருத்துவ மனைக்கு சென்றிருக்கிறார் குழந்தையும் கிடைத்திருக்கிறது மறுநாள் மருத்துவ மனையில் அகதிகளை பிடிப்பதற்காக செயற்படும் இமிக்கிரேஷன் பொலீசார் தாயையும் குழந்தையையும் கைது செய்து நாடு கடத்துவதற்காக தடுப்புக்காவைல் வைத்திருக்கின்றனர்.
வயிற்றுப்பசி,   வறுமை,  வீட்டு வாடகை,  வேலையில்லாத்திண்டாட்டம் அனைத்தும் அகதிகளை தன்னகப்படுத்தி வைத்திருக்கிறது இருந்தும் குறைந்த ஊதியத்துக்கு திருட்டுத்தனமாக வேலைசெய்து பிழைப்பு நடத்தவேண்டிய திரிசங்கு நிலையில் அகதிகள் உள்ளதால் அகதிகள் வேலைதேடி பல இடங்களுக்கும் அலைந்து குறைவான ஊதியத்துக்கு ஏதாவது வேலை செய்து வருகின்றனர் ஆனால் அகதிகளை பிடிப்பதற்காக தெருக்களில் தடை அமைத்து சோதனை செய்யும் பொலீசாரிடம் மாட்டிக்கொள்ளும் அகதிகள் இருக்கும் பணத்தை பொலிசாருக்கு கொடுத்து வெறுங்கையுடன் மீண்டுவரவேண்டிய சூழலை ஐநா அகதிகளுக்கான ஆணையம்  உண்டாக்கி வைத்திருக்கிறது.
அவை மட்டுமல்லாமல் மலேசியாவின் இமிக்கிரேஷன் பிரிவு பொலீசார் மலேசிய மருத்துவமனை வளாகங்களில் மறைவான ஓரிடத்தில் ஒரு அலுவலகத்தை திறந்து வைத்திருக்கின்றனர் நோய் வாய்ப்பட்டு மருத்துவ மனைக்கு செல்லும்  அகதி நோயாளர்கள் மருந்து எடுப்பதற்காக பதிவு செய்யப்படும் தகவல்களை ஆஸ்ப்பத்திரி நிர்வாகம் உடனடியாக நோயாளிக்கு தெரியாமல் இமிக்கிரேஷன் பொலிசாருக்கு நகர்த்தப்பட்டு உடனடியாக நோயாளி பொலீசாரால் கைது செய்யப்படுகின்றனர். இதனால் சமீப காலமாக அகதிகள் ஆஸ்ப்பத்திரிப்பக்கம் செல்வதை தவிர்த்து வருகின்றனர். இப்பேர்ப்பட்ட மனித உரிமை மீறல்களை எப்படி ஐநா அகதிகளுக்கான ஆணைப் பிரிவு ஏற்றுக்கொண்டு வேலை சேய்கிறது என்பது வியப்பாக இருந்தாலும் நடைமுறை அப்படித்தான் இருந்து வருகிறது.
இறுதியாக மலேசிய பொலீஸ் தலைமை பொறுப்பாளர் பிரகடனப்படுத்தியிருக்கும் அறிவித்தலின்படி ஈழத்தமிழர்கள் அனைவரையும் சுற்றிவளைப்பின்மூலம் பொலீசார் சோதனை செய்யவிருப்பதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
சமீபத்தில் ஜெர்மனியிலுள்ள மலேசிய தூதரகத்து முன்றலிலும்,  பிரான்ஸிலுள்ள மலேசிய தூதரகத்து முன்றலிலும் ஈழ தமிழ் மக்கள் ஒரு அடையாள ஆர்ப்பட்டத்தை நடத்தி மலேசியாவில் வசிக்கும் அகதிகளின் கைதுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். மலேசிய தூதரகங்கள் முன் போராட்டம் நடத்துவதை விடுத்து வெளி நாடுகளிலுள்ள ஐநா அலுவலகங்களின் முன்னே போராட்டம் நடத்துவதே சரியான தீர்வாக அமையும்.
ஏனெனில் இலங்கையிலுள்ள தமிழர்கள் மலேசியாவுக்கு வேண்டி விரும்பி அகதியாக வரவில்லை, ஐநா அகதிகளுக்கான ஆணையம் அகதிகளுக்கு ஆதரவு அளிப்பதாக வெளிவந்த செய்திகளின் அடிப்படையில்த்தான் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் மலேசியாவை நோக்கி படையெடுத்து வந்திருந்தனர்,  ஐநா அகதிகளுக்கான ஆணையம் கோலாலம்பூரில் குளிர்சாதன பிரமாண்டத்துடன் அகதிகளுக்கான கடையை திறந்திருக்காவிட்டால் அகதிகள் வேறு பாதுகாப்பான நாடுகளை நோக்கி சென்றிருக்கக்கூடும்.
ஶ்ரீலங்கா இராணுவ அரசுக்கு அகதிகளை பிடித்துக் காட்டிக்கொடுக்கும் மூன்றாம்தர ஒற்றர் வேலையை  மலேசிய காவற்துறையும் ஐநா அகதிகளுக்கான ஆணையத்தின் பிரிவும் இணைந்து செய்து செயற்படுத்துவதாகவே சந்தேகங்கள்  ஈழத்தமிழ் அகதிகள் மத்தியில் வேதனையுடன் எழுப்பப்பட்டு வருகிறது.  இதற்கான விடையை காண்பதற்கு  இந்த செய்திமூலம் ஐநா அகதிகளுக்கான ஆணையத்தின் ஜெனீவாவிலுள்ள தலைமை செயலகம் நிச்சியம் ஏதாவது ஒரு மாற்றீட்டு முறையை அறிமுகப்படுத்தும் என்று அகதிகள் சார்பாக பணிவுடன் வேண்டுகின்றோம்.
ஈழதேசம் செய்திகளுக்காக
மலேசியாவிலிருந்து,
ஆர் எம் நாராயணன்.