Wednesday, November 26, 2014

தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் அகவை நாள் வாழ்த்து.


 


நீண்ட நெடு வரலாறு
நிலம் முழுதும் குருதி மழை
ஆற்பரிக்கும் கடலன்னை
அடுக்கடுக்காய் பனை வடலி
நிறைகுடமாய் பெருங்காடு
நினைவது உன் வரவுக்காய்
வழி திறந்து விழி தேட – நீ
பிறப்பெடுத்த பெருநாளை
போற்றுகின்றோம் வணங்குகின்றோம்.
காற்றடித்தால் உன் மூச்சு
கடல் அசைந்தால் உன் வரவு
காடு இரைந்தால் நீ உறக்கம்
கன மழையில் நீ பயணம்
பூடகமாய் எடுத்துரைத்தால்
பூ மரமாய் நீ சிரிப்பாய்
பொன் மகனே பெரும் பொருளே
புகழ் உனக்கு இன்று பிறந்த தினம்.
நான் என்று வாழவில்லை
நாடென்று வாழ்ந்தவனே
வீடென்று உறங்கவில்லை
வீடெங்கும் விளைந்தவனே
சோலைக் காடுகளில்- சிம்ம
சொப்பனமாய் திகழ்ந்தவனே- உலக
நாடெங்கும் உன் பெயரை
இன்று ஓங்காரம் செய்கிறது.
ஆண்டு அறுபது
அகவை நிறை நாளின்று
தோன்றிய எண்ணமெல்லாம்
சொல்ல முடியவில்லை
மீண்டும் உன் புகழை
விருத்தமிட தேவையில்லை
வீரன் என்றால் ஒருவன் நீ
விடுதலைக்கு தலைவன் நீ
தமிழுக்கு முகவரியை
தரணியிலே தந்தவன் நீ.
பாவியர்க்கு பிரளயமாய்
பண்புக்கோர் குளிர் நிலவாய்
வஞ்சகர்க்கு பேரிடியாய்
வானுயர்ந்த பெரு மலையாய்
காவியத்தில் கல் எழுத்தாய்
கண் முன்னே நின்றவனே
வாழிய நீ பல்லாண்டு
வானுள்ள வரை வாழி..
சோலையில் பூவாய் நின்றாய்
செருக்களத்தில் புலியாய் ஆனாய்
உறுதியில் உருக்கு என்றார்
உள்ளத்தில் தென்றல் போலாய்
சீருடைக்கு அளவு நீயே
திக்கெட்டும் வீரன் நீயே
ஆற்றலின் ஊற்று நீயே
ஆண்மையின் உண்மை நீயே.
வாழிய ஆண்டு நூறு
வழிபடும் உலகமெல்லாம்
காற்றது நிற்கும்போதும் -உன்
கனவுகள் தொடரும் என்பேன்
மேற்கது கிழக்காய் ஆனால்
மிகையில்லை அதுவும் என்பேன்- உன்
கூற்றது ஈழம் வெல்லும் -புலிக்
கொடி அது பரணி பாடும்
மூட்டிய போரின் கங்கில்
முடிவது ஈழம் வெல்லும்.
ஈழதேசம்- ஊர்க்குருவி.

No comments: