Thursday, February 19, 2015

மஹிந்தருக்காக ஐநாவில் வாய்தா வாங்கிய சிறிசேன.

அரசியல் ரீதியான உலக பஞ்சாயத்து பேச்சுவார்த்தைகள் தவிர்த்து, மனித குலத்தின் நெருக்குவாரங்களை வெளிக்கொண்டுவந்து தீர்வு தேடுவதற்கும் அழுத்தம் கொடுப்பதற்கும் நம்பிக்கைவாய்ந்த அமைப்புக்கள் என்று நம்பப்படுபவை சர்வதேச தொண்டர் அமைப்புக்கள். அவைகளில் பக்கச்சார்பற்ற நிலையை எடுத்து நியாயத்துக்காக குரல் கொடுக்கும் அமைப்புக்களாக International Crisis Group,amnesty international,Human Rights Watch,Global Centre for the Responsibility to Protect, ஆகியவை இருந்து வருகின்றன என்று நம்பிக்கொண்டு இருக்கிறோம்.
ஆனால் ஐநாவின் மனித உரிமை ஆணையம் எதிர்வரும் மார்ச் சமர்ப்பிக்கவேண்டிய இலங்கை அரசு தொடர்பான மனித உரிமை மற்றும் போர்க்குற்றம் சம்பந்தமான விசாரணை அறிக்கையை இலங்கை அரசு ஒருதலைப்பட்ஷமாக கேட்டுக்கொண்டவைக் கிணங்க குறிப்பிட்ட அறிக்கையை வெளிவராமல் தள்ளி வைத்து தமிழர்களுக்கு எதிரான ஒரு மனித உரிமை மீறலை செய்து அதையும் நியாயப்படுத்தியிருக்கிறது.
ஐநா சபையின் மனித உரிமை ஆணையம் 2015 மார்ச்சு அமர்வின்போது சமர்ப்பிக்க இருந்த போர் குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கையை மார்ச்சு மாதத்தில் சமர்ப்பிக்காமல் ஆறுமாதங்கள் பின் போட்டு செப்ரெம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கும்படி இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன கேட்டதற்கிணங்க அறிக்கையை செப்ரெம்பர் மாதத்தில் தாக்கல் செய்ய ஒப்புக்கொண்டு அதற்கான ஆணையை மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையாளர் Zeid Ra ad Zeid al Hussein,உத்தரவாக பிறப்பித்திருந்தார்.
‘போர்க் குற்றங்கள் குறித்து இலங்கை அரசு விசாரணை நடத்தி வருவதாலும்? அரசு புதிதாக பொறுப்பேற்று உள்ளதாலும், இன்னும் ஆறு மாதம் பொறுத்திருக்க வேண்டும்’ என ஶ்ரீலங்காவின் சிறிசேன அரசு, மனித உரிமைகள் ஆணையத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.
இலங்கையின் முக்கிய தமிழ் அரசியற் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு அதற்கு உடன்பாடு தெரிவித்ததால் அந்த பிரேரணை இலங்கை அரசின் விருப்பப்படி செப்ரெம்பருக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இன்று ஒரு (அரசியல்) ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இலங்கையில் வாழும் தேசிய தமிழினத்தின்மேல் தொடர்ந்து நடத்தப்பட்டுவரும் கட்டுக்கடங்காத அடக்குமுறையை களைந்து சுமூகமான ஒரு தெளிவு நிலையை தோற்றுவித்து அமைதியை கொண்டுவந்து மக்களை காப்பாற்றவேண்டிய பாரிய பொறுப்பில் கணிசமான பங்கு அந்த அரசுக்கு உண்டு. அந்த கருத்தில் எவருக்கும் தடுமாற்றம் இருக்க முடியாது.
இங்கு கவனிக்கவேண்டிய கவலைக்குரிய விடயம் என்னவென்றால் ஐந்து வருடங்களுக்கு முன் துடிக்கத்துடிக்க கொன்றொழிக்கப்பட்ட ஒரு மனித இனத்தின் அவலநிலையை விசாரணைக்குட்படுத்த சர்வதேசமும் ஐநா அமைப்பும் நீதி நியாயத்துடன் சரியான முனைப்பு காட்டியிருக்கவில்லை. ஏனோ தானோ என்று தட்டிக்கழிக்கவே காரணங்களை தேடிக்கொண்டிருந்தனர். புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ச்சியாக நடத்திய ஜனநாயக போராட்டங்கள் அழுத்தங்களுக்குப்பின் ஐநா சப்பிரதாயத்துக்கு ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டது.
அதன் பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட மூன்றுபேர் கொண்ட நிபுணர்குழு அறிக்கை சில விடயங்களை வெளிப்படுத்தினாலும் அவ்வறிக்கை சரியான தாக்கத்தை இன்றுவரை பூர்த்தி செய்யவில்லை.
இப்போ 2015 மார்ச் மாதம் சமர்ப்பிக்க இருந்த விசாரணை அறிக்கையும் உரிய காலத்தில் சமர்ப்பிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்படுகிறது என்றால் இன்னும் இன்னும் தமிழர்களுக்கு எதிரான ஏதோ ஒரு பெரிய திட்டமிடப்பட்ட சதி மேல் மட்டங்களில் திரை மறைவில் நடந்துகொண்டிருக்கின்றது என்பதையே காட்டுகிறது.
மார்ச்சு மாதம் அமெரிக்கா இலங்கை அரசுக்கு எதிராக ஒரு பிரேரணையை கொண்டுவரும் என்று ஊகம் கூறப்பட்டது பின்னர் அமெரிக்கா பிரேரணையை சமர்ப்பிக்கப்போவதில்லை என்று சொல்லப்பட்டது. முன்னரும் இரண்டு பிரேரணைகளை அமெரிக்கா ஐநா மனித உரிமை அமர்வின்போது பெருத்த சலசலப்போடு தீர்மானமாக கொண்டுவந்திருந்தது அதுபற்றிய சலனமே இன்றைக்கு இல்லை.
சிறிசேனவின் தலைமையில் புதிய அரசாங்கம் தனது பணியினை செய்வதற்கும், ஐந்து வருடங்களுக்கு முன் ராஜபக்‌ஷ அரசு செய்த இனப்படுகொலை சம்பந்தமான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் இடையே என்ன சங்கடம் இருக்கிறதென்பதை நீதி நியாயத்தை விரும்பும் உலகம் அறிந்துகொள்ள வேண்டும். இந்த விடயத்தை கண்டித்து சர்வதேச மன்னிப்பு சபை மட்டும் amnesty international தனது கவலையை தெரிவித்திருக்கிறது. அறிக்கை சமர்ப்பிப்பதை தள்ளிப்போட்டு காலதாமதம் ஏற்படுத்துவதால் குற்றவாளிகள் தப்பிக்க வழிவகுக்கும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் வலயப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் சபையின் அறிக்கையை பாதிக்கப்பட்டோர் அதிகளவில் எதிர்பார்த்திருந்த நிலையில், குறித்த அறிக்கை பிற்போடப்பட்டுள்ளமை ஏமாற்றமளிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கை அரசாங்கமானது ஐ.நா மனித உரிமைகள் சபையுடன் இணைந்து குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் கொண்டுவந்தால் மாத்திரம் இந்த அறிக்கை பிற்போடப்பட்டமை நியாயமுள்ளதாக அமையுமென அவர் மன்னிப்பு சபையின் நிலைப்பாட்டை தெளிவு படுத்தியிருக்கிறார்.
திரட்டப்பட்ட அறிக்கையை உரியகாலத்தில் சமர்ப்பிக்கவேண்டியது மனித உரிமை ஆணையத்தின் நியாயமான கடமை அது சம்பந்தமாக தொடர் வேலைத்திட்டங்களை எடுக்கவேண்டுய கடமை இலங்கை அரசுக்கு இருக்கிறது. இலங்கையின் முன்னைய அரசும் இப்படியான கால அவகாசங்களை பெற்றுக்கொண்டு சர்வதேசத்தையும் மனித குலத்தையும் ஏமாற்றிக்கொண்டிருந்தமை கருத்தில் கொள்ளவேண்டிய விடயமாகும்.
தமிழர்களுக்கு என்று ஒரு ஆட்சி அதிகாரம் இல்லாமையும் ஐநாவின் இந்த உதாசீனத்துக்கு ஒரு காரணமாக கொள்ளமுடியும். தமிழ் இனமும் பூமியில் வாழுகிறார்கள் என்று ஐநாவில் அங்கத்துவம் பெற்றிருப்பின் இன்று திரட்டப்பட அறிக்கை தள்ளிப்போவதற்கு முடியாமல் இருந்திருக்கலாம், ஆனால் அப்படி ஒரு அதிகாரம் இல்லாமையும் தற்போது தமிழர்களுக்கென்றிருக்கும் வலுவில்லாத ஊடலித்துப்போன தலைமைத்துவத்தாலும் யாராலும் எதுவும் செய்யமுடியவில்லை.
இலங்கையில் புதிய ஆட்சி நடைபெறுவது காரணமாக சில நிர்வாக நடைமுறைகளுக்கு கால அவகாசம் தேவை என்பதை ஓரளவு ஏற்றுக்கொண்டாலும் புதிய அரசுடன் சம்பந்தமில்லாத போர் சம்பந்தமான அறிக்கையை தடுத்து நிறுத்தவேண்டிய தேவை என்ன இருக்கிறது. அறிக்கையை தடுத்து நிறுத்துவதால் கொலைகாரர்களுக்கு சாதகமான காய் நகர்த்தல் ஒன்றுக்கு வழிதேடுவது தவிர வேறு என்ன ஒளிந்திருக்கமுடியும்?
உதாரணத்துக்கு ஒரு வீட்டில் பட்டப்பகலில் ஒருவன் பல படுகொலைகளை செய்தான். கொலைகாரன் யார் என்பதும் துல்லியமாக பல ஆயிரம் சாட்சியங்களுடன் வீடியோ பதிவுகளும் சேர்ந்து இனங்காணப்பட்டுவிட்டது கொலை சம்பந்தமாக அவன்மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு நடந்து வருகிறது. கொலைகாரன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுவிட்டான். அனைத்தும் தெரிந்துகொண்டு புதிதாக ஒருவர் வீட்டுக்கு குடியிருக்க வருகிறார் கொலை நடந்து ஆறு வருடங்களுக்குப்பின் புதிதாக குடி வந்தவர் வழக்கை தவணை போட்டு தள்ளிவைக்கும்படி ஏன் மனுச்செய்து மல்லுக்கட்டவேண்டும் இது எங்கோ இடிப்பதாக தெரியவில்லையா. இதை ஏன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இடிக்கவில்லை. சம்பிரதாயத்துக்கேனும் ஏன் தமிழர் பிரதிநிதிகள் எதிர்ப்பு காட்டவில்லை.
சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு உச்ச பட்ச அரசியல்தீர்வை இந்தியாவை சார்ந்து இந்தியா மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என்று ஏதோ காரணங்களுக்காக கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
மோடி அரசும் சரி, முன்னைய காங்கிரஸ் அரசும்சரி சம்பந்தன் தரப்பை ஒரு சல்லிக்காசுக்கு மதிப்பதாக தெரியவில்லை. இந்திய தரப்பினர் ராஜபக்‌ஷவையும் ஶ்ரீசேனவையும் பூர்வீகரீதியாக தமது சந்ததி வாரிசுகளாக கருதி அரசியல் செய்து வருகின்றனர். சிங்களப்படைகள் தமிழகத்து மீனவர்களை கொன்று குவித்தபோதும் இந்திய அரசு இதுவரை ஶ்ரீலங்கா அரசை கண்டித்ததோ தண்டித்ததோ கிடையாது.
ஐநா அறிக்கை தள்ளி வைக்கப்பட்டதற்கான நெம்புகோல் இந்தியாவின் அழுத்தத்திலிருந்தே தொடங்கப்பட்டிருக்கிறது. அறிக்கை தள்ளிவைக்க கோரிக்கை வைக்கப்பட்ட மறுநாள் சிறிசேன இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈழதேசம் செய்திகளுக்காக.
கனகதரன்.