Thursday, June 28, 2012

முறிகண்டி, முறுகண்டிய என்று மாற்றமடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!!!

தமிழ் ஈழத்தின் துயர் நிறைந்த இனப்படுகொலையின் "கறுப்பு அடையாளமாக" சர்வதேச அரங்கில் புளக்கத்தில் இருப்பது. "முள்ளிவாய்க்கால்"
உலகத்தால் என்றும் மறக்க முடியாத 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஆசிய இனப்படுகொலை -  சிங்கள இனவெறி அரசால் நடத்தப்பட்ட மிகப்பெரிய மனித அவலமும் படுகொலைகளைத் தாங்கிய முள்ளிவாய்க்கால் என்ற பெயரும் அந்த நிலப்பிரதேசமும் உலகத்தின் மனக்கண்ணின் முன் என்றும் அழியாதவை.  

அவை ஒருபுறம் இருக்க, போர் முடிவுக்கு வந்த கையோடு கொலைக்களத்திலிருந்து தத்தளித்து தப்பி வெளியேறிய ஈழத்தமிழர்களின்
வாழ்விடங்களை பறித்து தமிழர் அடையாளங்களை அழிக்க ஸ்ரீலங்கா சிங்கள அரசு தெரிவுசெய்த இடங்கள் பல இருந்தாலும், நிலப்பறிப்பின் குறியீடாக முன்னிலைப்படுத்தப்பட்டது "முறிகண்டி",  

சிங்கள அரசு முறிகண்டியை தெரிவு செய்வதற்கு தமிழர் தாயகத்தின் நிலப்பரப்பை ஓரளவு அறிந்த ஒட்டுக்குழுக்களின் தலைவர் டக்கிளஸ் தேவானந்தாவும் ஒரு முக்கிய காரணகர்த்தா என்பதும் பலர் அறிந்திராத உண்மை. போர் முடிவுக்கு வந்தவுடன் நிலக்குகையியிலிருந்து வெளியே வந்த டக்கிளஸ் பொதுமக்கள் முன் முதல் முறையாக காட்சியளித்தது முறிகண்டி பிள்ளையார் கோவில் முன்பாக.

இன்று போர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையிலும், எதிர்ப்பு காட்டாத ஒரு காலத்தில் அமைதியை எதிர்கொண்டிருக்கும் தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களான குடியிருப்புக்களை திட்டமிட்டு பறிமுதல் செய்து சிங்கள மயமாக்கும் திட்டத்தில் முன்னணி வகுத்து  முறிகண்டி கிராமத்தின் பெயர் சர்வதேச அரங்குக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது.

வன்னியையும் யாழ்க்குடா நாட்டையும் இணைக்கும் மையப்புள்ளியாக ஆணையிறவு இருப்பதுபோல, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கிளிநொச்சியையும், தென் இலங்கையின் போக்குவரத்து நடமாட்டங்கள் அனைத்தையும் கண்காணித்து இலகுவாக இனங்கண்டுகொள்ளும்  நுழைவாயிலாக, கேந்திர மையமாக திருமுறிகண்டி அமைந்திருக்கிறது. 

ஏற்கெனவே "வெலிஓயா" என்று சிங்களப்பெயர் சூடப்பட்ட மணலாறு பிரதேசத்தை சிங்கள காடையர்களின் இருப்பிடமாக்க சிங்கள அரசுகள் படு பிரயர்த்தனப்பட்டன, அதில் சிங்கள ஆட்சியாளர்கள் ஓரளவு வெற்றியும் கண்டனர். தமிழர் தாயக நிலப்பரப்பின் கழுத்துப்பகுதி துண்டாடப்படுவதை தடுத்து நிறுத்துவதற்கு தேசியத்தலைவர் அவர்கள் மிக முக்கியத்துவம் கொடுத்து புவியியல் ரீதியாக பயிற்றுவிக்கப்பட்ட தனிப்படையை கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக மணலாறு பிரதேசத்தில் நிறுத்தி வைத்திருந்தார். 

போராட்டக்காலத்தில் விடுதலைப்புலிகள் மற்றய இடங்களையும் விட மணலாற்றை தக்கவைத்து பாதுகாப்பதற்காக நிறைய வளங்களை செலவு செய்திருந்தனர். மணலாறு சிங்கள நாட்டின் எல்லையில் இருக்கும் கிராமமானதால் சிங்கள குடியிருப்புக்களை  ஊடுருவல் செய்வதற்கு ஆட்சியாளர்களுக்கு இலகுவாகவும் இருந்தது. அத்துடன் குடியிருப்புக்களை அசதாரணமான  பொதுவானதாக அரசியல் ரீதியான நியாயப்படுத்தல்களுக்கும் அதிக சிரமங்கள் சிங்கள ஆட்சியாளர்களுக்கு இருக்கவில்லை. மணலாற்றில் விடுதலைப்புலிகளின் வீர வரலாறு மிக மிக அதிகம், ஆனால் துரதிஷ்டவசமாக அரசியல் செய்யும் அனேக ஈழத்தமிழர்களுக்கு மணலாற்றின் மண்மீட்பு அத்தியாயங்கள் பல இன்னும் அறியப்படாத செய்தியாகவே இருந்துவருகிறது. இன்றும் சிலர் வெலிஓயா வேறு, மணலாறு வேறு என்று நினைப்பில் இருப்பவர்களையும் காணக்கூடியதாக இருக்கிறது.

மணலாற்று பிரதேசத்திற்காக போராளிகள் சிந்திய இரத்தமும், உயிர் தியாகம் செய்து விதையான மாவீரர்களின் தொகையையும் கணக்கிட்டு நினைவுப்படுத்தினால் திரு முறிகண்டி கைவிட்டுப்போக எவராலும் அனுமதிக்க முடியாது. முறிகண்டியை இராணுவமயப்படுத்தி நிரந்தரமாக மக்களை கட்டாயப்படுத்தி வெளியேற்ற நினைக்கும் சிங்கள அரசு, தமிழீழத்தின் வேறு இடங்களில் மக்கள் மத்தியில் இவ்வளவு அழுத்தமாக நிலப்பறிப்புக்கான அகந்தையை  காட்டியிருக்கவில்லை. யாழ் பலாலி பகுதியில் கால் நூற்றாண்டுக்கு மேலாக நிலை கொண்டிருக்கும்  இராணுவம் படிப்படியாக குறைக்கப்பட்டு  மக்கள் குடியிருப்புக்களை திரும்ப வழங்குவோம் என்றே அரசாங்கம் ஒப்புக்கேனும் சர்வதேசத்திற்கு சொல்லிவருகிறது. முறிகண்டி விடயத்தில் அப்படிச்சொல்லப்படவில்லை. ஏன் என்பதற்கு இரண்டு வலுவான காரணங்கள் இருக்கின்றன.

முறிகண்டிக்கு தெற்காக ஒருசில கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் கொக்காவில் என்ற இடத்தில் தொலைக்காட்சி பரிவர்த்தனை கோபுரம் ஒன்றை இலங்கை ரூபவாகினிக்கூட்டுத்தாபனம் 1970 களில் அமைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளை வடக்கு தமிழீழம் அனைத்துக்கும் ஒளிபரப்பியது. 80 களில் தமிழர் கிளர்ச்சி தொடங்கியதும் தொலைக்காட்சி சேவை நிறுத்தப்பட்டு கொக்காவில் தொலைக்காட்சி கோபுரம் அமைந்த பகுதி இராணுவ முகாமாக மாற்றப்பட்டு இருந்த சமயம் விடுதலைப்புலிகளால் வளைக்கப்பட்டு ஒரு இரவில் அழித்தொழிக்கப்பட்டது. அதன்பின் வந்திறங்கிய இந்திய இராணுவம் அந்தபிரதேசத்தில் குடிகொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. முறிகண்டிக்கு வடக்காக இரண்டு மூன்று கிலோமீற்றர் தொலைவில் உள்ள 156 ம் கட்டை பகுதியிலுள்ள  கிரவல் குழி பகுதியிலும் 70 பதுகளில் பிற்பகுதியில் ஒரு பாரிய தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டு (வயர்லெஸ் ரவர்) என்று அழைக்கப்பட்டது அந்த ரவர், சேவை எதையும் தொடங்காத நிலையில் நீண்டகாலம் இருந்து வந்து 87, 90 களில் இந்திய சீக்கிய இராணுவத்தின் முக்கிய முகாம்களில் ஒன்றாக வயர்லெஸ் முகாம் அமைந்திருந்தது.

இந்திய இராணுவம் வெளியேறிய பின் அவ் இரு இடங்களும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அவ்விரு இடங்களும் எதிரிகளால் இலகுவாக இனங்காணக்கூடிய சாத்தியம் இருந்ததாலோ என்னவோ, புலிகள் அந்த இடங்களில் சொல்லத்தக்க முகாம்கள் அமைத்து நிலைகொண்டிருக்கவில்லை. இருந்தும் அவ்விடங்களை தமது பூரண கட்டுப்பாடுக்குள் வைத்திருந்து வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இன்று ஸ்ரீலங்கா சிங்கள அரசு குறிப்பிட்ட அந்த இடங்கள் ஸ்ரீலங்காநாட்டின் பாதுகாப்புக்கு உகந்த கேந்திரம் என ஒரு மாயையை சர்வதேச மட்டத்தில் தோற்றுவித்து, திசை திருப்பும் சதி தொடங்கப்பட்டிருக்கிறது.  வவுனியாவிலிருந்து வடக்கு நோக்கி தொடரும் ஓமந்தை, புளியங்குளம், கனகராயன்குளம், மங்குளம், பனிக்கங்குளம், கொக்காவில், முறிகண்டி. இவை அனைத்தும் பழைய கிராமங்களாக இருந்தாலும், அதிக சனத்தொகையற்ற வலுவற்ற சிறிய கிராமங்கள். யாழ் பிரதான வீதிக்கு கிழக்காக முல்லைத்தீவுவரை காடுகள் பரந்து விரிந்து கிடக்கின்றன.  தெருவுக்கு மேற்காகவும் கணிசமான காட்டு பிரதேசங்கள் உண்டு. இந்தக்காடுகள் அரசகாணிகளாகவே இருந்துவருகின்றன. இந்தக்காடுகள் தமிழர் போராட்டத்தில் அதிக பங்களிப்புக்களை வழங்கியிருந்தன. [ இந்த காடுகளை கணக்கில் கொண்டுதான் இலங்கை இந்திய சாக்காட்டு ஒப்பந்தமான 13வது திருத்த சட்டமூலம் மறுக்கப்பட்டுவருகிறது. 13வது சரத்து சட்டமூலத்தினுள் காணி அதிகாரம் காவல்த்துறை (பொலிஸ்) அதிகாரமும் உள்ளடக்கப்பட்டிருக்கிறது, (கொடுக்காத ஒப்பந்தத்தில் எதை உள்ளடக்கித்தான் என்ன பயன்) ]

வளமான இந்த பல இலட்சம் ஏக்கர் காடுகளை மெல்ல மெல்ல சிங்கள குடியிருப்பாக மாற்றுவதே ராஜபக்க்ஷ அரசின் திட்டம். இராணுவ முகாமை அமைத்து அருகாமையில் சில நூறு இராணுவக்குடியிருப்புக்களை அமைத்துவிட்டாலே தமிழர்கள் அங்கு குடியிருக்க விரும்பமாட்டார்கள் என்பதுவும் சிங்கள அரசின் கூடுதல் நம்பிக்கை. முறிகண்டியை விட்டுவிட்டு குடியிருப்புக்கள் இல்லாத கொக்காவில் போன்ற மக்கள் நடமாட்டமற்ற இடங்களில் இராணுவமுகாம்களை நிறுவி சிங்கள குடியிருப்புக்களை தொடங்கலாமே என்ற கேள்வி பலருக்கும் எழலாம். அப்படி செய்யப்போனால் இருக்கும் பிரச்சினையுடன் புதிய பிரச்சினையாக இவைகளும் இணைந்து அரசியலாக்கப்பட்டு  பிரச்சினை  சர்வ தேசம்வரை சென்றடைந்துவிடும் என்ற அச்சம் சிங்கள அரசுக்கு உண்டு. இலங்கையில் இருக்கும் சர்வதேச தொண்டர் அமைப்புக்களே அரசாங்கத்தின் மீது குற்றஞ்சுமத்தும் அபாயம் வந்துவிடும் என்ற தந்திரமே தற்போது இராணுவம் நிலைகொண்டிருக்கும் பகுதியை கண்காணிப்புக்கு வலையமாக பிரகடனப்படுத்தப்படுத்தி தக்கவைத்து நிரந்தரமாக்கி தொடர்ந்து குடியிருப்புக்கள் விஸ்தரிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

முறிகண்டியில் தொடங்கப்பட்டிருக்கும் தமிழர்களின் நில மீட்பு போராட்டம் வெற்றி பெற்று தமிழர்களின் குடியிருப்பு காணிகள் திருப்பி பெறப்பாட்டாலும் சிங்கள அரசு தோத்துப்போனதாக அர்த்தம் கொள்ள முடியாது. அதையே காரணமாக்கி நல்ல  சாட்டாக எடுத்துக்கொண்டு சற்று பின்வாங்கி 200 -300 மீற்றர் தெற்காக நகர்ந்து இராணுவ முகாம் அமைக்கப்படும் சாத்தியம் இருப்பதாகவே படுகிறது. கலகம் இல்லாமல் வழி பிறப்பதில்லை கலகம்தான் சில விடயங்களை நியாயப்படுத்த உதவும் விளம்பரம் என சிங்கள அரசு நம்பி கலகத்தில் ஈடுபட்டிருக்கிறது.

முறிகண்டியில் குடியிருக்கும் குடியிருப்பாளர்களில் 80 சதவீதமானவர்கள் மலையக தமிழர்கள் என்பதாலும் தற்போதைக்கு கேட்க ஆளில்ல என்ற நிலையில்  அவர்களின் வறுமையையும் இலங்கையின் மூன்றாம்தர பிரஜைகள் என்ற முத்திரையையும் அவர்கள்மீது குத்தி அவர்களை வழிக்கு கொண்டுவரலாம் என்பதும் சிங்கள அரசுக்கு கூடுதல் நம்பிக்கையை தந்திருக்கிறது. இந்த தரவுகள் அனைத்தையும் சிங்கள அரசுடன் இணைந்து இயங்கும் ஒட்டுக்குழுவின் தலைவர்களின் அனுமதியுடன் அரசாங்கம் செய்து வருகின்றதென்பதும் வரும் காலங்களில் முறிகண்டிக்கு வரவிருக்கும் ஒட்டுக்குழுக்களின் வரவிலிருந்து உணர்ந்து கொள்ளமுடியும்.

முறிகண்டிக்கும் கொக்காவிலுக்கும் மத்தியில் அமைந்திருக்கும் பகுதியை கையகப்படுத்தி நிரந்தர இராணுவ முகாமாக மாற்றி அதன் தொடர்ச்சியாக முல்லைத்தீவுவரை சிங்கள குடியிருப்புக்களை உண்டுபண்ணி வன்னிப்பகுதியை இரண்டாக பிளப்பதற்கான சதித்திட்டத்தின் ஆரம்ப முதன் முயற்சியாக முறிகண்டியில் கை வைக்கப்பட்டிருக்கிறது. பிரச்சினையை பிரச்சினையாக்கி அதிக எதிர்ப்பின்றி நியாயப்படுத்தலுடன்,, நியாயத்துக்கு கட்டுப்பட்டு சற்று பின்வாங்குவதுபோல் ஒரு நெகிழ்வை முன்வைத்து மூல நோக்கத்தை அடையலாம் என்பதன்  சூழ்ச்சியே செறிவு குறைந்த பலவீனமான மக்கள் வாழும் இடமான முறிகண்டி தெரிவு செய்யப்பட்டிருப்பதன் சூத்திரம்.

கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து மாங்குளம் வரை இருந்த நிலப்பரப்பு அனைத்தும் 1970 களில் காடாக இருந்தவை இரணைமடுச்சந்தியிலிருந்து கிழக்காக 500 -600 மீற்றர் தொலைவில் இருந்த கனகாம்பிகை குளம் சிறு பயிர் நீர்ப்பாசனத்துக்கு தகுதியானதென்று காணப்பட்டதால் மெயின் வீதியின் ஓரத்தில் உள்ள உயர்வான நிலங்களை தவிர்த்து  உட்புறமாக ஒரு மைல் தள்ளி கனகாம்பிகைக்குளம் நீர்ப்பாசன மூன்று ஏக்கர்த்திட்டம் படித்த வாலிபர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. 1972 - 1973 களில் கனகாம்பிகை குளம் சேவீஸ் வீதிக்கும் லக்ஸபான மின்சார ரவருக்கும் இடைப்பட்ட பகுதி சேவீஸ்வீதி குடியேற்றத்திட்டம் என்ற பெயரிலும், அடுத்து டிப்போ சந்தியிலிருந்து தென்மேற்காக ஒரு கிலோ மீற்றர் தொலைவில் கந்தன் குளம் குடியேற்றத்திட்டம் என்ற பெயரிலும் 1/2 ஏக்கர் வீதம் காடுகள் வழங்கப்பட்டு மக்கள் குடியேற்றப்பட்டனர்.   இந்த குடியேற்றங்கள் உருவான பின்புதான் கிளிநொச்சி பஸ் நிலையம்-சந்தையை தாண்டிய பகுதிகளில் சன நடமாட்டம் அதிகரிக்கப்பட்டு புளக்கத்தில் வந்திருந்தன.

70 - 80 பதுகளில் மலையகத்திலிருந்து விரட்டப்பட்ட மக்கள் பாதுகாப்பாக தஞ்சமடைந்திருந்த இடங்களில் கிளிநொச்சி நிலப்பரப்பு முதல்த்தரமாக இருந்தது. கிளிநொச்சிப்பகுதியில் கூலி வேலை செய்து வாழ்ந்த இந்திய வம்சாவழி மலையக மக்கள் இரணைமடுச்சந்தியிலிருந்து மேற்காக காடாக இருந்த இடங்களில் தன்னிச்சையாக குடியேறினர். அந்த இடத்துக்கு பாரதிபுரம் என்று பெயரும் சூட்டியிருந்தனர், பாரதிபுரத்தை விடவும் சற்று மேடாக முறிகண்டி பகுதி அமைந்திருந்ததனால் 85 வரை முறிகண்டியை சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் குடியிருக்க முனைப்பு காட்டியிருக்கவில்லை. பின்வந்த காலங்களில் மலையக மக்களில் வரவும் அதிகரித்திருந்தது, வந்திறங்கியவர்கள்  மேட்டு நிலமாக இருந்தாலும் தமக்கு சொந்தமாக குடியிருப்புக்களை உருவாக்க ஆர்வம் கொண்டிருந்தனர், 

போராட்டம் முனைப்பு பெற்றிருந்த நேரமாதலால் போலிஸார் மற்றும் காணி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்டவிரோத குடியேறிகளை தடுத்து நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அரச நிர்வாக இயந்திரம் குறுக்கப்பட்டு அலுவலக மட்டத்திலேயே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. வெளிக்கள நிர்வாகம் அனைத்தும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் மெல்ல மெல்ல கொண்டுவரப்பட்டிருந்தன. இந்த சூழல் குடியேற்றவாசிகளுக்கு சாதகமாக அமைந்திருந்தது. 90களின் பின், தமிழீழ நிர்வாகத்தின் பணிப்பின்பேரில் அனைத்து குடியிருப்பாளர்களும் கிராமசேவகர் மட்டத்தில் காணிகளை பதிவு செய்து முறைப்படுத்தப்பட்டிருந்தது, கிராம சேவையாளரின் பதிவு அரச அதிபர்வரை சென்று சேரவேண்டும் என்பதுதான் இலங்கையின் சட்டவிதி.

முறிகண்டியை சுற்றியுள்ள பகுதி குடியிருப்பாளர்களின் காணிகள் முழுவதும்  முறையாக காணி அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு குடியிருப்பதற்கான அனுமதியை (Permit) பெற்றுக்கொண்டவர்களாக இருக்க முடியாவிட்டாலும், அனைவரும் கிராம சேவையாளர் அலுவலகத்தின்மூலம் அரசாங்க அதிபர் காரியாலயத்துக்கு முறைப்படுத்தப்பட்ட குடியிருப்பாளர்களாகவே இருக்க முகாந்திரம் இருக்கிறது.

காணி அலுவலகத்தில் பதிவு செய்திருந்தாலும் பலர் கிராமசேவகர் மட்டத்தில் பதிவு செய்த ஆதாரத்துடன் இருபது இருபத்தைந்து ஆண்டுகளாக அங்கு வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர். 90 களின் பின் கிளிநொச்சி மாவட்டம் முழுவதும் தமிழீழ நிர்வாக நடைமுறைக்கு உட்பட்டு அரசாங்க அதிபர் பணிமனை, காணி அலுவலகம் அனைத்தும் மக்கள் நலன்சார்ந்து சீராகவே இயங்கி வந்திருக்கின்றன, அம்மக்களுக்கான உணவு முத்திரை, குடும்ப அட்டை இன்ன பிற ஆதார ஆவணங்கள்  அனைத்தும் வழங்கப்பட்டேயிருக்கிறது.

போர் நடந்தபோது தற்காலிகமாகக் முறிகண்டியில் தரித்த இராணுவம் இன்று நிரந்தரமாக நிலைகொள்ள ஏன் முனைகிறது என்பதை ஆய்வாளர்களும், கல்விமான்களும், தமிழ் அரசியல் விற்பன்னர்களும் சிந்திக்கவேண்டியவர்களாக இருக்கின்றனர். ஒன்று எதிர்வினை இல்லை, அரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கு, இரண்டு பலவீனமான மக்களின் நிலை, மூன்றாவது வன்னியை இரண்டாகப்பிளந்து சிங்கள குடியேற்றத்தை நிறுவ போடப்பட்டிருக்கும் திட்டமிட்ட பெருத்த சிங்களச் சதி.

எது எப்படியிருப்பினும் முறிகண்டியிலோ, கொக்காவிலிலோ இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்படுமானால், அது முல்லைத்தீவுவரை பரந்து கிடக்கும் காடுகள் அனைத்தும் சிங்கள குடியேற்றமாக மாற்றப்படுவது எவராலும் தடுக்க முடியாமல் போகலாம். தமிழ் அரசியல்வாதிகள் கொழும்பிலும், தமிழ்நாட்டிலும் குடியிருந்துகொண்டு தீர்வுக்கான பொதிகளை கட்டி அவிழ்த்து விளையாடிக்கொண்டிருக்க சத்தமில்லாமல் தமிழீழம் சிங்கள குடியிருப்பாக மாறி ஒரு காலகட்டத்தில் அரசியலுக்கு வேலையில்லாமல் போய்விடும்.

ஈழதேசம் இணையத்திற்காக.
கனகதரன்.

Saturday, June 9, 2012

சொல்லுவதெல்லாம் உண்மை; நிகழ்ச்சியின் உண்மை முகம்

தமிழ் நாட்டு மக்களை அரசியல் கட்சி தலைவர்களின் தொலைக்காட்சிகள்  சிந்திக்க விடாமல் குளப்பிக்கொண்டிருக்கும் தருணத்தில் சமூக நலன் சார்ந்து ஓரளவு வக்கிரமற்ற தரமான நிகழ்ச்சிகளை தரவல்லதாக வட இந்திய ஸ்ரார் குழுமத்தின் விஜய் ரிவி இருந்துவந்தது.
விஜய் ரீவி யில் இடம்பெறும் "நீயா நானா" நிகழ்ச்சி அதிகமாக மேல்த்தட்டு சமூகம் சார்ந்து கல்வி அறிவுடைய மக்களை உள்ளடக்கியதாக இருந்தாலும் நிகழ்ச்சியை நடாத்தும் கோபிநாத் விவேகமாக  யதார்த்தமாகவும் நிகழ்ச்சியை கொண்டுசெல்வது பாராட்டக்கூடியதாகவும் பிரமிக்கக்கூடியதாகவும் இருந்து வருகிறது. கடந்த ஒருவருடமாக இடை நிறுத்தப்பட்டு இருக்கும் " கதையல்ல இது நிஜம்" நிகழ்ச்சி மூலம் விஜய் ரிவிக்கு சமூக நோக்கம் இருப்பதையும் காட்டியது  விஜய் ரீவி நேரடியாக அரசியல் கட்சி சார்பு இல்லாததால் ஓரளவு நல்ல நிகழ்ச்சிகளை தரவல்லதாக இருக்கலாம்.

அடுத்ததாக zee தமிழ், என்ற ரீவீ, வடக்கத்திய சனலாக இருந்தாலும், விஜய் ரீவியில் முன்பு சினிமா நடிகை லட்சுமி நடத்திவந்து நிறுத்தப்பட்ட "கதையல்ல இது நிஜம்" நிகழ்ச்சியை பின்பற்றி சமீபகாலத்தில் அறிமுகப்படுத்திய "சொல்லுவதெல்லாம் உண்மை" நிறைய மக்களை கவர்ந்திருந்தது. சமூகத்தில் கைவிடப்பட்ட பெருமளவான கல்வியறிவு குறைந்த வறிய அவலப்பட்ட பெண்கள் அந்த நிகழ்ச்சியினூடாக நியாயம் கிடைக்கப்பெற்றது மட்டுமல்லாது, காவல்த்துறை நீதித்துறைக்கு ஒரு இலகு நிலையையும், சம்பந்தப்பட்ட மக்களின் பிரச்சினை சார்பாக வெளிப்படையான தகவல் பரிவர்த்தனை அங்கீகாரத்தையும், கீழ் மட்டச் சமூகத்துக்கு ஒரு நம்பிக்கையான நியாயத்திற்கான களத்தையும் வழங்கியிருந்தது.

தமிழகத்தில் பொலீஸ் நிலையம் சென்று இலஞ்சம் கொடுத்து தமக்கு சாதகமாக காரியத்தை சாதிக்கும் வசதியானவர்களின் முயற்சியையும் 'சொல்லுவதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியால் உடைக்கப்பட்டது என்றே நம்பக்கூடியதாக இருந்தது.  நிகழ்ச்சியை நடத்திவந்த முன்நாள் புகழ்பெற்ற சன் ரிவியின் செய்தி வாசிப்பாளர் "நிர்மலா பெரியசாமி" உணர்ச்சி வசப்படாமல் சம்பந்தப்பட்டவர்களிடம் உண்மையை கறந்து கொள்ளும் விதம் பக்கச்சார்பில்லாது நீதியாக தீர்மானத்துக்கு வரும் அசாத்திய அறிவின் முதிர்வு நிர்மலா பெரியசாமி அவர்களுக்கு மிகுந்த மதிப்பையும், 'கை எடுத்து கும்பிடலாம்' என்ற ஒரு மனோநிலையையும் என்போன்று பலருக்கு நிச்சியம் உண்டாகியிருக்கும்.

நான் இணையத்தில் தவறாமல் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் 'சொல்லுவதெல்லாம் உண்மை' மற்றும் வாரம் ஒருமுறை வரும் 'நீயா நானா' ஒருபோதும் தவறிவிடவில்லை. சில தினங்களுக்கு முன் 07 06 2012 அன்று யூ ரியூப் இணையம் மூலம் வெளியாகியிருந்த சொல்லுவதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை பார்த்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்துவிட்டேன். அந்த நிகழ்ச்சி என்னை மிகவும் பாதித்து விட்டது என்றே சொல்லலாம். மூன்று நாட்களாக நான் எனது நண்பர்களிடமும் குடும்பத்தினரிடமும் இயல்பாக இல்லை.

07 06 2012 சொல்லுவதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் ஈழத்தை சேர்ந்த ஒரு அகதிப்பெண் பெயர் கிருசாந்தினி, சொல்லுவதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம்  நிர்மலா பெரியசாமியிடம் நியாயம் கேட்டு போயிருந்தார். ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான அந்தப்பெண்ணின் கடந்தகால வாழ்க்கையை எவரும்  நியாயப்படுத்த முடியாது.  இருந்தும் அந்த அபலைப்பெண்ணின்  சுய நியாயம் அழுகுரல் அனைத்தும் சொல்லுவதெல்லாம் உண்மை "நீதிபதி" திருமதி பெரியசாமியால் தடுக்கப்பட்டிருந்தது. அகதிப்பெண்ணான கிருசாந்தினி தனது தரப்பு நியாயங்களை ஒப்பிக்க இடமளிக்கப்படவில்லை. கட்டாயமாக தடுக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டார்.

நிறைய தப்பும் தவறும் அந்தப்பெண்ணின் வாழ்க்கையில் விதிவசமாக நிகழ்ந்திருக்கிறது.  அவற்றை இங்கு நியாயப்படுத்துவது நோக்கமல்ல. இவை அனைத்தையும் தெரிந்துகொண்டு உள் நுழைந்த 'பால்துரை' என்ற பட்டம்பூச்சியை எப்படி நியாயஸ்தன் என்று சொல்லமுடியும். நான்கு வருடங்கள் அந்தப்பெண்ணின் பணத்தில் வயிறு வளர்த்து, உடல் இச்சையையும் தீர்த்துவிட்டு எப்படி உதறித்தள்ளிவிட்டு போகமுடியும். பள்ளிக்கூடம் போகாத படிப்பறிவில்லாத ஒருவனாக இருந்தால் புரியாமல் நடந்துகொள்ளுகிறார் என எடுத்துக்கொண்டாலும் நீதிபதி ஸ்தானத்திலிருக்கும் நிர்மலா அந்த இளைஞனுக்கு கண்டிப்பாக எடுத்துச்சொல்லி மனுதர்ம நியாயத்தை புரிய வைத்திருக்க வேண்டாமா?

பால்துரை என்பவர் கிருசாந்தினியுடன் சேர்ந்து வாழ்ந்த காலத்தில் அந்தப்பெண் நடத்தையில் தவறாக நடந்திருந்தால் பரிசீலனை செய்யக்கூடிய ஒன்றுதான்.

அந்தப்பெண் விதிவசமான குற்றவாளியென்றால் அதைவிட பால்துரை மோசடிபேர்வளி என்றே கொள்ளவேண்டும். அந்த இளைஞனை காப்பாற்றுவதிலேயே நிர்மலா குறியாக இருந்தார். நிகழ்ச்சியை பார்க்கும்போது அனைவருக்கும் அது பட்டவர்த்தனமாக புரிகிறது. ஏன் இப்படி? அந்தப்பெண் அகதி என்பதால் எவரும் கேட்கப்போவதில்லை இறுமாப்பு சரியானதா? ஈழத்தமிழர்களை ஆட்டு மந்தைகளைப்போல இந்திய தமிழக அரசுகள் நடத்துகின்றபோது நாம் ஏன் இவர்களை மதிக்கவேண்டும் என்ற இளக்காரமா.

இருவரையும் சேர்த்து வைக்கவேண்டுமென்றுகூட தேவையில்லை ஊமைபோல நடித்த பால்துரை என்பவனை கண்டித்திருக்கவேண்டாமா அவன் போன்ற வேஷதாரிகளை மீடியா மூலம் தோலுரித்து உலகுக்கு காட்டவேண்டிய கடமை நீதிபதி ஸ்தானத்தில் இருக்கும் நிர்மலாவுக்கு இல்லையா.

சட்டப்படி விவாகரத்து பெற்ற ஒருபெண் எவரையும் திருமணம் செய்ய எவரும் குறுக்கே நிற்க முடியாது திருமணம் செய்யபோகும் இருவர் சம்பந்தப்பட்ட விடயம் அது. திருமணம் செய்வதாக வாக்குறுதி கொடுத்து தனது இச்சைகளை தீர்த்தபின் ஏமாற்றிவிட்டு போவதற்கு சட்டம் மற்றும் சமூகம் ஒருபோதும் இடங்கொடுக்க முடியாது. இப்படி ஏமாற்றுப்பேர்வழிகளால்த்தான் சமுதாயம் கெட்டுப்போவதற்கு வழி பிறக்கிறது. நீதி ஸ்தானத்தில் உட்கார்ந்திருந்த நிர்மலா பெரியசாமி ஒரு பயங்கர ஏமாற்றுப்பெர்வழிக்கு உதவியிருக்கிறார். அவர் புரியாமல் நடந்துகொண்டாரா இல்லை தெரிந்துதான் தப்புச்செய்தாரா என்பது நிர்மலா அம்மையாருக்கே வெளிச்சம்.

""ஒரே வார்த்தை,, நை நை என்று பேசக்கூடாது"" என்று அந்த பெண்ணை நோக்கி கட்டளை போட்ட நிர்மலா. இளைஞனை நோக்கி எந்த ஒரு கேள்வியையும் கேட்கவில்லை. முற்கூட்டியே தயாரிப்பு செய்து அந்த இளைஞனுக்கு சார்பாக நடந்து கொண்டதாகவே படுகிறது "அவர் தள்ளி விட்டுட்டாரு தன்னுடைய எதிர்காலத்தை பாக்க ஆரம்பிச்சுட்டாரு" என்று எந்த குற்ற உணர்வுமில்லாமல் நிர்மலா அவர்கள் கூறியது மிகுந்த வேதனையாக இருந்தது, கருணை காட்டுங்கள் என்று கிருசாந்தி கேட்டபோது நிர்மலா பாவித்த வார்த்தை பிரயோகங்கள் மனிதத்தன்மையற்றவை.

குறிப்பிட்ட அந்த விசாரணை தனது ஆளுமைக்கு அப்பாற்பட்டது சட்டத்தை நாடுங்கள் என்ற அறிவுரையுடன் விட்டிருந்தால் அந்தப்பெண்ணுக்கு வேறு ஒரு தளத்தில் நியாயம் கிடைத்திருக்கக்கூடும்

1, அந்தப்பெண் திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாய் என்பது மறைக்கப்படவில்லை பால்துரை என்பவருக்கு தெரிந்திருக்கிறது.

2, கிருசாந்தினியை பால்துரை திருமணம் செய்ய கேட்டிருக்கிறார். விவாகரத்து கிடைத்த பின் தான் சட்டப்படி திருமணம் செய்ய முடியும் என்பதை சட்டப்படி கிருசாந்தினி தெரிவித்திருக்கிறார். இது கிருசாந்தினியின் குடும்பத்தாருக்கும் தெரிந்தே நடந்திருக்கிறது.

3, கிருசாந்தினியின் உதவியில் படித்ததாக பால்துரை ஒப்புக்கொள்ளுகிறார். கிருசாந்தினியின் நடத்தையிலும் பிழையில்லை என்பதையும் பால்துரை ஒப்புக்கொள்ளுகிறார். அந்தப்பெண்மீது சாட்டப்படும் ஒரே குற்றச்சாட்டு வாய் திறந்து பேசுவது ஒன்றே சொல்லப்படுகிறது. அகதியாகி ஏற்கெனவே ஏமாற்றப்பட்ட ஒரு பெண் எச்சரிக்கை காரணமாக சற்று கவனமாக நடந்துகொள்வது யதார்த்தமான ஒன்றே!

அதுபற்றி கிருசாந்தினி விளங்கப்படுத்த முயற்சிக்கு நிர்மலா இடங்கொடுக்கவில்லை. கட்டாயமாக தடுக்கப்பட்டிருந்தார். இருதரப்பு விபரங்களையும் ஆராயாமல் எப்படி நிர்மலாவால் முடிவுக்கு வரமுடிந்தது? நீதியை தூர விரட்டிவிட்டு சொந்த மனநிலையில் தீர்ப்புக்கூறி விரட்டியிருக்கிறார்.

நான் மிகவும் மதித்து உயர்வாக நேசித்த "நிர்மலா பெரியசாமி" ஏன் இப்படி மாறினார் என்ற கேள்வி என்னுள் இடைவிடாது எழுந்து மனதை கிளறிக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின்மூலம் நிர்மலாவின் உண்மை முகம் வெளிவந்ததா அல்லது துவேஷத்தின் வெளிப்பாடா என்று தெரியவில்லை. நிர்மலா பெரியசாமி அவர்கள் மீது நான் மட்டுமல்ல பல ஆயிரம் நியாயத்தை மதிக்கும் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை தவிடுபொடியாகிவிட்டது.

சிங்கள ஆட்சியாளர்களின் அடக்குமுறை, பாதுகாப்பு இன்மை, நியாயம் கிடைக்காமை, உயிர் அச்சுறுத்தல், தனிமனித சுதந்திரம் இல்லாமை, தரப்படுத்தல் போன்ற  பல்வேறு ஆயிரம் காரணங்களினால் ஈழத்தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேறி பல நாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். ஓரளவு பின்புல ஆதரவு உள்ளவர்களும் பணவசதி உள்ளவர்களும் ஐரோப்பா, அமெரிக்க, அவுஸ்ரேலிய கண்டங்களிலுள்ள மனித உரிமைகளை மதிக்கும் நாடுகளில் தஞ்சமடைந்து பட்ட துன்பங்களுக்கு மருந்து போடும் விதமாக அந்த நாடுகள் மதிப்பளித்து வாழ அனுமதித்திருக்கிறது.

பண வசதியற்றவர்களும் பின்புல உதவி இல்லாதவர்களும் உயிரை, மானத்தை காப்பாற்றலாம் என எண்ணி நம்பிக்கையுடன் தப்பியோடி சென்றடைந்த இடம் (இந்தியா) தமிழ்நாடு. அங்கு சென்றடைந்து அந் நாடு அகதிகளை நடத்தும் முறை பொலிஸாரின் பல்வேறுபட்ட நெருக்குவாரங்கள் ஆட்சியாளர்களின் கடும்போக்கு கண்டுகொள்ளாத்தன்மை தரப்படுத்தல்களை பார்த்து சொந்த நாட்டிலேயே செத்துவிடலாம் என திரும்பியவகள் ஏராளம். வழியில் கடலில் மாண்டவர்கள் ஏராளம். வேறு வழியின்றி தமிழ்நாட்டில் தங்கியவர்கள் கொத்தடிமைகள்போலவும் பழங்குடிகள் போலவும் முகாங்களில் அடைக்கப்பட்டு காலத்தை கழித்துக்கொண்டும் இருக்கின்றனர் பலர் சிறைச்சாலைகளில் காலவரயறையின்றி அடைக்கப்பட்டுமிருக்கின்றனர்.

முகாம்களைவிட்டு வெளியேறி சுயமாக உழைத்தும், வெளிநாட்டு உறவினர்களின் உதவியுடனும் வாழ்க்கை நடத்துபார்களும் இருக்கின்றனர். ஒருசில ஈழ ஆதரவு கட்சிகள் அமைப்புக்கள் தவிர, இந்திய தமிழக  ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரமிக்க அதிகாரிகள் ஈழத்தமிழர்களை மனிதர்களாக மதிப்பதில்லை என்றே குற்றச்சாட்ட தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.

"அவர் தள்ளி விட்டுட்டாரு தன்னுடைய எதிர்காலத்தை பாக்க ஆரம்பிச்சுட்டாரு", என்று தீர்ப்பு வழங்கியிருக்கும் நிர்மலா அவர்கள் தனது பெற்ற மகளுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் இப்படித்தான் நடந்து கொள்ளுவாரா? அல்லது தமிழ்நாட்டு பெண்ணாக இருந்திருந்தால் எப்படி நடந்திருக்கிறார் என்பதை முன்னைய நிகழ்ச்சிகளில் கண்டுகொள்ளலாம். 14, 15 வயது பெண்களுக்கே திருமணம் நடத்தி வைக்க பேச்சுவார்த்தை நடத்திய நிர்மலா கணவனை பிரிந்து மறு மணத்துக்கு தயாராக இருந்த ஒரு அகதிப்பெண்ணுக்கு பாரபட்சமாக துவேஷித்து விரட்டிய நிகழ்வு மனச்சாட்சியுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

நிர்மலாவின் இந்த காழ்ப்புணர்வால் zee தமிழ் தொலைக்காட்சிக்கும் களங்கம் என்பதை தொலைக்காட்சி நிர்வாகம் புரிந்து கொண்டு திரும்பவும் கிருசாந்தினியையும் பால்துரையையும் அழைத்து நியாயமான தீர்மானத்திற்கு வருவார்கள் என நம்புகின்றோம்.

சொல்லுவதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலம் நாடற்ற அகதியான கிருசாந்தினி போன்ற அபலைகளுக்கு நிர்மலா பெரியசாமியால் ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கிறது.

''ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்''.
- ஊர்க்குருவி-