21.5.1991 அன்று, முன்னாள் இந்தியபிரதமர் ராஜீவ், ஶ்ரீ பெரும்புத்தூரில் திட்டமிடப்பட்ட மனித வெடிகுண்டால் வெடிவைக்கப்பட்டு சிதறடித்து கொல்லப்பட்டார்.
அந்த கொலை வழக்கில் உண்மையான குற்றவாளி யார் என்பது இன்னும் எவருக்கும் தெரியாத மர்மமாகவே இருந்து வருகிறது.
இந்திய அரசு தரப்பிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகள் தான் ராஜீவ் கொலை
குற்றவாளிகள் என்றும், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ராஜீவ் கொலையை
விசாரித்த அதிகாரிகள் ஓய்வு பெற்றபின் வழங்கிவரும் தகவல்
வாக்குமூலங்களிலிருந்து ஆட்சியாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலர் ராஜீவ்
கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், விடுதலைப்புலிகள் இயக்கம் அந்த
கொலையில் சந்தற்ப வசமாக பொருத்தப்பட்டிருப்பதாகவும், அமெரிக்கா ரஷ்யா
போன்ற நாடுகளில் கொலைக்கான திட்டங்கள் இந்திய அதிகார உயர் மட்டங்களால்
தீட்டப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக இருந்து வந்தன.
மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவலாக ராஜீவின் ஆட்சிக்காலத்திலும்
அதன் பிற்பாடும் தேசிய பாதுகாப்பு அதிகாரியாக இருந்த எம் கே நாராயணனுக்கு
ராஜீவ் கொலையில் பங்கு இருப்பதாகவும் ராஜீவ் கொலைசம்பந்தமான ஆவணத்தை பதிவு
செய்து வைத்திருந்த ஒளி நாடாவை அவர் திட்டமிட்டு அழித்துவிட்டதாகவும்,
நாராயணன் தவிர சுப்பிரமணிய சுவாமி, மற்றும் சந்திரா சுவாமி ஆகியோர் ராஜீவ்
கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் பல மட்டங்களில்
இன்றும் உண்டு.
இந்திய பிரதமர் ராஜீவ் தன்னிச்சையாக இந்தியப்படையை இலங்கைக்கு அனுப்பி
அங்குள்ள அப்பாவி தமிழர்கள் பலர் கொல்லப்பட காரணமாக இருந்தார் என்றும் பல
தமிழ்ப் பெண்கள் இந்திய இராணுவத்தால் ஈவிரக்கமில்லாமல் கற்பழிக்கப்பட
எழுவாயாக இருந்தவர் என்பதனால் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம்தான்
முன்னாள் பிரதமரான ராஜீவை திட்டமிட்டு கொலை செய்து பழி தீர்த்துக் கொண்டனர்
என்று இந்தியத்தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது,
அந்த கொலை சம்பந்தமாக ஈழ்த்தமிழர்கள் உட்பட பலர்மீது
குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. ராஜீவை கொலைசெய்தவர்கள் என
சந்தேகப்பட்டவர்கள் உட்பட குற்றஞ்சாட்டப்பட்ட பலர் இன்று உயிருடன் இல்லை.
ஆரம்பத்திலிருந்து இந்த வழக்கை விசாரித்த உயர் அதிகாரிகள் உட்பட வழக்கை
விசாரித்த நீதிமன்றங்கள் வரை நடைபெற்ற விசாரணைகள் அனைத்திலும் அரசியல்
தலையீடு ஒருதலைப்பட்ஷமாக இருப்பதாக பல மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்
சாட்டி வந்திருக்கின்றனர், அத்தகய நடைமுறைக்கு பலதரப்பிலிருந்தும் மனித
உரிமை கழகங்கள் மற்றும் மனிதாபிமான மனித உரிமை ஆர்வலர்களிடமிருந்து
பெருத்த எதிர்ப்பும் கண்டனங்களும் அவ்வப்போது உண்டாகி பெருத்த
வாதப்பிரவாதங்கள் பல்வேறுபட்ட தளங்களில் உருவாகி பல சந்தேகங்களை
கிளப்பியிருந்தது,
அது சம்பந்தமாக பல இடங்களில் பல முறை பல பொதுநல வழக்குக்கள் பதிவாகியும் இருந்தன.
அதிர்ச்சி கரமான தகவலாக ஆரம்பத்தில் வழக்கை விசாரித்த அதிகாரிகள் பலர்
அந்த கொலை வழக்கு விசாரணை நீதியாக நடைபெறவில்லையென்றும் உயர் மட்டங்களால்
தாம் நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் சமீப காலங்களில் பகிரங்கமாக
வாக்குமூலம் கொடுத்திருந்தனர், சிலர் தமது எதிர்ப்புக்களை
பகிரங்கப்படுத்தி புத்தகமாகவும் வெளியிட்டுள்ளனர்.
அரசியல் தலையீட்டை அவ்வளவு இலகுவாக புறந்தள்ளி நடுநிலையான தர்ம
நீதிக்கு உட்பட்டு வழக்கை முடிவுக்கு கொண்டுவர மனித உரிமை ஆர்வலர்களால்
முடியாமல் போனது.
ஒரு கட்டத்தில் செங்கொடி என்ற மான தமிழச்சி வீரமங்கை அரசியற் தலையீட்டு
அராஜகத்திற்கு எதிராக குரல் கொடுத்து வெறுப்படைந்து தீக்குளித்து தனது
இன்னுயிரை மாய்த்துக்கொண்டார்,
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் ராஜீவ் கொலையில்
குற்றவாளிகளாக உருவகப்படுத்தப்பட்டு மரண தண்னைக் கைதிகளாக இருபத்து மூன்று
வருடங்கள் சிறையில் கழித்திருக்கின்றனர். அந்த மூவர் தவிர முருகனின் மனைவி
நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன், ஆகியோரும் ஆயுட்
கைதிகளாக இந்த இருபத்து மூன்று ஆண்டுகளை சிறையில் கழித்திருக்கின்றனர்.
இந்த நிலையில் 18.2.2014 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் முருகன்,
சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது மரண தண்டனையை ஆயுட் தண்டனையாக குறைத்து
தீர்ப்பு வழங்கியது.
ராஜிவ் கொலை குறித்த வழக்கு, பூந்தமல்லி தடா நீதிமன்றத்தில் விசாரணை
செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கு தூக்கு தண்டனை
விதிக்கப்பட்டது.
தடா நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் உச்ச
நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம்,
நளினி, முருகன் சாந்தன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேரின் தூக்கு
தண்டனையை உறுதி செய்தும் ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன்,
ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும், மீதமுள்ள 19
பேரை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தது.
அந்தத் தீர்ப்பை எதிர்த்து, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களும்
உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தனர். மறு ஆய்வு மனுவினை
விசாரித்த உச்ச நீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்து 8.10.1999 அன்று
தீர்ப்பளித்தது.
அதனைத் தொடர்ந்து, மேற்கண்ட தூக்கு தண்டனை கைதிகள் தமிழக ஆளுநர்
அவர்களுக்கு 17.10.1999 அன்று கருணை மனுக்களை சமர்ப்பித்தார்கள். அந்த
கருணை மனுக்கள் அரசியற் தலையீடு காரணமாக 27.10.1999 அன்று தமிழக ஆளுநரால்
நிராகரிக்கப்பட்டன.
தமிழக ஆளுனரின் ஆணையினை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தூக்கு
தண்டனை கைதிகளால் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இவற்றை விசாரித்த சென்னை உயர்
நீதிமன்றம், மனுதாரர்கள் தொடுத்த வழக்குகளை ஏற்று, “கருணை மனுக்களை
நிராகரித்த ஆளுநரின் ஆணையை தள்ளுபடி செய்ததோடு” , அமைச்சரவையின் ஆலோசனையைப்
பெற்று புதிய ஆணை பிறப்பிக்குமாறு ஆளுனருக்கு 25.11.1999 அன்று உத்தரவு
பிறப்பித்தது.
இதற்கிடையில் ஏதோ அரசியற் காரணங்களை கருத்தில்க் கொண்டு ராஜீவின் மனைவி
சோனியா நளினிக்கு தூக்கு தண்டனையிலிருந்து விதிவிலக்கு அளிக்குமாறு
கேட்டிருந்தார்.
சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி
தலைமையில் 19.4.2000 அன்று நடைபெற்ற அமைச்சரவை க் கூட்டத்தில் தூக்கு
தண்டனை வழங்கப்பட்ட நான்கு கைதிகளில் ஒருவரான நளினிக்கு ஒரு பெண் குழந்தை
இருப்பதை கருத்தில் கொண்டு சோனியா கருணை காட்டும்படி கூறியதால் நளினி
ஒருவருக்கு மட்டும் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும்,
மற்றவர்களைப் பொறுத்த வரையில் நீதிமன்றத்தின் முடிவை பின்பற்றி அவர்களது
கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க
கருணாநிதியின் அமைச்சரவை முடிவெடுத்தது.
கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவிற்கு அப்போதய தமிழக ஆளுநர்
21.4.2000 அன்று ஒப்புதல் அளித்தார். அதன்படி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4
நபர்களில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை உறுதி
செய்யப்பட்டது. நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக
குறைக்கப்பட்டது.
கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை முடிவினால் அதிர்ச்சியடைந்த சாந்தன்,
முருகன் பேரறிவாளன் ஆகிய மூவரும் இந்திய ஜனாதிபதிக்கு கருணை மனுக்களை
அனுப்பி வைத்தனர்.
கருணை மனுக்களை 28.4.20 00 நாளிட்ட கடிதத்தின் வாயிலாக தமிழ்நாடு அரசு
மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. 28.4.2000 அன்று தமிழக அரசால் மத்திய
அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் மீது 11 ஆண்டுகளாக எவ்வித
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
12.8.2011 நாளிட்ட கடிதத்தின் மூலம், இந்திய ஜனாதிபதி அந்த கருணை
மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்த மத்திய உள் துறை
அமைச்சகம், இந்தத் தகவலை மேற்கண்ட கைதிகளுக்கு தெரியப்படுத்துமாறு தமிழக
அரசை கேட்டுக் கொண்டதுடன். மூவருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றும்
முன்னேற்பாட்டு வேலைகளையும் திரை மறைவில் தயாராகியது. உள்த்துறை அமைச்சின்
தூக்கு தண்டனை நிறைவேற்ற இருக்கும் தகவல்கள் சம்பந்தப்பட்ட கைதிகளுக்குத்
தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், பேரறிவாளன், சாந்தன் முருகன் ஆகிய மூன்று பேரையும்
தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் இந்தக் கோரிக்கையை
வலியுறுத்தின.
செங்கொடி என்ற வீர மங்கை மத்திய அரசின் அதிர்ச்சியான முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து உயிர் நீத்தார்.
மேற்படி மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க முடியாது
என்று தனது தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்த முன்னாள்
முதலமைச்சர் கருணாநிதி இவர்களை காப்பாற்ற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்திரிகைகளுக்கு பேட்டியளித்து அரசியல்
செய்து வழமையான குத்துக்கரணத்தை அடித்தார்.
தமிழ்நாடு மக்களும் பல அமைப்புக்களும் மரணதண்டனை நிறைவேற்றக்கூடாது
என்று பெரும் போராட்டத்தில் ஈடுபட்டன அதன் பின்னணியில் சாந்தன் முருகன்
பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, அவர்களின் மரண
தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற
தீர்மானத்தினை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவையில் கொண்டுவந்தார்,
ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய
அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தீர்மானத்தின்மீது இரண்டரை ஆண்டுகளாக மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும்
எடுக்கவில்லை. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையால் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட
தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் வரை,
அதாவது மார்ச் 2013 வரை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் தி.மு.க. அங்கம்
வகித்தது.
காங்கிரஸ் ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கமாட்டார்கள் என்று
தெரிந்த சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில்
மனுக்கள் தாக்கல் செய்தனர்.
மனுக்களில், தங்களுடைய கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க 11 ஆண்டு
காலதாமதம் ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டும், கடந்த 23 ஆண்டுகளாக சிறையில்
இருப்பதைக் கருத்தில் கொண்டும். தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க
வேண்டும் என்றும் கோரியிருந்தனர். பின்னர் இந்த வழக்குகள் சென்னை உயர்
நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டன.
இது குறித்த விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற போது , இவர்களின்
தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கூடாது என்று மத்திய காங்கிரஸ்
கூட்டணி அரசின் சார்பில் ஆஜரான மத்திய தலைமை வழக்குரைஞர் எடுத்துரைத்தார்.
மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்று,
அவர்களுடைய தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 18.2.2014 அன்று
தீர்ப்பளித்ததோடு, ஆயுள் தண்டனை என்பது வாழ்நாள் முழுவதும் சிறைவாசம்
என்றும் எனினும் குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 432 மற்றும் 433 ஹ
ன்படி, அரசு எடுக்கும் தண்டனை மாற்றுதல் அல்லது தள்ளுபடி செய்தல்
நடவடிக்கைக்கு உட்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வெளிவந்தவுடன், அதுகுறித்து
9.2.2014, காலை முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தலைமையில் அமைச்சரவைக்
கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்ட த்தில் சாந்தன், முருகன் பேரறிவாளன்
ஆகியோர் 23 ஆண்டுகளாக சிறைச்சாலையில் இருந்து வருவதைக் கருத்தில் கொண்டு,
குற்ற விசாரணை முறைச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள
அதிகாரத்தின் அடிப்படையில், அவர்களை உடனடியாக விடுதலை செய்யலாம் என தமிழக
அரசு முடிவு செய்திருக்கிறது.
அத்துடன் ஆயுள் கைதியாக 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி ,
ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்யலாம்
என்று தமிழ்நாடு அரசில் முடிவு எடுக்கப்பட்டது.
இந்த வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பினால் (CBI) புலனாய்வு
செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தடா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டதால், குற்ற விசாரணை முறைச் சட்டம்
435-ன்படி, தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவு குறித்து மத்திய அரசுடன்
கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என்ற சம்பிரதாயம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
எனவே மத்திய அரசின் கருத்தினைப் பெறும் வகையில், சாந்தன், முருகன்,
பேரறிவாளன் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு
பேரையும் விடுதலை செய்யலாம் என்ற தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவு மத்திய
அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா
தெரிவித்திருக்கிறார்.
மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம்
தாழ்த்தினால், இந்திய அரசமைப்புச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு அளிக்கப்
பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட
முடிவின்படி சாந்தன், முருகன், பேரறிவாளன் நளினி , ராபர்ட் பயஸ்,
ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்படுவார்கள் என்ற
மகிழ்ச்சி கரமான செய்தியை முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றின் மூலம்
தெரிவித்திருக்கின்றார்.
சாந்தன் முருகன் பேரறிவாளன் ஆகியோர் சந்தற்ப வசமாக ராஜீவ் கொலையில்
சிக்கிய பலியாடுகள் என்று விமர்சனங்கள் வந்தாலும் காலச்சக்கர சுழற்சியில்
தர்மம் வென்றிருக்கிறது.
நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து தனது அதிகார செல்வாக்கை பயன்படுத்தி
தண்டனை கைதிகளை விடுதலை செய்ய முயன்றிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா
அம்மையாரை மிகுந்த நன்றி உணர்வுடன் தமிழ்ச்சாதி சிரம் தாழ்த்தி
வணங்குகிறது,
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே,
இருட்டினில் நீதி மறையட்டுமே,
தன்னாலே வெளிவரும் தயங்காதே,
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே,
என்ற கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பாடலின் தத்துவம் இங்கே நிஜமாகியிருக்கிறது.
ஈழதேசம் செய்திகளுக்காக. கனகதரன்.