Saturday, February 13, 2016

ஒரு நாள் பயணமாக யாழ்ப்பாணம் முள்ளிவாய்க்கால் போன வைரமுத்தர் ஈழ காவியம் எழுதுவாராம்?ஒருநாள் பயணமாக முள்ளிவாய்க்கால் போன பாட்டுக்கார வைரமுத்து ஈழ காவியம் எழுதுவாராம்?

 

படப் பாட்டுக்காரர் வைரமுத்து அவர்களுக்கு அதிகம் படிக்காத ஊர்க்குருவி மிகுந்த கவலையுடன் கொதிநிலையில் எழுதும் ஒரு உறைப்பான மடல்.

நான் எதையும் இட்டுக்கட்டி உங்கள்மீது போறாமை கொண்டு சேற்றை வாரி இறைப்பதற்காக இம்மடலை எழுத முன்வரவில்லை. அதற்கு எனக்கு நேரமும் இல்லை அப்படியான இயல்பும் எனக்கில்லை.

நீங்கள் இலக்கணத்திற்கு உட்படாமல் பத்து வரியில் ஒரு படத்துக்கு ஒரு பக்கம் பாட்டெழுதினால் பல இலட்சங்கள் கிடைக்கும், ஆனால் நான் பத்து இருபது பக்கங்கள் பரணி பாடினாலும் விற்பனைக்கு எழுதுபவனல்ல.

சமீபத்தில் நீங்கள் எழுதி படரவிட்ட ஒப்பாரி கவிதை ஒன்று ஆனந்த விகடன் இதழில் வெளிவந்ததாக குறிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் உலவ விடப்பட்டிருந்தது.

ஆறு ஆண்டுகள் காலங்கடந்து நீங்கள் எழுதி வெளியிட்ட அந்த ஒப்பாரியை படிப்பவர்கள் ஈழப்போரையும் அன்று ஈழப்போராட்டத்தை நசுக்கி அழிப்பதற்காக சூழ்ந்திருந்த பின்னணியையும் புரியாதவர்களாக இருக்கவேண்டும் அல்லது உங்களை தெரியாதவர்காளாக இருக்க வேண்டும்.

ஈழப்போர் உச்சத்தில் இருந்தபோது பதின்நான்கு பதினைந்து வயதாக வைரமுத்துவைப் பற்றி அறியாமல் இருந்தவர்கள்தான் இன்றைக்கு இருபது வயதாகி உங்கள் பின்னணி தெரியாமல் உங்களை வரவேற்பவர்களாக இருந்திருக்கின்றனர். நானும் எனது வயதை ஒத்தவர்களும் எனது மூத்தோரும்தானே உங்களையும் உங்கள் உள்ளுடன் அறிந்தவர்களாக இருக்கின்றோம். துரதிஷ்ட வசமாக நாங்கள் நாட்டில் வாழ முடியாமல் அகதியாக வெளியேறியது நீங்கள் முள்ளிவாய்க்கால்வரை சென்று செல்பி எடுத்து முகாரி ராகத்தில் ஒப்பாரிபாடி கொண்டாட முடிந்திருக்கிறது.

தமிழனாக ஒரு படைப்பாளி என்று கூறிக்கொள்ளும் நீங்கள் இனப்படுகொலை நடந்தபோது சார்ந்து பதுங்கியிருந்த இடம் எப்பேர்ப்பட்டது என்பதை அறியாதவர்கள் அந்த ஒப்பாரி வரிகளை உட்கார்ந்து உணர்ச்சி வசப்பட்டு கொதிநிலை அடையாமல் உண்மையான உங்கள் உள்ளக்கிடக்கைதான் அதுவென்று நினைத்து அப்பாவித்தனமாக சிலாகித்து படிக்க முடியும்.

எனக்கெல்லாம் இனப்படுகொலை என்ற வார்த்தையை யாராவது சொல்ல கேட்கும்போது 2009 போரின் கடைசி நாட்களை நினைக்கும்போது எங்கள் தோல்வியை நினைத்து நெஞ்சு கொதிக்கும்போதெல்லாம் ராஜ பக்‌ஷவோ சிங்களவனோ நினைவுக்கு வருவதில்லை மாறாக கருணாநிதியும் அவரது பரிவாரங்களான உங்களையும்தான் நான் மறக்காமல் நினைவு கூருகின்றேன.

உங்களைப்போன்ற வெகுஜன மதிப்பு பெற்ற காத்திரமான ஊன்றுகோல்களின் உதவி இல்லாமல் கருணாநிதியால் அன்றைக்கு ஈழத்தமிழினத்துக்கு எதிராக அவ்வளவு பெரிய மோசமான நிலையை எடுத்திருக்க முடியாது.

நீங்கள் மட்டுமல்ல சுப வீரபாண்டியன், வீரமணி, ரஜனிகாந்த், வாலி, இப்படி வெகுஜன கவர்ச்சி கொண்ட ஒரு பெரும் கூட்டம் கருணாநிதிக்கு அரணாக நின்றதன் விளைவு கருணாநிதியால் ஈழப்போராட்டத்தை அழித்து பெரும் இனப்படுகொலையை நிறுவ முடிந்தது,

அவரால் பல நாடகங்களை நியாயப்படுத்த முடிந்தது.

உங்கள் கவிதையை சமூக வலைத்தளங்களில் படித்தவர்களில் அனேகமானோர் படு மோசமாக தாறுமாறாக உங்களையும் உங்கள் கவிதையையும் விமர்சித்திருந்தனர். நீங்கள் அந்த விமர்சனங்களை கவனிக்காமல் இருந்திருக்க முடியாது.

வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும் ஏன் அந்தளவுக்கு நீங்கள் விமர்சிக்கப்பட்டீர்கள் என்பது உங்களுக்கு புரியாமல் இருப்பதற்கு நீங்கள் அவ்வளவு மக்கு கிடையாது.

உங்கள் புரிதலுக்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அடிக்கடி கூறும் ஒரு ஒப்புவமையை எடுத்துக்காட்டலாம் என்று நினைக்கின்றேன்.

இலங்கையில் ராஜபக்‌ஷவுடன் கூட்டாக சேர்ந்து நின்று போரை நடத்தி பல இலட்சம் மக்களை இனப்படுகொலை செய்தது இந்திய முன்னாள் மத்தியில் அதிகாரம் வகித்த சோனியா மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, அந்த அனீதியை தட்டிக்கேட்காமல் கண்மூடி மௌனமாக இருந்தது அப்போ எதிர்க்கட்சியாக இருந்த பாரதிய ஜனதா கட்சி ( பாஜக)

2007/ 2008/ 2009 களில் கடுமையான போரின்போது காங்கிரஸ் சர்க்காருக்கு சகல விதத்திலும் ஒத்துழைத்து குடும்பத்துக்கு பதவி சுகங்களை பெற்றுக்கொண்டு ஒரு பட்ட மரத்தின் இயல்போடு காங்கிரஸுக்கு பேருதவி புரிந்தவர் திமுக தலைவர் கருணாநிதியும் அவரது தலைமையிலான திமுக அரசும்.

சம காலங்களிலும் பின்னரும் கடலில் மீன்பிடிக்க சென்ற தமிழகத்து மீனவர்கள் பல நூற்றுக்கணக்கானோரை சுட்டுக்கொன்றது ஸ்ரீலங்கா இராணுவம், கடலில் எல்லை மீறினால் சுட்டுக்கொல்லுவோம் என்று இலங்கையின் ஆட்சியாளர்கள் மகிந்த ராஜபக்‌ஷ ,மற்றும் இந்நாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பகிரங்கமாக பிரகடனம் செய்தனர் ஆனால் ஸ்ரீலங்கா இராணுவத்தை இராணுவ எதிர்வினைச் செயற்பாட்டு மூலமோ அல்லது அரசியல் ரீதியாகவோ காங்கிரஸ் அரசோ பாரதிய ஜனதா அரசோ ,மாறாக தமார்களின் தாய்மாமன் என்று சொல்லி ஆட்சி புரிந்துவந்த மாநில திமுக அரசோ எதிர்க்கவில்லை,

இந்த விடயங்களை பல அமைப்புக்கள் அரசியற் கட்சிகள் தட்டிக்கேட்டு தெருத்தெருவாக ஜனநாயக ரீதியில் பல போராட்டங்கள் நடத்தின அப்படியான வெகுசன போராட்டங்களை இந்திய ஆட்சியாளர்கள் எவரும் கண்டுகொள்ளவில்லை, நிலமை தீவிரமாகும் தருணங்களில் அப்போ ஆட்சியில் இருந்த மன்மோகன்சிங்காக இருக்கட்டும் இப்போ ஆட்சியிலுள்ள நரேந்திர மோடி ஆக இருக்கட்டும் கூறிக்கொண்ட நியாயம் ஸ்ரீலங்கா இந்தியாவின் உற்ற நண்பன் அவர்களுடன் முரண்பாடாக நடக்க முடியாது என்பதாகவே இருந்து வருகிறது.

இந்த இடத்தில் சீமான் வைக்கும் கேள்வி என்னவென்றால் ஸ்ரீலங்காவிலிருக்கும் சிங்களவன் என் இனத்தை சுட்டு கொல்லுகின்றான் அவன் இந்தியாவின் மத்திய சர்க்காரில் இருக்கும் உனக்கு நண்பனாக இருந்தால் ஒரு இந்திய குடிமகனாக இந்தியாவில் பிறந்து வளர்ந்து கடலில் தினம் தினம் கேட்பார் இல்லாமல் கொல்லப்படும் நாங்கள் யார்?

அப்படியானால் நீ எப்படி இந்த மண்ணில் பிறந்த எனக்கு பாதுகாவலனாக முடியும்? நீ எப்படி என்னை காத்தருளும் ஒப்பற்ற ஆட்சியாளனாக இருக்க முடியும்.

என்று சீமான் பல மேடைகளில் கேள்வி எழுப்பிவருகிறார். அது நியாயம் சத்தியம் என்றே மக்களும் சீமானை பின்தொடர்ந்து அணி திரளுகின்றனர்.

அதே கேள்வியைத்தான் நான் உங்களை நோக்கி வைக்கின்றேன், மத்திய ஹிந்தி சர்க்காருடன் இணைந்து எம்மை அழிக்க நாளொரு நாடகம் ஆடி அனைத்து சதிகளையும் அரங்கேற்றிய மேடைகளில் கருணாநிதியை தூக்கி நிறுத்தி பின்பாட்டு பாடிய நீங்கள் இன்று இரங்கல் கவி பாடியதன் பின்னணி நடக்கவிருக்கும் தேர்தலில் வீழ்ச்சியிலிருக்கும் கருணாநிதியை தூக்கி நிறுத்துவதற்கான அரசியலா அல்லது புதியவர்களின் வரவால் சினிமாவில் பாட்டெழுத சந்தற்பம் குறைந்துபோய் வறட்சியுற்றிருக்கும் சங்கடத்தை நிறைவு செய்வதற்காக பொற்கிழி வாங்கிப்போக வந்த கீழ்நிலையா?

உங்கள் கூட்டு சதியால் கொல்லப்பட்ட எனது உடன்பிறப்புக்களின் இடுகாட்டில் நின்று இன்றைக்கு நீலிக்கண்ணீர் வடித்து முகாரி பாடி பணமுடிச்சு பெற்று போகும்போது உங்களுக்கு கூச்சமாக இருக்கவில்லையா.

எனக்கு புரியவேயில்லை தமிழ்நாட்டின் பாமர மக்களால்த்தான் எங்களுக்கு பலமும் தமிழ்நாட்டின் அரசியல் சினிமா வியாபாரிகளால்த்தான் எங்கள் துயரமும் இரண்டறக்கலந்து இருக்கிறது. இது உங்களால் எப்படி வைரமுத்து முடிகிறது.

உங்களை நான் ஒரு காலத்தில் மறைந்த கவியரசு கண்ணதாசனின் இடத்தை நிரப்பவந்த ஒரு ஆளுமையாக கற்பனை பண்ணியதுண்டு, பின் ஒரு காலத்தில் பறவை முனியம்மாவின் பாடலின் தரத்தில் உங்கள் பாடல்களை கண்டு ஏதோ நடக்கட்டும் என்ற மனநிலையுடன் பார்த்ததுமுண்டு. இப்போ நீங்கள் முள்ளிவாய்க்கால் செல்வதற்கு பணம் பெற்றுக்கொண்டதாக அறிந்தபோது உங்கள் வறுமைநிலை உங்களை தரை மட்டத்துக்கு இறக்கிவிட்டதை எண்ணி வருந்தியதுமுண்டு.

அடுத்து நீங்கள் ஈழ காவியம் எழுதப்போவதாக ஒரு வதந்தி உலவுகிறது. அது உண்மையாக இருக்க முடியாது என்றுதான் நான் நினைக்கிறேன் ஏனெனில் அங்கு பிறந்து வளர்ந்த என்போன்றவர்களுக்கே ஈழ வரலாறு முழுவதும் புரியாதபோது ஒருநாள் பயணமாக யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு சென்று வந்த உங்களால் ஈழம் பற்றி ஒரு கற்பனை காவியத்தை த்தான் படைக்க முடியும்.

வந்தேறியான சிங்களவன் மகாவம்ஷம் என்ற பெயரில் ஒரு வரலாற்று திரிவு ஒன்றை எழுதி அதை வரலாறாக்கியதுபோல உங்கள் காவியமும் ஈழ மக்களுக்கு சிக்கலாகிவிடக்கூடாது என்பது எனது கருத்து.

ஊர்க்குருவி.