2011, ஏப், தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டசபைத்தேர்தல் இலகுவில் தமிழர்களால் மறந்துவிடமுடியாத ஒரு மாபெரும் அரசியல்ப் புரட்சி என்று கொள்ளலாம்.
திடமான உயிரோட்டத்துடன், துரோகத்திற்கு எதிரான பெரும் களையெடுப்பாக, மிகவும் உணர்ச்சிமயமாக சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்தது.
உலகத்தமிழர்கள் அனைவரும் விரும்பி எதிர்பார்த்தவண்ணம் மகிழ்ச்சிகரமாக தேர்தல் முடிவுகள் எந்த குளறுபடிகளும் இல்லாமல் வெளிவந்தன.
சட்டசபைத்தேர்தல் மூலம், தமிழினத்தின் வெறுப்புக்குள்ளான அரசியல் வா(வியா)திகளான, திமுக, மற்றும் காங்கிரஸ், பாமக, விசி. ஆகியவை தமிழக மக்களால் திருப்திகரமாக (தோற்கடிக்கப்பட்டன) விரட்டியடிக்கப்பட்டன.
இக்கட்சிகள் (அரசியல் வியாதிகள்) தோற்கடிக்கப்பட்டமைக்கு இரண்டு முக்கிய காரணங்கள் அலசப்படுகின்றன.
1) ஈழ இன அழிப்பில் ஸ்ரீலங்கா சிங்கள ஆட்சியாளர்களுடன் இணைந்து இந்திய காங்கிரஸ் அரசு பகிரங்கமாக படுகொலைகளில் ஈடுபட்டதென்றும், கொலைக்குற்றவாளியான காங்கிரசுடன் கூட்டு வைத்துக்கொண்ட கருணாநிதியின் தலைமையிலான, திமுக, எந்தவித குற்ற உணர்வுமில்லாமல். தனது வாரிசுக்களின் பதவியை குறியாகக்கொண்டு, வஞ்சகமான நாடகங்களை நடத்தி, ஈழத் தமிழர் கொலைகளை நியாயப்டுத்தி. தமிழகத்து தமிழர்களின் உணர்வுகளை காலடியில் போட்டுமிதித்து, காங்கிரஸுக்கு உதவி தமிழினத்தை ஏமாற்றியது.
இதுகண்டு கொதிப்படைந்த தமிழகமக்கள் தமது எதிர்ப்பை தேர்தலில் மூலம் வெளிப்படுத்தி, துரோக கூட்டங்களுக்கு சரியான பாடம் புகட்டியிருந்தனர் என்பது ஒருகாரணமாகவும்.
2)மேல் சொன்ன காரணங்களுடன், இந்தியாவின் வரலாற்றில் மிக மிகப்பெரிதான 176,000. கோடி. ஸ்பெக்ரம், அலைக்கற்றை, மற்றும் உள்ளூர் ஊழல்கள் அனைத்தும், திமுக தலைமையின் வழிகாட்டலில் திமுக குடும்பமே அதிகளவில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டும் எழுந்திருந்தது.
அத்துடன் கருணாநிதியின் குடும்ப வாரிசுகளின் ஆதிக்கம், ஒட்டுமொத்த திமுக கட்சியையும், நாட்டின் தொழில்த்துறையையும் சூரிய கிரகணமாக கௌவிவிட்டதென்ற குற்றச்சாட்டும் தமிழக மக்களை வெறுப்புக்குள்ளாக்கியதாக ஒரு கருத்தும் உண்டு.
எப்படியிருப்பினும் ஈன இரக்கமில்லாமல் ஈழ இன அழிப்பின்போது அவற்றை மூடிமறைத்து, கருணாநிதி நடத்திய பல்வேறு வஞ்சக நாடகங்களும், அவற்றை பூசிமெழுகுவதற்காக அவர் தொடர்ந்து கடைப்பிடித்துவந்த படு மோசமான பொய்யான வாக்குறுதிகள், முன்னுக்குப்பின் முரணான பேச்சுக்கள் மக்களை மிகுந்த கோபத்துக்கு ஆளாக்கியிருந்தது.
இந்த வெறுப்பின் பிரதிபலிப்பே திமுகவின் படு வீழ்ச்சிக்கு முக்கியகாரணம் என்பதுதான் யதார்த்தமான நிதர்சனம். உதிரியாக கருணாவின் குடும்ப ஆதிக்கமும் ஸ்பெக்ரம் ஊழலும் சேர்ந்து மக்களின் வெறுப்புக்கு இன்னும் அதிக வீரியத்தை கூட்டியிருந்தது என்பதும் மறுப்பதற்கில்லை.
இப்படிப்பட்ட தமிழ் இன எதிரியான திமுகவுடன், கூட்டுவைத்துக்கொண்டு நல்லபிள்ளைபோல் காண்பித்து திமுக குதிரையில் சவாரி செய்த பச்சை சுயநலவாதியான திருமாவும், நின்ற இடம் தெரியாமல் கழுவி சுத்தப்படுத்தி சாக்கடையில் தள்ளப்பட்டிருக்கிறார்.
அதேகதிதான் ஒவ்வொரு தேர்தலிலும் சந்தர்ப்பவாதத்தை கொள்கையாகக் கொண்டு வெவ்வேறு பறவைகளின் கூடுகளில் மாறி மாறி அடைக்கலம் தேடும் குலக்கொளுந்து, வைத்தியர் ராமதாஸின் பாமகவுக்கும் பரிசாக கிடைத்திருக்கிறது.
துரோக திமுகவுக்கும், கொலைக்கட்சி காங்கிரஸுக்கும், எதிராக உருவான மக்களின் உயிரோட்டமான எதிர்ப்பலை, எதிரணியில் போட்டியிட்ட ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அதிமுகவுக்கு சாதகமாக அமைந்ததில் வியப்பு எதுவும் இல்லை.
இன்னும் ஒரு அதி கூடுதல்க்காரணமாக விஜயகாந்த் அவர்களின் தலைமையிலான தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி அமைந்து கொண்டதையும் குறிப்பிடமுடியும்.
முன்பு நடந்த நாடாளுமன்றத்தேர்தலிலும், அதற்கு முந்திய சட்டசபைத்தேர்தலிலும் விஜயகாந்தின் தேமுதிக, தனித்து நின்று கணிசமான வாக்குகளை பிரித்து திமுகவுக்கு வெற்றிவாய்ப்பை ஈட்டியிருந்ததை கவனிக்க வேண்டும்.
விஜயகாந்தின் அரசியல் வருகைக்குப்பின், தமிழகத்தில் தேமுதிக கட்சிக்கு, கணிசமான ஆதரவு இருந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு தேர்தல்களிலும் கணிசமான வாக்குகளையும் அக்கட்சி பெற்று வந்திருக்கிறது.
தமிழ்நாட்டைப்பொறுத்தவரையில், கட்சிகளின் நிலைபற்றிய கருத்துக்கணிப்புக்கள் அனைத்தும் அரசியல் காழ்ப்புணர்வின் அடிப்படையிலேயே ஊடக வசதி, பண பலம் உள்ளவர்களால் தத்தம் கட்சிக்கு சார்பாகவே நடத்தப்பட்டு வந்திருக்கிறது. மக்கள் மனதில் உளவியல் ரீதியான ஒரு கிலியை உண்டுபண்ணவும் இந்த கருத்துக்கணிப்புக்கள் அரசியல்க் கட்சிகளால் மறைமுகமாகவும் நேரடியாகவும் நடத்தப்படுகின்றன.
இந்தவகையில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பெரிய கட்சிக்கும். அடிப்படையில் 10 சதவீத வாக்குக்கும் குறைவாகவே நிரந்தரமாக வாக்கு வங்கி இருக்கமுடியும். மற்றவை அனைத்தும் சூழ்நிலையைப்பொறுத்து மாறி மாறி உயர்வதும் தாழ்வதும் உண்டு.
ஒவ்வொரு தேர்தல்களிலும், 65/70 சதவீத அடித்தட்டு மக்கள் மட்டுமே தேர்தல்களில் ஈடுபாட்டுடன் வாக்களிக்க விரும்புகின்றனர். உயர் குடியினர் அண்ணளவாக பத்துச்சத வீதத்தினர் தேர்தல்களில் வாக்களிக்க விரும்புவதுமில்லை. இன்னும் ஒரு பத்துச்சதவீதத்தினர் சில கட்டாயப்படுத்தல்களால் வேண்டா வெறுப்பாக வாக்களிக்க முன்வருகின்றனர். சிலர் வாக்களிக்க முன்வருவதேயில்லை. பல ஆய்வுகள் மூலம் இத் தரவுகள் வெளியாகியிருக்கின்றன.
முக்கியமான காலகட்டங்களில் மக்களின் மதிப்பு பெற்ற தலைவர்களால் உருவாக்கப்பட்ட கட்சிகள் என்றவகையில், திமுக, மற்றும் அதிமுக கட்சிகள் தமிழ்நாட்டில் நீண்டகாலமாக பெரிய கட்சிகளாக உருவகப்படுத்தப்பட்டிருக்கின்றன, அதற்கு பேரறிஞர் அண்ணாத்துரை அவர்களும். புரட்சித்தலைவர் எம்ஜீஆர், அவர்களின் பெயரும் ஒரு காரணமாகும்.
அந்த பெரியவர்களின் பெயரை வைத்துக்கொண்டு மற்ற கட்சிகளை வளரவிடாமல் அக்கட்சிகளின் இன்றய தலைமைகள் சூழ்ச்சிசெய்வதும். தலையெடுக்கும் வேறு கட்சிகளை உடைத்து தமது கட்சியை பலப்படுத்த பின்பற்ற வைப்பதும் தொடர்ச்சியாக நடந்துவருவதை காணலாம்.
அந்த தந்தரத்தில் திமுக தலைவர் கருணாநிதி, முன்னிலையில் இருந்து வருகிறார்.
உதாரணத்திற்கு திமுகவில் முன்னொரு காலகட்டத்தில், முக்கிய சக்தியாக வைகோ அவர்கள் வளர்ந்து வருவது பொறுக்கமுடியாமல், கருணாநிதி வைகோவை பொய்க்குற்றச்சாட்டு சுமத்தி கட்சியிலிருந்து வெளியேற்றியிருந்தார்.
வைகோ அவர்களும் அவமானப்பட்டு பிரிந்து சென்று, மதிமுகவை தோற்றுவித்து தனியாக தேர்தலை சந்தித்து 18 சதவீத வாக்குக்களை பெற்று தனியான ஓர் இடத்தை பிடித்திருந்தார்.
திமுகவுக்கு போட்டியாக வைகோ சிம்மசொப்பனமாக உருவாகி தமிழக அரசியலில் வளர்வது கண்ட கருணாநிதி. பொறுக்கமுடியாமல். மதிமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகளை வஞ்சகத்தின் மூலம் உடைத்து தனது கட்சியில் இணைத்து சில பதவிகளையும் கொடுத்து தன்னுடன் இணைத்து வைக்கோவின் கட்சியை இல்லாமல் செய்யுமளவுக்கு கருணாநிதி சதி செய்தார். ஒருகட்டத்தில் தன்னால் விரட்டப்பட்ட வைகோ அவர்களை தனது கட்சிக்குள் தந்தரமாக உள்வாங்கி தனது சந்தற்பவாதத்தை களங்கமற நிரூபித்தார்.
தொடர்ச்சியாக, தமிழகத்தில் தலையெடுக்க முயற்சிக்கும் வெகுசன ஆதரவுகொண்ட அரசியல்க் கட்சிகளை உடைப்பது, அல்லது அக்கட்சியின் இரணடாம் நிலை தலைவர்களை பிரித்து தம் வசப்படுத்தி தம்முடன் கூட்டு அமைக்க தூண்டிவிடுவது, போன்ற செயற்பாடுகளையே தமிழ் நாட்டில் பெரியகட்சி என காட்டிக்கொள்ளும் திமுக, அதிமுக. இரண்டு கட்சிகளும் தொடர்ந்து செய்து வருகின்றன.
இதனால் மற்றக்கட்சிகள் தலைதூக்க முடியாமல் ஏதோ ஒருகட்சியுடன் சேர்ந்து உதவிக்கட்சி, என்ற நிரந்தரப் பெயருடன். கூட்டணியில் இணைந்து இரண்டில் ஒரு கட்சியை முன்நிறுத்தி ஆட்சி அமைக்க வழிசெய்துவிட்டு, கருவேப்பிலைக் கணக்காக வீசப்படுகின்ற கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கின்றன.
கடைசியாக நடந்த சட்டமன்றத் தேர்தல் சற்று வித்தியாசமான ஒரு சூழ்நிலையில் களம் கண்டது. அப்போது திமுக, மற்றும் காங்கிரஸ்கட்சி படுதோல்வி அடையும் என்றே அதிகமானவர்கள் திடமாக நம்பினர்,(மனதார விரும்பினர் என்றே சொல்லலாம்)
இருந்தும் திமுக தனது வழமையான தந்தர வாய் ஜாலத்தை பிரயோகித்து, தமது கட்சியே வெற்றி பெறும் என்ற மாயையை மக்கள்முன் அவிழ்த்துவிட்டு எவரையும் சிந்திக்கவிடாது திசை திருப்பும் வேலைகளை செய்தது. திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுக பணத்தை வாரியிறைத்தமுறை, அடியாட்கள் குண்டர்களை ஏவிவிட்டு வன்முறையில் தேர்தலில் வெற்றிபெற்ற முறை, பல சிறிய பெரிய அரசியல்க் கட்சிகளை அச்சப்பட்டு சிந்திக்கவும் வைத்தது. இந்தப்பயம் அதிமுகவையும் வெகுவாக பாதித்து செய்வதறியாது திகைக்க வைத்திருந்தது.
திமுக வென்றுவிடுமோ என்ற அச்சமே, தனித்து நின்று தேர்தலை சந்திப்பதென்றிருந்த, விஜயகாந்த் அவர்களுக்கு கூட்டணி அமைக்கும் சூழ்நிலை எண்ணத்தை உருவாக்கியதென்று சொல்லலாம்.
திமுகவின் அராஜகப்போக்கு தமிழகத்தில் ஒரு பலமான எதிரணியை உருவாக்க வழிகோலியது.
அதிமுகவுடன் இணைந்து, விஜயகாந்த், மற்றும் இடது சாரிகள். இந்திய கம்யூனிஸ்ட், சரத்குமார் அவர்களின் சமத்துவக்கட்சி, கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி, ஆகியவை ஒன்று சேர்ந்து ஒரு வலுவான அணியாக களம் கண்டன. மக்களும் இதை வரவேற்றனர்.
தேர்தலை நேரடியாக சந்திக்காவிட்டாலும் வெளியில் நின்று, காங்கிரஸை கருவறுப்பேன் என கர்ச்சித்த "செந்தமிழன் சீமான்". காங்கிரஸுடன் விட்டுவிடாமல் மறைமுகமாக திமுகவையும் அதன் தலைவர் கருணாநிதியையும் தமிழர்களின் சாபக்கெடான துரோகக்கூட்டம் என்று ஒவ்வொரு இளைஞர்களின் மனதிலும் உயிர்ப்பு விதையாக விழுந்து பெரிய மாற்றத்தை கொண்டுவந்தார் .
சீமான் அவர்களின் நாம் தமிழர் இயக்கத்தின் முழக்கம், மிகப் பெரிய மனமாற்றத்தை தமிழ்நாடு மக்களின் மனங்களில் உருவாக்கி புதிய பிரவாகத்துடன் துளிர்க்கச்செய்தது. வெளியில் அவை இன்று அரசியல் வியாதிகளால் அதிகம் பேசப்படாவிட்டாலும் சீமானின் தாக்கம் பெருத்த பூகம்பம்போல் தமிழக கிராமங்கள் அனைத்தையும் உலுக்கியிருந்தது என்பதே உண்மை.
அதிமுகவில் உரிய மரியாதை கிடைக்காமல் அதிமுக தலைமையால் அலைக்கழிக்கப்பட்டு, திட்டமிட்டு ஏமாற்றப்பட்டு வெளியேறிய வைகோ அவர்கள், திமுக, மற்றும் காங்கிரஸ் தோற்கடிக்கப் படவேண்டும் என்கிற மேலான நோக்கத்தோடு, அதிமுக வை பழிவாங்கும் சுயநல எண்ணம் கொண்டு எதிரணியில் சேரவும் இல்லை. தனித்து போட்டியிட்டு வாக்குக்களை பிரிக்க முயற்சிக்கவுமில்லை.
தனதுகட்சி தொண்டர்கள் சோர்வடைந்தாலும் பரவாயில்லை எதிரிகள் அழியவேண்டுமென்கிற உயர்ந்த நோக்கோடு, தேர்தலில் போட்டியிடாமல் விலகி நின்று, திமுக, காங்கிரஸ், வீழ்ச்சிக்கு உறுதுணையாகி தமிழகத்திலும் உலகத்தமிழர்கள் மத்தியிலும் வைகோ அவர்கள் பெரு மதிப்பும் பெற்றார்.
ஈழ தமிழ் ஆதரவு சக்திகளினால் ஏற்கெனவே தமிழ்நாட்டில் புறக்கணிக்கப்பட்டு கிடந்த ஜெயலலிதா அவர்களை, 2009ல் நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலின்போது, ஈழ இறுதி யுத்தத்தின் ஒரு உணர்ச்சிமயமான காலகட்டத்தில். ஜெயலலிதா அவர்களை மக்கள் முன் கொண்டுவந்து நிறுத்தி, ஜெயலலிதா ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர் என்றிருந்த திரையை கிழித்து புதிய தோற்றத்தை மக்களின் முன் கொண்டுவந்து வைத்தபெருமையும் வைகோ அவர்களுக்கே சேரும்.
இவ்வளவுபேர் கூடி வடம்பிடித்து இழுத்து கரைசேர்த்த தேர்தான், ஜெயலலிதா தலைமையில் இன்று ஆட்சியமைத்திருக்கும் அதிமுக அரசு, என்பதை ஜெயலலிதா அம்மையாரை தவிர வேறு எவரும் மறந்துவிடவில்லை.
சட்டசபைத் தேர்தல் ஏப் 2011,நடந்து முடிந்தது. ஐந்து மாதங்கள் கடந்த நிலையில், உள்ளூராட்சி தேர்தல் வந்திருக்கிறது. 2011 சட்டசபை தேர்தலில் போட்டியிடும்போது இருந்த படபடப்பு பதற்றம் பயம், உள்ளூராட்சித் தேர்தலை சந்திக்க இருக்கும் முதலமைச்சரான ஜெயலலிதா அவர்களிடம் இப்போது காணப்படவில்லை. மாறாக மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறார்.
ஆட்சி அதிகாரம் அம்மா அவர்களின் கைகளில் இருப்பதால் கூடுதல் நம்பிக்கை இருந்தாலும், ஏணியாக இருந்து ஏற்றிவிட்ட கட்சிகளை அவர் சாதாரணமாக உதாசீனப்படுத்தி கைவிட்டிருப்பது ரசிக்கும்படியாகவும் இல்லை.
அம்மா அவர்கள் சில அரசியல்க்கட்சிகளின் தலைமைகளை மட்டும்தான் ஏமாற்றி புறம்தள்ளிவிட்டதாக, தமிழக மக்கள் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். வரலாறும் தனது பங்கிற்கு சில கறுப்பு தடங்களை உண்டாக்கும் என்பது காலப்போக்கில் தெரியவரும்.
மாற்றுக்கட்சியிலிருந்து அம்மாவுக்கு வாக்களித்த ஒவ்வொரு தொண்டனும் அவமானப்படுத்தப்பட்டதாகவே நொந்துபோவான், என்பதும் அரசியல் நோக்கர்களின் கருத்தாகவும் இருக்கிறது.
ஜெயலலிதா அவர்களின் இந்த போக்கு திருக்குவளை தீயசக்தியான கருணாநிதிக்கு, சற்று நிம்மதியையும் உள்ளூர மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
காலப்போக்கில் ஜெயலலிதா அவர்களின் இப்படிப்பட்ட அணுகுமுறை, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க எந்தக்கட்சிகளும் முன்வராத சூழலையும் நம்பிக்கையீனத்தையும் அக் அட்சிக்கு தோற்றுவிக்கும். அவை பாம்பு ஏணி விளையாட்டின் விதிக்கு இட்டுச்சென்று புறந்தள்ளப்பட்டு கட்டந்தரையாக கிடக்கும் திமுகவுக்கு சற்று பசுமையை உண்டாக்கக்கூடும்.
அதே நேரத்தில் அனைத்து சிறிய அரசியல் கட்சிகளும் ஒன்று திரண்டு, அதிமுக, திமுக, இரண்டுக்கும் எதிராக நிகரான ஒரு மூன்றாம் அணியை உருவாக்க வழிவகுக்கும் என்பது தவிர்க்க முடியாமல்ப்போகலாம்.
அதன் ஆரம்பமாக விஜயகாந்த் அவர்கள் தலைமையில் இடதுசாரிகளின் உள்ளூராட்சி தேர்தலுக்கான கூட்டணி, பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது. இவர்களுடன் வைகோ அவர்களும் இணைவாரானால் ஒரு பலமான அணி உருவாகுவதை ஜெயலலிதாவாலும் கருணாநிதியாலும் தடுக்கமுடியாமல் போகலாம்.
சற்று தூர நோக்கோடு பார்த்தால், ஜெயலலிதா அவர்கள் சக அரசியல்க்கட்சிகளை மதிக்காத மனப்பாண்மை, வரும்காலங்களில் சந்திக்க இருக்கும் தேர்தல்களில் அவரை தனிமைப்படுத்திவிடும் அபாயம் உண்டு. எந்த ஒரு இக்கட்டான நேரத்திலும் கைகொடுத்து கூட்டணி அமைக்க யாரும் துணியமாட்டார்கள் என்ற செய்தியும் சொல்லப்பட்டிருக்கிறது.
இன்றைய மானில அரசின் ஆயுட்காலம் முடிவடைய இன்னும் நான்கரை வருடங்கள் இருக்கிறது. அதிமுக அரசு அறுதி பெரும்பான்மை கொண்டு ஆட்சி அமைத்திருப்பதால், இந்த நான்கரை வருடமும் ஜெயலலிதா ஆட்சி செய்வதை எவரும் இடையூறு செய்து கலைத்துவிட முடியாது.
கடந்த ஐந்து வருடங்களாக எந்த ஒரு இரட்டைத்தன்மையும் காட்டாமல் கூட்டணியில் நாணயமாக நடந்துகொண்ட வைகோ அவர்களையே சட்டசபை தேர்தலின்போது அவமானப்படுத்தி வெளியேற்றிய ஜெயலலிதா, சட்டசபைத் தேர்தலில் இணைந்து கைகொடுத்த விஜயகாந்த்தையோ, இடதுசாரிகளையோ மற்றய எந்த சிறுகட்சிகளையோ, உள்ளூராட்சி தேர்தல் நடக்கவிருக்கும் இத்தருணத்தில் மதித்து நடந்துகொள்ளவில்லை.
வரும் காலங்களில் அரசியலில் எதுவும் நடக்கலாம் என்ற தத்துவம் இருந்தாலும், ஜெயலலிதாவிடம் நல்ல சூடு வாங்கிய கட்சிகளாகவே மற்றய கட்சிகள் மறக்கமுடியாத பாடம் கற்று இருக்கின்றன, இருந்தும் இது ஒரு அரசியல் மாறுபாட்டுக்கான காலமாற்றம் உருவாக நிகழும், காலத்தின் கட்டளை என்றே கொள்ளமுடியும்.
ஒருகாலத்தில் தமிழகத்தை ஆட்சிசெய்த தேசியக்கட்சியான காங்கிரஸ், இன்று அனாதையாகி தமிழின விரோத கட்சியாக அடையாளப்பட்டிருக்கிறது.
1960 களின் நடுப்பகுதியில் அண்ணாதலைமையில் உருவான தமிழர்களின் நம்பிக்கை கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம், கருணாநிதியின் சுயநலனால் இன்று வெறும் கட்டாந்தரையாக்கப்பட்டிருக்கிறது.
1972 களில் புரட்சித்தலைவர் எம்ஜீஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம். ஜெயலலிதா அவர்களின் எதேச்சதிகாரத்தில் சிக்கி (செழிப்பாக இருந்தாலும்) தனிமரமாக நிற்கிறது.
இனி வரும் காலங்களில் கல்லில் நார் உரித்தாலும், மணலில் கயிறு திரித்தாலும். கருணாநிதியால் ஆட்சியை பிடித்து முதலமைச்சர் ஆகமுடியாது. அவரது வயதும் நடத்தையும் குடும்பவாரிசுகளின் போட்டியும் இனி அதற்கு இடமளிக்கப்போவதில்லை என்பதே முடிந்த முடிவாகியிருக்கிறது. கருணா அவர்களின் திமுக. இதுவரை இருந்துவந்த முதலாம், இரண்டாம், இடங்களை நிரந்தரமாக இழந்துவிட்டது. அந்நிலை நாளடைவில்த்தான் அவர்களாலேயே உணரப்படும்.
கருணாநிதி அவர்களின் அர்த்தமற்ற புலம்பல்கள் அனைத்தும் சிறையில் இருக்கும் அவரது மகள் கனிமொழி பற்றியதும். நில அபகரிப்பில் சிறையில் கிடக்கும் திருடர்கள் பற்றியதாகவே இருக்கிறது. தவிர வேறு பொதுநோக்கோடு பேசுவதற்கு அவரிடம் எந்த இருப்பும் காணக்கிடைக்கவில்லை.
அம்மா அவர்களிடம் நல்ல மாற்றம் ஏற்பட்டுவிட்டதாக 2011ன் ஆரம்பத்தில் நம்பிய தமிழக மக்கள் மனதில் ஏமாற்றம் மீண்டும் குடிவந்திருக்கிறது. அம்மா அவர்கள், எவராலும் மாற்றமுடியாதவர் என்பது அவரது நடவடிக்கைகள் தினம் தினம் வெளிப்பட்டவண்ணம் இருக்கிறது.
இவை அனைத்தும் சேர்ந்து ஒரு வலுவான இரண்டாவது அணி உருவாக காலம் கட்டளையிட்டுவிட்டதாகவே நகர்வுகள் உணர்த்துகின்றன. அவை தேமுதிக, அல்லது மதிமுக. தாண்டி நான் தமிழர் கட்சியாகவும் இருக்கலாம். அடுத்து வரும் சட்டசபைத் தேர்தல், அந்த பெரும் சக்தியை மக்கள்முன், நிகழ்காலம் அறிமுகப்படுத்தும் என்பதை இன்றய நகர்வுகள் இட்டுச்செல்லுகின்றன.
ஈழதேசம் இணையத்திற்காக,
கனகதரன்
நன்றி ஈழதேசம் இணையம்.