Friday, September 2, 2011

முதல்வரை பாராட்டுவதில்தயக்கம் இல்லை: வைகோ


சேத்தியாத்தோப்பு:""முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டுவதில், ம.தி.முக.,விற்கு எந்த நெருடலும் இல்லை'' என, அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ பேசினார்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் நடந்த திருமண விழாவில், அவர் பேசியதாவது:கிராமத்துச் சூழலை உணர்ந்து, கூட்டுக் குடும்பங்களைக் கண்டு, நானும் கிராமத்துக்காரன் என்பதால், மகிழ்ச்சி அடைகிறேன். கிராமப்புறங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை வருத்தமளிக்கிறது. தண்ணீர் பிரச்னைக்காக நாளும் போராட வேண்டிய சூழ்நிலை உள்ளது.தமிழ் உணர்வாளர்களின் உணர்ச்சியைப் புரிந்து கொண்டு, முதல்வர் ஜெயலலிதா சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றியமைக்காக அவரைப் பாராட்டுகிறோம்.

சட்டசபையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைப் பொறுத்தவரை, தூக்குக் கயிறு நிரந்தரமாக அறுந்து விட்டதாக நம்புகிறோம்.தேர்தல் நேரத்தில், ம.தி.மு.க,.வுக்கு வாய்ப்பளிக்காத ஜெ.,வை பாராட்டலாமா... என, ம.தி.மு.க.,வில் யாரும் கேட்கவில்லை. முதல்வரை பாராட்டுவதன் மூலம், அவருக்கு பெருமை கூடி விடுமே என்று கருதவில்லை. தேர்தல் களம் வேறு; தமிழர்களின் நலன் காக்கும் நிலைவேறு என்பது அவர்களுக்குத் தெரியும். இது தான் ம.தி.மு.க.,வின் பலம்.மூவருக்கு மரண தண்டனை விஷயத்தில், உண்மைத் தன்மை என்ன என்பதற்கு, உள்துறை அமைச்சர் சிதம்பரம் பதில் சொல்லியாக வேண்டும்.இவ்வாறு, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசினார்.

நன்றி தினமலர்.

No comments: