உலகில் காணாமற்போனோர் மிக அதிகமுள்ள நாடுகள் என்ற பெருமை சிறிலங்காவுக்கு கிடைத்து, இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும், 12,000 வரையில் மக்கள் இங்கு காணாமற்போயுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புள்ளி விபரம் காணாமல்ப்போனோர் மற்றும் கொல்லப்பட்டோரின், உறவினர்களால் உறுதிப்படுத்தப்பட்டு, முறையான முறைப்பாடுகளின் அடிப்படையில் பெறப்பட்ட கணக்குகளின் அடிப்படையில் மட்டுமே, வெளியிடப்பட்டிருக்கிறது.

2009 இறுதிக்கட்ட அழிப்பின்போது, பல குடும்பங்கள், ஒருவர் பாக்கியில்லாமல் ஒன்றாக அழிக்கப்பட்டிருக்கின்றன. அந்த குடும்பங்களின் தரவுகளை முறைப்படுத்துவதற்கு எவரும் இல்லாத பட்சத்தில், அவை கொல்லப்பட்டவர் கணக்கிலும் இல்லாமல், காணாமல்ப்போனவர்களின் கணக்கிலும் இல்லாமல் தெரு நாய்க்கு, சமமாக விடுபட்டிருக்கின்றன.

கிராமசேவையாளர், உதவி அரசாங்க அதிபர்கள் பிரிவு மட்டத்திலும், தரவுகள் பெறமுடியாத சூழலுக்கு இடப்பெயர்வுகள் ஏற்பட்டிருப்பதால் காணாமல்ப்போனோர், இறந்தவர்களின் விபரம் சகட்டுமேனிக்கு அண்ணளவான கணக்காக இருக்குமேதவிர, சரியான இழப்புக்கணக்கு தமிழர் சார்பாக இனி வரப்போவதுமில்லை.

விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் குடும்பங்களில் உள்ள உறுப்பினர்கள் சிலர், கொல்லப்பட்டவர்கள் போக, மீதமுள்ளவர்கள் குடும்பமாக இராணுவத்தினரிடம் சரணடைந்திருக்கின்றனர். அவர்கள்பற்றிய தகவல்கள் முறைப்பாடாக முறைப்படுத்துவதற்கு வெளியில் எவருமில்லாத நிலையில், குறிப்பிட்ட புள்ளிவிபரத்தில் அக்கணக்கு இடம்பெறாமல் தவறிவிடுவதற்கான சந்தற்பங்களும் நிறையவே உண்டு.

பொது தொண்டர் அமைப்புக்கள் மற்றும் ஊடகங்களின் தொடர்புக்கு அப்பாற்பட்டு, எவரும் பார்வையிடமுடியாத சித்திரவதை முகாம்கள், நிறைய இலங்கையில் இருப்பதாக வெளிநாட்டு தொண்டர் அமைப்புக்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த அடிப்படையில் காணாமல் போனோரின் எண்ணிக்கை, இன்னும் மிக அதிகமாக இருப்பதற்கான அச்சம் உண்டு. இருந்தும் 12,000 வரையிலான மக்கள் காணாமல் போயிருக்கின்றனர், என்ற ஐநா அறிக்கை, உலகத்தின் கண்களுக்கு காணாமல் போனோரின் ஓரளவான கணக்கை என்றாலும் வெளிப்படுத்தியிருக்கிறது என்ற வகையில் திருப்திப்படலாம்.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடர், எதிர்வரும் 12 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாக உள்ளது. அப்போது இலங்கை அரசுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்களாலும் தயாரிக்கப்பட்ட ஓர் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சிங்கள இணையச்செய்தி ஒன்று தெரிவித்திருந்தது.

வன்னி இறுதி யுத்தத்தில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் படுகொலைகள், மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஐ. நா. செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை, மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் சாத்தியம் காணப்படும் நிலையில்,புலம்பெயர் தமிழர்களும் இலங்கைக்கு எதிராகத் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்றினை, மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் ராஜதந்திரிகளிடம் கையளிக்கவுள்ளனர் என்றும், அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

அப்படி சமர்ப்பிக்கப்படும் அறிக்கையில், காணாமல்ப்போனோர்கள், மற்றும் கொல்லப்பட்டு கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படாத, பலரின் விபரங்கள் தவறிப்போனதற்கான யதார்த்த சூழலை சுட்டிக்காட்டுவதற்கான சந்தற்பம் ஒன்று அமைந்திருக்கிறது. அதை புலம்பெயர் அமைப்புக்கள் மனதில்க்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும்.

சிங்கள இணையத்தளம் வெளியிட்ட செய்தி உண்மையானது என்றால், புலம்பெயர் தேச தமிழர் அமைப்புக்களால் சமர்ப்பிக்கப்படும் அந்த அறிக்கை நிச்சியம் ஒரு தாக்கத்தை மனித உரிமைப்பேரவையில் ஏற்படுத்தும் என்பது உண்மை.

உடனடியாக அவ்வறிக்கை பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் நாளடைவில் ஒரு ஈழத்தின் சாட்சிய சான்றாக அவ்வறிக்கை நிச்சியம் கைகொடுக்கும்.

இதேவேளையில், சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பாக சுயாதீனமான அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை பிரிட்டன் அரசாங்கத்தின் இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

இம்மகஜரில் 1,00,000 மக்கள் தமது கையெழுத்துக்களை இட்டால், அதன் பின்னர் பிரிட்டனின் பொதுச்சபையில் இதனை முன்வைத்து விவாதம் நடாத்த முடியும்.

ஐ.நா வல்லுனர் குழுவால் வெளியிடப்பட்ட யுத்த மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை உள்ளடக்கிய அறிக்கையின் பிரகாரம், சிறிலங்காவின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக, சுயாதீனமான அனைத்துலக விசாரணை ஒன்று முன்னெடுக்க வேண்டும் என்பதில், பிரிட்டனின் வெளியுறவுச் செயலகம், மற்றும் பொதுநலவாய அலுவலகம், என்பன ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் இந்த மகஜரில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில், மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்நாடு பொறுப்புக் கூறவேண்டும் என இம்மாதம் நடைபெறவுள்ள ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையில், ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தங்கொடுக்கவுள்ளது. என்றும் தெரியவருகிறது.

சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, ஐ.நா பொதுச் செயலர் பான்கிமூனினால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவால் ஆராய்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம். சிறிலங்கா அரசாங்கம் தனது குற்றங்களை "ஏற்றுக்கொள்ளவேண்டும்" என ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தங்கொடுக்கவுள்ளது. என அதன் உயர் மட்டப் பிரதிநிதியான கதறின் அஸ்ரொனின் [Catherine Ashton] ஊடக அதிகாரி இலுலியா கொஸ்ரியா [Iulia Costea] கொழும்பில் இருந்து வெளியாகும் The Sunday Leader ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாடுகள் முன்வைத்துள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு ஜெனீவா மாநாட்டில் இலங்கை பொறுப்புக்கூற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இம் மாநாட்டில் இலங்கை தனிமைப்படுத்தப்படுமாயின் எதிர்காலத்தில் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை காப்பாற்றும்முகமாக உபதேசம் செய்துள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி கருத்துத் தெவிக்கையில், ஜெனிவாவில் எதிர்வரும் 12ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை பேரவையின் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் இலங்கை விவகாரங்கள் முக்கிய இடம்பிடிக்கும் என்றும், உள்நாட்டில் மாத்திரமல்ல சர்வதேச அளவிலும் இவ்விடயம் பேசப்படுகின்றது,கடந்த சில காலங்களாகவே இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சர்வதேசம் அதிகமாக சுமத்தி வருகின்றது. இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆக்கபூர்வமாக அரசாங்கம் செயற்படவில்லை.

இராஜதந்திர ரீதியில் உரிய முறையில் அவற்றை அணுகவேண்டும் என்றும்.குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள, இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவையாகும். இதற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையிலே சனல் 4 தொலைக்காட்சி வீடியோக்களையும் வெளியிட்டது. இந்த வீடியோ காட்சியானது மேற்குலக நாடுகளில் மாத்திரமல்லாது, இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகளிலும் ஒளிபரப்பப்பட்டது.

சனல் 4 வீடியோவில் காணப்படும் போர் குற்றச்சாட்டுக்களும் சாட்சியங்களும் நாட்டிற்கு அபகீர்த்தியையே ஏற்படுத்தியுள்ளன. இவ்வாறான பாரியளவிலான விமர்சனப் பார்வையை இன்று இலங்கை மீது சர்வதேச நாடுகள் கொண்டுள்ளன.

எவ்வாறாயினும் இலங்கையர் என்ற வகையில் நாட்டை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரதும் கடமையாகும். மாநாட்டில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புடன் பதில் கூறப்பட வேண்டும்.

அரசாங்கம் முரண்பட்டு பிரச்சினைகளை வளர்த்துக் கொள்ளக்கூடாது, என்று அரசாங்கத்தை பாதுகாப்பதற்கும், படுகொலைகளை நியாயப்படுத்தும் விதமாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி அறிவுக் கருத்தை தெரிவித்திருந்தார்.

இந்த அறிவுரையின் அடிப்படையில், ஸ்ரீலங்கா அரசாங்கம் சில தந்தர நகர்வுகளை ஏற்கெனவே எடுத்தும் விட்டிருக்கிறது.

அவசரகாலச்சட்டம் நீக்கம், தமிழர் தேசியக்கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை தொடரும் என்றும் தந்தரசாலித்தனமான சில நகர்வுகள் வெளிவருகின்றன.

2009ம் ஆண்டு மனித உரிமைப்பேரவையின் வாக்கெடுப்பில் ஸ்ரீலங்காவை, இந்தியா உட்பட பலநாடுகள் காப்பாற்றியிருந்தன. இந்த வருட கூட்டத்தொடரிலும் ஸ்ரீலங்காவுக்கு ஆதரவாக பலநாடுகள் களமிறங்கி காக்க முயற்சிக்கக்கூடும்.

இருந்தும் ஐநா நிபுணர்குழுவின் அறிக்கை மற்றும் சனல்4, ஆகியவற்றின் ஆதார பூர்வமான குற்றச்சாட்டுக்களுக்கு, ஸ்ரீலங்கா பதிலளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது.

அப்படி பேரவையில் இலங்கைக்கு எதிராக ஒரு நிலை எடுக்கப்படுமாயின், சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானம் சர்வதேச விசாரணைக் குழு ஒன்றை நியமிக்கும்படி கோரும் என்றே அனேகமாக எதிர்பார்க்கப்படும் நிலையில், மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கும்.அத்தகைய குழுவை எவ்வாறு நியமிப்பது, அதற்கான சட்டதிட்டங்கள் என்ன, விசாரணைக்கான காலவரையறை, உள்ளடக்கப்படும் உறுப்பினர்கள் எண்ணிக்கை என்பன உட்பட்ட பல விடயங்களையே ஐ.நா. செயலாளர் ஆராய்ந்திருக்கிறார் என்று தெரியவருகிறது.ஐ.நா. செயலரின் இந்த நடவடிக்கைகள் குறித்து ஐ.நாவுக்கான இலங்கை தூதரகம் இலங்கை அரசுக்கு அறிவித்திருப்பதாகவும் அறிய முடிகின்றது.

நெருக்கடியான இந்தச் சந்தற்பத்தை புரிந்துகொண்ட சிங்கள அரசு, தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தமிழர் பிரச்சினை தீர்வுபற்றி பேச எந்நேரமும் அரசாங்கம் தயாராகவே உள்ளது என்றும், பேச்சுவார்த்தையை அரசாங்கம் முறித்துக் கொள்ளவில்லை என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருந்தார்.

இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணும் நோக்கில் அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்குமிடையில் தொடர்ச்சியாகப் பத்து சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. பத்தாவது பேச்சுவார்த்தை முடிவில், உப்புச்சப்பில்லாத விடயங்களால் அலுத்துப்போன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, அரசாங்கத்துக்கு தமது தரப்பில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் அரச தரப்பின் நிலைப்பாட்டைக் ஓரளவேனும் தெரிவிக்கும்படி கோரியிருந்தது. அரசாங்கம் அது தொடர்பில் தமது நிலைப்பாட்டினை அறிவிக்கும் பட்சத்தில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்குத் தாம் வரமுடியும் என்ற வேண்டுகோளை விடுத்திருந்தது.

ஆனால் கூட்டமைப்பினரின் நியாயமான வேண்டுகோளை, அரசாங்கம் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

அரசாங்கம் எந்நேரத்திலும் மீண்டும் தேசியக்கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையைத் தொடர தயாராகவுள்ளதென உடனடி நிவாரணி ஒன்றை அமைச்சர் தற்காலிக மருந்தாக, ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டிருக்கிறார். ஆனால் கூட்டமைப்பினர் கோரியிருந்த நிலைப்பாடுபற்றி அவர் எதுவும் வாய் திறக்கவில்லை.

பிறிதொரு சந்தற்பத்தில் ஜனாதிபதி ராஜபக்க்ஷ பேசும்போது நாட்டில் தமிழர் மற்றும் முஸ்லீம்களை சிறுபான்மையினரென எவரும் கருதக்கூடாது எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே. தான் எவரையும் பிரித்து பார்க்க என்றைக்கும் விரும்புவதில்லை.எனவே நாட்டில் ஒற்றுமையை உண்டுபண்ணும் விதமாக அவசரகால சட்டத்தை நீக்க முன்வந்துள்ளேன். என்றும் சாத்தான் வேதம் ஓதிய கணக்காக ஜெனீவா மனித உரிமை பேரவையின் மாநாட்டை கருத்தில்க்கொண்டு தனது நாடக வசனத்தை ஊடகங்களுக்கு வழங்கியிருந்தார்.

அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டால் அந்த நிமிடத்திலிருந்து சாதாரண காலத்திற்கு நாடு திரும்பிவிடவேண்டும். ஆவணங்களில் (paper politics) அவசரகாலச்சட்டம் நீக்கப்படுகிறது நடைமுறையில் பழைய நிலையே தொடர்கிறது. ஆண்டாண்டுகாலமாக ஸ்ரீலங்கா அரசியலில் நடக்கும் ஏமாற்றே அவசரகாலச்சட்ட நீக்கமும்.

சாத்தான் ராஜபக்க்ஷ, ஒப்புக்கொண்டபடி அவசரகாலச்சட்டம் நீக்கப்படுமானால், வடக்கு கிழக்கில் பரந்து விரிந்திருக்கும் இராணுவ சாவடிகள், மற்றும் சிறிய முகாம்களையாவது அகற்றி, ஒரு சுதந்திரமான மக்கள் நடமாட்டத்தை உருவாக்க வழிசெய்யும்படி தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இந்திய பிரதமர் ஊமை மண்மோஹன் சிங்கத்தின், மூலம் கோரிக்கை வைத்திருந்தது.

ஆனால் ராஜபக்க்ஷ அவசரகாலச்சட்டம் நீக்கப்படுவதாக பேசியிருந்தபோதும் வடக்கில் நிறுவப்பட்டுள்ள எந்தவொரு இராணுவ காவலரண்கூட அகற்றப்பட மாட்டாது என பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.

பாதுகாப்பு நோக்கத்திற்காக வடக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த கோரிக்கை தொடர்பில் பாதுகாப்புச் செயலளார் கோத்தபாய ராஜபக்ஷ கவனம் செலுத்தி வருவதாக இழுத்தடிப்பு ஒன்றின்மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பும், தமது ஆளுமைக்குட்பட்டு, இந்திய மத்திய அரசைத்தவிர வேறு மார்க்கம் இல்லாமல் ஒரு சாத்தானின் தாண்டவத்தை, இன்னொரு சாத்தானிடம், முறையிட்டு திருப்திப்பட்டுக்கொள்வது தவிர வேறு வழிகளில் மாற்று அனுமானம் ஏதாவது தேடுவது அவர்களது வரலாற்றில் முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

இந்தியாவைப்பொறுத்தவரை கபடமாக, அமைதியாக ஏமாற்றி தம் நலன்சார்ந்து, காரியம் சாதிப்பதே இந்திய இலங்கை தமிழர்தொடர்பான வெளியுறவுக்கொள்கையாக நீண்ட காலமாக இருந்து வருகிறது.

காலத்தை இழுத்தடிப்பது பேச்சுவார்த்தைக்கான பயணங்களை உண்டுபண்ணுவது கலந்துரையாடல் என்று காப்பு கட்டி அனுப்புவது தவிர வேறு எதுவும் நடந்ததாக இன்றுவரை சான்றுகள் இல்லை.

இந்திய கொள்கை வகுப்பாளர்களின் திருப்திக்கேற்ப றோ, மற்றும் இந்திய புலனாய்வு பிரிவுகள் தொடர்ந்து கண்கொத்திப்பாம்பாக தமிழர் பிரச்சினையை திசை திருப்பி விடுவதிலேயே குறியாக இருந்து வருகின்றன.

வீட்டில் உள்ள ஒருவருக்கு தலைவலி ஏற்பட்டால், அந்த வீட்டிலுள்ள நடமாடக்கூடியவருக்கு காலுக்கு சிகிச்சை செய்து, அவரது நடமாட்டத்தையும் கட்டுப்படுத்தி தலைவலிக்கு மருந்து வாங்கி வந்து தலைவலி உள்ளவரையும் தப்பிக்காமல் பார்ப்பதே, றோவின் தந்திரமும் சிபிஐ போன்ற அமைப்புக்களின் செயற்பாடாகவும் இருந்து வருகிறது.

இந்தப்பின்னணியில்த்தான் ஒரு நெருக்கடியான தருணத்தில், ராஜீவ் கொலை வழக்கில் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருக்கும் மூவருக்குமான கருணை மனு, நிராகரிக்கப்பட்டு தூக்குத்தண்டனையை உறுதிப்படுத்தியதை எடுத்துக்கொள்ளலாம்.

சமீபத்திய தமிழ்நாட்டின் மக்கள், மற்றும் மானில அரசின், எழுச்சியை உடனடியாக கட்டுப்படுத்தி குறைக்கவேண்டிய தந்தரமான தேவை மத்திய அரசாங்கத்திற்கு இப்போ அவசியமாக தேவைப்பட்டிருக்கிறது.

ராஜீவ் கொலை வழக்கை எடுத்துக்கொண்டால், பதின்ம வயதில் குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்ட பேரறிவாளன், ஒரு இந்தியப்பிரஜை. 19 வயதில் அவர் புலிகளுக்கு, அல்லது கொலையில் ஈடுபட்டவர்களுக்கு ஒருசில பற்றறி வாங்கிக்கொடுத்தார் என்பதுதான் குற்றச்சாட்டு.

ராஜீவ் கொலையில் வெளிநாட்டு சக்திகள் தலையிட்டு கொலை நடைபெற்றதாக நம்பகமான குற்றச்சாட்டுக்கள் உண்டு. அதற்கான ஆவணங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, புதிய ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு கார்த்திகேயன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு துறை அவசரமாக அறிக்கை தயாரித்து, நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஆகியோர் வீண்தனமாக குற்றவாளிகளாக்கப்பட்டிருக்கின்றனரென்று விடுதலை ராஜேந்திரன், கொளத்தூர் மணி, உட்பட பல தமிழகத்தில் வரலாறு தெரிந்த கற்றவர்கள் படிப்பாளிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

விளையாட்டு தனமான பதின்ம காலமான, 19 வயது கொண்ட பேரறிவாளனுடன் விடுதலைப்புலிகள் முக்கியமான இரகசிய தொடர்புகளை பேணி சதியில் ஈடு பட்டிருக்கின்றனர் என்பது, நம்பக்கூடிய ஒன்றா என்பதையும் சிரசில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

முருகன், சாந்தன், நளினி, ஆகியோர் ஈழத்தமிழர்களாக இருப்பதால், ஈழத்தமிழினத்தை பழிவாங்கும் ஒரு நடவடிக்கையாகவே முற்று முழுதான அரசியல் தலையீட்டுடன் இந்த வழக்கு மரணதண்டனையாக முடிக்கப்பட்டிருக்கிறது.

பிள்ளையார் பிடிக்க குரங்காக மாறிய கதையாக மூன்று கைதிகளின் கதை, தமிழ்நாட்டின் எழுச்சி மற்றும் மனிதாபிமானம், வழக்கின் உண்மைத்தன்மை, ஆகியவற்றை முதன்மைப்படுத்தி உருவம் மாறியிருக்கிறது.

வருங்காலங்களில், இந்திய வல்லாதிக்கவாதிகள் குறிப்பிட்ட மூவரையும் தூக்கிலும் போடலாம், மாறாக அவர்களை சாவறுதிகாலம்வரை சிறையில் இட்டு சித்திரவதை செய்து இயற்கை மரணம் வரை சிறை கொட்டடியில் வைத்திருக்கவும் முனையலாம்.

ஆனால் தமிழக மக்களின் போராட்டம், இந்திய வல்லாதிக்கவாதிகளின் திமிரை தற்காலிகமாகவேனும் தடுத்து, தமிழகத்து மக்கள் சக்தியின் வீரியத்தை வெளிப்படுத்தியிருப்பது சாதாரணமான ஒன்றல்ல.

அவை ஒருபுறமிருக்க,

அவசரகால சட்ட விதிமுறைகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கெதிரான குற்றப்பத்திரிகைகளை இலங்கை அரசாங்கம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அல்லது அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நடைபெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பின் போது அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பதில் பேச்சாளர் மார்க் ட்டோர்னர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்தமையை அமெரிக்கா ஏற்கனவே வரவேற்றுள்ளதாகவும்,எனினும் எவ்வாறு "அவசரகால சட்ட விதிமுறைகள்" நீக்கப்படுகின்றன என்பது குறித்து தாம் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தழிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில், தொடர்ந்தும் நெருக்கடி நிலை காணப்படுவதாக செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த பேச்சாளர் அது குறித்து தமக்கு தகவல் கிடைக்கவில்லை என்றும், எனினும் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசாங்கம் உரிய முறையில் விசாரணைகளை நடத்த வேண்டும் என்ற அமெரிக்க அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மீள நினைவுபடுத்த விரும்புவதாகவும் மறைமுகமாக அவர் தனது அழுத்தத்தை வெளிப்படுத்தும் விதமாக கூறியுள்ளார்.

அமெரிக்காவின் இத்தகைய அழுத்தமும், ஜெனீவா மனித உரிமை விவாதத்தின்போது எடுத்துக்கொள்ளப்படும் என்றே நம்பப்படுகிறது.

இப்படி தொடர்ச்சியான நெருக்கடிகள் ஸ்ரீலங்கா அரசை சூழ்ந்திருப்பது ஈழத்தமிழருக்கு கிடைத்திருக்கும் வெற்றி என்று உணர்வின் அடிப்படையில் எடுத்துக்கொள்ளாமல், அரிய சந்தற்பம் என்பதை தமிழ்த்தரப்பு உணர்ந்து ஒருமுறைக்கு மூன்றுமுறை சிந்தித்து, சிறப்புற செயற்படவேண்டிய இடத்தில் இருக்கின்றனர்.

உணர்ச்சிமயமான அவசரம் இல்லாமல், அறிவுசார்ந்து அணுகவேண்டிய ஒரு கட்டமாகவும் இச்சந்தற்பத்தை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இதில் மாற்றுக்கருத்து எவருக்கும் இருக்கமுடியாது.

அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் மூன்று நாள் பயணமாக செப்ரெம்பர் 12ம் நாள் கொழும்பு வரவுள்ளார்.அப்போது ஸ்ரீலங்கா அரசிலால் நிறுவப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதத்துக்கு கொண்டு செல்வது குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களை மீளத் தொடங்குவது குறித்தும் சிறிலங்கா அரசிடம் வலியுறுத்துவார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 19வது கூட்டத்தொடரில் விவாதிப்பது குறித்த தீர்மானத்தை எதிர்வரும் 12ம் நாள் தொடங்கும் 18வது கூட்டத்தொடரில் கொண்டு வருவது குறித்து அமெரிக்கா இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக சிறிலங்காவுக்குத் தெரியப்படுத்தியிருந்தது.

எனினும் இந்தப் பயணத்தின் போது பிளேக் அமெரிக்காவின் நிலைப்பாட்டை இறுக்கமாக வலியுறுத்துவார் என்றும் சிறிலங்காவின் நிலைப்பாட்டை மீளாய்வு செய்யுமாறு அழுத்தம் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இடத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதத்துக்கு கொண்டு செல்வது குறித்து அமெரிக்க ராஜாங்க செயலாளருக்கு உத்தியோகபூர்வமாக நெருக்கடியினை கொடுக்கும்வகையில் பரிந்துரைக்கவேண்டிய மிக பெரிய பொறுப்பு தமிழர்களின் முக்கிய பிரதிநிதிகளான தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு உண்டு.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் குறைபாடுகளை அம்பலப்படுத்தப்போவதாக சர்வதேச மன்னிப்புச்சபையும் தெரிவித்துள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அடிப்படை முரண்பாடுகள், மற்றும் குறைபாடுகள் தொடர்பான தகவல்கள் உள்ளடங்கிய அறிக்கை ஒன்று விரைவில் வெளியிடப்படும் என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை அறிவித்துள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் குறைபாடுகள், எப்போது இவர்களுக்கு நியாயம் கிட்டும் என்ற தலைப்பில் மன்னிப்புச் சபையின் அறிக்கை வெளியிடப்படவுள்ளது.

அதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சாட்சியங்களை முன்வைக்குமாறு சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச நெருக்கடிக்குழு ஆகியவற்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் அந்த அழைப்பை மூன்று அமைப்புகளும் சில அரசியல் வழிமுறை நகர்வுகளை கருத்தில்க்கொண்டு நிராகரித்திருந்தன.

இருந்தும் காலப்போக்கில் சர்வதேச மன்னிப்புச்சபையின் கோரிக்கைக்கு ஆதரவான சூழ்நிலை உருவாகும் என்றே நம்பலாம், ஏனெனில் ஸ்ரீலங்காவின் கபடமான கடும்போக்கு மாற்றம் காணப்படாவிட்டால் சகல அமைப்புக்களும் ஒன்றாக சங்கமிக்கும் ஒரு நேர்கோடான கட்டத்திற்கு ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களே அடி கோலுவர்.

நடைபெறும் நகர்வுகளின் அடிப்படையின்படி மனித உரிமைப்பிரச்சினையே முன்னணி வகிக்கிறது. அதன் ஆதாரமாக யுத்த மரபு மீறல், அப்பாவிகளின் படுகொலை, சரணடைந்த போராளிகளின் கொடுமையான படுகொலைகள், காணாமல் போனோர் பற்றிய விடயங்களே, பிரதானமாக சர்வதேசப்பார்வையில் முன்னணி வகிக்கின்றன.

இவ்விடயங்களுக்கு சர்வதேசசட்டங்களுக்கு உட்பட்டு சரியான பதிலளிக்காதவரை, ஸ்ரீலங்கா போர்க்குற்ற நாடாகவும், சர்வாதிகார ஆட்சி அதிகாரம் கொண்ட, ராஜபக்க்ஷ குடும்பம் என்ற அவப்பெயர் உலக அரங்கில் தவிர்க்கமுடியாமலிருக்கும்.

அவற்றை நியாயப்படுத்தக்கூடிய வகையில் சர்வதேச சட்ட எல்லைக்குட்பட்டு, எந்தப்பதிலும் ராஜபக்க்ஷ குடும்பத்திடமோ, இராணுவ தலைமைகளிடமோ, போர்க்குற்றவாளிகளிடமோ இல்லை.

மாறாக போர்க்காலத்தில் களத்தில் நடைபெற்ற உண்மைகளை ஒப்புக்கொள்ளப்போனால், முற்றுமுழுதான மனித நாகரீகமற்ற குற்றவாளிகள்தான் தாம் என்பதை, பகிரங்கமாக ஒப்புக்கொண்டதாகிவிடும். பின்னணியில் நின்று கருவறுத்த இந்தியாவின் கோர முகமும் வெளிக்கொணரப்பட்டுவிடும்.

எனவே முடிந்தவரை இந்தியாவின் உதவியுடன் இருக்கும் வாயை பாவித்து இறைமை, தனித்துவம், ஜனநாயகம், சுய விசாரணை, அவசரகாலச்சட்ட நீக்கம், நல்லிணக்க ஆ(மை)ணைக்குழு, தீர்வு பேச்சுவார்த்தை, அபிவிருத்தி, என்று காலவிரயத்தை உண்டுபண்ணி, இந்தியா, சீனா, ரஷ்யா, போன்ற நாடுகளின் உதவியுடன் தற்காலிகமாக தொடர்ந்து தப்பிக்கும் தந்தரத்தில் ஸ்ரீலங்கா மிகுந்த நம்பிக்கை வத்திருப்பது தெரிகிறது.

இந்தியாவும் பின் விளைவை துச்சமென மதித்து இந்திய ஒருமைப்பாட்டை சிந்திக்காமல், இந்தநிலையை வழிமொழிந்து சிங்கள அட்டூழியத்தை அனுசரித்து, தமிழர்களை புறக்கணிக்கும் நிலையை தொடர்ந்து கடைப்பிடிக்குமானால், இந்தியாவுக்குள்ளேயே பிரிவினைக்கான வெடிப்பு உருவாகும் அபாயம் இருப்பதை, இந்திய ஆட்சியாளர்கள் இன்னும் சரியாக உணரவில்லை என்றே படுகிறது.

சிறிலங்கா விவகாரத்தில் தமிழர் விரோத நிலைப்பாட்டை இந்தியா எடுத்ததற்கு, இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணனே, காரணம் என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளதாக, இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுயிட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கின் முக்கியமான ஆலோசகராக எம்.கே .நாராயணனே இருந்ததாகவும், சிறிலங்கா விவகாரத்தில் அவரே சிங்கள சார்பு நிலையை எடுக்குமாறு அவருக்கு ஆலோசனை கூறியதாகவும் விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

சீனாவின் கொள்கை தொடர்பாக பொய்யான அச்சமூட்டும் தகவல்களைக் கூறியே எம்.கே. நாராயணன், இந்த முடிவை எடுக்கக் காரணமாக இருந்ததாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இது ஜவகர்லால் நேருவை கிருஸ்ணமேனன் தவறாக வழிநடத்தியது போலவே, மன்மோகன்சிங்கை எம்.கே.நாராயணன் வழிநடத்தியிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அந்த இருவருமே கேரளத்தை பூர்வீகமாகக்கொண்ட மலயாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைகளை தவறாக வழிநடத்தியதாகவும் இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

புதுடில்லியில் உள்ள அமெரிக்கத் தூதுவர், திமோதி ஜே ரோமர், கடந்த 2009 டிசம்பர் 17ம் நாள் அனுப்பிய தகவல் குறிப்பிலேயே எம்.கே நாராயணன் பற்றிய இந்தக் குறிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

அதே நேரம் யாழ்மாவட்டத் தமிழர்களின் நிலைவரங்கள் மிக கவலைக்கிடமாக இருப்பதாகவும் இராணுவத்தினரின் அடாவடி குடாநாட்டில் கைமீறி போய்க்கொண்டிருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கவலை தெரிவித்திருக்கிறார்.

மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியிலிருந்து இராணுவத்தினரை அகற்றி அவர்களை பிரதான முகாம்களுக்குள் மட்டும் முடக்குவதே, யாழ்ப்பாணத்திலும் வடக்கு, கிழக்கின் ஏனைய பகுதிகளிலும் இன்று காணப்படும் குழப்ப நிலைகளைத் தீர்க்க இருக்கும் ஒரே வழி. அதனைச் செய்யவில்லையேல், மக்கள் கிளர்ந்து இந்தப் பகுதிகளில் மீண்டும் ஒரு வன்முறை ஏற்படவே அது வழிவகுக்கும் என்றும் அவர் அரசை எச்சரிக்கும் தொனியில் தெரியப்படுத்தியிருக்கிறார்.

போர் முடிவடைந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் சிவில் சமூகத்துக்குள் இராணுவம் தேவையில்லை.

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட நிலையில் பொதுமக்களைச் சோதனையிடுவதற்கும் மக்களைத் தாக்குவதற்கும் இராணுவத்தினருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? பொலிஸார் தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் செய்யத் தவறுவதாலேயே இராணுவத்தினருக்கும் மக்களுக்கும் இடையே மோதல்கள் இடம்பெறுகின்றன.

சிவில் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு பொலிஸாருக்கே உரியது. ஆனால் பொலிசார் தமது கடமையைச் சரிவரச் செய்யத் தவறுகிறார்கள்.அத்துமீறும் இராணுவத்தினர்மீது பொலிஸார் ஒப்புக்கு வழக்குத் தாக்கல் செய்கிறார்கள். சட்டத்தைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டு மக்களைத் தாக்கிய இராணுவத்தினரில் ஒருவரைக் கூட அவர்கள் கைது செய்யவில்லை.

இந்த நிலைமை இப்படியே நீடித்துச் செல்வது இன நல்லிணக்கத்தை ஒருபோதும் வளர்க்காது. தமிழர்களைப் பழிவாங்குவதுதான் சிங்கள இராணுவத்தினரும் சிங்களவர்களையே பெரும்பான்மையாகக் கொண்ட பொலிஸாரினதும் செயலாக இருந்தால், இன்றைய இளைஞர்களின் நிலைமை 80களின் இளைஞர்களின் நிலையை ஒத்ததே.

ஜனாதிபதியும் இந்த அரசும் இந்த நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்று உண்மையில் விரும்பினால் இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் மக்கள் கிளர்ந்தெழுவதைத் தடுக்க முடியாது.

நீங்கள் விரைந்து செயற்படவில்லை எனில், அவர்கள் விரைந்து முடிவெடுப்பார்கள்.என்றும் கூறியிருக்கிறார்.

சரவணபவனின் பேச்சு அரசியல் சார்ந்ததாகவும் இருக்கலாம், உணர்ச்சி வசப்பட்டதாகவும் இருக்கலாம், ஆனால் இலங்கையின் நிலமை மோசமடைவதற்கு, இப்படியான சம்பவங்களே முன்பும் வழிகோலியிருந்தன, என்பது அறிந்தவர்கள் புரிந்தவர்கள் தெரிந்தவர்கள் மறுக்க முடியாது என்பது மட்டும் உண்மை.

ஈழதேசம் இணையத்திற்காக.
கனகதரன்,

நன்றி ஈழதேசம்.