தமிழர் எதிர்நோக்கியுள்ள பல்வேறுபட்ட அரசியல் நிலைவரங்கள் பற்றிய, மூன்று சுற்று பேச்சுவார்த்தைகள் முடிவடைந்திருப்பதாகவும், இன்னும் ஒரு அமர்வின் பின் உத்தியோகபூர்வமாக அறிக்கை ஒன்று வெளிவரும் எனவும் பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஈழமக்களின் அவலங்கள் பற்றி அமெரிக்கா இதுவரை அறிந்திராத ஒருவிடயத்தை, தமிழ் தேசியக்கூட்டமைப்பினரின் இந்த சந்திப்பு அமெரிக்க அரசுக்கு முதல் முறையாக தெரியப்படுத்தப்போவதில்லை.
அனைத்தும் ஏற்கெனவே சர்வதேசம் அறிந்திருந்த விடயங்களாக இருந்தாலும், கூட்டமைப்பினரால் உத்தியோகபூர்வமாக அமெரிக்க இராஜாங்க அதிகாரிகளுக்கு ஒப்பிக்கப்பட இருக்கும் கருத்துபரிவர்த்தனை, ஸ்ரீலங்கா அரசுக்கு, தமிழர்களுக்கான நீண்டகால பேச்சுவார்த்தை இழுபறி விடயத்தில் சில நெருக்கடிகளை கொடுக்கவல்லதாகவே இருக்கும்.
போர்க் குற்றச்சாட்டால் நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இலங்கை அரசின் பலவீனங்களைப் பயன்படுத்தி, தமிழர்களின் நலன்களை வென்றெடுக்கப் பாருங்கள் என்று கூட்டமைப்பினரிடம் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் அறிவுறுத்தியதாக தெரிகிறது.
போர்க் குற்றச்சாட்டு என்ற விடயத்தில் தமிழர் தரப்பு அழுங்குப் பிடியாக இல்லாமல் அதனைப் பயன்படுத்தி தமக்கான நலன்களை வென்றெடுப்பதில் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும் சர்வதேச நாடுகள் அதற்கே ஆதரவாகச் செயற்படும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். (இது உண்மையாக இருக்குமாயின் ராஜபக்க்ஷ போர்க்குற்றவாளி என்பதும், தண்டனைக்குட்படுத்த சந்தற்பம் பார்த்து செயற்படவேண்டும் என அமெரிக்கா கொள்ளுவதாகவும் பார்க்கலாம்.)
இதை அமெரிக்கா தமிழர் + சிங்கள அரசு, பேச்சுவார்த்தைக்கான அழுத்தம் கொடுக்கும் ஒரு பொறிமுறையாக கையாண்டாலும் போர்க்குற்றச்சாட்டு எவ்வளவு தூரம் தமிழர்கள் மனங்களிலிருந்து விலகி நிற்கும் என்பதை அனுபவித்தவர்கள் தவிர வேறு எவரும் தீர்மானித்துவிட முடியாது.
இருந்தும் நீண்ட நெடுங்காலமாக இழுபறியில் இருந்து வரும் சிக்கல் நிறைந்த ஒரு விடயம், சர்வதேசத்து அழுத்தமில்லாமல் உள்ளூரில் பேசி தீர்வுக்கு வரும் என அமெரிக்கா நம்புவது, நகைப்புக்குரியது என்று சிலகாலத்தின் பின் அமெரிக்காவும் புரிந்துகொள்ளும்.
இதுவரை தமிழர்தரப்பு பல்வேறுபட்ட வடிவங்களில் ஸ்ரீலங்கா அரசதரப்புடன் பேச்சு நடத்தி எந்த முன்னேற்றமும் கண்டிருக்கவில்லை. இப்போ தமிழர் தரப்பான கூட்டமைப்பினரை அமெரிக்காவுக்கு அழைத்து, இந்தச்செய்தியை அமெரிக்கா தெரிவித்திருப்பதிலிருந்து ஏதோ ஒரு இடைக்கால தீர்வுத்திட்டத்தை மேற்குலகம் பரிந்துரைக்க முயலுவது புரியப்பட்டிருக்கிறது.
தமிழர்களுக்கான சுயநிர்ணயமான ஆட்சி அதிகாரம் தவிர வேறு எந்த தீர்வும், தமிழர்களுக்கு பலனளிக்காத ஒன்றாகவே இலங்கையின் நிலைவரங்கள் இயல்பாக பரிந்துரைக்கின்றன. ஒரு இலங்கையின் கீழ் என்றாலும், சுய நிர்ணயமான ஆட்சி அதிகாரம் ஒன்றை தமிழர்களுக்கு வழங்குவதால் மட்டுமே நீண்டகால பிரிவினைவாதத்தை ஓரளவேனும் கட்டுக்குள் கொண்டுவரமுடியும்.
தவிர்த்து இராணுவ மயத்தை பிரயோகித்து, கலப்பு குடியேற்றங்களை வலுக்கட்டாயமாக்கி, சிங்கள சிந்தனை மனநிலைக்குள் இருந்துகொண்டு, தமிழர்களின் அமைதி வாழ்வியல் என்று எழுத்து பூர்வமான ஒரு தீர்வுத்திட்டத்தின் மூலம் அமைதியை நிலைநாட்டலாம் என நினைப்பது பிரச்சினையை மேலும் வளர்த்து பிரிவினைவாதத்தை மக்கள் மனங்களில் அதிகரிக்குமே தவிர, ஒருபோதும் அமைதிக்கு வழிவகுக்காது என்பதை சிங்கள ஆட்சியாளர்களும் ஆலோசனை வழங்குபவர்களும் புரிந்துகொள்ளவில்லை.
சிங்கள அரசின் எத்தகைய திட்டத்தையும் வஞ்சகத்தையும் எதிர்க்கக்கூடிய பின்னணியும் அனுபவமும் தமிழர்களுக்கு நிறையவே இருப்பது நினைவுகொள்ளத்தக்கது.
சிங்கள ஆட்சியாளர்களின் சதி, தந்திரோபாயமாக கலப்பு குடியேற்றங்களும், கலாச்சார சிதைவுகளையும் தமிழர் வாழ் பிரதேசங்களில் கட்டவிழ்த்து விட்டு, இயல்பான நிலவரத்தை மாற்றியமைக்க அரசாங்கம் திட்டமிட்டு முற்பட்டிருப்பது தேசியக்கூட்டமைப்பினர் நன்கு உணர்ந்திருப்பதால், அவற்றை மனதில்க்கொண்டு தமது கருத்துக்களை அமெரிக்க தரப்பிடம் முன் வைத்து காய் நகர்த்தவேண்டும் என்பதே தமிழர்களின் அவாவாக இருக்கும்.
போர்க்குற்றத்திலிருந்து தப்பிக்கவும் மேற்குலக நெருக்கடியிலிருந்து விடுபடவும் ராஜபக்க்ஷ சீனாவை முற்று முழுதாக நம்பி நிற்கும் நிலையில் அமெரிக்கா தேசியக்கூட்டமைப்பினரை அழைத்து இலங்கையில் இன்னுமொரு தரப்பு இருக்கிறது, அதற்கு தமது கரிசினையும் இருக்கிறது என்பதை இராஜதந்திர ரீதியாக இலங்கை அரசுக்கு காட்ட முயன்றிருக்கிறது. இந்தச்சந்தற்பததை "தற்போதைக்கு" சரியாகப்பயன்படுத்த வேண்டிய பொறுப்பும் ராஜதந்திரமும் கூட்டமைப்பினர் கைகளில் உள்ளது.
ஐநா, மற்றும் உலகை ஏமாற்று முகமாக, ஸ்ரீலங்கா அரசால் திட்டமிடப்பட்டு சமீபகாலமாக நடத்தப்பட்ட பல சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தேசியக்கூட்டமைப்பு, எந்த முன்னேற்றத்தையும் எட்டிவிட முடியவில்லை. வாக்குறுதிகளை வாரி வழங்கி, வழமைபோல காலத்தை இழுத்தடிக்கும் தந்திரத்தை ஸ்ரீலங்கா அரசாங்கம் கையாண்டு வருவதை கூட்டமைப்பினர் மட்டுமல்லாது தமிழ்பேசும் அனைவரும் அறிந்ததே.
இன்று அமெரிக்காவும் பேச்சுவார்த்தை தீர்வை முன்னிறுத்தும்படி தமிழ் தரப்புக்கு அறிவுறுத்துகின்றன. எந்த விதமான கபடமான உள்நோக்கமில்லாத திட்டமிடப்பட்ட திறந்த தீர்வை நோக்கிய பேச்சுவார்த்தையை எவரும் புறக்கணிக்கும் தேவையும் இல்லை.
தவிர, இதுவரை நடந்ததுபோல இந்தியாவின் பல சுற்று ஏமாற்று, இலங்கை அரசின் காலம் கடத்தல் போலல்லாமல் ஒரு நல்ல திட்டமிடுதலுடன் ஒரு தீர்வு திட்டத்தை எவர் கொண்டுவந்தாலும் தமிழர்கள் எதிர்த்து நிற்கவேண்டிய தேவையுமில்லை.
"தீர்வுத்திட்டத்தில் இராணுவ ஆளுமை இல்லாமல் செய்யவேண்டும் என்பதே ஒவ்வொரு தமிழ் குடி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கும்". தமிழர்களின் வாழ்வியல் சிக்கலுக்கு பெரும் காரணமே இராணுவமயம் என்ற யதார்த்தத்தை பலவிதத்திலும் நடைமுறையில் உலகம் புரிந்திருக்கிறது.
ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு குடும்பத்திலும், ஏதோ ஒரு விதத்தில் ஒட்டுக்குழுக்கள் மக்களது வாழ்வியலை சீரழித்து தீர்மானிக்கும் நிலைக்கு, இராணுவம் காரணமாக இருந்து வருகிறது.
இந்நிலையை ஒழிக்கப்படாமல் தமிழர் பிரதேசத்தில் ஒரு சுமூக நிலை தோன்றவும் முடியாது, மக்களுக்கான நிம்மதி, அமைதி, என்று ஒன்று ஒருபோதும் சாத்தியமாகப் போவதுமில்லை.
முள்ளிவாய்க்கால் அழிவுக்குப்பின் நடைபெற்ற தேர்தல்களிலும், மக்கள் தமது மனநிலையை தீர்மானமாக வெளிப்படுத்தி இருக்கின்றனர். இவற்றை அமெரிக்காவும் உணர்ந்துகொள்ளும். தமிழர்களின் தனித்தரப்பான தமிழர் தேசியக்கூட்டமைப்பும் நன்கு உணர்ந்து செயற்படவேண்டிய இடத்தில் இருக்கின்றனர்.
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழர் தேசியக்கூட்டமைப்பு அறிக்கை மட்டும் விடுத்துக்கொண்டிருக்க தேவையற்றவர்கள் என மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒட்டுக்குழுக்கள், களத்தில் சகலத்தையும் தீர்மானிக்கும் செல்வாக்கை ஸ்ரீலங்கா அரசும் இராணுவமும் வளர்த்து வருகின்றன. இவை இரண்டு தீய சக்திகளும் முதலில் அப்புறப்படுத்தப்பட்டால் மட்டுமே, மக்களின் அன்றாட வாழ்வும் பொருளாதாரமும் கலாச்சாரமும் காப்பாற்றப்படும். இவைதான் தமிழர் சமூகத்திற்கான தீர்வாகவும் அமையும்.
தாயகத்தில் ஒரு திடமான மாற்றம் ஏற்படாதவரை, புலம்பெயர் தேச மக்களின் போராட்டங்களும் எழுச்சியும், மேற்குலக நாடுகளுக்கு பலவகையில் நெருக்கடிகளை உண்டுபண்ணி வருகின்றன. இலங்கையில் ஒரு தீர்வுத்திட்டம் கொண்டுவராதவரை புலம்பெயர் அமைப்புக்களின் நியாயமான கோரிக்கைகளை நிராகரிக்கவும் முடியாத நிலை உலக அரங்கில் எழுந்து நிற்கிறது.
இவற்றை கட்டுக்குள் கொண்டுவரவேண்டுமாயின் இலங்கைக்குள் ஒரு தீர்வு திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசர தேவை மேற்கு நாடுகளுக்கு இருந்து வருகிறது.
எவை எப்படியிருப்பினும் இந்தியா போன்ற தமிழர் விரோத மத்தியஸ்தம் முற்றாக தவிர்க்கப்பட்டு, பேச்சுவார்த்தை அமையவேண்டும். நீதியான மத்தியஸ்தம் இல்லாத ஒரு பேச்சுவார்த்தை தீர்வாக அமையுமென எவரும் எதிர்பார்க்கவும் முடியாது.
சீனாவுடன் உரசிக்கொள்ள முடியாமல், சுயநலன் சார்ந்து தனது இயலாமையை சரி செய்ய, தமிழர்களின் வாழ்வில் கூர் தீட்டி, இருக்கும் சிக்கலை இன்னும் அதிகரிக்க வழிதேடும் இந்தியா என்ற கரிய சக்தியை புறந்தள்ளவும் தமிழர் தேசியக்கூட்டமைப்புக்கு ஒரு சிறந்த சந்தற்பம் கிடைத்திருக்கிறது.
எனவே இந்தியா என்ற அமிலத்தை தேசியக்கூட்டமைப்பு எப்போ புறந்தள்ளுகிறதோ அப்போதுதான் மேற்கு நாடுகளின் நடுநிலையான நீதியான ஆதிக்கம் அதிகரிக்கவும் வழி வகுக்கும் என நம்பி எதிர்பார்த்திருந்த ஈழத்தமிழினத்திற்கும் ஒரு நம்பிக்கை பிறந்திருக்கிறது.
இருந்தும் இதுவரை இல்லாத ஒரு சிறந்த இராஜதந்திர அந்தஸ்த்து தமிழர் தேசியக்கூட்டமைப்புக்கு கிடைத்திருக்கிறது. இவற்றை பயன்படுத்தி தேவையற்ற சக்திகளை உள்வாங்காமல் உறுதியுடன் அடுத்தகட்டத்திற்கு செல்லவேண்டும் என்பதே நலிவடைந்திருக்கும் தமிழினத்தின் எதிர்பார்ப்பாக இருக்கும்.
ஈழதேசம் இணையத்திற்காக,
கனகதரன்.
நன்றி ஈழதேசம் இணையம்.