நேற்றைய தினம் தமிழர் பிரதேசங்கள் மட்டுமன்றி இலங்கையின் பல பாகங்களிலும் தீபாவளித் திருநாள் கொண்டாடப்பட்டது.
அதேநேரம் இந்தியாவிலும், இலங்கையிலும் இத் தினத்தில் திரையிடப்பட்டது இரு திரைப்படங்கள். இவ்வாறு முக்கியமான தினங்களில் வெளிவரும் திரைப்படங்கள் பிரபல்யமான நடிகர்களால் நடிக்கப்பட்ட திரைப்படங்களாகவே இருக்கும்.
இந்தப் பிரபல்யமான நடிகர்களுக்கு இந்தியாவில் பாலாபிஷேகம் செய்து, பூசை வழிபாடுகள் செய்வது வழமை. ஏன் கோவில் கூட அமைத்து வணங்கும் கலாசாரமும் அங்கு உள்ளது.
அந்த வகையில் நேற்றைய தினம் வெளிவந்த சூர்யாவின் நடிப்பில் உருவான 7 ஆம் அறிவும், விஜயின் நடிப்பில் உருவான வேலாயுதமும் திரையிடப்பட்டது.
அன்றைய தினம் இலங்கையில் தமிழர் பகுதிகளில் நடைபெற்ற கூத்துக்களும், கும்மாளங்களும் இதுவரையில் இந்தியாவில் கூட நடைபெறவில்லை எனலாம்.
பான்ட் இசைக் கருவிகள் சகிதம் யாழ்ப்பாணத்துச் சந்தியில் நின்று இசைபாடியது இளைஞர் கூட்டம். அதேநேரம் மட்டக்களப்புப் பகுதியில் திரைப்பட நடிகர்களுக்குப் பாலாபிஷேகம் செய்து பட்டாசு கொளுத்தி கொண்டாடினர் இளைஞர் கூட்டம். திருகோணமலையில் படம் பார்க்க ஒரு இலட்சியப் போராட்டமே நடத்தப்பட்டது.
இவ் வீரப் போராட்டத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரும் உண்டு.
இவற்றுக்கும் மேலாக தங்கள் வயிற்றுக்கும் மதுவால் அபிஷேகம் செய்யப்பட்டே இவ்வாறான வீரசாகங்கள் காட்டப்பட்டது.
அரசாங்கமோ மதுவின் வரியை அதிகரிக்க அதிகரிக்க அதனைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதேயளவுக்கு அதிகரித்துச் செல்கின்றது.
யாழ்ப்பாணச் சந்திகளில் நின்று பான்ட் இசை வாசிக்கும் இளைஞர்கள் படும் பாடு, அவர்களின் குத்தாட்டங்கள், அடடா! தமிழகத் தமிழர்களுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்றவாறு நடந்தேறுகின்றது தெருக்கூத்துக்கள்.
அத்துடன் திருகோணமலையில் பாரிய போராட்டம் நடத்தி காயமடைந்து வைத்தியசாலையிலும் அனுமதி பெற்றுள்ளனர்.
இவங்கள் வடிவா மட்டக்களப்புப் பொடியல் போல பால் ஊற்றவில்லைப் போல. அதுதான் இவங்கள் அடிபட்டு ஆஸ்பத்திரியல கிடக்கிறாங்கள்.
ஆதிகாலத்தில் இயற்கையைத் தெய்வமாக வழிபட்ட மனித இனம், பின்பு கடவுளுக்கு வடிவம் கொடுத்து வணங்கி வந்தது.
இவ்வாறு வணங்கும் போதும், பூசை வழிபாடுகளைச் செய்து பாலாபிஷேகம் செய்யும் போதும் மனதில் நினைப்பது இக் கடவுள் நேரில் வந்து அருள்புரிய மாட்டாரா என்று.
இப்ப அதற்கெல்லாம் கவலை இல்லை. சூரியாவுக்கும், விஜய்க்கும் பூசை செய்து பாலாபிஷேகம் செய்தால் அவங்கள் நேரில வந்திட்டுப் போடுவாங்கள். ஒரு கஷ்டமும் இருக்காது.
இதெல்லாம் செய்யாமல் படம் பார்க்கப் போனால், விஜய்க் குற்றம், சூரியாக் குற்றம் எல்லாம் எங்களைச் சூழ்ந்து போடும். வடிவா பாலை ஊத்திட்டுப் படம் பார்க்கப் போங்கடா...!
அனுப்புங்கோ அனுப்புங்கோ வெளிநாட்டில இருந்து நல்லா அனுப்புங்கோ. அப்பத்தான் நாங்கள் இன்னும் அதிக பான்ட் இசைக் கருவிகளை வாங்க முடியும்.
நன்றி tamil cnn.
No comments:
Post a Comment