ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடர், மற்றும் மைய ஐ.நா மன்றத்தின் 66வது பொதுச்சபை கூட்டங்கள் முடிந்து அவரவர் தத்தமது இடங்களுக்கு திரும்பியிருக்கின்றனர்.

ஐ.நா கூட்டத்தொடருக்கு முன் பலத்த எதிர்பார்ப்புடன் இருந்த ஈழ படுகொலைகுற்றவாளிகள் பற்றிய வாதப்பிரதிவாதங்கள் விடைகாணப்படாமல் முடிந்திருக்கிறது.

ஆனாலும் ராஜபக்க்ஷ குழுமம் சிக்கலிலிருந்து விடுபட்டதற்கான முடிவு எதுவும் எழுதப்பட்டதாக தெரியவில்லை. வழக்கு ஒத்திவைக்கப்பட்டது போன்ற நிலையில் கூட்டம் கலைந்திருக்கிறது. ராஜபக்க்ஷவும் பரிவாரங்களும் தமது தரப்பில் சில வாக்குறுதிகளையும் தமது தரப்பின் நியாயப்பாடுகளையும் சர்வதேச அரங்கில் தந்திரமாக காய் நகர்த்திய திருப்தியுடன் திரும்பியிருக்கின்றன.

இருந்தும் தற்போது ராஜபக்க்ஷ தரப்பிடமிருக்கும் போர்க்குற்ற பலவீனத்தை சரியாக பயன்படுத்தி, தண்டனை வழங்கும் முயற்சியில் முதலில் இறங்காமல் ,நீண்டகால இழுபறியில் இருக்கும், தமிழருக்கான அரசியல்த்தீர்வை எட்டிவிடவேண்டும் என மேற்குலக நாடுகள் விரும்பி எதிர்பார்ப்பதும் தெரிகிறது.

ராஜபக்க்ஷவும் தமிழருக்கான அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்ற நோக்கத்தை தாம் இதயசுத்தியுடன்? நீண்டகாலமாகவே கொண்டிருப்பதாக, ஐ.நா மன்றத்தில் வார்த்தைக்கு வார்த்தை முன்வைத்து, தீர்வு? அபிவிருத்தி, இறைமை, வளரும் நாடு, போன்ற பதங்களை லாவகமாக பாவித்து தப்பி தந்திரமாக நாடு திரும்பினார்.

ஆனால் சிங்களத்தரப்பினரின் வரலாற்று வழியில் திரும்பிப்பார்த்தால், எந்த ஒரு காலகட்டத்திலும் ஒப்புக்கொண்ட வாக்குறுதிகளையோ, ஒப்பந்தங்களையோ நிறைவேற்றிய தடையம் கிடையாது.

இருந்தும் சர்வதேசம், சில பொறிமுறைகளை தன்வசத்தே வைத்துக்கொண்டு இனப்பிரச்சினை தீர்வு பற்றிய பேச்சுவார்த்தையை நோக்கி செல்லும்படி அழுத்தம் கொடுத்து அறிவுறுத்தியிருக்கிறது.

ஆனால் தமிழருக்கான அதிகாரபகிர்வு தீர்வுபற்றி, சர்வதேச நாடுகளுக்கு இருக்கும் ஈடுபாடு கரிசினை, தமிழ் தேசியக்கூட்டமைப்பினரிடம் இருப்பதாகத்தெரியவில்லை. தேசியக்கூட்டமைப்பினர் பல்வேறுபட்ட குழு நிலையில் கருத்து தெரிவிப்பதும், பேச்சுவார்த்தை பற்றிய சந்திப்புக்களை ஒரு பண்டிகைக்கான குதூகலத்துடன் விளம்பரப்படுத்தி, பள்ளிக்கூட கழக விளையாட்டுப்போட்டிகளில் ஈடுபடும் மனோநிலையில் கையாளுவதாகவே காணப்படுகிறது.

மேற்கண்ட கருத்தை உறுதிப்படுத்தும் வண்ணம் சிங்களத்தரப்பு தேசியக்கூட்டமைப்பினருக்கு, சிறிபால டி சில்வா மூலம் நற்சான்றும் வழங்கியுருப்பது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

ஐநா சபையின் அமர்வின்போது ஸ்ரீலங்கா அரசுக்கு சங்கடத்தை உண்டுபண்ணக்கூடும் என பலராலும் எதிர்பார்த்த ஒரே ஆவணம் ஐநா நிபுணர்குழுவின் அறிக்கை. குறிப்பிட்ட அறிக்கை தயாரிக்கும்போது பெறப்பெற்ற தகவல்கள். சர்வதேச தொண்டு அமைப்புக்களிடமும் தமிழ் அமைப்புக்களிடமும் எழுத்து மூலமும் ஆவணங்கள் மூலமும் பெற்றே பூர்த்தி செய்யப்பட்டிருக்கும்.

தமிழர்தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக உண்மைத் தகவல்களை ஐநா மன்ற நிபுணர்குழு கோரியதோ கோரவில்லையோ, தாம் முன்வந்து தகவல்களை அனுப்பிவைக்கவேண்டிய கடமை பொறுப்பு தேசியக்கூட்டமைப்புக்கு இருக்கிறது. தேசியக்கூட்டமைப்புக்கு உள்ள வேலைத்திட்டத்தில் இதுவும் மிக முக்கிய ஒன்றாகவே இவற்றை கொள்ளவேண்டும். ஆனால் நடந்தது என்னவென்று தெரியவில்லை.

ஆனால் அதை சிங்கள அமைச்சர் ஸ்ரீபால டி சில்வா முற்று முழுதாக மறுத்திருக்கிறார். ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எந்தவொரு தகவலையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கியிருக்காது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் நாட்டுக்கு எதிராக முக்கியமான தருணங்களில் செயற்படமாட்டார்கள் என்றே நாம் கருதுகின்றோம். அதேபோன்றுதான் ஐ.நா.நிபுணர் குழுவுக்கும் அவர்கள் சாட்சியம் வழங்கியிருக்கமாட்டார்கள்,, என நாம் நம்புகின்றோம். ஊடகங்களில் தவறான தகவல்கள் வெளிவருகின்றன. ஊடகங்கள்தான் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றன என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தார்.

தமிழர் தேசியக்கூட்டமைப்பு இது சம்பந்தமாக மறுப்பு எதையும் தெரிவித்ததாகவும் தெரியவில்லை. ஒருவேளை சிங்கள கொள்கைப்பரப்புச்செயலாளர் ஒருவரை கூட்டமைப்பு தன்னகத்தே கொண்டுள்ளதோ என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

கத்தரிக்காய் முற்றிவிட்டால் சந்தைக்கு வந்தே ஆகவேண்டும் என்பது விதி, சர்வதேச சட்டத்து சம்பிரதாயப்படி, சர்வதேசத்து சட்டத்தின் பிடிக்குள் போர்க்குற்றவாளி, என்று ராஜபக்க்ஷ, நேரடி விசாரணைமூலம் உறுதிப்படுத்தப்படாவிட்டாலும், இனப்படுகொலை குற்றவாளி / சூத்திரதாரி ராஜபக்க்ஷ என்பதை. அகில உலகம் ஏதோ ஒரு வகையில் தகுந்த ஆவணங்கள் சாட்சிகள் மூலம் ஏற்றுக்கொண்டிருப்பது தெரிகிறது.

சுமத்தப்பட குற்றம் சரியானதா, தப்பானதா என்பதையும் நிரூபிக்கும் பொறுப்பையும் சர்வதேச அசைவாக்கம் ராஜபக்க்ஷவிடமே விட்டிருக்கிறது. இது சில பார்வையாளர்களுக்கும், தமிழினத்திற்கும் விசனப்படும் ஒரு பொறிமுறையாக காணப்பட்டாலும். ராஜபக்க்ஷ தரப்பு பொறிகலங்கிய நிலையில் தேசியக்கூட்டமைப்பினரின் பேச்சுவார்த்தை மேசையை காட்டி, தந்திரமாக காலத்தை கரைக்கலாம் என்பதே யதார்த்தமான உண்மை.

இனி வரும் காலங்களில் ராஜபக்க்ஷவினால் தனது நலன் சார்ந்து உள்ளூரில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சாட்சியம். அதற்கு எதிராக தமிழ்த்தரப்பினர் எடுத்து வைக்கும் குற்றச்சாட்டுக்கள், மற்றும் சர்வதேச நியாயவாத அமைப்புக்கள் தொடர்ச்சியாக எழுப்பும் ஆதார பூர்வமான ஆவணங்கள் அனைத்தும் விவாத மேடைக்கு வந்து சகல பதிவுகளும் இணைந்து, ராஜபக்க்ஷ குற்றவாளியா இல்லையா என்பதை முடிவுசெய்ய முயலுவதாகத்தெரிகிறது.

ஈற்றில் இவையனைத்தும் ராஜபக்க்ஷவை ஒரு சிக்கலான பொறியில் வீழ்த்துமே தவிர சுற்றவாளியாக புனிதராக அவர் வெளிவரமுடியாது.

அவற்றை உறுதிப்படுத்தும் வண்ணம் ராஜபக்க்ஷவின் சர்வதேசத்துக்கான தூதுவர்களும். அவரது அரசதரப்பில் குரல்கொடுக்கவல்ல அமைச்சர்களும் எந்த ஒரு இடத்திலும் சர்வதே அசைவாக்கத்துடன், நியாயமான நெகிழ்வுப்போக்கோடு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளை ஏற்றுக்கொண்டு கருத்து பரிமாறிக்கொண்டதாக தரவுகள் இல்லை.

எரி குண்டுகளையும், கொத்துக்குண்டுகளையும், பண உதவியையும் கொடுத்து இன அழிப்புக்கு துணை நின்ற சில நாடுகளின் ஆலோசனைக்கமையவே கருத்துக்களையும், நகர்வுகளையும். சர்வதேச அரங்கில் எடுக்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா முனைப்புக்காட்டி அடம்பிடித்து வருகிறது.

இந்த அணுகுமுறைகூட மீண்டும் மீண்டும் தொடரும் பட்சத்தில், மனித நேயத்தை விரும்பும் நடுகளுக்கு எரிச்சல் உண்டுபண்ணுமே தவிர, மனித உரிமைகளை மதித்து நடக்கும் பண்புகொண்ட மேற்கத்திய நாடுகளின் வெப்பத்தை தணிக்க உதவப்போவதில்லை.

ஸ்ரீலங்காவுக்கு உதவிவரும் சீனா தனது வல்லாதிக்கத்தை ஆசிய வட்டகையில் நிலை நிறுத்துவதற்காக இலங்கையை ஒரு தளமாக பயன்படுத்த நினைக்கிறது. இதனால் தனக்கு ஐநா அமைப்பில் இருக்கும் மட்டற்ற அதிகாரங்களை பயன்படுத்தி இலங்கையை காப்பாற்ற எதிரணியில் நிற்கிறது. அமெரிக்கா மத்திய கிழக்கு வட்டகையில் பயன்படுத்தும் உத்தியை சீனா இலங்கையிலும் ஆபிரிக்க நாடுகள் சிலவற்றிலும் மேற்கொள்ளுவதை காணலாம்.

இலங்கை தனது நட்பு நாடென்ற கோசத்தையும் சீனா பிரயோகிப்பதை காணலாம். தவிர அதிகமான அபிவிருத்தி உதவிகளையும் சீனா இலங்கைக்கு தொடர்ந்து வழங்கி வருவதால், சீனாவின் வெளியுறவுக்கொள்கை என்ற மட்டத்தில் அவை ஸ்ரீலங்காவின் வளர்ச்சியோடு பார்க்கப்படுகின்றன.

ஒருவேளை இலங்கை அரசியலில் ஒரு மாற்றம் ஏற்பட்டு ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சி அதிகாரத்தை பிடிக்குமாகவிருந்தால் ஐக்கிய தேசியக்கட்சி தனது கொள்கைக்குட்பட்டு அமெரிக்கா, இந்தியா சார்ந்து நடைமுறைகள் மாறும் சூழல் உண்டாகக்கூடும்.

ஆசிய கடல் பிராந்தியத்தை தனது ஆளுமையின் கீழ் வைத்திருக்க முயற்சிக்கும் சீனா, இன்றய சர்வாதிகாரி ராஜபக்க்ஷவை தொடர்ச்சியாக ஸ்ரீலங்காவின் ஆட்சியில் அமர வைப்பதையே விரும்புகிறது.

சீனா தன்நலன் சார்ந்து, ராஜபக்க்ஷ பதவியில் இருக்கும் குறிப்பிட்ட காலத்தை சாதகமாகப்பயன்படுத்தி, தனது இருப்பை இலங்கைக்குள் தொடர்வதற்கு பெருத்த முதலீடுகள் மூலம் ஆழமாக கால் பதித்து நீண்டகால ஒப்பந்தங்கள் செய்து தரித்துவிட விரும்புகிறதே தவிர,, இலங்கைக்குள் இந்தியா போன்று, அரசியல் ரீதியாக அதிகம் தலையிடுவதாகத் தெரியவில்லை.

இந்தியா எப்பொழுதும் தமிழர் விரோத சக்தியாக இருந்தே வருகிறது. இந்தியா தமிழர்களின் மூத்த அண்ணன் என்ற மாயையை உருவாக்கி அரசியல் ரீதியாக இலங்கைக்குள் தலையீடு செய்ய விரும்புகிறது. இதனால் சீனாவின் ஆதிக்கத்தை கணிசமாக குறைத்துவிடலாம் என்பதும் இந்தியாவின் கணக்கு. இந்தியா தனது ஆதிக்கத்தை இலங்கைக்குள் நிலை நிறுத்த ஈழத்தமிழர் பிரச்சினையை காரணமாக காட்டிவருவதை காணலாம். இலங்கையின் ஆட்சி அதிகாரம் ஐக்கிய தேசியக்கட்சியிடம் இருந்திருக்குமாயின் இந்தியாவின் தந்திரம் இலகுவாக கைகூடியிருக்கவும் கூடும்.

சீனாவை நேரடியாக எதிர்க்கமுடியாத இந்தியா, சீனாவின் நிழலில் நிற்கும் ராஜபக்க்ஷவையும் எதிர்க்கமுடியாமல், இலங்கை விடயத்தில் சீரற்ற வெளியுறவு கொள்கையுடன் செய்வதறியாது தத்தளிக்கிறது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாவதை தடுக்க லாயக்கற்று இருப்பதிலிருந்து இந்த உண்மையை புரிந்து கொள்ள முடியும்.

சீனாவை நண்பனாக வைத்துக்கொள்வதால் மட்டுமே இந்தியாவை தனது விருப்பத்திற்கேற்ப நகர்த்தலாம் என்பதும் ராஜபக்க்ஷவின் திடமான தந்திரம்.

உள்நாட்டு ஊழல் நெருக்கடிகளில் சிக்கித்தவிக்கும் இந்தியா, இந்துசமுத்திரத்தில் ஸ்ரீலங்காவால் ஏற்படுத்தப்பட்ட சீனாவின் ஆதிக்கத்தை வெல்லமுடியாவிட்டாலும்,, எப்பாடுபட்டாவது தானும் இலங்கைக்குள் குருட்டு பூனை கணக்காக ஒரு மூலையிலாவது காலூன்றிவிடவே நகர்வுகளை மேற்கொள்ளுகிறது.

கடந்த காலங்களில் இலங்கை அரசிடம் தோல்வியில் முடிந்த இந்த உத்தியை புதுப்பிக்க வழிதேடி புதிய ராஜதந்திரியாக, ரஞ்சன் மத்தாய் என்ற வெளியுறவுச்செயலர் ஒக் 09 அன்று இலங்கை சென்றிருக்கிறார் இவரது இலங்கைப்பயணம் எதையும் மாற்றியமைக்கப்போவதில்லை. இரண்டு தேங்காய் ரொட்டியும் தண்ணீரும் குடித்துவிட்டு திரும்பிவிடுவார் என்பது உறுதி.

கொழும்புக்கு செல்லும் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மத்தாய், தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை!!! வழங்குமாறு??? கொழும்புக்கு அழுத்தம் கொடுப்பார் என இந்தியத்தரப்பில் இருந்து நகைச்சுவை செய்தி ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மூன்று நாட்கள் தங்கியிருக்கும் மத்தாய், இந்தியாவின் கூட்டாளிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை இன்று கொழும்பில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இதன்போது இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் அரசாங்கத்துடன் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தை, போரின் போது இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் மற்றும் வடக்குக் கிழக்கு நிலைமைகள், குறித்துக் கவனம் செலுத்தப்படும் என பழைய பல்லவி புதிய இசையுடன் பாடப்படும்.

நிலைப்பாடு இப்படியிருக்கும்போது, கிறீஸ் பூதம் என்பது யாழ். குடாவுக்கு விஜயம் செய்யும் இந்தியப் பிரஜைகளின் ஒரு குழுவினரே காரணம் என யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த கதுருசிங்க பகிரங்கமாக தெரிவித்துள்ளார். (அவர் Mr ரஞ்சன் மத்தாயையும் மறைமுகமாக குறிப்பிட்டாரோ என சந்தேகம் எழுந்திருக்கிறது.)

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைக்கும் சட்ட விரோத செயற்பாடுகளுக்கும் இந்தியர்களான இவர்கள் தான் முக்கிய காரணமாக இருப்பதாகவும் தங்களின் விசாரணைகள் மூலம் தெரியவந்திருப்பதாக அவர் குறிப்பிட்டள்ளார். யாழ். குடாவில் ஏற்பட்டுள்ள கிறீஸ் பூத விவகாரத்தின் பின்னணியில் இவர்களுக்கும் புலம் பெயர் தமிழர்களுக்கும் தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்து ஆராய வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

ஆழமாக நோக்கி பார்க்கும்போது, போர் முடிவுபெற்றுவிட்டதென்று குறிப்பிடும் சிங்கள அரசு, இராணுவத்தை திரும்பப்பெற விரும்பவில்லை. சட்டவிரோத துணை ஆயுதக்குழுக்களை தமிழர்பகுதிகளிலிருந்து வெளியேற்ற முயற்சிக்கவில்லை. கிறிஸ் பூதம்பற்றி எவரையும் வாய் திறக்க விடாமல் புதுப்புது கதைகள் புனையப்படுகின்றன. அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டதற்கான வெற்றிடம் எதுவும் காணப்படவில்லை. தமிழர்கள் தீர்வு பற்றியசக்கரம் வெள்ளி, சனி, ஞாயறு,,,,,,, ,,,,,,என தொடர்ந்து முப்பது ஆண்டுகளை தொடர்ந்து முடிவில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

போராட்டம் 2009ல் முடிவுக்கு வந்ததாக அறிவித்தது மிகப்பெரிய தப்பு என அரசாங்கம் இப்போ உணர்வதுபோலவும் தெரிகிறது. அத்துடன் புலிகள் தொடர்ந்து நாட்டில் இருக்கவேண்டும் என அரசாங்கம் விரும்புவதுபோலவும் அனைத்து நகர்வுகளும் போதிக்கின்றன, அல்லது சர்வதேச நெருக்கடிகளிலிருந்து தப்புவதற்காக திரும்பவும் ஒரு உள்நாட்டு கிளர்ச்சியை விரும்பி மக்களை தூண்ட அரசு முயலுகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது, இதுபற்றிய சரியான புரிதல், ஒன்றோடு ஒன்றுபட்டு கலந்திருக்கும் தமிழர் தேசியக்கூட்டமைப்பு மற்றும் டக்கிளஸ் போன்றோர்களுக்குத்தான் வெளிச்சம்.

ஈழதேசம் இணையத்திற்காக.
கனகதரன்.

நன்றி ஈழதேசம்.