Sunday, November 25, 2012

ஈழத்தின் மூச்சே என்றன் எண்ணத்தின் உயிரே வாழி!‏










ஈழத்தின் மூச்சே என்றன்
எண்ணத்தின் கருவே - தங்கம்
கீழிடை பணிந்துபோக
கிளம்பிய புகழே வாழி!
 மானமே மகுடம் என்று
மலையென எம்மில் மீண்டு
காலத்தால் உருவாய் வந்த
கதிரவன் வாழ்க வாழ்க!.

உலகத்தில் உயர்வு நீதான்
உண்மைக்கு உரைகல் நீதான்
கலங்கரை விளக்கம் நீதான்
கடுமையும் நீதான் என்பர்.
விடுதலை வேள்வி மூட்டி
விண்ணதிர் களங்கள் கண்டு
சாவினை மீண்ட தங்க
தலைவனே வாழி வாழி!

ஒப்புக்கும் பயந்ததில்லை -உன்
உருவத்தில் கடுமையில்லை
தப்புடன் ஒருநாள் கூட - நீ
தன்நிலை பகிர்ந்ததில்லை
நிச்சியம் உங்கள் எண்ணம்
நிமிர்ந்திடும் நாளை என்போம்
அத்துணை காட்சி காண்போம்
ஆதவன் நீவிர் வாழ்க!

மூட்டிய பயணம் மீழும்
முடிவது நன்றே சேரும் - நீ
நீட்டிய திசையை நோக்கி
நிமிர்நடை போட்டே வந்தோம்
நாளை உன் வரவுக்காக
நல்வர வோடு நிற்போம்
இன்றைய நல் நாளில்- உன்
நிறை உரை எதிர்பார்க்கின்றோம்

அண்ணை,யுன் ஐம்பத்தெட்டு
அகவையை வாழ்த்துகின்றோம்
பினையும் ஆண்டு நூறு
பேறுடன் வாழ்வாய் என்பபோம்
மண்ணிடை மாண்ட வீரர்
உன்னையே நம்பி மீண்டார்
திண்ணமாய் வருவாய் என்றே
திக்கெட்டும் பார்த்து நிற்போம்.

ஈழத்தின் தலைவா வாழி!
என்றும் எம் நெஞ்சே வாழி!
காலத்தின் கதிரே வாழி!
காவிய புதல்வே வாழி!
வீரத்தை எமக்களித்த
வேங்கையின் மைந்தே வாழி
பார்வதி பெற்ற மைந்தா
பகலவன் (நீ) வாழி வாழி!

ஓர்மத்தை உகந்தளித்த
உண்மையின் பேறே வாழி!
வல்வையின் மகவே வாழி!
வானிடை உயர்ந்தே வாழி!
நேற்றுப்போல் இன்றும் உங்கள்
நிதர்சனம் காண்போம் உண்மை
காற்றென வருவாய் கண்டேன்
கனவில்லை உண்மை என்பேன்.

ஊர்க்குருவி.

Thursday, November 22, 2012

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம். மற்றெல்லாம் "தந்திரம்"



என்னையும்
ஒரு
வீர இனத்தில் பிறந்தவன் என,
அகில உலகமும்
அதிசயித்து சொல்லுமளவுக்கு,
புள்ளி பிசகாமல்
வல்ல களம் ஆடிவிட்டு,
வழமைபோல நீங்கள்
எந்த எதிர்பார்ப்புமில்லாமல்
தியாக தீபமாக,
உணர்வின் பிரவாகத்தில்
ஒப்பற்ற
மாவீரர்களாகி விட்டீர்கள்.

உங்கள் வழியில் பயணித்து
பழக்கப்பட்ட என் கால்கள்
நீங்கள் போன அடிச்சுவட்டை
தேடுகின்றன,

சில நாட்களாக
பாதை முழுவதும்
புதிதாக ஏதேதோ
காற்றுவாக்கில் கரடு முரடாக
மண்டிக்கிடக்கின்றது.

பாதை மாறிவிடுவேனோ?
என்றல்ல,
பாதை மாறிவிடுமோ
என்ற பயம் ஒருபுறம்,

தலைவனின் போதனையும்,
மாவீரர்கள்,
உங்கள் நினைவுகளும்
சூரிய பிரவாகமாக
அனைவரின் முகங்களிலும்...
இருந்தும்…..
ஆங்காங்கே
தொற்று ஏற்பட்டுவிட்ட
கலவரம்.

நோயின் அறிகுறியாக
சில வேளைகளில்
முரண்பாடான கூக்குரலும்,
ஊளை சத்தங்களும்
செவிப்பறைகளை
சிறுமைப்படுத்தி
சங்காரம் செய்கின்றன.

என் தலைவன் அமைதிகாத்த
சில வருடங்களாக
எனது மண்டைக்குள்
சில் வண்டு தொடர்ந்து
ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது.

நானும் நீயும்
ஒரே மொழியை பேசியவர்கள்,
நானும் நீயும்
ஒரே தலைவனை
நம்பிக்கையுடன்
பின்பற்றியவர்கள்.

எமது தலைவன்
என்றைக்கும்
எங்களுக்கு
அவ நம்பிக்கையை
பிரிவினையை
ஊட்டியதுமில்லை.

தலைவன் சோர்ந்து போனதாக
சரித்திரத்தில் பதிவும் இல்லை.

நான் சொல்லியோ நீ சொல்லியோ
தேசியத் தலைவன்
இந்த பாதையை தெரிவு செய்ததுமில்லை.

தலைவன் வகுத்த ஒப்பற்ற
கட்டுப்பாட்டை
மீறி நடக்க
எனக்கு எந்த அருகதையுமில்லை,
உனக்கும் அது பொருந்தும்.

இருந்தும் எப்படியோ
அவரவர்
எழுந்த மானத்தில்
தெருத்தெருவாக சங்கங்கள் திறந்து
கூவிக்கொண்டிருக்கிறோம்.

ஏதோ ஒரு
கலவரத்தின் அறி குறி
எனது சந்ததிக்குள் புகுந்திருப்பது மட்டும்
என்னால் உணரமுடிகிறது.

விடுதலைப்புலிகள்
நாமத்தை மாற்றி
எவரும் சங்கம் திறக்க துணியவுமில்லை.
அது முடியாது என்பதும் விதி
அதுதான் காலத்தின் கட்டளை .

அந்த நிதர்சனத்தை
உள்ளூர
நீயும் நன்கு உணர்ந்திருப்பாய்.
நானும் நன்கு உணர்ந்திருக்கிறேன்.

எனக்கும் உனக்கும்
தாய் நாடு
தமிழீழம்.

மொழியும் எங்களை பிரித்திருக்க முடியாது.
தலைவன் எமக்கு சொல்லித்தந்த
குறிக்கோள்
ஈழ சுதந்திரத்துக்கான
விடுதலை.

தலைவனின் கையடக்கத்துள்
நீயும் நானும் இருக்கும்வரை,
காற்றிடை கலைந்த
முகில் கூட்டங்கள் போல
பயணித்தாலும்,
மழைபோல் ஒன்றாக
சமர்களில் பொழிந்திருக்கிறோம்.

பின்
இன்றைக்கு மட்டும் ஏன்
எமக்குள்
எப்படி வந்தது இந்த முரண்பாடு.

மாவீரர்களே
நீங்கள் இன்று இருந்திருந்தால்
ஏன் போராட வந்தோம் என்று
கூனிக்குறுகி இருந்திருப்பீர்கள்.
நல்லவேளை நீங்கள்
மாவீரர்கள் ஆகிவிட்டீர்கள்.

உங்களையும் மண்ணையும்
பிரித்துப்பார்க்க
என்னால் முடியவில்லை.

தலைவனும்
அதைத்தான் எனக்கு சொல்லித்தந்தான்.
நானும் நீயும்
சிங்களவனும் தமிழனும் அல்ல,

நீயும் நானும்
ஒன்றுக்குள் ஒன்று.
உட்கார்ந்து பேசினால்
உடன்பாட்டுக்கு வரமுடியாதது
ஒன்றுமில்லை.

மாவீரர்களின் வாரத்தில்
சங்கங்களை பூட்டிவிட்டு ஒன்றுகூடுவோம்,
தலைவனின் கனவை மெய்ப்படுத்துவோம்.
மாவீரர்களை மனதார் கௌரவிப்போம்.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.
அதுவே தாரக மந்திரம்.

மற்றெல்லாம் "தந்திரம்"

ஊர்க்குருவி.

Tuesday, November 6, 2012

எமக்கு வீர முகவரியை தந்த போராளிகள் பற்றி எவரும் சிந்திப்பதாக தெரியவில்லை,

இனப்படுகொலை முடிந்து மூன்றாண்டுகள் ஓடிவிட்டது.    இருந்தும் பல மட்டங்களில் இன்னும் திருப்தி ஏற்பட்டதாகத்தெரியவில்லை.
செத்தவர்கள்,  தப்பி ஓடியவர்கள் போக,  மீதமுள்ளவர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஏதாவது வழி தேடவேண்டும்.  ஏதாவது மாற்றத்தை சர்வதேசம் பஞ்சாயத்து செய்து  ஈட்டித்தருமா என்று "போராடியவர்கள்"  வெளி உலகத்தில் நடப்பவை தெரியாமல் ஆகாயத்தை பார்த்து காத்திருக்கின்றனர்.   அதேநேரம் உள்நாட்டிலும் வெளி மட்டங்களிலும் தேர்வுசெய்யப்பட்ட உளவியல்ரீதியான வன்மங்களும் தலை கழுவி கவிழ்க்கும் தந்தரங்களும் சகல மட்டங்களிலும் தலைவிரித்தாடுகிறது.

காட்டுமிராண்டிகளின் தன்னிச்சையான தலையீடுகளால் சர்வதேச பஞ்சாயத்துக்கூட திசைதிருப்பப்பட்டு  வாய்தா தொடர்ந்து வம்பர்களின் கை ஓங்கிவிடும்மோ  என்று அச்சப்படும்வகையில் அனைத்தும் திட்டமிட்டு திசைதிருப்பப்பட்டு பயணிப்பதாகவே சம்பவங்கள் உணரவைக்கின்றன.  இந்த பஞ்சாயத்து மற்றும் கபட நாடகங்கள் முடிக்கப்படும் தறுவாயில் போராளிகள் ஓர் இருவராவது மிஞ்சுவார்களா என்ற கேள்விக்கு எவரிடமும் விடையில்லை.   போராளிகள் மறக்கப்பட்டுவிட்டனரோ என்ற பெரும் கவலையும்  எழும்பாமலில்லை.  முடிந்தவரை அனைத்து தளங்களிலும் ஏமாற்றுவேலை உளவியல் ரீதியாக திட்டமிடப்படுகின்றன. இது ஏன் கேட்பதற்கு ஆள் இல்லை என்ற இழக்காரமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.

மக்கள் பரம்பலை குறைப்பதற்க்காக மேற்கொள்ளும் ஸ்ரீலங்காவின் முதலாவது வேலைத்திட்டம் இராணுவ அடர்த்திமூலமும்,  சிங்கள குடியேற்றங்கள் மூலமும் செய்து முடிக்கப்பட்டுவிட்டது.  அதற்கு  தமிழ் அரசியற் கட்சிகளும்,   இந்திய கொள்கை வகுப்பாளர்களும்,   ஸ்ரீலங்காவின்   உயர் அரச அதிகாரிகளும் அனைத்து ஆதரவையும் வழங்கி நியாயப்படுத்தி விளம்பரப்படுத்துகின்றனர்.

தடை முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளில் கொல்லப்பட்டவர்கள், சித்தசுவாதீனமாக்கப்பட்டவர்கள் போக மீதமுள்ளவர்களை உள ரீதியாக சித்திரவதை செய்து சிதைத்து தலை கழுவி நாடு கடத்தும் முயற்சி அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டிருக்கிறது.  வேலைவாய்ப்பு என்ற பெயரில் கண்காணாத அரபி தேசங்களுக்கு நாடு கடத்தி  ஒருவருடன் ஒருவர் தொடர்பாடலை தவிர்த்து தனிமைப்படுத்தும் நோக்கமும் திட்டமிடப்பட்டிருக்கிறது,  இத்திட்டத்தின்மூலம் நாட்டில் ஆண்களை இல்லாமல் செய்யும் சூழ்ச்சியும் உளவியல் ரீதியாக வக்கிர நோக்கத்துடன்  வேகமாக  நடைபெறுகிறது.  இத்திட்டம் ஓரளவு   வெற்றிபெறும் சாத்தியமும் இருப்பதாகவே   உணரக்கூடியதாக உள்ளது. . தொடர் இராணுவ கண்காணிப்பு புனர்வாழ்வு என்றபெயரில் கொத்தடிமையாக இருக்காமல் எங்காவது இராணுவ பிரசன்னம் இல்லாத இடத்துக்கு சென்றுவிடலாம் என்ற வெறுப்பு மனநிலைக்கு போராளிகள் வருவதற்கு சூழல்கள் வழிவகுக்கும் என்றே நம்பலாம்.

தீர்வுத்திட்டம் ஒன்றை ஒருபோதும் கொடுக்க விரும்பாத சிங்கள இனவாதிகள்,   போராளிகளை தன்னிச்சையாக வெளியே விட்டுவிட்டால் அமைப்பு ரீதியாக மீண்டும் ஒன்றுகூடிவிடுவார்கள் என்ற அச்சமும்,  அரசியல் தஞ்சம் கிடைக்கக்கூடிய நாடுகளுக்கு சென்றடைந்து போர்க்குற்ற வாக்குமூலங்களை கொடுத்து சர்வதேச   அழுத்தத்துக்கு ஆளாக்கிவிடுவார்கள் என்ற அச்சமும் சேர்ந்து,  போராளிகளை தனிமைப்படுத்தி கண்காணாமல் அரபு தேசங்களுக்கு கிரையம் செய்யும் திட்டமும் உளவியல் அடிப்படையில் வகுக்கப்பட்டிருக்கிறது.  இதுபற்றி  நமது  பெரியவர்  சம்பந்தன்  ஐயா அறிந்தாரோ என்னவோ  யாமறியோம்.

2009 ம் ஆண்டிலிருந்து கணிசமான மக்கள் கடுமையான கடல்ப்பயணத்தின் ஆபத்தை பொருட்படுத்தாமல் அவுஸ்திரேலியாவை நோக்கி புலம்பெயர்ந்து படையெடுக்கத்தொடங்கியிருந்தனர், ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவும் அகதிகளுக்கு ஓரளவு ஆதரவாக நடந்துகொண்டிருந்தது. அந்த நோக்கத்தையும் சிதைக்கும்வண்ணம் ஸ்ரீலங்கா அரசு பொய் குடியேற்றவாசிகளை திட்டமிட்டு அவுஸ்திரேலியாவுக்குள் அனுப்பி உண்மையான அகதிகளுக்கும் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கிடைக்காதவண்ணம் பல சதிகளை செய்து வருகிறது.  அச் சதித்திட்டத்தில் ஜனாதிபதி மஹிந்தவின் மகன் நாமல் ராஜபக்க்ஷவும் கோத்தபயவும் ஸ்ரீலங்கா புலனாய்வுத்துறை,   மற்றும் கடற்படையுடன் இணைந்து செயற்பட்டதாக அறியப்பட்டது,   அதுபற்றிய செய்திகள் பல பத்திரிகை ஊடகங்களில் வெளிவந்தன.

இனத்துவேஷம் காரணமாக சிங்கள அரசு அனைத்து கீழ்மட்டமான   உத்திகளையும்  கையாளுகிறதென்று பார்த்தால். தமிழ்நாட்டு சில அரசியல் கட்சிகளும்,  சில பத்திரிகைகளும் தொடர்ந்து விஷமம் செய்துவருகின்றன.  

அதில்   உச்சக்கட்டமாக த  ஹிந்து, தினமலர்,  ஆகிய பத்திரிகைகள் ஆரம்பந்தொட்டே வெளிப்படையாக நஞ்சை கக்கி வந்திருக்கின்றன,  திமுகவின் கூட்டாளி பத்திரிகையான நக்கீரன் நல்லவன்  போல நடித்து புனைக்கதைகளை வெளியிட்டு கருணாநிதியின் அதே தந்திர விஷமம் செய்து பணமீட்டியும் வந்தது.   ஆனந்தவிகடன் என்ற பத்திரிகை வன்மத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் அவ்வப்போது சில அவதூறு செய்திகளை பூசி மெழுகி பிரசுரித்து வந்திருந்தாலும்,   இன்றளவில் ஆனந்தவிகடனின் முகமூடியும் கழற்றப்பட்டு சுயரூபம் வெளிவந்திருக்கிறது.

"நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி!" என்ற தலைப்பில் வக்கிர உணர்வுடன் ஆனந்தவிகடனில் எழுதப்பட்ட கட்டுரை காழ்ப்புணற்சியில் திட்டமிடப்பட்டு போராட்டத்தை கொச்சைப்படுத்தி சேறடிப்பதற்கு என்று புனையப்பட்ட ஒன்று என்பது அக்கட்டுரை எழுதிய நேர்த்தியும் வஞ்சகமான கால்வாரல் உத்தியும் மிதந்து நிற்கிறது .

அதிகாரங்களால் செய்ய முடியாத வஞ்சகத்தின் எச்சங்களை நிறைவுசெய்யும் நோக்கோடு வஞ்சகமும்  வக்கிரமும்,  எழுத்துமூலம் வடிப்பட்டிருக்கிறது.   தமிழக மக்களின் போராட்ட ஆதரவு உணர்வுகளை சிதைத்து நீர்த்துப்போகச்செய்து    இந்தியாவின் கொள்கையை   நியாயப்படுத்தும் உத்தியும். ஆனந்தவிகடன் மூலம் நரித்தனமாக சரிக்கட்டப்பட்டிருக்கிறது.

அதிகாரவர்க்கம்,   புலனாய்வாளர்கள்,   கொள்கைவகுப்பாளர்கள்   இப்படி ஒரு கீழ்த்தரமான உத்தியை கையாள நினைத்திருந்தாலும் உள்ளூர ஆனந்தவிகடன் பத்திரிகைக்கும் போராட்டத்தையும் போராளிகளையும் கொச்சைப்படுத்துவதில் உடன்பாடு குறைவில்லாமலே இருந்திருக்கிறது.  வியாபாரத்துக்காக தமிழக பத்திரிகைகள் இப்படியான செய்திகளை இன்று மட்டுமல்ல  2009ன் பின் பல சமயங்களில் நானும்கூட என்னும் உத்தியில் உளவியல் கால்வாரலை செய்தே வந்திருக்கின்றன, 2008,   2009 களில் நக்கீரன் ஒரு ஈழப்பத்திரிகைபோலவே தன்னிச்சையாக செயற்பட்டு கற்பனை கதைகள் பலவற்றை வெளியிட்டு வந்தது.

ஆனந்தவிகடன் என்ற பத்திரிகை கீழ்த்தரமாக இப்படி எழுதி வயிறு வளர்க்கவேண்டுமானால் நேரடியாக ஸீ தமிழ் தொலைக்காட்சியுடன் தொடர்புகொண்டு    "சொல்லுவதெல்லாம் உண்மை"  நிகழ்ச்சி தயாரிப்பாளர்களை அணுகினால் அந் நிகழ்ச்சியில் தினம் தினம்  பகிரங்கப்படுத்தும் நிறைய பாலிய வக்கிரங்கள் மிருகத்தனமான சமூகச்சீர்கேடுகளை  கூடிய ஆதாரங்கள் படங்களுடன் தினமும் வெளியிடலாம்.  செய்திக்கும் பஞ்சமில்லை,  இந்தியாவில் நடக்காத பாலியல் வக்கிரங்கள் சமூகச்சீர்கேடுகளா வேறு எங்கும் நடந்துவிட்டன.

ஒருவேளை அப்டித்தான்  ஒரு போராளிக்கு மிருகத்தனமான   இராணுவத்தால் சீரழிக்கப்பட்டு  ஒரு துர் நிலை ஏற்பட்டிருந்தாலும் நூற்றாண்டு பாரம்பரிய கொண்ட பத்திரிகை என்று தம்பட்டமடிக்கும் விகடன்   ஒரு விடுதலை பெண் போராளிபால் அணுகும் முறை இதுவல்ல என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

வேற்று நாட்டில் வேற்று இனத்தவர்களால் நடத்தப்படும் சனல் 4,   நடந்துகொண்ட நாகரீகத்தை இவர்கள் எப்போ கற்றுக்கொள்ளப்போகிறார்கள். ஈழத்தமிழர்களுக்கு எதிரி சிங்களவன் மட்டுமல்ல   தமிழ் நாட்டில் சிங்களவனை விட கொடியவர்கள் இருக்கின்றார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று, அந்த பத்திரிகையின் பெயரை எழுதவே அருவருப்பாக இருக்கிறது.  அனுதாபப்பட்டு கழிவிரக்கத்தை வெளியிடுவதுபோல அப்பட்டமான காழ்ப்புணர்ச்சியாகவே அந்த கட்டுரை நெஞ்சத்தில் அனலை கொட்டியிருக்கிறது.

ஈழப்போராட்டத்திற்கு தற்போதய தோல்வி என்பது நிரந்தரமானதல்ல. நாம் பலமாக இருந்தபோது இந்த வஞ்சகர்கூட்டம் எப்படி நடந்தது என்பதை நினைத்துப்பார்க்க துன்பத்திலும் சிரிப்பு வருகிறது.

ஒன்றை மட்டும் இந்த வஞ்சகர்களுக்கு தெரிவிக்கமுடியும். ஈழம் ஒன்று ஸ்ரீலங்காவிலிருந்து பிரியும்வரை களம் ஒன்று இருந்துகொண்டேயிருக்கும்.  என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள முடியும்.

எந்த வடிவத்திலும் துரோகிகள் எம்முடன் கூட இருந்து செயற்படுவர் என்பதை தலைவர் எம் மக்களுக்கு மிகச்சரியாகவே புரியவும் வைத்திருக்கிறார். 

30 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் போராட்டம் நடந்து வந்திருக்கிறது,  தாயகத்திலிருந்த மக்கள் மட்டுமல்லாது பல்லாயிரம் மைல்களுக்கப்பால் புலம்பெயர் தேசங்களில் சுதந்திரமாக வாழும் இரண்டு மில்லியன் வரையினாலான மக்கள் ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக விடுதலை நோக்கி பயணப்பட்டுள்ளனர் இங்கு எவரும் பதவிக்காகவோ பட்டத்திற்காகவோ போராட்டத்திற்கு சாமரம் வீசி நிற்கவில்லை. உணர்வு ரீதியாக தலைவனின் கொள்கையை ஏற்று பயணித்திருக்கின்றனர். பொய் பிரச்சாரத்தை அள்ளிவிட்டு   ஐந்து வருட தேர்தல் முறைமையில் தேர்ந்தெடுக்கும் ஒரு அட்டைக்கத்தி கலாச்சாரம் ஈழத்தில் நிகழ்ந்திருக்கவில்லை.

ஒரு காலத்தில் சினிமா பாடலில்க்கூட விடுதலை புலிகளை,   போராட்டத்தை உருவகப்படுத்தி  கருத்துசொல்ல ஒருவரும் விரும்பியிருக்கவில்லை,   அப்படித்தான் தலைவரின் கொள்கை கோட்பாடுகள் அமைந்திருந்தன.  இது ஒன்றும் கருணாநிதியின் அடுக்குமொழி வசனத்தில் வளர்ந்த இயக்கமல்ல.  உணர்விலும் சத்தியத்திலும் உறுதியிலும் வளர்க்கப்பட்ட பேரியக்கம்,  தலைவனின்  தலையாய பண்புகளும் அதைத்தான் ஒவ்வொரு மனிதனிடமும் குடிகொண்டிருக்கிறது.

அப் பத்திரிகையின் கட்டுரையில் பின்னணியில் நிச்சியம் அரசியல் பின்னணியுடன் இந்திய புலனாய்வுத்துறையான றோவின் திசை திருப்பும் வஞ்சகமும் ஒருசேர இருப்பதை உணரக்கூடியதாக உள்ளது,  றோவின் தலையீடு ஏற்கெனவே அறியப்பட்ட அனுபவம் போராட்டத்துக்கு  உண்டு.  விகடனுக்கு சோரம்போனாலும் பணம் பிரதானமாக தெரிந்திருக்கிறது..

அடுத்து அழையா விருந்தாளி முத்துவேல் கருணாநிதியின் நகைச்சுவைப்பகுதிக்கு வரவேண்டிய தேவை இருக்கிறது.

ஈழத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக, "டெசோ' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், தி.மு.க., கருத்துக்கள் அடங்கிய ஆவணத்தை, ஐ.நா., துணை பொதுசெயலர் மற்றும் ஐ.நா., மனித உரிமை ஆணையத்திடம், கட்சியின் பொருளாளர் ஸ்ராலின், பார்லிமென்ட் குழு தலைவர், டி.ஆர்.பாலு ஆகியோர் ஒப்படைத்துள்ளனர்.

இதற்கு முன், 1961ல், தூத்துக்குடி தி.மு.க., பொதுக்குழுவில்,   ஈழத் தமிழர்களுக்காக நிறைவேற்றப்பட்டத் தீர்மானம், 1985ல் நடத்தப்பட்ட, ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தின் நகல்கள் ஆகியவற்றை, ஐ.நா., சபைக்கு அனுப்பியுள்ளோம்.  ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றிய புகைப்படங்கள் அடங்கிய, "சிடி'யையும் ஐ.நா., சபையில் அளித்துள்ளோம். ஈழத் தமிழர்களின் வாழ்வில் புதிய ஒளியை இம்முயற்சி ஏற்படுத்தும் என, நம்புகிறோம்.

ஐ.நா., சபையிடம் ஒப்படைத்துள்ள ஆவணத்தில், "ஈழத் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தி, அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப மறுவாழ்வை முடிவு செய்ய வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளோம். பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு, சர்வதேச அளவில் அழுத்தம் கொடுக்கவும் நடவடிக்கை எடுப்போம்.

"டெசோ' மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள் பற்றி, மத்திய அரசுக்கு நன்கு தெரியும். எனவே, ஈழத் தமிழர்களின் நல்வாழ்வுக்கு, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கை, "டெசோ' மாநாட்டுத் தீர்மானத்தில் இடம்பெறவில்லை.ஆனால், ஈழத் தமிழர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, அவர்கள் மத்தியில் நடத்தப்படும் பொது வாக்கெடுப்பின் அடிப்படையில், தனி நாடு உருவாக்கலாம். பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை, லண்டனில் நடைபெறும் "இலங்கை தமிழர்கள் மாநாட்டிலும்"  வலியுறுத்துவோம்.இவ்வாறு, கருணாநிதி கூறினார்.

கருணாநிதி குறிப்பிடும் கருத்து மட்டும் எவராலும் புறக்கணிக்க முடியாதது என்பது உண்மையே,   நடைமுறையும் வேறு விதமாக இல்லை என்பதும்  நூறு வீதம் ஏற்றுக்கொள்ளக்கூடியாவையே.  ஆனால்……………... சொல்லியவர் யார் என்று பார்த்தால் முடிவு எப்படி அமையும் என்பதை ஆராய்ந்து பார்க்கத்தேவையில்லை.  இந்த செய்தியை ஈழத்து சிறு குழந்தைகள் கேட்க நேர்ந்தால் உடனடியாக ஓடிச்சென்று bunker க்குள் படுத்துக்கொள்ளும்.

1958,தொடக்கம்   2012 டெசோ வரை பலநூறு தீர்மானங்களை இயற்றியதாக குறிப்பிடும்   அவர்   ஒரு  தீர்மானத்தையாவது  திரும்ப  ஒருமுறை வாசித்தாவது பார்த்திருப்பாரா என்று பார்த்தால் பூய்ச்சியம்தான் பதிலாக கிடைக்கும்.  ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதும் 31 நாட்கள் விடுப்பெடுத்து பின் அவர் கையில் எடுப்பது என்னவோ ஈழ அரசியல் பாசம்தான்.  ஆட்சி கிடைத்துவிட்டால் அவர் என்ன செய்வார் என்பதை 2008,  2009 ம் ஆண்டை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் படுகொலைகளை எண்ணிப்பார்த்தால் அவராது தீர்மானங்களின் ஆழம்,  வண்டவாளம்  நன்கு புரியும்.

கருணாநிதியின் அரசியல் வளர்ச்சியின் மூலவேரே இப்படியான கருத்துக்களை முன்வைத்து தடைதாண்டுவதுதான்.   அதை கருணாநிதியின் கடந்தகால வழித்தடம் பிசுறின்றி எடுத்துக்காட்டுகிறது.  1961ம் ஆண்டு தமிழர்களுக்காக தூத்துக்குடியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஐம்பது வருடங்கள் கடந்தும் கை துடைக்கவும்  உதவியிருக்கவில்லை.  ஆனாலும் மூன்று நான்கு இலட்சம்பேர் கொல்லப்பட்டபின்னும் எந்தக்கூச்சமும் இல்லாமல்  திமுகவை நியாயப்படுத்துவதற்கு புள்ளி விபரமாக 1961 ஆண்டு 1985 ஆண்டு 2012 டெசோ வரை தடைதாண்டல் நிகழ்ச்சிகள் கூச்சமின்றி ஞாபகப்படுத்தப்படுகிறது.   ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றிய புகைப்படங்கள் அடங்கிய,  சீடி, குறுந்தகடுகள் ஐநா சபைக்கு அனுப்பியிருப்பதாக குறிப்பிடுகிறார்.  அந்த சீடி க்களை கருணாநிதி போட்டு பார்த்தாரா என்பது தெரியவில்லை.   கருணாநிதியின் கைங்கர்யத்தில் நடந்த அந்த படுகொலை சிடிக்களை கருணாநிது ஒருமுறை போட்டு பார்த்துவிட்டு ஐநாவுக்கு கொடுத்து அனுப்பியிருக்கலாம். அவரது நெஞ்சுக்கு நிம்மதியாக  இருந்திருக்கும்.

2009ல் கருணாநிதியை  தோலுரிக்கும் விதமாக மக்கள் தொலைக்காட்சியும் பல இணையத்தளங்களும் அந்த சிடிக்களை கருணாநிதிக்கு எதிராக வெளியிட்டு   மண்  வாரி  திட்டி தீர்த்தன,   அப்போ காவல்த்துறையை கொண்டு மக்கள் தொலைக்காட்சியை முடக்க முயற்சித்தவர் பகவான் கருணாநிதி,  இன்று வெட்கம் குற்ற உணர்வு எதுவும் இல்லாமல் தனது அரசியல் மீட்சிக்காக சிடிக்கள் ஐநா மன்றத்துக்கு அனுப்பியிருப்பதாக வேஷம் போடுகிறார், ஆனால்  கருணாநிதி  சம்பந்தப்பட்ட  அனைத்து போர்க்குற்ற வீடியோ ஆதாரங்களும் சனல் 4 முலமும் வேறு வழிகள் மூலமும் ஏற்கெனவே ஐநா பெற்றுவிட்டது.

2009ல் நாம் தமிழர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மற்றும் வைகோ,  நெடுமாறன்  அவர்கள் இதுபோன்ற குறுந்தகடுகளை தமிழக மக்களுக்கு வினியோகிக்க முற்பட்டபோது, அவை தனக்கு எதிரானது என்பதை தெரிந்து அனைத்தையும் பறிமுதல் செய்து சீமானை தேசியப்பாதுகாப்புக்கு துரோகமிளைத்தவர் என்று தேசத்துரோகியாக உருவகப்படுத்தி சிறையில் அடைத்தவர் இதே  காத்தமுத்து கருணாநிதி.

கருணாநிதியின் டெசோ தீர்மானங்கள் என்ன தாக்கத்தை ஈழத்தமிழர்களுக்கு ஏற்படுத்துகிறதோ இல்லயோ கருணாநிதிக்கும் திமுகவுக்கும் இடையில் இன்று மலைபோல் திரண்டிருக்கும் தடை சற்றேனும் விலகுமென அவர் எதிர்பார்க்கிறார்.  விளிம்பு நிலையில் இருப்பவர்களும் புதியவர்களும், மறக்கும் தன்மை கொண்டவர்களும்  கருணாநிதியின் கண்கட்டு வித்தை விளையாட்டில்  ஈர்க்கப்பட வாய்ப்பு இருக்கிறது.  அதனால் வீழ்ச்சியிலிருந்து மீண்டுவிடலாம் என அவர் திட்டமிட்டு எதிர்பார்க்கிறார்.  அதுதான் காலாகாலமாக கருணாநிதியின் கவசமாகவும் இருந்து வருகிறது.  கருணாநிதி எடுத்துவைத்திருக்கும் டெசோவின் தீர்மானம் ஒன்றும் புதிதானதுமல்ல.  Amnesty international,  international crisis group,  UN Human rights  council  ஆகிய அமைப்புக்களும் ஐநா சபையும் அதைத்தான் வலியுறுத்துகின்றன.

கருணாநிதி தனது தப்பித்தலுக்காக எதையும் செய்யக்கூடியவர் என்பது ஒருபுறம் இருந்தாலும் அவர் கடைசிகாலத்தில் மனம் மாறிவிட்டாரோ என்ற ஐயுறவும் லூசுத்தனமான பலரை இரண்டும் கெட்டான் மனநிலைக்கு தள்ளி குளப்பியிருக்கிறது.  இதுகூட கருணாநிதிக்கு கணிசமான வெற்றியே.   தொடர்ந்து கருணாநிதிக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்காவிட்டால் அவர் இதே கொள்கையை (தடைதாண்டல் உத்தியை)  இன்னும் கடுமையாக்கி  காவடி எடுத்து தொடருவார் அந்த கட்டத்தில் தமிழக அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பது அனைவரும் அறிந்ததே. 

ஐநா சபைக்குள் ஒரு கோரிக்கை மனுவை உறுப்பு நாடு அந்தஸ்து அல்லாதோர் நேரிடையாக கொண்டு  சேர்ப்பது என்பது சற்று சிரமமான காரியமே.

சாதாரண ஒரு தனிமனிதன்  ஒரு மனுவை எழுதி பதிவுத்தபாலில் ஐநாவுக்கு அனுப்பிவைத்தால் அந்தமனுவின் முக்கியத்துவம் பொறுத்து அதற்கான பதிலை ஐநா அந்த மனிதனுக்கு அனுப்பி வைக்கக்கூடும்.    உறுப்புரிமைகொண்ட ஒரு நாட்டின் அங்கீகாரத்துடன்  பதிவுசெய்யப்பட்ட ஒரு வெகுஜன அமைப்பு ஒரு சமூகம் சார்ந்து முக்கியமான ஒரு கோரிக்கையை கையளிக்க விரும்பினால் ஐநா மன்றத்திடம் அனுமதிகேட்டு முறையிடலாம்,  கூறிப்பிட்ட விடயத்தின் அவசியம் முக்கியத்துவம் பரிசீலிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்படும்.  அந்தவகையில் ஈழப்பிரச்சினை ஐநாவால் அறியப்பட்ட ஒன்று என்பதால் டெசோ சார்பாக முறைப்பாடு கையளிக்க கேட்கப்பட்ட வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஐநாவின் வரவேற்பு மண்டபத்தில் (information hall)  டெசோ தீர்மானம் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

டெசோ தீர்மானம் ஐநாவுக்கு கையளிக்கப்பட்டுவிட்டதால் தீர்மானத்தில் முன்மொழியப்பட்ட விடயங்களை ஐநா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும் என்றோ குறிப்பிட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றோ எந்த விதியும் இல்லை.  டெசோவின் தீர்மானங்கள் இந்தியாவின் ஒப்புதலுடன் அதற்கான பாதையூடாக ஐநாவை சென்றடைந்தால் அந்த தீர்மானத்துக்கு இராசதந்திர அந்தஸ்து கிடைக்கும்.  இந்தியாவில் உள்ள ஒரு அமைப்பு,  இந்திய ஆட்சி அதிகாரத்தில் பங்காளியான திமுக ஈழ விடுதலையில் கரிசினையான உடன்பாடு இருந்திருந்தால் எப்பாடு பட்டாவது டெசோவின் தீர்மானத்தை இந்திய அரசின் ஒப்புதலுடன் ஐநா மன்றத்தில்  கொடுத்திருக்கவேண்டும்.

இந்திய நாட்டை நிர்வகிக்கும்   பல மந்திரிகளை தன்னகத்தே கொண்ட திமுக தலைவர் கருணாநிதி.   மத்தியில் கொள்கைகளை தீர்மானிக்கவல்ல செல்வாக்குமிக்க பங்காளிக்கட்சியாகவும் இருந்துவருகிறார்,  குடும்ப பிணக்குகளை சீர் செய்வதற்காக பலமுறை மத்திய அரசை மிரட்டி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த சம்பவங்களும் நிறைய உண்டு.   அப்படியிருக்கும் பட்சத்தில் ஏன் டெசோ தீர்மானத்தை முறைப்படி மத்திய அரசின் ஒப்புதலுடன் இராசதந்திர தகுதிக்கு கொண்டுவர முயற்சிக்கவில்லை.  மத்திய அரசுக்கு டெசோவின் தீர்மானம் அனைத்தும் தெரியும் என்று ஊக அடிப்படையில் பூசி மெழுகி நியாயப்படுத்தியிருக்கிறார்.

வேலைத்திட்டம் செயற்பாடு எதிர்மறையாக இருப்பினும்,   டெசோ அடிப்படையில் தமிழீழத்துக்கான ஆதரவு கொள்கையை மூலமாகக்கொண்ட ஒரு அமைப்பு என்பதே கருணாநிதியின் கூற்று.   அப்படியான அமைப்பு தனது விருப்பம் ஒன்றை  கோரிக்கையாக வைப்பது இயல்பானதே,  இதே கருத்துப்பட்ட பல கோரிக்கைகள் ஏற்கெனவே ஐநாவின் பார்வையில் இருக்கிறது,   எனவே டெசோ தீர்மானத்துக்கு  ஐநா எவ்வளவு முன்னுரிமை கொடுக்கும் என்பதும் தெரியவில்லை  டெசோ என்ற அமைப்பு பன்முகப்பட்ட சமூக  பிற்படுத்தப்பட்டோர்  நலன்புரி அமைப்பாக இருப்பின் அதன் கோரிக்கையை ஐநா  வேறு வகையாக பாற்பதற்கு சந்தற்பம் உண்டு

டெசோ மாநாட்டில் முன்மொழிந்த   தீர்மானங்கள் மத்திய அரசுக்கு தெரிகிறதோ இல்லையோ ஈழத்தமிழர்கள் அனைவரும் அறிந்ததே.

அடிப்படையில்  (திமுக)  கருணாநிதி ஈழ இன அழிப்பின்போது நேரிடையாக வகுத்த பாத்திரம் எவ்வகையானது என்பது பற்றியும்,  மத்திய அரசு நடந்துகொண்ட முறைகள் பற்றியும் ஒவ்வொரு ஈழத்தமிழனும் வேதனையுடன் அறிந்துதான் இருக்கின்றனர்,  இந்திய மத்திய அரசின் ஈழத்தமிழர் பற்றிய வெளியுறவுக்கொள்கை சென்றமாத நிருபாமாவின் பேட்டிவரை வெளிப்படையாக அறியப்பட்டே இருக்கிறது.   திமுக பற்றிய கொள்கை என்பதை விடவும் தனிப்பட்ட முறையில் கருணாநிதி எப்பேற்பட்ட கொள்கையை   ஈழத்தமிழர்பால் கொண்டிருக்கிறார் என்பதற்கு 1/2 நாள் உண்ணாவிரதம் மட்டும் சான்று அல்ல,  தியாகி முத்துக்குமரன் முதல் 19 பேர் தீயில் கருகியபோதும்,  தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் அன்னை மருத்துவ உதவிக்கு தமிழகம் வந்தபோதும்   கருணாநிதியின் எதிர்வினை எப்படி இருந்தது என்பதை அனைத்தும் உலகம் அறிந்துகொண்டதே.  அது திரும்பத்திரும்ப பேசப்பட்ட விடயமாக இருந்தாலும் விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கும் மறதிக்காரர்களுக்கும்  கருணாவின் ஆசைக்கதைகளை கேட்டு ஏமாறும்நிலையில் இருப்பவர்களுக்கும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டுவது தேவையான ஒன்றாகவே படுகிறது.

அடுத்து லண்டனில் நடைபெறும் உலகத்தமிழர் மாநாடு என்பதைக்கூட கருணாநிதி "உலகத்தமிழர் மாநாடு" என்று உச்சரிக்க விரும்பவில்லை "இலங்கை தமிழர் மாநாடு" என்றே நக்கலாக குறிப்பிட்டு விளித்திருக்கிறார் என்பதையும் லண்டன் மாநாட்டுக்கு அழைப்பு அனுப்பி வரவேற்பவர்கள் புரிந்துகொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றனர்.   இருந்தும் அந்த மாநாட்டில் தனது கட்சி ஆளுமையை செலுத்தி 'தடைதாண்டும்'; உத்தியை விரிவுபடுத்த பிரயத்தனப்படுகிறார் என்பதையும் நாம் ஏமாளிகளாக ஏற்றுக்கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம்.

நீதியான,   நடுநிலையான,  ஒருதலைபட்ஷமில்லாமல் விவாதிக்கவல்ல தமிழர்களின் அரசியல் கட்சிகள்,  முற்போக்கு அமைப்புக்கள், பிற மொழி அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் உலகத்தமிழர் மாநாட்டில் பங்குபற்றவேண்டும் என்பது அனைவரினதும் அவாவாக இருக்கும்,  ஆனால் காலையில் எனது குழந்தைகளை கொன்றவனுக்கு,  எனது தாயை சகோதரியை சீரழித்தவனுக்கு மாலையில் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்திருப்பது.  அதிர்ச்சியளிக்கிறது.  தமிழர்  சமூகத்தின்  ஒரு அரசியல் கட்சி என்பதினால் கருணாநிதியின் கட்சிக்கு அழைப்பிதழ் அனுப்புவதாக இருந்தால் பாகுபாடில்லாமல் உலகத்தமிழர் மாநாடு என்ற சுலோகத்தின்கீழ் இலங்கையில் இருக்கும் தமிழர் கட்சி என்று மந்திரி பதவியையும் வகிக்கும் டக்கிளஸ் தேவானந்தாவின் கட்சிக்கும், கருணா,  பிள்ளையான் ஆகியோரின் கட்சிகளுக்கும் அழைப்பிதழ் அனுப்புவதுதான் நியாயமானதாக இருக்கும்.  அப்படியில்லாமல் அவர்கள் துரோகிகள் என வகைப்படுத்தப்படுவார்களாயின் கருணாநிதிக்கு எந்த அடிப்படையில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருக்கிறது,   கருணாநிதி தனது ( தடைதாண்டலுக்காக)   குடும்ப சிக்கல் தீரும் நேர்த்திக்கடனுக்காக டெசோ என்ற காவடியை தூக்கி உட்கார்ந்து ஆடுகிறார்,  என்பதால் நேற்றய முள்ளிவாய்க்கால் படுகொலைகள் எதிலும் கருணாநிதி சம்பந்தமில்லாதவர் என்றே   ஆகிவிடுமா??   அல்லது நேற்றைய நிகழ்வுகள் அனைத்தும் நடக்கவில்லை என்றே கொள்ளவேண்டுமா???,  அல்லது மறக்கப்பட்டுவிட்டதா????.

இந்த நடைமுறை ஒரு வளர்ப்பு பிராணியின் குணாம்ஷத்தை ஞாபகப்படுத்துகிறது.

ஈழதேசம் இணையத்திற்காக.

கனகதரன்.

Friday, November 2, 2012

காலத்தின் கட்டளையால் களியாட்டம் முடக்கப்பட்டுவிட்டது. இளையராஜாவின் வாய்க்கு சர்க்கரை இடவேண்டும்.

"ட்ரினிற்ரி ஈவன்ஸ்"   நிறுவனமும் இலங்கை அரசின் கைக்கூலிகளும் இணைந்து "நவம்பர்"  மாவீரர் தினத்திற்கு பக்கத்தில் போட இருந்த கறுப்புக் கோடு போட முடியாமல் முடங்கியிருக்கிறது.
இதில் பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை.  கவலைப்படுவதற்கும் எதுவும் இல்லை.

ஒன்றுக்கு ஏதோ ஒன்றுக்கு ஒவ்வாதமையினால் காலநிலையை (காலம்)  காரணம் காட்டி அந்த நிகழ்ச்சி இயற்கையின் பெயரால் தடுக்கப்பட்டிருக்கிறது.

வெளிப்படை கவிஞன்,  கவியரசு கண்ணதாசன் அவர்களின் அமரத்துவமடையாத "நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்துவிடும் என்ற பாடலை அமைதியுடன் அனுபவித்து கேட்டு இன்றைய நிதர்சனத்தையும் நினைவு கூரமுடியும்.

தமிழ்நாடு  காலாகாலத்துக்கும் ஒவ்வொரு கலைஞர்களை உச்சாணிக்கொம்பில் வைத்து கொண்டாடித்தான் வந்திருக்கிறது.  இந்த வரிசையில் ஜி ராமநாதன், டிஆர் பாப்பா,  திரை இசை திலகம், கேவி மஹாதேவன்,   மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன்,  அதன்பின் 80 ,90 களில் பிசியாக இருந்த  இசையமைப்பாளர் இளையராஜாவும் ஒரு காலகட்டத்தை அலங்கரித்தவரே,   இன்று ஏஆர் ரஹுமான் உச்சத்தில்,   நாளை எவரோ காலம்தான் அதனையும் தீர்மானிக்கவேண்டும்.

ஈழத்தமிழர்கள் மிகவும் நேசித்த இசையமைப்பாளர் இளையராஜா மாவீரர் காலத்தில் குறுக்கே  கோடுபோட முன்வந்தது ஈழத்தமிழர் மனங்களில் மிகுந்த வேதனையை அளித்தது.  இதனால் துரதிர்ஷ்டவசமாக இளையராஜாவுக்கும் ஈழத்தமிழர்களுக்குமிடையே ஒரு பலமான வெடிப்பை காலம் ஏற்படுத்திவிட்டது.

கலைஞர்கள் இசைஞர்கள் என்றாலே அதிகமானவர்களுக்கு ஞானச்செருக்கும் வித்தக காய்ச்சலும் அவர்களை ஆட்கொண்டு அவர்களை அழித்துவிடுவதை புராணகாலந்தொட்டு வரலாறுகள் குறிப்பிடுகின்றன.

கம்பர் காலத்து சீழ்த்தலை சாத்தனார், காதுவெட்டி புலவர், முதற்கொண்டு திருவிளையாடல் படத்தில் பாண்டியன் சபையில் தலைக்கனம் கொண்டு வீம்பு பண்ணிய ஹேமநாத பாகவதர் என்ற புல்லவர் வரை வித்தககாய்ச்சல் பீடித்து ஞானச்செருக்கில் காலமாகி காணாமல் போனவர்களாகவே இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

தலைக்கனம் இல்லாமல் சமூகத்துடன் ஒத்துப்போன கலைஞர்கள் புலவர்கள்,   அமரத்துவம் அடையாமல் என்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

இலங்கைக்கு வெளியே அதிகமான ஈழத்தமிழர்கள் வாழும் நாடாக கனடா இருந்துவருகிறது.  அங்கு வாழும் தமிழர்கள் சுகமான வாழ்வு வாழ்வதற்கும்,   நாடுகடந்து வெளிநாடு போவதற்கும் ஈழ போராட்டம் ஒரு காரணமாக இருந்தது,    போராட்டம் என்று வரும்போது அதன் கதாநாயகர்கள்  மாவீரர்களே,  என்பதை அனைவரும் மீண்டும் ஞாபகப்படுத்திப்பார்த்தால் இதயம் இருப்பவர்கள் ஒருமுறை கூனிக்குறுக நேரிடும்.  இதற்கு இன்று கனடாவில் உயரத்தில் இருக்கும் ஈழத்தமிழர்களின் பெருத்த தொழில் நீறுவனங்களும் விதிவிலக்காக இருக்க முடியாது.

சென்ற மாதம் கச்சேரியின் முன்னேற்பாடு காரணமாகவும்,   விளம்பரத்தின் பொருட்டும் இளையராஜா கனடா வந்திருந்தார்.  கனடாவாழ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவருக்கு அழகிய பெண்களை பதுமைகளாக இருபுறமும் நிறுத்தி சாமரம் வீசி வரவேற்பளித்தனர்,  மாலை பூச்செண்டுகளுடன் ஏற்பாட்டாளர்களால் இராச மரியாதை கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.  இளையராஜா கனத்தின் உச்சத்தில் நின்று வாழ்த்திப்பேசியவர்களின் வரவேற்புக்கு ஹேமநாதரின் பாணியில் பதிலளித்தார்.

பத்திரிகையாளர்களுக்கு பதிலளிக்கும்போது ஏதோ ஒன்றை தொட்டு ஒரு நெருடல் அவரிடம் அடிக்கடி காணக்கூடியதாக இருந்தது.  அந்த கலவரத்திலிருந்து வெளிவரும் நோக்கோடு கம்பரின் பாடல் ஒன்றை நினைவுகூர்ந்து ஏதோ ஒன்றை நியாயப்படுத்துவதாகவே அவரது பேச்சு அமைந்திருந்தது.    "உன்னை உள்ளபடி அறியோம்,  உலகை உள்ள திறம் அறியோம்,   முன்னை அறியோம்,   பின்னை அறியோம்,   எல்லாம் அவன் செயல் என்று நியாயப்படுத்தினார்",

அந்த நியாயப்படுத்தல் இன்று அவன் செயலால்    (!)      நிதர்சனமாகியிருக்கிறது,   எதையும் எந்த சக்திக்கும் அப்பாற்பட்டு,  பணபலம்,   புகழ் பலம்,   விண் முட்டிய விளம்பரம்,   அனைத்தையும் தாண்டி ஏதோ ஒன்று அனைத்தையும் வரையறுக்கிறது அது காலத்தின் கட்டளையாகவும் இருக்கலாம் இயற்கையின் சீற்றமாகவும் இருக்கலாம் மாவீரர்களின் மாசற்ற தியாகத்திற்கு இயற்கை கொடுத்த மரியாதையாகவும் இருக்கலாம். புனித கார்த்திகை மாதத்தில் ஒரு களியாட்ட நிகழ்வு இயற்கை சீற்றத்தால் தடுக்கப்பட்ட்டிருப்பதாக வாக்குமூலம் கொடுத்திருக்கின்றனர்,,  எது எப்படியோ?

இளையராஜா அவர்களின் வாய்க்கு சர்க்கரை போடவேண்டும். 

கார்த்திகையில் களியாட்ட நிகழ்ச்சி நடத்த மனிதம் தடுத்தபோது மனிதன் ஏற்றுக்கொள்ளவில்லை.  இயற்கை சம்மதிக்க மறுத்திருக்கிறது.  எவராலும் எதுவும் செய்ய முடியவில்லை.

ஈழதேசம் இணையத்திற்காக ஊர்க்குருவி.