என்னையும்
ஒரு
வீர இனத்தில் பிறந்தவன் என,
அகில உலகமும்
அதிசயித்து சொல்லுமளவுக்கு,
புள்ளி பிசகாமல்
வல்ல களம் ஆடிவிட்டு,
வழமைபோல நீங்கள்
எந்த எதிர்பார்ப்புமில்லாமல்
தியாக தீபமாக,
உணர்வின் பிரவாகத்தில்
ஒப்பற்ற
மாவீரர்களாகி விட்டீர்கள்.

உங்கள் வழியில் பயணித்து
பழக்கப்பட்ட என் கால்கள்
நீங்கள் போன அடிச்சுவட்டை
தேடுகின்றன,

சில நாட்களாக
பாதை முழுவதும்
புதிதாக ஏதேதோ
காற்றுவாக்கில் கரடு முரடாக
மண்டிக்கிடக்கின்றது.

பாதை மாறிவிடுவேனோ?
என்றல்ல,
பாதை மாறிவிடுமோ
என்ற பயம் ஒருபுறம்,

தலைவனின் போதனையும்,
மாவீரர்கள்,
உங்கள் நினைவுகளும்
சூரிய பிரவாகமாக
அனைவரின் முகங்களிலும்...
இருந்தும்…..
ஆங்காங்கே
தொற்று ஏற்பட்டுவிட்ட
கலவரம்.

நோயின் அறிகுறியாக
சில வேளைகளில்
முரண்பாடான கூக்குரலும்,
ஊளை சத்தங்களும்
செவிப்பறைகளை
சிறுமைப்படுத்தி
சங்காரம் செய்கின்றன.

என் தலைவன் அமைதிகாத்த
சில வருடங்களாக
எனது மண்டைக்குள்
சில் வண்டு தொடர்ந்து
ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது.

நானும் நீயும்
ஒரே மொழியை பேசியவர்கள்,
நானும் நீயும்
ஒரே தலைவனை
நம்பிக்கையுடன்
பின்பற்றியவர்கள்.

எமது தலைவன்
என்றைக்கும்
எங்களுக்கு
அவ நம்பிக்கையை
பிரிவினையை
ஊட்டியதுமில்லை.

தலைவன் சோர்ந்து போனதாக
சரித்திரத்தில் பதிவும் இல்லை.

நான் சொல்லியோ நீ சொல்லியோ
தேசியத் தலைவன்
இந்த பாதையை தெரிவு செய்ததுமில்லை.

தலைவன் வகுத்த ஒப்பற்ற
கட்டுப்பாட்டை
மீறி நடக்க
எனக்கு எந்த அருகதையுமில்லை,
உனக்கும் அது பொருந்தும்.

இருந்தும் எப்படியோ
அவரவர்
எழுந்த மானத்தில்
தெருத்தெருவாக சங்கங்கள் திறந்து
கூவிக்கொண்டிருக்கிறோம்.

ஏதோ ஒரு
கலவரத்தின் அறி குறி
எனது சந்ததிக்குள் புகுந்திருப்பது மட்டும்
என்னால் உணரமுடிகிறது.

விடுதலைப்புலிகள்
நாமத்தை மாற்றி
எவரும் சங்கம் திறக்க துணியவுமில்லை.
அது முடியாது என்பதும் விதி
அதுதான் காலத்தின் கட்டளை .

அந்த நிதர்சனத்தை
உள்ளூர
நீயும் நன்கு உணர்ந்திருப்பாய்.
நானும் நன்கு உணர்ந்திருக்கிறேன்.

எனக்கும் உனக்கும்
தாய் நாடு
தமிழீழம்.

மொழியும் எங்களை பிரித்திருக்க முடியாது.
தலைவன் எமக்கு சொல்லித்தந்த
குறிக்கோள்
ஈழ சுதந்திரத்துக்கான
விடுதலை.

தலைவனின் கையடக்கத்துள்
நீயும் நானும் இருக்கும்வரை,
காற்றிடை கலைந்த
முகில் கூட்டங்கள் போல
பயணித்தாலும்,
மழைபோல் ஒன்றாக
சமர்களில் பொழிந்திருக்கிறோம்.

பின்
இன்றைக்கு மட்டும் ஏன்
எமக்குள்
எப்படி வந்தது இந்த முரண்பாடு.

மாவீரர்களே
நீங்கள் இன்று இருந்திருந்தால்
ஏன் போராட வந்தோம் என்று
கூனிக்குறுகி இருந்திருப்பீர்கள்.
நல்லவேளை நீங்கள்
மாவீரர்கள் ஆகிவிட்டீர்கள்.

உங்களையும் மண்ணையும்
பிரித்துப்பார்க்க
என்னால் முடியவில்லை.

தலைவனும்
அதைத்தான் எனக்கு சொல்லித்தந்தான்.
நானும் நீயும்
சிங்களவனும் தமிழனும் அல்ல,

நீயும் நானும்
ஒன்றுக்குள் ஒன்று.
உட்கார்ந்து பேசினால்
உடன்பாட்டுக்கு வரமுடியாதது
ஒன்றுமில்லை.

மாவீரர்களின் வாரத்தில்
சங்கங்களை பூட்டிவிட்டு ஒன்றுகூடுவோம்,
தலைவனின் கனவை மெய்ப்படுத்துவோம்.
மாவீரர்களை மனதார் கௌரவிப்போம்.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.
அதுவே தாரக மந்திரம்.

மற்றெல்லாம் "தந்திரம்"

ஊர்க்குருவி.