புல்லரிக்க வைக்கும் கருணாநிதியின் மனிதாபிமான அக்கறை,
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று, திமுக தலைவர் கருணாநிதி, பிரதமருக்கும், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவுக்கும்(உருக்கமான?) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, இருபதாண்டுகளுக்கும் மேலாக சிறையிலே வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் முன் வரவேண்டும் என்றும்,
அதற்காக தமிழக அரசு, அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்ப வேண்டும் என்றும். அனைவரும் கேட்டுக்கொண்டு பல நாட்களாகியும், தமிழக அரசு அதற்கு முன் வராத நிலையில், மத்திய அரசாவது இவர்கள் மூவரையும் சிறையிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சிகளிலே ஈடுபட்டு உதவிட வேண்டும் என்று பிரதமரையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவி சோனியாவையும் தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்வதாக கருணாநிதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் பதவியையும் இழந்து, எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பறிகொடுத்து. கட்சிக்காரர்கள் அனைவரையும் சிறைக்கு அனுப்பி, கூட்டுச்சேர்ந்த கட்சிகளையும் விட்டு விலகும் சூழல் உருவாகி, விரக்தியுடன் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் வயோதிபர் கருணாநிதி, போதிய மனநிம்மதியில்லாமல் குளம்பிப்போயிருப்பது இதிலிருந்து தெரிகிறது.
இருந்தும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்று குறிப்பிட்டு, தனது திமுக இன்னும் காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதாக நூல் விட்டு நுழைந்திருக்கிறார். கருணாநிதி, அவர்தவிர இந்த அரசியல் சாணக்கியம் இந்தியாவில் வேறு எவராலும் முடியாத ஒன்றாகும்.
இன்னொரு கோணத்தில் நோக்கினால், படுவீழ்ச்சியடைந்து நில மட்டத்துக்கு போய்விட்ட தனது கட்சியின் இருப்பையும், கரைந்துபோன காங்கிரஸையும் தமிழ் நாட்டில் மீண்டும் தலையெடுக்க வேறு வழியின்றி, தாத்தா தேடிப்பிடித்து காங்கிரஸுடன் சேர்ந்து நடத்தும் தந்தரமோ,,, மூன்றுபேரின் விடுவிப்பு கோரிக்கை என்றும் ஒருவகையில் சிந்திக்க தோன்றுகிறது
குறிப்பிட்ட கைதிகளை உளப்பூர்வமாக காத்தருளும் ஆர்வம் கருணாநிதிக்கு இருந்திருந்தால். தனது ஆட்சிக்காலத்தில் மத்திய அரசிடம் பொறுத்த பசையுள்ள மந்திரிப்பதவிகளை கேட்டு பெற்றபோது. தனது செல்வாக்கை பயன்படுத்தி கைதிகளுக்கு நியாயம் கிடைக்க வழி செய்திருக்கலாம்.
இப்போ போகாத ஊருக்கு வழிதேடி, தினம் ஒரு பிதற்றல்,, தினம் தினம் எவரையாவது சிண்டு முடிதல், யாரையாவது சங்கட சிக்கலில் மாட்டிவிடும்படியான பேச்சு, இப்படி அவர் தனது விரக்தியை வக்கிரமாக்கி வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி வருகிறார்.
இதில் ஆளும் மானில அரசு, மத்திய காங்கிரஸு, ஈழப்பிரச்சினை, எதுவும் அவரிடமிருந்து தப்பி பிழைக்கவில்லை.
அவர் புலம்புவதால் அவருக்கும் துளி நன்மை பிறக்கப்போவதில்லை,, மாறாக மற்றவர்களுக்கும் சிரமமும் எரிச்சலுமே மிஞ்சுகிறது. ஆனாலும் கருணாநிதி இதில் சற்று மன நிம்மதி அடைகின்றார் என்றே தோன்றுகிறது.
ஒரு நாளைக்கு ஒரு சீண்டல், கூவல், இல்லாவிட்டால், கண்ணபிரான் கருணாநிதி தலை வெடித்து சிதறி இறந்துபோகக்கூடும்.
கருணாநிதியின் ஆண்வாரிசுகளான, முக முத்து, மதுவுக்கு அடிமையாகி நோய் வாய்ப்பட்டு இருந்தாலும். பெற்றவரான கருணாநிதிக்கும் அவருக்கும் இடையே நீண்ட இடைவெளி ஏற்ப்பட்டுவிட்டதாக சொல்லுகின்றனர். அதனால் அவரை தள்ளி வைக்கலாம்.,
அடுத்த வாரிசான முக அழகிரி, தன்னெழுச்சி கொண்டு தனிக்காட்டுராசாவாக நீண்டகாலமாக தென் மாவட்டங்களில் வலம் வருகிறார். அவர் கருணாநிதியின் பேச்சையோ, கட்டுப்படுத்தலையோ ஒருநாளும் மதிப்பதில்லை என்ற குறையுண்டு. திமுக கட்சியின் தென் மாவட்டங்களில். வட்ட, மாவட்ட செயலாளர்கள் அனைவரும் அண்ணனின் பேச்சுக்கு அடுத்த பேச்சு பேசமுடியாத நிலையில் இருக்கின்றனர் என்ற நிலை தொடர்கிறது.
இந்நிலையை கருணாநிதி அறிந்திருந்தாலும், தான் உயிருடன் இருக்கும்வரை கட்சி இரண்டாக உடைந்துவிடாமல் இருப்பதற்காக அழகிரியை எதிர்க்க முடியாமல் பாசப்பிணைப்பில் மௌனமாக இருந்துவருகிறார்.
அடுத்தவர் ஸ்ராலின். இவர் காரியவாதியாக இருந்தாலும் ஓரளவு விட்டுக்கொடுத்து அமைதிகாக்கக்கூடிய மனப்பாங்கு கொண்டவர் என்பதும் உண்மை, அத்துடன் கட்சிக்காக ஓரளவு உழைத்தவர் ஸ்ராலின் என்றும் திமுக தொண்டர்கள் மத்தியில் மதிப்புமுண்டு. இருந்தும் அழகிரியின் ஆதிக்க அதிரடிக்கு ஈடுகொடுக்க முடியாமல் சற்று பயந்து பட்டும் படாமலும் நடந்து கட்சித்தலைமையை கைப்பற்ற தருணம்பார்த்து இராசதந்திரமாக நாட்களை ஓட்டுகிறார்.
அடுத்தவர் கருணாநிதியின் மூன்றாந்தாரத்து வாரிசு கனிமொழி. வாரிசுகளில் இவர்தான் கருணாநிதியின் அன்பை அதிகமாகப்பெற்றவர் என்றும் சொல்லப்படுகிறது. கனிமொழி எவரையும் எழிதில் கவர்ந்துவிடக்கூடிய தன்மை கொண்டவர். சாந்தமான குடும்பப்பாங்கான தோற்றமும் கொண்டவர்.
கனிமொழி அரசியலுக்கு வருவதை கருணாநிதி அதிகம் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது, ஆனால் தாயார் ராசாத்தி அம்மாளின் பேராசையால் கனிமொழி தினம் தினம் தலை கழுவப்பட்டு, அரசியலில் அவர் இறங்கவேண்டிய சூழல் உருவாகியது. ஒருகட்டத்தில் கனிமொழிக்கும் அரசியலில் ஒரு போதை உண்டாகி மகிழ்ச்சியை தோற்றுவித்தது என்பதும் மறுப்பதற்கில்லை.
பின்னணி நன்றாக இருந்ததால் கனிமொழியால் அரசியலின் ஆழம் நீளம் சுலபமாக அறிய முடிந்திருந்தது. அதுவே அவருக்கு வினையாகவும் மாறியது கவலைக்குரியது.
இவை தவிர மாறன் குடும்பம், மகன்மார் வழிப்பேரன் பேத்தி, மகள் செல்வி வழி வாரிசுகள், கருணாநிதியின் சகோதரி வழி வாரிசுகள், என்று பெரிய பட்டாளமே இருந்தாலும். மையமாக மக்கள்முன் முன்னிலைப்படும் தகுதி ஆற்றல் கருணாநிதி இருக்கும்வரை அவருக்கே சாரும்.
அல்லாமல் அவர் அத்தகுதியை வாரிசுக்கள் எவருக்கும் கொடுத்துவிடப்போவதுமில்லை.
பெருத்த அரசியல் சாணக்கியர் என்று இந்திய அளவில் பெயரெடுத்த கருணாநிதி அவர்களுக்கு,, மூப்பு சில மாற்றங்களை உடல், உள, ரீதியாக ஏற்படுத்தியிருப்பது ஒன்றும் வியக்கத்தகுந்ததுமல்ல.
இன்று கனிமொழி திஹார் சிறையில் நீண்ட நாட்களாக தனிமையில் இருப்பது கருணாநிதியை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியிருக்கிறது. கருணாநிதியின் முன்னுக்கு பின் முரணான விரக்தியான பேச்சுக்கும் அடிப்படை காரணம் கனிமொழியின் சிறைவாசம் என்பதும் மறுப்பதற்கில்லை.
எதிரிக்குக்கூட ஒரு பெண்ணான கனிமொழியின் தனிமை சிறைவாசம் மகிழ்ச்சியை உண்டுபண்ணக்கூடியதல்ல. அந்த அனுதாபத்தைக்கூட கருணாநிதி கெடுத்து விடுகிறார் என்பது என்னைப் போன்றவர்களின் வேதனையின் வெளிப்பாடு.
கருணாநிதியின் மிக, மிகத், தவறான வழிகாட்டுதலால், கனிமொழி ஊழல் வழக்கை சந்திக்கவேண்டிய இடத்தில் துரதிஷ்டவசமாக தள்ளப்பட்டு இருந்தாலும். நீண்டகாலம் விசாரணை கைதியாக தனிமைச்சிறையில் கனிமொழி இருப்பது யாருக்கும் ஒப்புதலாக இருக்க முடியாது. அதுபற்றி சரியாக தீர்மானத்திற்கு வரவேண்டிய இடத்தில் கருணாநிதி மட்டுமே இருக்கிறார்.
கடைசிநேரத்தில் அவர் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டதை ஒப்புக்கொள்ள அவரால் முடியவில்லை. தனது வீழ்ச்சி தன்னாலும் தனது குடும்பத்தாலும் உருவானதென்பதை அவர் இன்னும் உளமார நம்பவில்லை. யாரோ தனக்கு சதி செய்துவிட்டதாகவே அவர் எண்ணுகிறார். அல்லது அப்படியே நிறுவ முயற்சிக்கிறார் எனக்கொள்ளலாம்.
தேர்தல் தோல்வி மட்டுமென்றில்லாமல், இப்போ பல சிக்கல்கள் அவரை சூழ்ந்து விட்டது. அவரது சுயநல நடத்தையே அதற்கான அச்சாரமாகவும் காணப்படுகிறது.
காலா காலமாக இந்திய அரசியல் வியாதிகள் தொழிலாகவே செய்துவந்த ஊழல். இப்போமட்டும் ஏன் எதிர்ப்பு கிளம்பவேண்டும் என அவர் மனம் கோபப்பட்டு அங்கலாய்ப்பது தெரிகிறது.
மக்களுக்கு நேரடியாகச்சென்று சேரவேண்டியவைகளில் தானோ தனது குடும்பமோ பெரிதாக கைவைக்கவில்லை யென்றும், மறைமுகமான அலைக்கற்றை, தொழில்த்துறை, போன்ற பொருமலான விடயங்களில் மதிநுட்பத்தோடு தரகு அடிப்படையில் பணமீட்டுவதென்பது தப்பல்லவென்பதே அவரது மனக்கிடக்கையின் எண்ணமாக தெரிகிறது.
சில நேரங்களில் ஊழல் தப்பாக இருக்குமோ என அவர் எண்ணும்போது. அவற்றை அவர் திசை திருப்பும் உத்திதான், சமச்சீர் கல்வி. மின்சார பற்றாக்குறை. ஈழமக்கள் வாழ்நலன், ராஜீவ் காந்தி கொலைக்குற்றவாளிகள் விடுவிப்பு போன்ற கரிசனை எனக்கொள்ள முடியும்.
2009 ஏப் 24ம் திகதி கடற்கரையில் அவர் நடத்திய உண்ணாவிரதம் இதுபோன்ற ஒரு சிக்கலான நேரத்தில் நடத்தப்பட்டதுதான். நாடகம் தொடங்கும்போது அவர்பேசிய உருக்கமான நாடகப் பேச்சு, பின்வந்த மூன்று மணி நேரத்தில் அவர் உண்ணாவிரதத்தை முடித்தது அவரது சாணக்கியத்திலிருந்து சறுக்கிவிட்டார் என்பதை காட்டியது.
இப்போ கருணநிதி அவர்கள் ஒரு இக்கட்டான தருணத்தில், மத்திய காங்கிரஸையும், மானில ஜெ அரசையும், ஒரு இக்கட்டுக்குள் தள்ளி விழுத்தி தான் எழுந்து நிற்பதற்கான தந்தரமாக ஒரு கொழுக்கி பிணைத்த கயிற்றை எறிந்திருக்கிறார். அது நிச்சியம் அவருக்கு கைகொடுத்து மேலேற உதவப்போவதில்லை.
கருணாநிதி தனது ஐந்து வருட ஆட்சிக்காலத்தில் தூக்குத்தண்டனை கைதிகளை காப்பதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. மாறாக அவர்களை தூக்கிலேற்ற ஏன் தமதம் காட்டுகிறீர்களென 07 முறை மத்திய அரசை கடிதமெழுதி நெருக்கடி கொடுத்தார் என்று செந்தமிழன் சீமான் ஆதாரபூர்வமாக குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
அவற்றையெல்லாம் மறந்து இன்று கருணாநிதி இன்று அதிகாரம் அனைத்தும் விடுபட்ட நிலையில் பிடி கம்பு தேடி கையில் எடுத்திருக்கும் ஒரு சிறுமைத்தனமான திசை திருப்பல் நாடகம், தண்டனை கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்ற பித்தலாட்டம்.
இதிலிருந்து அப்பட்டமாக தெரிவது யாதெனில் சோனியா அரசையும். ஜெயலலிதாவின் அரசையும், மக்கள் மன்றத்தில் சிண்டு முடிவதுடன், மக்கள் மத்தியில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி, தான் புனிதன் என்று நிறுவ முயல்கிறார் என்பது வெளிப்படையாக சாக்கடை சாறாக வழிவது தெரிகிறது. அது தவிர நற்பலன் எதுவும் நாட்டிற்கோ, மக்களுக்கோ, குறிப்பிடும் பிரச்சினைகளுக்கோ ஏற்படப்போவதில்லை.
மீண்டும் சந்திப்போம்
No comments:
Post a Comment