Tuesday, October 18, 2011

போட்டி மாவீரர் தினத்தை ஆதரித்து லண்டனில் நடிகர் வடிவேலு

19 October, 2011

உண்மையாக வடிவேலு லண்டன் வரவும் இல்லை பிரச்சாரத்தில் ஈடுபடவும் இல்லை. ஆனால் அவர் போல ஒருவர் பேசினால் எப்படி இருக்கும் என கற்பனையாக எழுதப்பட்ட நகைச்சுவை பேச்சு இது:



எதிர் வரும் மாவீரர் தினம் தனக்குப் பெரும் சவால்களை உருவாக்கிவரும் நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமாரன் அவர்கள் நடிகர் வடிவேலுவைத் தனக்கான தலைமைப் பிரச்சாரகராகக் களம் இறக்கியுள்ளார்.

பிரதமர் ருத்திராவின் போட்டி மாவீரர் தினத்தை ஆதரித்து லண்டனில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட வடிவேலு மிக ஆக்ரோசமாகத் தனது கருத்துக்களைப் பதிவு செய்தார். இந்தக் கூட்டத்தை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் தயாபரன் ஏற்பாடு செய்திருந்தார். பிரதமர் ருத்திரகுமாரன் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், அவரது அணிக்கான போட்டி மாவீரர் தின ஏற்பாட்டாளர்களான ஸ்கந்தா, சுகந்தன் ஆகியோர் நடிகர் வடிவேலு அவர்களுக்கு மலர் மாலையும், பொன்னாடையும் அணிவித்து, வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.

நடிகர் வடிவேலு அங்கு பேசியபோது,

ஐயா... ருத்திரகுமாரன் நீடூழி வாழவேணும்! இப்பிடிப்பட்ட பிரதமர் பதவியிலிருக்கும்போது, முள்ளிவாய்க்காலில அழிஞ்சுபோன விடுதலைப் புலிகள் மாவீரர் தினம் நடத்தவேணும்ணு வரிஞ்சு கட்டி நிக்கிறாய்ங்க...

ஐயா ருத்திரகுமாரன் எம்மாம் பெரிய ஆளு... ஒரு அப்புக்காத்து... அவர் படிப்பென்ன...? பட்டமென்ன...? தமிழீழம், தமிழீழ விடுதலை எண்ணு படிப்பைக் கோட்டை விட்ட பசங்களுக்கு ஐயாவின்ர அருமை எப்படிப் புரியும்...?

ஐயா! மன்னிக்கவேணும்...

ஐயா பிரதமராகி எம்பிட்டு நல்ல காரியம் பண்ணியிருக்கிறார்...? அகதியாக வந்த எத்தனை தமிழர்களை மந்திரியாக்கியிருக்கிறார்...? எத்தனை நாட்டுக்குப் பாலம் போட்டிருக்கிறார்...? பாலம்ணு சொன்ன உடனே மேலயும், கீழையும் பாக்காதீங்க... அது உறவுப் பாலம்.... எத்தனை அறிக்கைகள் விட்டிருக்கிறார்.... அதில எங்க ஐயா கருணாநிதியையும் மிஞ்சியிட்டார்ல...

அவருக்கு என்ன தகுதி இல்லைன்னு கேக்கிறன்... போன தடவை மாவீரர் தினம் நடந்தப்போ, அவர் என்னத்தைப் பெரிசாகக் கேட்டுப்புட்டார்...? தலைவர் பிரபாகரனுடைய மாவீரர் தின உரைக்குப் பதிலாகத் தனனுடைய உரையை போடக் கேட்டார்... இதுல என்ன தப்பைக் கண்டு பிடிச்சீங்க..? ஒரு அப்புக்காத்துக்கு மகனாகப் பிறந்து, ஒரு அப்புக்காத்தாக அமெரிக்கவுல இருக்கிற ஐயா ருத்திரகுமாரன் ஒங்களுக்கெல்லாம் தலைவராக இருக்க ஆசைப்படக் கூடாதா...? சூரியன் மறைஞ்சா, குப்பி விளக்கைப் பயன்படுத்துகிறதில்லையா... சூரியன் மறுபடியும் வந்திட்டா, குப்பி விளக்கு காணாமல் போயிடும்... அதுவரைக்குமாவது ஐயாவை ஏத்துக்கக் கூடாதா...?

அதனாலதானே... ஐயா போட்டி மாவீரர் தினத்துக்கு ஏற்பாடு செய்தார்... ரெண்டாயிரத்து ஒம்பதுல எங்கட பெரிய ஐயா கே.பி. சொன்னதைக் கேட்டிருந்தால், அவர் சிங்கள அரசோட போய்ச் சேந்திருப்பேரா...? நீங்கதான்... தேசியத் தலைவரைத் தவிர வேறொரு தலைவர் இல்லைன்னு முடிவாச் லெ;லிப்புட்டீங்களே... அந்தக் கவலையில, அந்த மனுசன் போய் சிங்கள அரசாங்கத்தோட சேந்திட்டார்... இப்ப, எங்க ஐயா ருத்திரகுமாரனையும் ஏற்கமாட்டேன்னு சொன்னா... என்னா அர்த்தம்? எங்க ஐயாவும் அங்க போவணும்னுதானே...

புத்தியில்லாத பசங்க... ஐயா மாதிரி கோட்டு, சூட்டு போட்டு இங்கிலீசில பேச முடியாம, அங்கயே நின்னு போராடிச் செத்துப்பூட்டாய்ங்க... அதுக்காக, அவங்க பக்கமே நின்னு ஐயாவை நிராகரிக்கிறது ரொம்பத் தப்பு... அதனால என்னாச்சு...? ஐயா, இப்ப போட்டி மாவீரர் தினத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டார்... அதுக்காக தனிப் ப்ளேன்ல என்னை அழைச்சுவந்து இந்த இடத்தில பேச வைச்சிருக்கிறார்... அதுக்கு எம்புட்டுச் செலவு பண்ணியிருக்கிறார்...

ஐயா ஏற்கனவே, புலம்பெயர்ந்த தமிழர்களை ரெண்டாத்தான் பிளந்திருக்கிறார். நீங்க எல்லாரும் சேந்து, ஐயாவின்ர தலைமைய ஏத்துக்கிட்டு... அவருடைய மாவீரர் தின உரையைக் கேக்கிறதாக இருந்தீங்கன்னா ஒரு மாவீரர் தினம் நடக்கும். இல்லைன்னா... இந்த வருஷம் பொட்டிக்கு ஒண்ணுன்னா... இனி வாற வருஷம் அது ஒம்பதாக மாறும்.

இது உங்களுக்குத் தேவையா...? நீங்க தமிழீழம், தலைவர், மாவீரர்ன்னு ஒங்க வாழ்க்கையைச் சீரழிக்காம... ஐயாவை ஒங்க தலைவரா ஏத்துக்குங்க... அவரை நிரந்தரப் பிரதமரா இருக்க விடுங்க... ஒங்க வேலைய நீங்க பாருங்க... ஐயா, அரசியலைப் பாத்துக்கொள்ளுவாரு... தமிழகத்துக்கு ஒரே கருணாநிதி போல... புலம்பெயர்ந்த ஒங்களுக்கு ஒரே தலைவர் ஐயாதான்... இல்லைன்னு வையுங்க... ஐயா ஒங்கள சுக்கு நூறாகச் சிதறடித்துப்புடுவார்...

நன்றி, மாவீரர் மண்.

No comments: