Wednesday, December 26, 2012

புருணே சுல்தான் : உலகின் நம்பர் 1 ஆடம்பர-வக்கிரம் !


கெபாவா துலி யாங் மஹா முலியா பாதுகாசேரி பாகிந்தா சுல்தான் ஹாஜி ஹஸ்ஸனல்போல்கியா அல் முயிஜாதீன் வதாவுல்லாஇப்னி அல்மார்ஹம் சுல்தான் ஓமர் அலிசாய்புதீன் சாஅதுல் காய்ரி வாத்தியன் ஜிசிபி,ஜிசிஎம்ஜி (கொஞ்சம் புருனே சுல்தான் ராணியுடன்மூச்சு வாங்கிக்குங்க) என்ற பெயர் படைத்த புருணே சுல்தான் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழ்பவர்.
புருணே சுல்தான் ராணியுடன்

1946-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி பிறந்த சுல்தானுக்கு கடைசியாக கிடைத்த தகவல்களின் படி 3 மனைவிகள் மூலம் 5 மகன்கள், 7 மகள்கள் உள்ளனர்.  ராணி அனக் சலேஹா முதல் மனைவியாக செயல்படுகிறார். சுல்தானது இரண்டாவது மனைவி ராணி மரியத்தை 2003-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இப்போதைய இரண்டாவது மனைவி அஸ்ரினாஸ் மஹர் ஹக்கீம் சுல்தானை விட 32 வயது இளையவர்.
சுல்தானின் 5 வது மகள் 32 வயதான ஹபிசா வணிக மேலாண்மையில் பட்டம் பெற்றவர். பிரதமர் அலுவலகத்தில் வேலை செய்யும் 29 வயதான முகமது ருசானியை அவர் 2012 செப்டம்பர் 20-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்துக்கு 40 மில்லியன் யூரோ (சுமார் ரூ 270 கோடி) செலவாகியிருக்கிறது. 3000 விருந்தினர்கள் கலந்து கொண்ட 4 நாட்கள் திருமணத்தில் வைரங்கள் பதிக்கப்பட்ட கண்ணைப் பறிக்கும் உடைகளில் மணமக்கள் ஜொலித்தனர்.
திருமண விழாவில் தாய்லாந்து பிரதமர், மலேசிய பிரதமர், கம்போடியா பிரதமர் உள்பட ஏராளமான வெளிநாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
புருணே சுல்தானிடம் $15 பில்லியன் யூரோ (சுமார் ரூ 1 லட்சம் கோடி) சொத்து உள்ளது. ஒரு காலத்தில் $20 பில்லியனுக்கும் அதிக சொத்துடன் உலகிலேயே முதல் பணக்காரராக இருந்த சுல்தான் அவற்றை எல்லாம் எப்படி சம்பாதித்தார், எப்படி செலவழிக்கிறார் என்று சில விவரங்களை பார்க்கலாம்.
சுல்தானின் அரண்மனையில் 2 லட்சம் சதுர அடியில் 1788 அறைகளும், 257 குளியலறைகளும் உள்ளன. பெரும்பாலான அறைகளில் தங்கத்தால் இழைக்கப்பட்ட சுவர் மறைப்புகள் தொங்குகின்றன. குளியலறைகளில் தங்கக் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அவரிடம் மொத்தம் 3,000 முதல் 5,000 கார்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கின்னஸ் புத்தகம் அவரிடம் 500 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் உள்ளதாக பதிவு செய்துள்ளது. அதில் முழுக்க வெள்ளி தகடுகளால் செய்யப்பட்ட காரும் உண்டு.
புருணே சுல்தானின் சகோதரர் ஜெப்ரி போல்கையா உலக அளவில் ஒரு பிளேபாயாக புகழ் பெற்றுள்ளார். அவர் புருணே அரசாங்கத்திலிருந்து $10 பில்லியன் டாலர் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு சுல்தானுடன் பல ஆண்டுகள் வழக்கு நடத்தினார்.
புருனே சுல்தான் மகள் திருமணம் நடைபெற்ற அரங்கு
புருணே சுல்தான் மகள் திருமணம் நடைபெற்ற அரங்கு
சுல்தான் தனது தனிப் பயன்பாட்டுக்காக தங்கத்தால் இழைக்கப்பட்ட போயிங் 747-400 விமானம் ஒன்றையும், ஆறு சிறு விமானங்களையும் இரண்டு ஹெலிகாப்டர்களையும் வைத்திருக்கிறார்.  போயிங் விமானத்தில் 400 பேர் பயணம் செய்ய முடியும். மேலும் விமானம் முழுக்க நட்சத்திர விடுதியின் அனைத்து வசதிகளும் இருக்கின்றன.
முடி வெட்டிக் கொள்வதற்காக 15,000 பிரிட்டிஷ் பவுண்டுகள் (ரூ 12.7 லட்சம்) செலவழித்து லண்டனை சேர்ந்த ஒரு சிகை திருத்தும் தொழிலாளியை விமானத்தில் அழைத்து வரச் செய்கிறாராம். ஒரு முறை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் தனி அறை பதிவு செய்து கென் மோடஸ்தோ என்ற சிகை திருத்துபவரை லண்டனிலிருந்து வரவழைத்தாராம். அவருக்கு பல ஆயிரம் டாலர்கள் கட்டணமாக கொடுக்கிறார். லண்டனில் 30 பவுண்டுகள் மட்டுமே வசூலிக்கும் கென் சுல்தானுக்கு 16 ஆண்டுகளாக முடி வெட்டுகிறார்.
மத்தியதரைக் கடலில் மிதக்கும் மாளிகை, உலகின் பல பெரு நகரங்களில் தங்குவதற்காக சொந்த மாளிகைகள் என்று உலகெங்கும் தனது ஜாகைகளை போட்டிருக்கிறார் சுல்தான். லண்டனில் அவருக்கே மட்டுமான மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டுள்ளது.
இவ்வாறாக சொத்து கொஞ்ச கொஞ்சமாக கரைந்து கொண்டிருக்கிறது. அவ்வளவு சொத்தும் எங்கிருந்து வந்தது, அவற்றை யார் சம்பாதித்து கொடுக்கிறார்கள், சுல்தான் அவற்றை எப்படி பராமரிக்கிறார் என்று பார்க்கலாம்.
சுல்தான் 1959-ம் ஆண்டு புருணேயின் அரசியலமைப்பு சட்டத்தின் படி நாட்டின் தலைமை ஆட்சியாளராகவும் 1962-ம் ஆண்டு எடுத்துக் கொண்ட அவசர நிலை அதிகாரங்களுடனும் ஆட்சி புரிகிறார். அவரே புருணேயின் பிரதம மந்திரியாகவும் பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சராகவும் செயல்படுகிறார்.
புருணேயின் எண்ணெய் வளத்தின் பரிமாணத்தை புரிந்து கொள்வதற்கு ஒரு ஒப்பீட்டை பார்க்கலாம்.
அதாவது உலகின் எண்ணெய் உற்பத்தி மதிப்பு ஒரு நபருக்கு ஆண்டுக்கு ரூ 25 ஆயிரம் மதிப்பில் உள்ளது. புருணேயில் தனி நபர் உற்பத்தியின் மதிப்பு அதை விட சுமார் 30 மடங்கு அதிகமாக ஆண்டுக்கு ஒரு நபருக்கு கிடைக்கும் எண்ணெய் மதிப்பு ரூ 7.45 லட்சமாக இருக்கிறது. ஒப்பீட்டளவில் இந்தியாவில் ஒரு நபருக்கு ஆண்டுக்கு சுமார் ரூ 1,500 மதிப்பிலான எண்ணெய் கிடைக்கிறது. புருணேயின் பக்கத்து நாடுகளான மலேசியாவில் ரூ 47 ஆயிரம் மதிப்பு எண்ணெயும், இந்தோனேஷியாவில் ரூ 12 ஆயிரம் மதிப்பிலும் எண்ணெய் ஒரு நபருக்கு ஆண்டுக்கு உற்பத்தியாகிறது.
புருணேயில் சுமார் 4 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.  பெரும்பான்மை மக்கள் அரசுப் பணியில் உள்ளனர். அபரிதமான எண்ணெய் வளத்தின் மூலம் கிடைக்கும் பெரு வருமானத்தில் பெரும்பகுதியை தனக்கு வைத்துக் கொண்டு ஆடம்பர வாழ்க்கை நடத்துகிறார் சுல்தான்.
புருனே சுல்தான் மகள் திருமணக்கோலத்தில்
புருணே சுல்தான் மகள் திருமணக்கோலத்தில்
புருணேயின் எண்ணெய் வளங்களை அமெரிக்க நிறுவனமான ஷெல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. எண்ணெய் அகழ்வதற்கான பொறுப்பை ஷெல் புருணே என்ற பெயரில் செய்கிறது.  சுல்தானுக்கு போய்ச் சேர வேண்டிய பங்கை கொண்டு சேர்த்து விடுகிறது. அதன் மூலம் புருணே சுல்தான் தனது சொத்துக்களை சேர்த்திருக்கிறார்.
ஷெல் எண்ணெய் நிறுவனம் புருணேவில் 20,000 மைல்களுக்கும் அதிக நீளமான எண்ணெய் குழாய்களை பராமரிக்கிறது. ஒவ்வொன்றும் 40,000 பேரல் பிடிக்கும் சுமார் 50 அடி விட்டத்திலான டாங்குகளில் எண்ணெய் சேமித்து வைக்கப்படுகின்றது. காடுகளின் நடுவில் ஒரு முழுமையான பெட்ரோ வேதி குழுமத்தை ஷெல் உருவாக்கியிருக்கிறது.
புருணே ஷெல் (பிஎஸ்பி) புருணே அரசாங்கமும், ராயல் டச்/ஷெல் குழுமமும் சம அளவு பங்கு வைத்துள்ள கூட்டு நிறுவனம். அது நாட்டின் ஒரே சுத்திகரிப்பு ஆலையை நடத்துகிறது. பிஎஸ்பியும் அதன் துணை நிறுவனங்களும் நாட்டின் மிகப்பெரிய வேலை தருபவர்களாக இருக்கின்றனர். அரசாங்கத்துக்கு அடுத்தபடியாக. பிஎஸ்பியின் சிறு சுத்திகரிப்பு ஆலை ஒரு நாளைக்கு 10,000  பேரல்களை சுத்திகரிக்கிறது. இதன் மூலம் உள்நாட்டுத் தேவைகள் நிறைவு செய்யப்படுகின்றன.
தொழிற்சாலை பகுதியைத் தாண்டி ஷெல் தொழிலாளர்களும் குடும்பத்தினருடன் வசிக்கும் சேரியா என்று நகரீயம் உள்ளது. சேரியா ஒரு கார்ப்பரேட் நகரீயம். ஷெல் விமான நிலையத்தில் சிங்கப்பூர், குவாலாலம்பூர், பாங்காக், பாலி, ஆஸ்திரேலியா, ஹாங்காங் போன்ற இடங்களிலிருந்து ஷெல் ஊழியர்கள் வந்து இறங்குகின்றனர். ஆம்ஸ்டர்டாமிலிருந்து கேஎல்எம் விமானத்தில் ஷெல் தொழிலாளர்களின் குடும்பத்தினர் வந்து சேருகின்றனர். ஷெல் மருத்துவமனையில் பிறந்த குழந்தை, ஷெல் ஊழியர்களுக்கான பள்ளிக்குப் போய், ஷெல் கிளப்பில் ஓய்வெடுத்து, ஷெல் பீச்சில் விளையாடி, ஷெல் கடையில் பொருட்கள் வாங்கி வாழலாம். ஷெல் வானொலி நிலையம் கூட இருக்கிறது.
நாடு முழுவதும் மது பானங்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும் ஷெல் ஆயில் இடங்களில் மது பானங்கள் வழங்கப்படுவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஷெல் நீச்சல் கிளப்பில் நீந்தி விட்டு, ஷெல் டென்னிஸ் கிளப்பில் விளையாடி விட்டு, ஷெல் உணவு கூடத்தில் சாப்பிட்டு விட்டு ஷெல் பேருந்தில் ஏறி ஷெல் விமான நிலையம் போய்ச் சேரலாம்.
புருணேயில் இயற்கை வாயு, 1972-ம் ஆண்டு தொடங்கப்பட்ட புருணே லிக்விபைட் நேச்சுரல் கேஸ் தொழிற்சாலையில் திரவமாக்கப்படுகிறது. அது உலகிலேயே மிகப்பெரிய எல்என்ஜி (திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு) ஆலைகளில் ஒன்று. ஒப்பந்தப்படி புருணே ஜப்பானுக்கு ஆண்டுக்கு 5 மில்லியன் டன் எல்என்ஜி வழங்க வேண்டும். ஜப்பானிய நிறுவனம் மிட்சுபிஷி, ஷெல் மற்றும் புருணே அரசாங்கத்துடன் கூட்டு நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளது. 1995 முதல் அந்த நிறுவனம் 7 லட்சம் டன் கொரியா வாயு நிறுவனத்துக்கு சப்ளை செய்துள்ளது.  உள்நாட்டு மின்சார உற்பத்திக்கு சிறிதளவு பயன்படுத்தப்படுகிறது.
புருணேவில் இது வரை உறுதி செய்யப்பட்ட எண்ணெய் வளம் 2015 வரை போதுமானது. ஆழ்கடல் தேடலின் மூலம் கூடுதல் கையிருப்புகள் கிடைக்கலாம் என்று தெரிய வருகிறது. பொருளாதாரத்தை வேறு திசைகளில் வளர்ப்பதற்கான முயற்சிகள் பெருமளவு வெற்றி பெறவில்லை. எண்ணெய் துறையைத் தவிர விவசாயம், காடுகள், மீன் பிடித்தல், வங்கி ஆகியவையும் சிறிதளவு நடைபெறுகின்றன.
புரூனே வரைபடம்புருணேயின் எண்ணெய் உற்பத்தி 1979ல் 2,40,000 பேரல்களாக இருந்தது. அதன் பிறகு வேண்டுமென்றே குறைக்கப்பட்டு இப்போது ஒரு நாளைக்கு சுமார் 1.5 லட்சம் பேரல் அளவு உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆசிய பசிபிக் பகுதியில் இந்தோனேசியா, மலேசியா, ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து புருணே எல்என்ஜி ஏற்றுமதியில் நான்காவது இடத்தில் உள்ளது. புருணேயின் எண்ணெய் ஏற்றுமதியில் ஜப்பானின் பங்கு 1982ல் 42 சதவீதத்திலிருந்து 1998ல் 19 சதவீதமாக குறைந்தது. தாய்வான், ஆசியான் நாடுகள், அமெரிக்கா ஆகியவை புருணே நாட்டின் எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ளும் மற்ற முக்கிய நாடுகள்.
அரபு நாடுகள், நைஜீரியா, கொலம்பியா, ஈக்வேடர், பர்மா, காஸ்பியன் கடல் என்று எங்கெங்கு நுழைந்தாலும் தனது கறையை படியச் செய்து விடும் பன்னாட்டு எண்ணெய் வியாபரத்தின் இன்னொரு பெருங்கறைதான் புருணே. அந்த எண்ணெய் வளம் உருவாக்கும் வக்கிரமான ஆடம்பரமும், பேராசையும், அதன் உற்பத்தியை கட்டுப்படுத்துவதற்காக செய்யப்படும் பன்னாட்டு அரசியல் கணக்குகளும்தான் புருணே சுல்தான் போன்ற வக்கிரங்கள் உலகில் இருப்பதை சாத்தியமாக்குகின்றன.  புருணே சுல்தானும் அவரது சகோதரரும் உலகின் மிகப் பெரிய ஊதாரிகளாகவும் கேடு கெட்ட மனிதர்களாகவும் உருவெடுத்துள்ளனர்.
புருணே சுல்தானின் அரசுக்கும் அரசியலுக்கும் அமெரிக்கா, ஜப்பான், மற்றும் ஐரோப்பிய நாடுகள் குடை பிடித்து நிற்கின்றன. சுல்தானின் பாதுகாப்புக்காக பிரிட்டிஷ் அரசு கூர்க்கா படையணி ஒன்றை கொடுத்துள்ளது. மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் உலகளாவிய எண்ணெய் வழங்கல் சங்கிலியின் ஒரு கண்ணியாக சுல்தான் ஒழுக்கமான முஸ்லீமுக்கு பரலோகத்தில் கிடைப்பதாக வாக்களிக்கப்பட்டுள்ள சொர்க்கத்தை இகலோகத்திலேயே அனுபவிக்கிறார். 



Monday, December 24, 2012

தேசியத்தை மறந்த அனைவரும் சம்பந்தர்களே!!

2012 டிச 07 அன்று பாராளுமன்றத்தில்  2013ஆம் ஆண்டுக்கான இலங்கை அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட பாதுகாப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் அவர்கள், விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் என்றும், அவர்கள் மனித உரிமைகளை மதிக்காத காரணத்தால் அழிந்து போனார்கள் என்றும்.  இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் நிலைகொண்டிருக்கும் இராணுவம் எக்காரணம் கொண்டும் வெளியேறவேண்டும் என்ற கொள்கை தமது கட்சிக்கு என்றைக்கும் இல்லையென்று, எந்த கூச்சமுமில்லாமல் பகிரங்கமாக வாக்குமூலம் கொடுத்திருந்தார். இது தமிழ் அரசியல் அரங்கில் ஞாபகசக்தி கம்மியானவர்களுக்கு பழைய செய்தியே,  இருந்தும் தாக்கம் தமிழினத்துக்கு மிக மோசமானது என்ற உணர்வின் பிரதிபலிப்பே இந்த பதிவு.
 
இராணுவத்தை தமிழர் குடியிருக்கும் பிரதேசங்களிலிருந்து விலக்கிக்கொள்ளும்படி தாம் ஒருபோதும் கோரவில்லையென்று, (எவராகினும் இந்தக்கருத்தின் எதிர்வினையை தயவுசெய்து ஒருமுறை மீட்டுப்பார்த்துக்கொள்ளவும்) இலங்கையின் இனவாத ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய மட்டும் வெளியிடும் கருத்துக்கு சற்றும் குறைவின்றி சிங்கள இன அழிப்பு கொள்கையை அப்படியே வழி மொழிந்து அதிர்ச்சிகரமாக கருத்தை திரு சம்பந்தன் தெரிவித்திருந்தார். இதற்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மற்றய கட்சிசார்ந்தவர்கள் கூட இன்றுவரை மெளனமாக இருந்து வருவது கவலையளிக்கிறது.
 
சம்பந்தர் அவர்களின் துரோகத்தனமான இன அழிப்பு கொள்கைக் கருத்து தமிழர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை உண்டுபண்ணியிருந்தது. சம்பந்தரின் பாராளுமன்ற பேச்சை கண்டித்து தமிழ் ஊடகங்கள்,  தேசிய  உணர்வில் உடன்பாடுகொண்ட புலம்பெயர் தேசங்களில் உள்ள இணையத்தளங்கள் தமது எதிர்ப்பையும் கண்டனங்களையும் அதிர்ச்சியையும் வெளியிட்டன.  தாயகத்தில் மக்கள் எந்த எதிர்வினையையும் காட்ட முடியாத இராணுவ அடக்குமுறை தொடர்வதால் தாயக மக்களின் மவுனத்தின்பால் எந்த கருத்துக்கும் வரமுடியாது என்பது நிதர்சனம்.  தொடர்ந்து ஈழத்தில் இதே அபல நிலை பேணப்படவேண்டும் என்பதே சம்பந்தரின் கருத்தாக எடுத்துக்கொளலாம் அல்லவா!
 
சில துரோகிகள் கூட சம்பந்தர் கூறியதுபோன்ற தமிழர் விரோத மோசமான இன அழிவு கருத்தை இதுவரை தெரிவித்திருந்ததாக தெரியவில்லை. சம்பந்தர் எந்தக்கூச்சமும் இல்லாமல் தமிழர்களை அழிக்கும்விதமாக பாராளுமன்றத்திலும் வெளி மேடைகளிலும் இப்படி முழங்குகிறார் என்றால் சம்பந்தர் மற்றும் அதற்கு துணை போபவர்களையும் பலமிக்க சக்திகளால் விலை கொடுத்து வாங்கப்பட்டுவிட்டனர் என்ற முடிவுதவிர வேறு முடிவுக்கு எவராலும் வரமுடியாது.  ஏனெனில் ஸ்ரீலங்கா சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகளாக எதற்காக தமிழர் தேசிய சக்திகள் போராடிவருகின்றனவோ அதற்கு விரோதமாக முதல் முதலாக ஒரு தமிழ் அரசியல்வாதியிடமிருந்து இப்படியான கருத்து வந்து விழும்போது எவருக்கும் வேறு எப்படி சிந்திக்க முடியும். டக்கிளஸ், கருணா, பிள்ளையான், கேபி அனைவரினது பாடங்களும் அதைத்தானே தமிழனுக்கு கசப்புடன் போதித்து போயிருக்கின்றன. அதன் எதிர்த்தாக்கம்தானே சிங்களக்குடியேற்றங்களை எதிர்க்கமுடியாத கையறு நிலை.  கேட்பாரற்ற அபலை பெண்பிள்ளைகளின் திட்டமிட்ட இராணுவ இணைப்பு .
 
சம்பந்தரின் உள்ளக்கிடக்கை 2012 டிச 07 அன்றுதான் வெளிவந்த ஒன்றாக கருத முடியவில்லை. வெவ்வேறு சந்தற்பங்களில் முரண்பட்ட  கருத்துப்பட அவரது பேச்சு கவனிக்கப்பட்டே வந்தும் இருக்க்கிறது. 2011 நவம்பரில் அமெரிக்க,  கனேடிய சுற்றுப்பயணத்தின்போது வடக்கு கிழக்கை நாம் எமது சொந்தம் என்று சோல்லவரவில்லை என்று தனது வக்கிரமான இன அழிப்பு கொள்கையை கனடாவில் தமிழர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தி வந்ததை தமிழுலகம் வெறுப்புடன் நோக்கியது.  அவர் மூப்பெய்திவிட்டதால் ஏறுக்கு மாறாக புரியாத்தனமாக பேசிவிடுகிறார் என்று சிலர் சமாதானம் செய்தும் வந்திருக்கின்றனர். ஆனால் சம்பந்தர் அவர்கள் ஏதோ பெரும் பின்னணியுடன் காய் நகர்த்துகிறார் என்பதை தமிழர்களுக்கான அரசியல் சக்திகள் ஒருநாள் உணரும்போது சம்பந்தரை இயக்கிக்கொண்டிருக்கும் பின்னணியும் அதற்குள் ஒளிந்திருக்கும் அரசியலும் காலதாமதமாக வெளிவரும். அப்போது   அனைத்தும் தொலைக்கப்பட்டு முதலிலிருந்து அனைத்தும் தொடங்கப்படவேண்டியிருக்கும்.
 
சம்பந்தரின் மனதில் இருக்கும் வக்கிர எண்ணத்தின் வெளிப்பாடாக இன்னும் ஒரு விடயத்தை குறிப்பிடவேண்டும்.  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் நண்பரும் தமிழர் விரோத தீயசக்தியாக தன்னை வெளிப்படுத்தி தமிழர் தேசியப்போராட்டத்தை சிதைப்பதற்காக தமிழர்களின் ஒரே காப்பரணான விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக சித்தரிப்பதற்கு சர்வதேச பிரச்சாரகராக செயற்பட்ட வெளிவிவகார மந்திரி லஷ்மண் கதிர்காமர், தனது நெருங்கிய நண்பர் என்றும் பகிரங்கமாக சம்பந்தர் தெரிவித்திருந்தார். கதிர்காமர் சம்பந்தருக்கு நண்பராக இருந்துவிட்டுப்போகட்டும்,  அந்த சம்பந்தர் எப்படி எனது இனத்தின் பாதுகாவலராக இருக்க முடியும் என்ற கேள்வி முள்ளிவாய்க்காலில்  குடும்பம்  பிள்ளை குட்டிகள் சிதைக்கப்பட்ட ஒரு குடும்பத்தலைவனுக்கு எழும் என்ற யதார்த்தம் ஏன் சம்பந்தரால் சிந்திக்கமுடியவில்லை. தமிழினத்தின் வாக்குக்களை பெற்று பதவி வகித்துக்கொண்டு அவ்வினத்துக்கே அள்ளிவைப்பதாக இப்பேற்பட்ட நட்பு அமையாதா?
 
கதிர்காமரின் பிரச்சாரத்தின்பால் தமிழர் தேசிய போராட்டத்தை பயங்கரவாதம் என்று விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்த அமெரிக்காவின் வெளியுறவு செயலராக பணியாற்றிய கிளாரி கிளிண்டன் ஒரு சந்தற்பத்தில் தாம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொள்கைகளை சரியாக புரிந்து கொள்ளவில்லையென்றும் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல என்பதை தாம் இப்போ புரிந்துகொள்வதாகவும் குறிப்பிட்டிருந்ததாக ஞாபகம்.
 
சம்பந்தரின் டிச 07  பாராளுமன்ற பேச்சு பழங்கதையாகிப்போன ஒன்றாகவே தமிழர் தேசியத்தை நேசிப்பதாக கூறிக்கொள்ளும் புலம்பெயர் சங்க அமைப்புக்கள் விட்டுவிட்டனவோ அல்லது சம்பந்தரின் கருத்தில் உடன்பாடு கொண்டு மவுனம் சாதிக்கின்றனவோ என்ற ஐயம் தேசியத்தை உயிராக நேசிக்கும் மூன்றாம் நிலையில் இருப்பவர்களிடம் நீறுபூத்த நெருப்பாக நெஞ்சில் கனன்று கொண்டிருக்கிறது.  ஏன் எனில் தேசியப்போராட்டத்தில் நேரடியாக வலியை சுமந்தவர்களுக்கும்,   இழப்புக்களை பெருவாரியாக பெற்றுத்தீர்த்தவர்களுக்கும் இதுபோன்ற காட்டிக்கொடுப்புக்கள் சாதாரணமாக ஜீரணிக்கக்கூடிய ஒன்றல்ல. நேரத்துக்கேற்ப நிறம் மாறி தம்மை வெளியே வெளிப்படுத்திக்கொள்ள முடிந்தவர்களுக்கு இது உறைக்கப்போவதுமில்லை. நிதர்சனத்தை மதித்து நிறம் மாறமுடியாதவர்களுக்கும் பண பலம் இல்லாமல் இன உணர்வுடன் சம்பந்தர் போன்றவர்களை நம்பிக்கையுடன் பின்பற்றியவர்களுக்கும் இது பெரும் அதிர்ச்சியே.
 
 "இயற்கை எனது நண்பன்… வாழ்க்கை எனது ததுவாசிரியன்…. வரலாறு எனது வழிகாட்டி" என்ற தீர்க்க தரிசனமான தேசியத்தலைவரின் (1984) ஒப்பற்ற தத்துவத்தை நம்பிக்கொண்டிருப்பவன் இப்பேற்பட்ட கழிவுகளுடன் தொடர்ந்து  பயணப்பட விரும்பமாட்டான்.
 
சர்வதேசத்தையும் இந்திய நன்பனையும் திருப்திப்படுத்தி இராஜதந்திர முறைமையில் தீர்வுப்பொதியை ராஜபக்க்ஷவிடமிருந்து பெறுவதற்காக சம்பந்தர் இராஜதந்திர நாடகம் ஆடுகிறார் என்று சம்பத்தரின் நட்பு வட்டத்தில் சமாதானம் சொன்னதாகவும் உறுதிப்படுத்த முடியாத வதந்தி ஒன்று உலாவுவதையும் கருத்தில்க்கொண்டு சிந்தித்தாலும்,   உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் சமாதான தூதுக்குழுக்களையும் ஏமாற்றக்கூடிய சிங்கள ராஜபக்க்ஷவுக்கு சம்பந்தர் நாடகம் ஆடி பதக்கத்தை வென்றுவருவார்  என்று நம்பினால்,  சம்பந்தரின் உற்ற கூட்டாளியான கருணாநிதி தமிழீழத்துக்காக உயிரை விடுவேன், தமிழீழம் கண்டுதான் கண் மூடுவேன்,   என்பதையும் சீரியஸாக எடுத்துக்கொள்ள முடியும்.    தமிழக முன்னாள் மூத்தவர் மு கருணாநிதி எப்பேற்பட்ட அரசியல் வியாபாரத்தை செய்கிறாரோ அதை பின்பற்றி சம்பந்தர் நகருவது வெளிப்படையாக தெரிகிறது.
 
நாடு கடந்த அரசு.
 
சிங்களப் படைகள் தமிழர் பிரதேசங்களிலிருந்து வெளியேறும் வரை இடைக்கால ஏற்பாடாக அனைத்துலகப் பாதுகாப்புப் பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டு தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும். இதற்கான அனைத்துலக மட்ட ஆதரவைத் திரட்டும் முயற்சிகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் என நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாட்டாளர் வி. உருத்திரகுமாரன்  தெரிவித்துள்ளார். தமிழர் தாயகத்தில் சிங்களப் படையினர் நிலைகொண்டிருக்கும் வரை தமிழ் மக்களுக்கு ஜனநாயகவெளியோ பாதுகாப்புணர்வோ கிடைக்கப்போவதில்லை. சிங்களப் படையினர் தமிழர் தாயகப் பகுதியில் இருந்து முற்றாக வெளியேறுவது அவசியமானதென அவர் மேலும் தெரிவித்திருந்தார். ஆனால் இலங்கையின் உள்ளக அரசியலில் நேரடி அங்கம் வகிக்கும்  தமிழர் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இராணுவம் எக்காரணம் கொண்டும் தமிழர் பிரதேசங்களிலிருந்து வெளியேறத்தேவையில்லை என்று பாராளுமன்றத்தில் சூழுரைத்து பதிவு செய்திருக்கிறார்.  நிகழ்வுகள் இப்படியிருக்கும்போது சம்பந்தரின் முரண்பாடான பேச்சு சம்பந்தமாக நாடு கடந்த அரசின் செயற்பாட்டாளர் உருத்திரகுமாரன் எந்த எதிர்வினையையும் இதுவரை தெரிவித்ததாக தெரியவில்லை. உருத்திரகுமாரன் அவர்களின் திட்டத்துக்கு சம்பந்தர் அவர்களின் கொள்கை நேரெதிரான முரண்பாட்டை நெத்தியடியாக ஒப்புவிக்கிறது.  சம்பந்தரின் கூற்றை புறந்தள்ளி நாடு கடந்த அரசுக்கு இலங்கை அரசோ சர்வ தேசமோ முக்கியத்துவம் கொடுக்குமா என்ற கேள்விக்கு யாரிடம் விடை கேட்பது?  அப்படியாயின் மக்களை ஏமாற்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு புள்ளியில் நின்று வாய்ப்பந்தல் போடுகின்றனரா என்பதை விட்டு வேறு எதை சிந்திக்கமுடியும்?
 
நாடுகடந்த அரசாங்க உறுப்பினர்களுக்கும் கேபிக்கும் தொடர்புகள் இருப்பதாக பலர் நீண்ட காலமாக குற்றஞ்சாட்டினாலும் சம்பந்தருக்கும் கேபிக்கும் இடையிலேயே அதிகமான கள்ளத்தொடர்பு இருப்பதாக மிக பலமாக அஞ்சவேண்டியுள்ளது.  சமிபத்தய நிகழ்வுகள் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துவதாகவே கட்டியம் கூறுகின்றன.
 
அவைகளை ஒரு புறம் தள்ளி வைத்தாலும் புலம்பெயர் தேசங்களில் உள்ள அமைப்புக்களில் "அனைத்துலக த்மிழர் மக்கவை"  என்ற ஒரே ஒரு அமைப்பு

மட்டும் சம்பந்தரின் கருத்துக்கு கண்டனத்தை தெரிவித்திருக்கிறது.   மற்றய அமைப்புக்களான "உலகத்தமிழர் பேரவை" இனப்படுகொலை மாநாடு நடத்திய "பிரித்தானிய தமிழர் பேரவை"  ஆகிய அமைப்புக்களுக்கு சம்பந்தரின் தமிழர் தேசிய விரோதகருத்து இன்னும் காதில் விழவில்லையோ என்றே படுகிறது.
 
அனைத்து அமைப்புக்களும்  வருடாவருடம் மாவீரர் தினத்துக்கு உரிமைகோரி துண்டு போட்டு அடம்பிடித்து இடம்பிடிக்க அடிபடுவதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உயிரினும் மேலான தாயக தேசிய விடுதலை கொள்கைக்கு கொள்ளிவைத்த சம்பந்தரை கண்டிக்க முடியவில்லை.  அல்லது துணிவுடன் சம்பந்தரின் கருத்தை திரும்பப்பெறும்படி கண்டிப்பாக கேட்டு கெளரவமாக நிர்ப்பந்திக்க கூட முடியவில்லை.  அல்லது அனைவரும் ஒரு ஆளியின் விசைக்கு ஆங்காங்கே இருந்து செயற்படுகின்றனர் என்று எண்ணவே தோன்றுகிறது.
 
உயிரினும் மேலான தேசியத்தை ஏற்றுக்கொள்பவர்கள் கறுப்பு ஆடுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
 
இராணுவம் தமிழர் தாயகத்திலிருந்து வெளியேறத்தேவையில்லை!.  விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள்!!.  வடக்கு கிழக்கு எமக்கு சொந்தமில்லை!!!.  சிங்கக்கொடியே எனது எனது சிறப்பு!!!!.  இலஷ்மன் கதிர்காமர் எனது பாசமுள்ள நண்பன்!!!!! இந்த கருத்து அனைத்தும் மிஸ்ரர் சம்பந்தனாருடையது.  இதே கருத்துத்தான் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ என்பவருடைய கருத்தும். இப்போ சொல்லுங்கள் யார் இந்த சம்பந்தர்?  இந்த சம்பந்தரின் கொள்கையை ஏற்றுக்கொள்ளுபவர்கள் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் கொள்கைக்கு விரோதமானவர்கள் என்பதே சாதாரண பார்வையாளர்களுக்கும் புரியப்படும் புரிதல். எனவே தலைவர் பிரபாகரன் அவர்களை ஏற்றுக்கொள்ளுபவர்கள் தியாக திருவிளக்குகளான மாவீரர்களை ஏற்றுக்கொள்ளுபவர்கள் சம்பந்தரின் கருத்துக்கு முரண்படவே செய்வர்.
 
போலி நோக்கத்தோடு,  ஈழம் என்ற சுலோகத்தை பெயர் பலகையில் எழுதிவைத்துக்கொண்டு   சுயலாபத்திற்காக மாவீரர் தினம் கொண்டாடுபவர்கள்,    ஈழம் என்ற ஒப்பற்ற தியாகத்துக்காக அனைத்தையும் துறந்து தம்மை அற்பணித்து  மாவீரகள் விட்டுச்சென்ற கனவுகளை  உதவியாக்கி  தமது இருப்பை மட்டும் தக்க வைப்பதற்கு வாழ முயற்சிக்கும் அனைத்து  அரசியல் சக்திகளும்  சம்பந்தர்களின் பிம்பங்களே  அந்த  கயமையை  நினைக்கும்போது அவை பற்றி விமர்சிக்க வார்த்தை இல்லை!

ஈழதேசம் செய்திகளுக்காக

ஊர்க்குருவி.

Thursday, December 13, 2012

பலவந்தமாக இராணுவத்தில் இணைக்கப்பட்ட பெண் பிள்ளைகளின் வாக்குமூலங்களை தமிழ் அரசியல்வாதிகள் தயவு செய்து ஆராய்ந்து உலகத்துக்கு தெரியப்படுத்துங்கள்.

போர் முடிந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டபோதும் யாழ்ப்பாண நகரம் இன்னும் உயர் பதற்ற நிலையிலேயே இருந்துகொண்டிருப்பதாக ‘த டிப்ளொமெற்’ என்ற ஆசிய பசுபிக் வலய சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள 11 பெண்கள் அமைப்புக்கள் கூட்டாகச் சேர்ந்து அமைத்துள்ள பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு (Women's Action Network) கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பெண்களை இராணுவம் விதிமுறைக்கு புறம்பாக  ஆட்சேர்ப்பு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையிட்டு ஆழமான கவலை தெரிவித்துள்ளது.
 
2009ன் பின் தொடர்ந்து ஸ்ரீலங்கா சிங்கள ஏகாதிபத்தியத்தின் அடாவடி இன ஒழிப்பு நடவடிக்கைகள் தமிழ்க்கட்சிகளின் அனுசரணையுடன் வெவ்வேறு வடிவங்களில் ஈழதேசத்தில் உருவெடுத்து பெருகிக்கொண்டே இருக்கின்றன. தட்டிக்கேட்பதற்கு சரியான அரசியற் தலைமை ஒன்று இனங்காணப்படும்வரை இந்த இன அழிப்புச் சாக்காடு பல்வேறுபட்ட உருவங்களில் தொடரும் என்பதே சமீபகாலத்தின் கள நிலவரங்கள் நிதர்சனமாக்கி நிற்கின்றன.
 
உருப்படியற்ற கையாலாகாத தமிழ் அரசியற் தலைமைகள் மக்களால் இனங்காணப்பட்டுள்ளபோதும் அவை புறக்கணிக்கப்பட்டு அகற்றப்படும்வரை நாட்டுமக்கள் செய்வதறியாது கிணற்று தவளைகளாகவே இருக்க நேரும்,  நாட்டையும் மக்களையும் குளப்பி கூழ் முட்டை நிலைக்கு கொண்டு சென்றிருக்கும் தமிழரசு கட்சியின் தலைவர் சம்பந்தன் போன்ற தமிழ் அரசியற் தலைமைகளால் ஆபத்தே தவிர வேறு ஒரு பலனும் இல்லை என்பதையே மேற் குறித்த செய்திகள் நெத்தியடியாக ஈழாத்தமிழனுக்கு  பாடம் புகட்டி நிற்கின்றன.
 
28 நவம்பர் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மீதான அடக்குமுறை அட்டூழியம் முடிவில்லாமல் தொடரும் நிலையில்,   மிரட்டலையும் வறுமையையும் சரியாக பயன்படுத்தி பலாத்காரமாக இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ் இளம்பெண்கள் 16 பேர் சித்தசுவாதீனம் பிசகியிருப்பதாக அதிர்ச்சித்தகவல்  திடுக்கிட வைத்திருக்கிறது.
 
விதிமுறைக்குட்பட்டு இலங்கையில் இராணுவம் பொலிஸ் போன்ற துறைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதாக இருந்தால் அரச வர்த்தமானி பத்திரிகை  அறிவித்தலின்பின் முறையான விதிகளை பின்பற்றி ஆள் எடுப்பதுதான் சட்டப்படியான நடைமுறையாக இருந்துவருகிறது. அதைத்தான் ஸ்ரீலங்காவின் அரசியல் யாப்பு சட்டமூலமும் 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறையிலிருப்பதாக தெரிவிக்கிறது.
 
ஆனால் எந்த விதிமுறையையும் பின்பற்றாமல் தமிழினத்தின் இக்கட்டான கையறு சூழலை மட்டும் பயன்படுத்தி தமிழ் பெண்கள் பலர் ஏமாற்றப்பட்டு இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளார்கள்.  அதேவேளை இந்த செயற்பாடு இன முரண்பாட்டு நல்லிணக்கத்துக்கு தீர்வை தர வித்திடுவது போலவும்,  நீதி நியாயத்தை நோக்கியதுமான ஒருமைத்துவ சமாதானத்துக்கான முன்னெடுப்பின் ஆரம்ப நடவடிக்கையைப் போலவும்,  சர்வதேசத்தின் பார்வையில் ஒரு நெகிழ்வை உண்டுபண்ணும் விதமாகவும் மிக தந்திரமாக  விடயம் கையாளப்பட்டிருக்கிறது,  கூர்ந்து நோக்கும்போது இராணுவத்தால் கட்டாயமாக பணியில் அமர்த்தப்பட்ட பெண் பிள்ளைகளுக்கான நியமனங்களில் வெளிப்படைத்தன்மை, உரிய தகவல் வழங்கல், என்பனவற்றில் பெருத்த இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பதோடு  வற்புறுத்தல்களும் மிரட்டல்களும் இன அழிப்பின் அலைவரிசைகளும் ஒருங்கே இடம்பெற்றாதகத் தெரிகிறது.  
 
இராணுவத்தால் இலகுவாக கையாளக்கூடிய வன்னி நிலப்பரப்பில் வாழும் பெண்களின் கையறு நிலையை குறிவைத்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள இராணுவத்தினரே மேல் மட்ட கட்டளைக்கமைய இன அழிப்பின் உத்தியில்  இந்த ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.   பொருளாதார ரீதியில் நொடிந்திருக்கும் ஆண்கள் அற்ற பலவீனமான குடும்பங்களையே இதற்காக இலக்கு வைத்துள்ளனர் என்ற உண்மையும் வெளிவந்திருக்கிறது.  இதில் இங்கு வெளிப்படுத்தமுடியாத ஒரு கசப்பான விடயமும் இந்த ஆட்சேர்ப்பில் ஒளிந்திருப்பது பின்னர் புரியப்படலாம்.
 
ஆள்ச்  சேர்ப்பின்போது பல கிராமங்களில் தமிழர்களை வைத்து கவர்ச்சிகரமாக ஒலிபெருக்கி மூலம் ஆட்சேர்ப்பு அறிவிப்புகளைச் செய்துள்ளார்கள்.  தொடர்ந்து இராணுவ சிப்பாய்கள் நேரடியாகச் வீடு வீடாகச் சென்றும் ஆட்சேர்ப்பு விளம்பரம் செய்திருக்கிறார்கள்,  சில இடங்களில்,  அந்தப்பகுதி கிராம சேவையாளரை பயன்படுத்தி இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. ஆண்களற்று  பெண்கள் தலைமையிலுள்ள குடும்பங்கள் அல்லது வறுமைக்குட்பட்ட அதிகமாக பெண்பிள்ளைகள் உடைய குடும்ப அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பங்கள் என்பனவற்றில் உள்ள இளம் பெண்களே பொதுவாக இலக்கு வைக்கப்பட்டுள்ளார்கள்.  இங்கு உத்தியோகம் என்ற மாயையை முன்னிறுத்தி சரியான அடிப்படைத்தகவல்களை வழங்காமல் ஏமாற்று வேலை நடந்திருக்கிறது
 
சேர்க்கப்பட்ட பெண்கள் அனைவரும் எழுதுனர் சேவை, அல்லது கிராமசேவையாளருடனான தொடர்பாளர் வேலைகளிலேயே ஈடுபடுத்தப்பட இருப்பதாகவும் குறிப்பிட்ட உத்தியோகம் குறிப்பிட்ட மணித்தியாலங்களுக்கு மட்டுமே உள்ளது என்றும்  அவர்களது சொந்த இடங்களிலேயே சேவை செய்ய முடியும் என்றும் உறுதி வழங்கப்பட்டிருந்தது என்றும் நம்பகமான செய்திகள் கூறுகின்றன,  அடிப்படை மாதச்சம்பளமாக ரூபா 30,000  வழங்கப்படும் என்று கவர்ச்சிகரமான வாக்குறுதியும் வழங்கப்பட்டுள்ளது.  முல்லை, கிளி,  மாவட்டங்களிலிருந்து சுமார் 109 க்கு மேற்பட்ட பெண்கள் விபரம் புரியாமல் விண்ணப்பித்து பணியில் இணைந்ததாகவும் சொல்லப்படுகிறது.  இருந்தும் வார இறுதியில் விடுப்பில் அப்பெண்கள் வீடு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
 
எந்த ஒரு தருணத்திலும் இராணுவத்துக்காக வேலை செய்யவேண்டியிருக்கும் என்றோ கடமைகளைச் செய்வதற்காக அவர்கள் இராணுவத்தில் சேரவேண்டியிருக்கும் என்றோ ஒருபோதும் அவர்களிடம் தெரிவிக்கப்படவில்லை என்றே பெற்றோர் பாதுகாவலர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இப்படி பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றப்பட்டு பலவந்தமாக இராணுவத்தில்  இணைத்துக்கொள்ளப்பட்ட 109 பெண்களில் 16 க்கும் மேற்ப்பட்ட இளம் பெண்கள்  கிளிநொச்சி மருத்துவ மனையில் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று பெயர் குறிப்பிட விரும்பாத மனநோய் மருத்துவர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்,   அத்துடன் தொடர்ச்சியான பாலியல் பலாத்கார துன்புறுத்தலுக்கு உள்ளான காரணத்தினால் இவர்கள் மனநோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என வைத்திய வட்டாரத்தின் அதிர்ச்சி தெரிவிக்கின்றன. வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 16 இளம் பெண்களையும் பார்வையிட இதுவரை எவரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
 
இந்தப்பெண்களை பேய் பிடித்திருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.  எது எப்படி இருந்தாலும் இவர்களை கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்தாலும் தனிமைப்படுத்தப்பட்டு இராணுவ காவலுடன் சிறைப்படுத்தி வைத்திருப்பதன் நோக்கம் என்ன?   இந்தப்பெண்களுக்கு என்ன நடந்தது ஏன் அவர்கள் உறவினர்களை சந்திக்கவிடாமல் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர் இவற்றை சிந்திக்கும்போது அப்பெண்கள் மோசமாக துன்புறுத்தப்பட்டிருக்கின்றனர் என்பதும்,  உண்மை வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக இராணுவம் இரும்புத்திரை போட்டிருப்பதாக பலரும் ஐயம் தெரிவிக்கின்றனர்.
 
இந்த தகவலை குறிப்பிட்ட பெண்களின் பெற்றோர் உறவினர்கள் மூலம் அறிந்துகொண்டதாகக் கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், அவர்களை பாதிக்கப்பட்ட பெண்களை பார்ப்பதற்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சென்று நோயாளிகளை பார்வையிட முயற்சித்தபோது அவர் மருத்துவமனைக்குள் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
 
தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், தனக்கு தன்னுடைய பிரதேச மக்களை சென்று பார்ப்பதற்கு சட்டப்படி சிறப்புரிமை உள்ளது. ஆகவே அதற்கான அனுமதி வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் தான் கேட்டதாகவும், அதற்கு இராணுவத்தின் அனுமதி இல்லாமல் உள்ளே செல்லமுடியாது என்று வைத்திய அதிகாரி கலாநிதி கார்த்திகேயன்,   கூறியதாகவும் சிறிதரன் கூறியுள்ளார். கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரன் அவர்களால் தனது நிர்வாக மாவட்டத்தில் அவல நிலையில் உள்ள பெண்களை பார்த்து உண்மைநிலைகளை உறுதிப்படுத்த முடியாதிருக்கும்போது குறிப்பிட்ட பெண்களின் பெற்றோர் என்னசெய்யமுடியும்?.  குறித்த பெண்கள் அனைவருக்கும் தகப்பன், அல்லது தாய், அல்லது ஆண் சகோதரர்கள் இல்லாதவர்களே அதிகம் என்றும் சொல்லப்படுகிறது.  சில பெண்களுக்கு பெற்றோர் இருவரும் முள்ளிவாய்க்காலில் இராணுவத்தால் கொல்லப்பட்டு யாரும் அற்றவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.
 
இராணுவ மயமான ஸ்ரீலங்கா போன்ற ஒரு நாட்டில் நேரடியான இராணுவ வலையமைப்புக்குள் இருந்து இப்பேற்பட்ட சமூக சிக்கல்கள் புறப்படும்போது அடி மட்டத்திலுள்ள தமிழ் பேசும் மக்களால் எதுவும் செய்ய முடிவதில்லை.  மாவட்ட வைத்திய அதிகாரியால்க்கூட அதே மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரை உள் அனுமதிக்க முடியாமல் இருக்கும்போது வறுமையின் வாட்டத்தால் இராணுவ வலைக்குள் சிக்கித்தவிக்கும் பாமர மக்கள் எதுவும் செய்வதற்கில்லை.
 
இந்த சிக்கலை தீர்ப்பதற்கு நிறுவன மயப்படுத்தப்பட்ட மனித உரிமை கழகங்கள், தொண்டரமைப்புக்கள்,   பாகுபாடற்ற அரசியற் கட்சிகள் கால தாமதமின்றி தலையிட்டு அந்த அபலை பெண்களுக்கு உதவ முன்வரவேண்டும். முதலாவதாக அவர்களை வெளியேற்றி சுதந்திரமான மருத்துவ வசதி செய்யப்படவேண்டும்.
 
கொழும்பு , கண்டி அனுரதபுரம் என சிங்களவர் வாழும்  பிரதேசங்களில் குறைந்த அளவுக்கென்றாலும் தமிழர்கள் (பெண்கள் அரச உத்தியோகத்தில் இருந்துகொண்டுதான் இருக்கின்றனர் அவர்களுக்கு இவ்வளவு அசெளகரியங்கள் இருந்ததாக தெரியவில்லை ஆனால் தமிழர்கள் மட்டுமே வாழும் கிளிநொச்சி மாவட்டத்திற்குள்ளேயே இப்படி ஒரு நிலை தோன்ற காரணம் என்ன?.   வேலையில் சேர்ந்து குறுகிய காலத்துள் அந்தப்பெண்களுக்கு நடந்தது என்ன என்பதை வைத்திய அறிக்கைகளுடன் ஆராயாமல் இராணுவம் சொல்லும் கட்டுக்கதையான பேய்க்கதையுடன் விடயத்தை விட்டுவிடலாகாது.
 
தமிழர்கள் தங்களது காப்பரணாக இருக்குமென்று முற்று முழுதாக நம்பிக்கை வைத்திருந்த கூட்டமைப்பின் பாங்காளியான தமிழரசு கட்சி தலைவர் இரா சம்பந்தன் ராஜபக்க்ஷவுக்கு ஆட்காட்டியாக செயற்படுகிறார் என்பதால் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மற்ற கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தமிழருக்கும் தமிழர் தேசியத்துக்கும் விரோதமாக செயற்படுவார்கள் எனச்சொல்லமுடியாது,   எனவே சம்பந்தனை கணக்கிலெடுக்காமல் புறந்தள்ளிவிட்டு மனித நலனை முதன்மையாகக்கொண்டு மிகுந்த நெருக்கடியில் இராணுவ வலையில் சிக்குண்டிருக்கும் பெண் பிள்ளைகளை தமது பிள்ளைகளாக நேசித்து உடனடியாக காப்பாற்றியாகவேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது.  கிளி/ பாஊ சிறிதரன் அவர்களுக்கு இந்த இடத்தில் அதிகமான வேலை இருக்கும் என்றே நம்புவோம்.
 
ஈழதேசம் இணையத்திற்காக,

கனகதரன்.

Saturday, December 8, 2012

சம்பந்தருக்கு வயதாகிவிட்டது, அல்லது புத்தி பிசகியிருக்கவேண்டும். தே கூ எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமோ?

மூன்றாம் தலையீடற்ற வகையில் உள்நாட்டு அரசியல் மட்டத்தில்   காத்திரமான முடிவொன்றை எட்டி   ஸ்ரீலங்கா  இன முரண்பாட்டுக்கான அரசியற்தீர்வு எதனையும்  இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் ஈழத் தமிழர்கள் எட்டிவிட முடியாது.
இந்த உண்மை இலங்கை அரசியல்வாதிகள்,  ஆய்வாளர்கள் மட்டுமல்லாது சர்வதேச அரசியல் விஞ்ஞான ஆய்வாளர்கள்வரை களங்கமற புரிந்துகொண்டுள்ள விடயம்.

ஏன் உள்நாட்டுக்குள் ஒரு அரசியல் தீர்வை முன்னிறுத்தி முடிவுக்கு வரமுடியாமலிருக்கிறது என்பதற்கு பல சிக்கலான காரணங்கள் துருப்பிடித்து பிரச்சினையை  மூடிக்கிடந்தாலும்,   இரண்டு பெரிய காரணிகள் பிரச்சினையை சரியாக அணுகி படிந்து கிடக்கும் கறளை அகற்ற தடையாக என்றைக்கும் இருந்துகொண்டிருக்கின்றன.  ஒன்று சிங்கள ஏகாதிபத்தியவாதிகளின் கடுமையான துவேஷ வக்கிர சிந்தனை,.  இரண்டாவது தமிழர்களின் அரசியலை வழிநடத்தும் அரசியல்வாதிகளின் சந்தற்பவாத ஆளுமையற்ற இயலாமை.

நடந்து முடிந்த காலங்களை கடந்து,   நடைமுறையிலுள்ள இன்றைய நிகழ்காலத்தை எடுத்துக்கொண்டால் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை எட்டவேண்டிய வேலைத்திட்டத்தை கடைசி மூன்றாண்டுகளாக தமிழர் தேசியக்கூட்டமைப்பு என்ற அரசியற் கட்சியிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.   தேசியக்கூட்டமைப்பின் வேகம் வாள் வீச்சின் திறன்  பொறுத்து மக்கள் அடுத்த தீர்மானத்துக்கு வரமுயற்சிப்பர்,  அந்தக்கட்சியால் முடியாதபட்ஷத்தில் வேறு ஒரு அரசியல்ச்சக்தியை நோக்கி மக்கள் திரும்புவதும் தவிர்க்கமுடியாததாகும்.   இன்று தேசியக்கூட்டமைப்பு இந்த இடத்தில் இருப்பதற்கு ஈழத் தமிழ்மக்களும்,  ஈழ போராட்ட வரலாறுமே காரணமுமாகும்.

கடந்த காலத்தில் தமிழர்களின் அரசியல் நகர்வுகள் எப்படி நகர்ந்து வந்திருக்கின்றன இனி என்ன செய்யலாம் என்பதை நன்கு ஆராய்ந்து,   அதற்கேற்ப சுய விருப்பு வெறுப்புக்களுக்கு இடமளிக்காமல் நுணுக்கமாக காய் நகர்த்தி அது சார்பாக சாதகமாக திரண்டுவரும் புறச்சூழல்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி தாழ்வுமனப்பாண்மை என்ற நோய்க்கு இடங்கொடுக்காமல் காத்திரமான இராசதந்திர மதிநுட்பத்துடன் பிரச்சினையிலிருந்து வெளிவேறவேண்டும்.  அத்தகைய திறன்  கூட்டமைப்புக்கு இருக்குமேயானால் ஒளிய  சரியான புள்ளியை அடைய முடியாது.  இதை அனைவரும் அறிவர்.

2002 ல் பிறந்த தேசியக்கூட்டமைப்புக்கு அந்த ஆண்டிலிருந்து இருந்து 2009 ம் ஆண்டுவரை பாராளுமன்ற கூட்டத்தில் ஒப்புக்கு பங்குபற்றியது தவிர வேறு எந்த ஒரு காத்திரமான மாற்றுச்சிந்தனையையும் அக்கட்சியால் முன்னெடுக்கப்பட்டு அறிமுகப்படுத்த முடியவில்லை.  தகமை பொறுத்து இயற்கை எந்த வேலைத்திட்டத்தையும் அக்கட்சிக்கு கொடுக்கவில்லை என்றே படுகிறது. அது ஏன் எதற்காக அப்படிநடந்தது என்று சிந்திக்கும்போது அக் கட்சியின் தலைமையின் ஆளுமை அந்தளவுக்குத்தான் இருந்திருக்கிறது என்று இன்றைக்கு தெரியவருகிறது.

இலங்கையின் வரலாற்றில் தமிழர்களுக்கு மொழி வாரியாக,  அரசியல் பொருளாதார வாரியாக நிறைய அடிப்படை கொடுப்பனவுகள் தீர்க்கப்படவேண்டும் என்ற கோசம் உலக அரங்குக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிகரிக்கப்பட்டது,    தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்,  என்ற ஒரு மனிதனின் தலைமத்துவ சிந்தனையால் மட்டும்  என்றே வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆயுதம்,   பயங்கரவாதம்,   தீவிரவாதம்,   என்ற சொற்றோடர்கள் உலக நாடுகள் சிலவற்றால் பாவிக்கப்பட்டாலும்,  ஆயுதம் தீவிரவாதம் ஏன் உருவானவை என்ற கேள்வியும் கூடவே எழும்பவேண்டும்.   தேவையில்லாமல் ஒரு சமூகம் ஆயுதப்போராட்டத்தில் இறங்கிவிடவும் முடியாது,  அந்தக்கேள்வியையும் சர்வதேசம் ஆராயாமல் இல்லை என்பதும் ஈழ அரசியலில சர்வதேசத்தலையீடுகள் சர்வதேசத்தின் மத்தியஸ்த பங்களிப்புக்கள் மிகச்சரியாகவே எடுத்துக்காட்டுகின்றன.

விடுதலைப்புலிகள் இயக்கம் அடிப்படையில் கொள்கையற்று பயங்கரவாத செயற்பாட்டையே முதன்மையாக கொண்டிருப்பின் சர்வதேசம் புலிகளை அழிப்பதற்கே முன்னுரிமைகொடுத்து அணிவகுத்திருக்கும்.   அங்கு அரசியல் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு உலகத்தில் இடமிருந்திருக்காது,   உண்மையில் இது பயங்கரவாதம்தான் என்றிருப்பின் சர்வதேச வல்லாதிக்கங்கள்  வேறு விதமாக புலிகளை சந்தித்திருக்கும்  என்பதை கவனிக்கவேண்டும்,  இறுதி யுத்தம்வரை சர்வ தேசத்திலுள்ள சில நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவாக ஆயுத பரிவர்த்தனையில் ஈடுபட்டிருந்திருந்தாலும் தமிழர்களுக்கான இனப்பிரச்சினை,   சுய நிர்ணயம் என்ற பதம் ஒப்புக்கொள்ளப்பட்டு அதுபற்றியே உலக பெரும் நாடுகள் இனப்பிரச்சினை என்றே பேச்சுவார்த்தை பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது.

2009 மே போர் முடிந்து சுமூகமாக நாடு இருப்பதாக கூறப்படும் இன்றைக்கும் தொடர்ந்து அதையொட்டி போர்க்கால பேச்சுவார்த்தை எச்சத்தின் அடிப்படையிலேயே உலகங்கள் இலங்கையின் அரசியற் தீர்வைப்பற்றி பேசிக்கொண்டிருக்கின்றன.  ஈழத்தமிழர்கள் அனைவரும் அப்பேற்பட்ட ஒரு பேச்சுவார்த்தையைத்தான் முன்மொழிந்து பின்பற்றிவருகின்றனர்.  நாளையும் அதை நோக்கித்தான் ஈழ அரசியல் நகரவேண்டும்,   அப்படியில்லாத ஒன்றை எவரும் கவனத்தில் எடுக்கப்போவதுமில்லை, மக்களுக்கு நன்மையளிக்கப்போவதுமில்லை.

உலக நிலவரங்கள் அனைத்தும் இப்படியிருக்கும்போது கிணற்று தவளையாக கொழும்பையும் சென்னையையும் புளக்கமாகக்கொண்ட   த தே கூ தலைவர்,  திரு இராசவரோதயம் சம்பந்தன் ஈழத்தமிழர்களின் ஒப்பற்ற தியாகத்தையும்,   இழப்புக்களையும்,   வலி வேதனைகளையும் மலிவு விலைக்கு விற்பதற்கு பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறார். நடந்து முடிந்த போராட்டத்தில் சம்பந்தனுக்கும் சம்பந்தனின் குடும்பத்துக்கும் எந்த இழப்பம் ஏற்படாததும் இப்பேற்பட்ட நிலை எடுப்பதற்கு காரணமாகவும் இருக்கலாம்.

பழைய அரசியற் சித்தாந்தத்தை மட்டும் தன்னகத்தே கொண்டவரான சம்பந்தனுக்கு புதிய வரலாறுகள் நடைமுறையில் புரியாது,   என்பதால் அவர் இயலாவிட்டால் மக்களை குளப்பாமல்  துடிப்பான சிந்தனையுடையவர்களுக்கு வழிவிட்டு விலகிவிடுவதே நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது.

விடுதலைப் புலிகள்  பயங்கரவாதிகள் என்றும் மனித உரிமைகளை அவர்கள் கடைப்பிடிக்காததால் அழிந்துபோனார்கள் என்றும் நாக்கில் நரம்பில்லாமல் சம்பந்தன் தெரிவித்த கருத்து ஒட்டுமொத்த ஈழத்தமிழ் சமூகத்துக்குமே சேறடிக்கும் கருத்தாகும்,  அது முற்று முழுதாக சிங்கள ராஜபக்க்ஷவின் கருத்தாகவே கொள்ளமுடியும்.  ராஜபக்க்ஷவின் இக்கட்டை தீர்க்கும் நோக்கிலும் இந்திய அரசாங்கத்தின் கொள்கைக்கு அமையவும் சம்பந்தனின் இப்பேற்ப்பட்ட காட்டிக்கொடுக்கும் கருத்தை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மற்றய கட்சிகளுக்கும் உடன்பாடு உண்டா என்பதை அக்கட்சிகள் நிச்சியம் பகிரங்கப்படுத்தவேண்டும். அல்லது அனைவரும் சேர்ந்து சம்பந்தனை கட்சியிலிருந்து வெளியேற்றவேண்டும்.  சம்பந்தனின் ஆத்ம நண்பனான திருவாளர் மு கருணாநிதியும் இதே கருத்தை தொடர்ச்சியாக சொல்லிவருவதுண்டு. எனவே இந்தியாவின் நிகழ்ச்சி நிரலை சம்பந்தன் நெறிப்படுத்துகிறாரா என்பதும் அச்சத்துடன் சந்தேகப்பட வைக்கிறது.

ராஜபக்க்ஷ நடத்தும் மனித உரிமைமீறல்கள், யாழ்ப்பாணத்தில் இராணுவம் மாணவர்களிடத்தில் நடந்துவரும் மிருகத்தனமான மனித உரிமை மீறல்கள எதுவும் சம்பந்தனின் ஞானக்கண்ணுக்கு  புலப்படவில்லை.  யாழ்ப்பாணத்தில் குடிகொண்டிருக்கும் இராணுவத்தால் சம்பந்தனுக்கு நிச்சியம் பாதிப்பில்லை என்பது உண்மையே அது அங்கு வாழும் மக்களுக்கும் பொருந்தும் என்றே குழந்தைத்தனமாக சம்பந்தன் கருதுவது தெரிகிறது.

தமிழர் பிரதேசங்களிலிருந்து இராணுவம் வெளியேறத்தேவையில்லை என்று ஒரு முட்டாள்த்தனமான கருத்தை வயோதிபர் சம்பந்தன் எழுந்தமானத்தில் தெரிவித்திருக்கிறார்,   இது எவ்வளவு மோசமான தமிழின அழிப்பு கருத்து.   இக்கருத்து  ஈழத்தமிழினத்தை திகைக்க வைத்திருக்கிறது. ஈழத்தின் எந்த இடத்திலிருந்தும் இராணுவம் வாபஸ் வாங்கத்தேவையில்லை என்று தமிழ் அரசியல்வியாதி ஒருவன் சொல்லுவானாக இரூந்தால் அவனை எதற்காக கட்டி அழவேண்டும்,   பேசாமல் அவனுக்கும் டக்கிளஸ் தேவானந்தாவின் இடத்தை கொடுத்துவிட்டு ராஜபக்க்ஷவை நண்பனாக்கி அடிமையாக காலத்தை கடத்திவிடலாமே.  இதற்காகவா இவ்வளவு காலமும் போராடினோம்,   இவ்வளவு உயிரை தியாகம் செய்தோம்,  அனைத்து விடயத்திலும் சம்பந்தன் ஈழத்தமிழர்களின் வாழ்வில் மண் அள்ளிப்போட்டிருக்கிறார்.

மண்ணின் மைந்தர்களாக உள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உணர்வின் அடிப்படையில் உறவினர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த உரிமை இருக்கவில்லை,   அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து வெளி மாவட்டங்களுக்கு இராணுவத்தினர் இழுத்துச்சென்றிருக்கின்றனர்  அவற்றை உலகுக்கு தெரிவித்து மாணவர்களை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபடாமல் ராஜபக்க்ஷவுடன் இணைந்து துரோகியாக செயற்பட விளையும் சம்பந்தன் போன்ற அரசியல்வாதிகளால் இனி வரும் காலங்களிலும் பெரும் ஆபத்து காத்திருக்கிறது என்பதே சம்பந்தனிம் கருத்து கட்டியம் கூறுகிறது.

சம்பந்தனுக்கு வயதாகிவிட்டதால் மனதில் திடமில்லாமல் போய்விட்டது என்றும்,   பயம் கரணமாக ராஜபக்க்ஷ சொல்லுவதற்கு என்ன பேசுவதென்று புரியாமல் புலம்பி பிதற்றுகிறார் என்றும் கூட்டமைப்பினரிடையே பேசத்தொடங்கியிருக்கின்றனர்.  கூட்டமைப்பு இன்னும் ஈழமக்களுக்கு அரசியல் செய்யவேண்டுமென்றால் மக்களின் மனநிலையை புரிந்து செயற்படவேண்டும்  இல்லையென்றால் விட்டு விலகி திடமான கொள்கையுடையவர்களிடம் பொறுப்புக்களை கையகப்படுத்தி உதவவேண்டும் மாற்றுச்சிந்தனை மதிநுட்பம்,   இராசதந்திரம் தெரிந்தவர்கள் மட்டுமே ஈழ அரசியலை கையாளக்கூடியவர்களாக இருப்பர்.

மூன்று வருட அரசியலில்;> சம்பந்தன் ஐயா கனடாவில் தமிழர்கள் மத்தியில் உரையாற்றும்போது நாங்கள் வடக்கு கிழக்கை எங்களுக்கு சொந்தம் என்று சொல்லவரவில்லை அடிமைகளாக இருக்கவே விரும்புகிறோம் என்று சொல்லி சாதனை செய்தவர்.  மே தினத்தின்போது சிங்களவனின் சிங்கக்கொடியை யாழ் நகரத்தில் ஏற்றி சாதனை செய்தவர்,  இப்போ இராணுவம் தமிழர் பிரதேசங்களிலிருந்து வெளியேறத்தேவையில்லை என்று தனது முழு உள்ளுணர்வையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

தேசியத்தலைவனின் அரசியலில் 1983ம் ஆண்டு யூலை மாதம் 23ம் பலாலி வீதியில் தொடங்கிய இராணுவ எதிர்ப்பு போராட்டம் 2009 மே முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்து சர்வதேச பஞ்சாயத்தில் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறது.

இருந்தும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

ஈழதேசம் இணையத்திற்காக,

ஊர்க்குருவி.

Sunday, November 25, 2012

ஈழத்தின் மூச்சே என்றன் எண்ணத்தின் உயிரே வாழி!‏










ஈழத்தின் மூச்சே என்றன்
எண்ணத்தின் கருவே - தங்கம்
கீழிடை பணிந்துபோக
கிளம்பிய புகழே வாழி!
 மானமே மகுடம் என்று
மலையென எம்மில் மீண்டு
காலத்தால் உருவாய் வந்த
கதிரவன் வாழ்க வாழ்க!.

உலகத்தில் உயர்வு நீதான்
உண்மைக்கு உரைகல் நீதான்
கலங்கரை விளக்கம் நீதான்
கடுமையும் நீதான் என்பர்.
விடுதலை வேள்வி மூட்டி
விண்ணதிர் களங்கள் கண்டு
சாவினை மீண்ட தங்க
தலைவனே வாழி வாழி!

ஒப்புக்கும் பயந்ததில்லை -உன்
உருவத்தில் கடுமையில்லை
தப்புடன் ஒருநாள் கூட - நீ
தன்நிலை பகிர்ந்ததில்லை
நிச்சியம் உங்கள் எண்ணம்
நிமிர்ந்திடும் நாளை என்போம்
அத்துணை காட்சி காண்போம்
ஆதவன் நீவிர் வாழ்க!

மூட்டிய பயணம் மீழும்
முடிவது நன்றே சேரும் - நீ
நீட்டிய திசையை நோக்கி
நிமிர்நடை போட்டே வந்தோம்
நாளை உன் வரவுக்காக
நல்வர வோடு நிற்போம்
இன்றைய நல் நாளில்- உன்
நிறை உரை எதிர்பார்க்கின்றோம்

அண்ணை,யுன் ஐம்பத்தெட்டு
அகவையை வாழ்த்துகின்றோம்
பினையும் ஆண்டு நூறு
பேறுடன் வாழ்வாய் என்பபோம்
மண்ணிடை மாண்ட வீரர்
உன்னையே நம்பி மீண்டார்
திண்ணமாய் வருவாய் என்றே
திக்கெட்டும் பார்த்து நிற்போம்.

ஈழத்தின் தலைவா வாழி!
என்றும் எம் நெஞ்சே வாழி!
காலத்தின் கதிரே வாழி!
காவிய புதல்வே வாழி!
வீரத்தை எமக்களித்த
வேங்கையின் மைந்தே வாழி
பார்வதி பெற்ற மைந்தா
பகலவன் (நீ) வாழி வாழி!

ஓர்மத்தை உகந்தளித்த
உண்மையின் பேறே வாழி!
வல்வையின் மகவே வாழி!
வானிடை உயர்ந்தே வாழி!
நேற்றுப்போல் இன்றும் உங்கள்
நிதர்சனம் காண்போம் உண்மை
காற்றென வருவாய் கண்டேன்
கனவில்லை உண்மை என்பேன்.

ஊர்க்குருவி.

Thursday, November 22, 2012

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம். மற்றெல்லாம் "தந்திரம்"



என்னையும்
ஒரு
வீர இனத்தில் பிறந்தவன் என,
அகில உலகமும்
அதிசயித்து சொல்லுமளவுக்கு,
புள்ளி பிசகாமல்
வல்ல களம் ஆடிவிட்டு,
வழமைபோல நீங்கள்
எந்த எதிர்பார்ப்புமில்லாமல்
தியாக தீபமாக,
உணர்வின் பிரவாகத்தில்
ஒப்பற்ற
மாவீரர்களாகி விட்டீர்கள்.

உங்கள் வழியில் பயணித்து
பழக்கப்பட்ட என் கால்கள்
நீங்கள் போன அடிச்சுவட்டை
தேடுகின்றன,

சில நாட்களாக
பாதை முழுவதும்
புதிதாக ஏதேதோ
காற்றுவாக்கில் கரடு முரடாக
மண்டிக்கிடக்கின்றது.

பாதை மாறிவிடுவேனோ?
என்றல்ல,
பாதை மாறிவிடுமோ
என்ற பயம் ஒருபுறம்,

தலைவனின் போதனையும்,
மாவீரர்கள்,
உங்கள் நினைவுகளும்
சூரிய பிரவாகமாக
அனைவரின் முகங்களிலும்...
இருந்தும்…..
ஆங்காங்கே
தொற்று ஏற்பட்டுவிட்ட
கலவரம்.

நோயின் அறிகுறியாக
சில வேளைகளில்
முரண்பாடான கூக்குரலும்,
ஊளை சத்தங்களும்
செவிப்பறைகளை
சிறுமைப்படுத்தி
சங்காரம் செய்கின்றன.

என் தலைவன் அமைதிகாத்த
சில வருடங்களாக
எனது மண்டைக்குள்
சில் வண்டு தொடர்ந்து
ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது.

நானும் நீயும்
ஒரே மொழியை பேசியவர்கள்,
நானும் நீயும்
ஒரே தலைவனை
நம்பிக்கையுடன்
பின்பற்றியவர்கள்.

எமது தலைவன்
என்றைக்கும்
எங்களுக்கு
அவ நம்பிக்கையை
பிரிவினையை
ஊட்டியதுமில்லை.

தலைவன் சோர்ந்து போனதாக
சரித்திரத்தில் பதிவும் இல்லை.

நான் சொல்லியோ நீ சொல்லியோ
தேசியத் தலைவன்
இந்த பாதையை தெரிவு செய்ததுமில்லை.

தலைவன் வகுத்த ஒப்பற்ற
கட்டுப்பாட்டை
மீறி நடக்க
எனக்கு எந்த அருகதையுமில்லை,
உனக்கும் அது பொருந்தும்.

இருந்தும் எப்படியோ
அவரவர்
எழுந்த மானத்தில்
தெருத்தெருவாக சங்கங்கள் திறந்து
கூவிக்கொண்டிருக்கிறோம்.

ஏதோ ஒரு
கலவரத்தின் அறி குறி
எனது சந்ததிக்குள் புகுந்திருப்பது மட்டும்
என்னால் உணரமுடிகிறது.

விடுதலைப்புலிகள்
நாமத்தை மாற்றி
எவரும் சங்கம் திறக்க துணியவுமில்லை.
அது முடியாது என்பதும் விதி
அதுதான் காலத்தின் கட்டளை .

அந்த நிதர்சனத்தை
உள்ளூர
நீயும் நன்கு உணர்ந்திருப்பாய்.
நானும் நன்கு உணர்ந்திருக்கிறேன்.

எனக்கும் உனக்கும்
தாய் நாடு
தமிழீழம்.

மொழியும் எங்களை பிரித்திருக்க முடியாது.
தலைவன் எமக்கு சொல்லித்தந்த
குறிக்கோள்
ஈழ சுதந்திரத்துக்கான
விடுதலை.

தலைவனின் கையடக்கத்துள்
நீயும் நானும் இருக்கும்வரை,
காற்றிடை கலைந்த
முகில் கூட்டங்கள் போல
பயணித்தாலும்,
மழைபோல் ஒன்றாக
சமர்களில் பொழிந்திருக்கிறோம்.

பின்
இன்றைக்கு மட்டும் ஏன்
எமக்குள்
எப்படி வந்தது இந்த முரண்பாடு.

மாவீரர்களே
நீங்கள் இன்று இருந்திருந்தால்
ஏன் போராட வந்தோம் என்று
கூனிக்குறுகி இருந்திருப்பீர்கள்.
நல்லவேளை நீங்கள்
மாவீரர்கள் ஆகிவிட்டீர்கள்.

உங்களையும் மண்ணையும்
பிரித்துப்பார்க்க
என்னால் முடியவில்லை.

தலைவனும்
அதைத்தான் எனக்கு சொல்லித்தந்தான்.
நானும் நீயும்
சிங்களவனும் தமிழனும் அல்ல,

நீயும் நானும்
ஒன்றுக்குள் ஒன்று.
உட்கார்ந்து பேசினால்
உடன்பாட்டுக்கு வரமுடியாதது
ஒன்றுமில்லை.

மாவீரர்களின் வாரத்தில்
சங்கங்களை பூட்டிவிட்டு ஒன்றுகூடுவோம்,
தலைவனின் கனவை மெய்ப்படுத்துவோம்.
மாவீரர்களை மனதார் கௌரவிப்போம்.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.
அதுவே தாரக மந்திரம்.

மற்றெல்லாம் "தந்திரம்"

ஊர்க்குருவி.

Tuesday, November 6, 2012

எமக்கு வீர முகவரியை தந்த போராளிகள் பற்றி எவரும் சிந்திப்பதாக தெரியவில்லை,

இனப்படுகொலை முடிந்து மூன்றாண்டுகள் ஓடிவிட்டது.    இருந்தும் பல மட்டங்களில் இன்னும் திருப்தி ஏற்பட்டதாகத்தெரியவில்லை.
செத்தவர்கள்,  தப்பி ஓடியவர்கள் போக,  மீதமுள்ளவர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஏதாவது வழி தேடவேண்டும்.  ஏதாவது மாற்றத்தை சர்வதேசம் பஞ்சாயத்து செய்து  ஈட்டித்தருமா என்று "போராடியவர்கள்"  வெளி உலகத்தில் நடப்பவை தெரியாமல் ஆகாயத்தை பார்த்து காத்திருக்கின்றனர்.   அதேநேரம் உள்நாட்டிலும் வெளி மட்டங்களிலும் தேர்வுசெய்யப்பட்ட உளவியல்ரீதியான வன்மங்களும் தலை கழுவி கவிழ்க்கும் தந்தரங்களும் சகல மட்டங்களிலும் தலைவிரித்தாடுகிறது.

காட்டுமிராண்டிகளின் தன்னிச்சையான தலையீடுகளால் சர்வதேச பஞ்சாயத்துக்கூட திசைதிருப்பப்பட்டு  வாய்தா தொடர்ந்து வம்பர்களின் கை ஓங்கிவிடும்மோ  என்று அச்சப்படும்வகையில் அனைத்தும் திட்டமிட்டு திசைதிருப்பப்பட்டு பயணிப்பதாகவே சம்பவங்கள் உணரவைக்கின்றன.  இந்த பஞ்சாயத்து மற்றும் கபட நாடகங்கள் முடிக்கப்படும் தறுவாயில் போராளிகள் ஓர் இருவராவது மிஞ்சுவார்களா என்ற கேள்விக்கு எவரிடமும் விடையில்லை.   போராளிகள் மறக்கப்பட்டுவிட்டனரோ என்ற பெரும் கவலையும்  எழும்பாமலில்லை.  முடிந்தவரை அனைத்து தளங்களிலும் ஏமாற்றுவேலை உளவியல் ரீதியாக திட்டமிடப்படுகின்றன. இது ஏன் கேட்பதற்கு ஆள் இல்லை என்ற இழக்காரமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.

மக்கள் பரம்பலை குறைப்பதற்க்காக மேற்கொள்ளும் ஸ்ரீலங்காவின் முதலாவது வேலைத்திட்டம் இராணுவ அடர்த்திமூலமும்,  சிங்கள குடியேற்றங்கள் மூலமும் செய்து முடிக்கப்பட்டுவிட்டது.  அதற்கு  தமிழ் அரசியற் கட்சிகளும்,   இந்திய கொள்கை வகுப்பாளர்களும்,   ஸ்ரீலங்காவின்   உயர் அரச அதிகாரிகளும் அனைத்து ஆதரவையும் வழங்கி நியாயப்படுத்தி விளம்பரப்படுத்துகின்றனர்.

தடை முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளில் கொல்லப்பட்டவர்கள், சித்தசுவாதீனமாக்கப்பட்டவர்கள் போக மீதமுள்ளவர்களை உள ரீதியாக சித்திரவதை செய்து சிதைத்து தலை கழுவி நாடு கடத்தும் முயற்சி அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டிருக்கிறது.  வேலைவாய்ப்பு என்ற பெயரில் கண்காணாத அரபி தேசங்களுக்கு நாடு கடத்தி  ஒருவருடன் ஒருவர் தொடர்பாடலை தவிர்த்து தனிமைப்படுத்தும் நோக்கமும் திட்டமிடப்பட்டிருக்கிறது,  இத்திட்டத்தின்மூலம் நாட்டில் ஆண்களை இல்லாமல் செய்யும் சூழ்ச்சியும் உளவியல் ரீதியாக வக்கிர நோக்கத்துடன்  வேகமாக  நடைபெறுகிறது.  இத்திட்டம் ஓரளவு   வெற்றிபெறும் சாத்தியமும் இருப்பதாகவே   உணரக்கூடியதாக உள்ளது. . தொடர் இராணுவ கண்காணிப்பு புனர்வாழ்வு என்றபெயரில் கொத்தடிமையாக இருக்காமல் எங்காவது இராணுவ பிரசன்னம் இல்லாத இடத்துக்கு சென்றுவிடலாம் என்ற வெறுப்பு மனநிலைக்கு போராளிகள் வருவதற்கு சூழல்கள் வழிவகுக்கும் என்றே நம்பலாம்.

தீர்வுத்திட்டம் ஒன்றை ஒருபோதும் கொடுக்க விரும்பாத சிங்கள இனவாதிகள்,   போராளிகளை தன்னிச்சையாக வெளியே விட்டுவிட்டால் அமைப்பு ரீதியாக மீண்டும் ஒன்றுகூடிவிடுவார்கள் என்ற அச்சமும்,  அரசியல் தஞ்சம் கிடைக்கக்கூடிய நாடுகளுக்கு சென்றடைந்து போர்க்குற்ற வாக்குமூலங்களை கொடுத்து சர்வதேச   அழுத்தத்துக்கு ஆளாக்கிவிடுவார்கள் என்ற அச்சமும் சேர்ந்து,  போராளிகளை தனிமைப்படுத்தி கண்காணாமல் அரபு தேசங்களுக்கு கிரையம் செய்யும் திட்டமும் உளவியல் அடிப்படையில் வகுக்கப்பட்டிருக்கிறது.  இதுபற்றி  நமது  பெரியவர்  சம்பந்தன்  ஐயா அறிந்தாரோ என்னவோ  யாமறியோம்.

2009 ம் ஆண்டிலிருந்து கணிசமான மக்கள் கடுமையான கடல்ப்பயணத்தின் ஆபத்தை பொருட்படுத்தாமல் அவுஸ்திரேலியாவை நோக்கி புலம்பெயர்ந்து படையெடுக்கத்தொடங்கியிருந்தனர், ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவும் அகதிகளுக்கு ஓரளவு ஆதரவாக நடந்துகொண்டிருந்தது. அந்த நோக்கத்தையும் சிதைக்கும்வண்ணம் ஸ்ரீலங்கா அரசு பொய் குடியேற்றவாசிகளை திட்டமிட்டு அவுஸ்திரேலியாவுக்குள் அனுப்பி உண்மையான அகதிகளுக்கும் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கிடைக்காதவண்ணம் பல சதிகளை செய்து வருகிறது.  அச் சதித்திட்டத்தில் ஜனாதிபதி மஹிந்தவின் மகன் நாமல் ராஜபக்க்ஷவும் கோத்தபயவும் ஸ்ரீலங்கா புலனாய்வுத்துறை,   மற்றும் கடற்படையுடன் இணைந்து செயற்பட்டதாக அறியப்பட்டது,   அதுபற்றிய செய்திகள் பல பத்திரிகை ஊடகங்களில் வெளிவந்தன.

இனத்துவேஷம் காரணமாக சிங்கள அரசு அனைத்து கீழ்மட்டமான   உத்திகளையும்  கையாளுகிறதென்று பார்த்தால். தமிழ்நாட்டு சில அரசியல் கட்சிகளும்,  சில பத்திரிகைகளும் தொடர்ந்து விஷமம் செய்துவருகின்றன.  

அதில்   உச்சக்கட்டமாக த  ஹிந்து, தினமலர்,  ஆகிய பத்திரிகைகள் ஆரம்பந்தொட்டே வெளிப்படையாக நஞ்சை கக்கி வந்திருக்கின்றன,  திமுகவின் கூட்டாளி பத்திரிகையான நக்கீரன் நல்லவன்  போல நடித்து புனைக்கதைகளை வெளியிட்டு கருணாநிதியின் அதே தந்திர விஷமம் செய்து பணமீட்டியும் வந்தது.   ஆனந்தவிகடன் என்ற பத்திரிகை வன்மத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் அவ்வப்போது சில அவதூறு செய்திகளை பூசி மெழுகி பிரசுரித்து வந்திருந்தாலும்,   இன்றளவில் ஆனந்தவிகடனின் முகமூடியும் கழற்றப்பட்டு சுயரூபம் வெளிவந்திருக்கிறது.

"நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி!" என்ற தலைப்பில் வக்கிர உணர்வுடன் ஆனந்தவிகடனில் எழுதப்பட்ட கட்டுரை காழ்ப்புணற்சியில் திட்டமிடப்பட்டு போராட்டத்தை கொச்சைப்படுத்தி சேறடிப்பதற்கு என்று புனையப்பட்ட ஒன்று என்பது அக்கட்டுரை எழுதிய நேர்த்தியும் வஞ்சகமான கால்வாரல் உத்தியும் மிதந்து நிற்கிறது .

அதிகாரங்களால் செய்ய முடியாத வஞ்சகத்தின் எச்சங்களை நிறைவுசெய்யும் நோக்கோடு வஞ்சகமும்  வக்கிரமும்,  எழுத்துமூலம் வடிப்பட்டிருக்கிறது.   தமிழக மக்களின் போராட்ட ஆதரவு உணர்வுகளை சிதைத்து நீர்த்துப்போகச்செய்து    இந்தியாவின் கொள்கையை   நியாயப்படுத்தும் உத்தியும். ஆனந்தவிகடன் மூலம் நரித்தனமாக சரிக்கட்டப்பட்டிருக்கிறது.

அதிகாரவர்க்கம்,   புலனாய்வாளர்கள்,   கொள்கைவகுப்பாளர்கள்   இப்படி ஒரு கீழ்த்தரமான உத்தியை கையாள நினைத்திருந்தாலும் உள்ளூர ஆனந்தவிகடன் பத்திரிகைக்கும் போராட்டத்தையும் போராளிகளையும் கொச்சைப்படுத்துவதில் உடன்பாடு குறைவில்லாமலே இருந்திருக்கிறது.  வியாபாரத்துக்காக தமிழக பத்திரிகைகள் இப்படியான செய்திகளை இன்று மட்டுமல்ல  2009ன் பின் பல சமயங்களில் நானும்கூட என்னும் உத்தியில் உளவியல் கால்வாரலை செய்தே வந்திருக்கின்றன, 2008,   2009 களில் நக்கீரன் ஒரு ஈழப்பத்திரிகைபோலவே தன்னிச்சையாக செயற்பட்டு கற்பனை கதைகள் பலவற்றை வெளியிட்டு வந்தது.

ஆனந்தவிகடன் என்ற பத்திரிகை கீழ்த்தரமாக இப்படி எழுதி வயிறு வளர்க்கவேண்டுமானால் நேரடியாக ஸீ தமிழ் தொலைக்காட்சியுடன் தொடர்புகொண்டு    "சொல்லுவதெல்லாம் உண்மை"  நிகழ்ச்சி தயாரிப்பாளர்களை அணுகினால் அந் நிகழ்ச்சியில் தினம் தினம்  பகிரங்கப்படுத்தும் நிறைய பாலிய வக்கிரங்கள் மிருகத்தனமான சமூகச்சீர்கேடுகளை  கூடிய ஆதாரங்கள் படங்களுடன் தினமும் வெளியிடலாம்.  செய்திக்கும் பஞ்சமில்லை,  இந்தியாவில் நடக்காத பாலியல் வக்கிரங்கள் சமூகச்சீர்கேடுகளா வேறு எங்கும் நடந்துவிட்டன.

ஒருவேளை அப்டித்தான்  ஒரு போராளிக்கு மிருகத்தனமான   இராணுவத்தால் சீரழிக்கப்பட்டு  ஒரு துர் நிலை ஏற்பட்டிருந்தாலும் நூற்றாண்டு பாரம்பரிய கொண்ட பத்திரிகை என்று தம்பட்டமடிக்கும் விகடன்   ஒரு விடுதலை பெண் போராளிபால் அணுகும் முறை இதுவல்ல என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

வேற்று நாட்டில் வேற்று இனத்தவர்களால் நடத்தப்படும் சனல் 4,   நடந்துகொண்ட நாகரீகத்தை இவர்கள் எப்போ கற்றுக்கொள்ளப்போகிறார்கள். ஈழத்தமிழர்களுக்கு எதிரி சிங்களவன் மட்டுமல்ல   தமிழ் நாட்டில் சிங்களவனை விட கொடியவர்கள் இருக்கின்றார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று, அந்த பத்திரிகையின் பெயரை எழுதவே அருவருப்பாக இருக்கிறது.  அனுதாபப்பட்டு கழிவிரக்கத்தை வெளியிடுவதுபோல அப்பட்டமான காழ்ப்புணர்ச்சியாகவே அந்த கட்டுரை நெஞ்சத்தில் அனலை கொட்டியிருக்கிறது.

ஈழப்போராட்டத்திற்கு தற்போதய தோல்வி என்பது நிரந்தரமானதல்ல. நாம் பலமாக இருந்தபோது இந்த வஞ்சகர்கூட்டம் எப்படி நடந்தது என்பதை நினைத்துப்பார்க்க துன்பத்திலும் சிரிப்பு வருகிறது.

ஒன்றை மட்டும் இந்த வஞ்சகர்களுக்கு தெரிவிக்கமுடியும். ஈழம் ஒன்று ஸ்ரீலங்காவிலிருந்து பிரியும்வரை களம் ஒன்று இருந்துகொண்டேயிருக்கும்.  என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள முடியும்.

எந்த வடிவத்திலும் துரோகிகள் எம்முடன் கூட இருந்து செயற்படுவர் என்பதை தலைவர் எம் மக்களுக்கு மிகச்சரியாகவே புரியவும் வைத்திருக்கிறார். 

30 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் போராட்டம் நடந்து வந்திருக்கிறது,  தாயகத்திலிருந்த மக்கள் மட்டுமல்லாது பல்லாயிரம் மைல்களுக்கப்பால் புலம்பெயர் தேசங்களில் சுதந்திரமாக வாழும் இரண்டு மில்லியன் வரையினாலான மக்கள் ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக விடுதலை நோக்கி பயணப்பட்டுள்ளனர் இங்கு எவரும் பதவிக்காகவோ பட்டத்திற்காகவோ போராட்டத்திற்கு சாமரம் வீசி நிற்கவில்லை. உணர்வு ரீதியாக தலைவனின் கொள்கையை ஏற்று பயணித்திருக்கின்றனர். பொய் பிரச்சாரத்தை அள்ளிவிட்டு   ஐந்து வருட தேர்தல் முறைமையில் தேர்ந்தெடுக்கும் ஒரு அட்டைக்கத்தி கலாச்சாரம் ஈழத்தில் நிகழ்ந்திருக்கவில்லை.

ஒரு காலத்தில் சினிமா பாடலில்க்கூட விடுதலை புலிகளை,   போராட்டத்தை உருவகப்படுத்தி  கருத்துசொல்ல ஒருவரும் விரும்பியிருக்கவில்லை,   அப்படித்தான் தலைவரின் கொள்கை கோட்பாடுகள் அமைந்திருந்தன.  இது ஒன்றும் கருணாநிதியின் அடுக்குமொழி வசனத்தில் வளர்ந்த இயக்கமல்ல.  உணர்விலும் சத்தியத்திலும் உறுதியிலும் வளர்க்கப்பட்ட பேரியக்கம்,  தலைவனின்  தலையாய பண்புகளும் அதைத்தான் ஒவ்வொரு மனிதனிடமும் குடிகொண்டிருக்கிறது.

அப் பத்திரிகையின் கட்டுரையில் பின்னணியில் நிச்சியம் அரசியல் பின்னணியுடன் இந்திய புலனாய்வுத்துறையான றோவின் திசை திருப்பும் வஞ்சகமும் ஒருசேர இருப்பதை உணரக்கூடியதாக உள்ளது,  றோவின் தலையீடு ஏற்கெனவே அறியப்பட்ட அனுபவம் போராட்டத்துக்கு  உண்டு.  விகடனுக்கு சோரம்போனாலும் பணம் பிரதானமாக தெரிந்திருக்கிறது..

அடுத்து அழையா விருந்தாளி முத்துவேல் கருணாநிதியின் நகைச்சுவைப்பகுதிக்கு வரவேண்டிய தேவை இருக்கிறது.

ஈழத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக, "டெசோ' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், தி.மு.க., கருத்துக்கள் அடங்கிய ஆவணத்தை, ஐ.நா., துணை பொதுசெயலர் மற்றும் ஐ.நா., மனித உரிமை ஆணையத்திடம், கட்சியின் பொருளாளர் ஸ்ராலின், பார்லிமென்ட் குழு தலைவர், டி.ஆர்.பாலு ஆகியோர் ஒப்படைத்துள்ளனர்.

இதற்கு முன், 1961ல், தூத்துக்குடி தி.மு.க., பொதுக்குழுவில்,   ஈழத் தமிழர்களுக்காக நிறைவேற்றப்பட்டத் தீர்மானம், 1985ல் நடத்தப்பட்ட, ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தின் நகல்கள் ஆகியவற்றை, ஐ.நா., சபைக்கு அனுப்பியுள்ளோம்.  ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றிய புகைப்படங்கள் அடங்கிய, "சிடி'யையும் ஐ.நா., சபையில் அளித்துள்ளோம். ஈழத் தமிழர்களின் வாழ்வில் புதிய ஒளியை இம்முயற்சி ஏற்படுத்தும் என, நம்புகிறோம்.

ஐ.நா., சபையிடம் ஒப்படைத்துள்ள ஆவணத்தில், "ஈழத் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தி, அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப மறுவாழ்வை முடிவு செய்ய வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளோம். பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு, சர்வதேச அளவில் அழுத்தம் கொடுக்கவும் நடவடிக்கை எடுப்போம்.

"டெசோ' மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள் பற்றி, மத்திய அரசுக்கு நன்கு தெரியும். எனவே, ஈழத் தமிழர்களின் நல்வாழ்வுக்கு, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கை, "டெசோ' மாநாட்டுத் தீர்மானத்தில் இடம்பெறவில்லை.ஆனால், ஈழத் தமிழர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, அவர்கள் மத்தியில் நடத்தப்படும் பொது வாக்கெடுப்பின் அடிப்படையில், தனி நாடு உருவாக்கலாம். பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை, லண்டனில் நடைபெறும் "இலங்கை தமிழர்கள் மாநாட்டிலும்"  வலியுறுத்துவோம்.இவ்வாறு, கருணாநிதி கூறினார்.

கருணாநிதி குறிப்பிடும் கருத்து மட்டும் எவராலும் புறக்கணிக்க முடியாதது என்பது உண்மையே,   நடைமுறையும் வேறு விதமாக இல்லை என்பதும்  நூறு வீதம் ஏற்றுக்கொள்ளக்கூடியாவையே.  ஆனால்……………... சொல்லியவர் யார் என்று பார்த்தால் முடிவு எப்படி அமையும் என்பதை ஆராய்ந்து பார்க்கத்தேவையில்லை.  இந்த செய்தியை ஈழத்து சிறு குழந்தைகள் கேட்க நேர்ந்தால் உடனடியாக ஓடிச்சென்று bunker க்குள் படுத்துக்கொள்ளும்.

1958,தொடக்கம்   2012 டெசோ வரை பலநூறு தீர்மானங்களை இயற்றியதாக குறிப்பிடும்   அவர்   ஒரு  தீர்மானத்தையாவது  திரும்ப  ஒருமுறை வாசித்தாவது பார்த்திருப்பாரா என்று பார்த்தால் பூய்ச்சியம்தான் பதிலாக கிடைக்கும்.  ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதும் 31 நாட்கள் விடுப்பெடுத்து பின் அவர் கையில் எடுப்பது என்னவோ ஈழ அரசியல் பாசம்தான்.  ஆட்சி கிடைத்துவிட்டால் அவர் என்ன செய்வார் என்பதை 2008,  2009 ம் ஆண்டை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் படுகொலைகளை எண்ணிப்பார்த்தால் அவராது தீர்மானங்களின் ஆழம்,  வண்டவாளம்  நன்கு புரியும்.

கருணாநிதியின் அரசியல் வளர்ச்சியின் மூலவேரே இப்படியான கருத்துக்களை முன்வைத்து தடைதாண்டுவதுதான்.   அதை கருணாநிதியின் கடந்தகால வழித்தடம் பிசுறின்றி எடுத்துக்காட்டுகிறது.  1961ம் ஆண்டு தமிழர்களுக்காக தூத்துக்குடியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஐம்பது வருடங்கள் கடந்தும் கை துடைக்கவும்  உதவியிருக்கவில்லை.  ஆனாலும் மூன்று நான்கு இலட்சம்பேர் கொல்லப்பட்டபின்னும் எந்தக்கூச்சமும் இல்லாமல்  திமுகவை நியாயப்படுத்துவதற்கு புள்ளி விபரமாக 1961 ஆண்டு 1985 ஆண்டு 2012 டெசோ வரை தடைதாண்டல் நிகழ்ச்சிகள் கூச்சமின்றி ஞாபகப்படுத்தப்படுகிறது.   ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றிய புகைப்படங்கள் அடங்கிய,  சீடி, குறுந்தகடுகள் ஐநா சபைக்கு அனுப்பியிருப்பதாக குறிப்பிடுகிறார்.  அந்த சீடி க்களை கருணாநிதி போட்டு பார்த்தாரா என்பது தெரியவில்லை.   கருணாநிதியின் கைங்கர்யத்தில் நடந்த அந்த படுகொலை சிடிக்களை கருணாநிது ஒருமுறை போட்டு பார்த்துவிட்டு ஐநாவுக்கு கொடுத்து அனுப்பியிருக்கலாம். அவரது நெஞ்சுக்கு நிம்மதியாக  இருந்திருக்கும்.

2009ல் கருணாநிதியை  தோலுரிக்கும் விதமாக மக்கள் தொலைக்காட்சியும் பல இணையத்தளங்களும் அந்த சிடிக்களை கருணாநிதிக்கு எதிராக வெளியிட்டு   மண்  வாரி  திட்டி தீர்த்தன,   அப்போ காவல்த்துறையை கொண்டு மக்கள் தொலைக்காட்சியை முடக்க முயற்சித்தவர் பகவான் கருணாநிதி,  இன்று வெட்கம் குற்ற உணர்வு எதுவும் இல்லாமல் தனது அரசியல் மீட்சிக்காக சிடிக்கள் ஐநா மன்றத்துக்கு அனுப்பியிருப்பதாக வேஷம் போடுகிறார், ஆனால்  கருணாநிதி  சம்பந்தப்பட்ட  அனைத்து போர்க்குற்ற வீடியோ ஆதாரங்களும் சனல் 4 முலமும் வேறு வழிகள் மூலமும் ஏற்கெனவே ஐநா பெற்றுவிட்டது.

2009ல் நாம் தமிழர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மற்றும் வைகோ,  நெடுமாறன்  அவர்கள் இதுபோன்ற குறுந்தகடுகளை தமிழக மக்களுக்கு வினியோகிக்க முற்பட்டபோது, அவை தனக்கு எதிரானது என்பதை தெரிந்து அனைத்தையும் பறிமுதல் செய்து சீமானை தேசியப்பாதுகாப்புக்கு துரோகமிளைத்தவர் என்று தேசத்துரோகியாக உருவகப்படுத்தி சிறையில் அடைத்தவர் இதே  காத்தமுத்து கருணாநிதி.

கருணாநிதியின் டெசோ தீர்மானங்கள் என்ன தாக்கத்தை ஈழத்தமிழர்களுக்கு ஏற்படுத்துகிறதோ இல்லயோ கருணாநிதிக்கும் திமுகவுக்கும் இடையில் இன்று மலைபோல் திரண்டிருக்கும் தடை சற்றேனும் விலகுமென அவர் எதிர்பார்க்கிறார்.  விளிம்பு நிலையில் இருப்பவர்களும் புதியவர்களும், மறக்கும் தன்மை கொண்டவர்களும்  கருணாநிதியின் கண்கட்டு வித்தை விளையாட்டில்  ஈர்க்கப்பட வாய்ப்பு இருக்கிறது.  அதனால் வீழ்ச்சியிலிருந்து மீண்டுவிடலாம் என அவர் திட்டமிட்டு எதிர்பார்க்கிறார்.  அதுதான் காலாகாலமாக கருணாநிதியின் கவசமாகவும் இருந்து வருகிறது.  கருணாநிதி எடுத்துவைத்திருக்கும் டெசோவின் தீர்மானம் ஒன்றும் புதிதானதுமல்ல.  Amnesty international,  international crisis group,  UN Human rights  council  ஆகிய அமைப்புக்களும் ஐநா சபையும் அதைத்தான் வலியுறுத்துகின்றன.

கருணாநிதி தனது தப்பித்தலுக்காக எதையும் செய்யக்கூடியவர் என்பது ஒருபுறம் இருந்தாலும் அவர் கடைசிகாலத்தில் மனம் மாறிவிட்டாரோ என்ற ஐயுறவும் லூசுத்தனமான பலரை இரண்டும் கெட்டான் மனநிலைக்கு தள்ளி குளப்பியிருக்கிறது.  இதுகூட கருணாநிதிக்கு கணிசமான வெற்றியே.   தொடர்ந்து கருணாநிதிக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்காவிட்டால் அவர் இதே கொள்கையை (தடைதாண்டல் உத்தியை)  இன்னும் கடுமையாக்கி  காவடி எடுத்து தொடருவார் அந்த கட்டத்தில் தமிழக அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பது அனைவரும் அறிந்ததே. 

ஐநா சபைக்குள் ஒரு கோரிக்கை மனுவை உறுப்பு நாடு அந்தஸ்து அல்லாதோர் நேரிடையாக கொண்டு  சேர்ப்பது என்பது சற்று சிரமமான காரியமே.

சாதாரண ஒரு தனிமனிதன்  ஒரு மனுவை எழுதி பதிவுத்தபாலில் ஐநாவுக்கு அனுப்பிவைத்தால் அந்தமனுவின் முக்கியத்துவம் பொறுத்து அதற்கான பதிலை ஐநா அந்த மனிதனுக்கு அனுப்பி வைக்கக்கூடும்.    உறுப்புரிமைகொண்ட ஒரு நாட்டின் அங்கீகாரத்துடன்  பதிவுசெய்யப்பட்ட ஒரு வெகுஜன அமைப்பு ஒரு சமூகம் சார்ந்து முக்கியமான ஒரு கோரிக்கையை கையளிக்க விரும்பினால் ஐநா மன்றத்திடம் அனுமதிகேட்டு முறையிடலாம்,  கூறிப்பிட்ட விடயத்தின் அவசியம் முக்கியத்துவம் பரிசீலிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்படும்.  அந்தவகையில் ஈழப்பிரச்சினை ஐநாவால் அறியப்பட்ட ஒன்று என்பதால் டெசோ சார்பாக முறைப்பாடு கையளிக்க கேட்கப்பட்ட வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஐநாவின் வரவேற்பு மண்டபத்தில் (information hall)  டெசோ தீர்மானம் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

டெசோ தீர்மானம் ஐநாவுக்கு கையளிக்கப்பட்டுவிட்டதால் தீர்மானத்தில் முன்மொழியப்பட்ட விடயங்களை ஐநா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும் என்றோ குறிப்பிட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றோ எந்த விதியும் இல்லை.  டெசோவின் தீர்மானங்கள் இந்தியாவின் ஒப்புதலுடன் அதற்கான பாதையூடாக ஐநாவை சென்றடைந்தால் அந்த தீர்மானத்துக்கு இராசதந்திர அந்தஸ்து கிடைக்கும்.  இந்தியாவில் உள்ள ஒரு அமைப்பு,  இந்திய ஆட்சி அதிகாரத்தில் பங்காளியான திமுக ஈழ விடுதலையில் கரிசினையான உடன்பாடு இருந்திருந்தால் எப்பாடு பட்டாவது டெசோவின் தீர்மானத்தை இந்திய அரசின் ஒப்புதலுடன் ஐநா மன்றத்தில்  கொடுத்திருக்கவேண்டும்.

இந்திய நாட்டை நிர்வகிக்கும்   பல மந்திரிகளை தன்னகத்தே கொண்ட திமுக தலைவர் கருணாநிதி.   மத்தியில் கொள்கைகளை தீர்மானிக்கவல்ல செல்வாக்குமிக்க பங்காளிக்கட்சியாகவும் இருந்துவருகிறார்,  குடும்ப பிணக்குகளை சீர் செய்வதற்காக பலமுறை மத்திய அரசை மிரட்டி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த சம்பவங்களும் நிறைய உண்டு.   அப்படியிருக்கும் பட்சத்தில் ஏன் டெசோ தீர்மானத்தை முறைப்படி மத்திய அரசின் ஒப்புதலுடன் இராசதந்திர தகுதிக்கு கொண்டுவர முயற்சிக்கவில்லை.  மத்திய அரசுக்கு டெசோவின் தீர்மானம் அனைத்தும் தெரியும் என்று ஊக அடிப்படையில் பூசி மெழுகி நியாயப்படுத்தியிருக்கிறார்.

வேலைத்திட்டம் செயற்பாடு எதிர்மறையாக இருப்பினும்,   டெசோ அடிப்படையில் தமிழீழத்துக்கான ஆதரவு கொள்கையை மூலமாகக்கொண்ட ஒரு அமைப்பு என்பதே கருணாநிதியின் கூற்று.   அப்படியான அமைப்பு தனது விருப்பம் ஒன்றை  கோரிக்கையாக வைப்பது இயல்பானதே,  இதே கருத்துப்பட்ட பல கோரிக்கைகள் ஏற்கெனவே ஐநாவின் பார்வையில் இருக்கிறது,   எனவே டெசோ தீர்மானத்துக்கு  ஐநா எவ்வளவு முன்னுரிமை கொடுக்கும் என்பதும் தெரியவில்லை  டெசோ என்ற அமைப்பு பன்முகப்பட்ட சமூக  பிற்படுத்தப்பட்டோர்  நலன்புரி அமைப்பாக இருப்பின் அதன் கோரிக்கையை ஐநா  வேறு வகையாக பாற்பதற்கு சந்தற்பம் உண்டு

டெசோ மாநாட்டில் முன்மொழிந்த   தீர்மானங்கள் மத்திய அரசுக்கு தெரிகிறதோ இல்லையோ ஈழத்தமிழர்கள் அனைவரும் அறிந்ததே.

அடிப்படையில்  (திமுக)  கருணாநிதி ஈழ இன அழிப்பின்போது நேரிடையாக வகுத்த பாத்திரம் எவ்வகையானது என்பது பற்றியும்,  மத்திய அரசு நடந்துகொண்ட முறைகள் பற்றியும் ஒவ்வொரு ஈழத்தமிழனும் வேதனையுடன் அறிந்துதான் இருக்கின்றனர்,  இந்திய மத்திய அரசின் ஈழத்தமிழர் பற்றிய வெளியுறவுக்கொள்கை சென்றமாத நிருபாமாவின் பேட்டிவரை வெளிப்படையாக அறியப்பட்டே இருக்கிறது.   திமுக பற்றிய கொள்கை என்பதை விடவும் தனிப்பட்ட முறையில் கருணாநிதி எப்பேற்பட்ட கொள்கையை   ஈழத்தமிழர்பால் கொண்டிருக்கிறார் என்பதற்கு 1/2 நாள் உண்ணாவிரதம் மட்டும் சான்று அல்ல,  தியாகி முத்துக்குமரன் முதல் 19 பேர் தீயில் கருகியபோதும்,  தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் அன்னை மருத்துவ உதவிக்கு தமிழகம் வந்தபோதும்   கருணாநிதியின் எதிர்வினை எப்படி இருந்தது என்பதை அனைத்தும் உலகம் அறிந்துகொண்டதே.  அது திரும்பத்திரும்ப பேசப்பட்ட விடயமாக இருந்தாலும் விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கும் மறதிக்காரர்களுக்கும்  கருணாவின் ஆசைக்கதைகளை கேட்டு ஏமாறும்நிலையில் இருப்பவர்களுக்கும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டுவது தேவையான ஒன்றாகவே படுகிறது.

அடுத்து லண்டனில் நடைபெறும் உலகத்தமிழர் மாநாடு என்பதைக்கூட கருணாநிதி "உலகத்தமிழர் மாநாடு" என்று உச்சரிக்க விரும்பவில்லை "இலங்கை தமிழர் மாநாடு" என்றே நக்கலாக குறிப்பிட்டு விளித்திருக்கிறார் என்பதையும் லண்டன் மாநாட்டுக்கு அழைப்பு அனுப்பி வரவேற்பவர்கள் புரிந்துகொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றனர்.   இருந்தும் அந்த மாநாட்டில் தனது கட்சி ஆளுமையை செலுத்தி 'தடைதாண்டும்'; உத்தியை விரிவுபடுத்த பிரயத்தனப்படுகிறார் என்பதையும் நாம் ஏமாளிகளாக ஏற்றுக்கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம்.

நீதியான,   நடுநிலையான,  ஒருதலைபட்ஷமில்லாமல் விவாதிக்கவல்ல தமிழர்களின் அரசியல் கட்சிகள்,  முற்போக்கு அமைப்புக்கள், பிற மொழி அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் உலகத்தமிழர் மாநாட்டில் பங்குபற்றவேண்டும் என்பது அனைவரினதும் அவாவாக இருக்கும்,  ஆனால் காலையில் எனது குழந்தைகளை கொன்றவனுக்கு,  எனது தாயை சகோதரியை சீரழித்தவனுக்கு மாலையில் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்திருப்பது.  அதிர்ச்சியளிக்கிறது.  தமிழர்  சமூகத்தின்  ஒரு அரசியல் கட்சி என்பதினால் கருணாநிதியின் கட்சிக்கு அழைப்பிதழ் அனுப்புவதாக இருந்தால் பாகுபாடில்லாமல் உலகத்தமிழர் மாநாடு என்ற சுலோகத்தின்கீழ் இலங்கையில் இருக்கும் தமிழர் கட்சி என்று மந்திரி பதவியையும் வகிக்கும் டக்கிளஸ் தேவானந்தாவின் கட்சிக்கும், கருணா,  பிள்ளையான் ஆகியோரின் கட்சிகளுக்கும் அழைப்பிதழ் அனுப்புவதுதான் நியாயமானதாக இருக்கும்.  அப்படியில்லாமல் அவர்கள் துரோகிகள் என வகைப்படுத்தப்படுவார்களாயின் கருணாநிதிக்கு எந்த அடிப்படையில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருக்கிறது,   கருணாநிதி தனது ( தடைதாண்டலுக்காக)   குடும்ப சிக்கல் தீரும் நேர்த்திக்கடனுக்காக டெசோ என்ற காவடியை தூக்கி உட்கார்ந்து ஆடுகிறார்,  என்பதால் நேற்றய முள்ளிவாய்க்கால் படுகொலைகள் எதிலும் கருணாநிதி சம்பந்தமில்லாதவர் என்றே   ஆகிவிடுமா??   அல்லது நேற்றைய நிகழ்வுகள் அனைத்தும் நடக்கவில்லை என்றே கொள்ளவேண்டுமா???,  அல்லது மறக்கப்பட்டுவிட்டதா????.

இந்த நடைமுறை ஒரு வளர்ப்பு பிராணியின் குணாம்ஷத்தை ஞாபகப்படுத்துகிறது.

ஈழதேசம் இணையத்திற்காக.

கனகதரன்.