மூன்றாம் தலையீடற்ற வகையில் உள்நாட்டு அரசியல் மட்டத்தில்   காத்திரமான முடிவொன்றை எட்டி   ஸ்ரீலங்கா  இன முரண்பாட்டுக்கான அரசியற்தீர்வு எதனையும்  இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் ஈழத் தமிழர்கள் எட்டிவிட முடியாது.
இந்த உண்மை இலங்கை அரசியல்வாதிகள்,  ஆய்வாளர்கள் மட்டுமல்லாது சர்வதேச அரசியல் விஞ்ஞான ஆய்வாளர்கள்வரை களங்கமற புரிந்துகொண்டுள்ள விடயம்.

ஏன் உள்நாட்டுக்குள் ஒரு அரசியல் தீர்வை முன்னிறுத்தி முடிவுக்கு வரமுடியாமலிருக்கிறது என்பதற்கு பல சிக்கலான காரணங்கள் துருப்பிடித்து பிரச்சினையை  மூடிக்கிடந்தாலும்,   இரண்டு பெரிய காரணிகள் பிரச்சினையை சரியாக அணுகி படிந்து கிடக்கும் கறளை அகற்ற தடையாக என்றைக்கும் இருந்துகொண்டிருக்கின்றன.  ஒன்று சிங்கள ஏகாதிபத்தியவாதிகளின் கடுமையான துவேஷ வக்கிர சிந்தனை,.  இரண்டாவது தமிழர்களின் அரசியலை வழிநடத்தும் அரசியல்வாதிகளின் சந்தற்பவாத ஆளுமையற்ற இயலாமை.

நடந்து முடிந்த காலங்களை கடந்து,   நடைமுறையிலுள்ள இன்றைய நிகழ்காலத்தை எடுத்துக்கொண்டால் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை எட்டவேண்டிய வேலைத்திட்டத்தை கடைசி மூன்றாண்டுகளாக தமிழர் தேசியக்கூட்டமைப்பு என்ற அரசியற் கட்சியிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.   தேசியக்கூட்டமைப்பின் வேகம் வாள் வீச்சின் திறன்  பொறுத்து மக்கள் அடுத்த தீர்மானத்துக்கு வரமுயற்சிப்பர்,  அந்தக்கட்சியால் முடியாதபட்ஷத்தில் வேறு ஒரு அரசியல்ச்சக்தியை நோக்கி மக்கள் திரும்புவதும் தவிர்க்கமுடியாததாகும்.   இன்று தேசியக்கூட்டமைப்பு இந்த இடத்தில் இருப்பதற்கு ஈழத் தமிழ்மக்களும்,  ஈழ போராட்ட வரலாறுமே காரணமுமாகும்.

கடந்த காலத்தில் தமிழர்களின் அரசியல் நகர்வுகள் எப்படி நகர்ந்து வந்திருக்கின்றன இனி என்ன செய்யலாம் என்பதை நன்கு ஆராய்ந்து,   அதற்கேற்ப சுய விருப்பு வெறுப்புக்களுக்கு இடமளிக்காமல் நுணுக்கமாக காய் நகர்த்தி அது சார்பாக சாதகமாக திரண்டுவரும் புறச்சூழல்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி தாழ்வுமனப்பாண்மை என்ற நோய்க்கு இடங்கொடுக்காமல் காத்திரமான இராசதந்திர மதிநுட்பத்துடன் பிரச்சினையிலிருந்து வெளிவேறவேண்டும்.  அத்தகைய திறன்  கூட்டமைப்புக்கு இருக்குமேயானால் ஒளிய  சரியான புள்ளியை அடைய முடியாது.  இதை அனைவரும் அறிவர்.

2002 ல் பிறந்த தேசியக்கூட்டமைப்புக்கு அந்த ஆண்டிலிருந்து இருந்து 2009 ம் ஆண்டுவரை பாராளுமன்ற கூட்டத்தில் ஒப்புக்கு பங்குபற்றியது தவிர வேறு எந்த ஒரு காத்திரமான மாற்றுச்சிந்தனையையும் அக்கட்சியால் முன்னெடுக்கப்பட்டு அறிமுகப்படுத்த முடியவில்லை.  தகமை பொறுத்து இயற்கை எந்த வேலைத்திட்டத்தையும் அக்கட்சிக்கு கொடுக்கவில்லை என்றே படுகிறது. அது ஏன் எதற்காக அப்படிநடந்தது என்று சிந்திக்கும்போது அக் கட்சியின் தலைமையின் ஆளுமை அந்தளவுக்குத்தான் இருந்திருக்கிறது என்று இன்றைக்கு தெரியவருகிறது.

இலங்கையின் வரலாற்றில் தமிழர்களுக்கு மொழி வாரியாக,  அரசியல் பொருளாதார வாரியாக நிறைய அடிப்படை கொடுப்பனவுகள் தீர்க்கப்படவேண்டும் என்ற கோசம் உலக அரங்குக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிகரிக்கப்பட்டது,    தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்,  என்ற ஒரு மனிதனின் தலைமத்துவ சிந்தனையால் மட்டும்  என்றே வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆயுதம்,   பயங்கரவாதம்,   தீவிரவாதம்,   என்ற சொற்றோடர்கள் உலக நாடுகள் சிலவற்றால் பாவிக்கப்பட்டாலும்,  ஆயுதம் தீவிரவாதம் ஏன் உருவானவை என்ற கேள்வியும் கூடவே எழும்பவேண்டும்.   தேவையில்லாமல் ஒரு சமூகம் ஆயுதப்போராட்டத்தில் இறங்கிவிடவும் முடியாது,  அந்தக்கேள்வியையும் சர்வதேசம் ஆராயாமல் இல்லை என்பதும் ஈழ அரசியலில சர்வதேசத்தலையீடுகள் சர்வதேசத்தின் மத்தியஸ்த பங்களிப்புக்கள் மிகச்சரியாகவே எடுத்துக்காட்டுகின்றன.

விடுதலைப்புலிகள் இயக்கம் அடிப்படையில் கொள்கையற்று பயங்கரவாத செயற்பாட்டையே முதன்மையாக கொண்டிருப்பின் சர்வதேசம் புலிகளை அழிப்பதற்கே முன்னுரிமைகொடுத்து அணிவகுத்திருக்கும்.   அங்கு அரசியல் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு உலகத்தில் இடமிருந்திருக்காது,   உண்மையில் இது பயங்கரவாதம்தான் என்றிருப்பின் சர்வதேச வல்லாதிக்கங்கள்  வேறு விதமாக புலிகளை சந்தித்திருக்கும்  என்பதை கவனிக்கவேண்டும்,  இறுதி யுத்தம்வரை சர்வ தேசத்திலுள்ள சில நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவாக ஆயுத பரிவர்த்தனையில் ஈடுபட்டிருந்திருந்தாலும் தமிழர்களுக்கான இனப்பிரச்சினை,   சுய நிர்ணயம் என்ற பதம் ஒப்புக்கொள்ளப்பட்டு அதுபற்றியே உலக பெரும் நாடுகள் இனப்பிரச்சினை என்றே பேச்சுவார்த்தை பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது.

2009 மே போர் முடிந்து சுமூகமாக நாடு இருப்பதாக கூறப்படும் இன்றைக்கும் தொடர்ந்து அதையொட்டி போர்க்கால பேச்சுவார்த்தை எச்சத்தின் அடிப்படையிலேயே உலகங்கள் இலங்கையின் அரசியற் தீர்வைப்பற்றி பேசிக்கொண்டிருக்கின்றன.  ஈழத்தமிழர்கள் அனைவரும் அப்பேற்பட்ட ஒரு பேச்சுவார்த்தையைத்தான் முன்மொழிந்து பின்பற்றிவருகின்றனர்.  நாளையும் அதை நோக்கித்தான் ஈழ அரசியல் நகரவேண்டும்,   அப்படியில்லாத ஒன்றை எவரும் கவனத்தில் எடுக்கப்போவதுமில்லை, மக்களுக்கு நன்மையளிக்கப்போவதுமில்லை.

உலக நிலவரங்கள் அனைத்தும் இப்படியிருக்கும்போது கிணற்று தவளையாக கொழும்பையும் சென்னையையும் புளக்கமாகக்கொண்ட   த தே கூ தலைவர்,  திரு இராசவரோதயம் சம்பந்தன் ஈழத்தமிழர்களின் ஒப்பற்ற தியாகத்தையும்,   இழப்புக்களையும்,   வலி வேதனைகளையும் மலிவு விலைக்கு விற்பதற்கு பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறார். நடந்து முடிந்த போராட்டத்தில் சம்பந்தனுக்கும் சம்பந்தனின் குடும்பத்துக்கும் எந்த இழப்பம் ஏற்படாததும் இப்பேற்பட்ட நிலை எடுப்பதற்கு காரணமாகவும் இருக்கலாம்.

பழைய அரசியற் சித்தாந்தத்தை மட்டும் தன்னகத்தே கொண்டவரான சம்பந்தனுக்கு புதிய வரலாறுகள் நடைமுறையில் புரியாது,   என்பதால் அவர் இயலாவிட்டால் மக்களை குளப்பாமல்  துடிப்பான சிந்தனையுடையவர்களுக்கு வழிவிட்டு விலகிவிடுவதே நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது.

விடுதலைப் புலிகள்  பயங்கரவாதிகள் என்றும் மனித உரிமைகளை அவர்கள் கடைப்பிடிக்காததால் அழிந்துபோனார்கள் என்றும் நாக்கில் நரம்பில்லாமல் சம்பந்தன் தெரிவித்த கருத்து ஒட்டுமொத்த ஈழத்தமிழ் சமூகத்துக்குமே சேறடிக்கும் கருத்தாகும்,  அது முற்று முழுதாக சிங்கள ராஜபக்க்ஷவின் கருத்தாகவே கொள்ளமுடியும்.  ராஜபக்க்ஷவின் இக்கட்டை தீர்க்கும் நோக்கிலும் இந்திய அரசாங்கத்தின் கொள்கைக்கு அமையவும் சம்பந்தனின் இப்பேற்ப்பட்ட காட்டிக்கொடுக்கும் கருத்தை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மற்றய கட்சிகளுக்கும் உடன்பாடு உண்டா என்பதை அக்கட்சிகள் நிச்சியம் பகிரங்கப்படுத்தவேண்டும். அல்லது அனைவரும் சேர்ந்து சம்பந்தனை கட்சியிலிருந்து வெளியேற்றவேண்டும்.  சம்பந்தனின் ஆத்ம நண்பனான திருவாளர் மு கருணாநிதியும் இதே கருத்தை தொடர்ச்சியாக சொல்லிவருவதுண்டு. எனவே இந்தியாவின் நிகழ்ச்சி நிரலை சம்பந்தன் நெறிப்படுத்துகிறாரா என்பதும் அச்சத்துடன் சந்தேகப்பட வைக்கிறது.

ராஜபக்க்ஷ நடத்தும் மனித உரிமைமீறல்கள், யாழ்ப்பாணத்தில் இராணுவம் மாணவர்களிடத்தில் நடந்துவரும் மிருகத்தனமான மனித உரிமை மீறல்கள எதுவும் சம்பந்தனின் ஞானக்கண்ணுக்கு  புலப்படவில்லை.  யாழ்ப்பாணத்தில் குடிகொண்டிருக்கும் இராணுவத்தால் சம்பந்தனுக்கு நிச்சியம் பாதிப்பில்லை என்பது உண்மையே அது அங்கு வாழும் மக்களுக்கும் பொருந்தும் என்றே குழந்தைத்தனமாக சம்பந்தன் கருதுவது தெரிகிறது.

தமிழர் பிரதேசங்களிலிருந்து இராணுவம் வெளியேறத்தேவையில்லை என்று ஒரு முட்டாள்த்தனமான கருத்தை வயோதிபர் சம்பந்தன் எழுந்தமானத்தில் தெரிவித்திருக்கிறார்,   இது எவ்வளவு மோசமான தமிழின அழிப்பு கருத்து.   இக்கருத்து  ஈழத்தமிழினத்தை திகைக்க வைத்திருக்கிறது. ஈழத்தின் எந்த இடத்திலிருந்தும் இராணுவம் வாபஸ் வாங்கத்தேவையில்லை என்று தமிழ் அரசியல்வியாதி ஒருவன் சொல்லுவானாக இரூந்தால் அவனை எதற்காக கட்டி அழவேண்டும்,   பேசாமல் அவனுக்கும் டக்கிளஸ் தேவானந்தாவின் இடத்தை கொடுத்துவிட்டு ராஜபக்க்ஷவை நண்பனாக்கி அடிமையாக காலத்தை கடத்திவிடலாமே.  இதற்காகவா இவ்வளவு காலமும் போராடினோம்,   இவ்வளவு உயிரை தியாகம் செய்தோம்,  அனைத்து விடயத்திலும் சம்பந்தன் ஈழத்தமிழர்களின் வாழ்வில் மண் அள்ளிப்போட்டிருக்கிறார்.

மண்ணின் மைந்தர்களாக உள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உணர்வின் அடிப்படையில் உறவினர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த உரிமை இருக்கவில்லை,   அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து வெளி மாவட்டங்களுக்கு இராணுவத்தினர் இழுத்துச்சென்றிருக்கின்றனர்  அவற்றை உலகுக்கு தெரிவித்து மாணவர்களை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபடாமல் ராஜபக்க்ஷவுடன் இணைந்து துரோகியாக செயற்பட விளையும் சம்பந்தன் போன்ற அரசியல்வாதிகளால் இனி வரும் காலங்களிலும் பெரும் ஆபத்து காத்திருக்கிறது என்பதே சம்பந்தனிம் கருத்து கட்டியம் கூறுகிறது.

சம்பந்தனுக்கு வயதாகிவிட்டதால் மனதில் திடமில்லாமல் போய்விட்டது என்றும்,   பயம் கரணமாக ராஜபக்க்ஷ சொல்லுவதற்கு என்ன பேசுவதென்று புரியாமல் புலம்பி பிதற்றுகிறார் என்றும் கூட்டமைப்பினரிடையே பேசத்தொடங்கியிருக்கின்றனர்.  கூட்டமைப்பு இன்னும் ஈழமக்களுக்கு அரசியல் செய்யவேண்டுமென்றால் மக்களின் மனநிலையை புரிந்து செயற்படவேண்டும்  இல்லையென்றால் விட்டு விலகி திடமான கொள்கையுடையவர்களிடம் பொறுப்புக்களை கையகப்படுத்தி உதவவேண்டும் மாற்றுச்சிந்தனை மதிநுட்பம்,   இராசதந்திரம் தெரிந்தவர்கள் மட்டுமே ஈழ அரசியலை கையாளக்கூடியவர்களாக இருப்பர்.

மூன்று வருட அரசியலில்;> சம்பந்தன் ஐயா கனடாவில் தமிழர்கள் மத்தியில் உரையாற்றும்போது நாங்கள் வடக்கு கிழக்கை எங்களுக்கு சொந்தம் என்று சொல்லவரவில்லை அடிமைகளாக இருக்கவே விரும்புகிறோம் என்று சொல்லி சாதனை செய்தவர்.  மே தினத்தின்போது சிங்களவனின் சிங்கக்கொடியை யாழ் நகரத்தில் ஏற்றி சாதனை செய்தவர்,  இப்போ இராணுவம் தமிழர் பிரதேசங்களிலிருந்து வெளியேறத்தேவையில்லை என்று தனது முழு உள்ளுணர்வையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

தேசியத்தலைவனின் அரசியலில் 1983ம் ஆண்டு யூலை மாதம் 23ம் பலாலி வீதியில் தொடங்கிய இராணுவ எதிர்ப்பு போராட்டம் 2009 மே முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்து சர்வதேச பஞ்சாயத்தில் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறது.

இருந்தும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

ஈழதேசம் இணையத்திற்காக,

ஊர்க்குருவி.