போர் முடிந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டபோதும் யாழ்ப்பாண நகரம் இன்னும் உயர் பதற்ற நிலையிலேயே இருந்துகொண்டிருப்பதாக ‘த டிப்ளொமெற்’ என்ற ஆசிய பசுபிக் வலய சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள 11 பெண்கள் அமைப்புக்கள் கூட்டாகச் சேர்ந்து அமைத்துள்ள பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு (Women's Action Network) கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பெண்களை இராணுவம் விதிமுறைக்கு புறம்பாக  ஆட்சேர்ப்பு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையிட்டு ஆழமான கவலை தெரிவித்துள்ளது.
 
2009ன் பின் தொடர்ந்து ஸ்ரீலங்கா சிங்கள ஏகாதிபத்தியத்தின் அடாவடி இன ஒழிப்பு நடவடிக்கைகள் தமிழ்க்கட்சிகளின் அனுசரணையுடன் வெவ்வேறு வடிவங்களில் ஈழதேசத்தில் உருவெடுத்து பெருகிக்கொண்டே இருக்கின்றன. தட்டிக்கேட்பதற்கு சரியான அரசியற் தலைமை ஒன்று இனங்காணப்படும்வரை இந்த இன அழிப்புச் சாக்காடு பல்வேறுபட்ட உருவங்களில் தொடரும் என்பதே சமீபகாலத்தின் கள நிலவரங்கள் நிதர்சனமாக்கி நிற்கின்றன.
 
உருப்படியற்ற கையாலாகாத தமிழ் அரசியற் தலைமைகள் மக்களால் இனங்காணப்பட்டுள்ளபோதும் அவை புறக்கணிக்கப்பட்டு அகற்றப்படும்வரை நாட்டுமக்கள் செய்வதறியாது கிணற்று தவளைகளாகவே இருக்க நேரும்,  நாட்டையும் மக்களையும் குளப்பி கூழ் முட்டை நிலைக்கு கொண்டு சென்றிருக்கும் தமிழரசு கட்சியின் தலைவர் சம்பந்தன் போன்ற தமிழ் அரசியற் தலைமைகளால் ஆபத்தே தவிர வேறு ஒரு பலனும் இல்லை என்பதையே மேற் குறித்த செய்திகள் நெத்தியடியாக ஈழாத்தமிழனுக்கு  பாடம் புகட்டி நிற்கின்றன.
 
28 நவம்பர் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மீதான அடக்குமுறை அட்டூழியம் முடிவில்லாமல் தொடரும் நிலையில்,   மிரட்டலையும் வறுமையையும் சரியாக பயன்படுத்தி பலாத்காரமாக இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ் இளம்பெண்கள் 16 பேர் சித்தசுவாதீனம் பிசகியிருப்பதாக அதிர்ச்சித்தகவல்  திடுக்கிட வைத்திருக்கிறது.
 
விதிமுறைக்குட்பட்டு இலங்கையில் இராணுவம் பொலிஸ் போன்ற துறைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதாக இருந்தால் அரச வர்த்தமானி பத்திரிகை  அறிவித்தலின்பின் முறையான விதிகளை பின்பற்றி ஆள் எடுப்பதுதான் சட்டப்படியான நடைமுறையாக இருந்துவருகிறது. அதைத்தான் ஸ்ரீலங்காவின் அரசியல் யாப்பு சட்டமூலமும் 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறையிலிருப்பதாக தெரிவிக்கிறது.
 
ஆனால் எந்த விதிமுறையையும் பின்பற்றாமல் தமிழினத்தின் இக்கட்டான கையறு சூழலை மட்டும் பயன்படுத்தி தமிழ் பெண்கள் பலர் ஏமாற்றப்பட்டு இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளார்கள்.  அதேவேளை இந்த செயற்பாடு இன முரண்பாட்டு நல்லிணக்கத்துக்கு தீர்வை தர வித்திடுவது போலவும்,  நீதி நியாயத்தை நோக்கியதுமான ஒருமைத்துவ சமாதானத்துக்கான முன்னெடுப்பின் ஆரம்ப நடவடிக்கையைப் போலவும்,  சர்வதேசத்தின் பார்வையில் ஒரு நெகிழ்வை உண்டுபண்ணும் விதமாகவும் மிக தந்திரமாக  விடயம் கையாளப்பட்டிருக்கிறது,  கூர்ந்து நோக்கும்போது இராணுவத்தால் கட்டாயமாக பணியில் அமர்த்தப்பட்ட பெண் பிள்ளைகளுக்கான நியமனங்களில் வெளிப்படைத்தன்மை, உரிய தகவல் வழங்கல், என்பனவற்றில் பெருத்த இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பதோடு  வற்புறுத்தல்களும் மிரட்டல்களும் இன அழிப்பின் அலைவரிசைகளும் ஒருங்கே இடம்பெற்றாதகத் தெரிகிறது.  
 
இராணுவத்தால் இலகுவாக கையாளக்கூடிய வன்னி நிலப்பரப்பில் வாழும் பெண்களின் கையறு நிலையை குறிவைத்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள இராணுவத்தினரே மேல் மட்ட கட்டளைக்கமைய இன அழிப்பின் உத்தியில்  இந்த ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.   பொருளாதார ரீதியில் நொடிந்திருக்கும் ஆண்கள் அற்ற பலவீனமான குடும்பங்களையே இதற்காக இலக்கு வைத்துள்ளனர் என்ற உண்மையும் வெளிவந்திருக்கிறது.  இதில் இங்கு வெளிப்படுத்தமுடியாத ஒரு கசப்பான விடயமும் இந்த ஆட்சேர்ப்பில் ஒளிந்திருப்பது பின்னர் புரியப்படலாம்.
 
ஆள்ச்  சேர்ப்பின்போது பல கிராமங்களில் தமிழர்களை வைத்து கவர்ச்சிகரமாக ஒலிபெருக்கி மூலம் ஆட்சேர்ப்பு அறிவிப்புகளைச் செய்துள்ளார்கள்.  தொடர்ந்து இராணுவ சிப்பாய்கள் நேரடியாகச் வீடு வீடாகச் சென்றும் ஆட்சேர்ப்பு விளம்பரம் செய்திருக்கிறார்கள்,  சில இடங்களில்,  அந்தப்பகுதி கிராம சேவையாளரை பயன்படுத்தி இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. ஆண்களற்று  பெண்கள் தலைமையிலுள்ள குடும்பங்கள் அல்லது வறுமைக்குட்பட்ட அதிகமாக பெண்பிள்ளைகள் உடைய குடும்ப அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பங்கள் என்பனவற்றில் உள்ள இளம் பெண்களே பொதுவாக இலக்கு வைக்கப்பட்டுள்ளார்கள்.  இங்கு உத்தியோகம் என்ற மாயையை முன்னிறுத்தி சரியான அடிப்படைத்தகவல்களை வழங்காமல் ஏமாற்று வேலை நடந்திருக்கிறது
 
சேர்க்கப்பட்ட பெண்கள் அனைவரும் எழுதுனர் சேவை, அல்லது கிராமசேவையாளருடனான தொடர்பாளர் வேலைகளிலேயே ஈடுபடுத்தப்பட இருப்பதாகவும் குறிப்பிட்ட உத்தியோகம் குறிப்பிட்ட மணித்தியாலங்களுக்கு மட்டுமே உள்ளது என்றும்  அவர்களது சொந்த இடங்களிலேயே சேவை செய்ய முடியும் என்றும் உறுதி வழங்கப்பட்டிருந்தது என்றும் நம்பகமான செய்திகள் கூறுகின்றன,  அடிப்படை மாதச்சம்பளமாக ரூபா 30,000  வழங்கப்படும் என்று கவர்ச்சிகரமான வாக்குறுதியும் வழங்கப்பட்டுள்ளது.  முல்லை, கிளி,  மாவட்டங்களிலிருந்து சுமார் 109 க்கு மேற்பட்ட பெண்கள் விபரம் புரியாமல் விண்ணப்பித்து பணியில் இணைந்ததாகவும் சொல்லப்படுகிறது.  இருந்தும் வார இறுதியில் விடுப்பில் அப்பெண்கள் வீடு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
 
எந்த ஒரு தருணத்திலும் இராணுவத்துக்காக வேலை செய்யவேண்டியிருக்கும் என்றோ கடமைகளைச் செய்வதற்காக அவர்கள் இராணுவத்தில் சேரவேண்டியிருக்கும் என்றோ ஒருபோதும் அவர்களிடம் தெரிவிக்கப்படவில்லை என்றே பெற்றோர் பாதுகாவலர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இப்படி பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றப்பட்டு பலவந்தமாக இராணுவத்தில்  இணைத்துக்கொள்ளப்பட்ட 109 பெண்களில் 16 க்கும் மேற்ப்பட்ட இளம் பெண்கள்  கிளிநொச்சி மருத்துவ மனையில் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று பெயர் குறிப்பிட விரும்பாத மனநோய் மருத்துவர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்,   அத்துடன் தொடர்ச்சியான பாலியல் பலாத்கார துன்புறுத்தலுக்கு உள்ளான காரணத்தினால் இவர்கள் மனநோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என வைத்திய வட்டாரத்தின் அதிர்ச்சி தெரிவிக்கின்றன. வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 16 இளம் பெண்களையும் பார்வையிட இதுவரை எவரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
 
இந்தப்பெண்களை பேய் பிடித்திருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.  எது எப்படி இருந்தாலும் இவர்களை கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்தாலும் தனிமைப்படுத்தப்பட்டு இராணுவ காவலுடன் சிறைப்படுத்தி வைத்திருப்பதன் நோக்கம் என்ன?   இந்தப்பெண்களுக்கு என்ன நடந்தது ஏன் அவர்கள் உறவினர்களை சந்திக்கவிடாமல் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர் இவற்றை சிந்திக்கும்போது அப்பெண்கள் மோசமாக துன்புறுத்தப்பட்டிருக்கின்றனர் என்பதும்,  உண்மை வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக இராணுவம் இரும்புத்திரை போட்டிருப்பதாக பலரும் ஐயம் தெரிவிக்கின்றனர்.
 
இந்த தகவலை குறிப்பிட்ட பெண்களின் பெற்றோர் உறவினர்கள் மூலம் அறிந்துகொண்டதாகக் கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், அவர்களை பாதிக்கப்பட்ட பெண்களை பார்ப்பதற்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சென்று நோயாளிகளை பார்வையிட முயற்சித்தபோது அவர் மருத்துவமனைக்குள் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
 
தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், தனக்கு தன்னுடைய பிரதேச மக்களை சென்று பார்ப்பதற்கு சட்டப்படி சிறப்புரிமை உள்ளது. ஆகவே அதற்கான அனுமதி வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் தான் கேட்டதாகவும், அதற்கு இராணுவத்தின் அனுமதி இல்லாமல் உள்ளே செல்லமுடியாது என்று வைத்திய அதிகாரி கலாநிதி கார்த்திகேயன்,   கூறியதாகவும் சிறிதரன் கூறியுள்ளார். கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரன் அவர்களால் தனது நிர்வாக மாவட்டத்தில் அவல நிலையில் உள்ள பெண்களை பார்த்து உண்மைநிலைகளை உறுதிப்படுத்த முடியாதிருக்கும்போது குறிப்பிட்ட பெண்களின் பெற்றோர் என்னசெய்யமுடியும்?.  குறித்த பெண்கள் அனைவருக்கும் தகப்பன், அல்லது தாய், அல்லது ஆண் சகோதரர்கள் இல்லாதவர்களே அதிகம் என்றும் சொல்லப்படுகிறது.  சில பெண்களுக்கு பெற்றோர் இருவரும் முள்ளிவாய்க்காலில் இராணுவத்தால் கொல்லப்பட்டு யாரும் அற்றவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.
 
இராணுவ மயமான ஸ்ரீலங்கா போன்ற ஒரு நாட்டில் நேரடியான இராணுவ வலையமைப்புக்குள் இருந்து இப்பேற்பட்ட சமூக சிக்கல்கள் புறப்படும்போது அடி மட்டத்திலுள்ள தமிழ் பேசும் மக்களால் எதுவும் செய்ய முடிவதில்லை.  மாவட்ட வைத்திய அதிகாரியால்க்கூட அதே மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரை உள் அனுமதிக்க முடியாமல் இருக்கும்போது வறுமையின் வாட்டத்தால் இராணுவ வலைக்குள் சிக்கித்தவிக்கும் பாமர மக்கள் எதுவும் செய்வதற்கில்லை.
 
இந்த சிக்கலை தீர்ப்பதற்கு நிறுவன மயப்படுத்தப்பட்ட மனித உரிமை கழகங்கள், தொண்டரமைப்புக்கள்,   பாகுபாடற்ற அரசியற் கட்சிகள் கால தாமதமின்றி தலையிட்டு அந்த அபலை பெண்களுக்கு உதவ முன்வரவேண்டும். முதலாவதாக அவர்களை வெளியேற்றி சுதந்திரமான மருத்துவ வசதி செய்யப்படவேண்டும்.
 
கொழும்பு , கண்டி அனுரதபுரம் என சிங்களவர் வாழும்  பிரதேசங்களில் குறைந்த அளவுக்கென்றாலும் தமிழர்கள் (பெண்கள் அரச உத்தியோகத்தில் இருந்துகொண்டுதான் இருக்கின்றனர் அவர்களுக்கு இவ்வளவு அசெளகரியங்கள் இருந்ததாக தெரியவில்லை ஆனால் தமிழர்கள் மட்டுமே வாழும் கிளிநொச்சி மாவட்டத்திற்குள்ளேயே இப்படி ஒரு நிலை தோன்ற காரணம் என்ன?.   வேலையில் சேர்ந்து குறுகிய காலத்துள் அந்தப்பெண்களுக்கு நடந்தது என்ன என்பதை வைத்திய அறிக்கைகளுடன் ஆராயாமல் இராணுவம் சொல்லும் கட்டுக்கதையான பேய்க்கதையுடன் விடயத்தை விட்டுவிடலாகாது.
 
தமிழர்கள் தங்களது காப்பரணாக இருக்குமென்று முற்று முழுதாக நம்பிக்கை வைத்திருந்த கூட்டமைப்பின் பாங்காளியான தமிழரசு கட்சி தலைவர் இரா சம்பந்தன் ராஜபக்க்ஷவுக்கு ஆட்காட்டியாக செயற்படுகிறார் என்பதால் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மற்ற கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தமிழருக்கும் தமிழர் தேசியத்துக்கும் விரோதமாக செயற்படுவார்கள் எனச்சொல்லமுடியாது,   எனவே சம்பந்தனை கணக்கிலெடுக்காமல் புறந்தள்ளிவிட்டு மனித நலனை முதன்மையாகக்கொண்டு மிகுந்த நெருக்கடியில் இராணுவ வலையில் சிக்குண்டிருக்கும் பெண் பிள்ளைகளை தமது பிள்ளைகளாக நேசித்து உடனடியாக காப்பாற்றியாகவேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது.  கிளி/ பாஊ சிறிதரன் அவர்களுக்கு இந்த இடத்தில் அதிகமான வேலை இருக்கும் என்றே நம்புவோம்.
 
ஈழதேசம் இணையத்திற்காக,

கனகதரன்.