Saturday, January 31, 2015

ஶ்ரீலங்கா அரசாங்கத்தின் பொய்ப் பிரச்சாரம் அகதிகள் வாழ்வில் பெருத்த அடியாக விழும்.


ஶ்ரீலங்காவில் ஆட்சி ஒன்று மாறியிருக்கிறது, அங்கு இருந்த அரசியல்நிலை மாறி அமைதிநிலை தோற்றுவிக்கவும் பட்டிருக்கிறது,என்று ஶ்ரீலங்கா ஆட்சியாளர்களும் அவற்றை ஆமோதிக்கும் விதமாக சர்வதேச நாடுகளும் வழமைபோல பிரச்சாரத்தை தொடங்கியிருக்கின்றன.
வரவிருக்கும் ஜெனீவா மனித உரிமை அமர்வின் ஒன்றுகூடலிலும் இந்த முழக்கம் எதிரொலிக்கலாம்.
இதன் தாக்கம் முதலாவதாக அகதியாக புலம்பெயர்ந்து விசாரணை நிலையில் இருக்கும் அகதிகளுக்கான முதலாவது அடியாக விழும் என்பதில் எவருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.
குறிப்பாக இந்த பிரச்சாரம் சர்வதேசத்தின் நிதி உதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கும் ஶ்ரீலங்காவின் ஆட்சியாளர்களும் இலங்கைக்கு உதவி வழங்கும் மேற்குலக நாடுகளிடமிருந்தும் தொடங்கியிருக்கிறது. இது இன்று நேற்றல்ல காலாகாலமாக நடந்துவரும் ஒரு வழமையான நிகழ்வுதான்.
தொடர்ந்து ஶ்ரீலங்காவை ஆட்சி செய்பவர்கள் கூறிக்கொள்ளும் கூற்றையே இன்றைய புதிய ஆட்சியாளர்களும் வழமைபோல முன்வைத்திருக்கின்றனர். ஆட்சியாளர்களின் நடைப்பயணம் இப்போதுதான் தொடங்கப்பட்டிருக்கிறது, இரண்டுகல் தூரம் செல்லும்வரை எந்தவிதமான தீர்மானத்துக்கும் வரமுடியாது என்பதே தமிழர்களின் அனுபவம்.
சர்வதேசத்திடமிருந்து அபிவிருத்தி என்ற பெயரில் நிதி உதவிகளை பெறுவதற்கான தந்திர சமிக்கையாக ஶ்ரீலங்கா ஆட்சியாளர்கள் வெளிநாடுகளுக்கும், நாட்டில் உயிர் வாழமுடியாமல் நாட்டைவிட்டு தப்பியோடும் அகதிகளை கட்டுப்படுத்தி, ஏற்கெனவே சென்று சேர்ந்த அகதிகளை திருப்பி அனுப்புவதற்காக வெளிநாடுகளும் இந்த பிரச்சாரத்தை மேற்கொள்ளுவது வழமையான ஒன்றே. இந்த பிரச்சாரத்தின் மூலம் வியப்பதற்கோ சிந்திப்பதற்கோ ஒன்றுமில்லை.
இலங்கை சுதந்திரம் அடைந்த 1948 ம் ஆண்டு தொடங்கி இன்றுவரை நடந்துவரும் பாராளுமன்ற முறமைக்குட்பட்ட ஜனநாயக உரிமை போராட்டம் அடுத்து நடைபெற்ற முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற உணர்வு மயமான ஆயுதப்போராட்டம், அதன் பின் 2009 மே போர் முடிவுக்கு வந்த பின்னரான ஐந்தாண்டுகளுக்கு மேலாக நடந்துவரும் அரசியல் வாக்குறுதிகளும் கண்கட்டி வித்தைகளும் முடிந்து, 2015 ஜனவரி 08 புதிய ஆட்சியாளர் தெரிவு, அதனைத்தொடர்ந்து மாறியிருப்பதாக கூறப்படும் அமைதி நிலை?


அமைதி நிலை பற்றிய ஒரு பிரச்சாரம் இப்போ வழமைபோல திரும்பவும் தொடங்கியிருக்கிறது. கூடவே ஒன்றாக இருந்து கும்மாளம் அடித்தவர்கள் இப்போ ராஜபக்‌ஷவை காட்டிக்கொடுப்பது மிகப்பெரிய சாதனை அரசியலாக காட்டப்படுகிறது ராஜபக்‌ஷவின் ஊழலுக்கும் தமிழர் அடிப்படை அரசியலுக்கும் என்ன சம்பந்தம் என்பதே பலருக்கு புரியவில்லை.
இலங்கையில் தமிழர்களுக்கான நீண்ட நெடிய காலமாக ஏமாற்றப்பட்டு தட்டிக்கழிக்கப்பட்டுவரும் ஈழத் தமிழர்களின் தேசிய அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு, ஒப்பந்தம் கைச்சாத்து என்ற வழமையாக நடைபெற்று குப்பைக்கூடைக்குள் சென்றடையும் சம்பிரதாய முறைமைகளைத் தாண்டி நடைமுறையில் ஒளிவு மறைவு இல்லாத ஒரு ஆரோக்கியமான அரசியல் செயற்பாடு ஒன்று தமிழர்களின் கைகளில் நடைமுறைக்கு வரும்வரை ஶ்ரீலங்கா ஆட்சியாளர்களோ சர்வதேச நாடுகளோ கூறிக்கொள்ளும் ஶ்ரீலங்காவில் அமைதி என்ற சுலோகம் சுலோகமாக மட்டுமே பார்க்க முடியும்.
ஶ்ரீலங்காவில் ஒவ்வொரு ஆட்சி மாற்றங்களின்போதும் அகதிகளின் வரவை குறைக்கவேண்டும் என்பதற்காக இப்படியான பிரச்சாரங்களில் ஈடுபடுவது ஐரோப்பிய நாடுகள் சிலவற்றின் வெளியுறவு கொள்கையாகவும்,. அதேபோல உயிரை பாதுகாப்பதற்கு அகதியாகி இடம்பெயர்ந்து வேறொரு பாதுகாப்பான நாட்டுக்கு சென்று தனது பாதுகாப்பு அற்ற நிலையை அகதியான ஒருவர் தனது தர்ம சங்கடத்தை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்துவதும்தான் தமிழர்களின் தரப்பு வெளியுறவு செய்தியாக இருந்து வருகிறது.
தமிழர்கள் தமது தரப்பு பாதுகாப்பு இன்மையை நாடு கடந்து வேறொரு நாடுகளில் தஞ்சமடைந்து அகதிகளாக தம்மை பதிவு செய்வதன்மூலமே தனது இனத்தின்பால் நடைபெறும் பாதுகாப்பு இன்மையை மனித உரிமை மீறலை சர்வதேச அரங்கத்துக்கு வெளிப்படுத்தி வருகின்றனர்.
தற்போது ஶ்ரீலங்காவில் நடந்து முடிந்த தேர்தல் அதன்மூலம் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் இலங்கை ஆட்சியாளர்களின் நீண்டகாலமாக பட்டுணர்ந்த அனுபவங்கள் நியாயமாக தமிழர்கள் வாழ்வில் ஒரு நல்ல திருப்பத்தை கொண்டுவருவதாகவே இருக்கட்டும். அவை அனைத்தும் செயற் திட்டங்களாக மாற்றப்பட்டு தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அங்கீகார அரசியற் செயற்பாடு ஒன்று அங்கு நிகழும்வரை பிரச்சாரங்கள் பிரச்சாரங்களாகவே இருந்துகொண்டிருக்கும் என்ற உண்மையை உலகமும் ஶ்ரீலங்கா ஆட்சியாளர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
மேற்கூறிய விடயத்தின் முன்னோட்டமாக இலங்கையில் தமிழர்களின் எதிர்காலம் என்ன? என்ற கருத்தின் கீழ் பிரித்தானிய பொதுச்சபையில் ஆரோக்கியமான விவாதம் ஒன்று நேற்று நடைபெற்றிருந்தது.
விவாத்தின்போது தமிழர்களின் அனைத்து அரசியல் நிலவரங்களும் பேசப்படா விட்டாலும் முக்கியமான சில விடயங்கள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதில் திருப்திப்பட்டுக்கொள்ள முடியும்.
இலங்கையில் நடைபெற்று முடிந்த தமிழர் இன அழிப்பை தடுத்து நிறுத்துவதிலிருந்து சர்வதேச சமூகம் தோல்வி கண்டுள்ளதாக பிரித்தானிய நாடாளுமன்ற பொதுசபையில் கலந்துகொண்ட சிலர் கருத்து தெரிவித்திருக்கின்றனர். இனப்பிரச்சினைக்கான தீர்வானது சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வாக அமைய வேண்டும். அதுவே இனப்பிரச்சினைக்கான அடிப்படை காரணத்தை இல்லாமல் செய்யும் என்று தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட் தெரிவித்திருந்தார்.
“அதேவேளை இலங்கையின் புதிய அரசாங்கமும். தமிழர்கள் வாழும் பகுதிகளில் இராணுவ சூன்யத்தை ஏற்படுத்துவது தொடர்பில் எந்த ஒரு மாற்றத்தை ஏற்படுத்தாது என்ற நிலை உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்”.
எனவே இலங்கை மீது சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்கால கடன் திட்டங்களின் போது அழுத்தம் கொடுப்பதன் மூலம் தமிழர்கள் தொடர்பிலான கொள்கையில் மாற்றங்களை கொண்டு வர உந்துதலை அளிக்க முடியும் என்றும் லீ குறிப்பிட்டார். இது அவரது ஆலோசனை மட்டும் என்பதாகவே கொள்ள முடியும்.
சிறீலங்காவின் புதிய ஜனாதிபதி, மைத்திரிபால ஶ்ரீசேன ஏற்கனவே பதவியில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கட்சியை சேர்ந்தவர் என்ற யதார்த்த உண்மையையும் லீ பதிவு செய்தார்.
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இறுதிப்போரின் போது பாதுகாப்பு அமைச்சராக இருந்தமையை பொதுச்சபை கருத்தரங்கில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சியோப்ஹெய்ன் மெக்டோனாக் குறிப்பிட்டு சுட்டிக்காட்டினார்,.


சிறீலங்கா அரசாங்கம் அரசியல் தீர்வை காண வேண்டும் என்ற நிலையில் தமிழர் பிரதிநிதிகளும் அதற்கான முனைப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் சியோப்ஹெய்ன் மெக்டோனாக் கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரொபேட் ஹாபென் உரையாற்றும் போது, இலங்கையில் தமிழர்கள், பல தசாப்தங்களாக துன்பங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். பலர் இன்னும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம் செனொன் உரையாற்றும் போது, வன்னியில் சுமார் 150000 சிங்கள படையினர் நிலைகொண்டிருப்பதால், அங்கு சிங்களமயத்திட்டம் மேற்கொள்ளப்படலாம் என்றும் ஐயம் தெரிவித்தார். தமிழ் பிரதேசங்களில் உள்ள 05 பொதுமக்களுக்கு ஒரு இராணுவவீரர் என்ற அடிப்படையில் படையினர் நிலைகொண்டுள்ளதாகவும் ,அதனால் வடக்கில் பெண்கள் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு ஆளாகின்றனர் என்றும் திருமணம் செய்துக்கொள்வதாக உறுதியளித்தும் அல்லது பணத்துக்காகவும் சிங்கள படையினர் சில தமிழ்பெண்களுடன் பாலியல் உறவை மேற்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பொப் பிளெக்மேன் தமது உரையில், இலங்கை அரசாங்கம் சர்வதேசத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மெக்டொனல், தமது உரையின் போது போர்க்குற்றச்சாட்டுக்கான உள்நாட்டு விசாரணை என்ற திட்டத்தை முழுதாக நிராகரித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கெரி மெக்கார்தி, புதிய ஜனாதிபதி இலங்கையில் முன்னேற்றமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.வடக்கில் இருந்து இராணுவம் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்
நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் லிங்டன், இலங்கையில் நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகளின் போது பாரிய சவால்கள் இருப்பதை புறந்தள்ளிவிட முடியாது என்று குறிப்பிட்டார்.
இவை அனைத்தும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டபோது விவாதிக்கப்பட்ட விடயங்களாகும். அந்த விவாதத்தின் கருத்தியலில் ஒரு நியாயம் இருப்பதயும் புறந்தள்ள முடியாது.
அந்த கருத்து கோவையை இலங்கை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டுமாயின் இலங்கையில் செயற்பாட்டிலிருக்கும் தமிழ் அரசியற் கட்சிகள் மற்றும் தமிழர்பால் செயற்படும் அமைப்புக்கள் இலங்கை பாராளுமன்றத்திலும் தீர்வுக்கான பேச்சுவார்த்தை விவாதங்களின்போதும் ஒருமித்து அக் கருத்துக்கொப்ப செயற்படவேண்டியவர்களாக இருக்கின்றனர்.
அது நடைபெறுமா என்பது மில்லியன் டொலர் கேள்வியாக இருந்தாலும் பிரித்தானிய பொதுச்சபையின் கருத்தியல் தீர்மானங்களை திசைகாட்டியாக முன்னிலைப்படுத்தி “டப்ளின் மக்கள் தீர்ப்பாயம்” 2009ஆம் ஆண்டு போரின் போது தமிழ் மக்கள் மீது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் இழைக்கப் பட்டிருந்ததை 2010 ஜனவரியில் அயர்லாந்தின் டப்பிளின் நகரில் விசாரணையில்,
நிரூபிக்கப்பட்ட

1. சிறிலங்க அரசு போர்க் குற்றவாளியே.
2. சிறிலங்க அரசு மானுடத்திற்கு எதிரான குற்றம் இழைத்துள்ளது.
3. சிறிலங்காவிற்கு எதிரான இனப் படுகொலை குற்றச்சாட்டின் மீது மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும். என்ற டப்ளின் தீர்மான ஆவண சான்றின் திசை காட்டுதலை முன்னிலைப்படுத்துவதுபோல பிரித்தானிய பாராளுமன்ற பொதுச்சபை உறுப்பினர்களின் ஒன்றுகூடல் தீர்மானங்களை திசைகாட்டியாக முன்னிலைப்படுத்தி அரசியற் பேச்சுவார்த்தைகளை நகர்த்த முயற்சிக்கவேண்டும்.
இது ஒரு ஆதாரம் மட்டுமே என்றாலும் இன்றைய நிலையில் பல்வேறு காரணங்களினால் அகதியாகி வெளிநாடுகளில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்திருக்கும் பல அகதிகள் விடயத்தில் புதிய அரசாங்கத்தின் வாய்ப்பேச்சை மட்டும் முடிந்த தீர்மானமாக கருதி ஒரு முடிவுக்கு வரமுடியாது என்பதை தமிழர் அரசியலின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.
ஶ்ரீலங்காவில் தமிழர்களுக்கான அரசியல் நிர்ணயம் செய்யப்பட்டு இடைக்கால சபை ஒன்று நிறுவப்பட்டு இராணுவம் வெளியேற்றப்பட்டு சிவில் அதாவது பொலீஸ் நீதி நிர்வாகம் மேலாண்மை கொள்ளுமிடத்தில் அகதிகள் திரும்பிச்செல்வது மக்களின் பாதுகாப்புக்கு பங்கமில்லமல் இருக்கும். என்பதை தமிழ் அரசியற் செயற்பாட்டாளர்கள் கருத்தில் கொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றனர் என்பதை ஊன்றி பதிவு செய்ய முடியும்.
நாட்டில் பிரச்சினை இல்லை என்றால் இராணுவத்துக்கு அங்கு வேலையில்லை. இராணுவம் அங்கு நிலை கொண்டிருக்கும்வரை பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருக்கும் என்பது சர்வதேச சித்தாந்தம்.
அரசியல் வேலைத்திட்டத்தின் முதல் நகர்த்தல் இராணுவ வெளியேற்றம் என்பது உறுதிப்படுத்தப்படும்வரை தமிழர்களுக்கான பாதுகாப்பை எவரும் கொண்டுவரமுடியாது.
ஈழதேசம் செய்திகளுக்காக.
கனகதரன்.

Thursday, January 15, 2015

ராஜபக்‌ஷ தோற்றுப் போய்விட்டதால் இந்தியாவுக்கும், சர்வதேசத்துக்கும் பொறுப்பு முடிந்துவிட்டதாக கருத முடியாது.

சாந்தமான முகத்துடன் சர்வ அதிகாரமும் தன்னகத்தே கொண்ட புதிய சிங்கள அரசு தலைவர் ஒருவர் ஶ்ரீலங்காவில் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
சமத்துவ ஜனநாயக மரபுகளுக்கு உட்பட்டது போன்ற மாயையை வெளிப்படுத்தும் ஆட்சி முறைமை போல ஶ்ரீலங்காவின் அரசியல் அமைப்பு சித்தாந்தம் சர்வதேசத்துக்கு காட்டிக்கொண்டாலும் பௌத்த சிங்கள பாசிஷ முகாந்திரத்தை முன்னிலைப்படுத்தி அதற்கான அனைத்து அசைவாக்கத்தையும் தனி ஒருவர் எடுக்கக்கூடிய அதிகாரத்தை நடந்து முடிந்த தேர்தல் மைத்திரிபால ஶ்ரீசேனவுக்கு வழங்கியிருக்கிறது.
ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் தமிழர்களின் (அரசியல்) இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று வாக்குறுதி கொடுப்பதுபோல புதிய ஜனாதிபதி மைத்திரிபால ஶ்ரீசேன சொல்லாவிட்டாலும் கூட்டாளிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களும் மாவை சேனாதிராசா அவர்களும் மிகுந்த நம்பிக்கயுடன் அந்த வாசகத்தின் வெளியை நிறைவு செய்து புதிய அரசாங்கம் தமிழர்களின் நீண்டகால அரசியல் சிக்கலை தீர்த்து நிறைவு செய்யும் என்று நம்பிக்கையை பறந்தடித்து பகிரங்கப்படுத்தி அறுதியிட்டு கூறியிருக்கின்றனர்.
இலங்கையில் முக்கிய அரசியற் கட்சிகளாக அறியப்பட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய வெவ்வேறு கொள்கை சித்தாந்தத்தை பின்பற்றிவரும் இரு துருவங்களான இரண்டு அரசியற் கட்சிகளும் தமது சின்னங்களில் (கை, யானை) போட்டியிடவில்லை, மாறாக இரண்டு கட்சியையும் சார்ந்தவர்கள் ஒன்றாகவும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் எதிர் எதிராகவும் ஜனாதிபதி பதவியை குறிவைத்து போட்டியிட்டிருக்கின்றனர்.
தற்போதய ஜனாதிபதி மைத்திரிபால ஶ்ரீசேன அடிப்படையில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சார்ந்தவராகவும், அவருக்கு சகலவகையிலும் ஆதரவு வழங்கி அதே ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிரான நிலையை எடுத்து பதவியை மாற்றிக்கொடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் அடிப்படையில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஸ்தாபகர் எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்காவின் வாரிசான ராஜபக்‌ஷவுக்கு முன் பத்தாண்டுகள் ஜனாதிபதியாக பதவி வகித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா முன்னின்று செய்து பதவியை ராஜபக்‌ஷவிடமிருந்து பறித்து மைத்திரிபால ஶ்ரீசேனவுடம் மாற்றிக் கொடுத்திருக்கிறார்.
ஐக்கிய தேசியகட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனித்து நின்று ராஜபக்‌ஷவை எதிர்கொள்ளமுடியாத அரசியல் இயலாமையுடன் எதிரணியில் இருந்து அரசியல் செய்து வந்த சந்திரிகா, மைத்திரிபால ஶ்ரீசேன ஆகியோரது இராஜ தந்திரத்தை சிரம்தாழ்த்தி ஏற்றுக்கொண்டு மைத்திரிபால ஶ்ரீசேனவை ஜனாதிபதியாக்க தன்னாலான உதவியை செய்திருக்கிறார்..
அடிப்படையில் ஒரே கொள்கை கோட்பாடுகளுடைய கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த இருவர் வெவ்வேறு கோசங்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் யார் வெற்றிக்கனியை பற்றிக்கொள்ளுவார்கள் என்ற பதட்டம் நிலவிவந்தபோது, தமிழர்களின் வாக்குக்களே ஜனாதிபதிக்கான வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் நிலை மேலோங்கி நின்றது.
இனப்படுகொலை செய்த குற்றவாளி மஹிந்த ராஜபக்‌ஷ, அந்த இனப்படுகொலைக்கு அனைத்து இனப்படுகொலை காலங்களிலும் ஒன்றாக இருந்து துணைபுரிந்து முக்கிய மந்திரி பதவிகளை வகித்த குற்றவாளி மைத்திரிபால ஶ்ரீசேன, 2002ல் சமாதானம் என்ற பெயருடன் பெரும் சதி செய்து தமிழர்களின் அரசியலுக்கான அடிப்படையை நிர்ணயித்த போராட்டத்தை அழிப்பதற்கு திட்டமிட்டு காய் நகத்திய சதிகாரன் ரணில் விக்கிரமசிங்க. அதற்குமுன்னர் சமாதானப் புறா என்றும், வட்ட மேசை மகாநாடு தீர்வுப்பொதி என்றும், சமாதானத்துக்கான போர் என்றும் கதிர்காமரின் உதவியுடன் சர்வதேசத்தில் விடுதலை போராட்டத்தை தடை செய்யப்பட்ட இயக்கமாக வகைப்படுத்தி தமிழர்களின் அரசியல் வரலாற்றை அழிக்க உழைத்தவர் சந்திரிகா
நேற்றைய எதிராளி ராஜபக்‌ஷ, முந்த நாளைய எதிராளி சந்திரிகா, இருவருடனும் கூட இருந்தவர் மைத்திரி. சம்பந்தருக்கு கையில் சிங்கக்கொடியை கொடுத்து கௌரவித்தவர் ரணில் அதனாலோ என்னவோ ரணில் நின்ற பக்கத்துக்கு வாக்களிக்கும்படி சம்பந்தர் மற்றும் மாவை தமிழ் மக்களிடம் கேட்டுக்கொண்டனர், தமிழர்களின் வாக்குக்களை பெற்று வெற்றி பெற்றவர் மைத்திரிபால ஶ்ரீசேன,. தற்கரீதியாக இதன் நியாயம் அநியாயம் சம்பந்தன் தரப்பை தவிர வேறு எவரும் அறியமுடியாதவை.
கடும்போக்கு சிங்கள கட்சிகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்து அதிகாரத்தை கைப்பற்ற மட்டுமே போட்டியிட்டன. என்பது தவிர நாட்டு நலன், பொருளாதாரம், சமாதானம் குறிப்பாக இலங்கை தமிழர்களின் நீண்டகால சிக்கலாக இருந்துவரும் அரசியல் தீர்வு பற்றி எதுவும் பேசப்படவில்லை.
குறிப்பாக தமிழர்களின் அரசியல் சுய நிர்ணயத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏற்புடையதான சிவில் நிர்வாகத்தை அறிமுகப்படுத்தி இராணுவத்தை திரும்பப்பெறுவதற்கு புதிய ஜனாதிபதி ஒப்புக்குக்கூட ஒத்துக்கொள்ளவில்லை, நடந்து முடிந்த மனித உரிமை மீறல்கள் படுகொலைகள் தொடர்பாக மூன்றாம் தரப்பு விசாரணை நடத்துவதற்கும் தான் அனுமதிக்கப்போவதில்லை என்பதே அவரது தேர்தல் வாக்குறுதியாகவும் ஒளிவு மறைவு இன்றி விஞ்ஞாபனமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
ஶ்ரீலங்காவில் வாழும் சிங்களவர்கள் ஏதோ ஒரு காரண காரியங்களை மனதில்க்கொண்டு இந்த மாற்றத்தை கொண்டு வந்திருக்கின்றனர். தமிழர்களுக்கு இதில் என்ன இலாபம் என்பது தெரியவில்லை. ஆனாலும் ஆழமாக நோக்கினால் புதிய அரசுத்தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டு விட்டதால் அங்கு நடந்துவரும் இன முரண்பாட்டுக்கு ஒரு தீர்வு மெல்ல மெல்லவேனும் வந்து சேர்ந்துவிடுமா என்றால் இல்லை என்பதே உண்மை.
இருந்தும் அப்படி நடக்காது என்று சொல்லுவது தவறானது. அவசரத்தனமான கண்ணோட்டும், மெல்ல மெல்லத்தான் காரியத்தை சாதிக்கவேண்டும் என்றே சர்வதேசமும் தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள் தாங்கள் என்று சொல்லிக்கொள்ளும் அரசியல் ஞானிகளும் சொல்லக்கூடும்.
ஏனென்றால் சம்பந்தப்பட்டவர்கள் அல்லாத மூன்றாம் தரப்பினரின் கற்பிதம் அப்படித்தான் அறுபது வருடங்களாக திரும்பவும் ஒன்றிலிருந்து தொடங்கி போதித்துக்கொண்டிருக்கிறது..
வரவிருக்கும் காலங்களில் சிங்களத்தரப்பு தமது அரசியல் நகர்வுகளை 1948 லிருந்து நேற்றுவரை நடந்து முடிந்த வழமைபோலவும், தமிழர் தரப்பு தமக்கான அரசியல் நகர்வுகளை அறிக்கை மற்றும் உல்லாசப்பயணங்கள் மூலமாகவும் நகர்த்துவதற்கு முன்னிற்கும் என்பது இன்னும் சில காலங்களில் பகிரங்கமாக தெரியவரும் வேறு முன்னேற்றம் எதையும் புதிய ஜனாதிபதியானாலும் சரி தமிழ் தலைமைகளானாலும் சரி நிவர்த்தி செய்துவிடுவார்கள் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
அவர்களின் சிந்தனை அந்த வட்டத்தை விட்டு செல்லமாட்டாது என்பதும் என்போன்றவர்களின் பட்டறிந்த வரலாற்று உண்மை.
மறுபுறத்தே ஏற்கெனவே பாதிக்கப்பட்ட ஈழத்து தமிழர்களின் உறுதியான தலைமைத்துவம் இல்லாத வெற்றிடம், பற்றிப்பிடித்து தப்பிக்க ஒன்றும் இல்லாத இயலாமை, தொடர்ந்து வரும் இராணுவம் மற்றும் துணைக்குழுக்களின் எதேச்சதிகார அடக்குமுறை போன்றவற்றால் உண்டாகும் கலாச்சார சீரழிவு, வறுமை, அமைதியற்ற தன்மை, பயம் போன்ற கணிகள் மக்களை பெருத்த மன உழைச்சலை நோக்கி தள்ளும் என்பது காலப்போக்கில் உணரக்கிடைக்கும்.
சிங்கள கடும்போக்கு ஆட்சியாளர்களும் தமிழர்தரப்பிலிருந்து தொங்கு அரசியல் செய்பவர்களும், அண்டிப்பிழைப்பவர்களும் குளப்பத்தை உண்டுபண்ணும் பொய்யான பாதையை திறந்துவிட்டு தப்பித்தலுக்காக அதனூடே பயணிக்க முன்வருவர். மக்கள் அந்தப்பாதையூடே பயணிக்க விரும்பாமலும் காட்டிக்கொள்ளாமலும் தப்பித்தலில் மட்டுமே குறியாகி காலம் கரையும்.
இந்த நேரங்களில் இந்தியாவின் உதவி தேவைப்படுவதுபோலவும் சர்வதேச தலையீடு தேவை என்பதுபோலவும் காட்சி அமைக்கப்பட்டு உல்லாச பயணங்கள் தொடங்கப்பட்டு ஆங்காங்கே அரசியல் அரங்க மேடைகள் திறக்கப்பட்டு உணர்வு மயமான பிரசங்கங்கள் நிகழ்த்தப்படும். அந்த பிரசங்கங்கள் பொழுதுபோக்காக மட்டுமே முன்னய காலங்களைப்போல கடந்து போகும்.
ஆனால் இலங்கையில் தமிழர்களுக்கான அரசியலில் குறைந்த பட்ஷம் இராணுவ வெளியேற்றம் உறுதி செய்யப்பட்டு அங்கு வாழும் மக்களது வாழ்வில் ஒரு அமைதியான சூழ்நிலை உருவாகவில்லையென்றால் இந்தியாவுக்கும் சரி சர்வதேசத்துக்கும் சரி பொறுப்பு முடிந்துவிட்டதாக கருத முடியாது.
சர்வதேசத்தை சற்று தள்ளி வைத்தாலும் ஈழ தமிழர்களுக்கான அரசியல்த்தீர்வு ஒன்றை வரையறுத்து தீர்மானிப்பதன் மூலமே இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் உண்டாகக்கூடிய அரசியற் கொந்தளிப்பை மத்திய அரசாங்கம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். இலங்கையின் வடக்கே பெருக்கெடுத்து விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கும் இராணுவத்தை மட்டுப்படுத்தாதவரை தமிழக மீனவர்களின் பிரச்சினை தீர்வுக்கு வரப்போவதில்லை. புத்தளம் மன்னாரிலிருந்து மட்டக்களப்புவரை கடற்கரைகள் அனைத்தும் இராணுவ ஆதிக்கத்துக்குட்பட்டே இருக்கின்றன. இந்த இராணுவம் மட்டுப்படுத்தாதவரை இந்திய மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்க முடியாது.
மீனவர்கள் தாக்கப்படும்போது தமிழகத்திலுள்ள அரசியற் கட்சிகளின் போராட்டங்களும் மனக்கசப்புக்களும் தொடர்ந்து மத்திய அரசின்மீது தேவையற்ற விமர்சனங்களையும் நம்பிக்கையில்லாமையையும் தோற்றுவிக்கும். இதன் தொடர்ச்சி பல இயக்கங்கள் உருவாகி அவை அரசியற் கட்சிகளாக பரிமாணமெடுத்து இலகுவாக தமிழக மக்களின் மனம் கவரவல்ல தமிழ் ஈழ சார்பு அரசியல் கட்சிகளாகி இந்தியாவுக்குள்ளேயே பிரிவினையை தோற்றுவிக்கும் அபாயம் உண்டாகும்.
தமிழ்நாட்டை ஆழும் கட்சிகளான அதிமுக, மற்றும் திமுக ஆகிய கட்சிகள்கூட தமிழ் ஈழ அரசியலை புறந்தள்ளிவிட்டு அரசியல் செய்ய முடியாத நிலையிலேயே இருந்து வருகின்றன. அந்த அளவுக்கு ஶ்ரீலங்காவின் இராணுவ ஆதிக்கம் காரணமாக மீனவர்கள் தாக்கப்படுதல் ஈழத்தமிழர்கள்மீது நடாத்தப்படும் ஆக்கிரமிப்புக்கள் தமிழக மக்களின் மனங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. மத்திய அரசாங்கம் இவற்றை மனதில் கொள்ளாமல் புறந்தள்ளுமானால் விரும்பத்தகாத வெளிப்பாடுகள் உருவாகலாம்.
எதிர்வரும் மார்ச்சு மாதம் ஜெனீவாவின் மனித உரிமைகள் அமர்வு வித்தியாசமான தீர்மானங்களை வெளியிடலாம். அதற்கான ஆயத்தங்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உதவியுடன் மைத்திரிபால ஶ்ரீசேனவின் தூதுக்குழு ஜெனீவா அமர்வை குளிரவைக்க முயலுவர் என்பதும் தவிர்க்க முடியாமல் நடந்து முடியும். அதன் முன்னோட்டமாக சில அரசியற் கைதிகள் விடுவிக்கப்படலாம். விடுவிக்கப்பட்ட கைதிகள் தங்கள் சொந்த இடங்களுக்கு சென்று சுமூகமாக வாழக்கூடிய சூழ்நிலையை இராணுவ ஆதிக்கம் வழிவிட்டு விலகி நிற்கும் என்று சொல்லிவிட முடியாது.
இராணுவ ஆதிக்கத்திலிருந்து தப்பித்து வாழவேண்டுமானால் ஒரே தெரிவு ஒட்டுக்குழுக்களை ஒத்த குழுக்களாக்கி வாழப்பழகிக்கொள்ளவேண்டிய திண்டாட்டம் மட்டுமே இளைஞர்களின் தெரிவாக திணிக்கப்படும். மறு புறத்தே பாதுகாப்பு காரணங்களுக்காக நாடைவிட்டு தப்பிச்சென்று அடைக்கலம் கோரியவர்களை குறித்த நாடுகள் திருப்பி நாட்டுக்கு அனுப்பும் அபாயமும் ஒருங்கே கூடிவரும் என்பதையும் தமிழ் அரசியல் விற்பன்னர்கள் மனதில் கொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றனர்.
இன்றைய ஶ்ரீலங்காவின் அரசியல் தலைமை மாற்றத்தை பயன்படுத்தி ஆட்சி அதிகார நிர்வாக அலகுகளுக்கு வருவதற்கு முன்னதாக முதல் கட்டமாக தமிழர் பிரதேசங்களில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்தை திரும்ப பெற வைக்கும் வல்லமை தமிழர் அரசியல் தலைவர்களுக்கு இருக்குமானால் அவர்கள் ஏதோ ஒன்றை சாதித்துவிட்டார்கள் என்ற நம்பிக்கை தமிழர் மனங்களில் பதிவாகலாம்.
இராணுவம் வெளியேற்றப்படவில்லையென்றால் ததே கூ இருந்தும் ஒன்றுதான் இல்லாமல் போனாலும் ஒன்றுதான் என்ற பதிவு அழிக்க முடியாமல் த தே கூட்டமைப்பு கேள்விக்குறியாகிவிடும் என்பதுமட்டும் மறுப்பதற்கில்லை.
வடக்கு மாகாண சபை என்ன செய்யப்போகிறது? கிழக்கு மாகாண தமிழர்களின் அரசியல் எப்படியான நிலையை தோற்றுவிக்கும். என்பதெல்லாம் எதிர் காலத்தின் சுழற்சியைப்பொறுத்தே தீர்மான்மாகும்.
இருந்தும் ரணில், சந்திரிகா, ராஜபக்‌ஷ, இவர்களுடன் சரத் பொன்சேகா ஆகியோர் ஒன்று சேர்ந்து மைத்திரிபால ஶ்ரீசேனவை மிரட்டினாலும் அடுத்தடுத்து இரண்டு ஐந்தாண்டு பதவிக்காக மைத்திரிபால ஶ்ரீசேனவும் அவரது வாரிசுகளும் தயாராகிவிட்டனர் என்பது ஏற்கெனவே செய்தியாகிவிட்டது.
ஈழதேசம் செய்திகளுக்காக.
கனகதரன்.