Sunday, April 14, 2013

தயவுசெய்து இறந்து விடுங்கள்… … ….

 1.4karuna20120603
இயக்குநர் மகேந்திரனின் உதிரிப்பூக்கள் திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் சுந்தரவடிவேலுவாக நடிக்கும் விஜயன் திருந்துவார்.  ஆனால் அத்தனை நாட்களாக அவரைப் பார்த்து மனம் வெறுத்த அந்த ஊர் மக்கள், அவரை  ஏற்க மறுப்பார்கள்.   அவரை ஊர் எல்லையில் உள்ள ஆற்றை நோக்கி விரட்டிச் செல்லுவார்கள்.   அப்போது அந்தக் கிராமத்தில் உள்ள ஒருவர் விஜயனை நோக்கி “இது வரை நீங்க செஞ்ச கொடுமை எல்லாத்துக்கும் பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்துடுச்சி..  நீங்க வாழத் தகுதியில்லாத ஆளு.  ஏன்னா நீங்க வேற யாரையும் நிம்மதியா வாழ விட்டதில்ல.  நாங்க நெனச்சா உங்க சாவு ஒரே நிமிஷம்… ஆனா எங்க கையால அதை செய்ய விரும்பல.  எல்லார் வாழ்க்கையும் நீங்க அழிச்ச மாதிரி… இப்போ உங்க முடிவையும் நீங்களே தேடிக்கங்க.  அதுதான் எங்க எல்லாரோட தீர்மானமும்” என்பார். 

அந்த ஊர் மக்களைப் பார்த்து விஜயன், “நீங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருந்தீங்க.. ஆனா உங்க எல்லாரயும் நான் இன்னைக்கு என்னப் போல மாத்திட்டேன்…  நான் செஞ்சதுலேயே பெரிய தவறு இதுதான்“ என்று கூறி விட்டு, தன் குழந்தைகளை அணைத்து முத்தமிட்டு விட்டு ஆற்றில் இறங்கி இறந்து போவார்.

விஜயனைப் போலவே இறந்து போக வேண்டியவர் யாரென்றால் கருணாநிதிதான்.  கருணாநிதியை பொறுத்துக் கொள்ளவே முடியாத ஒரு நிலைக்கு நம்மைத் தள்ளியிருக்கிறார்.   அவரது 60 ஆண்டுகால பொது வாழ்க்கை முழுமையுமே, பொய், புரட்டு வஞ்சகம் சூது, இதைத் தவிர வேறு இல்லை.

தமிழினத் தலைவன், தமிழினத் தலைவன் என்று சொல்லிக் கொண்டே இனத்தை கறுவறுத்திருக்கிறார் கருணாநிதி.   திருக்குவளையிலிருந்து ஒரு சாதாரண மனிதராக சென்னை வந்து, தன் பேச்சு மற்றும் எழுத்துத் திறமையினால் சமூகத்தில் முக்கிய நபராக உருவாகி, இன்று பல ஆயிரக்கணக்கான கோடிகளை அவர் பரிவாரங்கள் சம்பாதித்து, தமிழகத்தை சூறையாட வழிகோலியதைத் தவிர தமிழ்ச்சமூகத்துக்கு ஏதாவது உருப்படியாக செய்திருக்கிறாரா என்றால் இல்லை.

தமிழினத்தின் தலைவன் என்று தன்னை அழைத்துக் கொள்வதில் தீராத இன்பம் காணும் கருணாநிதி என்ற ஒரே நபர்தான் ஈழப்போர் இறுதிக் கட்டத்தை எட்டியதற்கும் முள்ளி வாய்க்கால் படுகொலைகள் நடைபெற்றதற்கும் ஒரே பொறுப்பு.   ஈழத்தில் போரை நிறுத்து என்ற ஒற்றை முழக்கத்தோடு தமிழகமே பொங்கியெழுந்து போராட்டங்களில் ஈடுபட்டபோது, ஒரு புறம் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது காவல்துறையை விட்டு மிருக்கத்தனமாக ஒடுக்குமுறையில் ஈடுபட்டார்.  

மற்றொரு புறம், அந்தப் போராட்டங்களை நீர்த்துப் போகச்செய்ய என்னென்ன தகிடுதத்தங்களெல்லாம் முடியுமோ அத்தனை தகிடுதத்தங்களிலும் ஈடுபட்டார்.

ஈழப்போர் உச்சத்தில் இருந்தபோது அவர் இழைத்த துரோகங்களுக்கான பல்வேறு விளக்கங்களை அவ்வப்போது அளித்து வருகிறார் கருணாநிதி. ஆனால், கருணாநிதி நினைத்திருந்தால், அந்த யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியும் என்பது மட்டுமே உண்மை.   போர் நிற்கிறதோ இல்லையோ….  என் இனத்தை அழிக்கும் அரசுக்கு துணை நிற்கமாட்டேன் என்று கருணாநிதி ஆதரவை வாபஸ் வாங்கியிருந்தாரென்றால் அதற்குப் பிறகு எப்படி மத்திய அரசு தாக்குப்பிடித்திருக்கும் ?   2009 ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும், 2004 ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உண்டு.  2004 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் கருணாநிதி மற்றும் திமுகவை மட்டுமே நம்பியிருந்தது.   அன்று திமுக ஆதரவை வாபஸ் வாங்கியிருந்தால், அரசு கவிழ்ந்திருக்கும்.  ஆனால், ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை குடும்பத்தோடு எண்ணிக்கொண்டிருந்தார் கருணாநிதி. 2008 ஆண்டில் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடைபெற்று முடிந்ததும், பல ஆயிரக்கணக்கான கோடிகள் தமிழகத்தை நோக்கிப் படையெடுத்தது.  அந்த நேரத்தில்தான் ஈழத்தில் போர் உச்சகட்டத்தை அளித்தது.

அப்போது சிங்கள ராணுவத்திற்கு ராடார் உள்ளிட்ட கருவிகளையும், ஆயுதங்களையும், பயிற்சியையும் இந்தியாவில் அளித்து வந்தது மத்திய அரசு.  இவையெல்லாம் நடைபெற்று வந்தது ஆட்சியில் இருந்த கருணாநிதிக்கு உளவுத்துறை மூலமாக தெரிந்தே இருந்தது.   ஆனால் மீனுக்கு வாலையும் பாம்புக்கு தலையையும் காட்டி கருணாநிதி தொடர்ந்து நாடகமாடி வந்தார்.   தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று அறிவித்தார்.  பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதங்களை யாரிடம் கொடுக்க வேண்டும் ?  

மக்களவை மற்றும் மாநிலங்களவை சபாநாயகரிடம்தானே… ஆனால் தானே சபாநாயகர் போல அனைத்து ராஜினாமா கடிதங்களையும் வாங்கி வைத்துக் கொண்டார்.  இதில் கனிமொழி மிகவும் சிறப்பு…. “டாடி… இந்தாங்க டாடி லெட்டர்” என்று வீட்டுக்குள்ளேயே கடிதத்தை கொடுத்துவிட்டார்.  ஆனால், திமுக அமைச்சர்களும், கருணாநிதி குடும்பமும் 2ஜி விவகாரத்தில் அடித்த கொள்ளையைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்த காங்கிரஸ் கட்சி, இந்த நாடகத்தை உதாசீனப்படுத்தியது.  பிரணாப் முகர்ஜியை சென்னை அனுப்பியது.  பிரணாப் வந்து கருணாநிதியைப் பார்த்ததும் ராஜினாமா என்று வேகமாகக் குரல் எழுப்பிய கருணாநிதி "மத்திய அரசின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக இருக்கிறது" என்று அறிவித்து, ராஜினாமா கடிதங்களை கக்கத்தில் சொருகிக் கொண்டார்.   மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது, அந்த நடவடிக்கை கருணாநிதிக்கு அப்படி என்ன திருப்தியை ஏற்படுத்தியது என்பதை கருணாநிதியும் விளக்கவில்லை, மத்திய அரசும் விளக்கவில்லை.  ஆனால், இந்த அயோக்கியர்கள் இந்த நாடகத்தை புன்முகத்தோடு நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில், இலங்கையில் பெண்களும், குழந்தைகளும், கைவேறு கால்வேறாக சிதைந்து கொண்டிருந்தார்கள்.  அவர்கள் அங்கே சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் தனது குரூரமான நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தார் கருணாநிதி. ஒரு சில நாட்களிலேயே டெல்லி வந்த ராஜபட்சே, மிகுந்த ஆணவத்தோடு போர்நிறுத்தம் கிடையாது என்றார்.  ராஜபட்சேயின் அந்த அறிவிப்பு கருணாநிதிக்கான அறிவிப்பு.

இதையடுத்து, தன் நாடகங்களின் பல்வேறு அத்தியாயங்களை சளைக்காமல் தொடங்கினார் கருணாநிதி. ‘அனைத்துக் கட்சிக் கூட்டம்’, ‘சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம்’ ‘தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம்’, ‘மனிதச் சங்கிலி போராட்டம்,   ‘பிரதமருக்கு தந்தி அனுப்பும் போராட்டம், ‘டெல்லியில் பிரதமருடன் சந்திப்பு’, ‘வேலை நிறுத்தம்’, ‘பேரணி’ என நாடகத்தின் பல்வேறு அத்தியாயங்கள் அடுத்தடுத்து நடைபெற்றன.

ஈழப்போரை நிறுத்து என்று மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவித்து மாணவர் போராட்டத்தை முடக்கினார் கருணாநிதி.  தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தியபோது, அவர்கள் மீது வழக்கு தொடுத்து அவர்கள் போராட்டத்தை ஒடுக்கினார் கருணாநிதி.  ஆனால், வழக்கறிஞர்களின் போராட்டத்தை மட்டும் கருணாநிதியால் ஒடுக்க முடியவில்லை.   கருணாநிதி மற்றும் சோனியாவின் படங்களை துணிச்சலோடு தினமும் எரித்தார்கள் வழக்கறிஞர்கள்.  வாக்காளர் அடையாள அட்டைகளைக் கொளுத்தினார்கள்.  ஒரு மாதத்துக்கு மேல் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டார்கள்.   அப்படிப் போராடிய வழக்கறிஞர்களை காவல்துறையை விட்டு மிருகத்தனமாகத் தாக்கினார் கருணாநிதி.
Picture_049
DSC_0651
இந்தக் கொடுமையான நாடகத்தின் உச்சமே கருணாநிதியின் உண்ணாவிரதம்.    கொத்துக் குண்டுகள் வீசப்பட்டு, மருந்துகளோ, ரத்தமோ, மருத்துவ வசதியோ இல்லாமல், காயங்களில் ஏற்பட்ட ரத்தப்போக்கினாலேயே சித்திரவதைப் பட்டு ஈழத் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கையில், கொஞ்சம் கூட கூசாமல் மூன்று மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார் 

கருணாநிதி.   இலங்கையில் உயிர்க்காக்கும் மருந்துகள் இல்லாமல் ரத்தப்போக்கிலேயே உயிர் விட்டுக் கொண்டிருந்த மக்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று, தமிழகத்திலிருந்து மருந்துகள் மற்றும் ரத்த உறைகளைக் கடத்த புலிகள் இயக்கம் 2008 மற்றும் 2009ல் கடும் முயற்சிகளை எடுத்தது.  வழக்கமாக மருந்துகள் கடத்தும் உணர்வாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு விட்டதால், வெறும் கடத்தல் தொழிலில் ஈடுபட்டவர்கள் மூலம், மருந்துகளையும் ரத்த உறைகளையும் இலங்கைக்கு கடத்தி, எப்படியாவது போரில் காயம்பட்ட புலிகள் மற்றும் பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கடும் முயற்சிகளை எடுத்தது புலிகள் இயக்கம்.  அப்படி தமிழகத்திலிருந்து அப்போது கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்து, அவர்கள் கடத்திய மருந்துகள் எதையுமே கணக்கில் காட்டாமல், அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மருந்துகளையும் ரத்த உறைகளையும் அழித்துவிட்டு, வெறும் சாட்டிலைட் தொலைபேசிகளை வைத்திருந்தார்கள் என்று வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார் கருணாநிதி.

11
"போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது" என்று கூறி தனது உண்ணாவிரதத்தை மூன்று மணி நேரத்தில் முடித்துக் கொண்டதற்கு அடுத்த நாள், "கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடைபெறுவதாக செய்திகள் வந்திருக்கிறதே" என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பியதற்கு, "மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பார்களே, அதைப்போலத்தான்..." என்று மனசாட்சியே இல்லாமல் பதிலளித்தார் கருணாநிதி.

மே 15 முதல் மே 19க்குள் ஈழப்போர் முடிவுக்கு வந்தது.  அனைத்தும் முடிந்து விட்டது. நாம் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றத் தவறி விட்டோம் என்பதை உணர்ந்து கையறு நிலையில், தமிழகமே சோகத்தில் ஆழ்ந்திருந்த சமயம்.   இப்படிக் கோட்டை விட்டு விட்டோமே… நம்மால் அந்த அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற முடியவில்லையே…  இனி என்ன செய்வது ?  என்று ஒட்டுமொத்த தமிழகமும் சோகத்தில் ஆழ்ந்திருந்தது.   அந்த சமயத்தில் 22 முதல் 24 மே 2009 வரை, கருணாநிதியின் செல்ல மகள் கனிமொழி நீரா ராடியாவோடு என்ன பேசிக்கொண்டிருந்தார் என்பதை கேளுங்கள். இணைப்பு.

ஒரு சில மாதங்களுக்குள் தன் மகள் கனிமொழி தலைமையில், திமுகவின் தலித் பிரிவுத் தலைவர் திருமாவளவனோடு தமிழக எம்.பிக்கள் அனைவரும் இலங்கைக்கு இன்பச் சுற்றுலா சென்றனர். இன்பச் சுற்றுலா சென்ற கனிமொழி, இலங்கையில் போர் முடிந்த ஒரு சில மாதங்களிலேயே 50 ஆயிரம் பேர் மறு குடியமர்வு செய்யப்பட்டு விட்டதாகத் தெரிவித்தார். 

இணைப்பு.  ஒரு சில மாதங்களிலேயே இலங்கை அரசு, தமிழர்கள் நலனுக்காக இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்தார். இன்று இலங்கை அரசை போர்க் குற்றத்துக்காக தண்டிக்க வேண்டும் என்று சொல்லும் இதே கனிமொழியும், திமுகவும், அக்டோபர் 2009ல், போர்க்குற்றம் புரிந்த இதே ராஜபட்சேவோடு விருந்துண்டு பரிசுப்பொருட்களைப் பெற்று அகமகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சுற்றுலாக் குழுவினரை சென்னை விமான நிலையத்தில் வரவேற்ற கருணாநிதி, இலங்கை முகாம்களில் தமிழர்கள் சித்திரவதை செய்யப்படவில்லை என்று பேட்டியளித்தார்.

481096_553652491323321_1583571097_n

ஈழத் தமிழர்கள் செத்த ஈரம் காய்வதற்குள், தமிழ்மொழிக்கான மாநாடு நடத்துகிறேன் என்று செம்மொழி மாநாடு என்று தனது அடுத்த குரூர நாடகத்தைத் தொடங்கினார் கருணாநிதி.  

அந்த செம்மொழி மாநாட்டை எதிர்த்து சுவரொட்டி ஒட்டியவர்கள் கைது செய்யப்பட்டனர்.  செம்மொழி மாநாட்டை எதிர்த்துப் பேசியவர்கள் அனைவரும் ஏதாவதொரு வழக்கில் கைது செய்யப்பட்டனர்.  

 2009 மற்றும் 2010ல் கருணாநிதி அரசால் கைது செய்யப்பட்டவர்கள், அந்த வழக்குகளுக்காக இன்னும் நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.   செம்மொழி மாநாட்டுக்கு எதிராக தமிழின உணர்வாளர்கள் போராட்டம் நடத்தி விடக்கூடாதே என்பதற்காகவே கருணாநிதியின் தளபதி ஜாபர் சேட் நடத்திய தண்டவாள குண்டு வெடிப்பு நாடகத்துக்கு அமைக்கப்பட்ட 25 சிறப்புப் படைகள் என்ன ஆனது என்று தெரியவில்லை.  தனது நலனுக்காக எந்த அளவுக்கு கருணாநிதி போவார் என்பதற்கு விழுப்புரம் தண்டவாள குண்டு வெடிப்பு நாடகம் ஒரு சிறந்த உதாரணம்.

712_552386588116578_1832417765_n

ஈழப் போரின் போதும், அதற்குப் பின்பும், கருணாநிதியின் நயவஞ்சகமும், துரோகமும் அம்பலப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.  ஆனால், மூவர் தூக்கு விவகாரத்தில் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை, இனி அவரை சகித்துக் கொள்ள இயலாது என்ற நிலைக்கு தள்ளியிருக்கிறது.

“தூக்குத் தண்டனை என்பது அறவே ரத்து செய்யப்பட்டு சட்டப் புத்தகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதே நமது உறுதியான நிலைப்பாடு. இதையே நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால் இந்தக் கருத்தைப் பத்திரிகையாளர்கள் சிலர் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து வந்தாலுங்கூட, இப்போது இந்தக் கருத்து புதிய வலிவோடு அரசியல் அரங்கமேறியிருப்பதை மனதில் கொண்டு, அதனை மேலும் வலியுறுத்தும் வண்ணம் மீண்டும் ஒரு முறை இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். மரண தண்டனை இருக்கலாமா அல்லது அதை நீக்க வேண்டுமா என்ற பிரச்சினை உலகமெங்கும் மிகப் பெரிதாக எழுப்பப்பட்டு விரிவாக விவாதிக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில் நேற்றைய தினம்    (12-4-2013), இந்திய உச்ச நீதி மன்றம் "கருணை மனு மீது முடிவெடுக்கக் குடியரசுத் தலைவர் தாமதம் செய்ததைக் காரணம் காட்டி மரண தண்டனையைக் குறைக்க வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது" என்று வழங்கியுள்ள தீர்ப்பு, தூக்கு தண்டனையை எதிர்பார்த்திருக்கும் பலருடைய மனதிலும், ஏன் நம்முடைய எண்ணவோட்டத்திலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி என்ற நால்வரில், நளினிக்கு தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கான முறையான ஏற்பாடுகளைத் தி.மு. கழக அரசு செய்தது -– இன்றைக்கும் நமக்கு மன ஆறுதலைத் தருகிறது. ஒரு பெண் என்பதால் - மேலும் ஒரு குழந்தையின் தாய் என்பதால் - நளினிக்குக் கிடைத்துள்ள அந்தச் சலுகை விரிவுபடுத்தப்பட்டு - இருபதாண்டு காலத்திற்கு மேலாக ஆயுள் தண்டனையை நிறைவு செய்து விட்ட கைதிகளாகச் சிறையிலே இருந்து வாடும் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய இவர்களைத் தொடர்ந்து கைதிகளாகவே அடைத்து வைத்திருக்காமல் அவர்களை விடுவித்திடவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்; கருணை காட்டப்பட வேண்டும்; 

அவர்கள் மீது சாற்றப்பட்ட குற்றம் மிகப் பெரியது என்ற போதிலும், அவர்கள் அனுபவித்த மிக நீண்ட தண்டனைக் காலத்தைக் கருதிப் பார்த்து மனிதாபிமானத்தோடு மன்னிக்க முன் வர வேண்டும் என்று ஏற்கனவே நான் கூறி யிருக்கிறேன்; இப்பொழுதும் அதையே கூறுகிறேன். தமிழகச் சட்டப் பேரவையில் 29-8-2011 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா 110வது விதியின் கீழ் படித்த அறிக்கையில் "கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை ஏற்று மேதகு ஆளுநர் அவர்கள் 21-4-2000 அன்று நளினியின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியமைக்க ஒப்புதல் அளித்தார்" என்று சொல்லியிருக்கிறார். அதே முறையைப் பின்பற்றி சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய மூன்று பேரின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டுமென்று தான் நானும், தமிழகத்திலே உள்ள வேறு சில கட்சிகளும், ஏன் உலகத் தமிழர்களும் ஒரு மனதோடு கோரிக்கை விடுத்திருந்தோம்.

sonia_karunanidhi_20110131


இது போன்ற நிகழ்வுகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கிட ஒரு மாநில அரசு எந்த விதிமுறைப்படி அவர்களின் மரண தண்டனையை மாற்றியமைக்க முடியுமோ அவ்வாறு தமிழகத்தில் தி.மு. கழக அரசு பொறுப்பில் இருந்த போது மாற்றியமைத்து - அவர்களை வாழ விட்டிருக்கிறது என்பதற்கு கடந்த கால உதாரணங்களாக - தோழர்கள் தியாகு, கலியபெருமாள் போன்றவர்கள் திகழ்கிறார்கள். இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தியாகு - நல்ல எழுத்தாளராக, கட்டுரையாளராக, புத்தகங்கள் வெளியிடுபவராக இந்தச்சமுதாயத்தில் இப்போது மதிப்புடன் உலவுவதைப் பார்த்தாவது சாந்தனுக்கும், முருகனுக்கும், பேரறிவாளனுக்கும் வாழ்வளித்து - அவர்கள் அறிவாற்றலை சமுதாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றைய தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதோடு கடமை முடிந்து விட்டதாகக் கருதாமல் - மனித நேயத்தோடு பிரச்சினையை உண்மையிலேயே அணுக வேண்டுமானால் - அதற்குரிய சட்ட விதிமுறைப்படி ஏற்கனவே கழக அரசில் கடைப்பிடிக்கப்பட்ட அணுகுமுறையின் அடிப்படையில் - உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, அதிலே இந்த மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி – அந்தத் தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்து, அவர்களை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும் என்று ஏற்கனவே நான் கேட்டுக் கொண்டதையே மீண்டும் இப்போது வலியுறுத்துகிறேன்.”

இதுதான் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை. இந்த அறிக்கையை மேம்போக்காகப் படித்தால், கருணாநிதி மூன்று தமிழரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக முனைப்போடு இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பதாகத் தோன்றும்.  ஆனால் இந்த அறிக்கையின் பின்னணியில் நயவஞ்சகமான உள்நோக்கம் இருக்கிறது.

கடந்த வாரம் உச்சநீதிமன்றம் தேவேந்தர் சிங் புல்லார் வழக்கில் அளித்த தீர்ப்பு முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் வழக்குக்கு முழுமையாகப் பொருந்தும். இன்னும் சொல்லப்போனால், அந்த தீர்ப்பே மூவர் வழக்கை மனதில் வைத்து கொடுக்கப்பட்டதே.   தேவேந்தர் சிங் புல்லார் அவருக்கு தூக்கு விதித்ததை எதிர்த்து செய்த மேல் முறையீடு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வால் விசாரணை செய்யப்பட்டது. அப்படி விசாரணை செய்யப்பட்டபோது மூன்று நீதிபதிகளுள் ஒரு நீதிபதியாக இருந்த எம்.பி.ஷா, புல்லார் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகமற நிரூபிக்கப்படவில்லை என்று புல்லாரை விடுதலை செய்யப் பரிந்துரைத்தார்.  மீதம் உள்ள இரண்டு நீதிபதிகள் நீதிபதி ஷாவின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாமல், புல்லாருக்கு மரண தண்டனையை உறுதி செய்தார்கள்.

இந்த அடிப்படையில் புல்லாரின் வழக்கு முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் வழக்கை விட சட்டரீதியாக வலுவானது.  புல்லார் மீண்டும் குடியரசுத் தலைவரை அணுகியோ, உச்சநீதிமன்றத்தை அணுகியோ, மரண தண்டனையை வாழ்நாள் சிறையாகக் குறைக்க முடியும்.  ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் கே.டி.தாமஸ், சிக்ரி மற்றும் வாத்வா ஆகியோர் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளனுக்கு தூக்கு விதிக்கவேண்டும் என்று ஒத்த தீர்ப்பை அளித்துள்ளனர்.  ஆகையால் இந்த மூவருக்கு மரண தண்டனையை வாழ்நாள் சிறையாக மாற்ற ஒரே அடிப்படை, அவர்களின் கருணை மனுவின் மீதான முடிவெடுப்பதில் உள்ள நீண்ட தாமதமே.

இந்த அடிப்படையில் புல்லார் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.  புல்லார் வழக்கில் நீண்ட தாமதம் என்ற முக்கியமான விஷயத்தை ஆராய்ந்த உச்சநீதிமன்றம், நீண்ட தாமதம் மட்டுமே ஒருவரின் மரண தண்டனையைக் குறைப்பதற்கு காரணமாக அமைய முடியாது என்று கூறியுள்ளனர்.  இந்தத் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டால், மூவரின் வழக்கில் இதே தீர்ப்பைத்தான் உச்சநீதிமன்றம் வழங்க வேண்டும்.

இது கருணாநிதிக்கு நன்றாகத் தெரியும்.  இதைத் தவிரவும் கருணாநிதிக்கு தெரிந்த மற்றொரு விஷயம் என்னவென்றால், 2014ல் வரக்கூடிய தேர்தலில் மீண்டும் வெற்றி பெருவோமோ மாட்டோமோ என்ற சூழலில் நம் கணவரைக் கொன்றவர்களை எப்படியாவது தூக்கிலிட்டு விட வேண்டும் என்று சோனியா முனைவார் என்பதும் கருணாநிதிக்குத் தெரியும்.   எப்படிப்பார்த்தாலும் காங்கிரஸுக்கு தமிழக மக்கள் வாக்களிக்கப் போவதில்லை.  பிறகு எதற்காக இவர்கள் மூவரையும் உயிரோடு வைத்திருக்க வேண்டும். நாளை ஒரு வேளை பிஜேபி ஆட்சியமைக்க நேரிட்டால், இவர்கள் மூவரையும் தூக்கிலிட்டு பழி வாங்க முடியாது என்ற மாஃபியா மனநிலை சோனியாவுக்கு உண்டு என்பதும் கருணாநிதிக்குத் தெரியும்.

ஆனால், தற்போது இந்த அறிக்கையில் என்ன கோருகிறார் ?
“இருபதாண்டு காலத்திற்கு மேலாக ஆயுள் தண்டனையை நிறைவு செய்து விட்ட கைதிகளாகச் சிறையிலே இருந்து வாடும் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய இவர்களைத் தொடர்ந்து கைதிகளாகவே அடைத்து வைத்திருக்காமல் அவர்களை விடுவித்திடவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்”  மூவரின் தூக்கை ரத்து செய்வதோடு அவர்களை விடுதலையும் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார் கருணாநிதி.  மரண தண்டனையைக் குறைப்பதே இயலாத காரியமாக உள்ள சூழலில் அவர்கள் மூவரையும் விடுவிக்க வேண்டும் என்று கருணாநிதி கோருவது ஜெயலலிதாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே.  கருணாநிதியின் உள்ளார்ந்த அவா என்ன தெரியுமா ?   மூவர் வழக்கும், புல்லார் வழக்கின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு, முருகன் சாந்தன் மற்றும் பேரறிவாளன் உள்ளிட்டோர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்திலேயே தூக்கிலிடப்பட வேண்டும். அப்படி நடப்பதன் மூலம், மக்களின் கோபம் ஜெயலலிதா மீது திரும்பும், இதனால் தன் மீதான் பழி மறந்து போகும் என்றே கணக்கிடுகிறார் கருணாநிதி.

ஜெயலலிதா அமைச்சரவையைக் கூட்டி, மூவரின் மரண தண்டனையை ரத்து செய்வதோடல்லாமல், அவர்களை விடுதலையும் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் கருணாநிதி அவர் ஆட்சியில் இருக்கையில் என்ன செய்தார் ?   2000ம் ஆண்டில் முதலமைச்சராக இருந்தது இதே கருணாநிதிதானே ?  அப்போது கருணாநிதி நளினி உள்ளிட்ட நால்வரின் தூக்கையும் ரத்து செய்ய வேண்டும் என்று ஏன் பரிந்துரைக்கவில்லை ?
என் அமைச்சரவையின் பரிந்துரையில் நளினியின் தூக்கு ஆயுளாக மாற்றப்பட்டது என்று மார்தட்டிக் கொள்ளும் கருணாநிதி, மற்ற மூவர்  விவகாரத்தில் ஏன் இந்த முடிவை எடுக்கவில்லை ?  அப்போது மூவரும் தூக்கிலிடப்படட்டும் என்று வாளாயிருந்து விட்டு தற்போது மரண தண்டனையை ரத்து செய்து, அவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பது அயோக்கியத்தனமா இல்லையா ?

நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டதும், கருணாநிதியால் கிடையாது.  முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரியின் மகள் மோகினி கிரி, மகளிர் ஆணையத் தலைவராக இருந்தார்.  அவர் வேலூர் சிறை சென்று, நளினியைச் சந்தித்த பிறகு, நேரடியாக சோனியாவைச் சந்தித்து நளினி விவகாரம் குறித்துப் பேசினார்.  இதைத் தொடர்ந்து சோனியா காந்தி கருணாநிதி அரசுக்கு கடிதம் எழுதினார்.  இந்தக் கடிதத்தின் அடிப்படையிலேயே நளினியின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற கருணாநிதி அரசு பரிந்துரை செய்தது.  ஒரு வேளை சொனியா அப்படி ஒரு கடிதத்தை எழுதவில்லை என்றால் கருணாநிதி அப்படி ஒரு முடிவை அமைச்சரவையை கூட்டி எடுத்திருப்பாரா என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.

07vbg_nalini_775056f
மூவரையும் விடுதலை செய்ய வேண்டும்… அவர்களை சிறையிலேயே வைத்திருக்கக் கூடாது என்று பேசும் கருணாநிதி தனது ஆட்சியில் என்ன செய்தார் தெரியுமா ?

2006ம் ஆண்டு அண்ணா பிறந்த தினத்தில் 15.09.2006 அன்று அரசாணை எண் 875 உள் (சிறை 4) துறை நாள் 14.09.2006ன் படி, 14 ஆண்டுகள் சிறை முடித்த 27 வாழ்நாள் சிறையாளிகள் விடுதலை செய்யப்பட்டனர்.  14 ஆண்டுகள் முடித்தவர்களை விடுதலை செய்த கருணாநிதி 16 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ராஜீவ் வழக்கு தண்டனை சிறைவாசிகளான நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரனை விடுதலை செய்யவில்லை.

2007ம் ஆண்டு அண்ணா பிறந்தநாள் அன்று 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை முடித்த 190 வாழ்நாள் சிறைவாசிகள் அரசாணை எண் 1326 உள் (சிறை 4) துறை நாள் 12.09.2007 ன் படி விடுதலை செய்யப்பட்டவர்கள்.  இப்போதும் ராஜீவ் வழக்கில் சம்பந்தப்பட்ட நால்வரும் விடுதலை செய்யப்படவில்லை.

2008ம் ஆண்டு என்ன நடந்தது தெரியுமா ?  மதுரை சிபிஎம் கவுன்சிலர் லீலாவதியை கொலை செய்த அழகிரியின் கைத்தடிகளை விடுதலை செய்வதற்கென்றே, அந்த ஆண்டு வெறும் ஏழே ஆண்டுகள் தண்டனை முடித்த 1405 கைதிகளை விடுதலை செய்தார் கருணாநிதி. (அரசாணை எண் 1155 உள் (சிறை 4) துறை நாள் 11.09.2008). இப்போதும் ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கருணாநிதி கண்ணுக்குத் தெரியவில்லை.

ஏழே ஆண்டுகள் சிறைத்தண்டனை முடித்த 1405 கைதிகளை விடுதலை செய்யத் தெரிந்த கருணாநிதிக்கு, எந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் மரண தண்டனையை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்கிறாரோ அதே ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் கண்ணுக்குத் தெரியாமல் போய் விட்டனர்.  லீலாவதியின் உயிரை விட, ராஜீவ் காந்தியின் உயிர் எந்த விதத்தில் உயர்ந்தது என்பதை கருணாநிதிதான் விளக்க வேண்டும்.

இன்று முதலைக் கண்ணீர் வடிக்கும் கருணாநிதி செய்ததிலேயே மிகப்பெரிய அயோக்கியத்தனம் எது தெரியுமா ?  நளினியை முன் விடுதலை செய்ய மறுத்தற்காக கூறிய காரணம்.

14 ஆண்டுகள் சிறைத் தண்டனையை கழித்த ஆயுள் சிறைவாசிகளுக்கு சிறை நிர்வாகம் அமைக்கும் அறிவுரை குழுமம் (Advisory Board) முன் ஆஜராகி அவர்களின் நன்னடத்தை காரணமாக முன்விடுதலை செய்ய பரிந்துரைக்கப்பட உரிமை உண்டு.

2006ம் ஆண்டு நளினியை முன் விடுதலை செய்ய கருணாநிதி அரசு மறுத்து ஒரு ஆணையை வெளியிட்டது. அறிவுரைக் குழு சரிவர முடிவெடுக்கவில்லை, குழுவே தவறாக அமைக்கப்பட்டது என்று நளினி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.  நீதிமன்றம் அறிவுரைக் குழுமத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்று உத்தரவிட்டது.  நீண்ட தாமதத்துக்குப் பின் அறிவுரைக் குழுமத்தைக் கூட்டிய கருணாநிதி அரசு, நளினியை விடுதலை செய்ய இயலாது என்று அரசாணை எண் 313 உள் (சிறை 4) நாள் 24.03.2010 வெளியிட்டது.   இதற்கு கருணாநிதி அரசு சொன்ன காரணம் என்ன தெரியுமா ?
நளினியை விடுதலை செய்தால் அவர் ராயப்பேட்டையில் தங்கியிருக்கும் தனது தாயாரோடு வசிப்பார்.   ராயப்பேட்டை பகுதியில் முக்கிய அரசியல் தலைவர்கள் வசிக்கிறார்கள்.   அமெரிக்க தூதரகமும் அந்தப் பகுதியில்தான் அமைந்துள்ளது.   இதன் காரணமாக நளினியை விடுவித்தால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.  ஆகையால் நளினியை விடுவிக்க முடியாது என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இப்படிப்பட்ட அயோக்கியத்தனத்தை அரங்கேற்றிய கருணாநிதிதான் இன்று மூவரை விடுதலை செய்ய வேண்டும் என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார்.   கருணாநிதியின் துரோகங்களை இத்தனை நாட்களும் பார்த்துக் கொண்டிருந்த நமக்கு, மூவர் தூக்கு விவகாரத்தில் இவர் மேற்கொண்டு வரும் பசப்பு நாடகங்கள் அருவருப்பை மட்டும் அல்லாமல், கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது.

மூவர் தூக்கு விவகாரத்தில் மீண்டும் ஒரு அரசியல் நாடகத்தை ஆடியதன் மூலம், கருணாநிதி உயிரோடு இருப்பதற்கான அத்தனை முகாந்திரங்களையும் இழந்து விட்டார்.  உதிரிப்பூக்களில் வரும் சுந்தரவடிவேலு போல நீங்களும் இறந்து விடுங்கள் கருணாநிதி.  தயவு செய்து இறந்து விடுங்கள்.

நன்றி சவுக்கு.

 

No comments: