Friday, April 26, 2013

மறக்க முடியுமா ?

27 ஏப்ரல் 2009.  தமிழின வரலாற்றில் மறக்க முடியாத நாள். கருணாநிதி தமிழினத்துக்கு செய்த துரோகத்தின் உச்சம் அந்த உண்ணாவிரத நாடகம்.  பொங்கியெழுந்த போராட்டங்களை முனை மழுங்கி நீர்த்துப் போகச் செய்த ஒரு கருப்பு தினம் ஏப்ரல் 27.  தலைமாட்டில் துணைவியும், கால்மாட்டில் மனைவியும் அமர, குளிர்சாதன வசதியோடு கருணாநிதி அரங்கேற்றிய வேதனையான நாடகம் ஏப்ரல் 27.
நினைத்தாலே நெஞ்சு வேதனைப்படுகிறது.....  போர் நின்று விட்டது என்று போலி அறிவிப்பு செய்த நாள் ஏப்ரல் 27.  அன்று போரை நிறுத்தியிருந்தால் கூட மே 17 நிகழ்ந்திருக்காது.  அன்று ஆதரவை வாபஸ் வாங்கியிருந்தால் கூட, போர் நிறுத்தம் நடைபெற்றிருக்கும். தொடர்ந்து கொத்து குண்டுகள் வீசப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், மழை விட்டாலும் தூவானம் விடாது என்று படுகொலையை நியாயப்படுத்திய கருணாநிதியை தமிழினம் இருக்கும் வரை மன்னிக்கக் கூடாது.
இன்று தனி ஈழம் ஒன்றே தீர்வு என்று கபட நாடகம் ஆடும் கருணாநிதியின் கடந்தகால துரோகங்களை நாம் ஒரு நாளும் மறக்கக் கூடாது. அப்படி மறக்காமல் நினைவு படுத்தத்தான் இந்தக் கவிதை.
m_karunanidhi_20130401_1

தீபாவளி நாயகனின்
திருக்குலத்தில் பிறப்பெடுத்து
காலை இரவென்று - மிக
கச்சிதமாய் கடை பரப்பி
தாரம் பல கண்டு - தன்
தலைமுறைகள் தான் நிமிர
மாய வினோதங்கள்
மாய்மாலம் தினம் புரிந்து
ஆண்டு தொண் நூறு
அண்மித்த போதினிலும்
மீண்டும் ஒரு தீபாவளி
விளையாதோ மெய்ப்பொருளே.!

சித்திரை உதித்தால் அங்கே
சோளக காற்று வீசும்,
சோவென மரங்கள் கூவம்,
தொல்லைகள் மறந்தே போகும்.
ஈழத்து காற்றும் மண்ணும்
இன்றொடு நான் காண்டாக,
சாக்களை கண்டு தீர்ந்த
தரிசென மாறிப் போச்சு.

கோவிலும் திருவிழாவும்
குதூகலம் பெருக்கி நிற்கும் -மேல்
வானமும் வெளுத் துயர்ந்து
வளி வீசி பனை பழுக்கும்.
காளையர் வீரம் மேவ
கன்னியும் களம் கண்டாளே.
பாரதி கண்ட பூமி
பரகதி யாகிப் போச்சு.

வீரமும் தமிழும் வீச்சாய்
விளைந்தொரு செருக்கோ டங்கு
மானுடன் தமிழன் வாழ்ந்தான்
மண்ணள்ளி போட்டாரே காண் - நான்
காலடி பதித்த மண்மேல்
காற்றலை தவழ்ந்து வீசி
ஆற்றிடை நடப்பதுபோல்
அன்றொரு இனிமை கண்டோம்.

ஆண்டுகள் நான்காய் ஆச்சு,
அனைத்துமே கனவாய் போச்சு,
வஞ்சகம் சூது மேவி - எல்லாம்
வழிப்பறி போல ஆச்சு.
தந்திரன் "கருணா" செய்த
சாகஸ தந்திரத்தால் - என்
தாய் மண்ணே சமாதியாச்சு,
சரித்திரம் இழவாய் போச்சு.

சுயநலம் தலையை மூட
சொற்ப நாள் பதவிக்காக
போர்த்தடை என்று கூவி - தாத்தா
பூட்டிய நாடகத்தால்,
கூத்தது நடந் திரண்டு
நாட்களில் எல்லாம் போச்சு.
இன்றொடு நான்காம் ஆண்டு
இரங்கலை மட்டும் காண்போம்.

ஏப்பிரல் இருபத் தேழு -தமிழ்
எழுச்சியின் கொதிப்புக் கண்டு -திசை
மாற்றியோர் விடுப்புகாட்ட- தாத்தா
பூட்டினார் உண்ணா நோன்பு.
ஆப்பினை எடுத்து வைத்தார்.
அரை நாளை தெரிவு செய்தார்.
காற்றொடு களையுமாற
கடற்கரை தெரிவு செய்தார்.

தேய்பிறை நிலவு போல
சுருக்கியே முகத்தை கோணி
பாசாங்காய் குரல் கொடுத்தார் -அப்
"பாவிபோல்" அவரை கண்டோம்.
காலையில் வந்தார் வீழ்ந்தார்
கடற்கரை நிறையக்கண்டேன்.
நேரிடை கூலர் ரண்டு
நிச்சிய மற்ற பார்வை
ஆச்சியர் இருவர் வந்து
அழுத்தும் உடைந்தே போனோம்.

போர் அங்கு நிற்காவிட்டால்
பரகதி அடைவே என்றார்.....

நெஞ்சமே உடைந்து நூலாய்
நிம்மதி இழந்தேன் என்றார்.....

அனைத்தையும் துறப்பேன் என்றார்
அன்னமே உண்ணேன் என்றார்....

ஈழத்தார் இறக்கும் செய்தி
இதயத்தை கிழிக்குதென்றார்.....

தூக்கமே தொலைந்து நாளாய் - நெஞ்சம்
துடிப்பதாய் விட்டார் வாணம்.....

இத்தனை வாணம் விட்டு
இறுவெட்டில் பதிந்தபோதும்
உறுதியாய் இருப்பார் என்று- நான்
ஒருபோதும் நம்பவில்லை!.

ஊர் நம்பி நின்றபோதும் - நான்
ஒருவனாய் எதிர்க்கவில்லை.
கால் நீட்டி தாத்தா அங்கே
கட்டைபோல் கிடந்தபோதும்
நாடகம் என்று கண்டும்
நான் கதை பறையவில்லை.
 3
கூத்தினை நெறிப்படுத்தி - பேரன்
குதர்க்கமாய்  புகழுரைக்க,
ஆற்றுணா துயரம் போல
சுப வீரர் வானம் பார்க்க,
கச்சித மாக குஞ்சா
மணி யொரு கவலை காட்ட,
கட்டிய துணியால் நங்கை
கனிமொழி கண்ணீர் ஒற்ற - கபட
வெற்றியின் விளிம்பை நோக்கி
கிடந்தது விஷத்தின் வித்து.

வித்தையோ வேஷம் தானோ - வாழ்வில்
எத்தனை புலுடா விட்டார்.
அத்தனை ரெலிக்காஸ் ஆச்சு
ஆனது ஒன்றுமில்லை -தாத்தா
செத்துத்தான் போவாரென்று - வீணே
சிலபேர்கள் வியந்து போனர்.

நிச்சியம் ஈழ மண்ணை
விற்றொரு முடி வில்லாமல்
கட்டையில் ஏற மாட்டார்
காரிய வாதி தாத்தா…

கோவிலாய் இருந்த தேசம்
கொலைக் காடாய் ஆகக் கண்டீர்.
சோலையாய் இருந்த பூமி
சுடுகாடாய் ஆகக் காணீர்.
நாயினும் கடையன் நஞ்சன்
நாலைந்து தாரக்காரன்
பாவியாய் பிறந்தான் மண்ணில்
படு துயர் நாங்கள் கொண்டோம்,

ஒரு மணி சரிந்தபோது
உலகமே திகைக்கும் வண்ணம்,
மறுமொழி கண்டேன் என்றார்
மலையென வென்றேன் என்றார்.

கபடமும் களவும் சேர்ந்து- அவர்
கக்கிய நஞ்சு கண்டேன்.
சிவாஜியின் நடிப்புக்கூட -அங்கே
சில்லறை யாகி போச்சு.
அடித்தவர் சிக்ஸர் தானோ
ஆண்டவா நீயும் வீணோ.
குடத்துக்குள் கங்கை யென்றார்
கூவினார் வெற்றி யென்று.

டில்லியின் செய்தி கண்டேன்
பின்னணி அன்னை யென்றும் -ஈழ
மக்களை காத்தேன் என்று
நிமிர்ந்தொரு இறுமாப்போடு
பழரசம் குடித்து மீண்டு
பறந்தனன் (அரண்) மனையை நோக்கி.
நடந்தது கண்டீர் மக்காள்
நான் ஒன்றும் புளுகவில்லை.

தமிழரின் வாழ்வுக்காக -தன்
தவம் ஒரு முடிவு என்றார்.
எரிந்தது ஈழ பூமி,
எச்சங்கள் எலும்பாய் கண்டோம்.
அத்தனை கூத்தும் அன்று -மணி
ஆறுக்கு சமாதியாச்சு -இரா
கொட்டிய குண்டில் மட்டும் -பத்
தாயிரம் பலியாய் போச்சு.

நடந்தது தூறல் என்றார்.
நாட்பட தீரும் என்றார்.
மனிதனோ மிருகம்தானோ -இவன்
மனமெல்லாம் கருங்கல் தானோ?
திருந்திட இட முண்டாலும்
மருந்துக்கும் இதயமில்லை.
நரியதன் எண்ணம்போல
நஞ்சையே துணையாய் கொண்டார்.

போரது நின்ற தென்று
பொல்லாத இம் மனிதன்
புனைந்திட்ட பொய்யை நம்பி
'பூவாலி' என்றொருவன் - பிள்ளை
புசித்திட உணவு தேடி
பங்கரில் இருந்து மெல்ல
பதைப்புடன் வெளியே வந்தான்.
தின்றிட ஒன்றுமில்லை
திசை யெட்டும் புகையாய்க்கண்டான்.

உச்சி இர வானபோது,
உணவில்லா மயக்கம் வாட்ட,
பச்சை இலை பிடுங்கி - பிள்ளை
பசிதீர்க்க எண்ணியிவன்,
எட்டியொரு தொலைவில்
இரை தேடி திரும்புகயில் ,
பச்சை குழந்தைகளும் - பாவி
அவன் மனையாளும்
அடைந்திருந்த பதுங்கு குழி
எரிகுண்டுக் கிரையாகி
இருந்த இடம் தெரியாமல்
அழிந்த கதை அறிவாரோ.
 DSCF5280
இருண்டது ஈழ பூமி.
எரிகுண்டு மடங்காயாச்சு.
பின் வந்த பத்து நாளில்
சொச்சமும் சாம்பலாச்சு.

கொடும் புகை மூட்டங்கொண்டு
கொட்டிடும் குண்டு போக
எத்திசை நோக்கினாலும்
கக்கிடும் ரவையாய் கண்டோம்.
மண்ணொடு மண்ணாய் மக்கள்.
மாண்டனர் மீண்டோர் சொற்பம்.
செத்தவர் பொக மிச்சம்
செவிடொடு குருடாயாச்சு.

குடித்திட நீருமில்லை.
குழவிக்கு பாலுமில்லை.
நோவுக்கு மருந்துமில்லை.
நடுக்கமே வாழ்வாயானோம்.
அதிகாலை இரவு மத்தி
அடை மழை போலக் குண்டு.
சுருதியாய் மனித ஓலம்
தேற்றுவோர் எவருமில்லை.
 Copie_de_Situation_Report_8th_May_2009_TamilNational_21
பறந்தங்கோர் ஈயுமில்லை.
 பார்த்திட எறும்புமில்லை.
மலந்தின்ன நாயுமில்லை.
மண் உண்ணும் புழுவுமில்லை.

கலங்கியோர் கொடு நெஞ்சோடு
காத்திருந் தேமாந்தோமே.

கலங்கியோர் கொடு நெஞ்சோடு
காத்திருந் தேமாந்தோமே...

ஆண்டொரு நான்காய் ஆச்சு
அஞ்சலி செலுத்துகின்றோம்.

இன்றொடு ஆண்டு நூறு
வந்துதான் போனால் என்ன.
அந்த ஓர் ஆண்டு மட்டும் -என்
நெஞ் சினை விட்டு மாறா…..

ஆண்டொரு நான்காய் ஆச்சு
அஞ்சலி செலுத்துகின்றோம்.


நான்காம் ஆண்டு நினைவுகளுடன்,
-ஊர்க்குருவி-

நன்றி சவுக்கு.
 

No comments: